ஆங்கில மொழியில் எழுதி ஆங்கிலேயக் கவிஞர்களுக்கு இணையான பெயரைப் பெற ஒரு தெற்காசியக் கவிஞனால் முடியுமா என்ற கேள்விக்கு பதிலாக இருப்பவர் டவ்கிலியன் என்ற புனைப்பெயரைக் கொண்ட ஹோஸே கார்சியா வில்லா. ஆங்கிலத்தில் எழுதிய இந்தியக் கவிஞர்களை வகைப்படுத்தும்போது இந்தோ - ஆங்கிலக் கவிஞர் என்ற அடைமொழி தரப்படுகிறது. இது அமெரிக்காவிலேயே பாதி காலத்தை வாழ்ந்த ஏ.கே.ராமானுஜனில் தொடங்கி நிஸீம் எஸக்கீல் வரையிலான கவிஞர்களுக்கு ‘ஆங்கிலத்தில் எழுதிய இந்தியக் கவிஞர்கள்’ என்ற வகைப்பாடுதான் தரப்பட்டு வந்திருக்கிறது. தவிர ஏ.கே.ராமானுஜன் கவிதை தவிர பிற துறைகளான மானுடவியல், மொழியியல், வாய்மொழிக்கதைகள் சேகரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.
கீ.பி.ஆடன், எடித் சிட்வெல், ஈ.ஈ.கமிங்ஸ் போன்றோருக்கு இணையான இலக்கிய அந்தஸ்து ஆசியக் கவிஞர்களிலேயே ஹோஸே கார்சியா ஒரே ஒருவருக்குத்தான் அளிக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் தேசத்தில் பிறந்த (1908) வில்லா, ஒரு கவிஞர், விமர்சகர், சிறுகதை ஆசிரியர் மற்றும் ஓவியர். டவ்கிலியன் என்ற அவரது புனைப்பெயரில் புறா, சிங்கம், கழுகு ஆகியவை மறைந்திருக்கின்றன. தவிர கவிதையாக்கத்திலும் வடிவத்திலும் அதன் ஒலி இயைபுகளிலும் அதுவரை செய்யப்பட்டிராத சில பரிசோதனைகளை அவர் வெற்றிகரமாகச் செய்ததாலும் அவர் அமெரிக்கக் கவிஞர்களுக்கு இணை யானவராய்க் கருதப்படுகிறார். அவரை சிலர் கிரீன்விச் கிராமத்தின் போப் எனக் குறிப்பிட்டாலும் அந்தப் பெயரின் நல்தன்மைகளை தக்கவைத்துக் கொள்ளும் படைப்புத் திறன் கொண்டவராய் இருந்தார் வில்லா.
1929ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் ஹெரால்ட் மேகஸின் (Phillipines Herald Magazine) பத்திரிகையில் ‘மேன்-சாங்ஸ்’ (Man-Songs) என்ற பாலுணர்வைத் தூண்டும் கவிதைகள் ஓ.செவில்லா (O.Sevilla) என்பவர் எழுதியதாக வெளியிடப்பட்டன.
மூன்றாவது தொடர் வெளியிடப்பட்ட உடனே ஹோஸே கார்சியா வில்லா பிலிப் பைன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு பொது ஒழுக்கமுறைமைகளுக்கு நாசம் விளைவித்தார் என்று தீர்ப்பளிக்கப்பட்டு 50 பெசோ அபராதம் விதிக்கப்பட்டார். பிலிப்பைன்ஸ் பல்கலைக் கழகத்தின் டீன் ஆக இருந்தஜோர்ஜ் போக்கோபோ அந்தக் கவிதைகள் “பண்பு கெட்டவை மற்றும் ஆபாச மானவை” என்று அறிவித்து அப்போது இரண்டாம் ஆண்டு சட்டம் படித்துக் கொண்டிருந்த வில்லாவை பல்கலைக்கழகத்திலிருந்து தற்காலிக நிறுத்தம் செய்தார். பிலிப்பைன்ஸ் ஹெரால்ட் பத்திரிகை பொது வாசக அழுத்தத்தினால் பாலுணர்வு தூண்டக் கூடிய கவிதைகளை வெளியிட்டதற்காக வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
இந்த மென் உணர்வுகளை உறுத்தும் கவிதைகள் வில்லாவை ஓராண்டுக்கு பல்கலைக்கழகத்திலிருந்து நிறுத்தம் செய்யக் காரணமாக இருந்தன. மாறாக வில்லாவின் மாறுபட்ட இலக்கியப் பிரதியொன்று பிலிப்பைன்ஸ் தேசத்திலிருந்து முடிவாகக் கிளம்பிச் செல்லக் காரணமாயிற்று. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிலிப்பைன்ஸ் Hg பிரஸ் (Phillipines Free Press) நடத்திய சிறுகதைப் போட்டியில் அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக வில்லாவின் கதை தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான பரிசுத் தொகையாக ஆயிரம் பெசோக்களை வழங்கியது. இந்தத் தொகையைப் பெற்ற வில்லா அதை வைத்தே (தன் பெற்றோரின் உதவியின்றி) அமெரிக்கா கிளம்பிச்சென்றார். ஆனாலும் கூட அவரது தொகுக்கப்பட்ட சிறுகதைகளான (1933) (Foot note To Youth) நூலில் இந்த பரிசுக் கதை சேர்க்கப்படவில்லை.
நியோ - காலனியலிசம் மற்றும் எலைட்டிசம் போன்ற காரணங்களுக்கு எளிதாக வில்லாவை கண்டனம் செய்வதற்கும் இந்த இரண்டு நிகழ்வுகளும் காரணமாயின. வில்லாவுக்கு ஒரு ‘இனக்குழு அடையாளம்’ இல்லை என்றும் அவரது சொந்த நாட்டில் குற்றம் சாட்டப்பட்டார்.
ஆனால் வேறு இலக்கிய வட்டங்களில் பின்வருமாறு பாராட்டப்பட்டார்: “ The inventor of modernist writing in English in the Philipines .”
1930இல் நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழகத்தில் பயின்றார். அப்போது அங்கே துவங்கப்பட்ட இலக்கிய ஏடான கிலே (களிமண்)வின் ஸ்தாபகர் களில் ஒருவராக வில்லா இருந்தார். பிறகு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடரும்போது அமெரிக்க இலக்கிய வட்டங்களின் கவனத்தைப் பெற்ற முக்கியமான ஆசியக் கவிஞராய் ஆனார்.
1933இல் வெளியான (Foot note to Youth) நூலுக்குப் பிறகு வில்லா உரைநடையிலிருந்து முழுமையாக கவிதைக்கு மாறினார். 1942இல் வெளியிடப்பட்ட கவிதை நூலில் ரிவர்ஸ்டு கான்ஸொனன்ஸ் (Reversed Consance) என்ற புதிய ஒலிஇயைபு முறையை ஆங்கிலக் கவிதைகளுக்கு அறிமுகப்படுத்தினார். 1949ஆம் ஆண்டு புதிய கவிதை எழுதும் ஒரு முறையை அறிமுகம் செய்தார். இவை ‘கமா கவிதைகள்’ என்றழைக்கப்பட்டன. இந்த உத்திமுறையில் ஒவ்வொரு சொல்லுக்குப் பிறகும் ஒரு கமா பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு வார்த்தையும் அதன் வார்த்தை அடர்த்தியை அடைய கமாக்கள் உதவுவதாக அறிவித்தார். வார்த்தைகளின் தொனியும் கூடுதல் பலமும் பெறுவதாய் அவர் நம்பினார். இந்த ‘கமா’ வடிவ முறையுடன் முரண்பட்ட நிறைய எழுத்தாளர்கள் இருந்தபோதிலும் டேம் எடித் சிட்வெல் போன்ற கவிஞர்கள் இந்த முறைக்கு வரவேற்பளித்தனர்.
1949ஆம் ஆண்டிலிருந்து 1951ஆம் ஆண்டு வரை நியூ டைரக்ஷன்ஸ் வெளியீட்டு நிறுவனத்தின் இணை ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்பு நியூயார்க் சிட்டி காலேஜின் கவிதைப் பட்டறையின் இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
1964ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் பணியையும் விட்டு விட்டு நியூயார்க் ஸ்கூல் ஃபார் சோஷியல் ரிசேர்ச் (New York School for Social Research )இல் 1964லிருந்து 73ஆம் ஆண்டுவரை ஆசிரியப் பணியை ஏற்றார். இந்தக் கால கட்டத்தில் அவர் இலக்கிய வட்டாரங்களிலிருந்து வெளியேறிவிட்டாரோ என்று தோன்றும்படியாக இருந்தது. ஐ.நா சபைக்கான பிலிப்பைன்ஸ் தூதுக் குழுவின் கலாச்சார இணை அதிகாரியாக 1952லிருந்து 1963வரை இருந்தார். பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் கலாச்சார ஆலோசகராக 1968இல் அமர்த்தப்பட்டார்.
கல்லூரி தவிர அவரது இல்லத்திலும் கவிதை பயிற்சிப் பட்டறைகளை நடத்தினார் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். டபிள்யூ.ஹெச்.ஆடன், எலிசபெத் பிஷப், எடித் சிட்வெல், மரியன் மூர் போன்றவர்களின் இலக்கிய வட்டத்தில் அவரால் முக்கிய இடம் பிடிக்க முடிந்தது மட்டுல்ல அவர் கவிதைகளை அவர்கள் வாசித்து ஏற்றனர் என்பது சரிசமமான முக்கியத்துவம் பெறும் விஷயம்.
1942இல் அமெரிக்காவில் வில்லாவின் Have come, am here கவிதைத்தொகுதியை வைக்கிங் வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டது. இதன் மூலம் அமெரிக்காவின் இலக்கிய எல்லைகளில் அவரது இடத்தைப் பதித்தார். Have come இரண்டு அமெரிக்கக் கவிஞர்களுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டிருந்தது. ஒருவர் மார்க் வேன் டோரன். மற்றவர் இ.இ.கமிங்ஸ். இந்தத் தொகுதியின் வெளியீட்டுக்கு முந்தியும் பிந்தியும் கமிங்ஸ் மாறுபட்ட மனநிலைகளில் இருந் தார் என்பது தெரிகிறது. 1938ஆம் ஆண்டிலிருந்து கமிங்ஸை சந்திக்க பல கடிதங்கள் எழுதியும் பதில் பெறாமல் வில்லா இருந்திருக்கிறார். இதில் கூடுதல் விசேஷம் என்னவென்றால் கமிங்ஸின் மொத்தக் கவிதைத் தொகுதியையும் படித்த பிறகுதான் உரை நடை (சிறுகதை) எழுதுவதை விட்டுவிட்டு முழுமையாகக் கவிதைகள் எழுத ஆரம்பித்தார் வில்லா. இறுதியில் கமிங்ஸ் நண்பராகவும் கவிதை எழுது வதற்கான தூண்டுதலாகவும் அமைந்தார். இந்த இரு கவிஞர்களின் நட்பு இருபது ஆண்டுகளுக்கும் மேற்பட்டு நீடித்தது.
Volume two என்ற கவிதைத் தொகுதி 1949இல் வெளிவந்தது. இந்தத் தொகுதியில்தான் வில்லாவின் கமா கவிதைகள் முதன்முதலில் வெளிவந்தன. விவாதங்களை எழுப்பச் செய்தன இந்த ‘கமா’ கவிதைகள். வில்லாவின் இறுதியானதும் மிக முக்கியமானதுமான செலக்டட் போயம்ஸ் அன்ட் நியூ ( Selected Poems and New ) 1958-ல் வெளிவந்தது. நியூயார்க் இலக்கியக் களம் வெள்ளை அமெரிக்க எழுத்தாளர்களால் அரசோச்சப்பட்ட காலகட்டத்தில் வில்லா தனக்கான இடத்தை நிறுவிக் கொண்டது ஆச்சரியமளிக்கிறது. 1948ஆம் ஆண்டு லைஃப் பத்திரிகை ஆசியக் கவிஞரின் வருகையை அறிவித்து எழுதியபோது வில்லாவின் இலக்கிய ஸ்தானம் கூடுதலாய் ஸ்திரமாயிற்று. மேன்ஹேட்டனிலிருந்த கோத்தம் புக் மார்ட் என்ற புத்தக விற்பனை நிலையத்தில் எடுக்கப்பட்ட ஒரு பிரசித்தி பெற்ற புகைப்படம் ஒன்றும் அதில் வெளிவந்தது. அந்தப் புகைப்படத்தில் இருந்த இலக்கியவாதிகளின் பட்டியல் பின்வருமாறு: டென்னஸீ வில்லியம்ஸ், மரியன் மூர், எலிசபெத் பிஷப், ரேண்டல் ஜேரல், டபிள்யூ.ஹெச். ஆடன், அவருக்கு அருகில் வில்லா.
மெலுஸ் [ MELUS ] என்ற ஆய்வுப் பத்திரிகையின் 2004ஆம் ஆண்டின் இதழில் டிமோதி யூ (Timothy Yu) என்ற கீழைத்தேயவியல் விமர்சகர் பின்வருமாறு எழுதியது கவனிக்கப்பட வேண்டும்:
“ The presence of Villa, an actual Asian subject, as modernist writer is quite different kind of subversive Orientalism; he threatens to overturn the Orientalist hierarchy at the heart of modernism, in which classic Asian art and literature provide passive inspiration to a vibrant Western modernism.”
வில்லா ஒரு வெள்ளை எழுத்தாளர் அல்ல என்ற பிரக்ஞை கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும். 1946ஆம் ஆண்டு ஹென்றி மில்லர் வில்லாவுக்கு எழுதிய கடிங்களில் ஒன்றில் எழுதியதையும் ஊன்றிப் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்:
ஹென்றி மில்லர் பின்வருமாறு எழுதினார்: “ What amazes me, since you were born in the Phillipines, is your deep grasp of English.”
1942ஆம் ஆண்டு நியூ ரிபப்லிக் என்ற பத்திரிகையில் எழுதிய முன்னணி விமர்சகர் பேபட் டியூட்ச் வில்லாவுக்கு ஒரு ஆழ்பார்வை மிக்க மதவியல் கவிஞர் என்ற தகுதியை அளித்துப் பாராட்டினார்.
அதே ஆண்டு நேஷன் பத்திரிகையில் எழுதிய மரியன் மூரின் வரிகள்: “ ....ravely deep poems'' where ''final wisdom encountered in poem after poem merely serves to emphsize the disparity between tumult and stature.
வில்லா பயன்படுத்திய ஆங்கிலம் இந்திய எழுத் தாளர்களும், கரீபிய, ஆப்பிரிக்க எழுத்தாளர்களும் பயன்படுத்திய காலனியாதிக்க எஜமானர்களின் ஆங்கிலத்திற்கு சமானமானது அல்ல என சில பின் -காலனிய இலக்கிய விமர்சகர்கள் சொல்லக்கூடும்.
ஒரு இம்ப்பீரியலிச மொழியைத் தனதாகக் கோரிய ஜோஸப் கோன்ராட் மற்றும் விளாதிமிர் நெபக்கோவ் ஆகியோர் செய்ததுபோல வில்லா நிரூபித்தார்: மொழியியல் உரிமை கொள்ளல் என்பதற்கும் ஸ்தூல பூகோள எல்லைகளுக்கும் தொடர்பில்லை என்பதை. மேலும் கவிதையின் வாக்கியக் கட்டுமானம் என்பது சாதாரண உரையாடலின் கட்டுமானமோ அன்றி உரைநடையின் கட்டுமானமோ அல்ல. அவர் எந்த மொழியில் எழுதியிருந்தாலும் கூட அது அதற்குரிய விநோதத் தன்மைகளுடன்தான் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் அவர் ஒரு விநோதமான மனிதர்: டவ்கிலியன், அதாவது புறா, பருந்து மற்றும் சிங்கமாக இருந்தவர்.
வில்லா பிலிப்பைன்ஸ் அதிகார வர்க்க அமைப்புகளை மட்டும் பகைத்துக் கொள்ளவில்லை. அவரது தந்தையிடமிருந்தும் பிரிந்து சென்றார். அவரது தந்தை ஜெனரல் அக்வினால்டோ ஒரு மருத்துவர் மற்றும் படையணி அதிபராக இருந்தார். அவரது பதவி ஒரு கர்னலுக்கு இணையானது. ஆனால் மகனின் நடவடிக்கைகளை ஏற்காமல் அவன் அமெரிக்கா சென்றபின் பண உதவியை முற்றிலுமாய் நிறுத்திவிட்டார். வில்லா ஒரு டாக்டராக ஆக வேண்டும் என்ற கனவு அவரது தந்தைக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. நிலைத்த பகைமை உறவே இறுதியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நிலவியது. பல நவீன இலக்கிய விமர்சகர்கள் சொல்வதுபோல அவர் ஓர் வெகுண்டு எழுந்த போராளி. மேலும் அவரது கவித்துவ மற்றும் மொழித்திறன்களை எவர் ஒருவராலும் குறைசொல்ல முடியாதிருந்தது. பிலிப்பைன்ஸில் ஓர் ஆயுதம் தாங்கிய போராட்ட விடுதலைக்கான தயார்நிலை இருந்தபோது பல இடதுசாரிகள் கலை கலைக்காகவே என்றிருந்த வில்லாவை புறக் கணித்தார்கள். இடதுசாரி வறட்டுவாதிகள் கண்டனம் செய்து ஒதுக்கப் பார்த்தனர்.
வில்லாவின் கவிதைகளின் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட வாழ்க்கையானது முற்றிலும் உள்வயப் படுத்தப்பட்ட ஒன்றாக இருந்தது. ஒருவேளை ஜெரார்ட் மேன்லி ஹாப்கின்ஸ் என்ற கவிஞர் சிலாகித்த இன்ஸ்கேப்ஸ்-க்கு இணையானதாய் இருந்திருக்கும். கவிதையில் வில்லாவுக்கு முன்வைப்பதற்கோ அல்லது தற்காப்பதற்கோ கவிதையைத் தவிர வேறு எதுவும் இல்லாமலிருந்தது என்பதை அவர் கவிதைகளின் ஊடாய் வாசிக்கும் வாசகன் புரிந்து கொள்ள இயலும். ஆனால் வில்லா எழுதியது போன்ற கவிதைக்கு ஒரு கூர்ந்த விமர்சன அறிவாண்மை அத்தியாவசியமானதாய் இருந்தது. உணர்ச்சிப் பாக்களை எழுதும் கொடையும் இதற்கு இணையானதொரு தேவையானது. இவை இரண்டுமே அவரிடம் அபரிமிதமாய் இருந்தன என்பதை எவராலும் மறுக்க இயலவில்லை. அவரது கவித்துவ மென் உணர்வானது உரைநடையுடன் எந்த உறவாடலும் கொள்ளாத் தூய்மையுடன் இருந்தது -அவர் உரைநடையில் புழங்கியவர் மற்றும் சிறந்த சிறுகதைகளை எழுதியவர் என்ற போதிலும்.
வில்லாவின் கவிதைகளைப் பற்றிப் பேசும் விமர்சகர்கள் அவரை வில்லியம் பிளேக் (William Blake 1757-1827 ) என்ற ஆங்கிலக் (பிரித்தானிய) கவிஞரின் கவிதைகளுடன் ஒப்பிட்டு பேசி இருக்கின்றனர். இந்தப் புள்ளியின் விவாதத்தை புரிந்துகொள்ள நாம் வில்லியம் பிளேக்கின் கவிதைகளுடன் அறிமுகம் கொண்டவர்களாய் இருத்தல் அவசியம். குழந்தைத் தன்மைமிக்க கள்ளமின்மை என்ற அம்சம் இவர்கள் இருவரையும் இணைப்பதாகக் கொள்ள முடியும். குறிப்பாக வாசகர்களுக்கு பிளேக்கின் கவிதை நூலான Songs of Innocence and of Experience ( 1789 ) -ல் இடம்பெறும் கவிதைகள் மிக இன்றி யமையாத வாசிப்பாக இருக்கும். புலி என்ற தலைப்பிலான கவிதையை பள்ளிக் காலத்திலேயே படித்தவர்கள் இருக்கக் கூடும். 1950களில் அமெரிக்கா வில் நிகழ்ந்த எதிர்க்கலாச்சாரத்தின் விளைவாக உருவான பீட் கவிஞர்களான ஆலன் கின்ஸ்பர்க்கும், பாப் டைலானும் பிளேக்கின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டவர்கள் என்ற தகவல் முக்கியமானது.
சிற்றடக்கமான ஆசிரிய வசனங்கள் ( Aphorism ) எழுதுவதிலும் தன் முத்திரையைப் பதித்தவர் வில்லா. ஆனால் ஆங்கிலத்தில் பொதுவாக இதற்கான வார்த்தையான Aphorism க்குப் பதிலாக Xocerisms என்ற வார்த்தையை அவர் உருவாக்கினார். கவிதையின் முதல் வரி: “The poem's First line: The Coiled Cobra” ஆக இருக்க வேண்டும் என அவர் சொன்னது அவரது கவிதைகளுக்கு முற்றிலும் பொருந்துகிறது.
O
இந்தக் கவிதைகள் யாவும் கீழ்க்கண்ட அச்சு நூலிலிருந்து தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்கப்பட்டவை: JOSE GARCIA VILLA- Doveglion / Collected Poems / Edited by John Edwin Cowen / Penguin Classics (2008)