இலக்கியம், தத்துவம் (மெய்யியலும்), இலக்கியத்துவம்

ஜமாலன்

பகிரு

Jamalan 1

“தத்தவவாதிகள் உலகை பல்வேறு விதமாக விளக்கினார்கள்: இருந்தபோதிலும், முக்கியமானது அதனை எப்படி மாற்றுவது என்பதுதான்”

- கார்ல் மார்க்ஸ்

“The philosophers have only interpreted the world in various ways; the point, however, is to change it.”

- Karl Marx

அறிமுகம்

தத்துவத்தின் பணி உலகை குறித்த மற்றொரு விளக்கம் அல்ல. உலகை மாற்றுவதே என்றார் கார்ல் மார்க்ஸ். காரணம், இதுநாள்வரை தத்துவவாதிகள் உலகு, மனிதர்கள், இயற்கை, பிரபஞ்சம் ஆகியவற்றின் தொடர்புகளையும், இப்பிரபஞ்ச தோற்றம் குறித்தும், இந்த வாழ்விலிருந்து விடுதலை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் பல்வேறு விளக்கங்களை கூறி வந்தார்கள். கிரேக்கத்தைச் சார்ந்த சாக்ரடிஸ் துவங்கி ஜெர்மானிய ஹெகல் வரை மேற்கத்திய சமூகங்களில் வாழ்க்கை, உலகம், மனிதன், பிரபஞ்சம், உயிர் குறித்த பல விளக்கங்கள் தத்துவமாக முன்வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று இந்திய ஒன்றியம் உள்ளிட்ட கீழ்திசைச் சமூகங்களில் தத்துவம் என்பது வீடுபேறு அதாவது மோட்சம், தனிமனித விடுதலை அதாவது பற்றற்ற துறவறம் என்றும், பிறவியற்ற பெருவாழ்வு, உலக தோற்றம் பற்றிய பல விளக்கங்களை தந்துள்ளது. வேதங்கள் துவங்கி இன்றைய ஆன்மீக கார்ப்பரேட் சாமியார்கள் வரை இதனை விளக்க பல்வேறு தத்துவப் பள்ளிகளும் இருந்து வந்துள்ளது.

அனைத்துமே மார்க்ஸ் கூறியதைப்போல உலகை மாற்றுவதைப் பற்றியும் அதற்கான சரியான வழிமுறைப் பற்றியும் பேசவில்லை. உற்றுக் கவனித்தால், இத்தத்துவங்கள் அனைத்தும் தனிமனித நோக்கில் முன்வைக்கப்பட்டவையே தவிர, ஒரு சமூக முன்னேற்றம் குறித்து கவலைப்படவில்லை. உலகளாவிய தத்துவங்களில் நாத்திகம் சார்ந்த கடவுள் மறுப்பு சிந்தனைகள் ஓரளவு சமூகத்தின் நிலைகுறித்த விமர்சனங்களை, அது மாறவேண்டிய தேவைகள் குறித்து பேசினாலும், முறையான திட்டமிடலுடன் கூடியதாக அவை அமைய வில்லை.

பொதுவாக, தத்துவங்கள் தனிமனிதர்களை அடிப்படை அலகாக கொண்டிருக்கின்றனவே தவிர, சமூகம் குறித்த கவனம் அதிகம் இல்லை. இங்கு தமிழ் சிந்தனை மரபு திணை என்கிற சமூகக் குழுக்களை அடிப்படையாகக் கொண்ட ஒன்று என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். தமிழ் சிந்தனை மரபில் தனிமனிதன் குறித்த கவனத்தைவிட, குழும முன்னேற்றமே அடிப்படையாக இருந்துள்ளது.

தமிழ் குடிமரபு குறித்து ஒரு தனித்துவமான பண்பாக இது அமைந்துள்ளது. அவ்வகையில் தமிழ் சிந்தனை மரபின் முக்கியத்துவம் ஆய்விற்குரிய பொருளாக உள்ளது. அது விரிவாக மற்றொரு தளத்தில் உரையாடப்பட வேண்டிய ஒன்று என்பதைப் பதிவு செய்துவிட்டு தொடரலாம்.

மார்க்ஸ் கூறியதைப்போல உலகை மாற்றுவது தத்துவத்தின் பணி மட்டுமல்ல, இலக்கியத்தின் பணியும்கூட. தத்துவம் உலகை அறிவார்த்தமானதாக மாற்ற முயல்கிறது என்றால், இலக்கியம் உலகை உணர்வார்த்தமானதாக மாற்ற முயல்கிறது. உலகுடன் ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பை உருவாக்குவதே கலை இலக்கியத்தின் பணி. ஆதிச் சமூகத்தின் குகை ஓவியங்கள், பாவனை நடனங்கள், சடங்குகள், நாட்டார் மரபுகள், கூத்துகள் ஆகியவை தொன்மங்களாக வெளிப்பட்டது துவங்கி இன்றைய கலை இலக்கிய முயற்சிகள் வரை உலகை உணர்வு சார்ந்த ஒன்றாக உருவாக்கியுள்ளன.

திடப்படுத்தப்பட்ட அல்லது கருத்தாக்கமாக மாற்றப்பட்ட உணர்வே அறிவு என்பதால், இலக்கியத்தின் திடப்படுத்தப்பட்ட உணர்வாக தத்துவம் அமைகிறது. அல்லது தத்துவம் இலக்கியத்தின் அறிவாக அமைகிறது. அதனால், தத்துவத்திற்கே முன்னோடியாக இலக்கியம் அமைகிறது. ஏனெனில் உணர்விலிருந்துதான் அ றிவு உருவாக்கம் நிகழ்கிறது. ஆகவே, இலக்கியத்திலிருந்து வாழ்க்கையும், வாழ்விலிருந்து தத்துவமும் பிறக்கிறது. வாழ்க்கைத் தத்துவங்களை புனைவது மட்டுமல்ல இலக்கியம், வாழ்வை தத்துவமயமாக வாழ்வதற்கான வேட்கையைத்  தருவதும்  இலக்கியமே.

அதனால்தான், தத்துவத்திற்கு முன்பே கலைகளும் புனைவடிவங்களான இலக்கியமும் உருவாகியுள்ளது. இலக்கியத்தின் தோற்றத்திற்கு பிந்தையதாகவே தத்துவத்தின் தோற்றம் அமைந்திருக்கிறது. இலக்கியம் அதாவது கலை இலக்கியம் ஒரு சமூகத்தினைச் சார்ந்த மனித உணர்வுகளுடன் உறவுகொண்டது. மேலும், ஒரு சமூகத்தின் உணர்வியக்கமாக இருந்து அதனை சமூகமாக காப்பதிலும் இலக்கியத்தின் பங்கு முக்கியமானது. தத்துவத்தின் தோற்றுவாயாக இலக்கியம் அமைந்த போதிலும், இலக்கியம் தனக்கென்று ஒரு தத்துவத்தைக் கொண்டுள்ளது. அது என்ன? என்பதை உரையாடிப் பார்ப்பதே நோக்கம்.

கலைச்சொற்களின் சிக்கல்கள்

தத்துவம் என்று புழக்கத்தில் உள்ள சொல் வடமொழியைச் சார்ந்தது. அதற்கான சரியான தமிழ்ச்சொல் வள்ளுவர் கூறும் மெய்ப்பொருள் என்பதிலிருந்து தற்காலத்திற்கான சொல்லாக மெய் இயல் என்பதைப் பயன்படுத்தலாம். இச்சொல்லே தத்துவத்தின் சிக்கலை தமிழில் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அதாவது தத்துவம் என்பது மெய் குறித்த இயல். மெய் என்றால் உண்மை அல்லது பண்டிதர் அயோத்திதாசர் பயன்படுத்தும் உள்+மெய் உள்ளார்ந்துள்ள மெய். இந்த உள்ளார்ந்த மெய்என்பதே இறை மறுப்பின் அடிப்படையாக அமைகிறது.

சத்தியம், உண்மை இரண்டும் மாறுபாடு உடையது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியச் சிந்தனைமுறையில் மெய் அதாவது உண்மை என்பதே சத்தியம் என்பதாக கருதப்படுகிறது. ஒருவகையில் தமிழில் மெய் என்பது உடலை பருப்பொருளைக் குறிப்பதைப்போல, சத்தியம் என்பதில் உள்ள ‘சத்’ என்பதும் வடமொழியில் பொருளைக் குறிப்பதே. எனவே உண்மை என்பது ஒரு கருத்து அல்ல, பொருள் அல்லது பொருள்வயமான கருத்து என்று புரிந்துகொள்ள வேண்டும். இங்கு சத்தியம் என்பது ஒரு மாறா உண்மை என்ற பொருளில் பயன்படுத்தப் படுகிறது. ஆனால், உண்மை மாறும் தன்மைக் கொண்டது. சத்தியம் மாறாத்தன்மைக்கொண்ட தர்மாவுடனும், உண்மை மாற்றத்திற்குறிய அறத்துடனும் இணைந்துள்ளது என்பதை அறிவது அவசியம். இத்துணை நுட்பமும், கனதியும் கூடியதாக இருப்பதே தத்துவம் குறித்த சிந்தனையிலுள்ள சிக்கல். மிகவும் நுண்மையான பல வேறுபாடுகளை வித்தியாசங்களைக் கொண்டதே தத்துவம் (மெய்யியல்). (இனி இக்கட்டுரையில் கூடுமானவரை தத்துவம் என்ற சொல்லிற்கு பதிலாக மெய்யியல் என்ற சொல்லையே பயன்படுத்தலாம். தத்துவம் என்ற சொல் உருவாக்கும் படிமம், மெய்யியல் என்பதில் உருவாகுவதில்லை. காரணம் அச்சொல் மக்களின் வழக்கில் பயன்பாட்டில் ஒரு சிந்தனைப் படிமமாக மாறவில்லை இன்னும்.)

இந்திய மெய்யியல் சார்ந்த கலைச்சொற்களில் பல குழப்பங்கள் உள்ளது. பரவலாக தத்துவம் (மெய்இயல்) என்பதை, கோட்பாடு என்பதை எல்லாம் சித்தாந்தம், வேதாந்தம் என்றே புழக்கத்தில் பயன்படுத்துகிறோம். தத்துவம் படித்தவர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் கூட இப்படியே பயன்படுத்துகிறார்கள். அடிப்படையில் அது தவறானது. காரணம்...

1.    வேதாந்தம் வேதத்தை பிரமாணமாகக் (ஆதாரமாகக்) கொள்வது. அது விஷ்ணுவை முதன்மைக் கடவுளாக கொள்வது. அதன் சமய வடிவம் வைணவம் (தமிழில் மாலியம்).

2.    சிந்தாந்தம் சித் என்கிற அறிவைப் பிரதானமாகக் கொள்வது. சிவனை முதன்மையானக் கடவுளாகக் கொள்வது. அதன் சமயவடிவம் சைவம் (தமிழில் சிவனியம்).

3.    மெய்யியல் (தத்துவம்) என்பதன் உட் பிரிவுகளே சித்தாந்தம், வேதாந்தம், சார்வாகம், பௌத்தம், சமணம், ஆசிவகம் ஆகியவை. ஆகையால் மார்க்சிய சித்தாந்தம் போன்ற சொற்பயன்பாடு அடிப்படையில் தவறானவை. மார்க்சிய மெய்யியல் என்று சொல்வதே சரியானது.

இந்திய ஒன்றியச் சிந்தனை மரபில் பெரும்பாலும் தத்துவம் இறையியல் சார்ந்ததாகவே உள்ளது. அதன் இறுதி இலக்கு கடவுள் ஏற்பு X மறுப்பு என்பதே. அல்லது வேதத்தை ஏற்பது X மறுப்பது என்பதே. ஆனால், தத்துவம் (philosophy) என்று மேற்கத்தியப் பொருளில் சொல்லப்படும் ஒன்றாக இவை இல்லை. இந்தச் சிக்கலை உணர்ந்து ஆங்கிலேய காலனியம் தனது ஆளுகைத் தொழில்நுட்பமாக மீள் கண்டுபிடிப்புச் செய்த வேதங்கள் அது குறித்த உரையாடல்கள், சிந்தனைகள் ஒழுங்கமைக்கப்பட்டதே இந்தியத் தத்துவமாக இன்று சொல்லப்படுகிறது. இதன்பின் ஒரு உயர்சாதிய மேலாண்மைக்கான பின் காலனியச் சிந்தனையின் அரசியல் உள்ளது. ஆனால், மேற்கத்தியச் சமூகத்தில் தத்துவம், அறிவியல், இறையியல் (மதம்) என்ற பிரிவுகள் கிரேக்கர்கள் துவங்கி இருந்து வந்தது. அது தத்துவம் (philosophy) தர்க்கம் (logic தமிழில் அளவையியல்) சார்ந்த அறிவு மரபாக இருந்தது. இறையியல் (theology) மத உணர்வு சார்ந்த நம்பிக்கைகளின் அடிப்படையாக இருந்தது. அறிவியல் என்பது தர்க்க நெறிபட்ட, நிரூபிக்கப்பட்ட அறிவு சார்ந்ததாக இருந்தது.

இந்திய தத்துவம் தர்க்கத்தைப் பயன்படுத்தி கடவுள் என்பதை நிரூபிப்பதாகவும், சமயம் சார்ந்ததாகவும் இருந்தது. நாத்திகம்கூட கடவுள் மறுப்பில் செலுத்திய வாதங்களை சமூக மாற்றம் குறித்து பேசவில்லை. ஆக, இந்திய தத்துவ மரபு, இறை மையவாதமாக அமைந்த இறையியல் சார்ந்ததாகவே அமைந்தது. அதிலிருந்து விலகிய சார்வாகம், பௌத்தம், சமணம், ஆசிவகம் ஆகியவை தர்க்க நெறியில் அமைந்த சரியான பொருளில் தத்துவம் அல்லது மெய்யியல் என்ற சொல்லக்கூடியவையாக உள்ளன. ஆகையால் மெய்யியல் குறித்து பேசும் போது இறை சார்ந்து பேசுபவையும் (வேதாந்தம், சித்தாந்தம் ஆகியவை), மெய் சார்ந்து பேசுபவையும் (சார்வாகம், பௌத்தம், சமணம், ஆசிவகம் ஆகியவை) என்ற பிரிவு அவசியப்படுகிறது. அதனால் இலக்கியமும் இறை சார்ந்து பேசுவதாகவும், மெய் சார்ந்து பேசுவதாகவும் பண்டைய  செவ்வியல்  சமூகங்களில்  அமைந்தது.

சான்றாக? தமிழின் காப்பிய மரபு ஒரு சமயம் சார்ந்து அமைந்தாலும் அது மெய்காண்முறை குறித்துப் பேசுகிறது. குறிப்பாக மணிமேகலை, நீலகேசி போன்றவற்றை சுட்டலாம். தமிழில் மெய்யியல் சார்ந்த ஒரு உரையாடல் என்பது இக்காப்பியங்கள் வழியே அமைகின்றன. அதன்பின் சித்தாந்தம் என்கிற சைவ சாத்திரங்கள் வருகின்றன. இவை வைதீகத்தைவிட அதிகம் வேதச்சார்புடையதாக தங்களைக்  காட்டி வைதீக பார்ப்பனிய மேலாண்மையை, சைவ வேளாளர்கள் மேலாண்மையாக மாற்றின. இதில்தான் சைவமும் தமிழும் இணையும் புள்ளிகள் உருவாகுகிறது. இங்கு ஒன்றை அவசியம் சுட்ட வேண்டும். தமிழருக்கான மெய்யியல் குறித்து விரிவான ஆய்வுகள் அவசியம். அந்த ஆய்வுகளுக்கான அடிப்படைகளை இலக்கியத்தில் எப்படிப் பெறுவது என்பதற்கு இலக்கியத்திற்கும் தத்துவத்திற்கும் இடையிலான பயிற்சி அவசியம் என்பதைச் சொல்லித்  தொடரலாம்.

மெய்யியல் அல்லது மெய்ப்பொருளியலின் அடிப்படைகள்

பொதுவாக கோட்பாட்டு அடிப்படையில் மெய்யியலை இரண்டு பிரிவுக்குள் அடக்கலாம். வழக்கமாக மார்க்சியம் கூறும் கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் என்பது உலகின் முதன்மையானது எது? என்ற அடிப்படையில் பிரிக்கப்படும் பிரிவு. ஆனால், இங்கு சுட்டப்படும் பிரிவு மெய்யியலின் சிந்தனைமுறைச் சார்ந்த ஒன்று. அல்லது சிந்திப்பதின் பின்னுள்ள பிம்பம் (தமிழில் படிமம்) சார்ந்த ஒன்று.

1. அப்பாலை மெய்யியல் (டிரான்ஸ்டெண்டல் பிளாஸஃபி):

மனிதன், இயற்கை, பிரபஞ்சம் ஆகியவற்றிற்கு அப்பால் ஒரு சக்தி அல்லது உண்மை இருப்பதான பிம்பம். இது பொதுவாக இறையியல் பின்னணி கொண்டதாக அல்லது எல்லாவற்றிற்கும் அப்பால் அனைத்தையும் இயக்கும் சக்தி அதாவது மூலாதார சக்தி என்று ஒன்று உள்ளது என்பதை நம்புவது. அதுவே உலகை இயக்குவது. உலக உற்பத்தி என்பது ஒரு சக்தியால் நடைபெறுவது என்பது. இதன் பிம்பம் பானையை வனைய ஒரு குயவன் தேவை என்ற பிம்பச்சிந்தனை எனக் கூறலாம்.

இதன் அடிப்படைகள்

1.    பேருண்மை - உலகம் - மனிதன் இடையிலான தொடர்புகளை ஆராய்வது அல்லது அப்பாலை உண்மைகளை அறிய முயல்வது

2.    பிரபஞ்சத்திற்கு வெளியே பேருண்மை உள்ளதாக நம்புவது

3.    பேரறிவைப் பெறுவதே ஆன்மீக இன்பம் என்பது அதாவது ஞானம் பெறுதல்

4.    அனைத்தும் சாராம்சப்படுத்தப்பட்டவை என்ற சாராம்சவாத சிந்தனையே இதன் அடிப்படை

2. உள்ளுறை மெய்யியல் (இம்மெனென்ட் பிளாஸஃபி):

மனிதன், இயற்கை, பிரபஞ்சம் ஆகியவை இயல்பாய் உறைந்துள்ள உள்ளுறை (உண்மை = உள் + மெய்) ஆற்றலால் திரண்டவை என்கிறது. எந்த வெளி ஆற்றலிலும் உருவானவை அல்ல. அப்பாலை மெய்யியல் கூறும் வெளி ஆற்றல் என்பது ஒரு உள்ளார்ந்த அல்லது மையம் சார்ந்த ஒன்றிருப்பதை அங்கீகரிப்பது. ஆனால், இம்மெய்யியல் சார்ந்த சிந்தனை மையம் என்பதையும் மறுக்கிறது. பானை வனையும்போதுதான் ஒருவன் குயவனாகிறான். பானையும் குயவனும் இணைவதால் திரள்வதே பானை. இதனை டெல்யுஸ்-கத்தாரியின் திரளுதல் (அசம்பலேஜ்) என்ற கோட்பாட்டுவழியாக புரிந்து கொள்ளவேண்டும். சுருக்கமாக புரிந்துகொள்ள, ஒருவர் என்னவாக இருக்கிறார் என்பதை அவர் புழங்கும் சூழலே தீர்மானிக்கிறது. ஒருவர் பள்ளியில் ஆசிரியர், வீட்டில் தலைவர், நண்பர் குழாமில் நண்பர்...

இப்படியாக அவரது இருப்பு உருவாகிக் கொண்டே இருப்பதுடன், அவர் என்னவாக உருவாகவேண்டும் என்பது சூழலால் திரளும் ஒரு அடையாளம் அல்லது இருப்பு எனலாம். இதைதான் திரளுதல் என்கிறோம். ஒரு இலக்கியப் பிரதி வாசிப்பில்தான் பொருளாக (அர்த்தமாக) திரள்கிறது என்பதன் மெய்யியல்சார்ந்த பின்னணி இதுதான். இதனை இலக்கியத்தின் தத்துவம் (மெய்யியல்)  என்பதாக  முன்வைக்கலாம்.

இம்மெய்யியலின் அடிப்படைகள்

1. இயல்புநிலை (இந்தியத் தத்துவ சிந்தனையில் சுபாவவாதம் மற்றும் பௌத்தம்). பிரபஞ்சம், மனித இருப்பு அனைத்தும் இயல்பானது, அது உருவாகிக்கொண்டே உள்ளது. அல்லது அதன் இயக்கம் உருவாகிக்கொண்டிருப்பதே.

2. பேருண்மையை மறுப்பது. உண்மை சூழலால், புறத்தால் திரளும் ஒன்று என்பது.

3. உணர்வு என்பதும் ஒரு திரளுதலே. உண்மையான ஆன்மீக இன்பம் உணர்வுகள் பேருணர்வாக திரளும் அந்த ஒரு கணமே.

4.    அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளது. ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டுள்ளது.

முன்பு சுட்டியதைப்போல, இது கொஞ்சம் புரிதலுக்கு சிக்கலான, கடினமான ஒன்று. என்றாலும், புரிந்துகொள்ள வேண்டியது, இதுநாள்வரை சொல்லப்பட்ட விண்ணில் திரியும் அப்பாலை உண்மையை அல்லது தான் தியானித்துக் கண்ட சத்தியத்தைப் பிடித்தெடுத்து, வாசகனின் மண்டையில் திணித்துவிடுவதே இலக்கியத்தின் மெய்யியல் என்பதன் பின் ஒரு எதேச்சதிகாரம் உள்ளதென்பதையே. உண்மையில் இலக்கியத்தின் தத்துவம் அதன் திருளுதல் உருவாக்கும் உருவாகுதல் (பிக்கமிங்) நிலையே. இலக்கியப் பிரதி பல திரளுதல் வழியாக பல்வேறு உருவாகுதலை தருவதே. அது முடிந்த முடிபாக நின்றுவிடும் ஒன்றல்ல.

மெய்யியல் (தத்துவம்) என்றால் என்ன?

முக்கியமான இக்கேள்விக்கு பதில் தேடுவதன் வழியாக, இலக்கியத்தின் மெய்யியலை கூடுதலாக புரிந்து கொள்ளமுடியும். மெய்யியல் குறித்து மூன்று விதமான சிந்தனைகள் உள்ளது.

1.    பொதுவான மெய்யியல் சிந்தனை- இது உலகை விளக்க முயல்வது.

2.    மார்க்சிய மெய்யியல் சிந்தனை - உலகை மாற்ற முயல்வது - இயங்கியல் சார்ந்த ஒன்று - உலகம் மாறிக்கொண்டிருப்பது என்கிறது.

3.    டெல்யுசிய மெய்யியல் சிந்தனை- தத்துவம் (மெய்யியல்) என்பது புதிய கருத்தாக்கத்தைப் படைக்கும் கலையே - இது மொழி-சமூகம் அவற்றின் இயக்கம் சார்ந்த ஒன்று “philosophy is the art of forming, inventing, and fabricating concepts.” - டெல்யுஸ் - கத்தாரி).

டெல்யுசிய சிந்தனை மனிதன், உலகு, பிரபஞ்சம் ஆகியவற்றின் உறவை conceptualize செய்து அதனை ஒரு கருத்தாக்கமாக வெளிப்படுத்துவதே மெய் இயலின் பணி என்கிறது. மெய்யியல் குறித்த இறை இயல், கடந்தநிலை, பேருண்மை, தரிசனம், ஆன்மீகம், பேரறிவு உள்ளிட்ட அனைத்தையும் அடித்து நொறுக்கிவிட்டு மெய்யியலை ஒரு மொழிச் செயலாகப் பார்க்கிறது. தத்துவம் ஒரு மொழிச் செயல்பாடு என்பதால் அது புதிய அனுபவங்களை, உணர்வை சமூகத்தில் ஒரு புதிய கருத்தாக்கமாக அறிமுகப்படுத்தும் ஒன்றே. இப்புதிய கருத்தாக்கம் புதிய வாழ்தலாக உருவாகும் பல மெய்யியல் சிந்தனையாளர்கள் பல கருத்தாக்கங்களை உருவாக்கி உள்ளனர். அதற்கு நிறைய சான்றுகளைத் தரலாம் - நிலையாமை, ஆத்மா, மாயாவாதம், பரமாத்மா, ஜீவாத்மா, பிளாட்டோ கூறும் வடிவம் - தெகார்த் கூறும் காஜிட்டோ...

இப்படியாக.

இலக்கியம் என்றால் என்ன?

இக்கேள்வி மிகவும் சிக்கலானது என்பதுடன் அதனை வரையறுப்பது சாத்தியமற்றதாக உள்ளது. இத்தலைப்பில் பிரஞ்சு மார்க்சிய, இருத்தலியத் தத்துவச் சிந்தனையாளரான ழான் பால் சார்த்தர் ஒரு புகழ்பெற்ற கட்டுரையை எழுதியுள்ளார். அவர் இலக்கியமாக அதில் கவிதையியல் (poetics) என்பதை முன்வைத்து, இலக்கியம் என்பது கடப்பாடு (commitment) சார்ந்த ஒன்று என்கிறார். இலக்கியத்தை உரைநடை, கவிதை என்று இரண்டாகப் பிரித்து, உரைநடை என்பது மொழியை திட்டமிட்டு பயன்படுத்தும் ஒரு அரசியல் நடவடிக்கை என்றும்,

கவிதை மொழிக்கு வெளியே இருப்பது அது எழுதுபவரால் பயன்படுத்தப்படுவதற்கு மாறாக, மொழி அமைப்பிலிருந்து பிரித்து அதன் சொற்களை அகஉலகின் உணர்த்தலாக வெளிப்படுத்துவது என்கிறார். சுருக்கமாக இலக்கிய எழுத்தில் கவிதையை மட்டும் உணர்வுடன்  உறவுகொண்டதாக  முன்வைக்கிறார்.

இலக்கியம் குறித்த வரையறையில் எதிர்படும் சிக்கல் அதன் உணர்வுதளம் குறித்ததே. இலக்கியம் உருவாக்கும் இலக்கிய அல்லது கலை உணர்வு என்பதே அதன் அழகியல் அடிப்படையாக உள்ளது. உணர்வு என்பது ஒரு உடலில் உருவாகும் தனித் தன்மையான ஒரு விளைவு. அது அவ்வுடலை இயக்குவதாகவும், அவ்வுடலின் புலன்களை மறு வடிவமைப்பு செய்வதாகவும் உள்ளது. அது எழுதுதல் என்ற ஒரு மொழிவினையாக இருந்தாலும், அவ்வினை வாசிப்பின் வழியாகவே தன்னை தகவமைத்துக் கொள்கிறது. இலக்கியம், தத்துவம் இரண்டுமே மொழியால் நிகழ்த்தப்படுவதே மற்றும் எடுத்துரைக்கப்படுவதே. இரண்டுமே மொழிவினை என்றாலும், இரண்டின் வினையும், விளைவும் வேறாகும். இலக்கியமும், கலையும் உணர்வுப் புலத்தை உருவாக்குபவை. அதன்வழியாக, ஒரு உடலின் புலனாக்கத்தையும், உணர்வாக்கத்தையும் கட்டமைப்பதாக உள்ளது.

சுருக்கமாகக் கூறினால் மெய்யியல் பேரறிவு சார்ந்த ஒன்று, என்றால் இலக்கியம் பேருணர்வு சார்ந்த ஒன்று என்று கருதலாம். இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை. இலக்கியத்தின் தத்துவம் (மெய்யியல்) இந்த பேருணர்வை சார்ந்ததே. ரோலான் பார்த் கூறும் ‘ஜூவான்ஸ்’ என்பதை அடைவது அல்லது வாசிப்பின்பம் வழியாக ஒரு களிப்புநிலையை அடைவதன் மூலம் ஒரு புதிய உலகை, உணர்வைப் பெறுவது (சூஃபிகள் கூறும் ‘எக்ஸ்டஸி’ என்ற பேரின்பநிலை, இந்திய சிந்தனைமுறை முன்வைக்கும் பேரானந்த நிலை). இதனைதான் தரிசனம் (உளக் காட்சி என்று தமிழில் குறிப்பிட்டால் அதன் இறைசார் தத்துவம் கழன்றுவிடுவதைக் காணலாம்) என்கிறார்கள் இந்தியத் தத்துவ சிந்தனையாளர்கள்.

இத்தரிசனத்தை ஒரு குறிப்பிட்ட சமூகப்பிரிவினரே பெறமுடியும் என்ற ஒரு சிக்கலான நிலையை உருவாக்கியுள்ளனர். இத்தரிசனத்தை பிற சமூகத்திற்கு மறுப்பவர்களாக தங்களது சனாதன வருணக் கோட்பாட்டை அமைத்தனர். அதனால் தத்துவம் (மெய் இயல்) என்பது சிக்கலான ஒருவகை ஞானம் சார்ந்த நடைமுறையாக முன்வைக்கப்பட்டது.

ஆனால், இலக்கியம் அனைத்து மக்களுக்கான தரிசனத்தைத் தரக்கூடியதாக அமைந்துள்ளது. வாசிக்-கும் மக்களிடம் ஒரு உளக்காட்சியை உருவாக்கக் கூடியதாக உள்ளது. இந்த உளக்காட்சியை பெற ரசாக் கோட்பாடு என்கிற வடமொழி சார்ந்த கோட்பாட்டை முன்வைக்கிறார்கள் அதே ஆன்மீகவாதிகள். அதில் உள்ள ‘த்வனி’ என்கிற ஒன்றை தொல்காப்பியம் கூறும் ‘உள்ளுரை’ மற்றும் ‘இறைச்சி’ என்பதோடு ஒப்பிடலாம். இறைச்சி, இறைவன் இரண்டும் இறை என்ற ஒரே வேர்ச்சொல்லில் இருந்தே உருவானவை. அதைக்கூட கட்டவிழ்த்து வெளிப்படுத்தும் ஒரு இலக்கிய கோட்பாட்டு வாசிப்பை தமிழ்ச் சூழலில் நிகழ்த்தியதில்லை இந்த ரசாக் கோட்பாடு பேசும் ரசனைவாதிகள் (இவர்களால் இலக்கியம் ஒரு உணவுப் பண்டத்தைப் போல அணுகப்படுகிறது. ஸ்பெஷல் மசாலா, ஆனியன் தோசை, சாம்பார் வடை என்பதைப்போல).

காரணம் இலக்கியத்திற்கு என்று ஒரு தத்துவம் உள்ளது என்பதையே இவர்கள் மறுப்பவர்களாக உள்ளனர்.  அதன் நீட்சி கோட்பாடுகளை மறுப்பதாகவும் அறிவை மறுப்பதாகவும் உள்ளது. அறிவு என்பது பதப்படுத்தப்பட்ட உணர்வும், அனுபவமுமே அல்லது உணர்வின், அறிவின் சாரமாக பெறப்படும் ஒன்றே. உணர்வு என்பது பதப்படத்தப்படாத அறிவு அல்லது சாரப்படுத்தப்படாத உணர்வு. இலக்கியத்தின் தத்துவம் உணர்வை உருவாக்கி வாசிப்பவனின் அகக் காட்சியை உருவாக்குவதன் வழியாக உயர்ந்த உணர்வுத் தளத்திற்கும் அதன் சாரமான அறிவிற்கும் இட்டுச் செல்வதே. பக்தியிலிருந்து ஞானம் என்பது உணர்விலிருந்து அறிவு என்பதே.

இலக்கியத்தின் தத்துவம் என்பது உலகை மாற்றுவது, புதிய மனிதர்களைப் படைப்பது, புதிய அறிவை உருவாக்குவது, புதியதொரு உணர்வுத் தளத்தை உருவாக்குவது அல்லது பெயரற்ற ஒரு உணர்விற்கு பெயர் தருவது. இலக்கியம் உணர்வு, புனைவு, கற்பனை சார்ந்தது என்றால், மெய்யியல் அறிவு, கருத்தாக்கம், மெய் சார்ந்த ஒன்று. இரண்டும் சமூக அறம் சார்ந்தவையே.

அழகியல் என்பது இயற்கைத் தத்துவம் என்கிறார் டெல்யுஸ். இயல் உலகை அழகியலாக உள்வயப்படுத்துவதே கலை. இலக்கியம், சினிமா ஆகியவற்றின் அடிப்படை. உணர்வுகளை கருத்தாக்கமாக மாற்றுவது தத்துவம். கருத்தாக்கத்தை உணர்வாக மாற்றுவது இலக்கியம். மெய்யியல் வாழ்க்கைக் குறித்த கருத்தாக்கத்தை உருவாக்கி ஒருவரது உலகப் பார்வையைக் கட்டமைக்கிறது என்றால் இலக்கியம் வாழ்க்கை குறித்த அழகியலை உருவாக்கி ஒருவருக்கு எண்ணற்ற உலகை அறிமுகப்படுத்துகிறது. அவரது உணர்வை உருவாக்கி சமூகத்துடன் இயைபுபடுத்துகிறது. வாழ்வதற்கான வேட்கையைத் தருவதே இலக்கியம் இதுதான் எனது பார்வையில் இலக்கியத்தின் தத்துவம் அல்லது இலக்கியத்தின் மெய்யியல்.

தொகுத்துக் கூறினால், இலக்கியத்தின் தத்துவத்தை (மெய்யியல்) இலக்கியத்துவம் என்று கூறலாம். அதன் தனித்தன்மைகள் மூன்று. 1. அழகியல், 2. அறவியல் 3. வாழ்வதற்கான வேட்கையை உருவாக்குதல்.

இங்கு வேட்கை என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். வேட்கையை, பிராய்ட் மற்றும் லக்கான் இன்மை (லேக்) என்றார்கள். ஒருவரிடமில்லாத ஒன்றின்மீது வரும் ஆசை என்பதாக. சான்றாக ஆண் பெண்ணாக இல்லை என்பதால் பெண்மீதான வேட்கை உருவாகுகிறது என்று. டெல்யுஸ்-கத்தாரி வேட்கை ஓர் உற்பத்திச் சக்தி என்றார்கள். யதார்த்த உலகை ஒருவரது விருப்பிற்கு ஏற்ப உற்பத்தி செய்யும் ஆற்றலே வேட்கை. இந்த உலகை உற்பத்தி செய்வதே சமூகத்தின் வேட்கைதான் என்பதாக இதனைப் புரிந்து கொள்ளலாம். இதனை அத்வைத மாயாவாதத்துடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. அது புறஉலகு என்பதே ஒரு மாயை, அதை மாயையாக அறிவதே ஞானம் என்கிறது. ஆனால், வேட்கையின் வழி உருவாகும் புறஉலகு என்பது புத்தம் கூறும் ஆசையே (வேட்கையால் கட்டப்படும் தன்மையவாத அகவிருப்பு) அனைத்திற்கும் காரணம் என்பதோடு இணைத்து நோக்கத்தக்கது. டெல்யுஸ்-கத்தாரி முன்வைக்கும் வேட்கை பன்மையான புற உலகை படைத்தளிப்பது என்பதே.

ஆக, தத்துவம், வேட்கையை எதிர்மறையாக - unproductive-ஆக பார்க்கிறது. அது வேட்கையை பாவம் என்றும் புனிதமற்றது அல்லது கறை என்றும் அதனை துறக்கச் சொல்கிறது. துறவறத்தை போதிக்கிறது. இலக்கியத்துவம், டெல்யுஸ் - கத்தாரி வழியில் வேட்கையை நேர்மறையாகப் பார்க்கிறது - productive-ஆக பார்க்கிறது. இலக்கியம் சமூகத்தின் உற்பத்திச் சக்தியாக உள்ளது. இலக்கியத்தின் தத்துவம் சமூகத்தில் வாழ்வதற்கான வேட்கையைப் பெருக்குவதே. அந்த வேட்கை அறம் சார்ந்தாக, அழகியல் சார்ந்தாக இருக்க வேண்டும். செவ்வியல் தத்துவம் குறித்த கோட்பாட்டிற்கு எதிரானதாக இலக்கியத்துவம் உள்ளது. டெல்யுசின் புதிய தத்துவம் என்ற கோட்பாட்டிற்கு ஏற்ப, இலக்கியம் மொழியியல் வினையாக, சமூகத்தில் புதிய கருத்தாக்கத்தை, உணர்வாக்கமாக அதன்வழி புலனாக்கமாக கட்டமைக்கிறது. இலக்கியத்துவம் என்று புதிய அறிதலே இலக்கியத்தின் தத்துவமாக உள்ளது. தொகுத்துக் கூறினால், இலக்கியத்துவத்தின் வினை என்பது...

1.    அறிவார்ந்த தளத்திலான ஆன்மீகம் அதாவது அறிவியல் சார்ந்த ஒரு அறிதல் தரும் களிப்பு நிலையை உருவாக்குவது.

2.    ஒற்றை உலகிலிருந்து பல்லுலகம் நோக்கிப் பரவுதல்.

3.    புதிய சமவெளிகளை (இயற்கைகளை) அறிமுகப்படுத்துதல்.

4.    வாழ்ந்துபெற்ற அனுபவத்தை தருதல்.

5.    வாழ்வதற்கான புதிய வேட்கைகளை உற்பத்தி செய்தல். பல்வேறு உலகங்களை உருவாக்குதல். அவ்வுலகங்கள் வழி நாமும் பல்வேறு உருவாகுதலாக மாறுதல்.

மெய்யியல் (தத்துவம்) உலகை அறிவாக உள்வாங்குகிறது என்றால், இலக்கியம் உலகை உணர்வாக உள்வாங்குகிறது. உணர்வே அழகியலாக இலக்கியத்திலும், அறமாக மெய்யியலிலும் வெளிப்படுகிறது. இலக்கிய அழகியலே மெய்யியலின் அறமாக உள்ளது. அறம்சார் அழகியலே வாழ்விற்கான வேட்கையை, சமூக வாழ்விற்கான அடிப்படைகளைத் தருவது. இனியான இலக்கியம் தமிழ் இலக்கிய பீடங்கள் உருவாக்கி வைத்துள்ள ரசனைவாதம் சார்ந்த வெறும் உணர்ச்சி சார்ந்த ஒன்றாக இல்லாமல், அறம் சார்ந்த அறிவு சார்ந்த அழகியலாக அமைய வேண்டும். அதற்கு அறம் சார் அழகியல் என்ற ஒரு புதிய கருத்தாக்கமே இலக்கியத்தின் தத்துவம் அல்லது இலக்கியத்துவம் முன்வைக்கும் ஒன்று.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer