ஒரு நூறு ஆண்டுகளின் தனிமை - வாசிப்புகளும் பாதிப்புகளும்

மொழியாக்கம்: பிரம்மராஜன்

பகிரு

மார்க்வெஸ் - மென்டோசா உரையாடல்

மென்டோசா: நீங்கள் ஒரு நூறு ஆண்டுகளின் தனிமையை எழுத அமர்ந்தபோது என்ன செய்ய நினைத்தீர்கள்?

மார்க்வெஸ்: நான் குழந்தையாக இருந்தபோது என்னைப் பாதித்த எல்லா அனுபவங்களையும் ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்தும் ஒரு வழியைக் கண்டுபிடிக்க விரும்பினேன்.

மென்டோசா: பல விமர்சகர்கள் மனித இனத்தின் வரலாறு குறித்த ஒரு நீதிக்கதையையோ அல்லது தொடர் உருவகத்தையோதான் அந்தப் புத்தகத்தில் பார்க்கிறார்கள்.

மார்க்வெஸ்: இல்லை. நான் விரும்பியதெல்லாம் ஒரு விசாலமான வீட்டில் கழிந்த என் குழந்தைப் பருவத்தின் சித்திரத்தை அதில் பதிவு செய்ய விரும்பியது தான். நீங்கள் அறிந்ததுபோல் அது ஒரு சோகமான வீடு. அதில் மண்ணைத் தின்னும் ஒரு சகோதரி, எதிர்காலத்தை முன்கூறும் ஒரு பாட்டி, சந்தோஷத்திற்கும் பைத்தியத்திற்கும் அதிக வேறுபாடு செய்யாத ஒரே பெயரைக் கொண்ட எண்ணற்ற உறவினர்கள் அடங்கியது அந்த வீடு.

மென்டோசா: ஆனால் எப்போதும் விமர்சகர்கள் இன்னும் அதிகமான அடர்த்திச் சிக்கலான உள் எண்ணங்களைக் கண்டுபிடிக்கிறார்கள்.

மார்க்வெஸ்: அப்படி அவை இருந்தபோதிலும் கண்டிப்பாக முற்றிலும் உள் நோக்கமற்றவையாகத்தான் இருக்கவேண்டும். நிஜத்தில் என்ன நடக்கிறது என்றால், நாவலாசிரியர்களைப் போலன்றி விமர்சகர்கள் புத்தகத்தில் உள்ளதைவிட அவர்கள் எதைக் கண்டுபிடிக்க விரும்புகிறார்களோ அதையே செய்கிறார்கள்.

மென்டோசா: நீங்கள் எப்போதும் விமர்சகர்களைப் பற்றிப் பேசும்போது முரண்நகையோடுதான் பேசுகிறீர்கள். நீங்கள் ஏன் அவர்களை அவ்வளவு வெறுக்கிறீர்கள்?

மார்க்வெஸ்: காரணம் பெரும்பாலான விமர்சகர்கள் ஒரு நூறு ஆண்டுகளின் தனிமை நாவல் ஒருவிதமான ஜோக் என்பதையும், நெருங்கிய நண்பர்களுக்கான சமிக்ஞைகள் நிறைந்தது என்பதையும் அறிவதே இல்லை. எனவே ஏதோ முன்னதாக வகுத்தமைத்த ஒரு உரிமையில், அவர்களுக்குத்தான் சகலமும் தெரியும் என்கிற மாதிரியான தோரணையில் ஒரு புத்தகத்தின் ரகசிய மொழியில் எழுதப்பட்டதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டு தங்களை மகா முட்டாள்களாக்கிக் கொள்ளும் அபாயத்திற்கு உட்படுத்திக்கொள்கிறார்கள். எடுத்துக்காட்டாக ஒரு விமர்சகரை நான் நினைவு கூர்கிறேன். அந்தப் பாத்திரங்களில் ஒன்றான கேப்ரியல் பாரிசுக்கு ரேபலே1 எழுதிய எல்லாப் புத்தகங்களையும் எடுத்துச்செல்வதைக் கவனித்தபோது அவர் ஒரு முக்கியமான சாவியைக் கண்டுபிடித்துவிட்டதாய் நினைத்தார். இந்தக் கண்டுபிடிப்பைச் செய்த பின் பான்ட்டேகுருயெல்2 தன்மையான அதிகபட்சங்களையும், மிகைப்படுத்தல்களையும் இந்த இலக்கியப் பாதிப்புக்குக் காரணமாகக் காட்டினார். நான் நிஜத்தில் ரேபலே பற்றிய அந்த மறைகுறிப்பினை ஒரு வாழைப்பழத் தோலை வீசி எறிவதுபோல வீசியெறிந்திருந்தேன். பல விமர்சகர்கள் அதில் வழுக்கி விழுந்துள்ளனர்.

மென்டோசா: விமர்சகர்கள் சொல்வதை ஒதுக்கி விடுவோமேயானால் அந்த நாவல் உங்கள் குழந்தைப் பருவத்தின் ஞாபகங்களை மறு உயிர்ப்பூட்டுதல் என்கிற எளிமையான பதிவு என்பதற்கு அப்பாற்பட்டு கூடுதலானவற்றைக் கொண்டிருக்கிறது என நான் எண்ணுகிறேன். புவெந்தியா குடும்பம் லத்தீன் அமெரிக்க வரலாறாக இருக்க முடியுமென்று நீங்கள் ஒருமுறை சொல்லவில்லையா?

மார்க்வெஸ்: ஆம் என்று நான் நினைக்கிறேன். லத்தீன் அமெரிக்க வரலாறு மிகப்பெரிய அளவிலான பயனற்ற வினைத்திட்டங்கள் மற்றும் மகத்தான நாடகங்கள் நிகழ்வதற்கு முன்னரே பெருமறதிக்குச் செல்ல விதிக்கப்பட்டிருக்கிறது. நாம் மறதி என்கிற கொடிய நோயினாலும் துன்புறுகிறோம். கால ஓட்டத்தில் எவர் ஒருவரும் வாழைப்பழக் கம்பெனியின் தொழிலாளர்களைக் கூட்டாகக் கொன்றழித்த, நிஜமாய் நடந்த நிகழ்வை நினைவில் கொள்வதில்லை. அவர்கள் ஞாபகம் வைத்திருப்பதெல்லாம் கர்னல் ஆரிலியானோ புவெந்தியாவைத்தான்.

மென்டோசா: மேலும் கர்னல் ஆரிலியானோ புவெந்தியா தோற்றுப்போன அந்த முப்பத்தி மூன்று வருடப் போர்களும் ஒருவேளை நமது சொந்த அரசியல் விரக்திகளாக இருக்கலாம். கர்னல் வெற்றியடைந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

மார்க்வெஸ்: அவர் மூதந்தையைப்போலவே இருந்திருப்பார். நான் நாவலை எழுதிக்கொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில் கர்னல் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள அனுமதித்துவிடும் சபலம் எனக்கிருந்தது. ஒரு வேளை அப்படி நான் செய்திருந்தால், நான் ஒரு நூறு ஆண்டுகளின் தனிமைக்குப் பதிலாக மூதந்தையின் அந்திமக் காலம் நாவலை எழுதியிருப்பேன்.

மென்டோசா: அப்படியானால் ஏதோ ஒரு எதிர்பாராத வரலாற்றியல் தலைவிதி காரணமாய் எவர் ஒருவர் கொடுங்கோன்மையை எதிர்த்துப் போரிட்டாலும் அதிகாரத்தைக் கையிலெடுக்கும்போது அவரே ஒரு கொடுங்கோலராக மாறும் அபாயத்தில் உள்ளார் என்பதை நாம் கண்டிப்பாக அனுமானித்துக் கொள்ள வேண்டுமா?

மார்க்வெஸ்: ஒரு நூறு ஆண்டுகளின் தனிமை நாவலில் கர்னல் ஆரிலியானோ புவெந்தியாவின் கைதிகளில் ஒருவன் அவரிடம் சொல்கிறான்: “என்னை எது கவலைப்படச் செய்கிறதென்றால் ராணுவத்தின் மீதான அவ்வளவு வெறுப்பிலும், அவர்களுடன் அத்தனை போரிட்டபோதும், அவர்களைப் பற்றி அவ்வளவு எண்ணிய போதும், நீ அவர்கள் அளவுக்கே மோசமானவனாய் ஆகியிருக்கிறாய்.” அவன் இவ்வாறு முடிக்கிறான்: “இதே வேகத்தில் போனால் நமது வரலாற்றிலேயே மிக மோசமாய் அடக்கியாள்கிற, மிக மட்டரகமான கொடுங்கோலனாக நீ இருப்பாய்.”

மென்டோசா: இதே நாவலை நீங்கள் உங்களின் பதினெட்டாம் வயதில் எழுத முயற்சி செய்தீர்கள் என்பது உண்மையா?

மார்க்வெஸ்: ஆம். அது இல்லம் என்று அழைக்கப்பட்டது. காரணம் முழுக் கதையுமே புவெந்தியாக்களின் வீட்டினுள் நடக்க இருந்தது.

மென்டோசா: அந்தச் செப்பமற்ற வரைவில் எவ்வளவு தூரம் நீங்கள் முன்னேறியிருந்தீர்கள்? அப்பொழுதும் கூட நீங்கள் ஒரு நூறு ஆண்டுகளை உள்ளடக்கத் திட்டமிட்டிருந்தீர்களா?

மார்க்வெஸ்: நான், ஒரு தொடர்ச்சியான வடிவமைப்பு என்கிற அளவுக்குச் செல்லவில்லை. தனித்தனி துண்டுகளாய்த்தான் செய்திருந்தேன். அவற்றில் சில அந்தச் சமயத்தில் நான் பணியாற்றிக்கொண்டிருந்த செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டன. ஆண்டுகளின் எண்ணிக்கையைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஒரு நூறு ஆண்டுகளின் தனிமை நிஜமாக ஒரு நூறு ஆண்டுக் கால அளவில் உள்ளதா என்பது பற்றி எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.

மென்டோசா: ஏன் அதை அப்பொழுது தொடர்ந்து எழுதவில்லை?

மார்க்வெஸ்: காரணம் அந்தச் சமயத்தில் அனுபவமோ, தாக்குப்பிடிக்கும் திறனோ, அல்லது அந்த மாதிரியான ஒரு புத்தகத்தை எழுதுவதற்கான தொழில்நுட்பச் செயல்திறனோ என்னிடம் இருக்கவில்லை.

மென்டோசா: ஆனாலும் கதை உங்கள் மனதில் சுற்றிச் சுழன்றுகொண்டிருந்தது.

மார்க்வெஸ்: அடுத்தப் பதினைந்து ஆண்டுகளுக்கு, என்னால் சரியான தொனியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அது எனக்கு உண்மையென்று தோன்ற வேண்டும். ஒரு நாள் நானும், மெர்ஸிடஸஸும், குழந்தைகளும் அக்கபுல்கோ3வுக்குக் காரில் செல்லும்போது அது என்னிடம் ஒரு பளிச்சிடும் வீச்சில் வந்தது. என் பாட்டி அவரது கதைகளை எனக்குச் சொல்லும் அந்த முறையில் நான் கதையைச் சொல்ல வேண்டியிருந்தது. அந்தச் சிறுவனை அவன் தாத்தா ஐஸ் கட்டியைப் பார்க்க அழைத்துச் செல்லும் அந்த மதியத்திலிருந்து நான் தொடங்கினேன்.

மென்டோசா: ஒரு நேர்கோட்டுத்தன்மையான வரலாறு.

மார்க்வெஸ்: ஒரு நேர்கோட்டுத்தன்மையான வரலாறு. அதில் அபூர்வமான அம்சம் தன் சகல கள்ளமின்மையில் சாதாரணத்துவத்துடன் உருகிப் பிணைகிறது.

மென்டோசா: நீங்கள் சாலையில் காரைத் திருப்பி எழுதத் தொடங்கிவிட்டது உண்மைதானா?

மார்க்வெஸ்: உண்மைதான். நான் அக்கபுல்கோவுக்குச் சென்றுசேரவில்லை.

மென்டோசா: அப்புறம் மெர்ஸிடஸ்4?

மார்க்வெஸ்: இந்த மாதிரியான எவ்வளவோ பைத்தியக்காரத்தனங்களை மெர்ஸிடஸ் பொறுத்துக்கொண்டிருந் திருக்கிறாள் என்பதை நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள். அவள் இல்லாமல் நான் அந்தப் புத்தகத்தை எழுதியிருக்க முடியாது. அவள் சூழ்நிலைக்குப் பொறுப்பெடுத்துக் கொண்டாள். நான் சில மாதங்களுக்கு முன் வாங்கியிருந்த காரை அடகு வைத்து அவளிடம் அந்தப் பணத்தைக் கொடுத்தேன். அந்தப் பணத்தை வைத்து நாங்கள் ஆறுமாத காலத்திற்கு வாழ்க்கை நடத்த இயலுமென்று கணக்கிட்டேன். ஆனால் புத்தகத்தை எழுத எனக்கு ஒன்றரை வருடங்கள் ஆயிற்று. பணம் தீர்ந்து போனவுடன் அவள் என்னிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை. அவள் எப்படிச் செய்தாள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் கசாப்புக்காரன் எங்களுக்கு இறைச்சியை கடன் தரும்படி செய்திருந்தாள். ரொட்டி சுடுபவனை எங்களுக்கு ரொட்டி தரும்படிச் செய்திருந்தாள். வீட்டு உரிமையாளரை ஒன்பது மாதங்கள் வாடகைக்கு காத்திருக்கும்படி செய்திருந்தாள். என்னிடம் எதையுமே சொல்லாமல் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டாள். அப்பொழுதைக்கப்பொழுது ஐநூறு தாள்களையும் கூடக்கொண்டு வந்தாள். நான் என்றுமே அந்த ஐநூறு தாள்கள் இல்லாமல் இருந்ததில்லை. புத்தகம் முடிந்தவுடன் கையெழுத்துப் பிரதியை தபாலில் எடிட்டோரியல் சுடாமெரிக்கானா பதிப்பகத்திற்கு அனுப்பியதும் மெர்ஸிடஸ்தான்.

மென்டோசா: தபாலில் அனுப்ப கையெழுத்துப் படிகளை எடுத்துச் சென்றபோது அவரது மனதில் ஓடிய எண்ணத்தை என்னிடம் ஒருமுறை கூறினார்: “இவ்வளவுக்குப் பிறகு நாவல் பயனற்றதாய்ப் போய் விட்டால் என்ன செய்வது? அவர் அதைப் படித்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை. ஒருவேளை இருக்குமா?”

மார்க்வெஸ்: அவளுக்குக் கையெழுத்துப் பிரதிகளைப் படிப்பது பிடிக்காது.

மென்டோசா: அவரும் உங்கள் மகன்களும் உங்கள் புத்தகங்களைப் படிப்பதில் கடைசி நபர்கள். எனக்குச் சொல்லுங்கள் ஒரு நூறு ஆண்டுகளின் தனிமை நாவல் வெற்றிகரமாக அமையும் என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தீர்களா?

மார்க்வெஸ்: அதை விமர்சகர்கள் விரும்புவார்கள் என்பது பற்றி உறுதியாக இருந்தேன். ஆனால் பொது வாசகர்களிடம் அது அவ்வளவு பெரிய வெற்றியாக இருக்கும் என்று நினைக்கவில்லை. அது ஏறத்தாழ 5000 பிரதிகள் விற்கும் என்று நான் நினைத்தேன். (என்னுடைய முந்தைய புத்தகங்கள் அது வரை ஒவ்வொன்றும் ஆயிரம் பிரதிகளே விற்றிருந்தன. எடிட்டோரியல் சுடாமெரிக்கானா வெளியீட்டாளர்(கள்) இன்னும் சற்றே கூடுதலான நம்பிக்கையுடன் இருந்ததால் அது 8000 பிரதிகள் விற்கும் என்று நினைத்தார்கள். நிஜத்தில் முதல் பதிப்புப் போனஸ் அய்ரெஸில் இரண்டு வாரங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டது.

மென்டோசா: நாம் புத்தகத்தைப் பற்றிப் பேசலாம். புவெந்தியா குடும்பத்தின் தனிமை எங்கிருந்து வருகிறது?

மார்க்வெஸ்: அவர்களது அன்பின்மையிலிருந்து வருகிறது என்றுதான் நான் நினைக்கிறேன். நீங்கள் புத்தகத்தில் பார்க்கலாம். ஒரு நூற்றாண்டில் பன்றி வாலுடன் பிறந்த ஒரே ஒரு புவெந்தியா மட்டும்தான் காதலுடன் உருவாக்கப்பட்டவன். புவெந்தியாக்கள் காதல் செய்யும் திறன் அற்றவர்களாய் இருந்தனர். மேலும் இதுதான் அவர்களின் தனிமை மற்றும் விரக்திகளுக்கான சாவி. தனிமையானது ஒற்றுமையின் எதிர்நிலையில் இருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.

மென்டோசா: ஏன் அத்தனை ஆரிலினியோக்களும், அத்தனை ஹோஸே ஆர்க்கேதியோக்களும் இருக்கிறார்கள் என்று எல்லோரும் கேட்கக்கூடிய கேள்வியை நான் உங்களிடம் கேட்கப் போவதில்லை. காரணம் இது லத்தீன் அமெரிக்காவுக்கே உரித்தான ஒரு மரபான வழக்கம் என்று நம் இருவருக்கும் தெரியும். நாம் நமது அப்பாக்கள் அல்லது தாத்தாக்களின் பெயரை அனுசரித்துப் பெயர் இடப்பட்டிருக்கிறோம். மேலும் உங்கள் குடும்பத்தில் அது ஒரு அர்த்தங்கெட்ட ஸ்தாயியின் உச்சத்தை எட்டி, உங்கள் சகோதரரில் ஒருவரும் காப்ரியல் என்றே அழைக்கப்பட்டார். ஆனால் ஆரிலினியோக்களையும் ஹோஸே ஆர்க்கேதியோக்களையும் வேறுபடுத்திக் காண ஒரு வழிகாட்டுக் குறிப்பு உள்ளது என்று நான் எண்ணுகிறேன்.

மார்க்வெஸ்: அந்த வழிகாட்டுக் குறிப்பு பின்பற்ற மிக எளிதானது. ஹோஸே ஆர்க்கேதியோக்கள் குடும்பத்தைத் தொடர்ந்து பெருக்கமடைய வைக்கின்றனர். ஒரே ஒரு விதிவிலக்கு; ஹோஸே ஆர்க்கேதியோ செகுந்தோ மற்றும் ஆரிலியானோ செகுந்தோ. இதற்குக் காரணம் உருவ ஒற்றுமை கொண்ட இரட்டையர்கள் பிறப்பிலேயே இடம் மாறிவிட்டதுதான்.

மென்டோசா: புத்தகத்தில் மடமை ஆண்களுக்குள்ளாகவே உள்ளார்ந்து இருக்கிறது (கண்டுபிடிப்புகள், ரஸவாதம், மட்டுமீறிய பெருவிருந்துகள் மற்றும் குடிகள்) மேலும் பெண்களிடமிருந்த நல்லறிவு. நீங்கள் இருபாலரையும் அப்படித்தான் பார்க்கிறீர்களா?

மார்க்வெஸ்: பெண்கள் இந்த உலகத்தைத் தொடர்ந்து இயங்க வைக்கின்றனர். மேலும் சகலமும் உடைந்து சிதறுவதைத் தடுக்கின்றனர். ஆண்கள் வரலாற்றை முன்னோக்கிச் செல்ல வைக்கின்றனர். இறுதியில் இரு பாலரில் எவர் கிறுக்குத்தனமானவர் என்று ஒருவர் வியக்க வேண்டியிருக்கிறது.

மென்டோசா: வெளிப்படையாகப் பெண்கள் குடும்பத்தின் தொடர்ச்சிக்கு உத்தரவாதமளிப்பதோடு நாவலையும் தொடரச் செய்கின்றனர். இதுதான் ஒருவேளை உர்சுலா இகுவரனின் அசாதாரணமான நீண்ட ஆயுளின் ரகசியமாக இருக்கக் கூடுமோ?

மார்க்வெஸ்: ஆம். அவள் உள்நாட்டுப் போருக்கு முன்னரே, அவள் நூறு வயதை அடையும்போதே இறந் திருக்கவேண்டும். ஆனால் அவள் இறந்துவிட்டால் புத்தகம் தகர்ந்து போய்விடும் என்பதை நான் உணர்ந்தேன். இறுதியாக அவள் இறக்கும் சமயம், புத்தகத் திற்கு அவ்வளவு உந்தம் கிடைத்துவிட்டிருந்தது. அதனால் அடுத்தென்ன நடக்கிறது என்பது பற்றிய பொருட்டில்லாமல் போய்விட்டது.

மென்டோசா: புத்தகத்தில் யாருடைய பாத்திரத்தை பெட்ரா கோட்ஸ் எடுத்துக் கொள்கிறாள்?

மார்க்வெஸ்: மேலோட்டமாக நீங்கள் ஃபெர்னான்டாவின் கண்ணாடிப் பிம்பமாகப் பார்க்க முடியும். அதாவது ஆன்டிய மலைப் பிரதேச பெண்களின் ஒழுக்கவியல் பற்றிய தப்பெண்ணங்கள் இல்லாத ஒரு கடலோரக் கரீபியப் பெண். மேலும் அவளது ஆளுமையானது நிஜத்தில் நிறைய அம்சங்களில் உர்சுலாவினுடையதைப் போன்றது. யதார்த்தம் பற்றி அதிகமும் பக்குவமற்ற அறிவு கொண்ட ஒரு உர்சுலா (எனலாம்).

மென்டோசா: நீங்கள் நாவலை எழுதிக்கொண்டிருந்த சமயத்தில் சில பாத்திரங்கள் நீங்கள் திட்டமிட்டிருந்ததை விட வேறு வித்தியாசமான திசைகளை எடுத்துக் கொண்டார்களா? உங்களால் ஒரு எடுத்துக்காட்டு தர இயலுமா?

மார்க்வெஸ்: ஆம். ஒரு பாத்திரம் சாந்த்தா சோஃபியா தெலா பைடாட். புத்தகத்தில், நிஜவாழ்க்கையில் போலவே, அவளுக்குத் தொழுநோய் இருப்பதைக் கண்டு பிடித்தவுடன் அவள் வீட்டைவிட்டுச் செல்லும்போது போய் வருகிறேன் என்று ஒருவரிடமும் சொல்லாமல் செல்வதாக நான் ஒரிஜினல் திட்டம் கொண்டிருந்தேன். அந்தப் பாத்திரத்தின் முழு ஆளுமையுமே தியாகம் மற்றும் சுயமறுப்பு ஆகிய உணர்வுகளின் அடிப்படையில் கட்டப்பட்டிருந்த போதிலும் கூட அந்த விளைவு நம்பத் தகுந்ததாய் இருந்திருக்கும். நான் அதில் மாற்றம் செய்ய வேண்டியிருந்தது. அது மிகவும் குரூரமானது.

மென்டோசா: பாத்திரங்களில் எவராவது ஒருவர் கட்டுப்பாட்டிலிருந்து நழுவியிருக்கிறார்களா?

மார்க்வெஸ்: மூன்று பாத்திரங்கள் கட்டுப்பாட்டிலிருந்து நழுவினர். எந்த அர்த்தத்தில் என்றால் அவர்களது வாழ்க்கை நான் விரும்பியது போல் வெளிப்படவில்லை. தனது அத்தை அமரந்தா மீதான ஆரிலினியானோ ஹோஸேவின் அச்சமூட்டும் பேருணர்ச்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஹோஸே ஆர்க்கேதியோ செகுந்தோ என்றைக்குமே வாழைப்பழ கம்பெனித் தொழிலாளர் சங்கத் தலைவராக ஆவதை நான் விரும்ப வில்லை. மேலும் பயிற்சிநிலை போப் ஹோஸே ஆர்க்கேதியோ ஒருவிதமான அழிவுமிக்க அடோனிஸ்5 ஆக மாற்றமடைந்து முழுமையான நாவலில் முற்றிலும் இடப்பொருத்தமற்றுப் போகிறான்.

மென்டோசா: புத்தகத்திற்குச் சில வழிகாட்டுக் குறிப்புகள் வைத்துள்ள எங்களைப் போன்றோர் ஒரு குறிப்பிட்ட நொடியை அடையாளம் காண்கிறோம். அதில் மெக் கோந்தோ ஒரு சிறு நகரமாக, உங்கள் நகரமாக இருந்து பாரன்கியா 6 வைப் போன்ற பெருநகரமாய் மாறுகிறது. அங்கு உங்களுக்குத் தெரிந்த இடங்கள் எதையாவது அல்லது மனிதர்கள் எவரையாவது நிஜமாக அதில் வைத்தீர்களா? இந்த மாறுதலின் காரணமாய் உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டதா?

மார்க்வெஸ்: மெக்கோந்தோ ஒரு இடம் என்பதை விட ஒரு மனோநிலை என்று சொல்லலாம். எனவே ஒரு சிறுநகரத்திலிருந்து பெருநகரத்திற்குக் காட்சியை மாற்றுவது பெரியப் பிரச்சினையாக இருக்கவில்லை. ஆனால் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றும்போது அதன் சூழ்நிலையில் வெளிப்படையான மாறுதல் இல்லாதிருக்கவேண்டும்.

மென்டோசா: நாவலில் உங்களின் மிகக் கடினமான கணம் எதுவாக இருந்தது?

மார்க்வெஸ்: தொடங்குவது. பெரும் சிரமத்துடன் நான் தொடங்கி முடித்த அந்த முதல் வாக்கியத்தின் தினத்தை மிகத் தெளிவுடன் நினைவுகூர்கிறேன். மேலும் திகிலடைந்து என்னை நானே கேட்டுக்கொண்டேன், என்ன எழவு அடுத்து வருகிறது என்று. நிஜத்தில் காட்டின் மத்தியில் அந்தப் போர்க் கப்பலை கண்டுபிடிப்பது வரை அந்தப் புத்தகத்தின் நகர்வினைப் பற்றி நான் நிஜமாக நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. ஆனால் அந்தப் புள்ளியிலிருந்து முழு விஷயமுமே ஒருவிதமான வெறிமிகுந்த ஆவேசமாய் மாறிவிட்டது. மேலும் மிகவும் சந்தோஷத்துடன் அனுபவிக்கத் தக்கதாகவும் இருந்தது.

மென்டோசா: அதை முடித்த நாளை நீங்கள் ஞாபகம் வைத்திருக்கிறீர்களா? அப்போது என்ன நேரம்? நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?

மார்க்வெஸ்: நான், பதினெட்டு மாதங்களாய் ஒவ்வொரு நாளும் காலை ஒன்பது மணியிலிருந்து மதியம் மூன்று மணிவரை எழுதி வந்திருக்கிறேன். இதுதான் அந்தக் கடைசி நாள் என்று எனக்கு உறுதியாகத் தெரிந்தது. ஆனால் புத்தகம் அதன் இயற்கையான முடிவுக்குத் தவறான நேரத்தில் வந்திருந்தது. ஏறத்தாழ காலை பதினோரு மணிக்கு. மெர்ஸிடஸ் வீட்டில் இல்லை. அதைப் பற்றிச் சொல்வதற்குத் தொலைபேசியில் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. அது ஏதோ நேற்று நடந்தது போல் நான் என் முழுமொத்த மனத்தடுமாற்றத்தையும் நினைவு கூர்கிறேன். மிஞ்சி யிருந்த நேரத்தை என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. மேலும் மதியம் மூன்று மணிவரை உயிர் தரித்திருக்க விஷயங்களைக் கற்பனை செய்து கண்டுபிடித்தேன்.

மென்டோசா: விமர்சகர்கள் பார்க்கத் தவறிய மிக அவசியமான சில அம்சங்கள் புத்தகத்தில் கண்டிப்பாக (அவர்கள் மீது உங்களுக்கு எவ்வளவு வெறுப்பு) இருந்திருக்கவேண்டும். அவை யாவை?

மார்க்வெஸ்: புத்தகத்தின் தலைசிறந்த ஒரு குணாம்சம், படைப்பாளனுக்குப் பரிதாபமான எல்லா மனிதர்களின் மீதும் இருந்த அளவற்ற கருணை.

மென்டோசா: உங்களின் மிகச்சிறந்த வாசகர் யார் என்று நினைக்கிறீர்கள்?

மார்க்வெஸ்: எனது ரஷ்ய நண்பர் ஒருவர், மிகவும் வயதான ஒரு பெண்ணைச் சந்தித்திருக்கிறார். அந்தப் பெண் முழுப் புத்தகத்தையும் கையால் எழுதிக் கொண்டிருந்திருக்கிறார், கடைசி வரிவரை. என் நண்பர் அந்தப் பெண்ணிடம்நீங்கள் ஏன் அப்படிச் செய்கிறீர்கள்எனக் கேட்டிருக்கிறார். அதற்கு அந்தப் பெண்மணி பதில் கூறியிருக்கிறார். “காரணம் யார் நிஜமாகவே பைத்தியக்காரர் என்பதைக் கண்டுபிடிக்க விரும்பினேன். அது படைப்பாளனா அல்லது நானா என. மேலும் அதைக் கண்டுபிடிப்பதற்கான ஒரே வழி முழுப்புத்தகத்தையும் மீண்டும் எழுதுவதுதான்.” அந்தப் பெண்ணைவிடச் சிறந்த ஒரு வாசகரைக் கண்டுபிடிப்பது கடினம் என்று எனக்குத் தோன்றுகிறது.

மென்டோசா: எத்தனை மொழிகளில் இந்தப் புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?

மார்க்வெஸ்: பதினேழு.

மென்டோசா: ஆங்கில மொழிபெயர்ப்பு அற்புதமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

மார்க்வெஸ்: ஆம். அற்புதமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் செறிவிக்கப்படும்போது மொழி அதிகச் சக்திவாய்ந்ததாய் ஆகிவிடுகிறது.

மென்டோசா: மற்ற மொழிபெயர்ப்புகள்?

மார்க்வெஸ்: நான் பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழி பெயர்ப்பாளர்களுடன் இணைந்து வேலை செய்தேன். எனினும், புத்தகத்திற்குப் பிரெஞ்சு மொழியில் சரியான உணர்வு இருக்கவில்லை. எந்தவகையிலும் எனக்குத் திருப்தி இல்லை.

மென்டோசா: ஃபிரான்சில் விற்றதைவிட இங்கிலாந்தில் குறைவாகத்தான் புத்தகம் விற்றிருக்கிறது. ஸ்பானிய மொழி பேசப்படும் நாடுகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அவற்றில் அது அபாரமான வெற்றியடைந்திருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

மார்க்வெஸ்: ஒருவேளை கரீபியப் பாரம்பரியமாக இருக்கலாம். தெக்கார்த்தே7வின் கட்டுப்பாட்டைவிட நான் ரேபலேயின் கிறுக்குத்தனங்களுக்கு மிக நெருக்கமாக இருக்கிறேன். மேலும் ஃபிரான்சில் தெக்கார்த்தேவின் கை ஓங்கியிருக்கிறது. மற்ற நாடுகளில் இருந்த அளவுக்கு ஃபிரான்சில் புத்தகம் அவ்வளவு பிரபலமாய் என்றுமே ஆகாமல் இருந்ததற்கு இதுதான் காரணம். என்றாலும் கூட புத்தக மதிப்புரைகள் அபாரமாய் இருந்தன. ரோஸானா ரோஸான்டா முன்பொரு நாள் என்னிடம் சுட்டிக் காட்டினார். ஃபிரான்சில் புத்தகம் முதன் முதலில் வெளியிடப்பட்டது 1968ஆம் ஆண்டில். அது வியாபார வெற்றிக்கு கொஞ்சமும் யோகமில்லாத நேரம்.

மென்டோசா: நீங்கள் ஒரு நூறு ஆண்டுகளின் தனிமை நாவலின் வெற்றி குறித்துத் தடுமாற்றம் அடைந்தீர்களா?

மார்க்வெஸ்: ஆம். மிக அதிகமாக.

மென்டோசா: நீங்கள் என்றாவது அந்த ரகசியத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தீர்களா?

மார்க்வெஸ்: இல்லை. எனக்குத் தெரியாது. ஒருசில நெருக்கமான நண்பர்களை மனதில் கொண்டு நான் எழுதிய புத்தகம் சூடான கேக்குகளைப் போல் ஏன் விற்பனையாக வேண்டும் என்பதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் ஆபத்தானதாக (அது) இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

குறிப்புகள்:
  1. ரேபலே (1494-1553): மறுமலர்ச்சிக்காலப் பிரெஞ்சு எழுத்தாளர், பாதிரி மற்றும் மருத்துவர். தொடக்கத்தில் மருத்துவராகப் பணியாற்றினார். நகைச்சுவைக்குப் பெயர் போன கார்கேன்ட்டுவா மற்றும் பான்ட்டேகுருயெல் என்ற பிரபலமான படைப்பினால் அறியப்படுபவர். நகைச்சுவை, பகடி, கிண்டல் ஆகியவற்றின் உச்சங்களை எட்டக்கூடியவை இந்த நூலின் நான்கு தொகுதிகள். அதீத கிண்டல்கள், காதல் கதைகள் மாத்திரமின்றிச் செவ்விலக்கிய அம்சங்களும் வேண்டிய அளவிற்கு இடம் பெற்றுள்ளன. மெத்தப் படித்தவர்கள் மற்றும் நீதிமன்ற வழக்காறுகள் அறிந்தவர்களால் மட்டுமே இந்நூல்களைச் சிறந்த முறையில் படித்து உள்வாங்க முடியும்படி கிரேக்க மொழிக்கலப்பு நிறைந்தவை. மேலும் மதங்களைக் கருணையின்றி நையாண்டி செய்திருக்கிறார் ரேபலே.
  2. பான்ட்டேகுருயெல்: கார்கேன்ட்டுவா மற்றும் பான்ட்டேகுருயெல் ஆகிய இரு ராட்ஷசர்களைப் பற்றிய புதினங்களாக அமைந்த நான்கு தொகுதிநூல்கள். பான்ட்டேகுருயெல் நூலின் வெற்றிக்குப் பிறகு ரேபலே பான்ட்டேகுருயெலின் தந்தையான கார்கான்ட்டுவாவின் வாழ்க்கையைப் பற்றி அடுத்த நூலை எழுதினார். கார்கேன்ட்டுவாவின் பிறப்பானது 11 மாதங்களுக்குப்பிறகு நிகழ்கிறது. குழந்தை கார்கேன்ட்டுவாவுக்குப் புகட்டத் தேவையான தினசரி பால்தர 17913 பசுக்கள் தேவைப்படுகின்றன. தன் அன்னையின் காதின்வழியாகக் கார்கேன்ட்டுவா பிறந்த தகவலும் கவனிக்கப்படவேண்டியது. ராட்ஷசக்குழந்தையாக இருந்த போதிலும் புத்திசாலியாக வளர்கிறான். பான்ட்டேகுருயெலின் கதை இரண்டாம் புத்தகத்திலிருந்துத் தொடங்குகிறது. ஐரோப்பா முழுவதிலும் பிரயாணம் செய்து தன் மதிநுட்பத்தையும் அனுபவத்தையும் வளர்த்துக்கொள்கிறான் பான்ட்டேகுருயெல். மூன்றாம் புத்தகத்தில் ரேபலே தத்துவார்த்த விவாத அலசல்களுக்கு மாறிவிடுகிறார். ஐந்தாவது புத்தகம் ஒன்றிருந்தாலும் அது நான்காம் புத்தகத்துடன் சேர்த்தே கணக்கிடப்படுகிறது.
  3. அக்கபுல்கோ: தெற்கு மெக்ஸிகோவில் உள்ள பிரதான துறைமுகநகரமான இது பசிபிக் சமுத்திரத்தின் கரையில் அமைந்துள்ளது. மெக்ஸிகோவின் மிக நீண்ட பீச்சாகவும் இது இருக்கிறது.
  4. மெர்ஸிடஸ்: மார்க்வெஸ்ஸின் மனைவி
  5. அடோனிஸ்: கிரேக்கப்புராணிகத்தில் இடம்பெறும் அழகிய இளைஞன். ரோமானியர்கள் வீனஸ் என்றும் கிரேக்கர்கள் அஃப்ரோடைட்டி என்றும் அழைக்கப்பட்ட பெண் தெய்வத்திற்கு மிகவும் விருப்பமானவனாக இருந்தான். அவன் அழகில் மயங்கிய அஃப்ரோடைட்டி புதியதாய்ப் பிறந்த குழந்தை அடோனிஸை ஒரு பேழையில் வைத்து பாதாளலோகப் பெண் கடவுளான பெர்ஸிஃபோன்இன் பாதுகாப்பில் கொடுத்திருந்தாள். ஆனால் அடோனிஸை அனுப்ப பெர்ஸிஃபோன் மறுத்துவிடுகிறாள். கடவுளரின் கடவுளான ஸீயுஸிடம் வழக்கு முன்வைக்கப்பட்டது. அடோனிஸின் ஒரு வருடத்தை மூன்றாகப் பிரித்து அதில் ஒரு பங்குகாலத்தைப் பெர்ஸிஃபோனுடனும் இன்னொரு பங்குக்காலத்தை அஃப்ரோடைட்டியுடனும் கழிக்கலாம் என்றும் மூன்றாம் பாகக்காலத்தை அவன் விருப்பத்திற்கு விடச்செய்து தீர்ப்பளித்தார். இறுதியில் ஆர்ட்டெமிஸ் என்ற வனத்தின் பெண் கடவுள் அனுப்பிய ஒரு காட்டுப்பன்றியால் தாக்கப்பட்டு இறக்கிறான். இதை நடப்பித்ததற்கான காரணம் அஃப்ரோடைட்டிக்கும் ஆர்ட்டெமிஸ்க்கும் இருந்த பகைகாரணமாக இருந்திருக்கலாம் என்று கருத்துரைப்பவர்களும் உண்டு.
  6. பாரன்கியா: கரீபியக்கடல் அருகில் அமைந்த மெக்ஸிகோவின் பெருநகரம்.
  7. தெக்கார்த்தே (1596-1650): பிரஞ்சு தத்துவாதியான ரெனே தெக்கார்த்தே ஒரு முதல் தரமான கணிதவியலாளர் மற்றும் விஞ்ஞானியும் கூட. ‘நான் சிந்திப்பதால் நான் இருக்கிறேன்’’ என்ற மிகப் பிரபலமான ஒரு அறிவிப்பைச் செய்தவர். மனம் மற்றும் உடல் இவற்றுக்கிடையிலான இரட்டைத்தன்மையை முதன் முதலில் உருவாக்கி ஒரு கோட்பாடாக வெளிப்படுத்தியவர்.சோதனை மற்றும் கூர்ந்தாய்வு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த புதிய விஞ்ஞானத்தை வளர்க்க உதவியவர்.

* EL OLOR DE LA GUAYABA GABRIEL GARCIA MARQUEZ, PLINIO APULEYO MENDOZA (Conversaciones con Plinio Apuleyo Mendoza) EDITORIAL SUDAMERICANA, BUENOS AIRES Tercera edición Setiembre de 1993

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer