ஜார்ஜ் ஜோசப் கவிதைகள்


பகிரு

உறக்கம் சூழ்
அந்தியைக் கைவிட்டுவிட்டு
பகலைப் பூசிக்கொள்கிறேன்
நேரங்களின் அழியாட்டம்
அனுதின பட்சணமாய்
ஊட்டந்தர
அதிகாலையின் மழை மணத்தை
இருத்திக்கொள்கிறேன்
இருளின் வாசத்தில் வாழும்
ஒளி நானானதும்
கவிகையிலிருந்து நழுவும்
அருவிபோல் மனதிலிருந்து
வீழ்கிறேன்
என்னை ஏந்திக்கொள்ளவெனப்
பனி மேகங்கள் மடி விரிக்கின்றன

நாளையின் 
ஆசைகளும் ஏக்கங்களும்
இக்கணமே நிறைவுற்றதாய்க்
கனா செய்து
நிறைவுக் காட்சியின்
ஒவ்வொரு அசைவையும்
அம்மேகக் குடிலில் அமர்ந்து
வடிவமைத்திருக்கிறேன்
அங்கே 
நான் இறையாகக்
கீழ்மைகொல் பதியாகத்
தேவதைகளை நிராகரிக்கும் திமிரனாக
ஒற்றை உலகரசின்
அதிபதியாய் வீற்றிருக்கிறேன்

விழிப்பில்
அகப்படும் உருவை
எடைப் போடவரும் ஏமான்களே
ஒவ்வொரு இமையசைவிற்கும்
புதுவுலகைப் படைப்பவனின்
கனாவை நியாந்தீர்க்குமளவு
உங்களுக்குக்கண்கள் உண்டா என்ன!
வாதப் பிரதிவாதங்களில்
சிறக்கவில்லை
மீட்பர் வேடம் 
தரிக்கவில்லை

புத்தம் புரிதலுக்கான சாளரமென
அண்டை கரை தேடி நீந்தவில்லை
தெளித்துவிடப்படும் நீரிலே
நனையத் தெரிந்திருந்தது

ஏரணக் கேள்விகளை
ஒதுக்கிவிட்டிருந்த
சரணாகதியில்தான்
எவ்வளவு சுகம் மிச்சமிருந்தது

தாள் பணிந்த
திரை அழிக்கப்பட்டதும்
வனாந்திர வாசியாவேனென
இம்மிகூட 
நினைக்கவில்லை

இருந்ததோ இல்லையோ
முள் குடையும்
சிலாம்பைத் தொலைத்தவன்,
எப்படி அழாதிருப்பது.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் வெளியீடு
ஏர்வாடி, சேலம்
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer