அமரர் அருண்மொழியுடன் எனது தொடர்பு என்பது 1977லிருந்து 42 வருடங்களாக நீடித்த ஒரு நட்பு. படங்களைப் பார்த்து ரசித்து விவாதிப்பதையே மையமாகக் கொண்ட உறவு. அவர் சிறிது காலம் தொலைக்காட்சியில் வேலை செய்த கட்டத்தில் பூனே திரைப்பள்ளிக்கு ஆறுமாத பயற்சிக்காக வந்திருந்தார். அது சதீஷ்பகதூர் போன்ற அருமையான சினிமா ஆசிரியர்கள் இருந்த காலகட்டம். அன்று நாங்கள் முதன்முதலில் சந்தித்தது கேரல் கசீனா என்கிற ஒரு செக்கொஸ்லாவிகிய இயக்குனரின் படம் பார்த்த பிறகு தான். அப்படத்தின் பெயர் ஆங்கில மொழி பெயர்ப்பில் எ ஃபன்னி ஓல்ட் மேன்/ A Funny Old Man ( Smesny Pan, dir. Karel Kachyna, 1969). ஏதோ ஒரு வகையிலே இன்று அவரது மாணவர்கள் முகநூலில் பதிவிடும் அவரது போட்டோக்களைப் பார்க்கையில் அவரும் ஒரு வேடிக்கையான வயோதிகராக நடித்திருப்பதில் மகிழ்வுற்றிருப்பதாகத் தெரிகிறது. நடிப்பிற்கான உந்துதல் எங்கேயிருந்து அவருக்கு வந்திருக்கும் என்றெண்ணிப் பார்க்கிறேன்.
அதற்கு நாம் முப்பது வருடத்திற்கு முன் காணி நிலம், ஏர்முனை போன்ற படங்களை அவர் இயக்கிய 1980களின் இறுதிக்கும் 1990களின் தொடக்க வருடங்களுக்கும் போக வேண்டும். அவரது படங்களில் கலைராணி, நாசர், தலைவாசல் விஜய், பாலாசிங் போன்றவர்களை அறிமுகப்படுத்தினார். நவீன நாடகத்தில் அவரது ஈர்ப்பென்பது நல்ல சினிமாவுடன் தொடர்புகொண்டது. அவர் பூனே திரைப்பள்ளியில் நான் மாணவனாக இருக்கையில் ‘மூன்றாவது தியேட்டரி’ன் சிற்பியான பாதல் சர்க் காரின் ஒர்க் ஷாப்பில் கலந்துகொண்டார். எழுபது களின் இறுதியில் ஷ்யாம் பெனெகல் கோவிந்த் நிஹாலானி போன்றோரை, பிலிம் பெஸ்டிவல்களுக்கு இடைவிடாமல் செல்லக்கூடிய நாங்கள் பேட்டி கண்டிருக்கிறோம். அவர்களது மாற்றுவழி கலை சினிமா சார்ந்த பயணத்தில் பூனே திரைப்பள்ளி மற்றும் தேசிய நாடகப்பள்ளியைச் சார்ந்த நசிருத்தின் ஷா மற்றும் ஓம் புரி போன்றவர்கள் ஆற்றிய பங்கு அதிமுக்கியமானது. நசீரும் ஓம் புரியும் தேசிய நாடகப் பள்ளியில் அல் காஷி அவர்களின் மாணவர்களாகத் தேர்ச்சிபெற்றபின் பூனே திரைப்பள்ளியிலும் நடிப்புக் கலையைப் பயின்றவர்கள். ஷபானா ஆஜ்மி, சாது மெஹெர் போன்றவர்கள் பூனே திரைக்கல்லூரி யைச் சார்ந்தவர்கள். ஸ்மிதா பாடீல் பூனே திரைப்பள்ளி மாணவர்கள் படங்களில் நடித்ததின் மூலமாகப் பெனெகலுக்குப் பரிச்சயமானவர். போலவே மற்ற சீரிய நாடகக் குழுவிலிருந்து வந்தவர்கள்தான் அம்ரிஷ் புரி போன்ற தேர்ந்த கலைஞர்கள். கிரிஷ் கர்னாட் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவிட்டு பூனே திரைப்பள்ளியின் இயக்குனராகப் பெனெ கலுக்குப் பரிச்சயமாணவர். பெனெகல் சத்யஜித் ரேயைப் போன்று விளம்பரத்துறையில் இருந்து வந்திருந்தாலும் விளம்பரப்படங்கள் எடுத்த அனுபவம் அவருக்கு உண்டு, ரே அவர்கள் ஒரு வரை கலைஞனாக எழுத்தாளனாகத்தான் அந்தத் துறையிலிருந்தார். பெனெகலின் அனுபவம் அவரே நடிகர்களை முன்னிருத்தி தன் படங்களுக்கென ஒரு நுகர்வோர் சந்தையை ஏற்படுத்திக்கொள்ள ஏதுவாக யிருந்தது. வனராஜ் பாட்டியா போன்ற அவரது இசையமைப்பாளர்களும் விளம்பரத்துறையில் இருந்தே அவருடன் பயணித்தவர்களே.
ஷ்யாம் பெனெகலின் ஒளிப்பதிவாளர், பெங்களூர் பாலிடெக்னிகில் அந்தக்காலத்தில் ஒளிப்பதிவில் தேர்ச்சி பெற்று குரு தத்தின் ஒளிப்பதிவாளர் வி.கே. மூர்த்தியவர்களிடம் பணியாற்றிய கோவிந்த் நிஹலானி அருண்மொழியின் மனதுக்குப் பெனெகலை விட நெருக்கமானார். அவரது சீரிய அரசியல் நோக்கும் தீவிர கருத்தியல் சார்பும் அருண்மொழிக்கு அணுக்கமாக இருந்தது. ஆக்ரோஷ் மற்றும் அர்த் சத்யா போன்ற படங்களைச் சேர்ந்து பார்த்திருக்கிறோம். அனந்து அவர்களைப்போல அந்தக் காலத்தில் டயரி குறிப்பு எழுதும் பழக்கம் அருண்மொழியவர்களுக்கு இருந்தது. தொண்ணூறுகளின் மத்தியில் என்னிடம் வந்து பழைய டைரிகளைப் படித்துக் காண்பித் திருக்கிறார். அதில் அவர் பெனெகல்-நிஹலானி போன்று நாடகத்தில் பயின்ற நல்ல நடிகர்களின் கூட்டில் ஒரு மாற்று சினிமா இயக்கத்தைப் பற்றிக் கனவு கண்டது புலனாகியது. இந்த அருண்மொழியின் கடந்த கால வாழ்க்கை எதுக்கு முக்கியம் வாய்த்ததாகிறதென்றால் அவருடைய சுய வாழ்வனு பவங்களை மையமாகக்கொண்டு தனது மாணவரை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை மூன்று மாதங்களாகத் திட்டமிட்டு எடுத்துக்கொண்டிருந்தார். கடைசிக் காலகட்டங்களில் அவரது மாணவர் சாமிநாதனின் வீட்டிலும் செம்மலர் அன்னம் மற்றும் அன்னம் அரசுவின் வீட்டிலும் அதிகம் தங்கி யிருந்தார். சாமிநாதன் வீட்டில்தான் நான் சென்ற முறை ஆகஸ்ட் மாதத்தில் சென்னையிலிருந்தபோது செம்மலரின் பிறந்த நாளை கொண்டாடினோம். சாமிநாதன் வீட்டிலிருந்துதான் கடைசியாக அந்த ஜப்பானிய படத்தைப் பார்க்கச் சென்றிருக்கிறார்.
சாமிநாதன் அவரைக் கடைசியாக அந்தத் தியேட்டர் வளாகத்திலேயே உள்ள ஹாஸ்பிடலில் பார்க்கும்போது சாயந்து மிகக் களைத்தபடி அமர்ந்திருக்கிறார். இசிஜியில் நார்மலாக இருக்கிறது; வெறும் கேஸாக இருக்கக் கூடும் என்று சொல்லியிருக்கிறார்கள். டாக்டர், “எதுக்கும் ஒரு பெரிய ஹாஸ்பிடலுக்கு அழைத்து”ப் போகச் சொல்லியிருக்கிறார். சாமிநாதன்
லைப் சப்போர்ட்டுடன் கூடிய ஆம்புலன்சுக்காகக் காத்திருக்கையில் அது மிக அருகாமையில் வந்த நிலையில் அருண்மொழி விடை பெற்றுக்கொண்டுள்ளார்.
அருண்மொழி சாமிநாதன் வீட்டிலிருந்து அந்த ஜப்பானிய படத்தைப் பார்க்கப் போவதற்கு முன் சாமிநாதனும் அவரும் அதற்கு முந்தைய நாள் அருண்மொழி தனது படத்திற்காக எடுத்த பூடேஜைப் டெஸ்க்டாப்பில் பார்த்திருக்கிறார்கள். அது இயக்குனர் ஹரிஹரனை அருண்மொழியின் கதாநாயகனான துணை இயக்குனர் வேலைக்காகக் காணச்செல்வதைப் பற்றிய காட்சி. அதற்கு முன் இயக்குனர் மிஸ்கினுடனும் அத்தகைய ஒரு காட்சியைத் தனது படத்திற்காக எடுத்திருக்கிறார். அந்தப் பூடேஜைப் பற்றியும் அன்றுஎன்னுடன் பேசினார். வாழ்வனுபத்திலிருந்து விளிம்புநிலையிலிருக்கும் கலைஞர்களையும் பெண்களையும் விவசாயிகளையும் சிமெண்ட் பேக்டரி தொழிலாளர்களைப் பற்றியும் தொடர்ந்து நான்கு பதின் வருடங்களாகப் படமெடுத்த அருண் மொழி சிறிது அயர்ச்சியினால் இளைப்பாறப் போயிருக்கிறார். நாளைக்கே அவரது அழைப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. “என்ன செஞ்சுக்கிட்டிருக்கீங்க?” “இல்ல. க்ளாசுக்கு ப்ரிபேர் பண்ணிட்டு இருக்கேன்.” “என்ன கிளாஸ்?” “கேங்க்ஸ்டர் சினிமா பற்றியது.” “நாம பூனேயில் மெல்வில் படங்களைப் பார்த்தது ஞாபகமிருக்கா?” “ஆமா.” “அதைக் காமிச்சாலே போதுமே... ப்ரிபேரஷன் நோட்ஸ்ல்லாம் எதுக்கு... 1977லிருந்தே குறிப்பெடுத்துட்டிருக்கீங்க...” சிறிது மௌனத்துக்குப்பின் “இல்ல... இப்ப இந்தச் சனிக்கிழமை ஷூட் பண்ற சீக்குவென்ஸ் அசோகமித்திரன் சாருக்கு ஹோமாஜா இருக்கணும். நான் அனுப்பின அவரோட கரைந்த நிழல்கள் கதையிலருந்து உள்ள சீனைப் படிச்சுட்டேங்களா...” “ஆமா.” இப்படிச் சினிமா இயக்குநர்கள் மட்டுமல்ல இலக்கியகர்த்தாக்களும் அவர் கூடவே வாழ்ந்துகொண்டிருந்தார்கள். வெவ்வேறு காலகட்டத்தில் அவர் மணிக்கணக்காக ஆவணப்படுத்திக்கொண்டிருந்த சில கலைஞர்களை நானும் சந்தித்திருக்கிறேன்.
உதாரணத்திற்கு, நகுலனை அவர் பலதடவைகள் சந்திக்க முயற்சி செய்து பின்னர் ஷூட் செய்திருக்கிறார். நகுலனின் கவிதைகளைப் படித்துவிட்டு ஆர்வமாய் எனது ஊரான வழுதூருக்கு வந்துவிட்டார், நாகர் கோயில் செல்லும் வழியில். பின்னர் நாங்கள் கிளம்பி ரயிலில் போகும்பொழுதுதான் கேள்விகளைப் பற்றிய சிந்தனை. பின்னர் நாங்கள் திருவனந்தபுரம் சென்ற டைந்தபோது புயல் வரப்போவதாக ஒரு அறிவிப்பு இருந்தது. ஆயினும் அவருடன் செருப்பைக் கையில் எடுத்துக்கொண்டு கடற்கரையில் நெடுநேரம்வரை நடந்து சென்றதில் நேரம்போனது தெரியவில்லை. பாஸ்பிண்டரின் ஓர்பாலுறவை பற்றியும் நாங்கள் மாணவர்களாக இருந்த நேரத்தில் பார்த்த அவரது படங்களைப் பற்றியும் அந்த அந்திப்பொழுதில் பேசிக்கொண்டிருந்தோம்.
குறிப்பாகப் பாஸ்பிண்டரின் இன் அ யியர் ஆப் 13 மூன்ஸ் (In a Year of 13 Moons, 1978) என்ற படத்தைப் பற்றி. தஞ்சாவூரில் குடைவாசலிலிருந்து வந்த அருண்மொழிக்கு அணுக்க மான கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானுடத்திலிருந்து குறும்படமாக அவர் யோசித்த ஒரு திரைக்கதையையும் அவர் விவரித்தார். அது அருமையாக இருந்தது. சில படங்களை மனதளவில் கண்டுகளித்து விடுகிறோம். திரையில் கண்ட பல படங்கள் சுவடுகள் தெரியாமல் அழிந்தபோதும் அவையழியாமல் மனதில் நினைக்கும்தோறும் நிறைவை அளிப்பதாக உள்ளன.
அருண்மொழி அத்தகைய காட்சிகளை எனக்கும் மற்ற நண்பர்களுக்கும் அள்ளி வழங்கியிருக்கிறார். நடந்துகொண்டே, டீக்குடித்துக்கொண்டே.
அடுத்த நாள் நினைத்திருந்தபடி நான் அருண்மொழியுடன் நகுலன் அவர்களின் வீட்டிற்குச் செல்ல முடியவில்லை. எனது தங்கம் படத்தின் இணை இயக்குனரான இலாரியாவுடன் சுந்தர ராமசாமியவர்களை அவரது நாவலான புளியமரத்தின் கதையின் (இத்தாலிய) பட உரிமைக்காகச் சென்று சந்திக்க வேண்டியதிருந்தது. அவர் அமரர் பாலு மகேந்திரா போன்ற பலர் சில வருடங்களுக்கு முன்னர் ஆர்வம் தெரிவித்திருந்தனர் என்றும் காப்புரிமை பற்றிக் கறாராக ஒப்பந்தமெதுவும் இல்லை என்றும் சொன்னார். தமிழ் நாட்டிலுள்ள இந்த மாதிரியான காப்புரிமை பற்றிய இறுக்கமற்ற சூழல் மேற்கேயில்லை என்று இலாரியாவின் நண்பர் ஓவியர் சல்வதோரே சிலாகித்தார். இலாரியா அதற்குப்படங்கள் எடுப்பதற்குத் தயாரிப்பாளர்கள் ஒப்பந்தமில்லாமல் ஒத்துக்கமாட்டார்கள் மற்றும் காப்புரிமை சார்ந்த குழப்பம் என்பது எப்போதும் துணை இயக்குனர்கள் போன்ற விளிம்புநிலை கலைஞர்களையே அதிகம் பாதிக்கும் என்றும் வாதாடினார். அதற்குச் சல்வதோரே இங்குக் கலைஞர்களைப்போலச் சிந்திக்கும் மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்றார். இத்தகைய கலைஞர்கள் மிகவும் வல்னெரபில் ஆக இருக்கக் கூடியவர்கள். எப்போதும் பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்கள் என்று எதிர்வினையாற்றினார் இலாரியா.
தங்கத்துக்குப் பிறகு அருண்மொழியுடன் இணைந்து செகண்ட் பெர்த் என்ற படத்தை உருவாக் கினார் இலாரியா. அதில் அவர்கள் கூவாகத்தில் முக்கியக் காட்சிகளை எடுத்தார்கள். திருநங்கைகளின் வாழ்வை மையமாக வைத்து அருண்மொழி எழுதிய கதையாடல் அது. இரண்டாம் பிறவியில் அருண் மொழி இயக்குனராக ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துமிருந்தார். கடைசியாக அவர் எடுத்துக் கொண் டிருந்த படத்திலும் ஒரு (துணை) இயக்குனர்தான் மையமாக இருக்கிறார். ஏதோ ஒரு வகையில் அரசியல் சார்ந்து படங்களை ரசிக்கும் அருண்மொழியின் மனதில் த்ருபோவின் டே பார் நைட் மற்றும் பெல்லினியின் 8 அண்ட் லு போன்ற அவர் இளவயதில் பார்த்த படங்களின் தாக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது என்று சொல்லலாம். இரண்டாம் பிறவிக்குப் பிறகுஅவர் அன்றிலிருந்து இன்றுவரை இருபது வருடங்களுக்கும் மேலாக மாற்றுபாலினரின் வாழ்வை மையப்படுத்தி அவர்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பவராகவே இருந்துவந்துள்ளார். அவருக்கு எப்போதும் இருக்கும் அக்கறை (கலைஞர்கள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ளோரின்) வாழ்வை ஆவணப்படுத்துதலைப் பற்றியதுதான். செகண்ட் பெர்த்தின் சூட்டிங்கின் போதும் கதையாடலுக்கு வெளியேயிருந்த திருநங்கைகளின் வாழ்வை தனது கைவசமிருந்த ஹை-8 கேமராவில் டேப்பைக்கொண்டு பதிவு செய்திருந்தார். அதில் எங்களூர் பக்கத்திலிருந்து கூவாகத்திற்கு வந்திருந்த எனக்குப் பரிச்சயமான திருநங்கை தாடி வளர்த்து நோய்வாய்பட்டிருப்பதைக் கண்டேன்.
நானும் அருண்மொழியும் பின்னர் எடிட்டிங் ரூமில் எங்கள் மாணவ பருவத்திற்குப் பிறகு 90களில் இந்திய திரைப்பட விழாவில் கே அண்ட் லெஸ்பியன் படங்களின் சிறப்புப் பகுதியில் பார்த்த பல படங்களைப் பற்றிப் பேசினோம். அதில் மேற்கத்திய உலகில் எயிட்ஸினால் மறைந்த பல ஆளுமைகளைப் பற்றிய படங்கள் இருந்தன. அமரர் மார்லன் ரிக்ஸின் டங்ஸ் அன்டையிட் உட்பட (Tongues Untied, dir. Marlon Riggs, 1989) ஓரினச்சேர்க்கையாளர்களுடன் எயிட்ஸை தவறுதலாகத் தொடர்புறுத்தி அவர்களை வன்முறைக்கும் ஒதுக்குதலுக்கும் நிராகரிப்புக்கும் உள்ளாக்கியதைப் பற்றியும் முக்கியமான படங்கள் வந்திருந்தன. ஆனால் நமது நாட்டில் அவர்களது வாழ்க்கை இருட்டடிப்புக்கு உள்ளானதால் அவர் களுடைய அந்த இருண்ட காலகட்டமும் உளவூறும் பதிவாகவில்லை. அருண்மொழியவர்களின் வீடியோ வில் தான் தனது நெருங்கிய நண்பர்களை 1980/90 களில் இழந்த 60 வயதை ஒட்டிய திருநங்கையவர்களின் நேர்காணலைக் கண்டேன். அது எனக்கு எங்களூரை ஞாபகப்படுத்தியது மட்டுமல்லாமல் மிஸ்கின் அவரது கேமராவில் எடுத்திருந்த தாடி வைத்து மாலை அணிந்திருந்த ஒரு திருநங்கையின் உருவத்தையும் ஒத்திருந்ததாகப்பட்டது. அருண் மொழி திருநங்கைளையும் மாற்றுபாலினரையும் ஆவணப்படுத்தியிருந்த அனுபவமும் கைகொடுத்தது. அவ்வாறுதான் எனது படமான கட்டுமரத்தில் ஒரு மைய கதாபாத்திரமான அலங்காரம் உருவெடுத்தார். இன்று எண்ணிப் பார்க்கையில் பல வருடங்களுக்கு முன் கவிஞர் நகுலனைக் காரணமாகக் கொண்டு நானும் அருண்மொழியும் திருவனந்தபுரத்தில் கடற்கரையில் கால நேரம் மறந்து நடந்து திரிந்து அளவளாவிய அந்தத் தருணம் பின்னர் நடந்த பல விஷயங்களுக்கு காரணமாக இருந்தது தெரிகிறது. செருப்பைக் கையிலெடுத்துக் கொண்டு இருமை சூழ்ந்ததினால் அவசரமாக நானும் அருண்மொழியும் திருவனந்தபுரம் கடற்கரையிலிருந்து திரும்பினோம். அருண்மொழி அவர்கள் (அவரது நண்பர்களுக்குப் பரிச்சயமான) ட்ரேட் மார்க் ஸ்டைலில் தனது ஜீன்ஸை கால் முட்டிகளுக்கு மேலே மடக்கி வைத்து அவரது இரு செருப்புகளையும் ஒவ்வொரு பாக்கெட்டிலும் போட்டுக் கொண்டார். நாங்கள் தங்கியிருந்த லாட்ஜை அணுகி அருகேயிருந்த டீக்கடையில் அமரும்போதுதான் அருண்மொழியின் ஒரு செருப்பு காணாமல் போயிருந்தது தெரிந்தது. “நாளைக்கு நடக்கேல எடுத்துக்கலாம்” என்றார் அருண்மொழி பதட்டமேதும் இல்லாமல். நமது கண்முன்னே நடப்பதை ஆவணப் படுத்தலில் ஆர்வம் கொண்ட அருண்மொழி அதற்கடுத்தும் நேசித்தது நடப்பதைத்தான்.
அலைந்து திரிந்து தான் சந்தித்த பேர் தெரியாத மக்களிடம் எப்பவும் பிரியமாக உலகைப்பற்றியும் வாழ்வைப்பற்றியும் அது அவர்களை எதிர்கொள்ளும் விதத்தைப் பற்றியும் அன்புடன் விசாரித்த அருண்மொழியின் நலம் விசாரித்துத் தோள் கொடுத்தோரும் இருந்தனர். தனது படங்களான காணி நிலம் (1987) மற்றும் ஏர்முனை (1992) மூலம் பல திரைப்பட விழாக்களுக்கு அன்றே சென்று வந்தவர் அருண்மொழி. ஷிலா விட்டேக்கர் போன்ற சினிமாவைப் பற்றி நன்கு அறிந்த க்யுரேடர்கள் அன்றிருந்தனர். அவர் காணிநிலத்தை அவர் மனதிற்குப் பிடித்ததினால் ப்ரமோட் செய்தார். பல உலக திரைப்பட விழாக்களுக்கு அன்றே சென்று வந்தவர் அருண்மொழி. குறிப்பாக இன்று சர்வதேச திரைப்படவிழாக்களில் முதல் பத்துக்குள் கணிக்கப்படும் டாப் டியர் பிலிம் பெஸ்டிவல் என்று சொல்லப்படக்கூடிய சுவிட்சர் லாண்டில் நடைபெறும் லொகார்னோ சர்வதேச திரைப்படவிழாவில் அன்றே காணிநிலம் பங்கேற்று கொண்டாடப்பட்டிருக்கிறது. அருண்மொழி அங்குக் கௌரவப்பட்டிருக்கிறார். தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் நிகழ்வு அது. ஆயினும் எல்லா சுயாதீன இயக்குநர்களையும் போல தனது அடுத்தப் படமான ஏர்முனையை அவர் எடுக்க ஆறு வருடங்கள் ஆகியது. தளராமல் தனது ஆவணப்படங்களை இயக்கி வந்த அருண்மொழி ஏர்முனைக்காக அந்தக் காலத்திலேயே இன்று நாம் க்ரௌட் சௌர்சிங் என்று சொல்லக் கூடிய மக்களிடமிருந்து அதுவும் முக்கியமாகக் குறுவிவசாயிகளிடமிருந்து சிறு துளிகளாகப் பணத்தைச் சேகரித்து அவர்களுக்கான குரலாக ஏர்முனையை உருவாக்கினார்.
ஏர்முனை அன்றே இன்றைய விவசாயிகளின் நிலைமையை எதிர்ப்பார்த்துள்ளது. இன்றைய சுற்றுச்சூழல் சார்ந்த கரிசனத்துடன் உரங்களுக்கும் செயற்கை ரசாயனங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்துத் தீர்க்கதரிசியாக அன்றே தனது குரலை பதிவு செய்துள்ளார் அருண்மொழி. அத்தகைய ஒரு படத்திற்கு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அனுமதி இல்லை என்றவுடன் வருத்தமடைந்தார். நாங்கள் கல்கத்தாவில் நடந்த இண்டெர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் ஆப் இந்தியாவில் 1991ல் தனிப்பட்ட முறையில் ஏர்முனையைத் திரையிட்டோம். பல நண்பர்களையும் முக்கிய இயக்குனர்களையும் அழைத் திருந்தோம். எங்களுக்கு மகிழ்ச்சியான அதிர்ச்சி தந்த விஷயம் என்னவென்றால் நாங்கள் மிருனால்-தா என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கும் புகழ்பெற்ற வங்காள இயக்குனர் மிருனால் சென் அத்திரையிடலுக்கு வந்திருந்ததுதான். கல்கத்தாவில் ஆயிரம் முக்கியமான கலைஞர்கள் இருந்தாலும் சினிமாவைப் பொறுத்தவரை சத்யஜித் ரே, ரித்விக் கடக் மற்றும் மிருனால் சென் தலையானவர்கள். அதிலும் கவிஞர்களும் பிலிம்மேக்கர்களும் சூழ்ந்து உள்ள கல்கத்தாவில் திரைப்பட விழா என்றால் மிருணால் சென்னுக்கு உள்ள காலஅவகாச இக்கட்டை எண்ணிப்பாருங்கள். அதுவும் கடக் அவர்கள் அப்போது இல்லை. ரேயும் உடல் நலம் குன்றியிருந்த காலமது. மிருணால் சென் திரையிடலுக்கு வந்தது மட்டுமல்லாமல் ஆயிரம் பேர் நிறைந்திருந்த ஒரு பெரிய ஹாலில் ஏர்முனைக்காகக் குரல் கொடுக்கவும் செய்தார்.
சென்: “தமிழ்நாட்டிலிருந்து எந்தப் படமும் தகுதி பெறவில்லை என்றறிகிறேன். ஏர்முனை போன்ற படத்தை நிராகரித்ததற்குக் காரணம் சொல்ல முடியுமா?... என்எப்டிசி போன்ற நிறுவனங்கள் ஏர்முனை போன்ற படங்களை எடுப்பதில் உதவி புரியவேண்டும்... இல்லையெனில் கஷ்டப்பட்டு எடுத்த படத்தையாவது மக்களிடம் எடுத்துச் செல்வதில் உறுதுணையாக இருக்க வேண்டும்.
அம்மா அறியான் என்ற ஒரு அருமையான மலையாள திரைப்படத்தையும் இப்படித்தான் மக்களிடம் சென்றடைவதிலிருந்து தடுத்தீர்கள். திரைப்பட விழா எனும் இவ்வெளி யாருக்கானது என்று கேக்கிறேன்... மக்களுக்கானதும் மக்களுக்கான படங்களுக்கும் அது இல்லையெனில்...”
சென் அவர்கள் அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு ஏர்முனை போன்ற சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சரியாகச் சப்டைட்டில் செய்யப்படாத ஒரு இளம் இயக்குநரின் தமிழ் படத்திற்குக் குரல் கொடுத்தது எங்களுக்கு ஒரே நேரத்தில் அதிர்வையும் மகிழ்வையும் ஏற்படுத்தியது. அருண்மொழியும் நானும் அவரிடம் நன்றி சொல்ல வார்தைகளுக்குத் திக்குமுக்காடினோம். மிருனால் சென் போன்றவர்களுக்கு அவர்களது கலையும் வாழ்வும் அரசியலும் செயற்பாடும் ஒன்றேதான் என்பதை உணர்ந்து தலை வணங்கினோம். கலை சினிமா இயக்கமாகப் பரிணாமம் பெறாவிட்டால் நாம் எத்தகைய குரல்களை இழக்கிறோம் என்று இன்றளவும் எண்ணிப் பார்க்கிறேன். வணிகப்படம் எடுப்பவர்கள் அவார்டுக்காகப் படம் எடுப்பதிலிருந்து சென் போன்ற இயக்குநர்களின் வேள்வியை மையமாகக் கொண்ட சினிபயணம் வித்தியாசமானது. நிகரில்லாதது.
பின்னர் சென் அவர்கள் உருவாக்கிய பெருஞ்சலனத்திற்குத் திரைப்பட விழா இயக்குனர் எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயத்துக்குள்ளானார். அப்பெரிய ஹாலில் மௌனம் நிலவியது.
இயக்குனர்: “தங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்கிறேன். ஆயினும் நாங்கள் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுத்துத்தான் அனைத்து படங்களையும் தேர்வு செய்துள்ளோம்.”
சென்: “அப்போ அரசியலுக்கு இடமில்லாத சர்வ தேசிய திரைவிழாவா இது?”
இயக்குனர்: “அப்படியில்லை. உருவமும் முக்கியமானது. உள்ளடக்கத்திற்கு ஏற்ற உருவத்தின் தேடலுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம்.”
சென்: “ஒரு நல்ல படத்தில் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் பிரித்துப் பார்க்க முடியுமா?...” அரசியல் இல்லாத அழகியலினால் வறுமையில் வாடும் நமது நாட்டிற்கும் மக்களுக்கும் என்ன பயன்? நீங்கள் மக்கள் வரிப்பணத்தில் பலகோடிகள் இறைத்து இவ்விழாவை நடத்துகிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்”
இயக்குனர்: ம்ம்ம் ...
சென்: “தர்ட் சினிமா என்று ஒரு அழகியல் இருக்கிறது. அதைப்பற்றி தெரியுமா? கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா?”
இயக்குனர் மௌனம் சாதித்தார்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். மிருனால் சென் போன்ற அரசியலில் ஈடுபாடுகொண்ட ஆயினும் மனிதத்தில் தோய்ந்த கலைஞர்கள் சமன் இழந்தால் சபை கொள்ளாது என்றறிந்தேன் அன்று. அருண்மொழியின் ஆன்ம விசாரங்களும் சமத்துவமும் நீதியும் சுயமரியாதையும் சார்ந்ததுதான். அதில் உள்ளடக்கத்தின் வீரியமே உருவத்தைத் தீர்மானிக்கிறது. உள்ளடக்கதில் சீர்மையில்லாத பொழுது ஒரு செயற்கையான உருவ மெருகேற்றலை அவரது மனம் நாடவில்லை என்பது தான் உண்மை. அவரது காணிநிலம், ஏர்முனை ஆகிய இரண்டு படங்களிலும் கூட நீடித்த ஒப்பாரி போன்ற கதையாடலை சீர்குலைக்கும் காட்சிகள் விமர்சனத்திற்கு உண்டானதுண்டு. அதுவே அப்படங்களின் ஆற்றல் மற்றும் தனித்துவம் என்று நான் அன்று எதிர்வினையாற்றியிருக்கிறேன். அலைந்து திரிந்து மக்கள் கலைஞனாக மக்களிடம் அக்கறை கொண்டு குசலம் விசாரித்து ஊடல் கொண்டு அவர்கள் வாழ்வை அதன் சமனின்மையை உள்ளபடியே பதிவு செய்து அவர்கள் மனதில் பதிந்த கலைஞனின் பயணம் முற்றுபெறாதபோது படத்தை மட்டும் அவர் சீராகக் கொண்டு சென்று கோர்வையாக முடித்திருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது அவரது தனித்துவத்தைப் புரிந்துகொள்ளாமல் அவரது பயணத்தைக் கண்டு பீதியடைவதையே காட்டுகிறது. சதா ஓடிக்கொண்டிருக்கும் மானுடம் எனுமாற்றில் அதன் ஏற்றத்தாழ்வுகளில் லயித்துச் சினிமா மூலம் அதன் சமமின்மையை ஆன்ம விசாரம் செய்துகொண்டிருந்த கலைஞனுக்கு அதன் பார்க்கும் பொழுதே மாறிக்கொண்டிருக்கும் தன்மையை ஆவணப்படுத்திக்கொண்டிருப்பதே அவனது தலையாயக் கடமையாகப்படுகிறது. அவனது வார்த்தைகளில் வடிக்க முடியாத சாத்தியங்களில் நம்பிக்கையற்று இருண்மையில் உழலும் மானுடத்தைப்பற்றிய கேள்விகளுக்கு அவனது அச்செயலிலேயே பதிலிருப் பதாகப்படுகிறது. மற்றபடி அத்தகைய ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாதவர்களுக்கே இருக்கிறது எல்லா நேரங்களிலும் என்னைப் போன்ற எல்லோரும் செய்வது; படத்தைச் சீர்படுத்துதலும் திரைப்பட விழாக்களுக்கு எடுத்து செல்லுதலும் அங்கு நடக்கும் நாம் எதிர்ப்பார்க்கக் கூடிய கேள்வி-பதிலாடல்களும். அதைத் தனது 29 வயதிலேயே காணிநிலத்துடன் உலகம் சுற்றிய பொழுது முழுவதுமாகப் புரிந்து கொண்ட அபூர்வ கலைஞர்தான் என்றும் எனது மனதிற்கினிய அருண்மொழி!