தேவேந்திர பூபதி கவிதைகள்


பகிரு

நிலைத்திருக்கும்

Devendra Boopathi 1
நிழல் ஊசலாடுவதும்
மரம் கிளைவிரித்து இறங்குவதுமாய்
ஏறி இறங்குவதும்
நீரின் பிழையல்ல
கண்ணின் மாயம்
இறங்கி உடல் மறைக்கும் வரை
தெரிவதுமில்லை அதன் உயரம்
சமநிலை என்பது
மேல்காண்பதெனில்
வேரின் நீட்சியை எதில் கழிப்பது
ஒவ்வொரு முறையும் ஒரு தவறை
நீயோ அவரோ காண்கையில்
தவறின் மீது உனக்கு அக்கறை ஏதுமில்லையோ
கொதிக்கும் மனதை ஆசுவாசப்படுத்த
இளநீர் இளநீர் எனும் குரல்
எங்கோ ஒலித்துக்கொண்டே செல்கிறது.


ஒலித்துக்கொண்டிருக்கும் சப்தத்தை
தாண்டிய மௌனம் உரைப்பதென்ன
மகிழம்பூக்கள் வசிக்கும் தெருவில்
ஒரு நாடோடி முகவரி தேடி அலைகிறான்
வீசும் நறுமணம் நிர்க்கதியானவற்றை
கேள்விக்குள்ளாக்குகிறது
ஒவ்வொரு விநாடியும் முடிவற்றதன் நீட்சி
பார்த்த நொடியில் நீர் சுரக்கிறது
உப்புக்கரிக்கும் உன் நினைவு
வடுக்கள் ஏற்படுத்துவதை
எந்தத் துணிகொண்டு துடைப்பது
எந்த நீரைக் கொண்டு கரைப்பது
தூரமென்பது
திரும்பிப் பார்ப்பதற்கும்
விடைபெறுவதற்கும்
நாமே வகுத்த நிமித்தம்.

நினைவுகளை...

Devendra Boopathi 2
நினைவுகளை அழிப்பதென்பது
பிறப்பின் மறுஅவதரிப்பு
ஒருநாளின் பகலை
இரவு விழுங்கி மீண்டும்
பிரசவிக்கிறது புதுப்பகலை
மறக்கடிக்க மிச்சமிருப்பது
ஒரு நினைவு.


கொதிக்கும் நீரில்
முகம் பார்க்க முடியுமா
அடிக்கும் காற்றில் அசையாக்கொடியை
எப்படிக் காண்பது
விளையும் பயனை உணரா மனங்கள்
வினையும் முடிவும் அதனதன் வழியே
நீரில் மிதக்கும் தக்கைக்கு
வயதோ ஆயிரம்
மீனெனப்படுவது நீரின் வாழ்க்கை.

வெற்றி

Devendra Boopathi 3
மிகத்துல்லியமானது
ஒவ்வொரு விநாடியும்
மனதின் நிழலில் அசைந்தாடும்
உருக்கள் உரைப்பது என்ன
மத்திம காலத்தின் ஞானம்தான்
சங்கீதம்
அது ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது
ஓங்கி ஒலிக்கையில்
நிச்சயமாய் எழுந்து நிற்கவேண்டும்
ஒட்டு மொத்தமானதாய்
அனைவருக்குமானதாய்
ஏதேனுமொன்று இருக்கத்தான் வேண்டும்
இடமும் வலமும் மாறிப்போகையில்
உன் இடதும் என் வலதும்
முழுமையடைய வேறொன்றைத்
தேடுவதென்பது எதன் பொருட்டு
தேடிக் கொண்டே முடிவடைகிறது
கண்டடைந்ததாய்
நாம் கொண்டாடுவது
யாரோ ஒருவருடைய வலப்பாகத்தை
விநாடியென்பது காலம் சிதறிய
ஒரு பருக்கை.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
manalveedu@gmail.com
Copyright © 2023 Designed By Digital Voicer