இரு நாட்குறிப்புகள் - ஒரு நாவல் - ஆறு குடியரசுகள்

1990களின் இறுதியில் செர்பிய அதிபரின் மனைவி மீரா மர்கோவிச் எழுதிய Night and a Day : A Diary December 1992 - July 1994 நூல் சென்னையில் வெளியிடப்பட்டது. பால்கன் பகுதியில் செர்பியர் - குரேஷியர் - இஸ்லாமியர் மோதல்களால், அதீதமான இழப்புகளும், உயிர்ப்பலிகளும் ஏற்பட்டு உலகமே பதற்றம் கொண்டிருந்த பின்புலத்தில் எழுதப்பட்டது. பால்கனில் நிகழ்ந்த தவறு என்ன என்பதை மனித சமுதாயம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதன் பொருட்டுச் சென்னையில் இது வெளியிடப்பட்டது என்றார் மீரா மர்கோவிச். 90களில் யூகோஸ்லோவியா பிரிந்து சென்றதை அடுத்து டிசம்பர் 1992- ஜூலை 1994க்கிடையே நிகழ்ந்தவற்றினைப் பதிவு செய்கிறது இந்நூல். “நல்லதோ கெட்டதோ ஒவ்வொன்றையும் பற்றிய என் உணர்வுகளை, தன்னுணர்ச்சிப் பாங்கில் கண்டு வெளிப்படுத்துகிறேன்” என்கிறார் மீரா.

கிழக்கு ஐரோப்பிய சிதைவுக்கான ஒட்டுமொத்த தனது மதிப்பீடாக மீரா முன்வைப்பது: “மாற்றங்களை ஏற்படுத்திவிடும் முயற்சியில், முற்போக்கானதைவிடவும் நுகர்வியம் சார்ந்த மாற்றங்களைச் செய்ததுதான் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் செய்த தவறுகளாகும்; அவையே பொருளாதார அரசியல் சரிவுகளுக்கு இட்டுச் சென்றன. சோஷலிஸத்தையோ முதலாளித்துவத்தையோ நாம் நம்பியிருக்க முடியாது; ஏனெனில் இரண்டுமே கடந்த காலத்தின் பகுதியாகும். கடந்த காலத்தில் நாம் வாழ முடியாது. சாத்தியமற்ற கருத்துக்களாலும் சாதிக்க முடியாதவையாக முதலில் தோன்றிய மாற்றங்களாலும் சமுதாயம் இயக்கப்படுகிறது, ஆனால் பெரும் பாலானவை ஈடேறி, உலகை மாற்றிடும்.”

மேலும் புத்தக வெளியீட்டின்போது உள்நாட்டுப் போருக்கான மூலக் காரணமாக மீரா அடையாளப்படுத்தியது. “செர்பியர், குரேஷியர், இஸ்லாமியரிடையே தவறாக இடம்பெற்ற தேசியவாதம் காரணமாக விளைந்ததே அறிவுக்குப் பொருந்தாத பழங்குடிப் போர். இம்மூன்றினத்தவரும் தம் இறையாண்மை சதா அபாயத்திற்குள்ளாகிவிடும் சூழலில் வாழ்ந்து வருகின்றனர். இது யூகோஸ்லேவியாவிற்கு வெளியிலிருந்து தூண்டிவிடப்பட்டது.”

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாகத் தனது நாட்குறிப்பு வடிவிலான நூலின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறார்: “முந்தைய யூகோஸ்லாவியாவில் ஏழையரே இல்லை, அது நல்லது. செல்வந்தரும் இல்லை, அதுவும் நல்லதே. நாம் அவர்களை விரும்பவில்லை. அதைத்தான் எனது நாட்டுக்கும் அனைத்து நாடுகளுக்கும் விரும்புகிறேன்.”

அப்போது முடிவுறாத இரவுக்குப்பின் புதிய தினம் விடியும் என்பது மீராவின் உத்தேசம்.

II

இவோ ஆண்ட்ரிக் என்றும் எழுத்தாளர் The Bridge over the Drina என்னும் தலைப்பில் எழுதியுள்ள நாவல் போஸ்னியாவை மையமிட்டது. இருபத்தியாறுக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான கலாச்சார இழைகளின் நெசவான பால்கன் பண்பாட்டை உணர்த்தக் கூடியது. போஸ்னியாவில் மதங்களும் சமூகங்களும் கலந்துவிட, பழைய உணர்வுகளும் போக்குகளும் தங்கிவிட, செர்பியரும் குரேஷியரும் ஒருவர் மீது ஒருவர் அவநம்பிக்கை கொள்கின்றனர். கிறித்தவர் முஸ்லீம்களின் பழைய மேலாதிக்கத்தை (ஆட்டோமானியப் பேரரசுக் காலத்தை) பீதியுடன் நினைவுகூர்கின்றனர்.

இப்போது பால்கன் பிரதேசம் “பெருமூச்சுகள், வாசனைகள், சப்தங்கள், உயிர்த்தெழுந்த உணர்வுகள், இருண்ட புள்ளிவிவரங்கள் மற்றும் குரூர முரண்கள் கொண்ட நினைவு பிரதேசமாகின்றது” என்கிறார் ஆண்ட்ரிக். நாவலின் தலைப்பில் உள்ள பாலம், 16ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டது. போஸ்னியாவை இஸ்தான்புல்லுடன் இணைப்பது, மூன்று நூற்றாண்டுகளாகப் பல்வேறு நிகழ்வுகளையும் அபாயங்களையும் பார்த்து, சாட்சியமாகக் கம்பீரத்துடன் நின்று வருகிறது.

கட்டாயத் திருமணத்திலிருந்து தப்பிக்க விரும்பும் ஒரு யுவதி இப்பாலத்திலிருந்து விழுந்து மடிகிறாள்; சூதாட்ட வெறியன் ஒருவன் தன் இறுதி ஆட்டத்தை அங்கே நிகழ்த்தி முடிந்து போகிறான். கிழவியின் ரூபத்தில் இதன் சோதனைச்சாவடியைக் கடந்து செல்ல முற்படும் செர்பிய கூலிப்படையாளை ஆஸ்திரிய-ஹங்கேரிய வீரன் அனுமதித்துவிடுகிறான் - ஏனெனில் அவனுடன் வருவது அவனது துணையும் காதலியுமான பெண்.

முதல் உலகப்போரில் ஒருபாதி சிதைக்கப்பட்ட இப்பாலம், பின் புதுப்பிக்கப்பட்டது. 2007-ல் யுனஸ்கோவால் அதன் பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. போஸ்னியாவில் கொந்தளிப்பான நிகழ்வுகள் நடந்தபோது, இப்பாலம் போக்குவரத்திற்குத் தடைசெய்யப்பட்டது, மேலும் கொடூரத்தை நிகழ்த்தியது.

மேலும் பால்கன் பிரதேசத்து வரலாற்றின் அடுக்குகளுக்கிடையே புதைந்திருக்கும், செர்பிய - குரேஷிய - முஸ்லீம்களுக்கிடையேயான இடைவெளிகளை இணைத்திட மொழிவழி தேசியவாதம் போதாது என்பதை ஆண்ட்ரிக் சுட்டிக் காட்டுகிறார். பெருமளவில் பொருளியல், பண்பாட்டியல், தன்னாட்சி உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு, வேலையில்லாத் திண்டாட்டம், வாழ்க்கைத்தரச் சரிவு போன்ற பிரச்சினைகள் கடுமையாக, கலவரம் வெடிக்கும் சூழல் உருவாகிறது. இவை எல்லாவற்றை விடவும் பண்பாட்டு ரீதியில் சமூகங்கள் தம்மை உறுதிப்படுத்திக் கொள்ளவும் அடையாளப்படுத்திக் கொள்ளவும் முடியாது போனதுதான் பிரச்சினைகள் கூர்மை பெறுவதற்கு ஆதாரமானது என்கிறார் ஆண்ட்ரிக்.

III

பால்கன் பிரச்சினை என்பது என்ன?

90% முஸ்லீம்களும் 10% செர்பிய கிறித்தவர்களும் வாழும் கொசாவா என்னும் தன்னாட்சி உரிமைப்பிரதேசத்தில், 24.04.1987 இல் தாங்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்பட்டுவருவது குறித்துக் கலவரங்களும் பேரணிகளும் செர்பியர்களால் நடத்தப்படுகின்றன. செர்பியர் சார்பில் பேசிய, கம்யூனிஸ்ட் லீகின் தலைவரும், மீரா மார்க்கோவிச்சின் கணவருமான ஸ்வபோதான் மிவோஸ்விக், செர்பியரின் தலைவராகி விடுகிறார்.

பிற இன மக்களின் உரிமைகளைப் புறக்கணித்துவிட்டு, செர்பிய சிறுபான்மை உரிமையை மட்டும் முன்னெடுத்துச் சென்று, பெரும்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய மிவோஸ்விக்கின் அணுகுமுறையே பிரச்சினையின் அடிப்படை. இதனால், கிழக்கத்திய ஆசாரக் கிறித்தவ மரபினரான செர்பியர் மீது, ரோமன் கத்தோலிக்கரான குரேஷியர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அவநம்பிக்கை எழுந்தது.

மிலோஸ்விக்கின் மனைவி மீரா, பெல்கிரேட் பல்கலைகழகத்தில் சமூகவியல் பேராசிரியை. அங்கே தத்துவம் பயின்று, பின் வணிகம் செய்து, வங்கி அதிகாரியாக இருந்த மிலோஸ்விக், உடன் பயின்ற மீராவின் ஆதரவாலும் தூண்டுதலாலும் அரசியலுக்கு வந்தவர். சோஷலிசம், கம்யூனிசம் எல்லாவற்றையும் கைவிட்டு, செர்பிய தேசியவாதம் பேசி அதிபராகிறார்.

1993 Serbian Renewal Party வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்க, பூசல் கொந்தளிப்பாகி ரணகளமாகிறது. மிலோஸ்விக் இன்னொரு பூதத்தையும் கிளப்பி விட்டிருந்தார். 1974லிருந்து கொசாவா பெற்றிருந்த தன்னாட்சி உரிமையை 1989ல் ரத்துச் செய்துவிட்டார். பெரும்பான்மையினரான முஸ்லீம்கள், அல்பேனியா வம்சாவளியினராதலால், அல்பேனியா கிளர்ச்சிக்கு தூபமிட்டது.

நேட்டோவை சேர்த்துக்கொண்டு அமெரிக்கா 10 நாட்கள் பெல்கிரேட் மீது குண்டு வீசி தாக்கியது.

ஒட்டுமொத்த விளைவு :

ஸ்லோவேனியா, குரேஷியா, போஸ்னியா, மாசிடோனியா, மாண்டிநெக்ரோ, கோசாவா என ஆறுநாடுகளாகியது யூகோஸ்லோவாகியா.

முப்பதாயிரம் பேரை இழந்து, இருபதாயிரம் முஸ்லீம் பெண்கள் வல்லுறவுக்குள்ளாகி இது 1014ஐ தொட்டு 2000இன் இறுதிவரை நீடித்து வந்த பத்து நூற்றாண்டுகள் பால்கன் சிக்கல்.

IV

இன்னொரு நாட்குறிப்புப் போஸ்னியா சார்ந்தது. ஆன் ப்ராங் போன்ற சிறுமி எழுதியது. 1991-93 வரை. ஸ்வட்டா (பி.1980) என்னும் பள்ளிச்சிறுமி தன் 11 வயதில் யுத்த சூழலில் எழுதிவைத்தது. வழக்குரைஞரான தந்தைக்கும் வேதியியல் பணியாளரான தாய்க்கும் பிறந்த ஸ்வட்டா தன் நாட்குறிப்பை மிம்மி (பிரியமான நாட்குறிப்பே) என்றழைத்து ஒவ்வொரு நாள் பதிவையும் எழுதி வருகிறார்.

“அமைதியே இல்லை. நம் நகரில் இல்லங்களில், சிந்தனைகளில், வாழ்க்கைகளில் திடீரென நுழைந்திருக்கிறது யுத்தம். அது பயங்கரமானது. அம்மா என் சூட்கேஸை நிரப்பி ஆயத்தப்பட்டிருப்பதாலும் பயங்கரமானது” என்கிறது ஏப்ரல் 19, 1992 நாளிட்ட பதிவு.

“பிரியமான நாட்குறிப்பே, படுக்கையிலிருந்து உனக்கு எழுதுகிறேன். படுக்கையில் இன்னொரு தினம் காத்திருக்கிறது எனக்கு. சிறிய மேசை மீது எனது அபிமானத்திற்குரிய பொம்மை பிம்ப்ளிம்பிகா தும்மிக் கொண்டிருக்கிறது; பாண்டா அதனையே உற்றுநோக்குகிறது… பார்க்கட்டும்”.

“19:45 எங்கள் சலவை இயந்திரத்தின் கடகட சப்தத்தைக் கேட்டுக்கொண்டு, திரும்பவும் படுக்கையில் இருக்கிறேன். பழுது பார்ப்பவர் வந்தால் பாவம். நூறு ஆண்டுகள் ஆனது. அதனை மரியாதையுடன் நடத்த வேண்டும். பழுது பார்ப்பவர் போய்விட்டார், இப்போது மைக்கேல் ஜாக்சனைக் கேட்கிறேன் - Man in the mirror? எனக்கொரு விநோத எண்ணம். மடோன்னா விசிறிகள் மன்றத்தில் சேர்ந்திடப்போகிறேன். உண்மையில் நான் வினோதமானவளே!” இது டிசம்பர் 4, 1991 நாட்குறிப்பு.

“பிரியமான மிம்மி, வாழ்க்கைப் போய்க்கொண்டிருக்கிறது. கடந்த காலம் குரூரமானது, எனவேதான் அதனை நாம் மறக்க வேண்டியிருக்கிறது. நிகழ்காலமும் குரூரமானது, என்னால் அதை மறக்க இயலவில்லை. யுத்தத்துடன் விளையாட முடியாது. எனது இப்போதைய யதார்த்தம் நிலவறை, பயம், குண்டுகள், துப்பாக்கிச்சூடு…” இது மே 13, 1992 நாளிட்டது.

பொதுவாக நாம் நாட்குறிப்பில் எழுத, இச்சிறுமியோ நாட்குறிப்பிற்கு எழுதுகிறார். பொம்மை தும்முவதிலிருந்து மறக்க இயலாத கடந்த காலம் வரை. தன் நாட்குறிப்பை பள்ளி ஆசிரியர்களிடம் அவள் கொடுக்க, ஒரு பத்திரிகையாளரின் கவனத்தில் பட்டு, நூலாக வெளிவந்தது. யுத்தச்சூழலில் வளரும் குழந்தைகள் உளவியல் சிகிச்சைக்கு உள்ளாயினர் அக்காலக் கட்டத்தில். ஸ்வட்டாவும் அப்பாதிப்புக்கு உள்ளாகியிருந்தாலும், சற்று விலகிய மனநிலையில் அவளால் பார்த்துப்பதிவு செய்ய முடிந்திருக்கிறது, தான் பாத்திரமாக நடித்துள்ள படத்தைப் பார்ப்பதுபோல.

“அவளது நாட்குறிப்புகளை நாம் வாசிக்கையில் பதற்றம், குழப்பம், கள்ளமற்ற தன்மை இல்லாது போதல், துயரங்கள் பற்றி நினைக்கிறோம். ஏனெனில் ஒரு குழந்தை இத்தகைய குரூர நிலையைப் பார்க்கக்கூடாது, அந்நிலையுடன் வாழக் கூடாது. அவளது துயரம் நம்முடையதாகிறது ஏனெனில் சரஜீவோவில் என்ன நடக்கின்றது என்பதை அறிவோம். இன்னும் நாம் எதிர்வினையாற்றவில்லை.”

ஒரு மழலையர் பள்ளி செர்பியர்களால் தாக்கப்பட்டு ஐந்து மழலைகள் பலியானார்கள் என்பது இங்கே நினைவுப்படுத்திக் கொள்ளவேண்டிய செய்தி.

V

சிறுமியின் நாட்குறிப்புக் குழந்தைத்தனமை எஞ்சியிருந்தாலும், போரின் குரூரத்தைத் தொட்டுவிடுகிறது. 1945இல் எழுதப்பட்டிருந்தாலும் இவோ ஆண்ட்ரிக்கின் நாவல் ஒரு நூற்றாண்டு பால்கன் பிரச்சினையின் கீழடுக்கிலிருந்து துருவி ஆராய்ந்து, 90களின் உள்நாட்டுப் போரினை தீர்க்கத் தரிசனமாகக் காட்டிவிடுகிறது.

உள்நாட்டுப் போரின்போதே பதிவான மீராவின் நாட்குறிப்பு, ஒரு பெண்ணின் பதிவாக இருப்பினும், நிலவரத்தைச் சொல்வதாகப் பாவனைச் செய்கிறது, திரித்துப் பேசுகிறது, புனைந்து எழுதுகிறது, மக்களுக்குத் துரோகம் இழைக்கிறது - அதிகாரத்தின் கரம் தனக்காக எழுதிக்கொள்வதால். தன் காலத்திற்குச் சாட்சியமாக இருக்கவேண்டிய பொறுப்பு எழுத்தாளருக்கு இருப்பதால், தன் காலம் குறித்த பதிவுடன் நிகழ இருப்பதையும் தீர்க்கத் தரிசனமாகச் சொல்லிவிடுகிறார் இவோ ஆண்ட்ரிக்.

எந்த முன் திட்டமும் உத்தேசமும் இன்றி நாட்குறிப்பிற்காக எழுதும் பள்ளிச் சிறுமியின் எழுத்து அழகாயிருக்கிறது - உண்மை பேசுவதால். அக்காலகட்டத்திலேயே சென்னையில் இதன் ஆங்கிலப் பதிப்பும் தமிழில் மொழிபெயர்ப்பும் வெளியிடப்பட்டது. தொழிலதிபர் டி.டி.வாசுவும், ‘நடுநிலையாளர்’ சோவும் கலந்துகொண்ட பிரபலங்கள். செர்பியாவிலிருந்து 1,50,000 டாலர்கள் செலவு செய்து இந்நிகழ்வுக்கு வருகை புரிந்திருந்தார் மீரா. பின்னர் ஏன் இப்படி நிகழாது?

இதில் ஒரு நெருடல். தமிழாக்கம் செய்தது ஞானியும் அவரது அணியும்.

ஆதாரங்கள் :

1. Night and Day - A Diary, Mira Markovic, East West Books, Madras.

2. Zlata’s Diary - A child’s Life in Sarajevo - Zlata Filipovic, Viking, 1993.

3. Ivo Andric, The Bridge Over the Drina, 1945.

4. கொசவோ : துயரத்தின் தொடர்கதை, டிஜோஸ் ஜார்ஜ், தினமணி, 08.04.1999

5. இரவும் பகலும், மீரா மார்கோவிச், த்வனி, சென்னை 1999. 6. எக்ஸில், ஆகஸ்ட் - அக்டோபர் 1999.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *