மழையில் நனையும் நிஷாகந்தி

அழகிய பெரியவன்

பகிரு

Azhagiya Periyavan 3

வானமும், மேகங்களும் இழைந்து புழங்கும் வெளியின் ஒரு துண்டு. மூன்று பக்கம் சுவரும், ஒருபக்கம் கண்ணாடியும் கொண்டதோர் அறை. மலைச் சிகரத்தில் சரிவை நோக்கியபடி இருக்கும் மனிதக்கூடு. நிர்மானித்த காலம் முதல் பறவைகளை எள்ளியபடி அது மிதந்துகொண்டிருந்தது.

அதன் அகத்தில் அவன் இருந்தான். கண்ணாடிச் சுவரின் திறப்பைக் கொஞ்சம் நெகிழ்த்தினாலும் குளிர்க்காற்று பாய்ந்து பற்றியது. கீழே பார்வையைத் தாழ்த்தினால் புற்படுக்கையின் மீது விழிக்கதிர் உருண்டு அதல பாதாளத்தில் ஓடிக்கொண்டிருக்கும் காட்டாற்றில் போய் விழுந்தது. கண்ணாடித் திரவம் பாய்கின்ற நீர்வழி. திவலைகள் தெறித்து, தண்ணீர்த் துகள்கள் பரவி, நீர்ப்புழுதியைப் படியவிட்டு கடக்கும் சிறுவெள்ளம். அவ்வப்போது மீன்கள் எழும்பி மறைந்தன.

நீ கனவை அடைய முயற்சி செய்கிறாய். நான் கனவாகவே இருக்கிறேன். வெகுதூரம் பயணம்செய்து, மலைச் சிகரத்தின் மீதேறி, களைத்து உட்கார்ந் திருக்கும் உன்னால், நீயே நிர்மானித்திருக்கும் இந்தப்பாவனை வெளியெனும் சுவரைத் தாண்டி வர முடியாது. நானோ இன்னும் மேலே பறப்பேன். எங்கும் சுற்றித் திரிவேன்! புதிர் சுவரை வருடியபடி எப்போதேனும் ஒருபறவை அவனைக் கேலி செய்தபடியே கடந்தது. சில தும்பிகளும் வண்ணத்துப் பூச்சிகளும் தான்தோன்றித் தனமாகச் சுற்றின.

அவன் பாடத் தொடங்கினான். தும்பி வா தும்பக் குளத்தில்... தென்றல் வந்து தீண்டும்போது... இசையில் தொடங்குதம்மா... இதயவானின் உதய நிலவே... நானன்றி யார் தொடுவார்... மாலையில் மலர் சோலையில்... இன்னும் என்னென்னவோ பாடல்கள். நினைவில் தெளிந்து எதிர்நீச்சல் பழகி மீன்களாய் மேலேறும் பாடல்கள். விரிந்தவானே வெளியே, திரிந்த காற்றே கதிரே... மனம் பிதற்றும் கவிதைகள். இவற்றுக்கு இடையில் தான் அவன் அறைக்குள் அவள் நுழைந்திருந்தாள்.

இலேசாகத் திறந்திருந்த கதவை அவள் தட்டியதும், உள்ளே வந்ததும் அவனுக்குத் தெரியவில்லை. அவன், வேதாந்தமே விஞ்ஞானமே விளங்க முடியாத அதிசயமே... என்று பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் கூடு பாய்ந்து மேலேறிக்கொண்டிருக்கையில் பின்னால் தொண்டையைச் செருமும் சத்தம் கேட்டு, இலேசான பதற்றத்துடன், அற்புதங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் எந்தக் கணத்தில் வேண்டுமானாலும் நிகழலாம் என்பதற்கு இதை விட வேறேதாவது சான்று இருக்க முடியுமா என்றெண்ணிக் கொண்டு, அவளைப் பார்த்தான். அவள் ஒரு சிறு புன்னகைக் கரிசனமும் இன்றி அழைத்தாள்.

“நான் காட்டாத்துல குளிக்கணும். தொணைக்கு வரமுடியுமா?”

அவன் குழம்பினான். சிரிப்பதா வேண்டாமா எனத் தவித்தான். அந்த ஒரு கணமே, அவளுடைய உருண்டை முகம் அவன் மனதில் பதிந்துவிட்டது. சரிவில் இறங்குகையில் அவளுடைய கால்கள் வரையாடுகளினுடையதாய் இருந்தன. அவனுக்கோ கால்கள் பின்னின. இவள் என்னைக் கவர்ந்து செல்லவந்திருக்கும் நீர்கன்னியோ? அவள் சிரித்துக்கொண்டே திரும்பி, சொன்னாள்.

“தேவையில்லாத கற்பனையெல்லாம் வேணா!”

அய்யோ, என்ன இது? மனதைப் படிக்கும் இவள் யார்? அவன் மீண்டும் சிரிக்க முயன்று தடுமாறினான்.

“காட்டாத்துல குளிக்கலாம்னு நெனச்சேன். இந்த வழியும், ஆறும், கொஞ்சம் ரிஸ்க்கான எடங்களா பட்டுச்சி. யாராவது கூட இருந்தா நல்லாருக்குமேனு தோணுச்சி. நெனச்சுக்கிட்டே வரும் போது உங்க பாட்டு கேட்டது. மொழி... இல்ல... இசை என் தயக்கத்த ஒடச்சிடுச்சி. அதனாலதான் உங்கள தொணைக்குக் கூப்டேன்.”

அவன் முகத்தைத் தாழ்த்தி சரிவில் கவனத்தைச் செலுத்தினான். அவளோ பதிலை எதிர் நோக்காமல் விடுவிடுவெனக் கீழே இறங்கிச் சென்றுகொண்டே இருந்தாள். இறுக்கமான ஷார்ட்ஸூம், தளர்வான பனியனும் அணிந்திருந்தாள். கால்களில் அருமையான ஷூ  இருந்தது.

ஆற்றை நெருங்க நெருங்க காட்டுப் புற்களின் வாசனை அடர்த்தியாய் விரவி ஈரப்பதம் இமிரிய காற்று தழுவியது. எங்கும் காட்டுப் புற்கள். வேறு வகையான செடிகள் எவற்றையும் பார்க்க முடியவில்லை. காட்டாற்றின் நடுவே அங்கங்கே எழும்பி இருக்கும் பாறைகளில் மோதி நுரைத்துச் சுழித்து அங்கிருப்பவற்றோடு பேசிக்கொண்டே சென்றது நீர்.கூப்பிடு தொலைவில், பாறைக்கூட்டங்களுக்குஅருகில், மணல் தேறியிருக்கும் ஒரு சிறுசமவெளியைத்தேர்ந்து, அவள் குளிக்கச் சென்றாள். அவன் வேறொருபக்கம் நீரில் இறங்கினான். அது உறைநிலைக்குச் செல்லும் வெப்ப நிலையின் அருகில் இருந்தது.

அவர்கள் இருவரும் அப்படித்தான் அந்த மலை யுச்சியில், மேகங்கள் தொட்டுச் செல்லும் அந்தர வெளியில், எப்போதும் மழைத்துளிகள் வீழ்ந்து கொண்டிருக்கும் குன்றில், பாறையொன்றின் மீது எழுப்பப்பட்டிருக்கும் சிறிய தங்கும் விடுதி அறையில் சந்தித்துக் கொண்டார்கள்.

ஆனால் உண்மையில் அதையே அவர்களுடைய முதல் சந்திப்பாகக் கொள்ள முடியாது. கோட்டயம் நகரத்துக்கு வடக்கே, வாகமன் நோக்கி முன்னேறும் சாலையில் பஜாஜ் அவெஞ்ஜெரில் அவன் போய்க் கொண்டிருக்கையில், அவளை முன்னமே பார்த் திருந்தான். தன்னுடைய ராயல் என்ஃபீல்ட் இன்டெர் செப்டார் பைக்கில் வேகமாக அவள் அவனைக் கடந்தாள்.

அவள் அணிந்திருந்த மேல் கோட்டுக்குள் காற்று நுழைந்து தழுவியிருந்தது. மொழுமொழுவென அழகானதொரு ஹெல்மெட், கண்ணாடி, கை உறைகள், காலில் கருத்த ஷூ, பழுப்புநிற ஜீன்ஸ் அணிந்திருந்தாள். இருக்கையில், அவளுக்குப்பின்னால், பயணப்பை உறுதியாகக் கட்டப் பட்டிருந்தது. அதனுள்ளே கேம்பிங் கியர்ஸ், கூடாரம், தூங்கும் பை, படுக்கை, சிறிய அடுப்பு, தேயிலை அல்லது காபிதூள், சர்க்கரை, சில நொறுக்குகள், முதலுதவி மருந்துகள் அடங்கிய அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்டவை இருக்கும் என்பது அவனுக்குத் தெரியும். அவனும் கூட அவற்றைத் தன்னுடைய பயணப்பையுள் வைத்திருந்தான்!

அவள் அனுபவம் வாய்ந்த பயணியாக இருக்க வேண்டும் என்பது அவனுக்கு உறுதியாகிவிட்டது. திருப்பங்களில் இலாவகமாகத் திருப்பினாள். சக பயணிகளையும், வாகனங்களையும் கச்சிதமான இடைவெளியோடு கடந்தாள். சாலையில் தென்படும் ஆட்களில் சிலரை, அனிச்சையாய் திரும்பிப் பார்ப்பதைப் போல, அவளும் அவனை அனிச்சையாகத் திரும்பிப் பார்க்கும் சம்பவம் அப்போது நேர்ந்தது.

அவர்கள் குளித்துவிட்டு விடுதி அறையை நோக்கிய சரிவில் மேலேறியபோது அவள் உடல் இலேசாக நடுங்கியது.

“தண்ணி இவ்ளோ குளிர்ச்சியா இருக்கும்னு நான் எதிர்பாக்கல. விட்டா, அப்டியே ஒறஞ்சிருப்பேன்!”

அவன் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஆமோதித்துத் தலையை ஆட்டினான்.

“ரூம் போனதும் எதையாவது சூடா ஆர்டர் செஞ்சி குடிங்க!”

அவள் புன்னகை செய்தாள். அடுத்த நாள் காலையிலேயே அவன் புறப்பட்டபோது அவளிடம் சொல்லிவிட்டுப் போகலாமென எண்ணினான். குளிக்கப் போகையில் அவளின் அறையெண்ணைச் சொல்லியிருந்தாள்.

அவளுடைய அறைக் கதவைத் தட்டியதும், மெல்லிய முனகலுடன் உள்ளே வரச்சொல்லி அழைப்பது கேட்டது. அவன் உள்ளே சென்று பார்த்தான். அவள் காய்ச்சலில் நடுங்கியவாறு கிடந்தாள். தொலைபேசியில் வரவேற்பறைக்கு அழைத்து, மருத்துவரை ஏற்பாடு செய்யச் சொன்னான். அவள் குணமடையும் வரை தன்னுடைய பயணத் திட்டத்தை அவன் துறக்க வேண்டியதானது.

வாகமனிலிருந்து திரும்புகையில் இருவரும் இணையாகவே தங்களின் வண்டிகளில் மலைப் பாதையில் கீழிறங்கி, கோட்டயம் ரயில் நிலையத்துக்கு முன்னாலிருக்கும் ஒரு தேநீர்க் கடையில் தேநீரைப் பருகிவிட்டுப் பிரிந்தார்கள். இடையில் அவர்கள் நிறையப் பேசிக்கொண்டார்கள். தன்னைக் குறித்துப் பெரிதாக ஒன்றுமே சொல்லாத அவள், உலகம் முழுவதையும் தன் இருசக்கர வாகனத்தால் சுற்ற வேண்டும் என்னும் ஆசையை மட்டும் அவனிடத்தில் அழுத்தமாகத் தெரிவித்தாள்.

அதன் பின்னர் வெவ்வேறு நிலப்பரப்புகளில் உயிர்த்துக்கொண்டிருந்த மனோரஞ்சனியும், ஞான குருவும் கடிதங்களிலும், தொலைபேசியிலும் பேசிக் கொண்டனர். ஆசிரியர்களாய் இருந்த அவர்கள், தங்களுக்குக் கிடைத்த நீண்ட பள்ளி விடுமுறை நாட்களில், ஆண்டுக்கு மூன்று முறை சந்தித்து, ஒன்றாகப் பயணம் செய்யத் தொடங்கினார்கள். செப்டம்பரிலும், டிசம்பரிலும் கிடைக்கும் விடு முறைகளைச் சில நேரங்களில் மழையும், பண்டிகை களும் பங்கு போட்டுக்கொண்டன. கோடைக் காலங்கள் அவர்களை உற்சாகம் கொள்ள வைத்தன. பகுதி பகுதியாக இந்தியாவை முழுவதுமாகச் சுற்றிவிட வேண்டுமெனத் தீர்மானித்துக்கொண்டார்கள்.

கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி, வங்காள விரிகுடா கரையை ஒட்டியவாறே கொல்கத்தா வரைக்கும். பஞ்சாப் தொடங்கி நாகலாந்து வரை இமயமலையின் அடிவாரத்தை உரசியபடி. திருவனந்தபுரத்திருந்து தாத்ரா நாகர்ஹவேலி வரைக்கும். கம்பாத் மற்றும் கட்ச் வளைகுடாக்களையும், இந்தியப் பெரும் பாலைவனத்தையும் ஊடுருவி பஞ்சாப் வரை. தமிழகத்தின் தென்முனையிலிருந்து இந்தியாவின் வடமுனை வரையும், பின்னர் மய்யப்பகுதியில் இடதும் வலதுமாய் ஒரு சிலுவையைப்போல. அவர்களின் சக்கரங்கள் மலைகளிலும், சமதளங்களிலும் உற்சாகமாய் ஏறி இறங்கின. விசிறும் காற்றில் அவர்களின் வாகனச் சத்தம்காற்று வெளியைக் குடைந்தது. புதிய புதிய நிலப்பரப்புகளை வடிவமைக்கும் சிற்பிகளெனத் தங்களைக் கருதிக்கொண்டார்கள். வகை வகையான நிலத் தோற்றங்களும், முகத் தோற்றங்களும், வாழ் முறைகளும், மொழிவழக்குகளும் உற்சாகப்படுத்தின.

பயணங்களின் இடையே கிடைத்த சொற்ப ஓய்வில், சொற்ப அளவில் அவர்கள் பேசிக்கொண் டார்கள். பெற்றோர்கள் பயணத்துக்குகந்த பைக்கை வாங்கிக் கொடுத்து உலகம் சுற்ற வாழ்த்தியதை மனோரஞ்சனி ஆர்வத்தோடு சொன்னாள். இளமை காலம் முதலே பைக்குகளின் மீது கொண்டிருந்த ஆர்வம், சாகசப் பயணங்களை மேற்கொள்ளும் ஆர்வமாக வளர வளர உருமாறியதை ஞானகுரு சொன்னான்.

ஒரு கோடையில் கொல்கத்தா சென்றபோது அவர்கள் அதிகம் பேசிக்கொள்ள முடிந்தது. வண்டிகளை நிறுத்திவிட்டு கால்நடையாகவே கொல்கத்தா வின் வீதிகளிலும் சாலைகளிலும் குறுக்கும் நெடுக்கு மாய் அலைந்தார்கள். விக்டோரியா அருங்காட்சி யகத்தைச் சுற்றியிருக்கும் மைதானங்களில் சிறுவர் களுடன் கிரிக்கெட் ஆடினார்கள். புனித பவுல் கதீட்ரலில் மனோரஞ்சனி நீண்ட நேரத்துக்கு மௌனமாக அமர்ந்திருந்தாள். அங்கிருந்து திரும்ப எண்ணிய மனோரஞ்சனியை சம்மதிக்க வைத்து சிங்கூர், புர்துவான், போல்பூர் வழியாகச் சாந்திநிகேதன் வரை பேருந்தில் அழைத்துச் சென்று வந்தான் ஞானகுரு. கொல்கத்தாவிலிருந்து பைக்கு களில் திரும்பும் வழியில், ஒரு காட்டிடையே, அகன்ற பாறையின் மீது, கற்திட்டைகள் நிறைந்திருந்த இடத்தில் அமர்ந்து, அவள் மெல்லிய புன்னகையோடு தலையாட்டிச் சம்மதிக்க, தன் காதலைத் தெரிவித்தான் ஞானகுரு.

Azhagiya Periyavan 2

அந்தக் காலைக்குக் கொண்டலாத்தியின் குரல் பின்னணி பாடிக் கொண்டிருந்தது. தோட்டத்து செம்பருத்திகளில் தேன்சிட்டுகள் வந்து வந்து அந்தரத்தில் மிதந்தபடியே தேனை உறிஞ்சின. அவற்றின் சிறகடிப்பு தேன் குடிப்பதால் உண்டாகும் களிப்பா, அல்லால் தேன் குடிப்பதற்கு மேற்கொள்ளும் பாடா என்று நினைத்தான் ஞானகுரு.

படுக்கையிலிருந்து எழுந்ததும் பெரும்பாலும் தேநீர் தயாராகிவிட்டிருக்கும். மனோரஞ்சனி தூங்கிக்கொண்டேயிருப்பின் அவன் தயாரிப்பான். இல்லைஎனில் அவள். மனோரஞ்சனியோ, ஞானகுருவோ முன்னறை நாற்காலியில் வந்து உட்கார்ந்திருக்கையில் ஒருவருக்கொருவர் கோப்பைகளை நீட்டிக் கொள்வார்கள். அவர்கள் இருவரும் தேநீர் பித்துக்கொண்டவர்கள். பலவிதமான சுவையும் மணமும் கொண்ட தேநீரைப் பருகியவர்கள். பைக் பயணத்தில் பல இடங்களில் தேநீரைச் சுவைத்து, எத்தனையோ விதமான பிராண்டுகளுக்குத் தாவிப்பார்த்து விட்டவர்கள்.

விரும்பிய பிராண்டுகளை வெளியிலிருந்து தருவிப்பது என்பது மாறி, ஊரைச் சுற்றியிருக்கும் அங்காடிகளில் கிடைக்கின்ற பிராண்டுகளையே வாங்கத் தொடங்கி, பலவற்றுக்கும் கடந்து, இப்போது ஆ.வே.தாமஸ் தங்க பிராண்ட்டை பருகினார்கள். அவள் நீட்டிய தேநீர் கோப்பையில் அதிகாலையின் மொத்த ரம்மியமும் வீசியது. நுண்மையான நுரைப் பொங்கிய தேநீரின் வட்ட முகம். ஆவி மெல்ல எழும்பி முகத்தில் படிந்து இதமளித்தது.

திரவங்களுக்கென்று ஒரு திடமான வடிவம் கிடையாது. அவை இருக்கும் பாத்திரத்தின் வடிவத்தை எடுத்துக் கொள்ளும். அல்லது அதைப் போலவே வடிவத்தை மாற்றும். நம்மால் ஏன் அவ்விதம் முடிவ தில்லை என்று ஞானகுரு நினைத்தான். ஒருவேளை திட திரவ வாயுக்களின் கலவையினால் ஆன உடல் என்பதால் மனிதனுக்கு அப்படியொரு குழப்பம் மேலிடுகிறதோ என்று தோன்றியது.

அவள் ஒரு கோப்பையுடன் அவன் முன்னால் உட்கார்ந்துக் கொண்டாள். அவன் ஒரு புன்னகையுடன் அவளை நோக்கிவிட்டு, தூயதும் தெள்ளியதுமாயிருந்த இளங்காலை மனதின் துப்புரவிலிருந்து ஒரு கதையை எடுத்துச் சொல்லத் தொடங்கினான். அவன் அவளுடன் எல்லாவற்றையும் கதைப்பான். அவளும் அவனுக்கென்று சில கதைகளை வைத்திருப்பாள். அல்லது அவன் விவரிக்கையிலேயே, அவள் மனதில் ஆழப்புதைவிலிருந்து சில சடாரென முகிழ்த்துக் கிளைத்து வெளியே வரும். தேநீர் கோப்பை தீர்ந்து போவதற்குள்ளாகச் சொற்ப அளவிலேனும் சில கதைகளை அவர்கள் பகிர்ந்து முடித்திருப்பார்கள்.

அவ்விதம் அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் தேன் சிட்டுகளும், சிட்டுக்குருவிகளும் முன்னறை கம்பிச்சுவரின் மேல் அமர்ந்தோ, அல்லது உள்நுழைந்து வந்தோ அவர்களைச் சுற்றிப் பறக்கும். முன்னாலிருக்கும் நாற்காலிகளில் அமர்ந்து பார்த் திருந்து விட்டு மீளப்பறக்கும்.

ஞானகுருவின் கதைகள் புதிதாய் இருந்தன. ஆனால் மனோரஞ்சனியோ, நீண்ட நாட்களாய் அவனிடத்தில் ஒரே கதையையே சொல்லிக்கொண்டிருந்தாள். அதை ஒவ்வொரு முறை சொல்லும் போதும், முதன்முதலாய் அவனோடு குளித்த நீரின் குளுமையை அவள் கொணர முயன்றாள்.

அவள் கதை தேங்கிய நீரின் மணம் கொண்டு, பல்வேறு உயிரினங்களைப் பெருக்கி, நெருக்கடிகளை அதிகரித்து நெளிந்தது. தன்னுடைய கதைகளைப் புதுப்பிக்க அவளுக்கு வழியேதுமில்லாமல் போய் விட்டது. அவர்கள் மணம் புரிந்துகொண்டு குடியேறிய வீட்டின் வாகன நிறுத்துமிடத்தில் கம்பீரமாக நிற்க வைக்கப்பட்டுப் பளபளவென மின்னிய அவளின் ராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டார், மங்கி மங்கி சிறிது சிறிதாக ஒளியிழந்து ஒருநாள் முற்றிலுமாக மறைந்து போனது.

பின்னர் வாகனம் நிறுத்துமிடத்தில் மனோரஞ்சனி மலர்ச்செடிகளை நட்டாள். அங்கு மலர்களிடத்தில் வந்த கொண்டலாத்திகளிடமும், வெள்ளைச் சில்லை களிடமும் அவற்றின் சிறகுகளின் மீதமர்த்தித்தன்னை எங்காவது வெகுதூரம் கூட்டிச் செல்ல வேண்டினாள். தோட்டத்தில் பூத்திடும் மலர்களின் மணங்களோடு பயணம் செய்வதற்கு யத்தனித்தாள். பட்சிகளும், புஷ்பங்களும் கைவிரித்த நிலையில் எண்ணங்களை மட்டுமே முடுக்கிவிட்டுப் பயணங் களை மேற் கொண்டு வந்தாள் மனோரஞ்சனி.

கதையென்பது என்ன? நம்முடைய கதையை நமக்கே சொல்லிக்கொள்வதுதானே? அவனும் அவளும்பயணத்தின்போது சந்தித்துக்கொண்ட கதையை, பார்த்த இடங்களை, கிடைத்த அனுபவங்களை, அவன்அறிந்தக் கதையை அவளும், அவள் அறிந்தக்கதையை அவனும் தினந்தோறும் அவ்விதம்தான் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அன்றும் அப்படித்தான் ஞானகுரு கதையைச் சொல்லத்தொடங்கினான்.

ஆனால் மனோரஞ்சனி அவன் சொன்ன கதைகளைக் கேட்கவில்லை. நிர்தாட்சண்யமாய் முகத்தைத் திருப்பிக்கொண்டு வேறு திசைகளை நோக்கினாள். அவன் முகம் பார்க்க விரும்பாதவளாய் தோன்றிய மனோரஞ்சனியை எதிர்கொள்வதற்கு விரும்பாத ஞானகுரு திகைத்துத் தடுமாறினான். அவளே முகம் காட்டாமற் போனால் பிறகு யாரிடம் தன் சொற்களைச் சேர்ப்பது?

அவன் முகத்தை அவளும் அவள் முகத்தைஅவனும் வெகு காலமாகப் பார்த்து வந்தனர். ஆழ்ந்து நோக்கி அவற்றின் அழகுகளையும், அசட்டுத்தனங்களையும், அசிங்கங்களையும் பரஸ்பரம் கண்டறிந் திருந்தனர். சொல்லப்போனால் அவன் முகம்அவளுடையதாகவும், அவள் முகம் அவனுடைய தாகவும் இடம் மாறிவிட்டதாகத்தான் ஞானகுரு நினைத்தான். மணம் புரிந்துகொண்டோ, ஒன்றாகவோ வாழும் இணையரின் முகங்கள் பெரும்பாலும் ஒரே சாயலில் இருப்பதைத் தன் நெடுங்கால ஆய்வின் வழியே கண்டறிந்திருந்தான் ஞானகுரு. முகச்சாயல் ஒத்திருந்தால் தான் பிரியமே ஏற்படுகிறது. இது ஒரு வகையான சுயமோகம் என்றும் அவன் நினைத்தான். ஆழ்ந்த தியான மனநிலையோடு தேநீர் பருகும் இத்தருணத்தில் தன் முகமே தன்னைப் பார்க்காமல் போனால் என்செய்வது என்று துணுக்குற்ற ஞானகுரு, இன்று நாம் எங்காவது வெளியில் செல்லலாம் என்று மனோரஞ்சனியிடத்தில் சொன்னான்.

சிறப்பாய் தயாராகியிருந்தாள் மனோரஞ்சனி. அவளுக்குப் பிடித்தமான பருத்திப் புடவை. தலையில் அவள் வளர்த்த ரோஜாவில் இளையது. அப்படியே தழுவி உட்செரித்துவிடலாம் போல சுகந்த மணம். இப்போது அவனிடத்தில் இருந்த ஸ்பிளண்டரை மனோரஞ்சனி அந்நியமாய்ப் பார்த்தாள். இதற்கு முன்னால் பைக்கிலேயே உட்காராதவளைப்போலத் தடுமாறி பின்னிருக்கையில் அமர்ந்து அவன் தோளைப் பற்றிக்கொண்டாள். எங்காவது ஒரு மலைவாசஸ்தலத்துக்குத் தன்னை அழைத்துச் செல்லும்படிக்கு ஞானகுருவை அவள் கேட்டுக் கொண்டாள்.

வீட்டிலிருந்து கிளம்பி சிறு நகரத்தைக் கடந்ததும் வந்த நெடுஞ்சாலையின் ஓரங்களில் பெரும் புளிய மரங்களும், தூங்கு மூஞ்சி மரங்களும் கிளைத்திருந்தன. அவளுக்கு எல்லாமே புதிதாகத் தோன்றின. சாலையோர உணவகத்தில் நின்றபடியே சிற்றுண்டியை முடித்துக்கொண்ட அவர்கள் அருகிலிருந்த செல்லாபுரியம்மன் சாமிச்சோலையில் இளைப்பாறினார்கள். பெரும் விருட்சங்கள் நிழல் பந்தலிட்டிருந்த அவ்விடம் அவளுள் மௌனத்தை நிறைத்தது. மனோரஞ்சனி எண்ணுவதை அங்கிருந்த நாகணவாய்ப் புட்கள் பிதற்ற முயன்றன. வானத்தை முட்டும் கற்தூண்களுக்கிடையில் கட்டப்பட்டிருக்கும் ஊஞ்சலில் பூமிக்கும் விண்ணுக்குமாகச் சென்றுசென்று வந்த அவள் சிறிது நேரத்தைக் கழித்து அங்கிருந்து புறப்படலாமென்று விரும்பினாள்.

பொழுது மெல்ல பொலிந்து வந்தது. வெய்யில் சுள்ளென்று கிள்ளியது. அங்கிருந்து பார்த்தாலே கிழக்குத் திசையில் வானத்துக்குச் சுற்றுச்சுவர் கட்டியதைப் போலத் தெரியும் மலையுச்சிக்குத்தான் அவர்கள் செல்வதற்குத் தீர்மானித்திருந்தனர். அதற்கு இன்னும் பல கிலோமீட்டர்கள் போக வேண்டியிருந்தது. ஆனாலும் ஞானகுரு வேகத்தில் நிதானம் காட்டினான். மனோரஞ்சனியிடம் அவன்மட்டுமே பேசிக்கொண்டு சென்றான். அவளின் உம்கொட்டல்கள் மட்டுமே அவனுக்குக் கேட்டு வந்தன.

Azhagiya Periyavan 1

அவர்கள் பாதி வழியைக் கடந்திருந்தார்கள். அந்த இடத்தில் நெடுஞ்சாலைப் பள்ளங்கள் புதிதாகச் செப்பனிடப்பட்டிருந்தன. அங்கு வேகத்தடை ஒன்று இருப்பதாக சாலையோரத்தில் வைக்கப்பட்டிருக்கும் தகவல் பலகை சொன்னது. ஆனால் சாலையில் வெள்ளைநிற டிவைடர்களோ, எச்சரிக்கைக் கோடுகளோ வரையப்பட்டிருக்கவில்லை. ஞானகுரு கூர்ந்து பார்த்தபோது சில மீட்டர் தொலைவில் கருநிறச்சாலை இலேசான வயிறு வீக்கத்துடன் படுத்துக்கிடந்தது. ஞானகுரு ஸ்பிளண்டரின் வேகத்தை வெகுவாகக் குறைத்தான். பைக்கை சாலை ஓரமாகவே செலுத்தினான். வியூபைண்டர் கண்ணாடியில் அவர்களின் பின்னால் ஒருவர் வண்டி யில் வந்துகொண்டிருப்பது நிழல் தீற்றலைப் போல உள்ளே பதிந்தது.

மனோரஞ்சனி அவனிடத்தில் பேசத் தொடங்கினாள்.

“வாகமனில்...”

பெருவெடிப்பை போன்றொரு சப்தம் திடீரென்று எழுந்தது. என்ன நடக்கிறது என்று யூகிப்பதற்குள் பின்னால் வந்த வாகனம் அவர்கள் வாகனத்தின் மீது மோதியது. ஞானகுருவும், மனோரஞ்சனியும் வண்டியிலிருந்து கீழே வீசப்பட்டார்கள். ரத்தம் கசியும் உள்ளங்கைச் சிராய்ப்பைக் கொண்டே சாலையில் ஊன்றி எழுந்து நின்ற ஞானகுரு, பதற்றத்துடன் மனோரஞ்சனியைத் தேடினான். அவன் உடல் நடுங்கியது. இதயம் வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது. பய உணர்வு கவ்விக்கொண்டது. ஸ்பிளெண்டர் சாலையின் நடுவில் கவிழ்ந்து கிடந்தது. அவர்களை மோதிய பைக் சாலையின் ஓரத்தில் கவிழ்ந்திருந்தது. அதை ஓட்டிவந்திருந்த நடுவயது கடந்த மனிதர் அதன் அருகிலேயே கிடந்தார். மனோரஞ்சனி சாலை வேகத்தடையைத் தலையணைப் போலப் பாவித்துக்கொண்டு பேச்சுமூச்சற்று கவிழ்ந்து கிடந்தாள். மனோரஞ்சனியிடத்தில் ஓடினான் ஞானகுரு. அவன் கத்தல் அருகிலிருந்த ஊரையே எழுப்பியது.

ஆம்புலன்ஸ் வந்ததும், மருத்துவமனைக்குச் சென்றதும் எதுவும் துல்லியமாக அவனுக்கு நினைவுஇல்லை. அவர்களின் வண்டியை இடித்த பெரியவர் மயக்கத்தில் இருந்து தெளிந்துவிட்டதாகச் சொன்னார்கள். அவரைப் பற்றிய மேலதிக செய்திகளை ஞானகுரு கேட்டுக்கொள்ளவில்லை. மனோரஞ்சனிக்கு உயிர் இருக்கிறது என்று ஆம்புலன்ஸ் ஊழியர் சொன்ன பிறகே ஞானகுருவின் இதயத்துடிப்பு சீரானது. பரிசோதனைகள் முடிந்து, அவசர பிரிவில் சேர்த்து, அவனைப் பார்க்க அனுமதிப்பதற்குச் சில மணி நேரமானது. ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைப் போல மனோரஞ்சனி படுத்திருந்தாள். உயிர் காக்கும் கருவிகள் அவள் உடலுடன் பொருத்தப்பட்டிருந்தன. அவளைப் பார்க்கையில் அழுகை பீறிட்டு வந்தது.

அவனை மருத்துவர் அழைப்பதாகச் சொன்னதும் சென்று மேசை முன்னால் காத்திருந்தான் ஞானகுரு. மீண்டும் அவன் இதயம் விசைகூட்டி துடிக்கத் தொடங்கியிருந்தது. சில நிமிடங்களில் அங்கு வந்த மருத்துவர் மிக இயல்பாக அவனை விசாரித்தார்.

“நீங்க ஓக்கேதானே?”

“ஆமா சார். என்னோட ஒய்ஃபுக்கு...”

“ஷி ஈஸ் ஓக்கே! தலையில அடிபட்டிருக்கு. அவங்க கோமாவுல இருக்காங்க. மேபி இது ஷார்ட் டைம் கோமாவாகூட இருக்கலாம். இப்ப உயிர்பொழச்ச மாதிரி, கோமாவுலர்ந்தும் திடீர்னு கண்முழிக்கலாம்”

“சார்...”

“அப்புறம் இன்னொன்னு. ரெக்கவரி ஆயிட் டாங்கனா, அதுக்குப் பிறகு அவங்க நினைவாற்றல் எப்படி இருக்கும்னு சொல்ல முடியாது. மெமரி லாஸ் இருக்கும்”

ஞானகுரு அதிர்ச்சியுடன் மருத்துவரை பார்த்தான். அவர் தொடர்ந்தார்.

“ஆமா. ஒருவேள அவங்க உங்களையே அடையாளம் காணாமப் போனாலும் ஆச்சரியமில்ல. பாக்கலாம். எல்லாமே நம்பிக்கைதான்”

ஞானகுரு இன்னொரு முறை சார் என்றான். எத்தனை முறை சார் சொன்னாலும் அதுதான் செய்தி என்ற பாவனையோடு மருத்துவர் இருந்தார்.

தொடர்ந்த நாட்களில் வீட்டுக்கும், மருத்துவ மனைக்குமாகப் போய்வந்து கொண்டிருந்தான் ஞானகுரு. மனோரஞ்சனி கண்விழிப்பாளா என்று நினைப்பதை விடவும், அவள் தன்னை அடையாளம் கண்டுகொள்வாளா என்று நினைப்பதிலேயே மனம் உழன்றது. பலவாறாக நினைத்து நினைத்துத் தன்னை நிதானப்படுத்திக் கொள்வதற்கு முயன்றான் ஞானகுரு.

ஒருவாரம் கழிந்திருந்தது. அந்த நாளின் மஞ்சள் வெய்யில் துலங்கும் மாலை வேளையில், மனோரஞ்சனி கண் விழித்துவிட்டாளென்று கூவிக்கொண்டே அவனிடத்தில் ஓடிவந்தாள் செவிலி. ஞான குரு எழுந்து ஓடினான். சிலநிமிடங்களுக்கெல்லாம் மருத்துவரும், ஞானகுருவும், செவிலியும் மனோரஞ்சனியின் படுக்கையருகில் இருந்தார்கள்.

ஞானகுருவின் முகத்தில் அழுகையும், மகிழ்ச்சியும் தளும்பிக் கொண்டிருந்தது. மனோரஞ்சனியை பிரேமையுடன் நோக்கினான். அவள் எல்லோரையும் குழப்பத்துடன் பார்த்தாள். இலேசான வலியில் அவள் முணகுவது கேட்டது. அவள் அருகில் சென்ற ஞானகுரு அவளுடைய கையைப் பற்றிக்கொண்டான். அவள் வினோதமாக நிமிர்ந்து பார்த்தாள்.

“நான் ஹாஸ்பெட்டலுக்கு எதுக்கு வந்தேன்?”

ஞானகுரு அவளை மிரட்சியுடன் பார்த்தான். அவளிடத்தில் முதல் சொல்லாக எதை உதிர்க்க லாமென்று போராடியது அவன் மனம். மனோரஞ்சனியின் பார்வையிலிருந்த அந்நியமோ இன்னும் விலகிடவில்லை.

“நீங்க யாரு?”

அவனைப் பார்த்து மனோரஞ்சனி அவ்விதம் கேட்டதும் வெடித்து அழத் தொடங்கினான் ஞானகுரு. அவன்  தோளை  அழுத்திய  மருத்துவர்  சொன்னார்.

“கண்ட்ரோல் யுவர்செல்ஃப். கண்டிப்பா அவங் களுக்குப் பழய நினைவுகள் திரும்பும். அதுவரைக்கும் நீங்க  அவங்கள  பொறுமையா  கவனிச்சிக்கணும்”

மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்துவிட்ட பிறகு மனோரஞ்சனியை கவனித்துக்கொள்வதற்கென நீண்ட விடுப்பை ஞானகுரு எடுக்கவேண்டியிருந்தது. முதல் வேலையாகத் தன்னுடைய ஸ்பௌண்டரை விற்றுவிட்டுப் பஜாஜ் அவெஞ்ஜர் வாங்கினான். மனோரஞ்சனிக்கென ராயல் என்பீஃட்ல் இண்டெர் செப்டாரை வாங்கி நிறுத்தினான். மீண்டும் பைக் பயணத்தைத் திட்டமிட்ட ஞானகுரு, மனோரஞ்சனியை தன்னுடைய பஜாஜ் அவெஞ்சரில்அழைத்துக் கொண்டு வாகமனுக்குக் கிளம்பினான்.

வானமும், மேகங்களும் இழைந்து புழங்கும் வெளியின் ஒரு துண்டு. மூன்று பக்கம் சுவரும், ஒருபக்கம் கண்ணாடியும் கொண்டதோர் அறை. மலைச் சிகரத்தில் சரிவை நோக்கியபடி இருக்கும் மனிதக்கூடு. நிர்மானித்த காலம் முதல் பறவைகளை எள்ளியபடி அது மிதந்துகொண்டிருந்தது. அதன் அகத்தில் அவர்கள் இருந்தனர்.

கண்ணாடிச் சுவரின் திறப்பைக் கொஞ்சம் நெகிழ்த்தினாலும் குளிர்க்காற்று பாய்ந்து பற்றியது. கீழே பார்வையைத் தாழ்த்தினால் புற்படுக்கையின் மீது விழிக்கதிர் உருண்டு அதல பாதாளத்தில் ஓடிக் கொண்டிருக்கும் காட்டாற்றில் போய் விழுந்தது. கண்ணாடித் திரவம் பாய்கின்ற நீர்வழி. திவலைகள் தெறித்து, தண்ணீர்த் துகள்கள் பரவி, நீர்ப்புழுதியைப் படிய விட்டு கடக்கும் சிறுவெள்ளம். அவ்வப்போது மீன்கள் எழும்பி மறைந்தன.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer