மார்கரெட் அட்வுட் (1939 - )
அறிமுக முன்னுரையும் கவிதை மொழிபெயர்ப்பும்:

பிரம்மராஜன்

பகிரு

கனடா தேசத்தின் வாழும் கவிஞர், நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர், சுற்றுச்சூழல் இயக்கவாதி என பன்முக ஆளுமையாக இருப்பவர் மார்கரெட் அட்வுட். எனவே பன்மைத்துவ இலக்கிய வகைமைகளில் இயங்கிக்கொண்டிருப்பதையும் அவரது சாதனையாகக் குறிப்பிடலாம். ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கியவகைமைகளில் ஒரு படைப்பாளர் சிறப்பாக இயங்குவது சற்றே அரிது என்று சொல்லலாம். அதிலும் சரிசமமான சரளம், ஆழம், கூர்மையான பார்வைக்கோணம் மற்றும் விவாதங்களைத் தாங்கி எடுத்துச் செல்லுதல் ஆகிய அம்சங்களில் அட்வுடுக்கு நிகர் அவரே. கவிதை எழுதத் தொடங்கி ஒன்றிரண்டு தொகுதிகள் வெளிவந்தவுடன் புனைகதையாளர் என்ற புரமோஷன் பெற்றுவிடும் பழக்கத்தை கனடிய இலக்கியவாதிகள் பின்பற்றுவதில்லை.

ஒரு கலாச்சார தேசீயவாதி, மற்றும் பெண்ணிய இயக்கவாதி என்பதோடு அவரை ஒரு கலாச்சார மானுடவியலாளர் என்றும் அழைக்க முடியும். சிலருக்கு அவர் ஒரு அரைகுறை மார்க்சீயவாதியாகவும் இன்னும் சிலருக்கு ஒரு இருத்தலியல் பினாமினாலோஜிஸ்ட்டாகவும் தோன்றி இருக்கிறார். அவரது ஈடுபாடுகள் எந்த அளவுக்கு நவீனத்தன்மை கொண்டவராய் அவரை ஆக்குகின்றனவோ அதே அளவுக்கு ஆதிகாலத்தன்மை கொண்டவராயும் ஆக்குகின்றன.

பகடிக்கும் கிண்டலுக்கும் அட்வுடின் எழுத்துகளில் நிறைய இடமிருக்கிறது. ஒருவித மௌடீகம் அவர் பெரும்பான்மைக் கவிதைகளைச் சுற்றி வளையமிட்டிருக்கிறது. பலவித பிரதிபலிப்புகளை தன் கவிதைகளில் அவர் ஒன்றிணைக்கிறார். தண்ணீர், கண்ணாடி, புகைப்படங்கள், காமிராக்கள் இன்ன பிற. சூழப்பட்ட அமைப்புகளான அறைகள், வீடுகள், கதவுகள் போன்ற அமைப்புகள் படிமங்களாகிக் குறியீடுகளாக மாறுகின்றன. கண்ணாடிகளை ஒரு தந்திரமாக அன்றி ஒரு தொழில்நுட்பமாய் மாற்றுகிறார். அவரது கவித்துவ அணுகுமுறையில் இருமைத் தன்மைகளை இரட்டைத் தலைக் கவிதைகள் என்ற தொடரில் காண முடியும். அவரது கவிதைகளில் ஒரே சமயத்தில் உள்ளும் புறமும் தெரியும்படியான வெளிப்பாடுகள் நிறைந்துள்ளன. அற்புதமானவைகளும் யதார்த்தமானவைகளும், பிசாசுத்தன்மையானவையும் ஸ்தூலத்தன்மை கொண்டவையும் ஆன இருமைகள் ஒரே கண்ணாடியின் இருபக்கப் பிரதிபலிப்புகளாகும் சாத்தியத்தை நோக்கி எழுதப்பட்டவற்றிருக்கின்றன. சமரசமின்றி பாப் கலாச்சாரத்தின் மொழியையும் கொச்சை மொழியின் பயன்பாடுகளையும் இலக்கிய மொழிக்கு இடையில் அவரால் பயன்படுத்த முடியும். ஒருவிதமான பிசாசுத் தன்மையான அம்சங்களை தி ஜர்னல்ஸ் ஆஃப் சூசன்னா மூடி என்ற கவிதைத் தொகுதியில் சித்தரிக்கிறார்.

இக்கவிதைகளின் ஊடாய் படைப்பாளி தனது அந்நியமாக்கப்பட்ட வயோதிகத்தையும் மரணத்தையும் மரணத்தின் அப்பாலையும் காண முயல்கிறார். A Bus Along St.Clair : December என்ற கவிதையில் அவர் தன்னை ஒரு பேய்பிடித்த வயோதிகப் பெண்ணாக சித்தரிப்பது ஆச்சரியமளிப்பதில்லை :

நான்தான் அந்த வயோதிகப் பெண்
உனக்கு எதிரில் பேருந்தில்
அமர்ந்திருப்பவள்
அவளது தோள்கள்
ஒரு சால்வையைப் போல்
இழுக்கப்பட்டுள்ளன 
அவளது கண்களிலிருந்து வருகின்றன
ரகசிய தொப்பி ஊசிகள்
சுவர்களை சிதைத்தழித்தபடி.

கொதிக் (Gothic) வகையான தொல்கதைகளை அவரால் மிக இயல்பாகத் தன் கவிதைகளினுள் கொணர முடிகிறது: நடனமாடும் மணல் ஈக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு கடற்கரையில் வந்து சேர்தல், காட்டினுள் செல்லும் மர்மமான வழிப்பாதை, மூகமூடி அணிந்த மனிதர்கள், நாசம் விளைவிக்கும் தாவரங்கள் மற்றும் பிற விலங்குகள். தப்பி ஓடிச் செல்லும் ஒரு இளம்பெண், பேய்பிடித்த கிராமப்புறங்கள், அரக்கர்கள் நிறைந்த கோட்டைகள் என இந்தச் சித்திரங்கள் மேலும் விரிகின்றன. அட்வுடின் கவிதைகளில் புறவய உலகங்கள் அகவய உலகங்களால் இழுவைக்குள்ளாகின்றன.

அவரது பிரான்கன்ஸ்டீன் பற்றிய கவிதையை விவரிக்க மேரி ஷெல்லியின் (ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியின் மனைவி) பிரான்கன்ஸ்டீன்(1818) மற்றும் போர்ஹெஸ்ஸின் “ட்லோன், உக்பார், ஓர்பிஸ், டெர்ஷியஸ்” (Tlon, Ucbar, Orbis, Tertius) ஆகிய படைப்புகளை நினைவு கொள்வது உதவியாக இருக்கும். பிரதி எடுத்தல் மற்றும் மறுபிரதியாக்கல் ஆகிய படிமங்கள் போர்ஹெஸ்ஸின் ட்லோன் கதையில் தொழிற்படுகிறது. அட்வுடின் இன்னொரு கொதிக் கவிதையான Speeches for Dr Frankenstein என்ற கவிதையில் ஒரு தீர்மானகரமான மொழி பயன்பாட்டுக்கு உள்ளாகிறது: அது படைத்தல் (மனிதன்) குறித்தானது மட்டுமல்ல - அரைகுறையான படைத்தல் மற்றும் பிறப்பு - இறப்பு பற்றிய குழப்பமாக மாற்றம் அடைகிறது :

... ... ... ... ...

நிபுணத்துவத்தால் நான் பைத்தியமானேன்
நான் உன்னைப் பூரணமாக்கினேன்
இதற்குப் பதிலாக நான் தேர்ந்திருக்கவேண்டும்
உன்னை ஒரு சிறிய விதையாகச் சுருட்ட
நம்பிக்கைமிக்க தொடக்கங்கள்
இப்பொழுது நான் இந்த தட்டுநிறையும் 
விளைவுகளால்
பின்வாங்குகிறேன்
மையம் மற்றும் புறத்தோல்
இடைப்பட்ட தசை ஏற்கனவே
அழுகத் தொடங்கிவிட்டது
நான் நிற்கிறேன்
அழிக்கப்பட்ட ஓர் கடவுளின் முன்னால்
தசைநார்களின் கூளம்
விரல்கணுக்கள் மற்றும் கச்சாவான தசைக்கட்டுக்கள்
இந்தப் பணி எனதுதான் என்றறிந்தும்
எப்படி உன்னை என்னால் நேசிக்க முடியும்?

... ... ... ... ...

Speeches for Dr Frankenstein

மாயாஜாலம் அல்லது பில்லிசூனியம் இவை சம்பந்தப்படாத அட்வுடின் கவிதைகள் மிகக் குறைவு. குலக்குறிச் சின்னங்களும் விலங்குகளும் அவரது கவிதைகளில் மனிதர்கள் அளவுக்கே முக்கியத்துவம் பெறுபவை. வடஅமெரிக்க பழங்குடிக் கலாச்சாரங்களிலிருந்து (அல்கோன்க்கியன், க்ரீ, ஒட்டாவா, மற்றும் ஓஜிப்வா) அவரது குறியீடுகள் வெளிப்படுகின்றன. மாயாஜாலத்தை அட்வுட் ஒருவகையான அரசியல் விமர்சனமாகப் பயன்படுத்துகிறாரா என்ற கேள்வியும் எழுகிறது. விலங்குகளும் குலக்குறிச் சின்னங்களும் கண்காணா உலகம் அளவுக்கே அட்வுட்டுக்கு ஈர்ப்புடையவையாக இருக்கின்றன. தொன்மங்களுக்கும் (எடுத்துக்காட்டாக ஆர்பியஸ், பெர்சிபோன், சர்சி) தேவதை கதைகளுக்கும் தேவையான அளவு இடம் அட்வுடின் கவிதைகளில் உள்ளன. அதேபோல வரலாற்று நாயகர்களான கேப்டன் குக் (டாக்டர் விக்டர் பிரான்கன்ஸ்டீன் (மேரி ஷெல்லியின் நாவலிலிருந்து) போன்றவர்கள் இன்றைய கிண்டல் கலந்த விமர்சனப் பார்வையில் தங்களின் எதிர்மறை நிலையை விவரிக்கின்றனர்.

The Handmaid's Tale என்ற நாவலை 1984ஆம் ஆண்டு மேற்கு பெர்லினில் வசிக்கும்போது ஒரு பழைய வாடகை அச்சு இயந்திரத்தில் எழுதினார் என்பது ஈடுபாடு கொள்ளத்தக்க தகவல். குறிப்பிட்ட சூழல், தனி அறை, குறிப்பிட்ட மேஜை போன்ற சில படைப்பாளர்கள் கோரும் விசேஷமான தனித்துவ எழுதுமிடங்களைத் தேடாத ஒரு எழுத்தாளர் அட்வுட்.

இவரது பிரசித்தம் பெற்ற பல நாவல்கள் காரணமாக இவரை ஒரு புதின எழுத்தாளர் என்று மட்டுமே அடையாளப்படுத்துபவர்களும் உண்டு. 18 கவிதைத் தொகுதிகள், 18 நாவல்கள் மற்றும் 11 புதினம் சாரா நூல்களை இதுவரை எழுதி இருக்கிறார். இரண்டு முறை புக்கர் விருதுகள், கனடாவின் கவர்னர் ஜெனரல் விருது மற்றும் ஆர்தர் சி.கிளார்க் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர்.

புகழ்பெற்றவராய் இருப்பது பற்றி ஏஏஆர்ப்பி (AARP)மின் இதழில் ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட போது கனடியர்கள் புகழை ஐயத்திற்கிடமான விதத்தில் பார்ப்பதாகவும் அது சற்றே சுவைக்கேடானது என்றும் பதில் அளித்தார் அட்வுட். அமெரிக்கர்களோடு ஒப்பிட்டால் கனடியர்கள் புகழுக்கு வித்தியாசமான மதிப்புதான் தருகிறார்கள் என்றும் கூறினார்:

Hugh Delhanty : What impact has fame had on you?

Margaret Atwood : I am a Canadian, so we take a dubious view of fame. We think it's in slightly bad taste. If I were American, it would be different. Americans love fame. I just soft-pedal it here because it would be considered in slightly bad taste to go around acting as if you're famous.

மார்கரெட் அட்வுட்டின் தந்தை பூச்சி ஆராய்ச்சி இயலில் ஈடுபட்டிருந்தார். அட்வுட் கனடாவின் ஒட்டாவா என்ற இடத்தில் பிறந்தார். அவர் ஒரு சிறந்த சிறுகதையாளர் என்பதும் கவனிக்கத்தக்கது.

டொரென்ட்டோ பல்கலைக்கழகத்தில் படித்தபோது அவருக்கு பேராசிரியராக சிறப்பு பெற்ற விமர்சனக் கோட்பாட்டாளரான நார்த்ரோப் பிரை வகுப்பெடுத்திருக்கிறார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ரேட்கிளிப் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

ஜிம் போல்க் என்ற அமெரிக்க எழுத்தாளரை அட்வுட் 1968இல் மணந்தார். ஆனால் விரைவிலேயே (1973) அவரிமிருந்து விவாகரத்து பெற்றார். பிறகு கிரேம் கிப்ஸன் என்ற சக கனடா நாவலாசிரியருடன் இணைந்து வாழ்ந்தார். கிப்ஸனின் இறப்பு(2019)வரை அட்வுட் அவருடன் இணைந்த வாழ்க்கை நடத்தினார்.

அட்வுட் எழுதி வெளியாகிய முதல் கவிதைத்தொகுதி 1961இல் வெளிவந்தது. இதற்கு டபுள் பெர்ஸிபோன் என்று தலைப்பிட்டிருந்தார். எழுத்து வாழ்க்கையைத் தொடர்ந்துகொண்டே அவர் பிரிட்டீஷ் கொலம்பியப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

அட்வுட்டின் பல வகைமையான படைப்புகளில் மிகத் தொடக்கத்திலிருந்தே பெண்ணிய அக்கறைகள் இருந்திருப்பதை விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். 1970களில் டொரென்ட்டோவின் யார்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். 1972-73ஆம் ஆண்டுகளில் டொரென்ட்டோ பல்கலைக்கழகத்தின் வருகைதரு எழுத்தாளராகவும் இருந்தார். இதற்கடுத்த ஒரு தசாப்தத்தில் ஆறு கவிதைத் தொகுப்புகளை அட்வுட் வெளியிட்டார்.

  1. The Journal of Susanna Moodie (1970).
  2. Procedures for Underground (1970).
  3. Power Politics (1971).
  4. You are Happy(1974).
  5. Selected Poems 1965-1975 (1978)
  6. Two-Headed Poems (1978)

சூசன்னா மூடியின் குறிப்பேடுகள் (1970) குறிப்பிடத்தக்க வகையில் அதே பெயர் கொண்ட கனடிய தொடக்க கால பெண் எழுத்தாளரின் பிம்பத்தை மனதில் இருத்தி அட்வுட் எழுதியது என்பதை நினைவுகொள்வது அவசியம். சூசன்னா மூடியின் குரலையே கவிதை விவரிப்பில் ஸ்வீகரித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பேடுகள் (அ) டயரி மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

இதே காலகட்டத்தில் மூன்று நாவல்களையும் வெளியிட்டார். 1980களில் அட்வுடின் இலக்கிய மதிப்பீடு உயர்ந்தது. 1990களில் அவரது இலக்கிய நற்பெயர் கூடுதல் வலுப்பெற்றது. 2016களில் ஜானி கிறிஸ்துமஸ் என்ற சித்திரம் வரைபவருடன் இணைந்து ஏஞ்சல் கேட்பேர்ட் (Angel Catbird) என்ற சூப்பர் ஹீரோ காமிக் சித்திரத் தொடரை எழுதத் தொடங்கினார். இந்தப் படைப்புகளை ‘ஸ்பெக்கு லேட்டிவ் புனை கதை’ (Speculative Fiction) என்றும் விமர்சகர்கள் வகைப்படுத்த முயன்றனர். இந்த நூற்றாண்டில் ஸ்பெக்குலேட்டிவ் சிறுகதைகளை எழுதிய மற்றொரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர் இட்டாலோ கால்வினோ.

பத்து ஆண்டு கால இடைவெளிக்குப் பின் 2020இல் அட்வுட் வெளியிட்ட கவிதைத் தொகுதியான டியர்லி (Dearly) வயோதிகம், வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து தியானித்தல் போன்ற அம்சங்களைக்கொண்ட கவிதைகள் அடங்கியது. பிரதான கவிதையான ‘டியர்லி’ கார்டியன் என்ற செய்தித்தாளிலும் வெளியிடப்பட்டது. தவிர அந்த செய்தித்தாளின் வலைத்தளத்தில் அட்வுட் அந்தக் கவிதையை வாசிக்கவும் செய்தார். இதில் இடம் பெறும் கவிதைகளிலும் தொன்மம்சார் பாத்திரங்களின் நவீனமயமாக்கப்பட்ட குரல்களைக் கேட்க முடியும். இதில் ரில்கே தொடர்பான கவிதை ஒன்றும் ஐரிஷ் கவிஞர் யேட்ஸ் பற்றிய கவிதை ஒன்றும் உள்ளன. “மொழிபெயர்ப்புக் கருத்தரங்கு” (At the Translation Conference (Dearly)) என்ற கவிதை இன்று மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும் அனைவரும் படிக்கவேண்டிய கவிதை. தவிர பாலுறவு குறித்த மிக வெளிப்படையான சிந்தனைகளை கவித்துவமான முறையில் விவாதமாக்கி இருக்கிறார்.

கனடிய அடையாளம் குறித்த கோட்பாடுகள் பற்றி அட்வுட் குறிப்பிடத்தக்க கட்டுரைகளை எழுதினார். இது மற்றும் கனடிய இலக்கியம் குறித்த இலக்கிய விமர்சனமாக அமைந்த அட்வுடின் பிரதான நூலாக அமைவது Survival : A Thematic Guide to Canadian Literature. இந்த நூலில் விமர்சகர் நார்த்ரோப் பிரை (Northrop Frye)யின் பாதிப்புகளை காண முடிகிறது.

பெண்ணியவாதி என்ற முத்திரையை அட்வுட் விருப்பமின்றி ஒப்புக்கொண்டாலும் அவரது படைப்புகள் பெண்ணிய இலக்கிய விமர்சகர்கள் ஈடுபாடு கொள்ளத் தக்கவையாக இருக்கின்றன. எடிபில் உமன் (Edible Woman) என்ற ஸர்ரியல் தன்மையான நாவலில் தொடங்கி அட்வுட் அழுத்தமாகக் கூறினார்:

“நான் அதை பெண்ணியம் என்று கருதவில்லை. நான் அதை சமூக யதார்த்தவியல் என்றுதான் கருதுகிறேன்’’ என்றார். ஆனால் அட்வுடின் நிராகரிப்புக்கு மிஞ்சி பாலியல் அரசியல், தொன்மங்களின் பயன்பாடு, தேவதைக் கதைகளின் பயன்பாடு போன்றவற்றைக் கொண்டு அவரது எல்லாப் படைப்புகளையும் பெண்ணிய நோக்கிலேயே சில விமர்சகர்கள் அணுகுகின்றனர். அட்வுட் விவரிக்கும் தி ஜர்னல் ஆப் சூசன்னா மூடி கொதிக்தன்மை கொண்டதாய் இருக்கிறது. சில படைப்புகளில் யதார்த்தத்தை விட புனைவின் அதிகாரம் விஞ்சிவிடுகிறது. சாதாரணத்துவத்தை விநோதம் ஆக்கிரமிக்கிறது. இதன் அடிப்படை அலகு பயம் என்ற அம்சமாக இருக்கலாம் என்று மோயர் போன்ற சில விமர்சகர்கள் கருதுகின்றனர். இதற்கு மோயர் தரும் பெயர் ‘மனோவியல்சார் கற்பனை’. பெண்ணியம் என்ற சொல்லின் பயன்பாடு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தத்தை அளிப்பதால்தான் தன்னால் அந்த லேபிளை ஏற்க முடியவில்லை என்று கூறிய அட்வுட் அது குறித்த பல கேள்விகளை எழுப்பினார்:

“I always want to know what people mean by that word [feminism]. Some people mean it quite negatively, other people mean it very positively, some people mean it in a broad sense, other people mean it in a specific sense. Therefore, in order to answer the question, you have to ask the person what they mean.

அட்வுட் குழந்தைகளுக்கான புத்தகங்களிலும் அவர்களுக்கான டிவி தொடர்களிலும் ஈடுபாடு உள்ளவர்.

அந்த தேசத்தில் விலங்குகள்

அந்த தேசத்தில் விலங்குகள்
மனித முகங்களைக் கொண்டிருக்கின்றன

ஆசாரப் பூனைகள்
தெருக்களை உரிமைகொண்டிருக்க

குள்ள நரி ஓடுகிறது பணிவுடன் பூமிக்கு
வேட்டைக்காரர்கள் அதைச் சுற்றி இருக்க
அவர்தம் ஓவியத்திரை நடத்தை முறையில் நிலைப்பட்டிருக்க

காளை

குருதியால் பூத்தையல் செய்யப்பட்டு
மேலும் ட்ரம்பெட்டுகள் ஒலிக்க சீரிய மரணம் அளிக்கப்பட்டு 
அதன் மேல் பெயர் வம்சாவளிசார் பிராண்டுடன்
முத்திரை இடப்பட்டிருக்கிறது 
காரணம்

(வாள் அதன் நெஞ்சில் இருக்க
அதன் நீலநிற வாயில் இருந்த
பற்கள்
அது மணலில் உருண்டபோது
மனிதத்தன்மையுடன் இருந்தது)

நிஜத்தில் அவன் ஒரு மனிதன்தான்

கட்டுக்கதைகளால் அடர்த்தியாக்கப்பட்ட
காடுகளில்
ஓநாய்களும் கூட
அவற்றின் எதிரொலிக்கும் உரையாடல்களை நடத்துகின்றன

இந்த தேசத்தில்
விலங்குகளுக்கு
விலங்குகளின் முகங்கள் உள்ளன

அவற்றின் கண்கள்
காரின் முகப்புவிளக்கு ஒளியில்
ஒரு முறை மின்னி மறைகின்றன

அவற்றின் மரணம் நேர்த்தியானதல்ல

அவற்றுக்கு எவரின் முகங்களும் இல்லை.

நிச்சலன வாழ்வுக்கு எதிராக

ஒரு மேஜையின் மையத்தில் ஆரஞ்சு

இது ஒரு ஆரஞ்சு என்று சொல்லியபடி
சற்று தூரத்தில் அதைச் சுற்றி நடப்பது
போதுமானதல்ல
நமக்கு சம்பந்தம் இல்லை
வேறெதுவும் கிடையாது: அதை விடு தனியே

அதை நான் என் கைகளால் எடுக்க விரும்புகிறேன்
நான் அதன் தோலை உரித்தெடுக்க விரும்புகிறேன்
வெறும் ஆரஞ்சு என்பதை விட
எனக்கு இன்னும் அதிகமாக சொல்லப்பட வேண்டும்
என்று விரும்புகிறேன்
அது சொல்லவேண்டியது சகலமும்
எனக்குச் சொல்லப்படவேண்டுமென விரும்புகிறேன்

மேலும், நீ, எதிரில் மேஜைக்கு அப்பால்
சிறிது தொலைவில் அமர்ந்திருக்கிறாய்
உனது புன்னகை அடக்கமாக
மேலும் அந்த ஆரஞ்சைப் போல
சூரிய ஒளியில்: மௌனமாய்

இப்போது உனது மௌனம் மாத்திரம்
எனக்குப் போதுமானதல்ல
என்னவிதமான மனநிறைவில் உனது
கைகளை ஒன்றாக மடித்து வைத்திருந்தபோதிலும்
சூரிய ஒளியில் உன்னால் சொல்ல முடியக்கூடிய
எது வேண்டுமானலும்
எனக்கு வேண்டும்

உனது வேறுபட்ட குழந்தைப் பிராயங்கள்
இலக்கற்ற பயணங்கள்
உனது காதல்கள், உனது ஒருங்கிணைந்த எலும்புகள் 
உனது நிற்கும் நிலைகள்
உனது பொய்கள்

இந்த ஆரஞ்சு மௌனங்கள்
(சூரிய ஒளி மற்றும் மறைவுண்ட புன்னகை)
நீ சொல்லும்படியாக
உன்னைத் திருக விரும்ப வைக்கின்றன
இப்பொழுது நான் 
ஒரு அக்ரூட்டுக் கொட்டையைப் போல் 
உன் கபாலத்தை உடைக்கப் போகிறேன்
உன்னைப் பேச வைக்க
அதை ஒரு பூசணிக்காயைப் போலப் பிளக்கப் போகிறேன்
அல்லது உள்ளே இருப்பதைப் பார்ப்பதற்கு

ஆனால் அமைதியாக
நான் ஆரஞ்சை தேவையான கவனத்துடன் எடுத்து
மென்மையாகப் பிடித்துக்கொண்டிருந்தேன் என்றால்

நான் காணலாம்
ஒரு முட்டை
ஒரு சூரியன்
ஒரு ஆரஞ்சுநிற நிலா
ஒருவேளை ஒரு கபாலம்
சகல சக்திகளின் மையம்
என் கையில் ஓய்வுகொள்கிறது
நான் அது எப்படி இருக்கவேண்டுமென
விரும்புகிறேனோ அப்படியெல்லாம்
அதை மாற்ற முடியும்

மேலும் நீ, மனிதன், ஆரஞ்சு
மதியம்,
காதலன், எனக்கு அப்பால் நீ
எங்கே அமர்ந்தாலும்
(மேஜைகள், ரயில்கள், பேருந்துகள்)
நான் அமைதியாக 
நெடுநேரம் கவனித்தால்

இறுதியாக, நீ சொல்வாய்
(ஒருவேளை பேசாமல் கூட)

(அங்கே மலைகள் உண்டு
உன் கபாலத்தில்
தோட்டம் மற்றும் பெருங்குழப்பம், சமுத்திரம்
மற்றும் சூரைக்காற்று ;
அறைகளின் சில மூலைகள்
கொள்ளுப் பாட்டிகளின் உருவச்சித்திரங்கள்
குறிப்பிட்ட நிறத்தில் உள்ள திரைச்சீலைகள்
உனது பாலைவனங்கள்; உனது தனிநபர்
டைனோசர்கள்; முதல் பெண்)

எல்லாவற்றையும் நான் அறியவேண்டும்
எனக்குச் சொல் எல்லாவற்றையும்
அவை இருந்தவிதத்தில்
ஆரம்பத்திலிருந்து.

இரட்டைக் குரல்கள்

இரண்டு குரல்கள்
மாறி மாறி என் கண்களைப் பயன்படுத்தின

ஒன்றுக்கு
நீர்வர்ணங்களால் தீட்டப்பட்ட
நடத்தை முறை இருந்தது
மலைகள் அல்லது நயாகரா நீர்வீழ்ச்சி பற்றி
பேசும்போது
தணிந்த தொனியைப் பயன்படுத்திற்று
மேம்படுத்தும் கவிதை வரிகளை உருவாக்கியது
மேலும் வறியவர் மீது உணர்ச்சிகளை செலவிட்டது

மற்ற குரலுக்கு
வேறு ஞானம் இருந்தது
ஆண்கள் எப்போதும் வியர்க்கின்றனர் என்பது பற்றியும்
மேலும் அடிக்கடி குடிக்கின்றனர்
மற்றும் பன்றிகள் பன்றிகள்தான்
ஆனால் கண்டிப்பாக உண்ணப்பட வேண்டும் எப்படியும்
பிறவாத குழந்தைகள் உடலில் காயங்களைப் போல
சீழ்பிடிக்கின்றனர்
மேலும் கொசுக்களைப் பற்றி எதையும் 
செய்வதற்கில்லை என்பது பற்றியும்

ஒன்று 
எனது நீர்கோர்த்து உருத்திரிந்து வெளுக்கும்
கண்களின் வழியாகப்
செந்நிற இலைகளைப் பார்த்தது 
பருவகாலங்களின் சடங்குகள் மற்றும் ஆறுகளை

மற்றது கண்டுபிடித்தது 
இனிப்புப் பட்டாணிகளுக்கு மத்தியில்
அரைகுறையாய்ப் புதைக்கப்பட்ட
புழுக்களுடன் ஆரவாரித்த ஒரு இறந்த நாயை.

விலங்குகளின் கனவுகள்

பெரும்பான்மை விலங்குகள் பிற விலங்குகளைக்
கனவு காண்கின்றன
அவற்றின் வகையைப் பொருத்து

(சில வகை எலிகள்
மற்றும் கொறிக்கும் சிறு விலங்குகள்
பீதிக்கனவுகளில்
ஐந்து கூர்நகக்கால்கள் இறங்கும்
மாபெரும் அடர்சிவப்பு உருவத்தைக் காண்கின்றன)

அகழ் எலிகள் இருட்டைக் கனவு காண்கின்றன
மென்மையான
அகழ் எலிகளின் வாசனைகளை

தவளைகள் பச்சை மற்றும் பொன்னிறத்தில்
லில்லி மலர்களுக்கிடையே
நனைந்த சூரியன்கள் போல் மினுங்கும் தவளைகளை
சிவப்பு மற்றும் கருப்பு வரிகள் கொண்ட மீன்கள்
அவற்றின் கண்கள் திறந்திருக்க
அவற்றுக்கு சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களிலான
கனவுகளின் தற்காப்பை, தாக்குதலை
அர்த்தம் நிறைந்த
அமைப்புகள்
பறவைகள்
பாட்டிசைத்தலினால் சூழப்பட்ட
எல்லைகளைக் கனவு காண்கின்றன

சிலசமயங்களில் விலங்குகள் தீவினையைக்
கனவு காண்கின்றன
சோப்பு மற்றும் உலோக வடிவில்
ஆனால் பெரும்பாலும் விலங்குகள்
பிற விலங்குகளையே கனவு காண்கின்றன

அங்கே விதிவிலக்குகள் உள்ளன

சாலை ஓர விலங்குக்காட்சி சாலையில்
உள்ள வெள்ளிநிற ஓநாய்
குழிபறித்து வெளித்தள்ளவும்
கழுத்துக்கள் கடிபட்ட
ஓநாய்க் குட்டிகளையும்

ரயில் நிலையம் அருகில்
கூண்டில் அடைபட்ட ஆர்மடில்லோ
நாள் முழுக்க ஓடுகிறது
எட்டாம் எண்களின் வடிவில்
அதன் குட்டிப் பன்றிக் கால்கள் படபடக்க
அது இனியும் கனவு காண்பதில்லை
ஆனால் விழித்திருக்கையில்
பைத்தியமாக இருக்கிறது

புனித கேத்தரின் சாலையில்
விலங்குவிற்பனைக் கடை ஜன்னலில்
கொண்டையுடன், ராஜரீகக் கண்களுடன்
தன் தண்ணீர்ப் பாத்திரம் மற்றும் மரத்தூள் நாட்டை ஆளும்
உடும்பு
மரத்தூளைக் கனவு காண்கிறது.

என்றுமே எழுதப்படமுடியாத ஒரு கவிதையை நோக்கிய குறிப்புகள்

இந்த இடத்தைப் பற்றி
நீங்கள் அறிந்துகொள்ளாதிருப்பது நல்லது
இந்த இடம் உங்களை
வாசஞ் செய்துவிடும்
இந்த இடம் இறுதியாக உங்களைத் தோற்கடிக்கும்

இங்கே ஏன் என்ற சொல் சுருண்டு தன்னைத் தானே
காலி செய்து கொள்கிறது. இது பஞ்சம்.
இதுபற்றி உங்களால்
எந்தக் கவிதையும் எழுத முடியாது
மணற்பள்ளங்கள்
அங்கே நிறைய பேர் புதைக்கப்பட்டு
மற்றும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
தாங்கவொண்ணா வலி
அவர்களின் சருமங்களின் மேல்
இன்னும் படிந்திருக்கிறது

இது சென்ற ஆண்டு நடந்துவிடவில்லை
அல்லது நாற்பதாண்டுகளுக்கு முன்னால்
ஆனால் சென்ற வாரம்.
இது நடைபெற்று வந்திருக்கிறது
இது நடக்கிறது

நாம் பெயரடைகளின் மலர்வளையங்களை
அவர்களுக்காக உருவாக்குகிறோம்
அவற்றை நாம் உருட்டுமணிகளைப் போல் எண்ணுகிறோம்
நாம் அவர்களை புள்ளி விபரங்களாய் மாற்றுகிறோம்
மற்றும் இறைவழிபாட்டு முறைகளாக
மேலும் இது போன்ற கவிதைகளாக ஆக்குகிறோம்

எதுவும் பயனில்லை
அவர்கள் அவர்களாகவே இன்னும் இருக்கின்றனர்.
அந்தப் பெண் ஈரமான சிமெண்ட்டுத் தரையில்
கிடக்கிறாள்
முடிவற்ற வெளிச்சத்தின் கீழ்
ஊசி அடையாளங்கள் அவள் கைகளில்
போடப்பட்டுள்ளன
மூளையைக் கொல்ல
மேலும் அவள் வியக்கிறாள் ஏன் சாகிறோம் என
அவள் சொன்ன காரணத்தால் அவள் சாகிறாள்
அவள் அந்த வார்த்தையின் பொருட்டு இறக்கிறாள்
அது அவளது உடல், மௌனமாய்
விரல்களின்றி
இந்தக் கவிதையை எழுதிக்கொண்டிருக்கிறது.
அது ஒரு அறுவைச் சிகிச்சையை ஒத்திருக்கிறது
ஆனால் அது இல்லை

அல்லது விரித்து வைத்த கால்கள் மற்றும் உறுமல்கள்
மற்றும் குருதி
இது ஒரு பிரசவமா

ஓரளவு அது ஒரு வேலை
ஓரளவு அது திறனை வெளிக்காட்டல்
ஒரு இசைக் கன்செர்ட்டோவைப் போல

அதை மோசமாக செய்ய முடியும்
அல்லது சிறப்பாக
அவர்கள் தங்களுக்குள் சொல்கிறார்கள்

ஓரளவுக்கு அது ஒரு கலை.
இந்த உலகின் தகவல்கள்
தெளிவாக கண்ணீரின் ஊடே பார்க்கப்படுகின்றன
அப்படியானால் ஏன் அவற்றைச் சொல்லவேண்டும்
அப்படியானால் என் கண்களில் ஏதும் கோளாறா?

பயந்து பின்வாங்காமல்
திரும்பிக்கொள்ளாமல்
தெளிவாகப் பார்ப்பது என்பது அவசம்
கண்கள் விரிய பசைப்பட்டி ஒட்டப்பட்டு
சூரியனிலிருந்து இரண்டு அங்குல தூரத்தில் திறந்திருக்கிறது

அப்படியானால் நீங்கள் காண்பது என்ன?
அது ஒரு மோசமான கனவா
ஒரு பொய்த்தோற்றக் காட்சியா?
அது ஒரு ஆழ்பார்வை தரிசனமா? 
நீங்கள் செவிகொள்வது என்ன?

விழிக்கோளத்தின் குறுக்காய் ஒரு சவரக்கத்தி
என்பது ஒரு பழைய திரைப்படக் காட்சி
அது நிஜமும் கூட
சாட்சியமாக இருக்கவேண்டியது 
கட்டாயம் நீங்கள் செய்யவேண்டியது.
இந்த நாட்டில் நீங்கள் 
விரும்பியதைச் சொல்லலாம்
காரணம் எப்படியும்
யாரும் நீங்கள் சொல்வதை செவிகொள்ள மாட்டார்கள்
போதுமான அளவு பாதுகாப்பானது
இந்த நாட்டில்
என்றுமே எழுதப்பட முடியாத கவிதையை
எழுத முயற்சி செய்யலாம்
எதையும் கண்டுபிடிக்காத
எதையும் மன்னிக்காத கவிதையை
காரணம்
நீங்கள் உங்களை ஒவ்வொரு நாளும்
கண்டுபிடித்து மன்னித்துக்கொள்கிறீர்கள்

வேறெங்கோ, இந்தக் கவிதை
கண்டுபிடிப்பல்ல
வேறெங்கோ, இந்தக் கவிதை
தைர்யத்தை எடுத்துக்கொள்கிறது
வேறெங்கோ, இந்தக் கவிதை
கண்டிப்பாக எழுதப்படவேண்டும்
காரணம் கவிஞர்கள் ஏற்கனவே இறந்துவிட்டனர்

வேறெங்கோ, இந்தக் கவிதை
கண்டிப்பாக எழுதப்படவேண்டும்
ஏற்கனவே நீங்கள் இறந்துவிட்டீர் என்பதுபோல
மேலும் ஒன்றுமே செய்வதற்கில்லை 
அல்லது உங்களைக் காப்பாற்ற சொல்லப்பட்டது என்பதுபோல

வேறெங்கோ இந்தக் கவிதையை
கண்டிப்பாக நீங்கள் எழுதவேண்டும்
காரணம் செய்வதற்கு வேறு ஒன்றுமில்லை.

கேப்டன் குக்கின் மறு அவதாரம்

நான் அறிந்து கொள்ளும் முன்பே
தேசவரைபடங்களுக்கு வர்ணம் கொடுத்தாகிவிட்டது
நான் மன்றாடியபோது
அரசர்கள் சொன்னார்கள்
கண்டுபிடிக்க எதுவும் விடுபட்டிருக்கவில்லை என

எப்படியும் நான் கிளம்பிச் சென்றேன்
ஆனால் நான் சென்ற இடங்கள் எல்லாவற்றிலும்
வரலாற்றாசிரியர்கள் 
மலர் வளையங்கள் மற்றும்
பொய்ப் பற்களால் ஆன பெல்ட்டுகளை அணிந்திருந்தனர்
அல்லது பாலைவனங்களில்
கற்களால் ஆன நினைவு மேடுகள் மற்றும்
உல்லாசப் பயணிகள் இருந்தனர்
குகைகளில் கூட மெழுகுவர்த்தி அடித்துண்டுகள் இருந்தன
இருளில் விரைந்து கிறுக்கப்பட்ட
எழுத்துப் பொறிப்புகள் இருந்தன
என்னால் சென்று சேர முடியவில்லை
எப்போதும் பெயர்கள் எனக்கு முன்பே
அங்கே சென்றுவிட்டிருந்தன

இப்பொழுது எனக்கு வயதாகிவிட்டது
எனக்குத் தெரியும் எனது பிழை
அந்த தேச வரைபடங்களை ஒப்புதல் செய்தது
கண்கள்
களைத்து சோர்ந்த நினைவுச்சின்னங்களை உயர்த்துகின்றன
அட்லஸ்களை எரித்து அழியுங்கள்
என நான் பூங்கா பெஞ்சுகளிடம் கத்துகிறேன்

வெற்றுக் கல்லறைகளைக் கடந்து
தெருவின் குறுக்கே
வெற்றுப் பதாகையை வீசியபடி
திருப்பத்திற்கு அப்பால்
புவிப்பரப்பியல் சுத்தமாக்கப்பட்ட 
புதிய பிரதேசத்தில்
அதன் கடற்கரைகளில்
அம்புகள் மின்னுகின்றன.

மொழிபெயர்ப்புக் கருத்தரங்கில்

எமது மொழியில்
அவன் என்பதற்கும் அவள் என்பதற்கும் சொற்கள் கிடையாது
அல்லது அவளது அல்லது அவனது என்பதற்கும்
ஒரு பாவாடையையோ அல்லது கழுத்து டையையோ
அல்லது அது போன்ற வஸ்து எதையாவது
முதல் பக்கத்தில் போட்டுவிட்டால் அது உதவும்

வன்புணர்ச்சி விஷயத்தில்
வயதை தெரிந்துகொள்வது உதவுகிறது
ஒரு குழந்தையா வயது முதிர்ந்தவரா?
எனவே நாம் ஒரு தொனியைத் தொடங்கி வைக்கலாம்

எமக்கு எதிர்காலத் தொடர் வாக்கியம் இல்லை
என்ன நடக்க இருக்கிறதோ அது ஏற்கனவே நடந்துகொண்டிருக்கிறது
ஆனால் நீங்கள் நாளை என்ற ஒரு வார்த்தையை
அல்லது புதன்கிழமை என்ற வார்த்தையையோ சேர்க்கலாம்
நீங்கள் சொல்வது என்னவென்று நாங்கள் அறிந்துகொள்வோம்

இந்த சொற்கள் உண்ணப்படக்கூடிய வஸ்துக்களுக்கானவை
உண்ணப்பட முடியாத பொருள்களுக்கு
எங்களிடம் எந்த வார்த்தையும் கிடையாது
அவற்றுக்கு பெயர் எதற்கு?
இது தாவரங்களுக்கும் பறவைகளுக்கும்
சபித்தலில் பயன்படுத்தப்படும் காளான்களுக்கும் பொருந்தும்

மேஜையின் இந்தப் பக்கத்தில்
“இல்லை” என்று பெண்கள் சொல்வதில்லை
“இல்லை” என்பதற்கான ஒரு சொல் இருக்கிறது
ஆனால் பெண்கள் அதைச் சொல்வதில்லை
அது மிகவும் திடீர்த்தன்மை கொண்டதாயிருக்கும்
“இல்லை” என்று சொல்வதற்குப் பதிலாக 
நீங்கள் “ஒருவேளை” என்று சொல்லலாம்
பெரும்பாலான சூழ்நிலைகளில்
நீங்கள் புரிந்துகொள்ளப்படுவீர்கள்

மேஜையின் அந்தப் பக்கத்தில்
ஆறு பிரிவுகள் உள்ளன
இன்னும் பிறக்காதவை, இறந்தவை, உயிருள்ளவை
உங்களால் அருந்த முடியக் கூடிய விஷயங்கள்
உங்களால் அருந்த முடியாத விஷயங்கள்
சொல்லப்பட முடியாத விஷயங்கள்

இது ஒரு புது சொல்லா அல்லது பழைய சொல்லா?
இது மரபழிந்துவிட்ட ஒன்றா?
இது முறைசார்ந்ததா அல்லது பரிச்சயமானதா?
எந்த அளவு கோபமான வெறுப்பு கொண்டது?
ஒன்றுக்குப் பத்து என்ற அளவிலா?
நீங்கள் அதை உருவாக்கினீர்களா?
மேஜையின் தூரத்து முடிவில்
கதவுக்கு அடுத்து வலதுபக்கத்தில்
உள்ளவர்கள் “அபாயங்கள்” பற்றி ஆராய்கின்றனர்.
அவர்கள் தவறான ஒரு வார்த்தையை மொழிபெயர்த்தால்
அவர்கள் கொல்லப்படலாம்
அல்லது குறைந்தபட்சம் சிறையில் அடைக்கப்படலாம்
அது போன்ற “அபாயங்களுக்கு” எந்தவித பட்டியலும் இல்லை
அவர்கள் பிறகு மட்டுமே கண்டுபிடிப்பார்கள்
கழுத்து டை பற்றியோ அல்லது பாவாடை பற்றியோ
அல்லது அவர்கள் இல்லை என்று சொல்ல முடியுமா
என்பது பொருட்டாக ஆகாமல் போகும்போது.
அவர்கள் காபி நிலையங்களில் முதுகுகள் சுவர் பக்கம் சாய்ந்திருக்க
மூலைகளில் அமர்ந்திருக்கின்றனர்
என்ன நடக்கவேண்டுமோ அது ஏற்கனவே நடந்துகொண்டிருக்கிறது.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer