மாலதி மைத்ரி

மின்னஞ்சல் வழி உரையாடியவர்கள்: செல்வசங்கரன், க. ஜவஹர்

பகிரு

Maalathi Maithri

நீங்கள் எழுத வந்ததன் சமூக, அரசியல் பின்னணியைச் சொல்லுங்கள்?

கடும் உடலுழைப்பால் வாழ்வை நடத்தும்  ஒடுக்கப்பட்ட  விளிம்புநிலைச் சாதியினர் கலந்து வாழும் சூழலில் வளர்ந்தேன். வீட்டிலும் வெளியிலும் எவ்வளவு உழைத்தாலும் பெண்களின் இடம் துயரம் நிறைந்ததாக இருந்தது. படித்த பெண்களாயிருந்தாலும் படிக்காத பெண்களாயிருந்தாலும் அவர்களுக்கு இங்குச் சமூக அந்தஸ்தும் மரியாதையும்இல்லை. நான் படிக்கும் காலத்தில் என் தெருவில் பெரும்பாலும் பெண் குழந்தைகள் பள்ளிக்குப் போகவில்லை.  இந்தச் சாதிய, வர்க்க, ஆணாதிக்க முரண்கள் தொந்தரவளித்தன. ஆதிக்கச் சாதி ஒடுக்கப்பட்டசாதிப் பாகுபாடு, ஏற்றத்தாழ்வு, சாதிய வன்மம், ஆணாத்திக்கக் குரூரம், பெண் மதிப்பு பற்றிய சிந்தனைகள் அநீதியான சமூக அமைப்பு  மீதான கோபத்தை வளர்த்தன.

நான் படித்த பள்ளியில் தொண்ணூறு சதம் ஆசிரியர்கள் பெண்கள். பெண் ஆசிரியர்களில் முக்கால்வாசி முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந் தவர்கள் மீதமுள்ளவர்கள் பிற்படுத்தப்பட்டவர். அனைவரும் பெற்றோர் பார்த்துக்கொடுத்த ஆண்களைத் திருமணம் செய்தவர்கள். வாங்கும் சம்பளத்தை அப்படியே கட்டிய கணவன் கையில் கொடுத்து விடுவார்கள். சில ஆசிரியர்கள் புருசனிடம்அடி உதைப்பட்டுக் கன்றிய சதையுடன் வரும்காட்சிகள் எனக்கு அதிர்ச்சியளித்தன. ஆசிரியர்கள் என்ற மதிப்புள்ள நிலையைப் பெண்கள் எட்டிய பின்பும் அவர்கள் வாழ்வு எந்த விதத்திலும் அப்போதுமேம்பட்டிருக்கவில்லை. ஆயிரம் மாணவர்களுக்கு மத்தியில் அறிவாசானாய் கம்பீரமாய் மரியாதைக் குரியவராய் தோன்றியவர்கள் குடும்பத்திற்குள் தமதுவிருப்பு வெறுப்புகளைச் சொல்லவும் தன்னிச்சையாய் முடிவெடுக்கவும் முடியாதவர்களாய்ச் சிறுமைப்படும், வன்கொடுமைக்காளாகும் வாழ்வின் நிர்பந்தம் பெண் நிலை குறித்து யோசிக்க வைத்தன.

ஆனால் நான் பிறந்த சமூகத்தில் தொண்ணூத் தொன்பது சதம் பெண்கள் படித்திருக்கவில்லை. குடும்பத்தின் மொத்த வருமானமும் பெண்களிட மிருக்கும், பெண்கள்தான் நல்லது கெட்டது பார்ப்பார்கள். எதையும் துணிந்து சுதந்திரமாக முடிவெடுப்பார்கள். எதற்கும் புருசனிடம் உத்தரவு கேட்டு நிற்க மாட்டார்கள், தகவலாகத்தான் சொல்வார்கள்.  குடும்பச் சண்டையில் புருசன் ஒரு அடி அடித்தால் திரும்பி இரண்டடி அடித்து நான் உனக்குச் சளைத்தவளில்லை என்று காண்பிக்கும் துணிவு மிக்கவர்கள். கூட்டத்தை வழிநடத்தும் பிடிபோல எம் தாய்மார்கள் கம்பீரமானவர்கள். மீனவச்சமூகப் பெண்களின் தலைமைத்துவப் பண்பு எனக்குப்பெண் ஆளுமை, பெண்ணுரிமை குறித்த தெளிவானபார்வையையும் புரிதலையும் கொடுத்தது. ஒரு பெண் எந்நிலையிலிருந்தாலும் சமூகத்துக்கும் குடும்பத்துக் கும் ஆணுக்கும் அஞ்சாமல் தன்னிச்சையாக,  துணிவாக முடிவெடுக்க வேண்டும்.  பெண் தலைவியாக,  சுதந்திரமாக வாழ வேண்டுமென்பது  எனது சிறு வயது தீர்மானம். பத்தாம் வகுப்பில் தமிழாசிரியர் ஔவையின் கதையை சொன்ன போது ஔவையை எனக்குள் தேடத் தொடங்கினேன்.      

தமிழ்க் கவிதையை ஆணாதிக்கத்தின் அதிகாரப் பீடமாகக் கட்டிக் காத்தார்கள் கவிஞர்கள். அதை யெல்லாம் உடைத்துக்கொண்டு பெண்ணிய எழுத்துதீவிரமடைந்து இன்று நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது, பெண்கள் தீவிரமாக 2000-க்குப் பிறகு எழுத வந்தபோது பல எதிர்ப்புகள் வந்தன.அவற்றையெல்லாம் வென்றெடுத்துப்  பெண்  எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து புதிய பாய்ச்சலைத் தமிழ்ச்சூழலில் நிகழ்த்தியிருக்கிறீர்கள். அதில் உங்களின் ஒருங்கிணைப்பு முதன்மையானது. அதைக் குறித்துச் சொல்லுங்கள்.

மரபில் ஒடுங்கி, ஆண்மொழிக்குள் அடங்கி எழுதப் படும் பெண் எழுத்துக்களை  ஏற்றுக்கொண்ட  இலக்கியவாதிகள் பெண் மொழி, பெண் அடையாளம், ஆணாதிக்க எதிர்ப்பு  என நேரடியாகப் பெண்ணிய அரசியல் வயப்பட்ட எழுத்துகள் புதிதாக உருவான போது இழிவுபடுத்தவும், இல்லா மலாக்கவும் முயன்றார்கள். 2000-க்கு பிறகு வெளியான பெண்ணெழுத்துகள் ஆணாதிக்க விதிகளை மீறி விட்டதென்ற வன்மம் அவர்களிடம் பல்வேறு வடிவில் வெளிப்பட்டது. நேரடியான வசைகள், கூட்டங்களில் இழிவுபடுத்திப் பேசுதல், ஊடகங்களில் பெண்ணியம் பற்றிய வெறுப்பைப் பரப்புதல், பெண் எழுத்து இப்படி இருக்கக்கூடாது என்றும் எப்படி இருக்கவேண்டும் என்றும் விளக்கமளித்தல், பெண் படைப்பாளிகளின் தனிப்பட்ட வாழ்வை இழிவுபடுத்தி எழுதியும் பேசியும் உளவியல் தாக்குதல் தொடுத்தல் என பல வன்முறைகளில் அவர்கள் ஈடுபட்டார்கள். திரைத்துறையில் இருந்து சிறு பத்திரிகை வரை பெண்ணிய எதிர்ப்பாளர்கள்பல்வேறு வடிவில் செயல்பட்டார்கள். இவற்றை எதிர்க்கவும், மறுப்புகள் எழுதவும், பெண் மொழிக்கான இடத்தை உருவாக்கவும், நேரடியான தாக்குதல் களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் என நான் இயக்கத்தை, குழுக்களை உருவாக்கிச் செயல்பட்டிருக்கிறேன். எதிர்ப்புக் கூட்டங்கள், கருத்தரங்குகள், பெண் கவிஞர்கள் படைப்பாளிகளின் சந்திப்புகள் எனப் பெண் வெளிகளை உருவாக்கியபொழுது பெண்ணெழுத்து பற்றிப்  பேசவும் எழுதவும் வலிமையான களம் உருவாக முடிந்தது. இயக்கம், பெண்ணியப் பதிப்பகம், பெண்ணிய இதழ் என அணங்கு சிறிய அளவில் செயல்பட்டாலும் பெண்ணெழுத்திலும் பெண்ணிய அரசியலிலும் அது வலிமையான தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உருவாகி வந்த புதியவர்கள், இளையவர்கள் தடைகளை மீறி எழுதவும், தற்பொழுது பரவலாகப்பேசப்படும் புதிய பெண்ணிய, பெண் அடையாளஎதிர்ப்புக் கருத்தாடல்கள் உருவாகவும் நான் முன்னெடுத்த இயக்க - குழுச் செயல்பாடுகள் பெரும்பங்காற்றியுள்ளன.  இவை கடந்த இருபது ஆண்டுதமிழிலக்கிய வரலாற்றில் மறைக்க முடியாத, மறுக்கமுடியாத அளவுக்கு நேரடியாகப் பதிவாகியுமுள்ளன. பெண்ணெழுதுதலில் இருந்த மனத்தடைகளைத் தகர்த்து அனைத்தையும் எழுது வதற்கான சுதந்திர மொழி வெளியை இனிவரும் பெண்களுக்கு உருவாக்கித் தந்திருக்கிறது எனத் தற்போதுள்ள வாசகர்கள் சொல்லும்போது எனது எழுத்தின் - இயக்கத்தின்  செயல்பாட்டின் பயன் என அதனையே உணர்கிறேன்.

உங்கள் கவிதை மொழி சிடுக்கான மொழி கிடையாது. தாங்கள் கவிதை எழுத ஆரம்பித்த காலகட்டத்திலிருந்து இன்று வரை ஒரே வகையான மொழி வெளிப்பாட்டு முறையைப் பின்பற்றி வருகின்றீர்கள். துயரங்களையும், விடுதலைகளை யும் வெகு இயல்பாக்குவதும் அவைகளை இயற்கையின்பால் மடை மாற்றம் செய்வதாயும் உங்களது கவிதைகளை வரையறை செய்யலாம். மொழியிலும், பாடுபொருளிலும் ஒருவித எடையற்ற தன்மையைப் பின்பற்றுவதே நவீன கவிதைகளின் தற்காலப் போக்கு என்ற நிலை இன்றைக்குக் காணப்படுகிறது. அந்த வகையில் தாங்கள் எழுத வந்த காலகட்டத்திலிருந்து இன்றைக்குள்ள கவிதைகள் என்னென்ன வகை யான மாற்றங்களை அடைந்துள்ளதாக நினைக் கின்றீர்கள் ?

சிடுக்கான கவிதைமொழி வாசகரிடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் மொழியிலிருந்தும் சற்று அந்நிய மாய்த் தள்ளி நிற்கிறது. கவிதையென்பது மொழியின் புதிர்விளையாட்டல்ல. அகழியில் விழுந்து நீந்திக் கரையேறும் சிரமம் எதற்கு.  மொழி பொழிந்து அதன் போக்கில் பாதையை அடையவேண்டும். 

எழுத ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை ஒரே வகையான மொழி வெளிப்பாட்டு முறையைப் பின்பற்றுகிறேன் என்பது தவறான  பார்வை. எனது கவிதைகளின் மொழி பன்மையானது. ‘மனக்கடல், நிறமாறும் திரைச் சீலைகள், கொக்கைக் கவனித்துக்கொண்டேயிரு’  போன்றவை உருவகக் கவிதைகள், ‘யானைக்கதை, வானத்தைக் கோர்ப்பவள், கன்யாக்குமரி, விஸ்வரூபம், பகலை மேய்ப்பவன், நெடுஞ்சாலை நடனம், கண்ணாடிப் பூனைகள், ஊஞ்சல்’ வகைக் கவிதைகளில் மொழியில் மாயத் தளங்களை உருவாக்கியிருப்பேன். ‘பேய்மொழி, விலக்கப்பட்ட குருதி, வேம்பாயி’ தொன்மக் கவிதை மொழியும் ‘வார்த்தைகளின் பேரரசி, புலி சேர்ந்து போகிய’ செம்மொழியையும் ‘காதல் கடிதம், என் குழந்தை பல வாரங்களாகப் பேசவில்லை,  ஒட்டகங்கள் குதிரைகள் ஒரு மீன்கூடை, அம்மா ஒரு தொடுவானம், அமராவதி லைலா ஜுலியட்டின் காதல் கொடி, கடலொரு அசையும் மாமலர்’கவிதைகள் கதைச்சொல்லல் முறையில் அமைந்தவை.  பெண்மொழி, விடுதலை அரசியல், சூழலியல் என நுட்பமான மொழியில் இந்நூற்றாண்டின் பேரரசியலை நுண்ணரசியலை அசைத்துப் பார்க்கும் பன்மொழிக் குரல்களுடையவை எனது கவிதைகள். பெண்ணரசியல் வாசிப்பில் ஒரு வகையிலும் அரசியலற்ற பொது வாசிப்பில் வேறு ஒரு வகையிலும் அவை அர்த்தமடையக் கூடியவை.

தன்னிலைக் குரலில் அகவயமாய் நிகழ்ந்த கவிதை மொழி தற்பொழுது சமூக மொழிக்குள் பயணத்தைத் தொடங்கியிருக்கிறது.  சுய கற்பனை போதை, அபத்தக்காதல், கழிவிரக்கம் போன்றவற்றிலிருந்து வெளியேறி இருக்கிறது ஒரு பகுதி கவிதை. தமிழ் கவிதையின் வெளியை விரிவடையச் செய்யும் இம்மாற்றத்தை மிக்க மகிழ்ச்சியுடன் எதிர்கொள்கிறேன்.

பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியல்குரலான உங்கள் கவிதைகளில் பிரச்சாரமாக மட்டும் போய்விடாதவாறு தொழிற்படும் உங்களது கவிதை மொழியை நீங்கள் எங்கிருந்து பெற்றதாக கருதுகிறீர்கள்?

“வீடுகளாலான இனம், நரமாமிசர், நுகர் பொருள், அவன், ஆயிரத்து இரு இரவுகள், தாயம்” இவ்வகைக் கவிதைகள் பெண் மீதான ஒடுக்குமுறையின் வடிவங்களை மொழிப்படுத்துபவை. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு மொழியில் நம் ஆன்மாவை துளைக்கும் கவிதைகள். இம்மொழியை நான் தீர்மானிப்பதில்லை திட்டமிடுவதில்லை. கவிதையின் கரு அல்லது அக்கணம் அல்லது உள்ளுணர்வு மொழிக்குள் வினையாற்றிப் பல காட்சிகளாக விரிந்துபடிமமாகவோ, உவமையாகவோ அல்லது உரு மறைத்தோ கவிதைக்குள் தன்னைத்தானே எழுதிக் கடக்கிறது. கவிதைச் சொல்லி மொழி வினையை அவதானிப்பது மட்டுமே செய்ய முடியும். படைப் பாக்கம் முடிந்த பின்புதான் அதன் மீதான ஓர்மை வரும். கவிதைக்குள் கவிஞர் இடையீடு செய்யும் போது அது பிரச்சாரமாக மாறிவிடும்.

பள்ளிச் சிறுமிகள் போல் புதுவெள்ளத்தில் குழுமிக் குழுமிக் குசுகுசுக்கும் மீன்கள் என்ற உங்களது உவமையில் அந்தச் சிறுமிகளில் நீங்களுமே ஒரு சிறுமி. வானத்தில்  மேகங்களாக மேய்ந்து கொண்டிருக்கக்கூடிய வரையாட்டின் கழுத்தில் குன்று போன்ற பெரிய மலையைக் கட்டியது யாரென்று யோசித்தபடியே தொடர்வண்டியில் தூங்கிப்போன சிறுமியும் நீங்கள்தான். ஒருசிறுமியாக மாறிவிடமாட்டோமா என்ற ஏக்கம் உங்கள் கவிதை முழுவதும் படர்ந்திருக்கிறது. சுற்றியுள்ள இரைச்சல்களிலிருந்தும், பெரியாள் தனம் என்றவொன்றை நிரூபிக்க முயலும் வீண் ஜம்பங்களிலிருந்தும் விடுபடவேண்டுமென்ற உங்களது மனவோட்டம் புலனாகிறது. இந்தக்குழந்தை மனநிலைதான் உங்களது இயல்பு மனநிலையா? அல்லது எல்லாவற்றிலிருந்தும் விடுபடவேண்டி இப்படியொன்றை தரித்துக் கொள்கிறீர்களா?

எதற்கும் எவற்றுக்கும் முகம்கொடுப்பதே எனதுஇயல்பு. எதிலிருந்தும் எப்போதும் விடுபட முனைந்த தில்லை.  

ஊரில் கர்வத்துடன் வலம் வரும் மருத்துவச்சி போல மொழியின் மருத்துவச்சிக்கும் கர்வமுண்டு. என் காலப் பெண்களுக்கு எட்டாத, மறுக்கப்பட்ட கால வெளிகளில் பயணித்து நுழைந்து வெளிவந்தவள் நான். எவ்வளவுதான் குடும்பச் சுமைகள் பொறுப்புகள் அழுத்தினாலும் கற்பனைகளும் கனவுகளுமாய் எனது வானம் எனது பூமியெனத் துள்ளித் திரிந்திருக்கிறேன். இக்காலக் குழந்தைகளுக்கு வாய்க்கப் பெறாத சுதந்திரமான மகிழ்வான காலத்தை, காட்சி இன்பத்தை மொழியின் நினைவுப் பாதையில் அசைபோடும் கவிதைகள் அவை. அமைதி யாகவும் இருப்பேன், கூச்சலிட்டும் குதிப்பேன்,  பாம்பு வாயில் மாட்டாத தவளை மாதிரி. புறங்கை உள்ளங்கை பிரிக்க முடியுமா, முதிர்ச்சியும் குழந்தைமையும் அப்படித்தான்.

தங்கள் உடல் மீதான புனிதங்களைக் கட்டுடைத்தல் என்பது பெண்ணியக் கவிதைகளின் முதன்மை அரசியல் செயல்பாடு. அவ்விதத்தில் பெண்ணுடல் பற்றிய ஆண்மொழியிலிருந்து இக்கவிதைகள் எவ்வாறு வேறுபட்டுத் தம் தனித்துவத்தை அமைத்துக்கொள்கிறது ?

தமிழில் எழுத்து, வார்த்தை, சொல்லமைப்பு, மொழிக் கட்டமைப்பு, மொழிக் குறியமைப்பு, மொழிஉருவாக்கம், மொழிந்துரைப்பு  அனைத்தும் ஆண் ஆதிக்கத்தை உற்பத்தி செய்யும் சமூக இயந்திரங்களாகச் செயல்படுகின்றன. இம்மொழி புனிதம்- புனிதமற்றமவை என உடல்களை வகைப்படுத்தி மேன்மையானவர் கீழ்மையானவர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் எனப்  பிரிக்கிறது. பிறகு ஒருவர் மற்றவர் மேல் அல்லது ஒரு கூட்டம் மற்றொரு கூட்டத்தின் மேல் மேலாதிக்கம்  செய்யும் அதிகாரத்தையளிக்கிறது. பெண் விடுதலையை மொழி விடுதலையிலிருந்துதான் தொடங்க வேண்டியிருக்கிறது. ஆண்மைய மொழி யைச் சிதைத்துப் புனித-புனிதமின்மை என்ற குறி அமைப்புகளைக் கட்டுடைத்து எனக்கான மொழியை மிகக் காத்திரமாக உருவாக்கியிருக்கிறேன். பெண் வெறுப்பு மொழியரசியலின் அதிகாரத்தைக் கட்டுடைத்து மொழிக்குள் உயர்நிலையாக்கப்பட்ட ஆண் ஆராதனைகளையும் ஆண் துதிகளையும் ஆண் பஜனைகளையும் ஆண்மையையும் மொழிவெளி யிலிருந்து நீக்கிப் பெண் மொழியுடலை உருவாக்கும் போது அவை தனித்துவமானவைகளாய் நிறுவிக் கொள்கின்றன.

கர்ப்பம் தரிக்கின்ற பெண் உடலமைப்பே பெண்ணை இரண்டாம் பாலினமாகக் கருதுவதற்கான எளிய உண்மையாக இருந்து வந்தாலும் பெண் உடலின் இந்த அம்சம் தான் நம் கலாச்சாரத்தில் புனிதமான ஒன்றாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. உங்களது படைப்பிலும் தாய்மையின் பரிபூரணத்துவத்தைக் கொண்டாட்ட மனநிலையில் அணுகியுள்ளதை அறிய முடிகிறது. இந்நிலையில் கர்ப்பம் தரித்தல், கர்ப்பப்பையினைப் புறக் கணித்தல் என்ற இருவேறான நிலைப்பாட்டை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

தாய்மையைப் புனிதமாகப் பிம்பப்படுத்துவது, தாய்மையைக் கொண்டாட்டமாகக் காட்சிப்படுத்துவது அனைத்தும் சமூக பாவனை, அது ஒரு மாயை. வயிற்றில் வளரும் சிசு பெண்ணெனக் குறிகேட்டுக் கொல்லப்பட்ட கர்ப்பிணிகள் உண்டு. கருவில் அழிக்கும் வசதி வந்த பின் தாய்மார்களாவது தப்பினர். சாதிமாறிக் காதலித்ததற்காக எத்தனை தலித் கர்ப்பிணிகள் மிகக்கொடூரமாகச் சாதியக்கொலை செய்யப்பட்டார்கள்.

பெண் உடல் மீதான அதிகாரத்தை இன்னும் இந்தச் சமூகமும் குடும்பமும் தான் வைத்திருக்கிறது.  பெண்ணின் அசைவுகள் இருபத்து நான்கு மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறது.  அவள் ஏன் கருத்தரிக்கவில்லை, ஏன் கருத்தரித்தாள், யாருக்குக் கர்ப்பமானாள், எந்தக் குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும், அதன் தந்தை பெயர் எவருடையது என நிறைய விதிகளும் தண்டனைகளும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். கருவைச் சுமப்பது அவள், சாவா வாழ்வா எனப் பெற்றெடுப்பது அவள், நோய் நொடி காத்து ஊட்டி வளர்த்தெடுப்பது அவள். ஆனால் சமூகம் சொல்கிறது குழந்தையின் மீது தாய்க்கு உரிமையில்லை. தாய்மை புனிதமென்ற தோற்றத்தை உருவாக்கிப் பெண்ணை இரண்டாம் இடத்தில் அடக்கி வைத்திருக்கிறது சமூகம். பெண்கள் மீதான சமூக அதிகாரத்தை உடைத்து தாய்மையின் அதிகாரத்தை மீட்டெடுக்க வேண்டாமா. தாய்மையின் அதிகாரத்தைக் கைப்பற்றும் கவிதைகள் என்னுடையவை. 

பெண் உற்பத்தி செய்த பொருளை ஆண் கைப்பற்றி தனது பெயரை எழுதி ஒட்டி தனதாக்கிக் கொள்வது பெண்ணை நிர்மூலமாக்கும் அரசியல். பெண் படைத்தளிக்கும் உயிர் மீதான அதிகாரம்  தாய்க்கு மட்டுமே உரியது.

பெண் உடல் பெண்ணிற்கு உரிய வெளி. கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆணின் அத்துமீறல் பெண் உடலில் நிகழ்வதற்கு எந்தச் சமாதானம் செய்தாலும் அத்துமீறலை விடச் செய்யப்படுகின்ற சமாதானம் தான் மிகப்பெரிய அத்துமீறலாகும். பெண்ணுடல் மீது நிகழ்த்தப்படுகின்ற கட்டுப் பாடற்ற வன்முறைக்கு எதிராக இங்கே என்னதான் தீர்வுள்ளது. ஆண் உலகத்திலிருந்து பெண் முழுக்கவே ஒதுங்கிட வேண்டுமா...? அல்லது ஓரினச் சேர்க்கை மாதிரியான பாலியல் சுதந்திரத்தைக் கைக்கொள்ளலாமா...?

பெண்கள் மீதான வன்முறைகள் கட்டுப்படுத்த முடியாத உச்சத்தை எட்டிவிட்டன. ஓரினச் சேர்க்கை எல்லாருடைய தேர்வாகவும் திணிக்க முடியாது.  சுயபால் விருப்பமுடைய இணைகள் மட்டுமே இணைய முடியும். அனைத்து பெண்களுக்கும் இவை சாத்தியமில்லை. ‘ப்ரீ வுமன் - நோ மேன்’ உண்மையில் தொடங்கலாம். ‘கென்யா உமோஜா’ கிராமத்தை போலப் பெண்கள் மட்டுமே வாழும் சமூகத்தை உருவாக்கும் தேவை அவசியமாகிறது.

‘திருகி எறிய முடியாத முலைகள்’ என்று ஒரு இடத்தில் சோக நாடகமாகவும், ‘இன்றெனக்கு ஒரு மகள் பிறந்தாள்; அவளுக்குப் பிறப்புறுப் பில்லை’ என்று இன்னொரு இடத்தில் ஆழ்மனப் படிமமாகவும், ‘காளிகளின் பிறப்புறுப்பில் சொருகப்பட்ட கம்பிகளை ஆயுதமாய் வடிக்கும் எங்கள் உலைக்கூடங்கள்’ என ஆணினத்திற்கு விடும் சவாலாகவும்  வேறோர் இடத்தில் கூறு கின்றீர்கள். இறுதியாக, ஒரு பெண், பெண்உடலை எவ்வாறுதான் பார்க்க விழைகின்றார். அந்தந்தக் கண நேர மனநிலை, சூழமைவு தான் பெண்ணுடல் பற்றிய பெண் சிந்தையைத் தீர்மானிக்கின்றதா? அல்லது பெண்ணுடல் என்பது பெண்ணியத்திற்கான ஆயுதமாக உபயோகப் படுத்தப்படுகிறதா?  பெண்ணுடல் வழியாகப் பெண் முன்வைக்கும் தீர்க்கமான கருத்தாக்கம்தான் என்ன?

இக்கவிதைகள் அனைத்தும் ரியாக்டிவ் பொயட்ரி அதாவது எதிர்வினைக் கவிதைகள். ஒரு சமூகத்தில் இப்படியான வலி மிகுந்த துன்பியல் கவிதைகள் உருவாகக் கூடாது.

ஒரு பெண் தன்னுடலை மண்ணாகப் பார்க்கட்டும் மரமாகப் பார்க்கட்டும் அல்லது சதையாகவோ சருகாகவோ பார்க்கட்டும் அது பெண்ணுக்குரிய பார்வை. பெண் என்பவள் எங்கள் உடமை என்று சொல்ல நீங்கள் யார். பெண் மீது ஆதிக்கம் செலுத்த, அதிகாரம் செய்ய வன்முறைக்குள்ளாக்க சமூகம் ஏன் அனுமதிக்கிறது என்ற மைய முரணி லிருந்துதான் பெண்ணியம் உருவாகிறது. பெண்ணியம் வன்முறையைத் தூண்டுகிறது என்றால்தூண்டுகிறோம். இதுவரை சமூகத்துக்கு ஒப்புக் கொடுத்து வாழ்ந்த பெண்களுக்கு வலி, வேதனை, துன்பம், வன்முறையைத் தவிர என்ன தந்திருக்கிறது இந்தச் சமூகம். ஆண்குறிகளைக் கொய்யும் நீலிகள் தோன்றத்தான் வேண்டும், ஆண்குறி மைய முற்றதிகாரத்தை வேரறுக்க.

உங்களின் கவிதைகள் ஆண்மைய மொழியைத் தலைகீழாக்கம் செய்து புதிய மொழிவெளியைக் கட்டமைக்கின்றன. அந்தவகையில் இயற்கை, சூழல், சமூக அரசியல் கூறுகள் இணைகின்றன கவிதைகளில். இந்நிலையில் கவிதைக்கு அரசியல் தேவையில்லை என்ற புனிதவாதக் கருத்து இன்னும் தொடர்வதைப் பார்க்கிறோம். இதன் நுண்ணரசியலை எவ்வாறு அணுகுவது?

ஆணாதிக்கக் கட்டமைப்பை பாதுகாக்கும், சேவை செய்யும் மொழி விடுதலையைப் பேசும் தகுதி இழக்கிறது. பால் சமத்துவ விடுதலை உணர்வு, பாலின வெறுப்பு மொழியைக் கட்டுடைத்து ஒடுக்கப் பட்ட விளிம்புநிலை உடல்களை மொழிச் சிறையி லிருந்து விடுவிக்க விழைகிறது. மொழியால் மதிப் பூட்டப்பட்ட, உயர்நிலையாக்கப்பட்ட ஆண்மைய  கருத்தமைவு, குறியமைப்பின் பேரரசியல், நுண் அரசியலைக்  கட்டுடைத்து மொழியால் கீழாக்கம் செய்யப்பட்ட கருத்தமைவுகள் குறியமைவுகளிலிருந்து பெண்ணுடலை விடுவிக்கும்போது  பெண்ணியப் புத்தாக்கக் கவிதைகளாக அவை மொழியில் வினையாற்றுகின்றன. மொழியில் ஆண் உளவியலை அடித்து நொறுக்கும் பெண்ணிய நுண்ணரசியல் மொழியில் சில கவிதைகள் பகடியாக உருமாறுகின்றன.  உதாரணமாகப் பெண்ணென்னும் நினைவு, ஆயிரத்து இரு இரவுகள், கோழிக் குழம்புக்கான குறிப்புகள் போன்ற கவிதைகளில் பெண் கூற்றில் பொங்கும் ஏளன நகைப்பை வாசகருக்குச் சரியாகக் கடத்தியிருப்பேன்.

கலை கலைக்காக என்று ஒரு குழு அரசியல் உருவானது. அது மொழி ரசனை வயப்பட்டதென்றது. எங்களுக்கு அரசியலில்லை மொழியின் அழகியல், அனுபவத்தின் அழகியல், மொழியின் புதுமை மட்டும்தான் நோக்கம் என்றனர். உலகில் அரசியல்அற்ற, கருத்தியல் சார்பற்ற படைப்பு ஒன்று இருக்க முடியுமா?  “தமிழ் தான் என் மூச்சு அதைப் பிறர் மேல் விடமாட்டேன்” என்பது இனவெறி மிகுந்த வாசகம். ஒரு நிலத்தின் மீது, ஒரு இனத்தின் மீதான அந்நிய மொழித் திணிப்புக்கு எதிரான போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது இந்திதான் என் மூச்சு அதைபிறர் மேல் விடமாட்டேன் என்றுதானே அக்காலகட்ட அரசியலைப் பிரதிபலித்திருக்க வேண்டும்.தமிழ் பிற மொழி மீது ஆதிக்கம் செய்யப் போய் கவிஞர் தார்மீகக் கோபம் கொண்டு பொங்கிஎழுந்தது போல் பிழையான வரலாற்றைப் பதிய வைக்கும் அரசியல் யாருக்கானது. கலை கலைக்காக என்ற பிரச்சாரம் எவ்வளவு போலியானது, பொய் யானது பக்கச் சார்பானது என்பது அம்பலமாகியது. படைப்பாக்க மொழியை எந்தக் குழுவும் நாட்டாமை செய்ய முடியாதென அப்போதே இன்குலாப் போன்றோர் பதிலடி தந்துள்ளனர்.

ஆண் மைய மொழிக் கலாச்சாரத்தின் புளிப்புஏறிய தன்மையின் சீர்மையைக் கலைத்துவிட்டுப் பெண் மொழி என்ற புதிய சொற்கூட்டை அர்த்தவியல் சார்ந்தும், வடிவவியல் சார்ந்தும் உரக்கச் சொல்லி பதிய வைப்பவை யாகவே உங்களது இலக்கியச் செயற்பாட்டை வகுக்கலாம். அந்த வகையில் பெண் மொழி என்ற கருத்தியல் தளம் பற்றிப் பெண் படைப்பாளர்களுக்குள்ளாகவே ஒரு ஓர்மைஉள்ளதாகத் தோன்றவில்லையே... பெண் மொழியின் இந்த பன்முகத்தன்மை பெண்ணிய நிலைப்பாட்டை எங்ஙனம் கூர்மைப்படுத்த உதவுகின்றது?

பெண் மொழி, பெண்ணியரசியல் கூர்மைப்படும் வழிகளைப் பிரபல பதிப்பகங்களும் பிரபல ஊடகவெளியும் கபளிகரம் செய்து வருகிறது. முன்னோடிகள் ரத்தம் சிந்திய தியாகத்தில் விளைந்த பெண் விடுதலையரசியல் நிழல் வேண்டும், கனி வேண்டும் என்பது வரை சரிதான். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கத்தானே போராடினர், இதை அனுபவிக்கட்டும். ஒற்றை மரத்தை தோப்பாக்க வேண்டாம் வேரை வெட்டாமல் இருக்கலாம் அல்லவா. மீடூ-க்கும்  குரல் கொடுப்பது,  மீடூ வழக்கில் சிறைச் செல்ல வேண்டிய குற்றவாளிகளையும் கொண் டாடுவது சந்தர்ப்பவாத அரசியல் இல்லையா. நூல் அச்சாக, விளம்பரத்துக்காக, விருதுக்காக அண்டிப் பிழைக்கும் பிழைப்புவாதிகள், லாபியிஸ்டுகள் சுயமரியாதையற்றவர்கள் எல்லா தளங்களிலும் இருப் பார்கள் அது இங்கே அதிகம் என்பதால் அடுத்தத் தலைமுறையும் பாதிக்கிறது.     

ஆணின் சகல அதிகாரங்களையும் கேள்விக்கு உள்ளாக்கும் உங்கள் கவிதைகளில் ஆண்உடலுக்கான தவிப்பு தவிர்க்கப்படுவதன் மூலம்அவை ஆணை மறுத்தொதுக்கும் லெஸ்பியன் அரசியலை முன்வைப்பதாகப் புரிந்துகொள்ளலாம் எனத் தோன்றுகிறது. இது பற்றித் தங்கள் கருத்து?

ஏற்கனவே மூன்றில் ஒரு பெண் ஆணால் கைவிடப்பட்ட அல்லது கணவனை இழந்த பெண்கள்தன்னிச்சையாக வாழ்ந்து கொண்டுதான் இருக் கிறார்கள். அவர்களுக்குள் ஆணுடலுக்கான தவிப்புஇருக்கிறதா என்பது கேள்விக்குரியது. பெரும் பான்மையான பெண்கள் தம் வாழ்வில் இருந்து ஆண் ஒழிந்தது நிம்மதியென நினைப்பவர்கள். ஆனால் அவர்கள் சுதந்திரமாக வாழ முடியாமல் சமூகச் சூழலும் மரபுத் தளைகளும் தடுக்கின்றன. சமூகத்தில் ஏசெக்சுவல் பெண்களுமிருக்கிறார்கள். பாலியல் பகிர்வு இல்லாமல் பெண்கள் குழுவாய் வாழ்வதும் கூட்டமாய் வாழ்வதும் சாத்தியமே.  பொதுச் சமூகப் பொருளாதார அரசியல் அதிகாரப் புறக்கணிப்புக்கும் முகம் கொடுத்தபடி திருநங்கைகள் தங்களுக்குள் கூட்டாக ஒருவருக்கொருவர் அனுசரணையுடன் உதவியபடி சமூகமாய் வாழ்கிறார்கள். பெண்ணுலகில் ஆண் தவிர்ப்பு என்பது லெஸ்பியன் அரசியலை நோக்கிய நகர்வாக மட்டுமே குறுக்க முடியாது. ஆனால், பெண்கள் சமூகத்தில் லெஸ்பியனாக வாழ்வதும் ஒரு பகுதி, அது சிலரின் தேர்வாக இருக்க முடியும்.

ஆண் பெண்ணைக் காலங்காலமாகக் காத்து வருகிறான் என்ற நோய் பீடிக்கப்பட்ட சிந்தனையை உங்களது கவிதைகள் வாயிலாக தகர்த்து வரக் கூடியவர் நீங்கள். உங்களிடம் விபரீதமான ஒருகேள்வி. என்றைக்காவது ஒருநாள் ஒரு ஆண் மனநிலையில் வாழ்ந்துள்ளீர்களா... அதாவது நான் ஒரு ஆண் என்பது மாதிரி. அது உங்களால் முடியுமா? முன்னுதாரண ஆண் என்பது போல ஒரு கற்பனை வடிவம் கொடுக்கலாமே. பெண் எதிர்பார்க்கும் ஆண் அங்குதானே சாத்தியமாகும். என்ன சொல்கிறீர்கள்?

ஆண் உலகின் மையமென்று நம்புவது தீவிர மனநோய் பிரச்சினை. ஒரு எறும்பாக வாழ்ந்தாலும் பெண் எறும்பாக வாழ வேண்டும்.  பெண் படைப்பின் உச்சம்,  பெண் உலகின் மையம்.  ஆண்மையைத்  துறந்து அனைவரும் பெண்ணாக வாழ முயல வேண்டும். ஆனால் இங்கு ஆணுக்கான எல்லா அதிகாரத்தையும் அனுபவித்தபடி பெண் பெயரடையாளத்தையும் புனைப்பெயராகத் திருடிக்கொள்கிறார்கள். ஆணாதிக்கத் திமிருடன் வாழ்பவ னெல்லாம் நான் தாயுமானவன், பெண்ணாலானவன் என்று படைப்புகளில் போலி முற்போக்கு பேசும் கிரிமினலாக இருக்கிறான். 

நான் பூரண விடுதலையின் குறியீடாக, சுதந்திர மானவளாக இருக்க எந்த அதிகார மைய நிழலிலும் நிற்பதில்லை. நான் ஏன் ஆண் என்னும் குறை உருவத்தை ஏற்கவேண்டும். ஆணினால் ஒரு உயிரைச் சுமந்து இந்த உலகுக்கு அளிக்க முடியுமா. ஆண் உயிரும் அடையாளமும் பெண் கொடுத்தது.

ஆண் உயிரணுக்கள் இன்றி உயிரியல் தொடர்ச்சியைப்  பெண் மட்டுமே தொடர முடியும்என்பதற்கு இயற்கையில் பல உதாரணங்கள் இருக்கின்றன. இதை அசெக்சுவல் இனப்பெருக்கம்  Parthenogenetic Reproduction என்று அழைக்கிறார்கள்.  வரிக்குதிரை சுறா, சுத்தித்தலை சுறா, நட்சத்திர மீன் போன்ற கடல் வாழ் உயிரினங்களும் கொமோடோ ட்ராகன், ஒரு வகைப் பல்லியினம், பிலிப்பைன்ஸ் காடுகளில் வாழும் மலைப்பாம்புகள் போன்ற நிலத்தில் வாழும் உயிரினங்களும் ஆண் இல்லாத காலங்களில் இணைச் சேர்ப்பு இன்றி முழுக்க முழுக்கப் பெண் டிஎன்ஏ மரபணுவுடன் குட்டிகள் ஈனுகின்றன. பூச்சி, புழு, பூஞ்சையினங்களிலும் இவ்வகையுண்டு. உலகில் ஆணினம் பெண்ணினத்திற்கு விளையாட்டுப் பொம்மைகள்.  இந்த விளையாட்டுப் பொம்மைகள் ஆயுதம் தாங்கிய படையாகி பெண்ணினத்தை ஒடுக்கியதன் வழி மனிதகுல வரலாறு தலைகீழாக மாறியது.

விளிம்புநிலை அரசியல் பேசுவது என்பது இன்றைக்குப் பலருக்கு வணிகமாகவும்  பேஷனாக வும் இருக்கிறது. அல்லது அப்படிப் பேசுவதன்மூலம் பொதுவெளியில் தங்களை யோக்கிய வானர்களாக அடையாளப்படுத்திக் கொள் கிறார்கள். ஆனால் நடைமுறையில் எதுவுமில்லை. அதாவது ஒருவர் சாதி, பாலின ஆதிக்க நீக்கத்தைத் தன்னுள் செய்துகொள்ளாது வெறுமனே பெண் விடுதலை, தலித் விடுதலை, பால்புதுமையர் விடுதலை என விளிம்புநிலை அரசியல் பேசுவது என்பது ஒரு வணிகச் செயல்பாடுதானே. இத்தகைய போக்கை இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள் மத்தியில் பார்க்கமுடிகிறது. எழுத்தாளர், இயக்கச் செயல்பாட்டாளர் என இரு நிலையிலும் செயல்படுபவர் எனும் நிலையில் எவ்வாறு இதைப் பார்க்கிறீர்கள்?

பிழைப்புவாதிகள் எல்லாக் குழுக்களிலும் இருப் பார்கள். அவர்கள் ஆட்சி அரசியல், ஊடகம் போன்ற அதிகார மையங்களின் தொடர்பிலிருப்பார்கள்.  இந்தவிசைப்பலகை போராளிகள் தகவல்களையும் ஆவணங் களையும் களவாண்டு ஊடகங்களில்  பரபரப்பு உருவாக்குவார்கள்.  இப்போலிப் போராளிகள் அனைத்துவிடுதலை  களத்திலும் எங்காவது வந்து நின்று விளம்பரத்துக்காகவும் வியாபாரத்துக்காகவும் சிலஆவணங்களை உருவாக்கி ஆதாரமாக வைத்துக்கொள்வார்கள். நிஜ களப் போராளிகளின் இடத்தைஊடக அதிகார அரசியல் ஆதரவுடன் பொது வெளியில் தட்டிப் பறித்துக்கொள்வார்கள்.  சிலர் பாதிக்கப்பட்ட, போராளி பிம்பத்தை உருவாக்கி உள்நாட்டு, வெளிநாட்டுக் கொடையில் நிதிக் கொள்ளையடிப்பார்கள். அடிப்படைச் சமூக அரசியல்மாற்றமே குறிக்கோள் என்பதால், சமூகப் பணிச் சுமையில் இதையெல்லாம் களையெடுப்பது தங்கள் பணியல்ல எனக்  களப்போராளிகள் பொருட்படுத்தாமல்  கடந்து விடுகின்றோம்.

உங்களின் கவிதைகள் பெண்விடுதலை அரசியலை பிற எல்லா விளிம்பின் விடுதலையுடன் இணைத்து முன்வைக்கும் வகையில் தனித்துவமாக உள்ளன.  இந்நிலையில், பெண்ணிய அரசியல் தலித்தியம், பழங்குடி, சூழலியல், பால்புதுமையர் எனப் பிற விளிம்புநிலை அரசியல்களுடன் இணைந்து செயல்படவேண்டியதன் முக்கியத்துவம் என்ன?

LGBTQ+ வானவில் குடை போல அனைத்து விடுதலையரசியலும் ஒரு சங்கிலியில் இணைய வேண்டுமென்பது கனவுப் பெருந்திட்டம். ஆனால் சூழலியல் பெரும்பாலும் தொண்டு நிறுவனங்களின் பிடிக்குள் உள்ளது. தொண்ணூறு சதம் விளிம்புநிலை விடுதலையரசியல் அமைப்புகள் ஒன்றுக்கொன்று இணைந்து செயலாற்றப் போதுமான கருத்தியல் பலத்துடன் இயங்குவதில்லை. தலித்தியத்தைப் பெண்ணியத்தை, பால்புதுமையர் அரசியலை உள்வாங்காத அல்லது ஏற்காத பிற்போக்குநிலை தொடர்கிறது. குறிப்பாகச் சூழலியல் அரசியல் சாதியைக் கடந்து செயல்பட வேண்டியிருக்கிறது. ஜென்டர் பாலிடிக்ஸ் பேசும் நாம் தான் பிற விளிம்புநிலை அரசியலை இணைத்துப் பேச குரல்கொடுக்க வேண்டியிருக்கிறது. ஜென்டர் பாலிடிக்சில் இயங்குபவர்கள் சுயநல மீடியேட்டர்களால் வழிநடத்தப்படும் அபாயமும் சூழ்ந்திருக்கிறது. இந்த மீடியேட்டர்களை மிக எளிதாக அடையாளம் காணலாம். வெளிநாட்டு உள்நாட்டு நிதி கிடைக்கிறது என்பதற்காகவே இவர்கள் திடீரென்று தலித்தியம் பெண்ணியம் பால்புதுமையர் பிரச்சினையெல்லாம் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பவர்கள்.  ஒரு நிறுவனத்தைக் கூட உருவாக்குவார்கள். ஒன்றுக்கு நிதி நின்றதும் நிதிக் கிடைக்கும் அடுத்த விசயத்தைக் கையிலெடுப்பர். படைப்பு வழியாகவும் களத்திலும் தொடர்ந்து நமதுஅரசியலுக்கான இணைப்பை நாம் பேசிக்கொண்டேயிருக்கவேண்டும். அதே சமயம் இதுபோன்ற வழிப்பறி கொள்ளையர்களையும் அடையாளம் காட்ட வேண்டும்.

இன்றைய இந்திய, தமிழகச் சூழலில் அம்பேத்கர், பெரியார், அயோத்திதாசர் மார்க்சியச் சிந்தனைகளின் முக்கியத்துவமும் கூட்டிணைவும் தேவையென்ற கருத்தியல் சிலரால் முன்வைக்கப்படுகிறது. ஒரு எழுத்தாளர், இயக்கச் செயல்பாட்டாளர் என்ற முறையில் இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

உலகில் சமத்துவச் சமூகம் புரட்சிகரச் சமூகத்தை வென்றெடுக்க உருவான முற்போக்கு சித்தாந்தங்களும் கொள்கைகளும் செயல்திட்டங்களும் முற்றுமுழுதாய் அனைத்து இனங்களின் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளையும் ஒடுக்குமுறைகளையும் ஒழித்துச்சமத்துவத்தை நிலைநாட்ட போதுமானவையாக இல்லை என்பதைக் காலம் நமக்குப் படிப்பித்து இருக்கிறது. ஆகவே நம் நிலத்தில் தோன்றிய, வளர்த்துஎடுக்கப்பட்ட பெரியாரியம், அம்பேத்காரியம், மார்க்சியம் அயோத்திதாசரியம் போன்ற சித்தாந்தங்களின் புரட்சிகரச் சமூக மாற்றத்திற்கான சிந்தனைகளை அறத்துக்கான சிந்தனைகளைக் கொள்கைகளை இணைத்து அரசியல் செயல் திட்டங்களை வகுத்து செயல்படுவதே இன்றைய மாற்று அரசியலுக்குத் தேவையான செயல்திட்டம்.

மதவாத எதிர்ப்பு, ஆணாதிக்க மற்றும் சாதிய தகர்ப்பு போன்ற நெடும் போராட்டங்களின் களச் செயல்பாட்டிற்குத் தாங்கள் வாழும் மாநகரச் சூழல் எந்த அளவு உதவக்கூடியதாகவும் தடை போடுவதாகவும் உள்ளது ?

கடந்த காலங்களில் தலைநகரிலிருக்கும் அமைப்புகள் கட்சிகள் மாணவர்களை இணைத்துப் போராட்டங்களை நடத்த முடிந்தது. பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பாசிச அடக்குமுறையால் ஜனநாயக வெளி குண்டாந்தடியால் துப்பாக்கிகளால் புல்டோசர்களால் முடக்கப்படுகிறது.

அறிவுஜீவிகள், செயற்பாட்டாளர்கள், பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள் தங்கள் கருத்துக்காகச் சிறைப்படுத்தும் கொல்லப்படும் ஆபத்து அதிகரித்திருக்கிறது  அதற்குத் தயாராகவும் இருக்கிறோம்.  உழைக்கும் வர்க்கம், மாணவர்கள், அறிவுஜீவிகள், செயற்பாட்டாளர்கள், மனிதவுரிமை போராளிகள், சிறுபான்மையோர், விளிம்புநிலையோர் ஜனநாயக வழியில் அமைதியாய் பதாகைப் பிடித்துப் போராட முடியவில்லை. இந்துத்துவ, சங்க் பரிவார் பயங்கரவாதிகளும் அவர்களின் ஏவல் காவல்துறையும் பல்கலைக்குள் நுழைத்து தாக்குகிறார்கள் சுடுகிறார்கள். மக்களின் அறவழிப் போராட்டங்களில் புகுந்து தாக்குகிறார்கள் சுடுகிறார்கள்.  ஊரை கொளுத்தி உடைமைகளைக் கொள்ளையடிக்கிறார்கள். மனிதஉரிமை கருத்துரிமை பேசியதற்காக அர்பன் நக்சல் முத்திரைக் குத்தப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதுகள், பிணை மறுப்புச் சிறைத்தண்டனை கொடுமைகள் நடக்கின்றன. 

இங்கு அறிமுகமான நிறைய நண்பர்கள் சமூகச்செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கிவிட்டனர். சோசியல் மீடியா பக்கங்களைக் கூட மூடிவிட்டனர். சிலர் கட்சி அமைப்புகளிலிருந்தும் வெளியேறி விலகி நிற்கின்றனர். என் தலைமையில் இணையும் மாணவர்கள் பிரச்சனைக்களுக்குள்ளாகக் கூடாதென்று அவர்களின் எதிர்காலம் பாதிக்கக் கூடாதென்று போராட்டங்களை ஒருங்கிணைப்பதில்லை. மூத்த அமைப்புகள் இயக்கங்கள் கட்சிகளும் வெளிப்படையாகப் போராட்டங்கள் நடத்த முடியாத சூழல். போராட்டங்களைக் குறைத்து அறைக் கூட்டங்களில் அரசியல் விவாதங்களை முன்னெடுக்கிறோம் செயல்படாமல் இருக்க முடியாது இல்லையா? பாசிசத்தின் அனுமதியுடன்தான் சுவாசிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால், பாசிசம் இறுதியில் மக்களிடம் தோற்றதே வரலாறு. 

நவீன, நுகர்வுப்பெருக்கம், பன்னாட்டுபோர் வணிக அரசியல் சூழல், இந்திய சாதிய, ஆணாதிக்க, சனாதனச் சூழல் எல்லாம் கலந்த ஒரு சிக்கலான உளவியலாகத் தமிழ்  உளவியல் இருக்கிறது. இச்சூழலில் பெண்ணிய எழுத்தின் முக்கியத்துவம் எவ்வாறு அமைகிறது?

ஒரு சமூகத்தில் பெண் விடுதலையடைந்தால்தான் பிற பகுதியினர் விடுதலையடைய முடியும். ஓட்டை வாளியில் நீர் சேந்தி விளைச்சல் காண முடியாது. ஆணாதிக்கச் சமூகம் பெண் மையச் சமூகமாக நகர்ந்தால்தான் சமூக மாற்றமும் சமூகப் புரட்சியும் நடக்கும். அதுவரை மக்களாட்சி என்ற பெயரில் முதலாளிகள், கார்ப்ரேட்டுகளின் அடிமையாய் வாழ்ந்து வீடுபேறு அடைய முடியும்.  பெண்ணியம், பெண்ணியரசியல், விளிம்புநிலையிலிருந்து மையஅரசியல் அதிகார நிலை எட்ட வலுவான பெண்ணியஅரசியல் இயக்கம் அவசியம். பெண்ணியச் சொல்லாடல்  பெண்ணெழுத்து மைய நீரோட்டங் களாய் மாறும் காலம் எழும். ஆண்மையக் கழிவுகள் கசடுகள் அடித்துச் செல்லப்பட்டு மொழியும் நிலமும் புத்துயிர்ப்பு பெரும்.

கவிதை சார்ந்து இல்லாவிடினும் முகநூலில் தொடர்ந்து இயங்குபவர் நீங்கள். நவீன கவிதைகளுக்கான எல்லையற்ற ஒரு பரந்தவெளியாக முகநூல் விரிந்துள்ளது. கவிதைகள் அளவுக்கு அதற்கான விளம்பரங்களும் நிறைந்திருக்கும் அச்சூழலில் இப்போக்கு விளைவிக்கும் நன்மை, தீமை குறித்த தங்களின் அவதானிப்பு?

புதிதாக எழுத வருகிறவர்கள் தங்கள் அடை யாளத்தைத் தனித்துவமாக வெளிக்காட்ட முடிகிறது. சின்ன வட்டமோ பெரிய வட்டமோ பயனாளிகளுக்கு உடனடி சமூக அடைவு கிடைக்கிறது. கடந்த காலங்களில் கவிஞராய் அடையாளம் பெற பல ஆண்டுகள் காத்திருக்கவேண்டும்.  தற்காலத்தில் சமூக ஊடகத்தில் ஒரு சில வாரங்களில் நிகழ்ந்துவிடுகிறது. 

ஜோசியம் பார்ப்பவர்கள் பிரபலங்களுடன் படமெடுத்து வைத்து வியாபாரத்தில் வெற்றியடையப் பார்ப்பார்கள். கவிஞர்களும் ஜோசியர்கள் மாதிரி உருமாறிவிட்டனர். கொள்கை முரண் பேணாது நாலு பிரபலங்களுடன் விளம்பரம் செய்கிறார்கள். நாலு பேர் போற பாதை நல்வழி என்ற ஆழ்ந்த மூடநம்பிக்கையுடைய நம் மக்கள் தொடர்கிறார்கள். இளையராஜாவை கொள்கை அடிப்படையில் விமர்சிக்க தகுதியிருக்கிறது என நம்பும் படைப்பாளிகள் சுய விமர்சனத்துக்குத் தயாராக இருப்ப தில்லை.

இன்று பெண் எழுத்தின் போக்கு என்னவாக இருக்கிறது. எதைநோக்கிச் செல்ல வேண்டும்? புதிதாக எழுத வரும் பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

புதிதாக எழுத வருபவர்கள் அதிகம் படித்தவர்கள், என்னைவிடப் புத்திசாலிகள் உலக அனுபவம் வாய்த்திருக்கிறது. பெண்ணியம், பெண்ணெழுத்துத் தளத்தில் இயங்க அரசியல் தெளிவு வேண்டுமென்றால் உலகளாவிய பெண்ணியம், பெண்ணெழுத்துக் குறித்துக் கற்க வேண்டும். சொல்லுக்கும் செயலுக் கும் மலை மடு வித்தியாசம் கொண்டோரை அடை யாளம் கண்டு புறக்கணிப்பதன் வழி புதியவர்களின் தனித்தன்மை காக்கப்படும். தமிழின் கொல்லைப் புறத்தில் பெண்ணியம், பெண்ணெழுத்து அரசியலை குட்டையாய் குறுக்கும் அதிதீவிர இலக்கிய அரசியல் நகர்த்தல்கள் நடக்கின்றன, எவரும் அதிலூறும் ஒரு மட்டையாகிவிடக் கூடாதென விழைகிறேன்.

உலக அறிவு விரல் சொடுக்கில் கிடைக்கும் காலத்தில் எதிர்ப்பாற்றலை மாற்றரசியலை அவரவரே உருவாக்க முயற்சிக்க வேண்டும், அது முன்னோக்கி நகர உதவும்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer