அநுபந்தம், ஆபரணம் மற்றும் விதி 

தூயன்

பகிரு

அநுபந்து விதியின் கையில் விழுவதற்கு முன்பே இறந்துவிட்டார். லதா சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை. விதி அவரைக் கொன்றதாகத்தான் ஊரில் நாங்கள் அனைவரும் நம்பினோம். விதி அநுபந்தைச் சந்திப்பதற்கும் அநுபந்து இறப்பதற்கும் இடைப்பட்ட கால இடைவெளி ஒரு நாள் பொழுது. அந்த ஒரு நாள் பொழுது முழுக்க விதி அவருடன் இருந்துள்ளது. விதி அவர் இறப்பதற்காகக் காத்திருந்ததா? அநுபந்து இறந்துவிடுவாரென்று எனக்கும் தெரியாது. ஆனால், அன்னைக்கு ஏதோ நடக்கப் போகிறதாக எனக்கு உறுத்தியது மட்டும் நிஜம் என்று சொன்னதுடன் லதா நடுங்குகிறாள்.

அநுபந்து இறப்பதற்குச் சில மணி நேரத்திற்கு முன்புதான் லதா காலையில் எழுந்து எப்போதும் போல அவருக்கு, பல் துலக்குவதற்கும் குளிப்பதற்கும் சேர்த்து வெந்நீர் காய வைத்துவிட்டு சாப்பிட இரண்டு தோசையை வார்த்து முடித்து, அவளுக்குத் தேநீர் போட்டுக் குடித்துக்கொண்டிருந்தாள். லதாவுக்கு அத்தனையும் முடிக்க கால்மணி நேரத்திற்கும் அதிகம் போகாது. வழக்கமானதுதான். ஆனால் அன்றைக்கு ஏனோ ஒவ்வொன்றையும் செய்யத் தவறுவது மாதிரி கைகளின் வேகத்தை மனவோட்டம் தள்ளிப்போட்டுக்கொண்டே போனது.

“சாமி அறை” லதா என்னிடம் காட்டுகிறாள். நான் உள்ளே எட்டிப் பார்க்கிறேன். கனமான தேக்குக் கதவால் சார்த்தப்பட்ட தாழ்வான நிலைவாசல். “அதுதான் அவர் தூங்கியெழுந்ததும் அலங்காரம் பண்ணிக்கிற அறை. எவ்வளவு நேரமானாலும் அலங்காரம் முடியறவரைக்கும் நான் இப்படி உட்கார்ந்திருப்பேன்.” லதா எனக்கு நேராக இருக்கிற சுவரைக் காட்டுகிறாள்.

அங்கு முன்பு சாய்விருக்கை இருந்திருக்கவேண்டும் இப்போது இல்லை. நான் கற்பனை செய்துகொள்கிறேன். லதா எழ ஒரு மணி நேரம் முன்னதாக தூக்கம் கலைந்த அநுபந்து தயாராக எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகும். அதனால் எந்நேரமும் விட்டுப்போன ஏதாவது ஒன்றைக் கேட்டு அநுபந்திடமிருந்து அழைப்பு வரும் என்று லதா அவரது அறைக்கு வெளியே கிடக்கும் சாய்விருக்கையில் அமர்ந்து கொள்வது வழக்கம். இருபது வருடத்தில் ஒருமுறைகூட அப்படி எதற்குமே அநுபந்து அவளை அழைத்தது இல்லை.

ஒப்பனையை நிறுத்தக்கூடிய எந்தவொரு குறுக்கீடும் அவசரமும் அதுவரை வந்தது கிடையாது. நாற்பது வருடங்களாக அதிகாலைப் பொழுதைத்தனது ஒப்பனை முடியும்வரை காத்திருக்கும் பணியாளாக வெளியே வைத்திருக்கிறார்.லதாவுக்கு அந்தச் சில மணி நேரத்தில் செய்வதற்கு ஒன்றும் இருக்காது. மௌனமாக ஏதாவது செய்ய வேண்டும். திருமணமான புதிதில் அரைத்தூக்கத்தில் அமர்ந்திருப்பாள். கூந்தலைச் சிக்கெடுப்பது, துணி மடிப்பது, இடத்தைவிட்டு நகராத வேலைகளுக்கு அதுவொன்றுதான் வழி. சமீபகாலமாக பழைய புத்தகங்கள் சிலதை வாசித்து நேரத்தைப் போக்குகிறாள். அதிலும் ஆர்வமில்லை வெறும் திருப்புதல் மட்டும். சில சமயம் முதல்நாள் எடுத்ததேகூட வரும். சில பக்கங்கள் போன பிறகுதான் படித்த நினைவு எழும். சளைக்காமல் திரும்பவும் படிப்பாள். அநுபந்து வெளியே வந்ததற்குப் பின் செய்ய அவளுக்கு நிறைய வேலை காத்திருக்கிறது. ஆனால் சில நாட்களாக அவளால் அப்படி எதையும் செய்ய முடியவில்லை. ஏதோ நடக்கப்போவதுமாதிரி பதற்றம். சம்பந்தமில்லாமல் யாரோ வந்து காத்திருப்பதுபோல அடிக்கடி வாசலைப் பார்க்கும் உணர்வு துரத்துகிறது. அவர்கள் இருவரைத் தவிர அதிகாலையில் யாரும் வீட்டிற்கு வரப் போவதில்லை.

அதோடு அநுபந்து ஒப்பனையை முடிக்காமல் யாரையும் பார்க்கமாட்டார். அன்றைக்கு இரண்டு பழைய புத்தகங்களைப் புரட்டி முடித்து, அலமாரியைத் தூசி தட்டி அடுக்கியும் வைத்துவிட்டாள் அநுபந்து இன்னும் வரவில்லை. வானம் துலக்கமாக இன்னும் நேரம் இருக்கிறது. சாமி அறையைத் தாண்டி வாசல் கதவு வரைக்கும் இரண்டு முறை நடக்கிறாள். உள்ளே அநுபந்து இருக்கிற சத்தமே இல்லை. திரும்பி புத்தக அலமாரி அருகே போவதற்குள் அநுபந்திடமிருந்து குரல் வந்தது. 

முதலில் அது ஏதோ விசித்திரமான சப்தம் என்று கவனிக்காதவள் பிறகு தன்னை யாரோ அழைக்கிறார்களோ என்று அடிக்கடி வெளியே பார்க்கிற பழக்கத்தால், முதலில் வாசலைத்தான் பார்த்தாள். பிறகுதான் அது சாமி அறையிலிருந்து வருவது தெரிகிறது. பெரிய ஏப்பம் மாதிரி.

அழைப்பு இல்லை ஒருவிதமான கேவல் ஒலி. லதாவுக்கு கதவு தாழிடப்பட்டிருக்குமா என்றெல்லாம் யோசிக்கத் தோன்றாமல் தள்ளினாள். திறந்தபோது அநுபந்தம் தரையில் சரிந்திருக்கிறார். நிச்சயமாகக் கதவைத் திறந்த அதே சமயத்தில்தான் அவரைச் சாய்த்த விதியும் வெளியேறியிருக்கவேண்டும். யாரோ தன்னைத் தள்ளிவிட்டு ஓடுகிறார்கள் என்பதுபோல யாரையோ தேடுகிறாள். சரிந்திருக்கும் அநுபந்தின் நிலை இயல்பான தடுமாற்றம் கிடையாது என்பதால் அங்கு ஊகிக்க முடியாத ஒரு சம்பவம் நடந்திருக்கிறதென்பதும் தெரிந்துவிட்டது. சப்தமே எழாமல் தலையைப் பிடித்தபடி “அம்மா” என்று சரிந்தாள். அநுபந்து நாற்காலியில் உட்கார்ந்தவாறே விழுந்திருக்கிறார். கால்கள் இன்னும் இருக்கையில் தொங்குவதுபோல மேலே உயர்ந்திருக்கிறது, தோள்கள் நிலத்தில் ஊன்றி, சரியாக தலை மட்டும் மேசையின் வெளிச்சத்திற்குள் வராமல் அடியில் போய்விட்டு இருந்தது. ஒப்பனைப் பொருட்கள் தரையில் சிதறிக்கிடக்கின்றன. யாருடனோ சண்டை நடந்ததுமாதிரி இருக்கிறது அந்த இடம். அநுபந்தைப் பார்க்க அவளுக்குக் கிடைத்த கடைசி வாய்ப்பு அது.

அந்த நொடியில் அடுத்தடுத்து நடப்பதைக் கிரகிக்கத் தெரியவில்லை. அதோடு அவளுமே துவண்டுபோய் நின்று கொண்டிருக்கிறாள். என்னசெய்வதென்று விளங்காமல். சரிந்திருக்கும் உடலைத் தூக்குவதா அல்லது யாரையும் கூப்பிடுவதா என்று முடிவெடுக்க முடியாமல் ஸ்தம்பித்துப்போய் சம்பந்தமில்லாமல் மேசையில் சிரிக்கும் சிவாஜிகணேசனின் வெவ்வேறு விதமானப் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். கைக்கு எட்டும் தூரத்தில்தான் அநுபந்தின் உடல். 

கால்விரல்கள் மேல்நோக்கிக் காற்றில் எதையோ பிடித்திருப்பதுபோல முறிந்துள்ளன. எந்த அசைவும் இல்லை. உயிர் இருப்பதற்கான கடைசித் தடயமும் போயிற்று. அவளுக்கு விக்கித்துவிட்டது. கையை நீட்டித் தொட முடியும், இப்போது அவள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து அநுபந்தின் முகத்தைப்பார்க்க முடியும். ஆனால் எதையும் செய்விக்காத படிக்கு அவளுடைய காலம் அப்படியே சுழியத்தில் நிற்கிறது. சற்றைக்கெல்லாம் யாரோ வருகிறார்கள் சரிந்த உடலை நிமிர்த்துகிறார்கள். அவளது தோள்களைப் பற்றி அழுகிறார்கள். அவ்வளவு நேரம் தேங்கிக்கொண்டிருந்த அதிகாலையின் இருளெச்சம் சட்டென உருகிக் காணாமல் போகிறது. பளீரென நுழையும் வெளிச்சத்தை அந்த அறைக்குள் லதா என்றைக்கும் பார்த்ததில்லை. ஒப்பனை விளக்குகளைத் தவிர சாளரத்தில் நுழையும் வெளிச்சத்தை அநுபந்து விரும்புவது கிடையாது.

ஒப்பனை விளக்குகள் அணைக்கப்பட்டன. அநுபந்தை சிவாஜி என்றுதான் அவளுக்கு அறிமுகப்படுத்தினார்கள். ஊரில் யாருக்கும் சிவாஜியின் உண்மையான பெயர்கூட தெரியாது. சிவாஜி என்றால் சிவாஜிகணேசனை அச்சுவார்த்தது போல் இருப்பார். நகத்தைக் கடிப்பது, மோவாயைத் தூக்கி மடக்கிய விரல்களில் வைப்பது, விடாமல் புகைப்பது, உதட்டை அடிக்கடி உருட்டுவது எல்லாம் சிவாஜியைக் கண்முன் விலகாமல் வைத்திருக்கும். லதா சிறுவயதில் கோவில் விழாக்களில் சிவாஜி கணேசனைப் பார்த்ததுண்டு. அவளுக்குப் பிடித்தமான நடிகர் இல்லையென்றாலும் சிவாஜியை நேரில் பார்க்கும் மனமயக்கத்தை அநுபந்து ஏற்படுத்திவிடுவார். அப்போது பார்த்ததுகூட அநுபந்தையா என்று திருமணமான புதிதில் தோன்றியிருக்கிறது. ஏனென்றால் அநுபந்தை அவள் சிவாஜியாகப் பார்த்ததிலிருந்து இப்போதுவரை அவருக்கு வயது அப்படியேதான் இருக்கிறது. வெயில் ஏறுவதற்குள் அரிமளம் முழுக்க சிவாஜியின் சாவுச்செய்தி போய்ச் சேர்ந்துவிட்டது. ஊர்க்காரர்கள் ஒவ்வொருவராக பெரிய பெரிய மாலையுடன் வந்துகொண்டிருந்தனர்.

பெண்கள் மார்பில் அடித்துக்கொண்டு வந்தார்கள். அவர்களெல்லாருமே லதாவைவிட வயது அதிகம். இத்தனை வருடத்தில் அவர்கள் யாரையும் லதா பார்த்தது இல்லை. 

அநுபந்தின் உடல் இன்னும் முற்றத்தில் வைக்கப்படவில்லை. வந்தவர்கள் உடல் இல்லாததால் லதாவைக் கட்டிக்கொண்டு அழுதனர். ஒரே நேரத்தில் அத்தனை உடல்களின் தழுவலையும் ஓலத்தையும் அவள் முதன்முறையாக எதிர்கொண்டாள். லதாவுக்கு அப்போதுதான் அங்கு என்ன நடக்கிறதென்பதே புரிகிறது. அறைக்குள் நின்றுபோயிருந்த காலம் மறுபடியும் சுழல ஆரம்பிக்கிறது. அந்த இடம் மெல்ல மெல்ல புழுக்கத்தால் நிறைவதை உணர்ந்தாள். வியர்வை வீச்சம் குமைகிறது. அவள் மெல்ல விசும்பினாள். என்னவென்றே தெரியாமல் மனம் எடையிழக்கிறது. எடை இழக்க இழக்க ஆசுவாசமாகிறது. அழுவதற்கு இழப்பு மட்டுமே நிச்சயம் காரணமாக இருக்காது. அவளுக்கு அந்தக் கணத்தில் அழவேண்டும் அவ்வளவுதான் என்று தோன்றிற்று. ஓயாத பேச்சுகளும் ஒப்பாரிகளும் எழுவதும் அடங்குவதுமாக இருந்தது. அநுபந்தின் உடலைக்கொண்டு வருவதைத் தள்ளி போடுகின்றனர்.

வந்ததும் உடலுக்கு அணிவிக்க முதல் மாலையுடன் பழைய மன்னர் குடும்ப வாரிசும் கட்சித்தலைவர்களும் காத்திருக்கிறார்கள். இதில் யாரை முதலில் அனுமதித்தாலும் பிறிதொருவருக்கு அவமதிப்பு நிச்சயம். ஆனால் சிவாஜி இறப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்பு அவர் கடைசியாகப் பங்கேற்ற கட்சிக் கூட்டத்தில் “எனது இறுதி அஞ்சலியை முதலில் சபாக்காரர்கள்தான் செய்யனும்” எனச் சொல்லியதாக நாடக சபா ஆட்கள் அங்கு இருந்த அத்தனை பேருக்கும் அறிவித்தார்கள்.

சபாக்காரர்களின் அழுத்தமான குரல் பெண்களின் பெரும் ஓலத்தையும் நிறுத்திற்று. அநுபந்திற்கு இவ்வளவு அழுத்தமான குரல் வளம் இல்லை. சிவாஜியிடமிருந்து அவருக்குக் கிடைக்காதது இது ஒன்றுதானென நாடகக்காரர்கள் எப்போதாவது விசனப்படுவது உண்டு. லதாவிடம் சில சமயம் உரிமையாக, ஏதாவது சுக்கு மிளகை போட்டுக் கொடுக்கக்கூடாதா என்பார்கள். லதா அவரது ஒப்பனை விசயங்களில் தலையிடும் அளவிற்கு அதன் எல்லைக்குள் நுழைந்தது இல்லை.

சிவாஜியின் ஒவ்வொரு அசைவும் பாவனையும் அது எங்கிருந்து எப்படித் தொடங்கவேண்டும் என்று அநுபந்திற்கு நன்றாகத் தெரியும். அந்த எல்லையில் யாரை, எப்படி, எப்போது அனுமதிப்பது என்கிற சூட்சமத்தை அவர்தான் வைத்திருந்தார். அப்படியொரு எல்லை இருப்பதே அவளுக்குத் திருமணமான புதிதில் தெரியாது. அம்மா இறந்தபிறகு லதாவிற்கு ஒரு துணையை ஏற்படுத்த சுசிலாவிற்கு ஏற்பட்ட அவசரத்தில் நிகழ்ந்தது சிவாஜியுடனான திருமண துவந்தம். சிவாஜியைக் கல்யாணம் பண்ணப் போகிறதாக ஊருக்குள் செய்தி பரவியபோது உண்மையில் லதா அதைத் தட்டிக்கழிக்க வேறு வழி தெரியாமல் இருந்தாள். அநுபந்தை சிவாஜியாக முதன்முதலில் கோவில் விழாக்களில் பார்த்திருக்கிறாள்.

அதன்பிறகு அவள் அம்மாவுடன் சபா அலுவலகத்தில். “அநுபந்து எப்போதும் சிவாஜியாகத்தான் வருவார். ஒப்பனையை எப்போது எங்கு செய்துகொள்கிறாரென அவளுக்கு ஆச்சர்யமாக இருக்கும். சிவப்பு நிற கோட் சட்டையும் சந்தன நிறத்தில் பேன்ட்டும் உரைமாவு பொங்கியதுபோன்ற முகப்பௌடருடன் (வசந்த மாளிகை) சிவாஜியைப் போல அழகாக நடந்து வருவார். வயது இவ்வளவு என்று யாரும் உறுதியாகச் சொல்ல முடியாது.” லதாவின் அம்மா இறக்கிறபோது லதாவுக்கு இருபத்தி மூன்று வயது. விதி தனக்கு இப்படியொரு திருமணத்தை முடிச்சிடும் என்று நினைத்து பார்க்கவில்லை.

லதாவின் அம்மாவுக்கு நாடக சபாவில் சிவாஜிதான் வேலை வாங்கிக் கொடுத்து, கணவனை இழந்து இரண்டு பெண் குழந்தைகளுடன் நின்றபோது உதவியிருக்கிறார். அப்படி நிறைய பெண்களுக்கு சிவாஜி உதவி இருக்கிறார். அவர்களுடன் சிவாஜிக்குத் தொடர்பு இருப்பதாக ஊருக்குள் ஒரு செய்தியும் உண்டு. வீட்டின் வாசலிலும் திண்ணையிலும் கட்சிக்காரர்கள் அமர்ந்திருக்கிறார்கள். பெண்கள் அத்தனை பேரும் வீட்டின் வரவேற்பறையாக இருக்கும் தாழ்வான ஓடு வேய்ந்த இடத்தில் வழி விட்டு இருறமுமாக அமர்ந்திருக்கிறார்கள். ஒரு சில விசும்பல்கள் மட்டும்தான் அதுவும் புதியவர்களின் வருகையைப் பொறுத்து.

அதன்பிறகு முணுமுணுப்பு மட்டும் கேட்கிறது. லதா தாழ்வாரத்தின் இடது பகுதியின் மூலையில் அமர்த்தப்பட்டிருக்கிறாள். அவளுக்கு நேராக சில பெண்கள் நெருங்கி அமர்ந்திருக்கிறாள். லதா அங்கிருந்த அத்தனை பெண்களையும் கவனித்தாள். அவளுடைய அம்மா வயது இருக்கலாம். சிவாஜியின் உடல் இன்னும் வராததால் இப்போது யாருமே அழவில்லை. ஒருவருக்கொருவர் எதையோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். வீட்டின் உள்ளே எட்டிப்பார்த்து சலித்துப் போயிருக்க வேண்டும். அவர்களுக்கு நிறைய வேலைகள் இருந்தன, யாரோ ஒரு பெண் மீன் ஆய்ந்ததோடு வந்திருக்கிறாள்.

ஒரு இறப்பு அவர்களது அன்றாடத்தைத் துளியும் மாற்றிவிடாது. அடிக்கடி முகத்தை முந்தியால் துடைத்துக்கொள்வதும் பிறகு அதால் வாயை மறைத்து காதுக்குள் விழும்படியான சொற்களை லாவகமாகக் கொடுப்பதுமாக பாவனைகளை அரங்கேற்றிக்கொண்டிருந்தார்கள். லதாவுக்கு அந்தக் கதைகளெல்லாம் தன்னைப் பற்றியதுதானா என்று எண்ணத் தோன்றிற்று. ஆனால் அவர்களுக்குப் பேச அங்கு நிறைய கதைகள் இருக்கின்றன. சீக்கிரமே தங்களுடைய வீட்டில் கிடக்கும் வேலைகளுக்குத் திரும்பவேண்டும். கிடைக்கிற சிறிய ஆசுவாசத்தில் பேசிக்கொள்ள நிறைய இருந்தும் கதைகளை விவரிக்காமல் அதன் மையத்தைப் போட்டு உடைத்து விடுவதுதான் சரியான கதைசொல்லல். அதாவது, கதை தொடங்கியதும் அடுத்து அதன் மைய இழைக்குப் போய்விடுகிறது.

ஆமாம் அப்படித்தான் லதாவின் கதையைக் கூறுகிறார்கள். சிவாஜியை விராலிமலை முருகன் கோவிலில் மாப்பிள்ளைக் கோலத்தில் பார்த்தபோது லதாவுக்கு ஒருகணம் சிரிப்பு வந்துவிட்டது. பிறகு பதற்றத்துடன் அங்கு நடக்கும் விபரீதத்தை என்ன செய்வதென்று புரியாமல் அழுகையை அடக்கிக்கொண்டு கவிந்து கொண்டாள். அநுபந்து சிவாஜி ஒப்பனையில் பட்டு வேட்டி சட்டையில் உதட்டை முறுக்கியபடி வந்தார். சபாக்காரர்கள் அவரை பாரதவிலாஸ் சிவாஜி என்று சத்தமாக வரவேற்றனர். என்னைக்கும்விட அன்றைக்குத்தான் சிவாஜிக்கே உரிய வெட்கத்தைச் சரியாக உதிர்க்கிறாரென உச்சிமுகந்ததும் மகிழ்ச்சியில் திளைத்துவிட்டார். வந்தவர்களை ஒவ்வொருவராக விசாரித்து தனது ஒப்பனையைப் பற்றி என்னவெல்லாம் விதந்தோதுகிறார்களெனச் சளைக்காமல் வாங்கினார்.

அதில் அவருக்கு ஒருபோதும் அவசரம் இருக்காது. பொறுமையாகப் புன்னகைத்தபடி சொல்பவர்களது தோளில் கை வைத்துக் கேட்கும் தோரணை அவர்களை நிறுத்தவிடாமல் பண்ணும். தாலிகட்டுவது கோவிலில் தேங்காய் உடைப்பது மாதிரி சட்டென முடிந்துவிட்டது. லதாவின் முகத்தை வாஞ்சையுடன் பிடித்து அத்தனைபேர் முன்னிலையில் நெற்றியில் முத்தமிட்டு மார்பில் சரித்துக்கொண்டதை அவளும் ரசிக்கும்படி ஆகிற்று. சிவாஜி லதாவிடம் அன்பாகத்தான் இருந்தார். இன்றைக்கு நேற்று இல்லை இருபது வருடங்களாக அவர் லதாவை கொஞ்சியபடிதான் டீ போடச் சொல்லுவார். வாசல் தெளிக்கக் காத்திருப்பார், தோசை வார்க்க அடம்பிடிப்பார், புடவைக் கட்ட விடமாட்டார், வாத்து போன்ற இவளது நடையைக் கேலி பண்ணுவார், இடுப்பில் கை ஊன்றி மோவாயில் விரல் வைத்து ரசிப்பார், அடிபட்ட இடத்தில் மருந்து தேய்ப்பதென்றால் போதும் பொம்மைமாதிரி வந்துவிடுவார், இது பரவாயில்லை நடனம் ஆடும்போது நாக்கைக் கடித்தபடி குழந்தை பொய் சொல்வதுமாதிரி நெளிவார்.

ஆரம்பத்தில் இதெல்லாம் அவளைப் பெரியதாக ஒன்றும் செய்யவில்லை. கலையில் சுத்த சிருஷ்டி கொண்ட கலைஞர்களுக்குரிய மனநிலை இது. அவர்கள் தங்களை ஒவ்வொரு கணத்திலும் அப்படித்தான் உணர முடியும் என்று விட்டுவிட்டாள். ஒருநாள்கூட சிவாஜி ஒப்பனையின்றி லதா அவரைப் பார்த்தது இல்லை. பெரும்பாலும் நாடகங்களும் விழாக்களும் இரவில் நடந்து பகலில் முடிவதால், விடிந்து வெயில் ஏறிய பிறகுதான் வீடு திரும்புவார். வந்ததும் அறைக்குள் போய் ஓய்வெடுப்பார். பிறகு நண்பர்களைச் சந்திக்க நாடக சபாவுக்கும் மன்னரின் பழைய அரண்மனைக்கும் கட்சி அலுவலகத்திற்குமென தவிர்க்கமுடியாத அழைப்பு வந்துவிடும். அதனால் அநுபந்து எப்போதும் சிவாஜியின் ஒப்பனையில்தான் இருக்கிறாரென்று லதா நினைத்துக்கொண்டிருந்தாள்.

வீட்டிலும் அநுபந்துவின் பழைய புகைப்படங்கள் ஒன்றுமே இல்லை. ஆனால் வீடு முழுக்க அவருடன் நிற்கின்ற முக்கியஸ்தர்களின் புகைப்படங்கள் தொங்குகின்றன. அனைத்திலும் சிவாஜியின் கம்பீரத் தோற்றம்தான் இருக்கிறது. லதாவால் அநுபந்து எப்படி இருப்பாரென்று கற்பனை செய்ய முடியவில்லை. சாய்வு நாற்காலியில் அமர்ந்து நண்பர்களுடன் அவர் பேசிக்கொண்டிருக்கும்போது லதா அவரது குரல் ஒலியை கண்களை மூடி கேட்பாள். அது மட்டும்தான் அநுபந்துவினுடையது. அதில் கார்வை இருக்காது, கனமான சொற்கள் எழாது, ஆழமான உச்சரிப்பு வராது. மென்மையானது பெண்களுக்குரிய சன்னமான குரல். சிரிப்பில் சலசலப்பு கேட்கும். அடக்க முடியாத சிரிப்பில், சப்தம் வழுக்கி வாத்திய ஒலியைப் போல் எழும். அந்தக் குரலை மறைக்க அநுபந்து படாது பாடுபடுவார்.

அவரை மறந்து உரையாடலில் லயித்திருக்கும்போதுதான் அது வெளுத்து வெளியே தெரியும். அடக்கம் செய்வதற்கான எல்லாக் காரியங்களும் நடந்துகொண்டிருந்தன. சிவாஜியை உட்கார்த்தித் தூக்கிப்போக ராஜ நாற்காலி ஒன்றும் அதை வைக்க ரதம் ஒன்றும் அலங்கரிக்கப்பட்டு வந்தது. பெண்கள் சிலர் ஒப்பனைகளில் வந்திருந்தார்கள். காலையில் பார்த்த முகங்கள் இல்லை. இவர்கள் புதியவர்கள். வெவ்வேறு ஊர்களிலுள்ள நாடகக்காரர்கள். பட்டுப்புடவையும் பெரிய பூ செருகிய கொண்டைத்தலையும் அத்தர் மணக்க அமர்ந்திருக்கிறார்கள்.

கண்ணீர் வராமல் அழுவதும் முகத்தைத்துடைத்துக்கொள்வதுமாக இருந்தார்கள். ஒவ்வொருவரும் தங்களது பெயரைச் சொல்லி சிவாஜியை அழைக்கிறார்கள். சரோஜாதேவி அருகிலிருந்த விஜயாவைக் காட்டுகிறாள், பத்மினி அவரிடம் சுஜாதாவை அழைத்து வருகிறாள், வாணிஸ்ரீ அழுவதை அங்கிருந்த யாருமே விரும்பவில்லை அவ்வளவு அழகான முகம்.

வாணிஸ்ரீ மட்டும் லதாவின் அருகில் வந்து உட்கார்ந்துகொண்டாள். அவளுடைய கர்ப்பப்பை சிகிச்சைக்குக் கொடுத்தப் பணத்தைத் திருப்பித் தரமுடியவில்லையென்று ஆதங்கப்பட்டாள். இந்த நடிகைகளைப் பார்ப்பதற்கென்றே சாவு வீட்டில் கூட்டம் அதிகம். பெரிய பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் ஆசிரியர்கள் அத்தனைபேரும் இங்குதான் இருந்தார்கள். வெவ்வேறு ஊர்களிலிருந்து நாடகக்காரர்கள் வேனில் வந்து இறங்கிக்கொண்டே இருக்கிறார்கள். எல்லோருமே ஏதவாது ஒரு வேஷத்தில். 

ரஜினி வந்தார், சப்பாணி கமல் வந்தார், நிறைய எம்ஜிஆர்கள் வந்தனர். எனக்கு வேடிக்கையில் பெரிய ஆர்வம் இல்லை. லதாவின் பக்கத்தில் போய் நிற்பதைத்தான் விரும்பினேன். சிவாஜியின் வீடும் எங்கள் வீடும் நேர் வாசல். சிவாஜி வீட்டுக்கு எதிர் வீடு என்பதுதான் எங்களின் அடையாளம். லதாவிற்கு திருமணமானது எனக்கு நினைவிலில்லை. நான் சின்னக் குழந்தை. லதாவின் வீட்டில்தான் எப்போதும் இருந்திருக்கிறேன். விவரம் அறிந்து லதாவைப் பார்க்கிறபோது அவள் சின்னப்பெண் மாதிரிதான் தெரிந்தாள்.

மாடிப்படியில் அமர்ந்து லதா அழுவதை நான் பார்த்திருக்கிறேன். அழகான முகம். யாருமில்லாத தனிமை என்னவென்று அந்த முகம் எனக்குக் காட்டியது. லதா எந்நேரமும் அழுகிறாள். நல்ல மதிய வெயிலில்கூட மாடிப்படியில் அமர்ந்து அழுவாள். தாம்பத்தியக் கோளாறு என்று அம்மா பேசுவதைக் கேட்டிருக்கிறேன். சிவாஜிக்கு நூறு வயதுகூட இருக்கலாம். உடம்பு இரண்டு ஆளை முறுக்கி வைத்ததுமாதிரி. எப்போது அவர் சிவாஜி வேஷம் போட ஆரம்பித்தார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் சிவாஜிக்காக முகச் சிகிச்சை செய்துகொண்டது ஊருக்கே தெரியும். சிவாஜிக்குக் கல்யாணம் ஆகி ஐந்தாறு வருடங்கள் இருக்கும். ஒருநாள் திடீரென்று அவர் வீட்டில் பெருங்கூட்டம் கூடியது. நல்ல வெயில் காலம் அது.

எல்லோரும் மொட்டை மாடியில்தான் படுப்போம். கருணாநிதியைக் கைது செய்து ஒன்றிரண்டு மாதங்களுக்கு ஆகியிருந்தது. திருவிழாவோ பொதுக்கூட்டக் கொண்டாட்டங்களோ நடக்காமல் இருந்த சமயம். சிவாஜிகணேசன் இறந்த செய்தி வருகிறபோது நாடக சபாக்காரர்கள் நூறு பேர் லதா வீட்டில் இருந்தனர். இரவு நேரம் சிவாஜி மாடியில் படுத்திருக்கிறார். எப்படி இதைச் சொல்வதென்று புரியாமல் மெல்லத்  தயங்கியபடி தெருவிளக்கில் நிற்கிறார்கள். காரணம் சிவாஜி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்று சிவாஜி பலமுறை தெரிவித்திருக்கிறார். வந்தவர்கள் ‘சிவாஜி’ என்கிற பெயரை மட்டும் சொல்லி சூழலை ஆயத்தமாக்கியதும் சிவாஜி அதைப் புரிந்துகொண்டார். அவர்கள் பயந்தது போல அசம்பாவிதமாக ஒன்றும் நடக்கவில்லை.

ஆனால் சிவாஜி நிலைகுலைந்துதான் போனார். அடுத்த சில மணி நேரத்தில் சபாக்காரர்கள் ஒன்றுகூடி சென்னை செல்வதற்குத் தயாரானார்கள். வாழ்க்கையில் அப்படியொரு இரவை தான் அனுபவித்ததே இல்லையென்று லதாவிடம் அடிக்கடி சிவாஜி புலம்பியதாகச் சொல்வார். இரவு முழுக்க மனம் சிவாஜியின் பாடல்களை பாடிக்கொண்டே இருக்க, ஒப்பனை இல்லாமலேயே தான் சிவாஜியாக மாறிக்கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறார்.

“காலையில் இறங்கியதும் சபாக்காரர்கள் வற்புறுத்தித்தான் அன்றைக்கு சிவாஜி ஒப்பனையைச் செய்துகொண்டேன். செய்யக்கூடாது என்று இல்லை ஆனால் எனக்கு அப்போது அது ஏனோ தேவைப்படவே இல்லை” நாள் பூராவும் காத்திருந்து இறுதி மரியாதை செலுத்த கும்பலோடு கும்பலாக ஜனநெருக்கடிக்குள் சிவாஜிகணேசனை முதன் முறையாக அன்றைக்குப் பார்க்கிறார். அவரோடு அப்படி நின்று பார்த்தவர்கள் சிவாஜியின் ஒப்பனையோடு நூறு பேர். திரும்பும் இடமெல்லாம் சிவாஜி முகங்கள். அத்தனை சிவாஜிகளும் அழுகிறார்கள். அநுபந்துக்குத் துடைக்கத் துடைக்கக் கண்ணீர் பெருகிறது. அவரால் அங்கு நிற்க முடியவில்லை. தலைக்கேறிய போதையாய் சமன் சரிகிறது. பெட்டியில் இருக்கும் சிவாஜியின் முகத்தை இத்தனை முகங்களிலிருந்து துலக்கி எடுத்துக்கொள்ள முடியாமல் தடுமாறி சரிந்துவிட்டார்.

விழித்தபோது ஒரு நிழற்தாங்கலில் அமர்த்தப்பட்டிருந்தார். அவரைச் சுற்றி நிறைய சிவாஜிக்கள். கூட்டத்தில் தொலைந்தவரை அவர்கள்தான் இரவு தங்க வைத்து காலையில் அவர்களுடனே அரிமளம் வரை அழைத்து வந்தார்கள். 

அன்றைய இரவு பிரயாணத்தில் சிவாஜிக்களுடன் சேர்ந்து அநுபந்துவும் இனி சிவாஜியாகவே இருப்பதென்கிற முடிவிற்கு ஒப்புக்கொண்டார். அவர்களால் சிவாஜியாக இருக்க முடிந்ததா என்று தெரியவில்லை. ஆனால் இவர் அதற்கான அத்தனை பிரயத்தனங்களையும் ஆரம்பித்தார். தாடி வைத்து மறைத்த சிறிய மோவாயை சிகிச்சை செய்து சரியாக்கினார் (தோற்றத்தில் சிவாஜியிடமிருந்து கிடைக்காதது அத ஒன்றுதான்). புருவம் தடிப்பாக மாறும்படி சிரைத்துக் கொள்வதும் நிரந்தரமாக தலையில் விக் வைப்பதுமாக எப்போதும் சிவாஜியாகவே மாறத் தொடங்கிய சமயம்தான் லதா விதியாண்டவரைத் தேடிக் கிளம்பினாள்.

நேரம் ஆக ஆக சாவு வீட்டில் திருவிழாபோல சிவாஜியைப் பார்ப்பதற்கென்று கூட்டம் கூடிற்று.சிவாஜிக்கு வாரிசு இல்லை அதோடு லதாவின் உறவு வழியில் யாரும் கொல்லி வைக்க முடியாது. அதனால் சிவாஜியின் உறவுக்காரரில் ஒருவர்தான் செய்ய முடியும். லதாவுக்குத் தெரிந்து இத்தனை வருடத்தில் சிவாஜி தன்னுடைய உறவுக்காரர்கள் என்று யார் வீட்டிற்கும் போனதில்லை. ஆனால் அவருக்குப் பெரியப்பா ஒருவர் இருந்தார். இறப்புக்கு சிவாஜி சென்றிருக்கிறார். பெரியப்பா வீட்டிலிருந்து யாரும் வந்திருக்கிறார்களா என்று விசாரித்தார்கள். பெரியப்பாவின் மகன் இறந்துவிட்டான் அவரது பையன் ஒருவர் வந்திருந்தார்.

சிவாஜிக்கு மகன் முறை. அதாவது, லதாவுக்கும் சிவாஜிக்கும் பிறவாமகன். கொள்ளி சடங்குகளை அவரிடம் ஒப்படைத்தனர். லதா அன்றுதான் அப்படியொரு உறவைக்கேள்விப்படுகிறாள். தலை நரைத்து ஒல்லியாக வேட்டியும் அழுக்குச் சட்டையுமாக இருந்தார். அவளைவிட ஐந்து வயது அதிகம் இருக்கும். கடமைக்கு வந்து போய்விடலாம் என்று வந்தவரை திடுதிப்பென்று உருவான உறவு முறையில் நிற்க வைத்ததும் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. முதலில் முடியாது என்று மறுத்தார். ஊர்க்காரர்களும் கட்சிக்காரர்களும் சம்மதிக்க வைத்தனர். அதிலும் அம்மா முறையில் சில சடங்குகளை லதாவுக்குச் செய்யவேண்டியிருந்தது. இதையெல்லாம் பார்த்து லதா தலையில் அடித்துக்கொண்டு அழுவதைப் பார்த்தேன். ஆரம்பத்தில் சிவாஜிமேல் லதாவுக்கு அப்படியொன்றும் வெறுப்பு இல்லை.

நானே பலமுறை அவர்கள் இருவரையும் காரில் ஒன்றாகப் போகிற போது பார்த்திருக்கிறேன். சிவாஜியை மணந்ததில் லதாவுக்குச் சம்மதம் இல்லை என்பது மட்டும் ஊருக்கே நன்றாகத் தெரியும். “தினமும் சிவாஜி ஒப்பனையோடுதான் இருப்பார். அதைக் கலைப்பதற்கே அவருக்கு விருப்பம் இருக்காது. எந்நேரமும் வீட்டிலிருக்கும் கண்ணாடி முன் நிற்பார். வீட்டில் எல்லா அறைகளிலும் நான்கு திசைகளிலும் ஆளுயரக் கண்ணாடி உண்டு.

அவருக்குப் பரிசளிப்பவர்கள்கூட நல்ல தரமான கண்ணாடி இருக்கிறது தரட்டுமா என்றுதான் கேட்பார்கள். அது மட்டுமில்லாமல் ரெண்டு வருஷம் போனால் அவரே ஒவ்வொரு கண்ணாடியையும் மாற்ற ஆரம்பித்து விடுவார். ரசம் போகாத கண்ணாடிகூட வெளுத்துக் கொண்டிருப்பது அவருக்குத் தெரியும். விழுகிற பிம்பத்தை நான்கு பக்கமும் விளக்கைப் போட்டு உற்று பார்ப்பார். கண்ணுக்குத் தெரியாத எந்தக் கீறல் வழியாக வெளிச்சம் ஊடுறுவியது, எந்த இடம் மங்கலாக மாறியது என்று அவரைத் தவிர யாராலும் கண்டுபிடிக்க முடியாது. உடனே அந்தக் கண்ணாடியை மாற்றிடுவார். அவரைச் சுற்றி கண்ணாடிகள் இருக்கனும். எந்த பிம்பமும் அவரை சோபையாகக் காட்டிடக்கூடாது. அவர் நிற்கிற இடத்திலிருந்து அவரைச் சுற்றி எந்தப் பிம்பம் அசையுதுனு நல்லா தெரியும். இறுக்கி அணைக்கிறப்ப ஹால் மூலையில் சாய்வாக இருக்கிற கண்ணாடியில் எப்படி விழுகிது பார்” என்பார். லதாவுக்கு இதெல்லாம் ஆரம்பத்தில் வேடிக்கையாக இருந்திருக்கவேண்டும். இதை ஒரு விளையாட்டுபோல அவர் அவளிடம் துல்லியமாகச் சொல்கிறார். லதாவும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் வீட்டினுள் அவர்கள் இருவர் மட்டும் இருக்கையில் பிம்பங்களின் அசைவு சுற்றி நின்று சிலர் பார்ப்பதுபோல அசௌகரியத்தை உண்டு பண்ணும்.

சில சமயம் லதா தனிமையில இருக்கிறபோது திடுக்கிட்டு போயிருக்கிறாள். தலையணையில் படுத்தபடி புத்தகங்களைப் புரட்டுகிறபோது வெளியே யாரோ வருகிற சத்தம் கேட்டுத் திரும்புவதற்குள் எந்தக் கண்ணாடியிலாவது பார்வை மோதி அவள் உருவம் நிலைகுலையச் செய்துவிடும். சிவாஜியிடம் இதெல்லாம் சொல்ல முடியாது. அவர் கேலியாகச் சிரிக்கிறார். சிவாஜி ஒப்பனையைக் கலைக்காததற்கு கண்ணாடிகளும் ஒரு காரணம். இந்தக் கண்ணாடிகளாலேயே லதாவை அவர் அதிகம் நேசித்தார். கட்டி அணைப்பது முத்தமிடுவது தோளோடு தூக்கிச் சுற்றுவது எனச் சளைக்காமல் செய்வார். சிவாஜிக்கு மதுப் பழக்கம் அறவே இல்லை. ஆனால் எந்நேரமும் மதுவின் போதையில் இருப்பது போல உளறுகிறார்.

அதாவது. எந்த இயல்பான நடத்தையும் அவருக்கு மிதமிஞ்சிய தன்மை கொண்டவை. போதையில் இருப்பவர்கள் கோபத்தைத் தவிர மற்ற உணர்வுகளைச் சமாளிக்க முடியாமல் சரணடைவது மாதிரி. சிவாஜியின் நாடகீய பாவனை எதையும் இயல்பாக நடத்தவிடாது. விதவிதமாகச் சிரிப்பது அழுவது கோபம் கொள்வது. லதாவுக்கு மிகவும் அலுப்பாக இருக்கும். “உங்களால் சாதாரணமாக இருக்க முடியாதா? ஏன் இப்படி எப்போவும் நடிச்சுட்டு இருக்கிங்க” அவளால் பொறுக்க முடியவில்லை. ஒருமுறை வீட்டிலுள்ள அத்தனை கண்ணாடிகளையும் போட்டு உடைத்தபோது சிவாஜி கல்லென்று அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

அதுவும் ஏதோவொரு சினிமாவில் சிவாஜி அமர்ந்திருக்கும் நிலை. சண்டை போட்டுக்கொண்டு எங்கும் போவதற்கு பாவம் லதாவுக்குப் போக்கிடம் இல்லை. சிவாஜி சமாதானம் செய்கிறார். ஆனால் அவளால் அதை எதிர்கொள்ள முடியாது. இப்படி அடிக்கடி சண்டை நடக்கும். எங்க வீட்டிலிருந்து அம்மா ஓடிப் போய் சமாதானம் செய்யும்போது லதா அறையைவிட்டு வெளியே வர மாட்டாள். சிவாஜி அம்மாவிடம் “கல்யாணமே வேண்டானு நான் இருந்தேன். இதெல்லாம் எனக்குச் சரிபடாதுனு அப்போவே தெரியும். இதனாலதான் நல்ல கலைஞர்கள் திருமண பந்தத்தில் இருக்கிறது இல்லை” என்று அழகாக திருத்தமாகச் சொல்வார்.

சிவாஜிக்குப் பெண்களுடன் தொடர்பு இருந்தது ஒன்றும் பெரிய ரகசியம் கிடையாது. அது ஊருக்கே தெரியும். ஒரு காலத்தில் சலிக்கச் சலிக்க சல்லாபத்தில் திளைத்திருந்தார். நாடகத்திற்கு போகிற ஊர்களில் எப்படியாவது ஒருத்தி கிடைத்துவிடுவாள். ஆனால் யாரையும் சிவாஜி வற்புறுத்தியது இல்லை. அதே சமயம் அவரை மறுத்து யாரும் போனதும் இல்லை. சிவாஜி அதில் கைகாரர். ஒரு கட்டத்தில் நாடகங்கள் நிகழ்வது நின்று போன போது இதெல்லாம் ஓய்ந்தது. தொலைக்காட்சி பாடகர்களால் திருவிழாக்களிலும் இவர்களுக்கு மவுசு குறைகிறது. ஆடல் பாடல் குழுக்களுடன் சேர்ந்துகொண்டு திருவிழாக்களில் சிவாஜி மறுபடியும் தோன்றினார். பழைய சல்லாபத்திற்கு இடம் இல்லை. இது மிகவும் மேல் தட்டு உலகத்தைப் போன்று. சிவாஜிக்கு மேடையில் இரண்டு அல்லது மூன்று பாடல்கள் மட்டும் பிறகு வீட்டிற்குத் திரும்பிவிடுவார். லதாவுடன் செலவிடுவதற்கு நிறைய நேரம் கிடைத்தது. லதாவுக்கு குழந்தைப் பிரியம். சிவாஜி அதைச் சட்டையே செய்யவில்லை. எப்போது ஆரம்பித்தாலும் “நடக்கும் போது நடக்கும்” என்று தட்டிக் கழிப்பது லதாவிற்கு எரிச்சலூட்டும்.

அன்றைக்கு சிவாஜியின் சாவு ஊரில் ஒருத்தரைக்கூட விட்டு வைக்காமல் அவரது வீட்டிற்கு இழுத்து வந்தது. எங்கு பார்த்தாலும் “சிவாஜி செத்துப்போனார்” என்று முக்கத்துக்கு முக்கம் பெண்கள் பேசித் திரிந்தனர். அப்படித்தான் ஆபணரத்தையும் எங்கிருந்தோ சாவுச் செய்தி அழைத்து வந்தது. ஆபரணத்துக்குச் சொந்த ஊர் கிடையாது. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு ஊராக சாணம் பிடிக்கக் கிளம்பிவிடுவாள். ஆபரணத்தை லதாவுக்கு அவ்வளவாக நினைவு இல்லை. ஆனால் ஆபரணத்துக்கு ஊரிலுள்ள அத்தனைபேரும் பரிச்சயம்.

நேராக சிவாஜியைப் போய் பார்த்து அழுது தீர்த்துவிட்டு பெண்கள் அமர்ந்திருந்த இடத்தில் சென்று அமர்ந்தாள். எல்லோருமே நடிகைகளைப் போன்று ஒப்பனையில் இருந்தனர். அவளுக்கு அவர்கள் யாரென்று அடையாளம் தெரியவில்லை. நடிகைகள் யாரும் அழவில்லை. அந்தரங்கக் கதைகளைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதில் அதிகமும் சிவாஜியைப் பற்றியவை. சிவாஜியின் உடன் பிறந்தவர்கள் (எத்தனைபேர் என்று அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்), நாடகத்திற்கு நடிக்க வந்தது, சபாக்காரர்களுக்குள் நடந்த சங்கப் பிரச்சினை என நிறைய. ஆபரணமும் அன்றைக்குத்தான் சிவாஜியைப் பற்றி முழுவதும் தெரிந்துகொள்கிறாள். ஒருகட்டத்தில் காதில் விழுந்த ஏதோவொரு செய்தி அவளைத் திடுக்கிட வைத்தது. வலிப்பு வந்தது மாதிரி கால்கள் நடுங்கிவிட்டன. யாரிடம் எப்படிச்சொல்வதென்று புரியாமல் தலையைப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள். பக்கத்திலிருந்த நடிகை ஒருத்தி (இடம் கொடுத்து அமர வைத்தவள்) இவள் அழுவதைப் பார்த்துக் கேட்டதும் “சிவாஜிய விதியாண்டவர் கோவில் செல்லையன்தான் கொன்னுட்டான்” 

என்றாள் மெதுவாக. சட்டென்று அந்த இடம் அமைதியாகிற்று. எல்லோருடைய முகமும் கூர்ந்து அவளை நோக்கின. ஆபரணம் பதற்றத்துடன் “விதியாண்டவர் கோயில் குளக்கரையில அனுபந்தம்னு யாரோ ஒரு பொம்பள மூனு முறை சொல்லிட்டு கிளம்பிட்டாள்” என்று பயத்துடன் வாய் பொத்துக்கொண்டு சொன்னாள். அடுத்த கணம் அந்த இடமே வெலவெலத்துப் போனது. விசயம் சபாக்காரர்களுக்கும் ஊர் பெரியவர்களுக்கும் போனது. அவர்கள் அது உண்மைதானா என்று ஆபரணத்தை அழைத்துக் கேட்டனர். ஆபரணம் பதில் சொல்ல முடியாமல் அழுதாள். “யார் என்ன ஏதுனு தெரியல ஆனா சாய்ந்தரம் இருட்டுறப்ப ஒருத்தி அனுபந்தம் பெயர சொல்லிட்டு போனத பார்த்தேன்” என்றாள். ஊர்க்காரர்களின் கணிப்பு நேராக லதாமேல் விழுந்தது. அவர்களது கணிப்பும் தப்பாகவில்லை.

லதா சட்டென தலையில் அடித்துக் கொண்டு அழத் தொடங்கிவிட்டாள். விதியாண்டவர் கோவில் குளக்கரையில் அமர்ந்து சிவாஜியின் பெயரை உச்சரித்ததை லதா ஒப்புக்கொண்டாள். அந்திச்சாய்ந்த நேரத்தில் குளக்கரையில் நிற்பவர்களை அடையாளம் தெரியவில்லை. ஆபரணம் இன்னொரு படித்துறையில் அமர்ந்து இருக்கிறாள். லதாவுக்கும் சத்தமில்லாமல் எப்படி குளப்படிக்கட்டில் வேண்டுதல் பெயரை உச்சரிப்பதென்று புரியாமல் ‘அநுபந்தம் அநுபந்தம் அநுபந்தம்’ என்று மூன்று முறை சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் எழுந்து போய்விட்டாள்.

அதாவது, கோயில் உள்ளே இருக்கிற செல்லையனிடம் வேண்டிக்கொண்டவர்கள் குளத்தின் கடைசிப் படிக்கு வந்து கோவிலுக்குள் உச்சரித்த பெயரை குளத்துக்குள்ளே மூன்று முறை சன்னமாகச் சொல்லவேண்டும். செல்லையனிடம் வேண்டுதல் சொல்லிவிட்டதை அவனது தாய்க்குத் தெரிவிக்கும்முறை (செல்லையனின் தாய் குளத்துக்குள் இருக்கிறாள்). இந்த சம்பிரதாயமெல்லாம் லதாவுக்கு சுத்தமாகத் தெரியாது. ஆபரணம் குளக்கரையில் வைத்துக் கேட்டது அநுபந்தம் என்கிற பெயரைதான்.

அவளுக்கும் இங்கு வந்தபிறகுதான் எல்லாம் தெரிந்திருக்கிறது. ஒரு பெண் எப்படி தன்னுடைய கணவனை அதுவும் ஊரே கொண்டாடும் நடிகரை விதியின் கையில் விட்டுவிட்டு வரலாம்? சாவுச்சடங்குகளும் டிரம் அடிக்கும் சத்தமும் தயாராகிக்கொண்டிருந்த ரததோரணங்களும் அப்படியே நின்று போனது. நாடக நடிகைகள் அவளை தனிஅறைக்குள் அழைத்துச் சென்று விசாரித்தனர். என்ன வேண்டுதல் என்று கடைசி வரைக்கும் வாய் திறக்கவில்லை. மன்னரின் வாரிசு எல்லோரையும் அழைத்துப் பேசினார்.

“விதியாண்டவர் தலையிட்டிருப்பதால் விசயத்தை அமைதியாகத்தான் விசாரிக்க முடியும். அதோடு இதை லதாவின் மீதான குற்றமாகவும் பார்க்க முடியாது” ஆனால் ஆளுக்கொரு விளக்கம் கொடுத்தனர். விதி யாண்டவரிடம் வைக்கப்பட்ட வேண்டுதல் மூன்றாமவர் செவிக்குப் போவது பெரும்பாவம். அப்படி தெரிந்துவிட்டால் அவர்களையும் விதி விரட்ட ஆரம்பிக்கும். அதனால் லதாவிடம் விசாரிப்பதை இத்துடன் நிறுத்துமாறு ஊர் பெரியவர் மீசைக்கார அம்புலி சத்தம் போட்டார். ஆனால் அதற்குள் நாடக நடிகைகளிடம் லதா புலம்பிய சில விசயங்கள் வெளியே கசிந்து விட்டன.

அது என்னவென்றால், லதாவுக்கு முதலில் விதியாண்டவர் கோவிலுக்குப் போகும் எண்ணமே கிடையாது. லதாவின் அக்கா சுசிலாதான் அவளை அழைத்துப் போயிருக்கிறாள். சுசிலாவுக்கும் லதா என்ன வேண்டுதல் என்று சொல்லாமல் அவளைப் பார்க்கும்போதெல்லாம் வெறும் அழுகையை மட்டும் காட்டியிருக்கிறாள்.சுசிலாவே இதை பலவிதமான ஊகத்தில் எடுத்துக்கொண்டு லதாவுக்கும் சிவாஜிக்குமான வெளிப்படையான பிரச்சினை குழந்தையின்மைதான். ஆனால் அவள் நினைத்ததுமாதிரி சிவாஜிக்கும் லதாவுக்கும் குடும்ப உறவில் பெரிய சிக்கல் ஏதுமில்லை. சம்போகத்தில் சிவாஜி அவளுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. லதாவின் ஒத்துழைப்பின்றி ஒரு முறைகூட சிவாஜி அவளைச் சம்போகத்திற்காக வற்புறுத்தினது கிடையாது. குழந்தைமாதிரி அடம்பிடிக்கும் குணத்தை ஊடலில் சிவாஜி வைத்திருந்ததாக லதா சுசிலாவிடம் வெளிப்படையாகச் சொல்லிவிட்டாள். அது அங்கிருந்த, சிவாஜியின் கொஞ்சல்களில் லயித்துப்போன, பெண்கள் பலருக்கும் தெரிந்த உண்மை.

ஆனால் சுசிலா ஊகித்தது, சிவாஜிக்கு நாடக சபாவில் இருக்கிற அத்தனை பெண்களிடமும் அந்தரங்க துவந்தம் உண்டு, அதற்கு அவளது அம்மாவே சாட்சிதான், அது இன்னும் அதிகமாகி லதாவைப் பற்றி நினைப்பே இல்லாதளவுக்குப் போயிருக்க வேண்டும். தங்கையின் வாழ்க்கை இப்படி வீணானதே என்று பெண்களின்மீது இருக்கும் மோகத்தை நிறுத்த முடிவு செய்து விதியாண்டவர் கோயிலுக்குப் போகக் கட்டாயப்படுத்தியிருக்கலாம்.

“யார் சொன்னது?” என்று மீசைக்காரர் கோபமாகக்கேட்டார். “நீங்களே தோராயமா ஒரு முடிவுக்கு வந்துட்டிங்க?” என்றார் மன்னர் வாரிசு. இதைவிட வேறு என்னவாக இருக்கும்? குழந்தை இல்லாததற்காக யாரும் விதியை மாற்றச் சொல்லி விதியாண்டவர் கோவிலுக்குப் போகமாட்டார்கள். விதியாண்டவரை வாழ்க்கையில் இழுத்துவிடுவது என்பது அவ்வளவு சாதாரண விசயம் இல்லை. மனிதர்களால் தீராத காரியம் நிறைய உண்டு. ஆனால் யாராலும் விதியை மாற்றுவது முடியாத ஒன்று. தீராத காரியம் விதி வசம் இருக்கிறதா என்று தெரியாமல் இறங்கவிடக் கூடாது என்று லதாவுக்கும் தெரிந்திருக்கும். விதியாண்டவர் அவ்வளவு சீக்கிரத்தில் லதாவை விட்டுவிடவில்லை. கோவிலுக்குப் போய் விட்டுத் திரும்பியதிலிருந்து லதா எந்நேரமும் செல்லையனின் வருகையை நினைத்து வாசலைப் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறாள். வீட்டில் ஏதாவது சத்தம் கேட்டால்கூட ஓடிச்சென்று செல்லையன் வந்துவிட்டானா என்று பதறிவிடுகிறாள். செல்லையன் எப்படி வருவான் என்று லதாவுக்குத் தெரியாது. செல்லையன் பற்றிய பல கதைகள் எங்கள் ஊரில் உண்டு. அதேசமயம் தேவையின்றி செல்லையன் பெயரை யாரும் உச்சரிக்க மாட்டார்கள். எங்களுடைய பால்ய வயதில் செல்லையனும் கிட்டத்தட்ட எங்கள் வயதுக்குரிய பையனாகத்தான் தெரிந்தான். ஆனால் விதியாண்டவர் கோவிலை நினைக்கும்போதே அதன் தோற்றம் அச்சமூட்டும். சிறிய ஒற்றைத் தடம்தான். பெரிய குளம் அதைச் சுற்றி மண் குதிரைகள் நிற்கும். குளத்தையொட்டி பனை மரங்கள் சூழ விதியாண்டவர் கோவில். லதா எப்படி பயமில்லாமல் அங்கு போயிருப்பாள் என்று தெரியிவில்லை. ஆள் நடமாட்டம் இருக்காது. கையில் ஒரு குச்சியுடன் அரைக்கால் சட்டையில் நின்றவாறு செல்லையன் சிலை இருக்கும். விதியாண்டவர் கோவிலில் பெரிய தெய்வம் அய்யனார். அவருக்கு வலதுபுறம் செல்லையன்.

அவனுக்கு இரண்டு பக்கமும் சிறிய மண் குதிரைகள். செல்லையன் குதிரைகளை மேய்க்கிறவனாக இருந்திருக்க வேண்டும். செல்லையன் எப்படி அந்த அய்யனார் கோவிலுக்கு வந்தான் என்கிற கதைக்குத் தொடக்கமே இல்லை. ஆளுக்கொரு கதை சொல்வார்கள். எவ்வளவு சிக்கலான விதியையும் செல்லையன் தீர்த்துவிடுவான் என்கிற சொலவடை உண்டு. சிவாஜியை செல்லையன்தான் கொன்றான் என்பதை ஊர்க்காரர்கள் உறுதியாக நம்பினார்கள். சிவாஜி இறந்துகிடந்த அறைக்குள் யாரோ இருந்தார்கள் என்றும் கதவைத் திறந்த சமயத்தில் தன்னை யாரோ தள்ளிவிட்டுவிட்டுப் போனதுபோல இருந்ததை லதா கூறியதைக் கேட்டு நாங்கள் பயந்துதான் போயிருந்தோம். அந்த பயமே அந்தக் கதையை நம்ப வைத்தது.

சிவாஜி நாற்காலியுடன் சாய்ந்தவாறு தரையில் மோதி இறந்து கிடந்தார். செல்லையன் அவரைக் கீழே சாய்த்திருக்கவேண்டும். அவர் செல்லையனுடன் போராடி தோற்றிருக்கலாம். விதியாண்டவர் வேண்டுதல் விசயம் பரவியதில் அன்றைக்கு சிவாஜியின் சாவு ஊர்வலம் நடக்கவில்லை நின்று போனது.

“அம்மா உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் சிவாஜியை எனக்குக் கல்யாணம் பண்ணியிருக்காது.” என்று லதா சொல்லும்போது எனக்கு அது என்னவென்று முதலில் விளங்கவில்லை. ஊரில் சிவாஜியைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளத்தான் நிறைய பேர் ஆசைப்பட்டதாக என் அம்மா சொல்வது உண்டு. “சிவாஜி எங்களுக்காக நிறைய செய்திருக்கிறார். அம்மா அவரைப் பற்றி பேசாத நாள் கிடையாது. வெறும் மாசச் சம்பளம் மட்டும் அம்மாவுக்குக் கிடைக்கிற வழிய அவர் செய்யல. எப்போ பணம் தேவைப்பட்டாலும் சிவாஜி வீட்டுக்குத்தான் எங்களை அனுப்புவார்.

இதே திண்ணையில்தான் அவர் நாற்காலியில் நாடகக்காரர்களுடன் அமர்ந்திருப்பார். நானும் அக்காவும் வாசலுக்கு வந்து நிற்கிறதைப் பார்த்ததும் வாஞ்சையா எங்களை அழைத்து உள்ளே கூட்டிப்போவார். வீடு முழுக்க இருட்டாத்தான் இருக்கும். தொங்குற ஏதோ ஒரு சட்டையிலிருந்து பணத்தை எடுத்து மடித்து அக்கா கையில் கொடுப்பார். வெளியே இருக்கிற நாடகக்காரர்கள் எங்ளைப் பார்த்து ஜாடையாக ஏதோ சிவாஜியிடம் பேசுவார்கள். அவரும் சிரித்தபடி அதற்குத் தலையாட்டுவார். அப்பவும் சிவாஜி எப்படி இருந்தார்னு எனக்குச் சரியாக நினைவிலில்லை.

நான் பெரிய மனுஷி ஆனப்போ சிவாஜி எங்க வீட்டுக்கு வந்தார். அப்போவும் நல்லா கம்பீரமாக சினிமால வர மாதிரிதான் இருந்தார். அவர் கொடுத்த மொய்ப்பணம்தான் அன்னைக்கு பெரிய தொகை.” லதாவின் அம்மாவிற்கு சிவாஜி என்றால் பிரியம். அப்பெயரை உச்சரிக்காமல் இருந்ததே இல்லை. 

சிவாஜி பற்றி ஊருக்குள் பேசும் விசயங்கள் லதாவுக்கும் தெரியும். சுசிலா லதாவிடம் தான் கேள்விப்பட்டதைச் சொன்னாள். சுசிலாவுக்கு அது பெரிய தவறாக ஏதும் பட்டதா என்று தெரியாது. ஆனால் அதன்பிறகு லதா அம்மா புதுப் புடவையும் அலங்காரமும் செய்துகொண்டு கிளம்புவதை லதா ரகசியமாகக் கவனித்தாள். சுசிலா ருது எய்தியப் பின் கிராமத்திலுள்ள பாட்டி வீட்டுக்குப் போனதோடு இதைப்பற்றி அதிகம் பேச சந்தர்ப்பம் அமையாமல் போனது. எப்போது வீட்டிற்கு சிவாஜி வந்து போவாரென்று இருவருக்குமே தெரியாது.

ஆனால் இவர்கள் வீட்டில் சிவாஜியைப் பார்த்ததாக அக்கம் பக்கத்தில் சொல்வார்கள். சுசிலாவும் போனதற்குப் பின் லதா மட்டும்தான் வீட்டில். பள்ளி முடிந்ததும் நேராக வீடு வந்துவிடுவாள். ஒருமுறை வீட்டில் சிவாஜியுடன் அம்மா இருப்பதை லதா நேராகவே பார்த்துவிட்டாள். சிவாஜி தரையில் படுத்திருக்கிறார், அவர் மீது அம்மா படுத்திருக்கிறாள். சிவாஜியின் மிகப்பெரிய உடம்பில் அம்மா சின்னப் பூனைக்குட்டி மாதிரி ஆடையில்லாமல் கிடக்கிறாள். பார்த்த அந்தக்கணத்தில் முதலில் அது யாரோ என்று நினைத்துவிட்டாள். ஏனென்றால் அப்படி ஒருத்தி ஆடையின்றி தனது சிவந்த சதைத் திரட்சியுடன் பிரக்ஞையின்றி ஓர் ஆண் உடம்பில் அவ்வளவு வசதியாகப் படுத்திருப்பது (அப்படிப் படுக்க முடியுமா என்று கற்பனை செய்ததில்லை) நிச்சயம் யாரோவாக இருக்கலாம் என்று தோன்றியது. லதா நுழைந்ததும் சில நொடிகள் உறைந்தபடி நிற்கிறாள். அது அம்மாதான் என்றும் அவளுக்கு அவர்கள் இருவரும் சட்டென எழுந்துவிடும்வரை தெரியாது. இவள் வந்து நிற்பதை சிவாஜிதான் பார்க்க முடியும். லதாவின் சிறிய உருவத்தை அவர்மீது படுத்திருக்கும் அம்மா மறைத்திருப்பாள். சிவாஜி பதறியதும் கூந்தல் களைந்து படுத்திருப்பவள் திடுக்கென்று திரும்புகிறாள். பாம்பைக் கண்டது மாதிரி முகத்தில் பதற்றம். சிவாஜி ஒப்பனைகளுடன் ஆடை கசங்காமல் படுத்திருக்கிறார். அந்தக் காட்சி நினைவிலிருந்து மறைய ரொம்ப நாட்கள் எடுத்துக்கொள்ளவில்லை.

அவளும் அதைப்பற்றி அம்மாவிடம் ஒன்றும் கேட்காமல் விட்டுவிட்டாள். அம்மா நோயில் படுத்தபோது சிவாஜிதான் மருத்துவச் செலவுகளை கவனித்துக்கொண்டார். அம்மா இறந்து நான்கைந்து வருடங்கள் லதா, சுசிலாவோடு அவளது திருமணமான வீட்டில் இருந்தாள். சுசிலாவின் அந்தரங்க அசைவுகள் அவளுக்குக் கலவியின் கற்பனைகளை ஏற்படுத்துகிறபோதும் சிவாஜியும் அம்மாவும் இருந்தக் காட்சியைத் தூண்டிவிடவில்லை. அது மறந்தது மறந்தாகவே இருக்கிறது. கற்பனையில் சிறுக் கீறலைக்கூட அது ஏற்படுத்தவில்லை. ஒருவேளை அந்தக் காட்சி சிருங்கார உணர்வைத் தூண்டும் அவசியமற்றதென நழுவியிருக்கலாம். அதானல்தான் லதா தாபத்தை அசைபோடும் சமயத்தில் அக்காட்சி எதையும் செய்யாமல் போய்விட்டது. அக்காட்சிக்கு வேறு குணம் இருந்தது. சுசிலாவுக்கு லதாவை அவளுடனே வைத்துக்கொள்வதில் நிறைய சங்கடம். லதாவுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கவேண்டும். அவளுக்கும் சிவாஜியை விட்டால் யாரையும் தெரியாது. (அவர்தான் சுசிலாவுக்குத் திருமணம் செய்து வைத்தவர்). அவளுக்கு சிவாஜியை மணம் செய்து வைக்கும் எண்ணம் முதலில் இல்லை. ஆனால் இந்த விசயமாக சிவாஜியைச் சந்திக்க எடுத்த அலைச்சலும் அனுபவங்களும் அந்த முடிவுக்கு வர காரணமாகிற்று. அதே சமயத்தில் சிவாஜியும் கல்யாணம் செய்து கொள்ளும் யோசனைக்கு வந்திருந்தார்.

ஒருவழியாக சிவாஜியைத் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளச் செய்துவிட்டு திருமணச் செய்தியை லதாவிடம் சொன்ன அடுத்த கணம் அந்தக் காட்சி திடுதிப்பென்று எழுந்து உட்கார்ந்துகொண்டது. லதா ஆடிப்போய்விட்டாள். எங்கிருந்து அது வந்தது? இத்தனை நாள் மறந்துபோனதாக தன்னை நம்ப வைத்திருக்கிறது. சுசிலாவிடம் ஜாடை மாடையாக எப்படியோ சொல்லிப் பார்த்தாள். சுசிலாவால் ஒன்றும் செய்யமுடியாத இடத்திற்கு விசயம் போய்விட்டது. சிவாஜியைத் திருமணக் கோலத்தில் பார்த்ததிலிருந்தே லதாவுக்கு உள்ளூர நடுக்கம் எடுக்கத் துவங்கிற்று.

சிவாஜியிடம் நெருங்குவதைத் தள்ளிப்போட்டாள். சிவாஜிக்கு அப்போது வெளியே நிறைய பழக்கங்கள் கிடைத்ததால் லதாவின் சல்லாபம் அவசியப்படவில்லை. அவளுக்கும் இப்படியே இருந்துவிடுவது சரியென்று தோன்றிற்று. சிவாஜிக்கு இருக்கிற தொடர்புகள் பற்றி அவள் சட்டையே செய்யாமல் இருந்துவிட்டாள். ஒருபக்கம் இது வசதியாகவும் இருந்தது. அந்தக் காட்சி மறுபடி வரவே இல்லை. சம்போகத்தில் கண்களை இறுக்கி மூடிக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. மீறி திறந்தால் அந்தக் காட்சியின் ஸ்தூல வடிவமும் மூடினால் அதன் பிம்பமுமாக அவளை விரட்டுகிறது. அம்மாவை நினைத்துக்கொள்கிறாள்.

அவளது நிர்வாணம் பயமுறுத்துகிறது. கண்களை மூடி அவளை எப்போதோ பார்த்த ஒரு பெண் தெய்வமாக பிடாரி, தந்துமி எனக் கற்பனை செய்கிறாள். அது அவளைக் காப்பாற்றும் என்கிற நம்பிக்கை. அந்த எண்ணமும் வெகு நேரம் நீடிக்காமல் சரிகிறது. பிறகு வேறொரு உருவம் அதுவும் நிர்வாணமாகக் கிடக்கிறது. மறுபடியும் வேறொரு தெய்வம். பிறகு அம்மாவின் இறுதிக் காலத்தின் உருவத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறாள். அது நழுவாமல் இருக்கவேண்டும். வேறு முகங்கள் தன்னை இன்னும் துரத்தக்கூடியவை. கண்ணீர் முட்டித் தளும்புவதுதான் விரட்டுகிற காட்சிகளைச் சற்றைக்கும் சரியவிடும்.

சிவாஜி அவளை அணைத்து முயங்குவதில்லை. அவளைக் கலைத்துப் போடுவதுபோல தனது வேகத்தில் காட்டுவதில்லை. களைந்துவிடும் ஒப்பனைக்காகப் பயப்படுகிறார் (அன்றைக்கு அம்மா உடனும் இப்படித்தான் கலையாமல் படுத்து இருந்தார்). சிகிச்சை நிச்சயம் வீணாகிவிடும். அதோடு இயக்கம் சீக்கிரமே முடிந்துவிடுகிறது. கணநேர தாபம்தான். சிவாஜிடமிருந்து வெளியேற நினைத்தாள். எங்காவது ஓடிவிட பலநாள் முடிவெடுத்துக் களைத்தது உண்டு. சிவாஜி எங்காவது கிளம்பியதும் அந்த அமைதி பெரும் நிம்மதியை அளிக்கும். அதுவரை வைத்திருந்த தயாரிப்புகள் சிவாஜி வெளியே போன அடுத்த நொடியில் இருக்காது. வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளும் மாறி மாறி நகரும் பொழுதும் அவளுக்கு அந்த இருப்பை விட அனுமதிக்கவில்லை. வீட்டைவிட்டுப் போனால் அடுத்து எங்கு என்கிற கேள்வி. லதா அந்தக் காலத்துக்குள் கட்டிப் போடப்பட்டுச் சுற்றிக்கொண்டிருந்தாள். துரத்துகிற காட்சிகளிலிருந்து தப்பிக்க அவளுக்கு வழியே கிடைக்கவில்லை. குழந்தை பிறந்தால் பிள்ளையின் முகத்தையாவது பார்த்துக்கொண்டிருக்கலாம் ஆனால் திருமணமான நான்கு வருடத்தில் ஒருமுறைகூட கரு தங்கவில்லை.

இந்தச் சமயத்தில்தான் நடிகர் சிவாஜிகணேசன் இறந்த செய்தி வந்தது. ஒருபக்கம் அநுபந்துக்கு இனி சிவாஜியாக இருக்கும் அபிலாசை குறையும் என்கிற நம்பிக்கை, அதே சமயம் செய்தி கேட்டதும் அநுபந்துக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்கிற பயம். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்று நிச்சயம் நடக்கும் என்றுதான் லதா, சிவாஜி சென்னைக்குப் போன பிறகு நினைத்துக் கொண்டிருந்தாள். அன்றைக்கு அபூர்வமாக அவளுக்கு விதியாண்டவரின் ஞாபகம் வந்திருக்கிறது. அது எப்படி? யாரால்? எதற்காக? என்றெல்லாம் தெரியவில்லை. மனம் திக்கென அடைக்கிறது. ஏதோ குற்றத்தைச் செய்யப்போவது போல விரல்கள் நடுங்குகின்றன. விதியாண்டவரின் கோவிலுக்குள் போனதே இல்லை. செல்லையன் எப்படி இருப்பானென்றே தெரியாது, இருந்தும் கண்களை மூடி கற்பனையாக ஓர் உருவத்தை நினைத்து வேண்டிக்கொள்கிறாள். ஆனால் இரண்டுமே நடக்கவில்லை.

அநுபந்து சிவாஜியாக மாற ஏற்கெனவே விதி முடிவாகி இருந்தது. சாவு வீட்டில் நேரம் ஆக ஆகக் கூட்டம் அதிகமாகிற்று. துக்கம் விசாரித்து மரியாதை செய்துவிட்டுப் போனவர்கள்கூட விசயத்தைக் கேள்விபட்டுத் திரும்பவும் வந்து விட்டனர். பொழுது சாயத் துவங்கிற்று, இனி அடக்கம் பண்ணமாட்டார்கள். அதோடு விதி, செல்லையன் கையால் போயிருப்பதால் ஆத்மாவை இப்படியே துக்கத்தோடு அனுப்பிவிட முடியாது. அதனைச் சமாதானப்படுத்தும் கர்ம பரிகாரத்தைச் செய்து விடையனுப்புவதுதான் சரி. ஆனால் அங்கிருப்பவர்கள் யாருக்கும் அதற்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. அன்றைக்குச் சாவு வீட்டில் லதா அழுவதை அருகில் நின்று வேடிக்கைப் பார்த்தேன்.

ரசிக்க வைக்கும் மூக்கும் நெற்றியும் லதாவுக்கு. இடது விழியின் ஓரத்தில் மிளகு போல ஒரு மச்சம். இன்றைக்குத்தான் அதை அருகில் பார்க்கிறேன். என்னிடம் எதற்காக எல்லா கதைகளையும் சொல்கிறாளென்று புரியவில்லை. இருபது வருடங்களுக்கு மேல் எங்கள் வீட்டிற்கும் லதாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. லதாவுக்கு என்மீது ஈர்ப்பு இருந்திருக்கும் என்று கோமாளித்தனமான ஆசை எனக்கு. அன்று சாவு வீட்டில் ஒரு பெண்ணை நன்றாகப் பார்த்து ரசிப்பதற்காக நான் நின்றுகொண்டிருக்கிறேன். ஒரு பக்கம் அச்சமாகவும் குற்றவுணர்வாகவும் இருந்தது.

என்னை யாரும் பொருட்படுத்தவில்லை. ஊரில் நடந்த அசம்பாவிதம் அது. வித்தியாசமான நிகழ்வு. நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே யாரோ ஒரு நாடக நடிகை தன்னுடைய செருப்பால் லதாவை அடித்துவிட்டாள். லதாவின் மூக்கில் இரத்தம் வழிகிறது ஆண்கள் அவளைப் பிடித்து இழுத்தனர். அப்போதுகூட என்னால் அப்படி அணைப்பதை இயல்பானதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. என்னைப்போல அவர்களும் இந்தத் தருணத்தை உபயோகிக்கிறார்கள். சிவாஜியின் மகன் கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு வந்தார். லதாவை அவர்தான் அவர்களிடமிருந்து விடுவித்து உள்ளே அழைத்துப்போனார். லதாவுக்குத் தண்ணீர் கொடுத்து முகத்தைக் கழுவச் சொன்னார். பல் ஒன்று விழுந்துவிட்டது இரத்தம் நிற்காமல் வழிகிறது. துணியால் வாயைப் பொத்தியபடி லதா அழுகிறாள். மகன் அவளது தோள்களை ஆதூரமாகப் பிடித்திருக்கிறார்.

லதா அவரிடத்தில் “நான் எதையும் செய்யல” என்று மன்றாடி அழுதாள். அதை நம்புவதாக அவர் தலையசைத்துத் தேற்றியதை நான் கவனித்தேன். அவர் லதாவைக் காப்பாற்றிவிட்டதாகத்தான் நாங்கள் நம்பினோம். ஆனால் ஊர்க்காரர்களில் சிலர் லதாவை விடவில்லை. வேண்டுதல் பற்றி விசாரிப்பை நிறுத்திவிட்டு அதற்குப் பதிலாக அது, நிச்சயம் சிவாஜியை சாவடிப்பதுதான் என்கிற முடிவுக்கு வந்ததுடன், ஏன் அப்படியொரு முடிவு என்கிற கேள்வியில் லதாவைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு இருந்தனர்.இன்னொரு தரப்பினர், விதியாண்டவரின் தீர்ப்பில்சிவாஜி இறந்திருப்பதால் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்வதா வேண்டாமா என்று விவாதத்தில் இருந்தனர்.

பொதுவாக விதியாண்டவர் கோவிலுக்குத்தான் மக்கள் ஊர்வலமாகப் போவது நடப்பு. ஆணி மாதக் கடைசி வெள்ளிக்கிழமை மண் குதிரைகளைச் செய்து குளத்தைச் சுற்றி நாங்கள் எடுத்துபோவோம். பெரிய குதிரைகளை ஆண்கள் தங்களது தோளில் வைத்துத் தூக்கி வருவார்கள். செல்லையனுக்கு நேர்ந்திருக்கும் குட்டிக் குதிரைகளைப் பெண்கள் குழந்தையைப் போன்று மார்பில் அணைத்து வருவார்கள். திருமணமாகாத பருவத்தினர் அதில் அதிகம். அந்தத் திருவிழாவில் செல்லையனிடம் எதையும் வேண்டிக்கொள்ளக் கூடாது என்பது விதி. இந்தக் குதிரைக்குட்டிகளெல்லாம் செல்லையனுக்கான பரிசு. விளையாட்டுச் சாமான்கள். சீர்வைப்பது மாதிரி. ஆடி மாதம் கிடா வெட்டு நடக்கும் அது அவனுக்கான படையல்.

அதனால் இந்த சமயத்தில் எக்காரணத்தைக் கொண்டும் யாரும் வேண்டுதல் செய்வதில்லை. ஆனால் நாங்களெல்லாம் வயசுப் பெண்கள் தூக்கி வருவதைப் பார்த்து “இனி யாரும் அந்தப் பிள்ளைகள பார்க்கக்கூடாது” என்று பயந்திருக்கிறோம். அவர்கள் ஏதும் வேண்டிவிட்டால் அவ்வளவுதான் செல்லையன் உங்களைக் குளத்தில் போட்டுக் கொன்றுவிடுவான். ஆனால் உண்மையில் செல்லையன் யாரையும் கொன்றது இல்லை. விதியாண்டவர் கோவில் மதியம் அகாலவேளையில் அங்கு நிற்கும் இளுப்பை மரத்தின் அடியில் செல்லையன் குச்சியுடன் நிற்கிறானென நாங்கள் பேசிக்கொள்வோம். பத்து வருடங்கள் கழித்து லதாவை அப்படியொரு அகால வேளையில்தான் விதியாண்டவர் கோவிலுக்குப் போகிற வழியில் நான் பார்த்தேன்.

உடல் சன்னமாக சரியாக வாரி முடியாத கூந்தலுடன் எங்கோ போய்விட்டுத் திரும்புகிற வேகத்தில் இருந்தாள். கொம்பு போல நிற்கும் அந்த முலைகள் தளர்ந்து விட்டடிருந்தன. சிவப்பான நிறம் வெளுத்து கரிய இரத்தம் போலிருந்தாள். சேலையில் நான் பார்த்த அழகான பெண்களில் லதா அன்றைக்கு அழகு. எப்போதும் தலையில் உண்ணிப் பூக்கள் இருக்கும். சிவாஜி சாவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அதாவது, லதா விதியாண்டவர் கோவிலுக்குப் போனதிலிருந்து பயம் கொள்ளத் துவங்கினாள். பிரக்ஞையின்றி தான் செய்யக்கூடாத காரியத்தைச் சொல்லிவிட்டு வந்துவிட்டதாக அரற்றிக்கொண்டிருக்கிறாள். 

வேண்டுதலை செல்லையன் எப்படி நிறைவேற்றுவான் என்று தெரியாது. அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. திரும்பவும் கோவிலுக்குச் சென்று பூசாரியிடம் செல்லையன் வந்து போன வீடுகளை விசாரித்தாள். சமீபகாலத்தில் அப்படி யார் வீட்டுக்கும் விதிக்காக செல்லையன் போனதாக அவருக்கும் ஞாபகம் இல்லை. ஆனால் அவர் கேள்விப்பட்ட ஒன்றிரண்டு பெயர்களைச் சொன்னார். கிராமத்தில் இப்போது அவர்கள் எல்லாம் இருக்கிறார்களா என்பது சந்தேகம். அவர் சொன்னதில் ஒரு முகவரி மட்டும் எஞ்சியது. ஊருக்கு வெளியே இரயில் தண்டவாளத்தைத் தாண்டினால் பழைய மண்டபம் ஒன்று உண்டு. அதற்குப் பக்கத்திலுள்ள வீடு அது. லதா அடுத்த நாள் மண்டப வீட்டிற்குச் சென்ற போது வீட்டில் ஒரு கிழவி மட்டும் அமர்ந்திருந்தது. பார்வை சரியாக இல்லை. ஊருக்குள் முதன் முதலில் இரயில் தடம் போட்டபோது கிழவியின் கணவர் அந்த இடத்தை அரசாங்கத்திற்குத் தர மறுத்துவிட்டு கடைசி காலத்தில் இறந்து போனார். மண்டபம் நான்கு தூண்கள் முன்பக்கம் திறந்தபடி பெரிய வாயில் அதிகபட்சம் இருபது அடிக்கு இருபது அளவில் சதுரமாக பழைய கோவிலாக இருக்கவேண்டும். மண்டபத்திற்கு வடக்குப் பகுதியில் மண்டபத்துடன் இணைத்து ஓடு வேய்ந்த வீட்டில் கிழவி இருக்கிறது. மண்டபம் இரயில் வேகத்திற்கு விழாது என்று கிழவியும் தங்கிவிட்டது. லதா கிழவியிடம் விதியாண்டவர் கோவில் பற்றிக் கேட்டாள். என்ன வேண்டுதல் என்று நேரடியாகக் கேட்க முடியாது. இந்த மண்டபம் எப்போதுமே இடியாது எத்தனை இரயில்கள் தடதடவென ஓடினாலும் மண்டபம் அதிருமே தவிர அசையாது என்று கிழவி கூறியது. அவள் திரும்பத் திரும்பக் கோவில் பற்றிக் கேட்டதற்கு கிழவி மண்டபத்தையும் இரயிலடிக் கதையையும் சொன்னது. அதன்பிறகு லதா என்ன கேட்பது என்று புரியாமல் அமைதியாகவிட்டாள். இறுதியாக   கிழவி அவளிடம் “விதியாண்டவர் கோவிலில் இதுமாதிரி வேண்டிக்க” என்று முடித்துவிட்டது. இரயிலடி ஆற்றுப்பாலத்தில் குடியிருந்த வண்ணார் வீதியில் மண்டபம் பற்றி ஒரு கதை இருந்தது. அன்றைக்கு மண்டபத்தை இடிக்க முடியாமல் திரும்பிய சர்க்கார் ஆட்களின் கனவுகளில் இறந்து கிடக்கும் ஒரு சிறுவனின் உருவம் வந்துள்ளது. தங்களுடைய குழந்தைக்கு ஏதாவது நேரிடும் என்று பயந்து மண்டபம் இடிப்பை நிறுத்திவிட்டனர். கனவுகள் வந்ததற்கு இரண்டு நாள் முன்புதான் கிழவி விதியாண்டவர் கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்பியது.

ஆக, நிச்சயம் கனவில் வந்தது செல்லையன்தான். எங்களது பால்ய நாட்களில் இந்தக் கதை எங்களுக்குத் தெரியாது. அன்றைக்கு அவ்வளவு தூரம் இவ்விசயங்களைத் தேடி நாங்கள் செல்ல முயற்சிக்கவில்லை. நிச்சயம் லதாவுக்குத் தெரிந்திருக்குமா என்று ஊகிக்க முடியவில்லை. இத்தனை வருடம் கழித்து லதாவிடம் நான் கேட்டபோது, “வண்ணார் வீதிக்குப் போயிருக்கேன்” என்று முடித்துவிட்டாள். ஆனால் இப்பொழுதும் லதாவுக்குள் பழைய நினைவுகள் மெல்ல வெளிப்படும்போதே விரல்களில் நடுக்கம் எடுக்க ஆரம்பிக்கிறது. சிவாஜியின் சாவு வீட்டிற்கு ஆபரணம் வந்தது எனக்கு நினைவில்லை. ஆனால் ஆபரணம் வந்த பிறகுதான் அந்தச் சாவு, ஊரில் மறக்க முடியாத கதையாக மாறியது. எப்போதுமே ஊரில் ஆபரணத்தின் வருகை எந்த வீட்டிலாவது கொலையை நிகழ்த்தும் என்கிற சொலவடை உண்டு. “ஆபரணத்துகிட்ட அருவாமணைய தீட்டி வைச்சுருக்கேன்”, “ஆபரணத்துட்ட கொடுத்து இன்னும் கொஞ்சம் பதம் கூட்டிக்கலாம்” இப்படி நிறைய பேச்சுகள் ஆபரணத்தின் வருகையில் கொலை விழுவதற்கான ஆயத்தங்களை ஏற்படுத்துமென நம்பியிருக்கிறோம். உண்மையிலேயே ஆபரணம் வந்துபோன அடுத்த நாள் ஊருக்கு வெளியே தைலக்காட்டில் கொலை விழுந்திருக்கிறது. சிறையிலிருந்து வெளியே வந்த ஒரு பெரிய ரவுடியை அவனுடைய பழைய பகையாளிகள் தலை வேறு முண்டம் வேறாக வெட்டி வைத்தார்கள். அரிவாள்மனையால் ஒருத்தி அவளது புருஷனைத் தொடையில் அறுத்துவிட்டுக் கிணற்று அடியில் அமர்ந்திருப்பதைப் பார்த்தச் செய்தியும் உண்டு. அதனால் ஆபரணத்தை ஊருக்குள் அனுமதிக்க மறுத்தார்கள். அந்த உத்தரவு ரொம்ப நாளைக்கு நீளவில்லை. மொன்னைக் கத்தியும் மழுங்கிய அரிவாமனையையும் வைத்து வீட்டு வேலை ஒன்று நடக்கவில்லை. நானே கத்தியையும் மனையையும் எடுத்துக்கொண்டு வடிவான அரளையைத் தேடிப் போயிருக்கிறேன்.

குளத்துப்படியில் மொன்னைக் கத்திகளோடு கசாப்புக்காரர்கள் காத்திருப்பார்கள். சுத்தமாக இரண்டு வருடம் போனது ஆபரணம் திரும்பவும் அரிமளத்துக்குள் நுழைவதற்கு. பூனை மாதிரி ஒவ்வொரு வீட்டு வேலியில் நின்று சன்னமாக அழைத்துத் தீட்டிக்கொடுத்துவிட்டு மறைந்துவிடுவாள். ஊர்த் தலையாரிகள் ஆபரணத்திடம் சத்தியம் வாங்கித்தான் ஊருக்குள் விட்டதாக ஒரு பேச்சும் இருக்கிறது. ஆனால் எப்படியோ சாணம் பிடித்துக் கொடுக்காமலேயே ஆபரணம் இன்னொரு விதியை முடித்து வைத்துவிட்டதாக நம்பினோம். 

அது சிவாஜியாகத்தான் இருக்கவேண்டுமா? சிவாஜி இறந்தது சனிக்கிழமை. பிணத்திற்குத் துணையாக ஒரு பெட்டைக்கோழியை வாங்கி ரதத்தினடியில் கட்டி வைத்தார்கள். சிவாஜியின் அடக்கம் இரண்டாவது நாளும் நடக்கவில்லை. கோழி நெல்மணிகளைக் கொத்திக்கொண்டு ரதத்திலேயே அடைந்துவிட்டது. சேவல் ஒன்று அந்தப் பெட்டையுடன் கூடியதை நான் பார்த்தேன். அடிக்கடி சேவல் வந்து கூடுவதும் திண்ணையிலிருப்பவர்கள் 

தோள் துண்டை வீசுவதுமாக இருந்தது அந்தக் கூத்து. மூன்றாவதுநாள் காலையில் ஒருவழியாக சிவாஜியின் சடங்கிற்கான முறையைக் கண்டுபிடித்தார்கள். அன்றைக்கு ஊரில் நல்ல மழை. பொட்டல் காடுகளெல்லாம் செம்புலமாகும்படி கொட்டித் தீர்த்தது. வருடம் முழுக்க வெயில். இப்படி எப்போதாவதுதான் எங்களுக்கு மழை. அதுவும் ஊரில் ஏதாவது முக்கிய மான காரியத்தில்தான் மழை வந்து ஊர் வாயில் சாகும். மழையோடு மழையாக இரண்டு மண் குதிரைகளை எடுத்து வந்தார்கள். ஒன்று பெரிய குதிரை மற்றொன்று குட்டி. குட்டி மண் குதிரையை வீட்டில் எந்த இடத்தில் சிவாஜியின் உயிர் வெளியேறியதோ அந்த இடத்தில் நிறுத்தி வைத்து, நாற்பது நாட்களுக்கு அங்கு செய்ய வேண்டிய பூசை காரியங்களை லதாவுக்கு சொல்லிக்கொடுத்துவிட்டு பெரிய குதிரையை எடுத்துக்கொண்டு முச்சந்திக்குப் போனார்கள்.

எங்களுக்கு அன்றைக்கு நடப்பதெல்லாம் திருவிழா சடங்குமாதிரி இருந்தது. அதாவது, பெரிய மண் குதிரையைத் தலைகீழாகத் தூக்கிப் போய் அங்கு ஒரு பனை மட்டையில் பெரிய பாடை ஒன்றைத் தயார் செய்து அதில் கிடத்தினார்கள். குதிரையின் கால்களுக்கு எந்தத் திசை, தலைக்கு எந்தத் திசை என ஆளக்கொரு யோசனை. பாடை ஒவ்வொரு திசையாகச் சுற்றியது. நாங்கள் மொட்டை மாடியிலும் புளிய மரத்திலும் வேப்பமரத்திலுமாக ஏறி நின்றோம். நிஜக்குதிரையின் சடலம் போலவே எங்களுக்குத் தெரிந்தது. லதா அழுத களையோடு வந்து பாடையில் கிடத்திய குதிரைக்கு அரிசி, பால், மாலையையும் போட்டாள். அவள் ஒரே நாளில் பாதியாகிவிட்டிருந்தாள். வாரிசு மகன் அவளைத் தோள் பற்றி அழைத்துப் போனான். இனி லதா அந்த மகனோடுதான் இருப்பாளென்று நினைத்துக்கொண்டேன். லதாவை பார்க்க முடியாது, வயசான மகன் அவளை அழைத்துக்கொண்டு ஊருக்குப் போய் விடுவான். அதுதான் சரி. லதாவை இனி யாரும் சீந்தமாட்டார்கள். அடக்கம் முடிந்த அடுத்த நாள் அவளைத் தீயிட்டுக் கொளுத்தப்போகிறார்கள் என்று கேள்விபட்டேன். அம்மாவிடம் கேட்டேன் “அப்படியெல்லாம் பண்ணமாட்டாங்க. அப்புறம் நாற்பது நாளைக்கு செல்லையனுக்கு யாரு சடங்கு செய்றது?”. அப்படியென்றால் நாற்பத்தி ஒன்றாம் நாள் லதா இருக்க மாட்டாளா? நாற்பத்தி ஒன்றாம் நாள் லதா உயிரோடுதான் இருந்தாள். அவளை யாரும்  ஒன்றும் செய்யவில்லை. வழக்கமான சாவு வீட்டின் களை அங்கு இருந்தது. 

லதாவை அவ்வளவாகப் பார்க்க முடியவில்லை. ஆனால் ஒரு சில ஆட்கள் திண்ணையில் அமர்ந்து பேசுவதும் போவதுமாக இருந்தார்கள். இன்றைக்குப் பார்க்கிற லதாவுக்கும் அவளுக்கும் இரண்டு தலை முறை வித்தியாசம். இத்தனைக்கும் வெறும் பத்து வருடங்கள்தான் நடுவில். இந்த லதா அவளின் தாய் மாதிரி இருக்கிறாள். இவளது மகளைத்தான் அன்றைக்கு நான் ரசித்தேன். சாலையோர உண்ணிப் பூக்கள் அவளை எனக்குத் தந்திருக்கின்றன. அவளைத் தவிர வேறு யாருமே அதைச் சூடிக்கண்டதில்லை. அவளுக்காக சில பூக்களைப் பறித்துக் கொண்டு போகலாமா என்று தோன்றிற்று. அவளால் அந்தக் காலத்துக்குள் நுழைய முடியாமல் இருக்கலாம். அதன் சாவி துருப்பிடித்து எங்காவது தொலைந்திருக்கும். அதை வெளி கொணர்ந்துவிடும் மோசக்காரனாக நான் ஏன் என்று ஒதுங்கிக்கொண்டேன். ஆனால் லதாவை வீட்டில் சந்தித்தபோது பழைய நினைவுகள் அவளைத் தேடி மறுபடியும் சந்தித்துவிட்டுச் சென்றிருக்கின்றன என்பதை அவதானித்தேன். நான் லதாவைச் சந்திப்பதற்கு ஒரு வருடம் முன்புதான் ஆபரணம் இறந்து போனாள்.

அதற்கு முன்பு லதாவை வந்து சந்தித்திருக்கலாம். லதாவின் பேச்சில் அதொரு துரத்திக்கொண்டிருந்த சாபத்தின் கதைமாதிரி அங்கலாய்த்துக்கொள்கிறது. லதா ஆபரணத்துக்காக ரொம்ப வருத்தப்படுகிறாள். “எல்லாம் விதி. அது போற வழில எல்லாரையும் சேர்த்துக்கும்” என்று புலம்புகிறாள். ஒருகணம் எனக்குத் திடுக்கிட்டுவிட்டது. அம்மா லதா வீட்டுக்குப் போக வேண்டாமென்று எச்சரித்தும் நான் வந்து நிற்கிறேன். சிவாஜி இறந்த அறைக்குள் பத்து வருடங்கள் முன்பு வைத்து மண் குதிரைக் குட்டியை லதா நாற்பத்து ஒன்றாம் நாள் குளத்தில் கரைக்காமல் வைத்துக் கொண்டாளாம், விதியாண்டவர் கோவில் செல்லையன் இன்னும் அங்கு இருக்கிறான் என்று ஒரு கதை. உண்மையில் நாற்பத்து ஒன்றாம் நாள் மண்குதிரையைக் கரைக்க வேண்டுமா இல்லை அங்கேயே வைத்துக்கொள்வதா எது சரி என்று யாருக்கும் தெரியாது. ஆனால் காலம் அதை ஒரு துர்கதையாக்கிவிட்டிருக்கிறது. லதா வீட்டில் அந்தக் குட்டி மண் குதிரை குழந்தை விளையாடும் பொம்மை மாதிரி மூலையில் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் குழந்தை அதை எடுத்துப் போகலாம் என்பது போல. ஆபரணத்தை விதி விரட்டியதை ஆபரணம் வந்து சொல்லும்வரை லதாவுக்கும் தெரியாதுதான். “ஆபரணம் பாவம்” என்றாள்.

நான் அதை ஆமோதிப்பதாகத் தலை அசைத்தேன். அதாவது இந்தக் கதை எனக்கு முன்னமே தெரியும், தூரத்திலிருந்து நான் கவனித்து வந்தேன் என்பது மாதிரி. லதா என்னிடம் சொன்னாள். “ஆபரணம் ஒரு பாவமும் பண்ணாம இத்தனை வருஷம் அவதிப்பட்டிருக்கா.” அந்தக் கசப்பு லதா பிரக்ஞையில்லாமலே உளறுகிற அளவுக்கு ஞாபகங்களில் சீழ் பிடித்திருந்தது. ஆபரணம் லதாவின் வேண்டுதலைக் கேட்ட அடுத்தக் கணம் விதியாண்டவர் கோயிலிலிருந்து கிளம்பிவிட்டாள். அவளால் அங்கு ஒருகணம்கூட நிற்க முடியவில்லை. உள்ளே சென்று செல்லையனிடம் மன்னிப்புக் கேட்பதா இல்லை குளத்திற்குள் மூழ்கி செல்லையனின் தாயிடம் முறையிடுவதா என்று புரியாமல் பயந்து போய்விட்டாள். தெரியாமல் நடந்த செயல் அல்ல. விதியாண்டவரின் கோயிலில் அடுத்தவரின் வேண்டுதலைக் கேட்கக்கூடாது என்று குழந்தைகள்கூட அறியும். அங்கு குழந்தைகளைத் திருவிழா காலம் தவிர வேறு எப்போதும் பார்க்க முடியாது. ஆடு மாடு மேய்ப்பவர்கள் குளத்திற்கும் கோவிலுக்கும் நடுவிலுள்ள இலுப்பை மர நிழலில் அமர்ந்துவிடுவார்கள்.

ஆபரணத்துக்கு இதெல்லாம் தெரியும். அன்றைக்கு ஆபரணம் விதியாண்டவர் கோவிலுக்கு வருவதற்கும் ஒரு காரணம் உண்டு. அவளுக்கு ஒரு வேண்டுதல் தேவை. ஆனால் அதைக் கேட்பதற்கு அவளுக்கு சமயம் கூடவில்லை. எப்படியென்றால், ஆபரணத்துக்குக் கொஞ்ச நாளாகச் சாணம் பிடிக்கிறபோது எதையோ பறி கொடுப்பதுபோன்ற பதைபதைப்பு ஏற்படுகிறது. அது என்னவென்று தெரியவில்லை. யார் சாணம் பிடிக்க வந்தாலும் கத்தி கூராகுகிறபோது எதையோ இழப்பது போல உணர்கிறாள். சிலர் குறைத்துப்பேசிக் காசு கொடுப்பார்கள், சிலர் இன்னும் அதிகம் தருவார்கள், எப்போதாவது வீடுகளில் கூலியோடு சேர்த்து பழைய துணிகளைச் சுருட்டிக்கொடுத்து விடுவதும் உண்டு.

அதனால் ஆபரணத்துக்கு வீடுகள் இருக்கும் தெருக்களில் சாணம் பிடிப்பதென்றால் நல்ல ஆதாயம். தெருவின் சந்திப்பு முனையில் எங்காவது நிழல் பிடித்து அமர்ந்துவிடுவாள். ஒன்றிரண்டு அரிவாள்மனைதான் முதலில் வரும் பிறகு எப்படியோ அந்தத் தெரு முழுக்கச் சேர்ந்துவிடும். ஊர்க்கதை, நாட்டுநடப்பு என்று பொழுது முடிந்து கிளம்புவதற்குள் ஆபரணத்துக்கு ப் பை கொள்ளும். தைலக்காட்டில் அடிக்கடி கொலை நடந்த பிறகு ஆபரணத்தை ஊருக்குள் அனுமதிக்க மறுத்த சமயம் ஒரு நாள் ஆபரணம் சாணம் பிடிக்கும் சைக்கிள் இல்லாமல் வெறும் கையொடு வந்து அழுது ஒப்பாரி வைத்துவிட்டுப் போனாள்.

ஊர்ச் சண்டைக்கும் குடும்பம் கெட்டதற்கும் நான் எப்படிப் பொறுப்பாவது என்று முச்சந்தியில் நின்று திட்டித் தீர்த்துவிட்டாள். கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஆபரணம் அரிமளத்துக்குள் வராமல் ஊர் ஊராக அலைந்து திரிகிறாள். இத்தனைக்கும் அரிமளத்தில் அப்படியொன்றும் வருமானமில்லைதான். ஆனாலும் ஆபரணத்தின் பழைய சொந்தம் அங்கு நன்றாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய புண்ணியத்திற்காக ஊரைவிட முடியவில்லை. ஒரு வழியாக ஆபரணம் ஊருக்குள் வர ஆரம்பித்தபோது பழையபடி வருமானமும் துணிமணிகளும் அளவுக்கு மிஞ்சிச் சேர ஆரம்பித்தன. எப்போதாவது தைலக்காட்டில் ஒருசில அசம்பாவிதங்களும் காதில் விழுந்துகொண்டுதானிருந்தன. அது உண்மையா பொய்யா என்பதை அறிந்துகொள்ள ஆபரணம் பெரிதாகப் பிரயத்தனப்படவில்லை. ஆனால் நாளாக ஆக எதோவொரு பாவச் சம்பவத்தைச் செய்கிறோம் என்று உறுத்த ஆரம்பிக்கிறது.

தைலக்காட்டில் இரண்டு வயதுக் குழந்தையை யாரோ அறுத்து வீசியதைப் பார்த்துவிட்டாள். உண்மையில் அந்தக் குழந்தை இந்த ஊரே கிடையாது. போலீஸ் வெளியூர்க்காரர்களைக் கைது செய்தது. ஆபரணம் அடுத்தமுறை வாடிக்கையாக வந்தபோது கொலைகாரர்களை அடையாளம் கேட்டுத் தெரிந்து கொண்டாள். அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லையென்று மனம் சாந்தியானாலும் அந்த நினைப்பு நிறுத்தவில்லை. யாராவது கத்தி, அரிவாளைத் தீட்ட வரும்போதெல்லாம் ஆபரணத்துக்கு பயம் பிடித்துவிடுகிறது. அவளுக்கு அதை இரண்டே நாளில் துரு சேரும்படித் தீட்டித் தரத் தெரியும்.

ஆனால் வருகிறவர்கள் பதத்தின் கடைசி சட்டம் வரைக்கும் தெரிந்திருக்கிறார்கள். விரலால் கீறி இரத்தம் பார்க்காமல் போவதில்லை. பதம் எந்த வேலைக்கு எந்தளவு என்று ஆபரணத்துக்கு நல்ல பரிச்சயம். அவளும் போக்குக் காட்டி ஏமாற்றி அனுப்பினாள். சக்கரத்தை மிதிக்க மிதிக்க அவளுக்கு வயிற்றுக்குள் கிலி கொள்ள துவங்கியது. சமயத்தில் சிறுநீர் கழிக்கும் அவசரம் என்று சொல்லிவிட்டு முதுகில் விழும் கேலிச் சொற்களோடு அங்கிருந்து போய் விடுவாள். ஒரு கட்டத்தில் இனி இந்தத் தொழிலை நிறுத்திவிடுவதென்கிற முடிவுக்கு வந்த பிறகு கடைசியாக விதியாண்டவர் கோவிலில் போய்க் கூறிவிடலாம் என்று நினைத்திருந்தாள். ஆனால் அன்றைக்கு, லதா கோவிலுக்குப் போன அதே நாள், வெகுநாளாக விதியாண்டவர் கோவில் பூசாரி அழைத்ததன் பேரில்தான் ஆபரணம் கிளம்பிப்போனாள். பூசாரி, கோவில் மூலகிரகத்திலிருந்து அரிவாள், கத்தி, கூர் வாள் என்று அத்தனையும் எடுத்து வந்து வைத்தார்.

ஆடி இரண்டாம் வெள்ளி கிடா வெட்டு பூசை. ஆயுதங்களைப் பார்த்ததும் ஆபரணத்துக்கு நடுக்கம் எடுத்துவிடுகிறது. ஒவ்வொன்றாகச் சாணம் பிடிக்க ஆரம்பிக்கிறாள். கையில் பலம் இல்லாமல் உடல் நடுங்குகிறது. பூசாரியிடம் சொல்லிக் கொள்ளாமல் செல்லையனிடம் போய் “இந்த விதியிலிருந்து என்னை விலக்கிவிடு” என்று கேட்டுவிட்டுச் சூடம் ஒன்றை ஏற்றிவிட்டு நேராகக் குளக்கரைக்குப் போனாள். முதல் படித்துறையில் இறங்கி செல்லையன் தாயிடம் வேண்டுதலை உரக்கச் சொல்லும்போது நா எழாமல் விக்கித்தது.

படி ஏறியபோது ஏதோ மனக்குழப்பம். மறுபடியும் இறங்கிச் சொல்ல வேண்டும் என்று தோன்றவே பக்கத்து படித்துறைக்குப் போனாள். பின்பு அங்கேயே சிறிது நேரம் ஆசுவாசமாகச் சாய்ந்திருக்கையில்தான் லதாவின் வேண்டுதல் காதில் வந்து விழுகிறது. பத்து வருடங்கள் கழித்து ஆபரணம் லதாவைச் சந்திக்கையில் லதாவுக்கு அடையாளம் தெரியவில்லை. மொட்டைத் தலையும் எலும்பு உடம்புமாக ஆபரணம் உருமாறிப்போனாள். புகையிலைப் பழக்கத்தால் உதடுகள் சுட்டிருந்தன. லதா யார் என்ன என்றெல்லாம் கேட்காமல் ஆளைப் பார்த்ததும் மீந்த சாதத்தைத் தட்டில் போட்டுக் கொடுத்தாள். ஆபரணத்தால் சாப்பிட முடியவில்லை கண்ணிலிருந்து கண்ணீர் வழிகிறது.

லதாவின் கையைப் பிடித்துக்கொண்டு “விதியாண்டவர் கோயில்ல உன்னோட வேண்டுதல நான் கேட்டு தொலச்சுட்டேன். என்னால உன்னோட விதி மாறாம போயிருக்கும். நான் இப்போ விதி கெட்டு அலையுறேன்” என்று குறி சொல்வதுமாதிரிப் பாடினாள். லதாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. திரும்பத் திரும்ப ஆபரணம் அதையே பாடுகிறாள். அதில் ஊருக்குள் சாணம் பிடிக்க வந்த கதை, வேண்டுதலைக் கேட்ட கதை, விதி விரட்டுகிற கதை என்று ஒவ்வொன்றாகக் கூர்ந்து கவனித்ததும் தான் வீட்டிற்கு வந்திருக்கிறது ஆபரணம் என்று தெரிகிறது. ஆபரணம்தான் அன்றைக்கு சிவாஜி இறந்த நேரத்தில் ஊருக்குள் தன்மீது அவச்சொல்லை உருவாக்கியவள் என்கிற நினைப்பு இன்னும் லதாவை விட்டுப் போய்விடவில்லை. ஆனாலும் ஆபரணத்தின் கோலம் அவள்மேல் பரிதாபத்தை ஏற்படுத்திற்று. “என்ன செய்றது ஆபரணம்.. எல்லாம் விதி” என்று தேற்றினாள். அந்த வார்த்தையக் கேட்டதுமே உடம்பை உலுக்குவது மாதிரி ஆபரணம் துடித்துவிடுகிறாள். லதா என்னிடம் சொன்னபோது லதாவும் விசும்பிவிட்டாள்.

“விதி விதி விதி” என்று சத்தமே இல்லாமல் ஆபரணம் உச்சரிப்பதை லதாவும் செய்து காட்டுகிறாள். பிரக்ஞை மெல்ல நழுவுகிறது. நான் ஆபரணத்தைப் பற்றிக் கேட்டு அதனைத் திசை மீளச் செய்கிறேன். அன்று ஆபரணம் வேண்டுதலைக் கேட்டதிலிருந்து பொட்டு தூக்கம் இல்லாமல் அலைந்திருக்கிறாள். பாவத்திற்கு என்ன பரிகாரம் என்று தெரியவில்லை. விசாரிப்பதற்கும் பயம். விசயம் தெரிந்தால் ஊருக்குள் விடமாட்டார்கள். காதில் விழுந்த வேண்டுதல் மனதிலிருந்து இறங்கவே இல்லை. ஆபரணத்துக்குப் புத்தி தெளியவே நான்கு வாரம் ஆகிற்று. சாணம் பிடிக்கப் போகிற இடங்களில் விசாரிக்கிறாள். ஒரு வழியாக பொற்பனைக் கோவிலில் இதற்குப் பரிகாரத்தை வயதான ஒருத்தர் கூறினார். அது, விதியாண்டவர் கோவிலில் செல்லையனைத் தவிர வேறு யார், அதைக் காதில் வாங்குகிறாரோ அவரிடமே செல்லையன் வேண்டுதலை விட்டுவிடுவான். ஒருத்தரின் விதிக்குள் குறுக்கிடும் இன்னொருவர் அந்த விதியால் அவரது விதியை மாற்றிக்கொள்கிறார். ஆபரணத்துக்குத் தலைச்சுற்றிவிட்டது. திருக்கட்டளையிலேயே தங்கிவிட்டாள். அடுத்தநாள் மறுபடியும் அதே ஆளிடம் திரும்பவும் கேட்கிறாள். அவர் அதையே மீண்டும் சொல்கிறார். எத்தனைமுறை கேட்டாலும் அதே பதில்தான்.

ஆபரணத்துக்கு எப்படி தன்னால் அந்த வேண்டுதலை நிறைவேற்ற முடியும் என்று புரியவில்லை. முதலில் அநுபந்தமே அவளுக்கு யாரென்று தெரியாது. அந்தப் பெயரை அவள் கேள்விபட்டதே இல்லை. இன்னொரு பக்கம், இதுநாள்வரை தான் சாணம் பிடித்துக் கொடுத்தப் பதம், அப்படி எந்த உயிரையாவது சாய்த்திருக்குமோ என்கிற குழப்பம். பூசாரியிடம் யார் வேண்டுதலுக்கு வந்தது? என்று கேட்டுவிட முடியாது. ஆபரணத்திடம் இருந்ததெல்லாம் அநுபந்தம் என்கிற பெயர் மட்டும்தான். அவளுக்கும் அந்தப் பெயர் பரிச்சயம் இல்லை. உள்ளூரில் இவள் யாரிடமாவது கேட்டாள் நிச்சயம் அவர்கள் சந்தேகப்படுவார்கள். ஏற்கெனவே ஆபரணத்தின்மீது நல்ல அபிப்ராயம் இல்லை. எனவே அநுபந்தம் என்கிற பெயரை வாய் திறந்து சொல்லாமல் விசாரிக்கும் விதிவசத்திற்குள் சிக்கிக்கொண்டு ஊர் ஊராக தேடி அலைகிறாள்.

எங்காவது ஊர்க்காரர்கள் அமர்ந்து பேசிக் கொள்ளும்போது அந்தப் பெயர் எதுவும் காதில் விழுகிறதா என்று காதைத் தீட்டி வைத்து அமர்ந்திருப்பாள். டீக்கடை, பஸ் ஸ்டாண்ட், பள்ளிக்கூடம் என ஒரு இடம் விடவில்லை. இதற்கிடையில்தான் அரிமளத்தில் சிவாஜி இறந்த செய்தி வந்தது. சிவாஜியை சிறுவயதிலிருந்து ஆபரணம் பார்த்து ரசித்திருக்கிறாள். கடைசியாக அவர் முகத்தைப் பார்க்கவேண்டும்.

அதோடு ஊர்க்காரர்கள் கூடுகிற துக்க வீட்டில்தான் தேடும் அநுபந்தம் கிடைக்கலாம். சிவாஜியின் பிணத்திற்கருகே யாரோ அநுபந்தம் என்று சொல்லப் போக அதுவரை அழுது கொண்டிருந்தவளுக்கு தூக்கிவாரிப் போட்டது. துக்கத்தோடு அதிர்ச்சியும் குழப்பமுமாக அத்தனையும் ஒன்று சேர்ந்து, யார் பெயரை இவ்வளவு நாள் தேடிக்கொண்டிருக்குகிறேனோ அவர் இறந்துவிட்டாரே என்று வேண்டுதலை நிறைவேற்ற முடியாத விரக்தியில் விசயத்தை உளறிவிட்டாள். “நான் வேணும்னு செய்யல” என்று மறுபடியும் மறுபடியும் தலையில் அடித்துக்கொள்ளும்போது லதா அவளைப் பிடித்து அப்படியே அணைத்துக் கொள்கிறாள்.

உடல் சுருட்டி வைத்த சிறுதாம்பு போல இருக்கிறது. இரண்டுபேரும் ஒருத்தரையொருத்தர் தேற்றிக்கொள்கிறார்கள். ஆபரணம்தான் அன்றைக்கு சிவாஜியின் உடலை முச்சொந்தி வைத்து குதிரைப் பாடைக்கு மாற்றி நெல் வைத்துக் கட்டியவள். ஊரில் யாருமே செய்ய துணியாத அப்புதிய சடங்கை ஆபரணத்தை வைத்துக் கோவில் சாமிகள் நிறைவேற்றின. ஒருவகையில் அதுகூட விதியின் காரியமாக இருக்கலாம் என்று அவளும் அன்று ஒப்புக் கொண்டதுதான் காரணம். அதோடு அன்றைக்கு அடக்கச் சடங்கில் லதா பிரக்ஞையின்றி இருந்ததால் நடந்தது எதுவும் தெரியாது. ஆபரணம் அத்தனையும் சமீபத்தில் நடந்தது மாதிரி விளக்கினாள். எதற்காக விதியாண்டவர் கோவிலில் என்ன காரணத்திற்காக லதா போனாள் என்று ஆபரணம் கேட்காமலேயே அந்த உரையாடல் அதை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது. “ஏன் அநுபந்தம் அநுபந்தம் அநுபந்தம்னு சொன்ன?” என்று கேட்டாள். அந்த கேள்வி காதில் விழுந்ததும் லதாவுக்கு உடல் பதறியெழுந்தது. இத்தனை வருடங்களாக அந்தச் சொல் தன்னை எந்த உருவத்தில் வந்து கேட்கும் என்று பயந்துபோயிருந்தாள்.

தலையை முழங்கால்களுக்குள் வைத்துக்கொண்டு ‘ஆமாம்’ என்று தலையசைத்தபடி அழுகிறாள். சிவாஜியின் அடக்கம் முடிந்து நாற்பத்தியொன்றாம் நாள் இரவு, லதாவின் கனவில் ஒரு முகம் தெரிந்துள்ளது. அந்த உருவத்தை அவள் அதுவரை எங்கும் பார்த்ததில்லை. அது யாரென்றும் தெரியாது. மூன்று முறை கனவில் அந்த ஆள் வருகிறார். எதற்கு என்று தெரியாமல் லதா பேயைக் கண்டதுமாதிரி திடுக்கிட்டு விழித்து அழுகிறாள். ஆபரணத்திடம் சொல்லும்போதே லதா விசும்புகிறாள். முந்தியால் வாய் பொத்திக்கொள்கிறாள். ஆபரணம் அவளைச் சமாதானப்படுத்தி “எனக்கும் அப்படி யாரென்றே தெரியாத முகம் ஒரே ஒருதடவை கனவில் வந்திருக்கு” என்றதும் லதா திடுக்கிட்டு “எப்போ?” என்றாள். ஆபரணத்திற்குச் சரியாக நினைவில் இல்லை.

சற்று யோசித்தவள் “சிவாஜியை அடக்கம் பண்ணினதுக்கு பிறகுதான்”. என்றாள். “அவரை குதிரைப் பாடைக்கு மாற்றியபோது என் கத்தியின் பதம் பட்டு அவரது பொய் சிகை அவிழ்ந்து நான் பதறிப்போய் தடுமாறினேன். அன்னைக்கு நல்ல மழை வேற. தண்ணீபொத்து பொத்துனு பிணத்தில் விழுந்து முகமே அலங்கோலமாகிடுச்சு” லதா, “அந்த முகம் எப்படி இருந்தது?” என்றாள். அநுபந்து விதியின் கையில் விழுவதற்கு முன்பே இறந்துவிட்டார். லதா சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை. விதி அவரைக் கொன்றதாகத்தான் ஊரில் நாங்கள் அனைவரும் நம்பினோம். விதி அநுபந்தைச் சந்திப்பதற்கும் அநுபந்து இறப்பதற்கும் இடைப்பட்ட கால இடைவெளி ஒரு நாள் பொழுது. அந்த ஒரு நாள் பொழுது முழுக்க விதி அவருடன் இருந்துள்ளது. விதி அவர் இறப்பதற்காகக் காத்திருந்ததா?

அநுபந்து இறந்துவிடுவாரென்று எனக்கும் தெரியாது. ஆனால், அன்னைக்கு ஏதோ நடக்கப் போகிறதாக எனக்கு உறுத்தியது மட்டும் நிஜம் என்று சொன்னதுடன் லதா நடுங்குகிறாள். அநுபந்து இறப்பதற்குச் சில மணி நேரத்திற்கு முன்புதான் லதா காலையில் எழுந்து எப்போதும் போல அவருக்கு, பல் துலக்குவதற்கும் குளிப்பதற்கும் சேர்த்து வெந்நீர் காய வைத்துவிட்டு சாப்பிட இரண்டு தோசையை வார்த்து முடித்து, அவளுக்குத் தேநீர் போட்டுக் குடித்துக்கொண்டிருந்தாள். லதாவுக்கு அத்தனையும் முடிக்க கால்மணி நேரத்திற்கும் அதிகம் போகாது. வழக்கமானதுதான். ஆனால் அன்றைக்கு ஏனோ ஒவ்வொன்றையும் செய்யத் தவறுவது மாதிரி கைகளின் வேகத்தை மனவோட்டம் தள்ளிப்போட்டுக்கொண்டே போனது.

“சாமி அறை” லதா என்னிடம் காட்டுகிறாள். நான் உள்ளே எட்டிப் பார்க்கிறேன். கனமான தேக்குக் கதவால் சார்த்தப்பட்ட தாழ்வான நிலைவாசல். “அதுதான் அவர் தூங்கியெழுந்ததும் அலங்காரம் பண்ணிக்கிற அறை. எவ்வளவு நேரமானாலும் அலங்காரம் முடியறவரைக்கும் நான் இப்படி உட்கார்ந்திருப்பேன்.” லதா எனக்கு நேராக இருக்கிற சுவரைக் காட்டுகிறாள். அங்கு முன்பு சாய்விருக்கை இருந்திருக்கவேண்டும் இப்போது இல்லை. நான் கற்பனை செய்துகொள்கிறேன். லதா எழ ஒரு மணி நேரம் முன்னதாக தூக்கம் கலைந்த அநுபந்து தயாராக எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகும். அதனால் எந்நேரமும் விட்டுப்போன ஏதாவது ஒன்றைக் கேட்டு அநுபந்திடமிருந்து அழைப்பு வரும் என்று லதா அவரது அறைக்கு வெளியே கிடக்கும் சாய்விருக்கையில் அமர்ந்து கொள்வது வழக்கம். இருபது வருடத்தில் ஒருமுறைகூட அப்படி எதற்குமே அநுபந்து அவளை அழைத்தது இல்லை.

ஒப்பனையை நிறுத்தக்கூடிய எந்தவொரு குறுக்கீடும் அவசரமும் அதுவரை வந்தது கிடையாது. நாற்பது வருடங்களாக அதிகாலைப் பொழுதைத் தனது ஒப்பனை முடியும்வரை காத்திருக்கும் பணியாளாக வெளியே வைத்திருக்கிறார். லதாவுக்கு அந்தச் சில மணி நேரத்தில் செய்வதற்கு ஒன்றும் இருக்காது. மௌனமாக ஏதாவது செய்ய வேண்டும். திருமணமான புதிதில் அரைத் தூக்கத்தில் அமர்ந்திருப்பாள். கூந்தலைச் சிக்கெடுப்பது, துணி மடிப்பது, இடத்தைவிட்டு நகராத வேலைகளுக்கு அதுவொன்றுதான் வழி. சமீபகாலமாக பழைய புத்தகங்கள் சிலதை வாசித்து நேரத்தைப் போக்குகிறாள். அதிலும் ஆர்வமில்லை வெறும் திருப்புதல் மட்டும். சில சமயம் முதல்நாள் எடுத்ததேகூட வரும். சில பக்கங்கள் போன பிறகு தான் படித்த நினைவு எழும். சளைக்காமல் திரும்பவும் படிப்பாள்.

அநுபந்து வெளியே வந்ததற்குப் பின் செய்ய அவளுக்கு நிறைய வேலை காத்திருக்கிறது. ஆனால் சில நாட்களாக அவளால் அப்படி எதையும் செய்ய முடியவில்லை. ஏதோ நடக்கப்போவதுமாதிரி பதற்றம். சம்பந்தமில்லாமல் யாரோ வந்து காத்திருப்பதுபோல அடிக்கடி வாசலைப் பார்க்கும் உணர்வு துரத்துகிறது. அவர்கள் இருவரைத் தவிர அதிகாலையில் யாரும் வீட்டிற்கு வரப்போவதில்லை. அதோடு அநுபந்து ஒப்பனையை முடிக்காமல் யாரையும் பார்க்கமாட்டார். அன்றைக்கு இரண்டு பழைய புத்தகங்களைப் புரட்டி முடித்து, அலமாரியைத் தூசி தட்டி அடுக்கியும் வைத்துவிட்டாள் அநுபந்து இன்னும் வரவில்லை. வானம் துலக்கமாக இன்னும் நேரம் இருக்கிறது. சாமி அறையைத் தாண்டி வாசல் கதவு வரைக்கும் இரண்டு முறை நடக்கிறாள். உள்ளே அநுபந்து இருக்கிற சத்தமே இல்லை. திரும்பி புத்தக அலமாரி அருகே போவதற்குள் அநுபந்திடமிருந்து குரல் வந்தது. முதலில் அது ஏதோ விசித்திரமான சப்தம் என்று கவனிக்காதவள் பிறகு தன்னை யாரோ அழைக்கிறார்களோ என்று அடிக்கடி வெளியே பார்க்கிற பழக்கத்தால், முதலில் வாசலைத்தான் பார்த்தாள்.

பிறகுதான் அது சாமி அறையிலிருந்து வருவது தெரிகிறது. பெரிய ஏப்பம் மாதிரி. அழைப்பு இல்லை ஒருவிதமான கேவல் ஒலி. லதாவுக்கு கதவு தாழிடப்பட்டிருக்குமா என்றெல்லாம் யோசிக்கத் தோன்றாமல் தள்ளினாள். திறந்தபோது அநுபந்தம் தரையில் சரிந்திருக்கிறார். நிச்சயமாகக் கதவைத் திறந்த அதே சமயத்தில்தான் அவரைச் சாய்த்த விதியும் வெளியேறியிருக்கவேண்டும். யாரோ தன்னைத் தள்ளிவிட்டு ஓடுகிறார்கள் என்பதுபோல யாரையோ தேடுகிறாள். சரிந்திருக்கும் அநுபந்தின் நிலை இயல்பான தடுமாற்றம் கிடையாது என்பதால் அங்கு ஊகிக்க முடியாத ஒரு சம்பவம் நடந்திருக்கிறதென்பதும் தெரிந்துவிட்டது. சப்தமே எழாமல் தலையைப் பிடித்தபடி “அம்மா” என்று  சரிந்தாள். அநுபந்து நாற்காலியில் உட்கார்ந்தவாறே விழுந்திருக்கிறார். கால்கள் இன்னும் இருக்கையில் தொங்குவதுபோல மேலே உயர்ந்திருக்கிறது, தோள்கள் நிலத்தில் ஊன்றி, சரியாக தலை மட்டும் மேசையின் வெளிச்சத்திற்குள் வராமல் அடியில் போய்விட்டு இருந்தது.

ஒப்பனைப் பொருட்கள் தரையில் சிதறிக்கிடக்கின்றன. யாருடனோ சண்டை நடந்ததுமாதிரி இருக்கிறது அந்த இடம். அநுபந்தைப் பார்க்க அவளுக்குக் கிடைத்த கடைசி வாய்ப்பு அது. அந்த நொடியில் அடுத்தடுத்து நடப்பதைக் கிரகிக்கத் தெரியவில்லை. அதோடு அவளுமே துவண்டுபோய் நின்று கொண்டிருக்கிறாள். என்னசெய்வதென்று விளங்காமல். சரிந்திருக்கும் உடலைத் தூக்குவதா அல்லது யாரையும் கூப்பிடுவதா என்று முடிவெடுக்க முடியாமல் ஸ்தம்பித்துப்போய் சம்பந்தமில்லாமல் மேசையில் சிரிக்கும் சிவாஜிகணேசனின் வெவ்வேறு விதமானப் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். கைக்கு எட்டும் தூரத்தில்தான் அநுபந்தின் உடல். கால்விரல்கள் மேல்நோக்கிக் காற்றில் எதையோ பிடித்திருப்பதுபோல முறிந்துள்ளன. எந்த அசைவும் இல்லை. உயிர் இருப்பதற்கான கடைசித் தடயமும் போயிற்று.

அவளுக்கு விக்கித்துவிட்டது. கையை நீட்டித் தொட முடியும், இப்போது அவள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து அநுபந்தின் முகத்தைப் பார்க்க முடியும். ஆனால் எதையும் செய்விக்காதபடிக்கு அவளுடைய காலம் அப்படியே சுழியத்தில் நிற்கிறது. சற்றைக்கெல்லாம் யாரோ வருகிறார்கள் சரிந்த உடலை நிமிர்த்துகிறார்கள். அவளது தோள்களைப் பற்றி அழுகிறார்கள். அவ்வளவு நேரம் தேங்கிக்கொண்டிருந்த அதிகாலையின் இருளெச்சம் சட்டென உருகிக் காணாமல் போகிறது. பளீரென நுழையும் வெளிச்சத்தை அந்த அறைக்குள் லதா என்றைக்கும் பார்த்ததில்லை. ஒப்பனை விளக்குகளைத் தவிர சாளரத்தில் நுழையும் வெளிச்சத்தை அநுபந்து விரும்புவது கிடையாது.

ஒப்பனை விளக்குகள் அணைக்கப்பட்டன. அநுபந்தை சிவாஜி என்றுதான் அவளுக்கு அறிமுகப்படுத்தினார்கள். ஊரில் யாருக்கும் சிவாஜியின் உண்மையான பெயர்கூட தெரியாது. சிவாஜி என்றால் சிவாஜிகணேசனை அச்சுவார்த்தது போல் இருப்பார். நகத்தைக் கடிப்பது, மோவாயைத் தூக்கி மடக்கிய விரல்களில் வைப்பது, விடாமல் புகைப்பது, உதட்டை அடிக்கடி உருட்டுவது எல்லாம் சிவாஜியைக் கண்முன் விலகாமல் வைத்திருக்கும்.

லதா சிறுவயதில் கோவில் விழாக்களில் சிவாஜி கணேசனைப் பார்த்ததுண்டு. அவளுக்குப் பிடித்தமான நடிகர் இல்லையென்றாலும் சிவாஜியை நேரில் பார்க்கும் மனமயக்கத்தை அநுபந்து ஏற்படுத்திவிடுவார். அப்போது பார்த்ததுகூட அநுபந்தையா என்று திருமணமான புதிதில் தோன்றியிருக்கிறது. ஏனென்றால் அநுபந்தை அவள் சிவாஜியாகப் பார்த்ததிலிருந்து இப்போதுவரை அவருக்கு வயது அப்படியேதான் இருக்கிறது. வெயில் ஏறுவதற்குள் அரிமளம் முழுக்க சிவாஜியின் சாவுச்செய்தி போய்ச் சேர்ந்துவிட்டது. ஊர்க்காரர்கள் ஒவ்வொருவராக பெரிய பெரிய மாலையுடன் வந்துகொண்டிருந்தனர்.

பெண்கள் மார்பில் அடித்துக்கொண்டு வந்தார்கள். அவர்களெல்லாருமே லதாவைவிட வயது அதிகம். இத்தனை வருடத்தில் அவர்கள் யாரையும் லதா பார்த்தது இல்லை. அநுபந்தின் உடல் இன்னும் முற்றத்தில் வைக்கப்படவில்லை. வந்தவர்கள் உடல் இல்லாததால் லதாவைக் கட்டிக்கொண்டு அழுதனர். ஒரே நேரத்தில் அத்தனை உடல்களின் தழுவலையும் ஓலத்தையும் அவள் முதன்முறையாக எதிர்கொண்டாள். லதாவுக்கு அப்போதுதான் அங்கு என்ன நடக்கிறதென்பதே புரிகிறது. அறைக்குள் நின்றுபோயிருந்த காலம் மறுபடியும் சுழல ஆரம்பிக்கிறது.

அந்த இடம் மெல்ல மெல்ல புழுக்கத்தால் நிறைவதை உணர்ந்தாள். வியர்வை வீச்சம் குமைகிறது. அவள் மெல்ல விசும்பினாள். என்னவென்றே தெரியாமல் மனம் எடையிழக்கிறது. எடை இழக்க இழக்க ஆசுவாசமாகிறது. அழுவதற்கு இழப்பு மட்டுமே நிச்சயம் காரணமாக இருக்காது. அவளுக்கு அந்தக் கணத்தில் அழவேண்டும் அவ்வளவுதான் என்று தோன்றிற்று. ஓயாத பேச்சுகளும் ஒப்பாரிகளும் எழுவதும் அடங்குவதுமாக இருந்தது. அநுபந்தின் உடலைக்கொண்டு வருவதைத் தள்ளி போடுகின்றனர். வந்ததும் உடலுக்கு அணிவிக்க முதல் மாலையுடன் பழைய மன்னர் குடும்ப வாரிசும் கட்சித்தலைவர்களும் காத்திருக்கிறார்கள். இதில் யாரை முதலில் அனுமதித்தாலும் பிறிதொருவருக்கு அவமதிப்பு நிச்சயம்.

ஆனால் சிவாஜி இறப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்பு அவர் கடைசியாகப் பங்கேற்ற கட்சிக்கூட்டத்தில் “எனது இறுதி அஞ்சலியை முதலில் சபாக்காரர்கள்தான் செய்யனும்” எனச் சொல்லியதாக நாடக சபா ஆட்கள் அங்கு இருந்த அத்தனை பேருக்கும் அறிவித்தார்கள். சபாக்காரர்களின் அழுத்தமான குரல் பெண்களின் பெரும் ஓலத்தையும் நிறுத்திற்று. அநுபந்திற்கு இவ்வளவு அழுத்தமான குரல் வளம் இல்லை. சிவாஜியிடமிருந்து அவருக்குக் கிடைக்காதது இது ஒன்றுதானென நாடகக்காரர்கள் எப்போதாவது விசனப்படுவது உண்டு. லதாவிடம் சில சமயம் உரிமையாக, ஏதாவது சுக்கு மிளகை போட்டுக் கொடுக்கக்கூடாதா என்பார்கள்.

லதா அவரது ஒப்பனை விசயங்களில் தலையிடும் அளவிற்கு அதன் எல்லைக்குள் நுழைந்தது இல்லை. சிவாஜியின் ஒவ்வொரு அசைவும் பாவனையும் அது எங்கிருந்து எப்படித் தொடங்கவேண்டும் என்று அநுபந்திற்கு நன்றாகத் தெரியும். அந்த எல்லையில் யாரை, எப்படி, எப்போது அனுமதிப்பது என்கிற சூட்சமத்தை அவர்தான் வைத்திருந்தார். அப்படியொரு எல்லை இருப்பதே அவளுக்குத் திருமணமான புதிதில் தெரியாது. அம்மா இறந்தபிறகு லதாவிற்கு ஒரு துணையை ஏற்படுத்த சுசிலாவிற்கு ஏற்பட்ட அவசரத்தில் நிகழ்ந்தது சிவாஜியுடனான திருமண துவந்தம். சிவாஜியைக் கல்யாணம் பண்ணப் போகிறதாக ஊருக்குள் செய்தி பரவியபோது உண்மையில் லதா அதைத் தட்டிக்கழிக்க வேறு வழி தெரியாமல் இருந்தாள். அநுபந்தை சிவாஜியாக முதன்முதலில் கோவில் விழாக்களில் பார்த்திருக்கிறாள். அதன்பிறகு அவள் அம்மாவுடன் சபா அலுவலகத்தில்.

“அநுபந்து எப்போதும் சிவாஜியாகத்தான் வருவார். ஒப்பனையை எப்போது எங்கு செய்துகொள்கிறாரென அவளுக்கு ஆச்சர்யமாக இருக்கும். சிவப்பு நிற கோட் சட்டையும் சந்தன நிறத்தில் பேன்ட்டும் உரைமாவு பொங்கியதுபோன்ற முகப்பௌடருடன் (வசந்த மாளிகை) சிவாஜியைப் போல அழகாக நடந்து வருவார். வயது இவ்வளவு என்று யாரும் உறுதியாகச் சொல்ல முடியாது.” லதாவின் அம்மா இறக்கிறபோது லதாவுக்கு இருபத்தி மூன்று வயது. விதி தனக்கு இப்படியொரு திருமணத்தை முடிச்சிடும் என்று நினைத்து பார்க்கவில்லை.

லதாவின் அம்மாவுக்கு நாடக சபாவில் சிவாஜிதான் வேலை வாங்கிக் கொடுத்து, கணவனை இழந்து இரண்டு பெண் குழந்தைகளுடன் நின்றபோது உதவியிருக்கிறார். அப்படி நிறைய பெண்களுக்கு சிவாஜி உதவி இருக்கிறார். அவர்களுடன் சிவாஜிக்குத் தொடர்பு இருப்பதாக ஊருக்குள் ஒரு செய்தியும் உண்டு. வீட்டின் வாசலிலும் திண்ணையிலும் கட்சிக்காரர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.

பெண்கள் அத்தனை பேரும் வீட்டின் வரவேற்பறையாக இருக்கும் தாழ்வான ஓடு வேய்ந்த இடத்தில் வழி விட்டு இருபுறமுமாக அமர்ந்திருக்கிறார்கள். ஒரு சில விசும்பல்கள் மட்டும்தான் அதுவும் புதியவர்களின் வருகையைப் பொறுத்து. அதன்பிறகு முணுமுணுப்பு மட்டும் கேட்கிறது. லதா தாழ்வாரத்தின் இடது பகுதியின் மூலையில் அமர்த்தப்பட்டிருக்கிறாள். அவளுக்கு நேராக சில பெண்கள் நெருங்கி அமர்ந்திருக்கிறாள். லதா அங்கிருந்த அத்தனை பெண்களையும் கவனித்தாள். அவளுடைய அம்மா வயது இருக்கலாம். சிவாஜியின் உடல் இன்னும் வராததால் இப்போது யாருமே அழவில்லை. ஒருவருக்கொருவர் எதையோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். வீட்டின் உள்ளே எட்டிப்பார்த்து சலித்துப் போயிருக்கவேண்டும்.

அவர்களுக்கு நிறைய வேலைகள் இருந்தன, யாரோ ஒரு பெண் மீன் ஆய்ந்ததோடு வந்திருக்கிறாள். ஒரு இறப்பு அவர்களது அன்றாடத்தைத் துளியும் மாற்றிவிடாது. அடிக்கடி முகத்தை முந்தியால் துடைத்துக்கொள்வதும் பிறகு அதால் வாயை மறைத்து காதுக்குள் விழும்படியான சொற்களை லாவகமாகக் கொடுப்பதுமாக பாவனைகளை அரங்கேற்றிக்கொண்டிருந்தார்கள். லதாவுக்கு அந்தக் கதைகளெல்லாம் தன்னைப் பற்றியதுதானா என்று எண்ணத் தோன்றிற்று. ஆனால் அவர்களுக்குப் பேச அங்கு நிறைய கதைகள் இருக்கின்றன. சீக்கிரமே தங்களுடைய வீட்டில் கிடக்கும் வேலைகளுக்குத் திரும்பவேண்டும்.

கிடைக்கிற சிறிய ஆசுவாசத்தில் பேசிக்கொள்ள நிறைய இருந்தும் கதைகளை விவரிக்காமல் அதன் மையத்தைப் போட்டு உடைத்து விடுவதுதான் சரியான கதைசொல்லல். அதாவது, கதை தொடங்கியதும் அடுத்து அதன் மைய இழைக்குப் போய்விடுகிறது. ஆமாம் அப்படித்தான் லதாவின் கதையைக் கூறுகிறார்கள். சிவாஜியை விராலிமலை முருகன் கோவிலில் மாப்பிள்ளைக் கோலத்தில் பார்த்தபோது லதாவுக்கு ஒருகணம் சிரிப்பு வந்துவிட்டது. பிறகு பதற்றத்துடன் அங்கு நடக்கும் விபரீதத்தை என்ன செய்வதென்று புரியாமல் அழுகையை அடக்கிக்கொண்டு கவிந்து கொண்டாள். அநுபந்து சிவாஜி ஒப்பனையில் பட்டு வேட்டி சட்டையில் உதட்டை முறுக்கியபடி வந்தார்.

சபாக்காரர்கள் அவரை பாரதவிலாஸ் சிவாஜி என்று சத்தமாக வரவேற்றனர். என்னைக்கும்விட அன்றைக்குத்தான் சிவாஜிக்கே உரிய வெட்கத்தைச் சரியாக உதிர்க்கிறாரென உச்சிமுகந்ததும் மகிழ்ச்சியில் திளைத்துவிட்டார். வந்தவர்களை ஒவ்வொருவராக விசாரித்து தனது ஒப்பனையைப் பற்றி என்னவெல்லாம் விதந்தோதுகிறார்களெனச் சளைக்காமல் வாங்கினார். அதில் அவருக்கு ஒருபோதும் அவசரம் இருக்காது. பொறுமையாகப் புன்னகைத்தபடி சொல்பவர்களது தோளில் கை வைத்துக் கேட்கும் தோரணை அவர்களை நிறுத்தவிடாமல் பண்ணும். தாலிகட்டுவது கோவிலில் தேங்காய் உடைப்பது மாதிரி சட்டென முடிந்துவிட்டது. லதாவின் முகத்தை வாஞ்சையுடன் பிடித்து அத்தனைபேர் முன்னிலையில் நெற்றியில் முத்தமிட்டு மார்பில் சரித்துக்கொண்டதை அவளும் ரசிக்கும்படி ஆகிற்று.

சிவாஜி லதாவிடம் அன்பாகத்தான் இருந்தார். இன்றைக்கு நேற்று இல்லை இருபது வருடங்களாக அவர் லதாவை கொஞ்சியபடிதான் டீ போடச் சொல்லுவார். வாசல் தெளிக்கக் காத்திருப்பார், தோசை வார்க்க அடம்பிடிப்பார், புடவைக் கட்ட விடமாட்டார், வாத்து போன்ற இவளது நடையைக் கேலி பண்ணுவார், இடுப்பில் கை ஊன்றி மோவாயில் விரல் வைத்து ரசிப்பார், அடிபட்ட இடத்தில் மருந்து தேய்ப்பதென்றால் போதும் பொம்மைமாதிரி வந்துவிடுவார், இது பரவாயில்லை நடனம் ஆடும்போது நாக்கைக் கடித்தபடி குழந்தை பொய் சொல்வதுமாதிரி நெளிவார். ஆரம்பத்தில் இதெல்லாம் அவளைப் பெரியதாக ஒன்றும் செய்யவில்லை. கலையில் சுத்த சிருஷ்டி கொண்ட கலைஞர்களுக்குரிய மனநிலை இது.

அவர்கள் தங்களை ஒவ்வொரு கணத்திலும் அப்படித்தான் உணர முடியும் என்று விட்டுவிட்டாள். ஒருநாள்கூட சிவாஜி ஒப்பனையின்றி லதா அவரைப் பார்த்தது இல்லை. பெரும்பாலும் நாடகங்களும் விழாக்களும் இரவில் நடந்து பகலில் முடிவதால், விடிந்து வெயில் ஏறிய பிறகுதான் வீடு திரும்புவார். வந்ததும் அறைக்குள் போய் ஓய்வெடுப்பார். பிறகு நண்பர்களைச் சந்திக்க நாடக சபாவுக்கும் மன்னரின் பழைய அரண்மனைக்கும் கட்சி அலுவலகத்திற்குமென தவிர்க்கமுடியாத அழைப்பு வந்துவிடும். அதனால் அநுபந்து எப்போதும் சிவாஜியின் ஒப்பனையில்தான் இருக்கிறாரென்று லதா நினைத்துக்கொண்டிருந்தாள்.

வீட்டிலும் அநுபந்துவின் பழைய புகைப்படங்கள் ஒன்றுமே இல்லை. ஆனால் வீடு முழுக்க அவருடன் நிற்கின்ற முக்கியஸ்தர்களின் புகைப்படங்கள் தொங்குகின்றன. அனைத்திலும் சிவாஜியின் கம்பீரத் தோற்றம்தான் இருக்கிறது. லதாவால் அநுபந்து எப்படி இருப்பாரென்று கற்பனை செய்ய முடியவில்லை. சாய்வு நாற்காலியில் அமர்ந்து நண்பர்களுடன் அவர் பேசிக்கொண்டிருக்கும்போது லதா அவரது குரல் ஒலியை கண்களை மூடி கேட்பாள். அது மட்டும்தான் அநுபந்துவினுடையது. அதில் கார்வை இருக்காது, கனமான சொற்கள் எழாது, ஆழமான உச்சரிப்பு வராது. மென்மையானது பெண்களுக்குரிய சன்னமான குரல். சிரிப்பில் சலசலப்பு கேட்கும்.

அடக்க முடியாத சிரிப்பில், சப்தம் வழுக்கி வாத்திய ஒலியைப் போல் எழும். அந்தக் குரலை மறைக்க அநுபந்து படாது பாடுபடுவார். அவரை மறந்து உரையாடலில் லயித்திருக்கும்போதுதான் அது வெளுத்து வெளியே தெரியும். அடக்கம் செய்வதற்கான எல்லாக் காரியங்களும் நடந்துகொண்டிருந்தன. சிவாஜியை உட்கார்த்தித் தூக்கிப்போக ராஜ நாற்காலி ஒன்றும் அதை வைக்க ரதம் ஒன்றும் அலங்கரிக்கப்பட்டு வந்தது. பெண்கள் சிலர் ஒப்பனைகளில் வந்திருந்தார்கள். காலையில் பார்த்த முகங்கள் இல்லை.

இவர்கள் புதியவர்கள். வெவ்வேறு ஊர்களிலுள்ள நாடகக்காரர்கள். பட்டுப்புடவையும் பெரிய பூ செருகிய கொண்டைத்தலையும் அத்தர் மணக்க அமர்ந்திருக்கிறார்கள். கண்ணீர் வராமல் அழுவதும் முகத்தைத் துடைத்துக்கொள்வதுமாக இருந்தார்கள். ஒவ்வொருவரும் தங்களது பெயரைச் சொல்லி சிவாஜியை அழைக்கிறார்கள். சரோஜாதேவி அருகிலிருந்த விஜயாவைக் காட்டுகிறாள், பத்மினி அவரிடம் சுஜாதாவை அழைத்து வருகிறாள், வாணிஸ்ரீ அழுவதை அங்கிருந்த யாருமே விரும்பவில்லை அவ்வளவு அழகான முகம். வாணிஸ்ரீ மட்டும் லதாவின் அருகில் வந்து உட்கார்ந்துகொண்டாள். அவளுடைய கர்ப்பப்பை சிகிச்சைக்குக் கொடுத்தப் பணத்தைத் திருப்பித் தரமுடியவில்லையென்று ஆதங்கப்பட்டாள்.

இந்த நடிகைகளைப் பார்ப்பதற்கென்றே சாவுவீட்டில் கூட்டம் அதிகம். பெரிய பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் ஆசிரியர்கள் அத்தனைபேரும் இங்குதான் இருந்தார்கள். வெவ்வேறு ஊர்களிலிருந்து நாடகக்காரர்கள் வேனில் வந்து இறங்கிக்கொண்டே இருக்கிறார்கள். எல்லோருமே ஏதவாது ஒரு வேஷத்தில். ரஜினி வந்தார், சப்பாணி கமல் வந்தார், நிறைய எம்ஜிஆர்கள் வந்தனர். எனக்கு வேடிக்கையில் பெரிய ஆர்வம் இல்லை. லதாவின் பக்கத்தில் போய் நிற்பதைத்தான் விரும்பினேன். சிவாஜியின் வீடும் எங்கள் வீடும் நேர் வாசல். சிவாஜி வீட்டுக்கு எதிர் வீடு என்பதுதான் எங்களின் அடையாளம். லதாவிற்கு திருமணமானது எனக்கு நினைவிலில்லை. நான் சின்னக் குழந்தை. லதாவின் வீட்டில்தான் எப்போதும் இருந்திருக்கிறேன். விவரம் அறிந்து லதாவைப் பார்க்கிறபோது அவள் சின்னப்பெண் மாதிரிதான் தெரிந்தாள். மாடிப்படியில் அமர்ந்து லதா அழுவதை நான் பார்த்திருக்கிறேன். அழகான முகம். யாருமில்லாத தனிமை என்னவென்று அந்த முகம் எனக்குக் காட்டியது. லதா எந்நேரமும் அழுகிறாள்.

நல்ல மதிய வெயிலில்கூட மாடிப்படியில் அமர்ந்து அழுவாள். தாம்பத்தியக் கோளாறு என்று அம்மா பேசுவதைக் கேட்டிருக்கிறேன். சிவாஜிக்கு நூறு வயதுகூட இருக்கலாம். உடம்பு இரண்டு ஆளை முறுக்கி வைத்ததுமாதிரி. எப்போது அவர் சிவாஜி வேஷம் போட ஆரம்பித்தார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் சிவாஜிக்காக முகச் சிகிச்சை செய்துகொண்டது ஊருக்கே தெரியும். சிவாஜிக்குக் கல்யாணம் ஆகி ஐந்தாறு வருடங்கள் இருக்கும். ஒருநாள் திடீரென்று அவர் வீட்டில் பெருங்கூட்டம் கூடியது. நல்ல வெயில் காலம் அது. எல்லோரும் மொட்டை மாடியில்தான் படுப்போம். கருணாநிதியைக் கைது செய்து ஒன்றிரண்டு மாதங்களுக்கு ஆகியிருந்தது. திருவிழாவோ பொதுக்கூட்டக் கொண்டாட்டங்களோ நடக்காமல் இருந்த சமயம். சிவாஜிகணேசன் இறந்த செய்தி வருகிறபோது நாடக சபாக்காரர்கள் நூறு பேர் லதா வீட்டில் இருந்தனர். இரவு நேரம் சிவாஜி மாடியில் படுத்திருக்கிறார். எப்படி இதைச் சொல்வதென்று புரியாமல் மெல்லத் தயங்கியபடி தெருவிளக்கில் நிற்கிறார்கள்.

காரணம் சிவாஜி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்று சிவாஜி பலமுறை தெரிவித்திருக்கிறார். வந்தவர்கள் ‘சிவாஜி’ என்கிற பெயரை மட்டும் சொல்லி சூழலை ஆயத்தமாக்கியதும் சிவாஜி அதைப்புரிந்துகொண்டார். அவர்கள் பயந்தது போல அசம்பாவிதமாக ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் சிவாஜி நிலைகுலைந்துதான் போனார். அடுத்த சில மணி நேரத்தில் சபாக்காரர்கள் ஒன்றுகூடி சென்னை செல்வதற்குத் தயாரானார்கள். வாழ்க்கையில் அப்படியொரு இரவை தான் அனுபவித்ததே இல்லையென்று லதாவிடம் அடிக்கடி சிவாஜி புலம்பியதாகச் சொல்வார். இரவு முழுக்க மனம் சிவாஜியின் பாடல்களை பாடிக்கொண்டே இருக்க, ஒப்பனை இல்லாமலேயே தான் சிவாஜியாக மாறிக்கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறார்.

“காலையில் இறங்கியதும் சபாக்காரர்கள் வற்புறுத்தித்தான் அன்றைக்கு சிவாஜி ஒப்பனையைச் செய்துகொண்டேன். செய்யக்கூடாது என்று இல்லை ஆனால் எனக்கு அப்போது அது ஏனோ தேவைப்படவே இல்லை” நாள் பூராவும் காத்திருந்து இறுதி மரியாதை செலுத்த கும்பலோடு கும்பலாக ஜனநெருக்கடிக்குள் சிவாஜிகணேசனை முதன் முறையாக அன்றைக்குப் பார்க்கிறார். அவரோடு அப்படி நின்று பார்த்தவர்கள் சிவாஜியின் ஒப்பனையோடு நூறு பேர். திரும்பும் இடமெல்லாம் சிவாஜி முகங்கள். அத்தனை சிவாஜிகளும் அழுகிறார்கள். அநுபந்துக்குத் துடைக்கத் துடைக்கக் கண்ணீர் பெருகிறது. அவரால் அங்கு நிற்கமுடியவில்லை. தலைக்கேறிய போதையாய் சமன் சரிகிறது. பெட்டியில் இருக்கும் சிவாஜியின் முகத்தை இத்தனை முகங்களிலிருந்து துலக்கி எடுத்துக்கொள்ளமுடியாமல் தடுமாறி சரிந்துவிட்டார்.

விழித்தபோது ஒரு நிழற்தாங்கலில் அமர்த்தப்பட்டிருந்தார். அவரைச் சுற்றி நிறைய சிவாஜிக்கள். கூட்டத்தில் தொலைந்தவரை அவர்கள்தான் இரவு தங்க வைத்து காலையில் அவர்களுடனே அரிமளம் வரை அழைத்து வந்தார்கள். 

அன்றைய இரவு பிரயாணத்தில் சிவாஜிக்களுடன் சேர்ந்து அநுபந்துவும் இனி சிவாஜியாகவே இருப்பதென்கிற முடிவிற்கு ஒப்புக்கொண்டார். அவர்களால் சிவாஜியாக இருக்க முடிந்ததா என்று தெரியவில்லை. ஆனால் இவர் அதற்கான அத்தனை பிரயத்தனங்களையும் ஆரம்பித்தார். தாடி வைத்து மறைத்த சிறிய மோவாயை சிகிச்சை செய்து சரியாக்கினார் (தோற்றத்தில் சிவாஜியிடமிருந்து கிடைக்காதது அது ஒன்றுதான்).

புருவம் தடிப்பாக மாறும்படி சிரைத்துக் கொள்வதும் நிரந்தரமாக தலையில் விக் வைப்பதுமாக எப்போதும் சிவாஜியாகவே மாறத் தொடங்கிய சமயம்தான் லதா விதியாண்டவரைத் தேடிக் கிளம்பினாள். நேரம் ஆக ஆக சாவு வீட்டில் திருவிழாபோல சிவாஜியைப் பார்ப்பதற்கென்று கூட்டம் கூடிற்று. சிவாஜிக்கு வாரிசு இல்லை அதோடு லதாவின் உறவு வழியில் யாரும் கொல்லி வைக்க முடியாது. அதனால் சிவாஜியின் உறவுக்காரரில் ஒருவர்தான் செய்ய முடியும்.

லதாவுக்குத் தெரிந்து இத்தனை வருடத்தில் சிவாஜி தன்னுடைய உறவுக்காரர்கள் என்று யார் வீட்டிற்கும் போனதில்லை. ஆனால் அவருக்குப் பெரியப்பா ஒருவர் இருந்தார். இறப்புக்கு சிவாஜி சென்றிருக்கிறார். பெரியப்பா வீட்டிலிருந்து யாரும் வந்திருக்கிறார்களா என்று விசாரித்தார்கள். பெரியப்பாவின் மகன் இறந்துவிட்டான் அவரது பையன் ஒருவர் வந்திருந்தார். சிவாஜிக்கு மகன் முறை. அதாவது, லதாவுக்கும் சிவாஜிக்கும் பிறவா மகன். கொள்ளி சடங்குகளை அவரிடம் ஒப்படைத்தனர். லதா அன்றுதான் அப்படியொரு உறவைக் கேள்விப்படுகிறாள். தலை நரைத்து ஒல்லியாக வேட்டியும் அழுக்குச் சட்டையுமாக இருந்தார்.

அவளைவிட ஐந்து வயது அதிகம் இருக்கும். கடமைக்கு வந்து போய்விடலாம் என்று வந்தவரை திடுதிப்பென்று உருவான உறவு முறையில் நிற்க வைத்ததும் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. முதலில் முடியாது என்று மறுத்தார். ஊர்க்காரர்களும் கட்சிக்காரர்களும் சம்மதிக்க வைத்தனர். அதிலும் அம்மா முறையில் சில சடங்குகளை லதாவுக்குச் செய்யவேண்டியிருந்தது. இதையெல்லாம் பார்த்து லதா தலையில் அடித்துக்கொண்டு அழுவதைப் பார்த்தேன். ஆரம்பத்தில் சிவாஜிமேல் லதாவுக்கு அப்படியொன்றும் வெறுப்பு இல்லை. நானே பலமுறை அவர்கள் இருவரையும் காரில் ஒன்றாகப் போகிறபோது பார்த்திருக்கிறேன்.

சிவாஜியை மணந்ததில் லதாவுக்குச் சம்மதம் இல்லை என்பது மட்டும் ஊருக்கே நன்றாகத் தெரியும். “தினமும் சிவாஜி ஒப்பனையோடுதான் இருப்பார். அதைக் கலைப்பதற்கே அவருக்கு விருப்பம் இருக்காது. எந்நேரமும் வீட்டிலிருக்கும் கண்ணாடி முன் நிற்பார். வீட்டில் எல்லா அறைகளிலும் நான்கு திசைகளிலும் ஆளுயரக் கண்ணாடி உண்டு. அவருக்குப் பரிசளிப்பவர்கள்கூட நல்ல தரமான கண்ணாடி இருக்கிறது தரட்டுமா என்றுதான் கேட்பார்கள். அது மட்டுமில்லாமல் ரெண்டு வருஷம் போனால் அவரே ஒவ்வொரு கண்ணாடியையும் மாற்ற ஆரம்பித்து விடுவார். ரசம் போகாத கண்ணாடிகூட வெளுத்துக் கொண்டிருப்பது அவருக்குத் தெரியும். விழுகிற பிம்பத்தை நான்கு பக்கமும் விளக்கைப் போட்டு உற்று பார்ப்பார். கண்ணுக்குத் தெரியாத எந்தக் கீறல் வழியாக வெளிச்சம் ஊடுறுவியது, எந்த இடம் மங்கலாக மாறியது என்று அவரைத் தவிர யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

உடனே அந்தக் கண்ணாடியை மாற்றிடுவார். அவரைச் சுற்றி கண்ணாடிகள் இருக்கனும். எந்த பிம்பமும் அவரை சோபையாகக் காட்டிடக்கூடாது. அவர் நிற்கிற இடத்திலிருந்து அவரைச் சுற்றி எந்தப் பிம்பம் அசையுதுனு நல்லா தெரியும். இறுக்கி அணைக்கிறப்ப ஹால் மூலையில் சாய்வாக இருக்கிற கண்ணாடியில் எப்படி விழுகிது பார்” என்பார். லதாவுக்கு இதெல்லாம் ஆரம்பத்தில் வேடிக்கையாக இருந்திருக்கவேண்டும். இதை ஒரு விளையாட்டு போல அவர் அவளிடம் துல்லியமாகச் சொல்கிறார். லதாவும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் வீட்டினுள் அவர்கள் இருவர் மட்டும் இருக்கையில் பிம்பங்களின் அசைவு சுற்றி நின்று சிலர் பார்ப்பதுபோல அசௌகரியத்தை உண்டு பண்ணும்.

சில சமயம் லதா தனிமையில இருக்கிறபோது திடுக்கிட்டு போயிருக்கிறாள். தலையணையில் படுத்த படி புத்தகங்களைப் புரட்டுகிறபோது வெளியே யாரோ வருகிற சத்தம் கேட்டுத் திரும்புவதற்குள் எந்தக் கண்ணாடியிலாவது பார்வை மோதி அவள் உருவம் நிலைகுலையச் செய்துவிடும். சிவாஜியிடம் இதெல்லாம் சொல்ல முடியாது. அவர் கேலியாகச் சிரிக்கிறார். சிவாஜி ஒப்பனையைக் கலைக்காததற்கு கண்ணாடிகளும் ஒரு காரணம். இந்தக் கண்ணாடிகளாலேயே லதாவை அவர் அதிகம் நேசித்தார். கட்டி அணைப்பது முத்தமிடுவது தோளோடு தூக்கிச் சுற்றுவது எனச் சளைக்காமல் செய்வார். சிவாஜிக்கு மதுப் பழக்கம் அறவே இல்லை. ஆனால் எந்நேரமும் மதுவின் போதையில் இருப்பது போல உளறுகிறார்.

அதாவது. எந்த இயல்பான நடத்தையும் அவருக்கு மிதமிஞ்சிய தன்மை கொண்டவை. போதையில் இருப்பவர்கள் கோபத்தைத் தவிர மற்ற உணர்வுகளைச் சமாளிக்க முடியாமல் சரணடைவது மாதிரி. சிவாஜியின் நாடகீய பாவனை எதையும் இயல்பாக நடத்தவிடாது. விதவிதமாகச் சிரிப்பது அழுவது கோபம் கொள்வது. லதாவுக்கு மிகவும் அலுப்பாக இருக்கும். “உங்களால் சாதாரணமாக இருக்க முடியாதா? ஏன் இப்படி எப்போவும் நடிச்சுட்டு இருக்கிங்க” அவளால் பொறுக்க முடியவில்லை. ஒருமுறை வீட்டிலுள்ள அத்தனை கண்ணாடிகளையும் போட்டு உடைத்தபோது சிவாஜி கல்லென்று அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார். அதுவும் ஏதோவொரு சினிமாவில் சிவாஜி அமர்ந்திருக்கும் நிலை. சண்டை போட்டுக்கொண்டு எங்கும் போவதற்கு பாவம் லதாவுக்குப் போக்கிடம் இல்லை. சிவாஜி சமாதானம் செய்கிறார். ஆனால் அவளால் அதை எதிர்கொள்ள முடியாது. இப்படி அடிக்கடி சண்டை நடக்கும். எங்க வீட்டிலிருந்து அம்மா ஓடிப் போய் சமாதானம் செய்யும்போது லதா அறையைவிட்டு வெளியே வர மாட்டாள். சிவாஜி அம்மாவிடம் “கல்யாணமே வேண்டானு நான் இருந்தேன். இதெல்லாம் எனக்குச் சரிபடாதுனு அப்போவே தெரியும். இதனாலதான் நல்ல கலைஞர்கள் திருமண பந்தத்தில் இருக்கிறது இல்லை” என்று அழகாக திருத்தமாகச் சொல்வார். சிவாஜிக்குப் பெண்களுடன் தொடர்பு இருந்தது ஒன்றும் பெரிய ரகசியம் கிடையாது. அது ஊருக்கே தெரியும். ஒரு காலத்தில் சலிக்கச் சலிக்க சல்லாபத்தில் திளைத்திருந்தார். நாடகத்திற்கு போகிற ஊர்களில் எப்படியாவது ஒருத்தி கிடைத்துவிடுவாள்.

ஆனால் யாரையும் சிவாஜி வற்புறுத்தியது இல்லை. அதே சமயம் அவரை மறுத்து யாரும் போனதும் இல்லை. சிவாஜி அதில் கைகாரர். ஒரு கட்டத்தில் நாடகங்கள் நிகழ்வது நின்று போன போது இதெல்லாம் ஓய்ந்தது. தொலைக்காட்சி பாடகர்களால் திருவிழாக்களிலும் இவர்களுக்கு மவுசு குறைகிறது. ஆடல் பாடல் குழுக்களுடன் சேர்ந்து கொண்டு திருவிழாக்களில் சிவாஜி மறுபடியும் தோன்றினார். பழைய சல்லாபத்திற்கு இடம் இல்லை. இது மிகவும் மேல்தட்டு உலகத்தைப் போன்று. சிவாஜிக்கு மேடையில் இரண்டு அல்லது மூன்று பாடல்கள் மட்டும் பிறகு வீட்டிற்குத் திரும்பிவிடுவார். லதாவுடன் செலவிடுவதற்கு நிறைய நேரம் கிடைத்தது. லதாவுக்கு குழந்தைப் பிரியம். சிவாஜி அதைச் சட்டையே செய்யவில்லை. எப்போது ஆரம்பித்தாலும் “நடக்கும் போது நடக்கும்” என்று தட்டிக் கழிப்பது லதாவிற்கு எரிச்சலூட்டும். அன்றைக்கு சிவாஜியின் சாவு ஊரில் ஒருத்தரைக் கூட விட்டு வைக்காமல் அவரது வீட்டிற்கு இழுத்து வந்தது. எங்கு பார்த்தாலும் “சிவாஜி செத்துப்போனார்” என்று முக்கத்துக்கு முக்கம் பெண்கள் பேசித் திரிந்தனர்.

அப்படித்தான் ஆபணரத்தையும் எங்கிருந்தோ சாவுச் செய்தி அழைத்து வந்தது. ஆபரணத்துக்குச் சொந்த ஊர் கிடையாது. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு ஊராக சாணம் பிடிக்கக் கிளம்பிவிடுவாள். ஆபரணத்தை லதாவுக்கு அவ்வளவாக நினைவு இல்லை. ஆனால் ஆபரணத்துக்கு ஊரிலுள்ள அத்தனைபேரும் பரிச்சயம். நேராக சிவாஜியைப் போய் பார்த்து அழுது தீர்த்துவிட்டு பெண்கள் அமர்ந்திருந்த இடத்தில் சென்று அமர்ந்தாள். எல்லோருமே நடிகைகளைப் போன்று ஒப்பனையில் இருந்தனர். அவளுக்கு அவர்கள் யாரென்று அடையாளம் தெரியவில்லை. நடிகைகள் யாரும் அழவில்லை. அந்தரங்கக் கதைகளைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதில் அதிகமும் சிவாஜியைப் பற்றியவை. சிவாஜியின் உடன் பிறந்தவர்கள் (எத்தனைபேர் என்று அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்), நாடகத்திற்கு நடிக்க வந்தது, சபாக்காரர்களுக்குள் நடந்த சங்கப் பிரச்சினை என நிறைய. ஆபரணமும் அன்றைக்குத்தான் சிவாஜியைப் பற்றி முழுவதும் தெரிந்துகொள்கிறாள். ஒருகட்டத்தில் காதில் விழுந்த ஏதோவொரு செய்தி அவளைத் திடுக்கிட வைத்தது. வலிப்பு வந்தது மாதிரி கால்கள் நடுங்கிவிட்டன. யாரிடம் எப்படிச்சொல்வதென்று புரியாமல் தலையைப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.

பக்கத்திலிருந்த நடிகை ஒருத்தி (இடம் கொடுத்து அமர வைத்தவள்) இவள் அழுவதைப் பார்த்துக் கேட்டதும் “சிவாஜிய விதியாண்டவர் கோவில் செல்லையன்தான் கொன்னுட்டான்” என்றாள் மெதுவாக. சட்டென்று அந்த இடம் அமைதியாகிற்று. எல்லோருடைய முகமும் கூர்ந்து அவளை நோக்கின. ஆபரணம் பதற்றத்துடன் “விதியாண்டவர் கோயில் குளக்கரையில அனுபந்தம்னு யாரோ ஒரு பொம்பள மூனு முறை சொல்லிட்டு கிளம்பிட்டாள்” என்று பயத்துடன் வாய் பொத்துக்கொண்டு சொன்னாள். அடுத்த கணம் அந்த இடமே வெலவெலத்துப்போனது.

விசயம் சபாக்காரர்களுக்கும் ஊர் பெரியவர்களுக்கும் போனது. அவர்கள் அது உண்மைதானா என்று ஆபரணத்தை அழைத்துக் கேட்டனர். ஆபரணம் பதில் சொல்ல முடியாமல் அழுதாள். “யார் என்ன ஏதுனு தெரியல ஆனா சாய்ந்தரம் இருட்டுறப்ப ஒருத்தி அனுபந்தம் பெயர சொல்லிட்டு போனத பார்த்தேன்” என்றாள். ஊர்க்காரர்களின் கணிப்பு நேராக லதாமேல் விழுந்தது. அவர்களது கணிப்பும் தப்பாகவில்லை. லதா சட்டென தலையில் அடித்துக் கொண்டு அழத் தொடங்கிவிட்டாள்.

விதியாண்டவர் கோவில் குளக்கரையில் அமர்ந்து சிவாஜியின் பெயரை உச்சரித்ததை லதா ஒப்புக்கொண்டாள். அந்திச்சாய்ந்த நேரத்தில் குளக்கரையில் நிற்பவர்களை அடையாளம் தெரியவில்லை. ஆபரணம் இன்னொரு படித்துறையில் அமர்ந்து இருக்கிறாள். லதாவுக்கும் சத்தமில்லாமல் எப்படி குளப்படிக்கட்டில் வேண்டுதல் பெயரை உச்சரிப்பதென்று புரியாமல் ‘அநுபந்தம் அநுபந்தம் அநுபந்தம்’ என்று மூன்று முறை சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் எழுந்து போய்விட்டாள்.

அதாவது, கோயில் உள்ளே இருக்கிற செல்லையனிடம் வேண்டிக்கொண்டவர்கள் குளத்தின் கடைசிப் படிக்கு வந்து கோவிலுக்குள் உச்சரித்த பெயரை குளத்துக்குள்ளே மூன்று முறை சன்னமாகச் சொல்லவேண்டும். செல்லையனிடம் வேண்டுதல் சொல்லிவிட்டதை அவனது தாய்க்குத் தெரிவிக்கும்முறை (செல்லையனின் தாய் குளத்துக்குள் இருக்கிறாள்). இந்த சம்பிரதாயமெல்லாம் லதாவுக்கு சுத்தமாகத் தெரியாது. ஆபரணம் குளக்கரையில் வைத்துக் கேட்டது அநுபந்தம் என்கிற பெயரைதான்.

அவளுக்கும் இங்கு வந்தபிறகுதான் எல்லாம் தெரிந்திருக்கிறது. ஒரு பெண் எப்படி தன்னுடைய கணவனை அதுவும் ஊரே கொண்டாடும் நடிகரை விதியின் கையில் விட்டுவிட்டு வரலாம்? சாவுச்சடங்குகளும் டிரம் அடிக்கும் சத்தமும் தயாராகிக்கொண்டிருந்த ரத தோரணங்களும் அப்படியே நின்று போனது. நாடக நடிகைகள் அவளை தனிஅறைக்குள் அழைத்துச் சென்று விசாரித்தனர். என்ன வேண்டுதல் என்று கடைசி வரைக்கும் வாய் திறக்கவில்லை. மன்னரின் வாரிசு எல்லோரையும் அழைத்துப் பேசினார். “விதியாண்டவர் தலையிட்டிருப்பதால் விசயத்தை அமைதியாகத்தான் விசாரிக்க முடியும். அதோடு இதை லதாவின் மீதான குற்றமாகவும் பார்க்க முடியாது” ஆனால் ஆளுக்கொரு விளக்கம் கொடுத்தனர். விதியாண்டவரிடம் வைக்கப்பட்ட வேண்டுதல் மூன்றாமவர் செவிக்குப் போவது பெரும்பாவம்.

அப்படி தெரிந்துவிட்டால் அவர்களையும் விதி விரட்ட ஆரம்பிக்கும். அதனால் லதாவிடம் விசாரிப்பதை இத்துடன் நிறுத்துமாறு ஊர் பெரியவர் மீசைக்கார அம்புலி சத்தம் போட்டார். ஆனால் அதற்குள் நாடக நடிகைகளிடம் லதா புலம்பிய சில விசயங்கள் வெளியே கசிந்து விட்டன.

அது என்னவென்றால், லதாவுக்கு முதலில் விதியாண்டவர் கோவிலுக்குப்போகும் எண்ணமே கிடையாது. லதாவின் அக்கா சுசிலாதான் அவளை அழைத்துப் போயிருக்கிறாள். சுசிலாவுக்கும் லதா என்ன வேண்டுதல் என்று சொல்லாமல் அவளைப் பார்க்கும்போதெல்லாம் வெறும் அழுகையை மட்டும் காட்டியிருக்கிறாள். சுசிலாவே இதை பலவிதமான ஊகத்தில் எடுத்துக்கொண்டு லதாவுக்கும் சிவாஜிக்குமான வெளிப்படையான பிரச்சினை குழந்தையின்மைதான். ஆனால் அவள் நினைத்ததுமாதிரி சிவாஜிக்கும் லதாவுக்கும் குடும்ப உறவில் பெரிய சிக்கல் ஏதுமில்லை. சம்போகத்தில் சிவாஜி அவளுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. லதாவின் ஒத்துழைப்பின்றி ஒரு முறைகூட சிவாஜி அவளைச் சம்போகத்திற்காக வற்புறுத்தினது கிடையாது. குழந்தைமாதிரி அடம்பிடிக்கும் குணத்தை ஊடலில் சிவாஜி வைத்திருந்ததாக லதா சுசிலாவிடம் வெளிப்படையாகச் சொல்லிவிட்டாள். அது அங்கிருந்த, சிவாஜியின் கொஞ்சல்களில் லயித்துப்போன, பெண்கள் பலருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் சுசிலா ஊகித்தது, சிவாஜிக்கு நாடக சபாவில் இருக்கிற அத்தனை பெண்களிடமும் அந்தரங்க துவந்தம் உண்டு, அதற்கு அவளது அம்மாவே சாட்சிதான், அது இன்னும் அதிகமாகி லதாவைப் பற்றி நினைப்பே இல்லாதளவுக்குப் போயிருக்க வேண்டும். தங்கையின் வாழ்க்கை இப்படி வீணானதே என்று பெண்களின்மீது இருக்கும் மோகத்தை நிறுத்த முடிவு செய்து விதியாண்டவர் கோயிலுக்குப் போகக் கட்டாயப்படுத்தியிருக்கலாம். “யார் சொன்னது?” என்று மீசைக்காரர் கோபமாகக் கேட்டார். “நீங்களே தோராயமா ஒரு முடிவுக்கு வந்துட்டிங்க?” என்றார் மன்னர் வாரிசு. இதைவிட வேறு என்னவாக இருக்கும்?

குழந்தை இல்லாததற்காக யாரும் விதியை மாற்றச் சொல்லி விதியாண்டவர் கோவிலுக்குப் போகமாட்டார்கள். விதியாண்டவரை வாழ்க்கையில் இழுத்துவிடுவது என்பது அவ்வளவு சாதாரண விசயம் இல்லை. மனிதர்களால் தீராத காரியம் நிறைய உண்டு. ஆனால் யாராலும் விதியை மாற்றுவது முடியாத ஒன்று. தீராத காரியம் விதி வசம் இருக்கிறதா என்று தெரியாமல் இறங்கவிடக் கூடாது என்று லதாவுக்கும் தெரிந்திருக்கும். விதியாண்டவர் அவ்வளவு சீக்கிரத்தில் லதாவை விட்டுவிடவில்லை. கோவிலுக்குப் போய் விட்டுத் திரும்பியதிலிருந்து லதா எந்நேரமும் செல்லையனின் வருகையை நினைத்து வாசலைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாள். வீட்டில் ஏதாவது சத்தம் கேட்டால்கூட ஓடிச்சென்று செல்லையன் வந்துவிட்டானா என்று பதறிவிடுகிறாள். செல்லையன் எப்படி வருவான் என்று லதாவுக்குத் தெரியாது. செல்லையன் பற்றிய பல கதைகள் எங்கள் ஊரில் உண்டு.

அதேசமயம் தேவையின்றி செல்லையன் பெயரை யாரும் உச்சரிக்க மாட்டார்கள். எங்களுடைய பால்ய வயதில் செல்லையனும் கிட்டத்தட்ட எங்கள் வயதுக்குரிய பையனாகத்தான் தெரிந்தான். ஆனால் விதியாண்டவர் கோவிலை நினைக்கும்போதே அதன் தோற்றம் அச்சமூட்டும். சிறிய ஒற்றைத் தடம்தான். பெரிய குளம் அதைச்சுற்றி மண் குதிரைகள் நிற்கும். குளத்தையொட்டி பனை மரங்கள் சூழ விதியாண்டவர் கோவில். லதா எப்படி பயமில்லாமல் அங்கு போயிருப்பாள் என்று தெரியிவில்லை. ஆள் நடமாட்டம் இருக்காது. கையில் ஒரு குச்சியுடன் அரைக்கால் சட்டையில் நின்றவாறு செல்லையன் சிலை இருக்கும். விதியாண்டவர் கோவிலில் பெரிய தெய்வம் அய்யனார். அவருக்கு வலதுபுறம் செல்லையன்.

அவனுக்கு இரண்டு பக்கமும் சிறிய மண் குதிரைகள். செல்லையன் குதிரைகளை மேய்க்கிறவனாக இருந்திருக்க வேண்டும். செல்லையன் எப்படி அந்த அய்யனார் கோவிலுக்கு வந்தான் என்கிற கதைக்குத் தொடக்கமே இல்லை. ஆளுக்கொரு கதை சொல்வார்கள். எவ்வளவு சிக்கலான விதியையும் செல்லையன் தீர்த்துவிடுவான் என்கிற சொலவடை உண்டு. சிவாஜியை செல்லையன்தான் கொன்றான் என்பதை ஊர்க்காரர்கள் உறுதியாக நம்பினார்கள். சிவாஜி இறந்துகிடந்த அறைக்குள் யாரோ இருந்தார்கள் என்றும் கதவைத் திறந்த சமயத்தில் தன்னை யாரோ தள்ளிவிட்டுவிட்டுப் போனதுபோல இருந்ததை லதா கூறியதைக் கேட்டு நாங்கள் பயந்துதான் போயிருந்தோம். அந்த பயமே அந்தக் கதையை நம்ப வைத்தது. சிவாஜி நாற்காலியுடன் சாய்ந்தவாறு தரையில் மோதி இறந்து கிடந்தார். செல்லையன் அவரைக் கீழே சாய்த்திருக்கவேண்டும். அவர் செல்லையனுடன் போராடி தோற்றிருக்கலாம். விதியாண்டவர் வேண்டுதல் விசயம் பரவியதில் அன்றைக்கு சிவாஜியின் சாவு ஊர்வலம் நடக்கவில்லை நின்று போனது. “அம்மா உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் சிவாஜியை எனக்குக் கல்யாணம் பண்ணியிருக்காது.” என்று லதா சொல்லும்போது எனக்கு அது என்னவென்று முதலில் விளங்கவில்லை. ஊரில் சிவாஜியைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளத்தான் நிறைய பேர் ஆசைப்பட்டதாக என் அம்மா சொல்வது உண்டு. “சிவாஜி எங்களுக்காக நிறைய செய்திருக்கிறார். அம்மா அவரைப் பற்றி பேசாத நாள் கிடையாது. வெறும் மாசச் சம்பளம் மட்டும் அம்மாவுக்குக் கிடைக்கிற வழிய அவர் செய்யல.

எப்போ பணம் தேவைப்பட்டாலும் சிவாஜி வீட்டுக்குத்தான் எங்களை அனுப்புவார். இதே திண்ணையில்தான் அவர் நாற்காலியில் நாடகக்காரர்களுடன் அமர்ந்திருப்பார். நானும் அக்காவும் வாசலுக்கு வந்து நிற்கிறதைப் பார்த்ததும் வாஞ்சையா எங்களை அழைத்து உள்ளே கூட்டிப்போவார். வீடு முழுக்க இருட்டாத்தான் இருக்கும். தொங்குற ஏதோ ஒரு சட்டையிலிருந்து பணத்தை எடுத்து மடித்துஅக்கா கையில் கொடுப்பார். வெளியே இருக்கிற நாடகக்காரர்கள் எங்ளைப் பார்த்து ஜாடையாக ஏதோ சிவாஜியிடம் பேசுவார்கள். அவரும் சிரித்தபடி அதற்குத் தலையாட்டுவார். அப்பவும் சிவாஜி எப்படி இருந்தார்னு எனக்குச் சரியாக நினைவிலில்லை.

நான் பெரிய மனுஷி ஆனப்போ சிவாஜி எங்க வீட்டுக்கு வந்தார். அப்போவும் நல்லா கம்பீரமாக சினிமால வர மாதிரிதான் இருந்தார். அவர் கொடுத்த மொய்ப்பணம்தான் அன்னைக்கு பெரிய தொகை.” லதாவின் அம்மாவிற்கு சிவாஜி என்றால் பிரியம். அப்பெயரை உச்சரிக்காமல் இருந்ததே இல்லை. சிவாஜி பற்றி ஊருக்குள் பேசும் விசயங்கள் லதாவுக்கும் தெரியும். சுசிலா லதாவிடம் தான் கேள்விப்பட்டதைச் சொன்னாள். சுசிலாவுக்கு அது பெரிய தவறாக ஏதும் பட்டதா என்று தெரியாது. ஆனால் அதன்பிறகு லதா அம்மா புதுப் புடவையும் அலங்காரமும் செய்துகொண்டு கிளம்புவதை லதா ரகசியமாகக் கவனித்தாள்.

சுசிலா ருது எய்தியப் பின் கிராமத்திலுள்ள பாட்டி வீட்டுக்குப் போனதோடு இதைப்பற்றி அதிகம் பேச சந்தர்ப்பம் அமையாமல் போனது. எப்போது வீட்டிற்கு சிவாஜி வந்து போவாரென்று இருவருக்குமே தெரியாது. ஆனால் இவர்கள் வீட்டில் சிவாஜியைப் பார்த்ததாக அக்கம் பக்கத்தில் சொல்வார்கள். சுசிலாவும் போனதற்குப் பின் லதா மட்டும்தான் வீட்டில். பள்ளி முடிந்ததும் நேராக வீடு வந்துவிடுவாள். ஒருமுறை வீட்டில் சிவாஜியுடன் அம்மா இருப்பதை லதா நேராகவே பார்த்துவிட்டாள். சிவாஜி தரையில் படுத்திருக்கிறார், அவர் மீது அம்மா படுத்திருக்கிறாள்.

சிவாஜியின் மிகப்பெரிய உடம்பில் அம்மா சின்னப் பூனைக்குட்டி மாதிரி ஆடையில்லாமல் கிடக்கிறாள். பார்த்த அந்தக் கணத்தில் முதலில் அது யாரோ என்று நினைத்துவிட்டாள். ஏனென்றால் அப்படி ஒருத்தி ஆடையின்றி தனது சிவந்த சதைத் திரட்சியுடன் பிரக்ஞையின்றி ஓர் ஆண் உடம்பில் அவ்வளவு வசதியாகப் படுத்திருப்பது (அப்படிப் படுக்க முடியுமா என்று கற்பனை செய்ததில்லை) நிச்சயம் யாரோவாக இருக்கலாம் என்று தோன்றியது. லதா நுழைந்ததும் சில நொடிகள் உறைந்தபடி நிற்கிறாள். அது அம்மாதான் என்றும் அவளுக்கு அவர்கள் இருவரும் சட்டென எழுந்துவிடும்வரை தெரியாது. இவள் வந்து நிற்பதை சிவாஜிதான் பார்க்க முடியும். லதாவின் சிறிய உருவத்தை அவர்மீது படுத்திருக்கும் அம்மா மறைத்திருப்பாள். சிவாஜி பதறியதும் கூந்தல் களைந்து படுத்திருப்பவள் திடுக்கென்று திரும்புகிறாள். பாம்பைக் கண்டது மாதிரி முகத்தில் பதற்றம். சிவாஜி ஒப்பனைகளுடன் ஆடை கசங்காமல் படுத்திருக்கிறார். அந்தக் காட்சி நினைவிலிருந்து மறைய ரொம்ப நாட்கள் எடுத்துக்கொள்ளவில்லை. அவளும் அதைப்பற்றி அம்மாவிடம் ஒன்றும் கேட்காமல் விட்டுவிட்டாள். அம்மா நோயில் படுத்தபோது சிவாஜிதான் மருத்துவச் செலவுகளை கவனித்துக்கொண்டார். அம்மா இறந்து நான்கைந்து வருடங்கள் லதா, சுசிலாவோடு அவளது திருமணமான வீட்டில் இருந்தாள். சுசிலாவின் அந்தரங்க அசைவுகள் அவளுக்குக் கலவியின் கற்பனைகளை ஏற்படுத்துகிறபோதும் சிவாஜியும் அம்மாவும் இருந்தக் காட்சியைத் தூண்டிவிடவில்லை. அது மறந்தது மறந்தாகவே இருக்கிறது. கற்பனையில் சிறுக் கீறலைக்கூட அது ஏற்படுத்தவில்லை. ஒருவேளை அந்தக் காட்சி சிருங்கார உணர்வைத் தூண்டும் அவசியமற்றதென நழுவியிருக்கலாம்.

அதனால்தான் லதா தாபத்தை அசைபோடும் சமயத்தில் அக்காட்சி எதையும் செய்யாமல் 

போய்விட்டது. அக்காட்சிக்கு வேறு குணம் இருந்தது. சுசிலாவுக்கு லதாவை அவளுடனே வைத்துக்கொள்வதில் நிறைய சங்கடம். லதாவுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கவேண்டும். அவளுக்கும் சிவாஜியை விட்டால் யாரையும் தெரியாது. (அவர்தான் சுசிலாவுக்குத் திருமணம் செய்து 

வைத்தவர்). அவளுக்கு சிவாஜியை மணம் செய்து வைக்கும் எண்ணம் முதலில் இல்லை. ஆனால் இந்த விசயமாக சிவாஜியைச் சந்திக்க எடுத்த அலைச்சலும் அனுபவங்களும் அந்த முடிவுக்கு வர காரணமாகிற்று. அதே சமயத்தில் சிவாஜியும் கல்யாணம் செய்துகொள்ளும் யோசனைக்கு வந்திருந்தார். ஒருவழியாக சிவாஜியைத் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளச் செய்துவிட்டு திருமணச் செய்தியை லதாவிடம் சொன்ன அடுத்த கணம் அந்தக் காட்சி திடுதிப்பென்று எழுந்து உட்கார்ந்துகொண்டது. லதா ஆடிப் 

போய்விட்டாள். எங்கிருந்து அது வந்தது? இத்தனை நாள் மறந்துபோனதாக தன்னை நம்ப வைத்திருக்கிறது. சுசிலாவிடம் ஜாடை மாடையாக எப்படியோ 

சொல்லிப் பார்த்தாள். சுசிலாவால் ஒன்றும் செய்ய முடியாத இடத்திற்கு விசயம் போய்விட்டது. சிவாஜியைத் திருமணக் கோலத்தில் பார்த்ததிலிருந்தே லதாவுக்கு உள்ளூர நடுக்கம் எடுக்கத் துவங்கிற்று. சிவாஜியிடம் நெருங்குவதைத் தள்ளிப்போட்டாள். சிவாஜிக்கு அப்போது வெளியே நிறைய பழக்கங்கள் கிடைத்ததால் லதாவின் சல்லாபம் அவசியப்படவில்லை. அவளுக்கும் இப்படியே இருந்துவிடுவது சரியென்று தோன்றிற்று. சிவாஜிக்கு இருக்கிற தொடர்புகள் பற்றி அவள் சட்டையே செய்யாமல் இருந்துவிட்டாள். ஒருபக்கம் இது வசதியாகவும் இருந்தது. அந்தக் காட்சி மறுபடி வரவே இல்லை. சம்போகத்தில் கண்களை இறுக்கி மூடிக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. மீறி திறந்தால் அந்தக் காட்சியின் ஸ்தூல வடிவமும் மூடினால் அதன் பிம்பமுமாக அவளை விரட்டுகிறது. அம்மாவை நினைத்துக்கொள்கிறாள். அவளது நிர்வாணம் பயமுறுத்துகிறது. கண்களை மூடி அவளை எப்போதோ பார்த்த ஒரு பெண் தெய்வமாக பிடாரி, தந்துமி எனக் கற்பனை செய்கிறாள். அது அவளைக் காப்பாற்றும் என்கிற நம்பிக்கை. அந்த எண்ணமும் வெகு நேரம் நீடிக்காமல் சரிகிறது. பிறகு வேறொரு உருவம் அதுவும் நிர்வாணமாகக் கிடக்கிறது. மறு படியும் வேறொரு தெய்வம். பிறகு அம்மாவின் இறுதிக் காலத்தின் உருவத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறாள். அது நழுவாமல் இருக்கவேண்டும். வேறு முகங்கள் தன்னை இன்னும் துரத்தக்கூடியவை. கண்ணீர் முட்டித் தளும்புவதுதான் விரட்டுகிற காட்சிகளைச் சற்றைக்கும் சரியவிடும். சிவாஜி அவளை அணைத்து முயங்குவதில்லை. அவளைக் கலைத்துப் போடுவதுபோல தனது வேகத்தில் காட்டுவதில்லை.

களைந்துவிடும் ஒப்பனைக்காகப் பயப்படுகிறார் (அன்றைக்கு அம்மா உடனும் இப்படித்தான் கலையாமல் படுத்து இருந்தார்). சிகிச்சை நிச்சயம் வீணாகிவிடும். அதோடு இயக்கம் சீக்கிரமே முடிந்துவிடுகிறது. கணநேர தாபம்தான். சிவாஜிடமிருந்து வெளியேற நினைத்தாள். எங்காவது ஓடிவிட பலநாள் முடிவெடுத்துக் களைத்தது உண்டு. சிவாஜி எங்காவது கிளம்பியதும் அந்த அமைதி பெரும் நிம்மதியை அளிக்கும். அதுவரை வைத்திருந்த தயாரிப்புகள் சிவாஜி வெளியே போன அடுத்த நொடியில் இருக்காது. வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளும் மாறி மாறி நகரும் பொழுதும் அவளுக்கு அந்த இருப்பை விட அனுமதிக்கவில்லை. வீட்டைவிட்டுப் போனால் அடுத்து எங்கு என்கிற கேள்வி. லதா அந்தக் காலத்துக்குள் கட்டிப்போடப்பட்டுச் சுற்றிக்கொண்டிருந்தாள். துரத்துகிற காட்சிகளிலிருந்து தப்பிக்க அவளுக்கு வழியே கிடைக்கவில்லை. குழந்தை பிறந்தால் பிள்ளையின் முகத்தையாவது பார்த்துக்கொண்டிருக்கலாம் ஆனால் திருமணமான நான்கு வருடத்தில் ஒருமுறைகூட கரு தங்கவில்லை. இந்தச் சமயத்தில்தான் நடிகர் சிவாஜிகணேசன் இறந்த செய்தி வந்தது. ஒருபக்கம் அநுபந்துக்கு இனி சிவாஜியாக இருக்கும் அபிலாசை குறையும் என்கிற நம்பிக்கை, அதே சமயம் செய்தி கேட்டதும் அநுபந்துக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்கிற பயம்.

இந்த இரண்டில் ஏதேனும் ஒன்று நிச்சயம் நடக்கும் என்றுதான் லதா, சிவாஜி சென்னைக்குப் போன பிறகு நினைத்துக் கொண்டிருந்தாள். அன்றைக்கு அபூர்வமாக அவளுக்கு விதியாண்டவரின் ஞாபகம் வந்திருக்கிறது. அது எப்படி? யாரால்? எதற்காக? என்றெல்லாம் தெரியவில்லை. மனம் திக்கென அடைக்கிறது. ஏதோ குற்றத்தைச் செய்யப்போவது போல விரல்கள் நடுங்குகின்றன.

விதியாண்டவரின் கோவிலுக்குள் போனதே இல்லை. செல்லையன் எப்படி இருப்பானென்றே தெரியாது, இருந்தும் கண்களை மூடி கற்பனையாக ஓர் உருவத்தை நினைத்து வேண்டிக்கொள்கிறாள். ஆனால் இரண்டுமே நடக்கவில்லை. அநுபந்து சிவாஜியாக மாற ஏற்கெனவே விதி முடிவாகி இருந்தது. சாவு வீட்டில் நேரம் ஆக ஆகக் கூட்டம் அதிகமாகிற்று. துக்கம் விசாரித்து மரியாதை செய்துவிட்டுப் போனவர்கள்கூட விசயத்தைக் கேள்விபட்டுத் திரும்பவும் வந்து விட்டனர். பொழுது சாயத்துவங்கிற்று, இனி அடக்கம் பண்ணமாட்டார்கள்.

அதோடு விதி, செல்லையன் கையால் போயிருப்பதால் ஆத்மாவை இப்படியே துக்கத்தோடு அனுப்பிவிட முடியாது. அதனைச் சமாதானப்படுத்தும் கர்ம பரிகாரத்தைச் செய்து விடையனுப்புவதுதான் சரி. ஆனால் அங்கிருப்பவர்கள் யாருக்கும் அதற்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. அன்றைக்குச் சாவு வீட்டில் லதா அழுவதை அருகில் நின்று வேடிக்கைப் பார்த்தேன். ரசிக்க வைக்கும் மூக்கும் நெற்றியும் லதாவுக்கு. இடது விழியின் ஓரத்தில் மிளகு போல ஒரு மச்சம். இன்றைக்குத்தான் அதை அருகில் பார்க்கிறேன். என்னிடம் எதற்காக எல்லா கதைகளையும் சொல்கிறாளென்று புரியவில்லை.

இருபது வருடங்களுக்கு மேல் எங்கள் வீட்டிற்கும் லதாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. லதாவுக்கு என்மீது ஈர்ப்பு இருந்திருக்கும் என்று கோமாளித்தனமான ஆசை எனக்கு. அன்று சாவு வீட்டில் ஒரு பெண்ணை நன்றாகப் பார்த்து ரசிப்பதற்காக நான் நின்றுகொண்டிருக்கிறேன். ஒரு பக்கம் அச்சமாகவும் குற்றவுணர்வாகவும் இருந்தது. என்னை யாரும் பொருட்படுத்தவில்லை. ஊரில் நடந்த அசம்பாவிதம் அது. வித்தியாசமான நிகழ்வு. நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே யாரோ ஒரு நாடக நடிகை தன்னுடைய செருப்பால் லதாவை அடித்துவிட்டாள். லதாவின் மூக்கில் இரத்தம் வழிகிறது ஆண்கள் அவளைப் பிடித்து இழுத்தனர். அப்போதுகூட என்னால் அப்படி அணைப்பதை இயல்பானதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. என்னைப்போல அவர்களும் இந்தத் தருணத்தை உபயோகிக்கிறார்கள். சிவாஜியின் மகன் கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு வந்தார். லதாவை அவர்தான் அவர்களிடமிருந்து விடுவித்து உள்ளே அழைத்துப் போனார். லதாவுக்குத் தண்ணீர் கொடுத்து முகத்தைக் கழுவச் சொன்னார். பல் ஒன்று விழுந்துவிட்டது இரத்தம் நிற்காமல் வழிகிறது. துணியால் வாயைப் பொத்தியபடி லதா அழுகிறாள். மகன் அவளது தோள்களை ஆதூரமாகப் பிடித்திருக்கிறார். லதா அவரிடத்தில் “நான் எதையும் செய்யல” என்று மன்றாடி அழுதாள். அதை நம்புவதாக அவர் தலையசைத்துத் தேற்றியதை நான் கவனித்தேன்.

அவர் லதாவைக் காப்பாற்றிவிட்டதாகத்தான் நாங்கள் நம்பினோம். ஆனால் ஊர்க்காரர்களில் சிலர் லதாவை விடவில்லை. வேண்டுதல் பற்றி விசாரிப்பை நிறுத்திவிட்டு அதற்குப் பதிலாக அது, நிச்சயம் சிவாஜியை சாவடிப்பதுதான் என்கிற முடிவுக்கு வந்ததுடன், ஏன் அப்படியொரு முடிவு என்கிற கேள்வியில் லதாவைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு இருந்தனர். இன்னொரு தரப்பினர், விதியாண்டவரின் தீர்ப்பில் சிவாஜி இறந்திருப்பதால் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்வதா வேண்டாமா என்று விவாதத்தில் இருந்தனர். பொதுவாக விதியாண்டவர் கோவிலுக்குத்தான் மக்கள் ஊர்வலமாகப் போவது நடப்பு.

ஆணி மாதக் கடைசி வெள்ளிக்கிழமை மண் குதிரைகளைச் செய்து குளத்தைச் சுற்றி நாங்கள் எடுத்துபோவோம். பெரிய குதிரைகளை ஆண்கள் தங்களது தோளில் வைத்துத் தூக்கி வருவார்கள். செல்லையனுக்கு நேர்ந்திருக்கும் குட்டிக் குதிரைகளைப் பெண்கள் குழந்தையைப் போன்று மார்பில் அணைத்து வருவார்கள். திருமணமாகாத பருவத்தினர் அதில் அதிகம். அந்தத் திருவிழாவில் செல்லையனிடம் எதையும் வேண்டிக்கொள்ளக் கூடாது என்பது விதி. இந்தக் குதிரைக்குட்டிகளெல்லாம் செல்லையனுக்கான பரிசு. விளையாட்டுச் சாமான்கள். சீர்வைப்பது மாதிரி. ஆடி மாதம் கிடா வெட்டு நடக்கும் அது அவனுக்கான படையல். அதனால் இந்த சமயத்தில் எக்காரணத்தைக் கொண்டும் யாரும் வேண்டுதல் செய்வதில்லை. ஆனால் நாங்களெல்லாம் வயசுப் பெண்கள் தூக்கி வருவதைப் பார்த்து “இனி யாரும் அந்தப் பிள்ளைகள பார்க்கக்கூடாது” என்று பயந்திருக்கிறோம்.

அவர்கள் ஏதும் வேண்டிவிட்டால் அவ்வளவுதான் செல்லையன் உங்களைக் குளத்தில் போட்டுக் கொன்றுவிடுவான். ஆனால் உண்மையில் செல்லையன் யாரையும் கொன்றது இல்லை. விதியாண்டவர் கோவில் மதியம் அகாலவேளையில் அங்கு நிற்கும் இளுப்பை மரத்தின் அடியில் செல்லையன் குச்சியுடன் நிற்கிறானென நாங்கள் பேசிக்கொள்வோம். பத்து வருடங்கள் கழித்து லதாவை அப்படியொரு அகால வேளையில்தான் விதியாண்டவர் கோவிலுக்குப் போகிற வழியில் நான் பார்த்தேன். உடல் சன்னமாக சரியாக வாரி முடியாத கூந்தலுடன் எங்கோ போய்விட்டுத் திரும்புகிற வேகத்தில் இருந்தாள். கொம்பு போல நிற்கும் அந்த முலைகள் தளர்ந்து விட்டடிருந்தன. சிவப்பான நிறம் வெளுத்து கரிய இரத்தம் போலிருந்தாள். சேலையில் நான் பார்த்த அழகான பெண்களில் லதா அன்றைக்கு அழகு. எப்போதும் தலையில் உண்ணிப் பூக்கள் இருக்கும். சிவாஜி சாவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அதாவது, லதா விதியாண்டவர் கோவிலுக்குப் போனதிலிருந்து பயம் கொள்ளத் துவங்கினாள். பிரக்ஞையின்றி தான் செய்யக்கூடாத காரியத்தைச் சொல்லிவிட்டு வந்துவிட்டதாக அரற்றிக்கொண்டிருக்கிறாள். வேண்டுதலை செல்லையன் எப்படி நிறைவேற்றுவான் என்று தெரியாது. அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

திரும்பவும் கோவிலுக்குச் சென்று பூசாரியிடம் செல்லையன் வந்து போன வீடுகளை விசாரித்தாள். சமீபகாலத்தில் அப்படி யார் வீட்டுக்கும் விதிக்காக செல்லையன் போனதாக அவருக்கும் ஞாபகம் இல்லை. ஆனால் அவர் கேள்விப்பட்ட ஒன்றிரண்டு பெயர்களைச் சொன்னார். கிராமத்தில் இப்போது அவர்கள் எல்லாம் இருக்கிறார்களா என்பது சந்தேகம். அவர் சொன்னதில் ஒரு முகவரி மட்டும் எஞ்சியது. ஊருக்கு வெளியே இரயில் தண்டவாளத்தைத் தாண்டினால் பழைய மண்டபம் ஒன்று உண்டு. அதற்குப் பக்கத்திலுள்ள வீடு அது.

லதா அடுத்த நாள் மண்டப வீட்டிற்குச் சென்றபோது வீட்டில் ஒரு கிழவி மட்டும் அமர்ந்திருந்தது. பார்வை சரியாக இல்லை. ஊருக்குள் முதன் முதலில் இரயில் தடம் போட்டபோது கிழவியின் கணவர் அந்த இடத்தை அரசாங்கத்திற்குத் தர மறுத்துவிட்டு கடைசி காலத்தில் இறந்து போனார். மண்டபம் நான்கு தூண்கள் முன்பக்கம் திறந்தபடி பெரிய வாயில் அதிகபட்சம் இருபது அடிக்கு இருபது அளவில் சதுரமாக பழைய கோவிலாக இருக்கவேண்டும். மண்டபத்திற்கு வடக்குப் பகுதியில் மண்டபத்துடன் இணைத்து ஓடு வேய்ந்த வீட்டில் கிழவி இருக்கிறது. மண்டபம் இரயில் வேகத்திற்கு விழாது என்று கிழவியும் தங்கிவிட்டது. லதா கிழவியிடம் விதியாண்டவர் கோவில் பற்றிக் கேட்டாள். என்ன வேண்டுதல் என்று நேரடியாகக் கேட்க முடியாது. இந்த மண்டபம் எப்போதுமே இடியாது எத்தனை இரயில்கள் தடதடவென ஓடினாலும் மண்டபம் அதிருமே தவிர அசையாது என்று கிழவி கூறியது. அவள் திரும்பத் திரும்பக் கோவில் பற்றிக் கேட்டதற்கு கிழவி மண்டபத்தையும் இரயிலடிக் கதையையும் சொன்னது. அதன்பிறகு லதா என்ன கேட்பது என்று புரியாமல் அமைதியாகவிட்டாள். இறுதியாக கிழவி அவளிடம் “விதியாண்டவர் கோவிலில் இதுமாதிரி வேண்டிக்க” என்று முடித்துவிட்டது.

இரயிலடி ஆற்றுப்பாலத்தில் குடியிருந்த வண்ணார் வீதியில் மண்டபம் பற்றி ஒரு கதை இருந்தது. அன்றைக்கு மண்டபத்தை இடிக்க முடியாமல் திரும்பிய சர்க்கார் ஆட்களின் கனவுகளில் இறந்து கிடக்கும் ஒரு சிறுவனின் உருவம் வந்துள்ளது. தங்களுடைய குழந்தைக்கு ஏதாவது நேரிடும் என்று பயந்து மண்டபம் இடிப்பை நிறுத்திவிட்டனர். கனவுகள் வந்ததற்கு இரண்டு நாள் முன்புதான் கிழவி விதியாண்டவர் கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்பியது. ஆக, நிச்சயம் கனவில் வந்தது செல்லையன்தான். எங்களது பால்ய நாட்களில் இந்தக் கதை எங்களுக்குத் தெரியாது. அன்றைக்கு அவ்வளவு தூரம் இவ்விசயங்களைத் தேடி நாங்கள் செல்ல முயற்சிக்கவில்லை. நிச்சயம் லதாவுக்குத் தெரிந்திருக்குமா என்று ஊகிக்க முடியவில்லை. இத்தனை வருடம் கழித்து லதாவிடம் நான் கேட்டபோது, “வண்ணார் வீதிக்குப் போயிருக்கேன்” என்று முடித்துவிட்டாள். ஆனால் இப்பொழுதும் லதாவுக்குள் பழைய நினைவுகள் மெல்ல வெளிப்படும்போதே விரல்களில் நடுக்கம் எடுக்க ஆரம்பிக்கிறது.

சிவாஜியின் சாவு வீட்டிற்கு ஆபரணம் வந்தது எனக்கு நினைவில்லை. ஆனால் ஆபரணம் வந்த பிறகுதான் அந்தச் சாவு, ஊரில் மறக்க முடியாத கதையாக மாறியது. எப்போதுமே ஊரில் ஆபரணத்தின் வருகை எந்த வீட்டிலாவது கொலையை நிகழ்த்தும் என்கிற சொலவடை உண்டு. “ஆபரணத்துகிட்ட அருவாமணைய தீட்டி வைச்சுருக்கேன்”, “ஆபரணத்துட்ட கொடுத்து இன்னும் கொஞ்சம் பதம் கூட்டிக்கலாம்” இப்படி நிறைய பேச்சுகள் ஆபரணத்தின் வருகையில் கொலை விழுவதற்கான ஆயத்தங்களை ஏற்படுத்துமென நம்பியிருக்கிறோம். உண்மையிலேயே ஆபரணம் வந்துபோன அடுத்த நாள் ஊருக்கு வெளியே தைலக்காட்டில் கொலை விழுந்திருக்கிறது. சிறையிலிருந்து வெளியே வந்த ஒரு பெரிய ரவுடியை அவனுடைய பழைய பகையாளிகள் தலை வேறு முண்டம் வேறாக வெட்டி வைத்தார்கள். அரிவாள்மனையால் ஒருத்தி அவளது புருஷனைத் தொடையில் அறுத்துவிட்டுக் கிணற்று அடியில் அமர்ந்திருப்பதைப் பார்த்தச் செய்தியும் உண்டு. அதனால் ஆபரணத்தை ஊருக்குள் அனுமதிக்க மறுத்தார்கள். அந்த உத்தரவு ரொம்ப நாளைக்கு நீளவில்லை. மொன்னைக் கத்தியும் மழுங்கிய அரிவாமனையையும் வைத்து வீட்டு வேலை ஒன்று நடக்கவில்லை. நானே கத்தியையும் மனையையும் எடுத்துக்கொண்டு வடிவான அரளையைத் தேடிப் போயிருக்கிறேன். குளத்துப்படியில் மொன்னைக் கத்திகளோடு கசாப்புக்காரர்கள் காத்திருப்பார்கள்.

சுத்தமாக இரண்டு வருடம் போனது ஆபரணம் திரும்பவும் அரிமளத்துக்குள் நுழைவதற்கு. பூனை மாதிரி ஒவ்வொரு வீட்டு வேலியில் நின்று சன்னமாக அழைத்துத் தீட்டிக்கொடுத்துவிட்டு மறைந்து விடுவாள். ஊர்த் தலையாரிகள் ஆபரணத்திடம் சத்தியம் வாங்கித்தான் ஊருக்குள் விட்டதாக ஒரு பேச்சும் இருக்கிறது. ஆனால் எப்படியோ சாணம் பிடித்துக் கொடுக்காமலேயே ஆபரணம் இன்னொரு விதியை முடித்து வைத்துவிட்டதாக நம்பினோம். 

அது சிவாஜியாகத்தான் இருக்கவேண்டுமா? சிவாஜி இறந்தது சனிக்கிழமை. பிணத்திற்குத் துணையாக ஒரு பெட்டைக்கோழியை வாங்கி ரதத்தினடியில் கட்டி வைத்தார்கள். சிவாஜியின் அடக்கம் இரண்டாவது நாளும் நடக்கவில்லை. கோழி நெல்மணிகளைக் கொத்திக்கொண்டு ரதத்திலேயே அடைந்துவிட்டது. சேவல் ஒன்று அந்தப் பெட்டையுடன் கூடியதை நான் பார்த்தேன். அடிக்கடி சேவல் வந்து கூடுவதும் திண்ணையிலிருப்பவர்கள் தோள் துண்டை வீசுவதுமாக இருந்தது அந்தக் கூத்து. மூன்றாவதுநாள் காலையில் ஒருவழியாக சிவாஜியின் சடங்கிற்கான முறையைக் கண்டுபிடித்தார்கள். அன்றைக்கு ஊரில் நல்ல மழை. பொட்டல் காடுகளெல்லாம் செம்புலமாகும்படி கொட்டித் தீர்த்தது. வருடம் முழுக்க வெயில். இப்படி எப்போதாவதுதான் எங்களுக்கு மழை. அதுவும் ஊரில் ஏதாவது முக்கியமான காரியத்தில்தான் மழை வந்து ஊர் வாயில் சாகும். மழையோடு மழையாக இரண்டு மண் குதிரைகளை எடுத்து வந்தார்கள். ஒன்று பெரிய குதிரை மற்றொன்று குட்டி.

குட்டி மண் குதிரையை வீட்டில் எந்த இடத்தில் சிவாஜியின் உயிர் வெளியேறியதோ அந்த இடத்தில் நிறுத்தி வைத்து, நாற்பது நாட்களுக்கு அங்கு செய்ய வேண்டிய பூசை காரியங்களை லதாவுக்கு சொல்லிக்கொடுத்துவிட்டு பெரிய குதிரையை எடுத்துக்கொண்டு முச்சந்திக்குப் போனார்கள். எங்களுக்கு அன்றைக்கு நடப்பதெல்லாம் திருவிழா சடங்குமாதிரி இருந்தது. அதாவது, பெரிய மண்குதிரையைத் தலைகீழாகத் தூக்கிப் போய் அங்கு ஒரு பனை மட்டையில் பெரிய பாடை ஒன்றைத்தயார் செய்து அதில் கிடத்தினார்கள். குதிரையின் கால்களுக்கு எந்தத் திசை, தலைக்கு எந்தத் திசை என ஆளக்கொரு யோசனை. பாடை ஒவ்வொரு திசையாகச் சுற்றியது. நாங்கள் மொட்டை மாடியிலும் புளியமரத்திலும் வேப்பமரத்திலுமாக ஏறி நின்றோம்.

நிஜக்குதிரையின் சடலம் போலவே எங்களுக்குத் தெரிந்தது. லதா அழுத களையோடு வந்து பாடையில் கிடத்திய குதிரைக்கு அரிசி, பால், மாலையையும் போட்டாள். அவள் ஒரே நாளில் பாதியாகி விட்டிருந்தாள். வாரிசு மகன் அவளைத் தோள் பற்றி அழைத்துப் போனான். இனி லதா அந்த மகனோடுதான் இருப்பாளென்று நினைத்துக் கொண்டேன். லதாவை பார்க்க முடியாது, வயசான மகன் அவளை அழைத்துக்கொண்டு ஊருக்குப் போய் விடுவான். அதுதான் சரி. லதாவை இனி யாரும் சீந்தமாட்டார்கள். அடக்கம் முடிந்த அடுத்த நாள் அவளைத் தீயிட்டுக் கொளுத்தப்போகிறார்கள் என்று கேள்விபட்டேன். அம்மாவிடம் கேட்டேன் “அப்படியெல்லாம் பண்ணமாட்டாங்க. அப்புறம் நாற்பது நாளைக்கு செல்லையனுக்கு யாரு சடங்கு செய்றது?”. அப்படியென்றால் நாற்பத்தி ஒன்றாம் நாள் லதா இருக்க மாட்டாளா? நாற்பத்தி ஒன்றாம் நாள் லதா உயிரோடுதான் இருந்தாள். அவளை யாரும் ஒன்றும் செய்யவில்லை. வழக்கமான சாவு வீட்டின் களை அங்கு இருந்தது. லதாவை அவ்வளவாகப் பார்க்க முடியவில்லை. ஆனால் ஒரு சில ஆட்கள் திண்ணையில் அமர்ந்து பேசுவதும் போவதுமாக இருந்தார்கள். இன்றைக்குப் பார்க்கிற லதாவுக்கும் அவளுக்கும் இரண்டு தலை முறை வித்தியாசம். இத்தனைக்கும் வெறும் பத்து வருடங்கள்தான் நடுவில். இந்த லதா அவளின் தாய் மாதிரி இருக்கிறாள். இவளது மகளைத்தான் அன்றைக்கு நான் ரசித்தேன். சாலையோர உண்ணிப் பூக்கள் அவளை எனக்குத் தந்திருக்கின்றன. அவளைத் தவிர வேறு யாருமே அதைச் சூடிக் கண்டதில்லை. அவளுக்காக சில பூக்களைப் பறித்துக் கொண்டு போகலாமா என்று தோன்றிற்று. அவளால் அந்தக் காலத்துக்குள் நுழைய முடியாமல் இருக்கலாம். அதன் சாவி துருப்பிடித்து எங்காவது தொலைந்திருக்கும்.

அதை வெளி கொணர்ந்துவிடும் மோசக்காரனாக நான் ஏன் என்று ஒதுங்கிக்கொண்டேன். ஆனால் லதாவை வீட்டில் சந்தித்தபோது பழைய நினைவுகள் அவளைத் தேடி மறுபடியும் சந்தித்துவிட்டுச் சென்றிருக்கின்றன என்பதை அவதானித்தேன். நான் லதாவைச் சந்திப்பதற்கு ஒரு வருடம் முன்புதான் ஆபரணம் இறந்து போனாள். அதற்கு முன்பு லதாவை வந்து சந்தித்திருக்கலாம். லதாவின் பேச்சில் அதொரு துரத்திக்கொண்டிருந்த சாபத்தின் கதைமாதிரி அங்கலாய்த்துக்கொள்கிறது. லதா ஆபரணத்துக்காக ரொம்ப வருத்தப்படுகிறாள்.

“எல்லாம் விதி. அது போற வழில எல்லாரையும் சேர்த்துக்கும்” என்று புலம்புகிறாள். ஒருகணம் எனக்குத் திடுக்கிட்டுவிட்டது. அம்மா லதா வீட்டுக்குப் போக வேண்டாமென்று எச்சரித்தும் நான் வந்து நிற்கிறேன். சிவாஜி இறந்த அறைக்குள் பத்து வருடங்கள் முன்பு வைத்து மண் குதிரைக் குட்டியை லதா நாற்பத்து ஒன்றாம் நாள் குளத்தில் கரைக்காமல் வைத்துக் கொண்டாளாம், விதியாண்டவர் கோவில் செல்லையன் இன்னும் அங்கு இருக்கிறான் என்று ஒரு கதை. உண்மையில் நாற்பத்து ஒன்றாம் நாள் மண்குதிரையைக் கரைக்க வேண்டுமா இல்லை அங்கேயே வைத்துக்கொள்வதா எது சரி என்று யாருக்கும் தெரியாது. ஆனால் காலம் அதை ஒரு துர்கதையாக்கிவிட்டிருக்கிறது. லதா வீட்டில் அந்தக் குட்டி மண் குதிரை குழந்தை விளையாடும் பொம்மை மாதிரி மூலையில் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் குழந்தை அதை எடுத்துப் போகலாம் என்பது போல. ஆபரணத்தை விதி விரட்டியதை ஆபரணம் வந்து சொல்லும்வரை லதாவுக்கும் தெரியாதுதான். “ஆபரணம் பாவம்” என்றாள். நான் அதை ஆமோதிப்பதாகத் தலை அசைத்தேன்.

அதாவது இந்தக் கதை எனக்கு முன்னமே தெரியும், தூரத்திலிருந்து நான் கவனித்து வந்தேன் என்பது மாதிரி லதா என்னிடம் சொன்னாள். “ஆபரணம் ஒரு பாவமும் பண்ணாம இத்தனை வருஷம் அவதிப்பட்டிருக்கா.” அந்தக் கசப்பு லதா பிரக்ஞையில்லாமலே உளறுகிற அளவுக்கு ஞாபகங்களில் சீழ் பிடித்திருந்தது. ஆபரணம் லதாவின் வேண்டுதலைக் கேட்ட அடுத்தக் கணம் விதியாண்டவர் கோயிலிலிருந்து கிளம்பிவிட்டாள்.

அவளால் அங்கு ஒருகணம்கூட நிற்க முடியவில்லை. உள்ளே சென்று செல்லையனிடம் மன்னிப்புக் கேட்பதா இல்லை குளத்திற்குள் மூழ்கி செல்லையனின் தாயிடம் முறையிடுவதா என்று புரியாமல் பயந்து போய்விட்டாள். தெரியாமல் நடந்த செயல் அல்ல. விதியாண்டவரின் கோயிலில் அடுத்தவரின் வேண்டுதலைக் கேட்கக்கூடாது என்று குழந்தைகள்கூட அறியும். அங்கு குழந்தைகளைத் திருவிழா காலம் தவிர வேறு எப்போதும் பார்க்க முடியாது. ஆடு மாடு மேய்ப்பவர்கள் குளத்திற்கும் கோவிலுக்கும் நடுவிலுள்ள இலுப்பை மர நிழலில் அமர்ந்துவிடுவார்கள். ஆபரணத்துக்கு இதெல்லாம் தெரியும்.

அன்றைக்கு ஆபரணம் விதியாண்டவர் கோவிலுக்கு வருவதற்கும் ஒரு காரணம் உண்டு. அவளுக்கு ஒரு வேண்டுதல் தேவை. ஆனால் அதைக் கேட்பதற்கு அவளுக்கு சமயம் கூடவில்லை. எப்படியென்றால், ஆபரணத்துக்குக் கொஞ்சநாளாகச் சாணம் பிடிக்கிறபோது எதையோ பறி கொடுப்பதுபோன்ற பதைபதைப்பு ஏற்படுகிறது. அது என்னவென்று தெரியவில்லை. யார் சாணம் பிடிக்க வந்தாலும் கத்தி கூராகுகிறபோது எதையோ இழப்பதுபோல உணர்கிறாள்.

சிலர் குறைத்துப்பேசிக் காசு கொடுப்பார்கள், சிலர் இன்னும் அதிகம் தருவார்கள், எப்போதாவது வீடுகளில் கூலியோடு சேர்த்து பழைய துணிகளைச் சுருட்டிக்கொடுத்து விடுவதும் உண்டு. அதனால் ஆபரணத்துக்கு வீடுகள் இருக்கும் தெருக்களில் சாணம் பிடிப்பதென்றால் நல்ல ஆதாயம். தெருவின் சந்திப்பு முனையில் எங்காவது நிழல் பிடித்து அமர்ந்துவிடுவாள். ஒன்றிரண்டு அரிவாள்மனைதான் முதலில் வரும் பிறகு எப்படியோ அந்தத் தெரு முழுக்கச் சேர்ந்துவிடும். ஊர்க்கதை, நாட்டுநடப்பு என்று பொழுது முடிந்து கிளம்புவதற்குள் ஆபரணத்துக்குப் பை கொள்ளும். தைலக்காட்டில் அடிக்கடி கொலை நடந்தபிறகு ஆபரணத்தை ஊருக்குள் அனுமதிக்க மறுத்த சமயம் ஒரு நாள் ஆபரணம் சாணம் பிடிக்கும் சைக்கிள் இல்லாமல் வெறும் கையொடு வந்து அழுது ஒப்பாரி வைத்துவிட்டுப் போனாள்.

ஊர்ச்சண்டைக்கும் குடும்பம் கெட்டதற்கும் நான் எப்படிப் பொறுப்பாவது என்று முச்சந்தியில் நின்று திட்டித் தீர்த்துவிட்டாள். கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஆபரணம் அரிமளத்துக்குள் வராமல் ஊர் ஊராக அலைந்து திரிகிறாள். இத்தனைக்கும் அரிமளத்தில் அப்படியொன்றும் வருமானமில்லைதான். ஆனாலும் ஆபரணத்தின் பழைய சொந்தம் அங்கு நன்றாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய புண்ணியத்திற்காக ஊரைவிட முடியவில்லை. ஒரு வழியாக ஆபரணம் ஊருக்குள் வர ஆரம்பித்தபோது பழையபடி வருமானமும் துணிமணிகளும் அளவுக்கு மிஞ்சிச் சேர ஆரம்பித்தன. எப்போதாவது தைலக்காட்டில் ஒருசில அசம்பாவிதங்களும் காதில் விழுந்துகொண்டுதானிருந்தன. அது உண்மையா பொய்யா என்பதை அறிந்துகொள்ள ஆபரணம் பெரிதாகப் பிரயத்தனப்படவில்லை.

ஆனால் நாளாக ஆக எதோவொரு பாவச் சம்பவத்தைச் செய்கிறோம் என்று உறுத்த ஆரம்பிக்கிறது. தைலக்காட்டில் இரண்டு வயதுக் குழந்தையை யாரோ அறுத்து வீசியதைப் பார்த்துவிட்டாள். உண்மையில் அந்தக் குழந்தை இந்த ஊரே கிடையாது. போலீஸ் வெளியூர்க்காரர்களைக் கைது செய்தது. ஆபரணம் அடுத்தமுறை வாடிக்கையாக வந்தபோது கொலைகாரர்களை அடையாளம் கேட்டுத் தெரிந்துகொண்டாள். அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லையென்று மனம் சாந்தியானாலும் அந்த நினைப்பு நிறுத்தவில்லை. யாராவது கத்தி, அரிவாளைத் தீட்டவரும்போதெல்லாம் ஆபரணத்துக்கு பயம் பிடித்துவிடுகிறது. அவளுக்கு அதை இரண்டே நாளில் துரு சேரும்படித் தீட்டித் தரத் தெரியும். ஆனால் வருகிறவர்கள் பதத்தின் கடைசி சட்டம் வரைக்கும் தெரிந்திருக்கிறார்கள்.

விரலால் கீறி இரத்தம் பார்க்காமல் போவதில்லை. பதம் எந்த வேலைக்கு எந்தளவு என்று ஆபரணத்துக்கு நல்ல பரிச்சயம். அவளும் போக்குக் காட்டி ஏமாற்றி அனுப்பினாள். சக்கரத்தை மிதிக்க மிதிக்க அவளுக்கு வயிற்றுக்குள் கிலி கொள்ள துவங்கியது. சமயத்தில் சிறுநீர் கழிக்கும் அவசரம் என்று சொல்லிவிட்டு முதுகில் விழும் கேலிச் சொற்களோடு அங்கிருந்து போய்விடுவாள். ஒரு கட்டத்தில் இனி இந்தத் தொழிலை நிறுத்திவிடுவதென்கிற முடிவுக்கு வந்த பிறகு கடைசியாக விதியாண்டவர் கோவிலில் போய்க் கூறிவிடலாம் என்று நினைத்திருந்தாள். ஆனால் அன்றைக்கு, லதா கோவிலுக்குப் போன அதே நாள், வெகுநாளாக விதியாண்டவர் கோவில் பூசாரி அழைத்ததன் பேரில்தான் ஆபரணம் கிளம்பிப்போனாள்.

பூசாரி, கோவில் மூலகிரகத்திலிருந்து அரிவாள், கத்தி, கூர் வாள் என்று அத்தனையும் எடுத்து வந்து வைத்தார். ஆடி இரண்டாம் வெள்ளி கிடாவெட்டு பூசை. ஆயுதங்களைப் பார்த்ததும் ஆபரணத்துக்கு நடுக்கம் எடுத்துவிடுகிறது. ஒவ்வொன்றாகச் சாணம் பிடிக்க ஆரம்பிக்கிறாள். கையில் பலம் இல்லாமல் உடல் நடுங்குகிறது. பூசாரியிடம் சொல்லிக்கொள்ளாமல் செல்லையனிடம் போய் “இந்த விதியிலிருந்து என்னை விலக்கிவிடு” என்று கேட்டுவிட்டுச் சூடம் ஒன்றை ஏற்றிவிட்டு நேராகக் குளக்கரைக்குப் போனாள். முதல் படித்துறையில் இறங்கி செல்லையன் தாயிடம் வேண்டுதலை உரக்கச்சொல்லும்போது நா எழாமல் விக்கித்தது. படி ஏறியபோது ஏதோ மனக்குழப்பம். மறுபடியும் இறங்கிச் சொல்ல வேண்டும் என்று தோன்றவே பக்கத்து படித்துறைக்குப் போனாள். பின்பு அங்கேயே சிறிதுநேரம் ஆசுவாசமாகச் சாய்ந்திருக்கையில்தான் லதாவின் வேண்டுதல் காதில் வந்து விழுகிறது.

பத்து வருடங்கள் கழித்து ஆபரணம் லதாவைச் சந்திக்கையில் லதாவுக்கு அடையாளம் தெரியவில்லை. மொட்டைத் தலையும் எலும்பு உடம்புமாக ஆபரணம் உருமாறிப்போனாள். புகையிலைப் பழக்கத்தால் உதடுகள் சுட்டிருந்தன. லதா யார் என்ன என்றெல்லாம் கேட்காமல் ஆளைப் பார்த்ததும் மீந்த சாதத்தைத் தட்டில்போட்டுக் கொடுத்தாள். ஆபரணத்தால் சாப்பிட முடியவில்லை கண்ணிலிருந்து கண்ணீர் வழிகிறது. லதாவின் கையைப் பிடித்துக்கொண்டு “விதியாண்டவர் கோயில்ல உன்னோட வேண்டுதல நான் கேட்டு தொலச்சுட்டேன். என்னால உன்னோட விதி மாறாம போயிருக்கும். நான் இப்போ விதிகெட்டு அலையுறேன்” என்று குறி சொல்வதுமாதிரிப் பாடினாள். லதாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

திரும்பத் திரும்ப ஆபரணம் அதையே பாடுகிறாள். அதில் ஊருக்குள் சாணம் பிடிக்க வந்த கதை, வேண்டுதலைக் கேட்ட கதை, விதி விரட்டுகிற கதை என்று ஒவ்வொன்றாகக் கூர்ந்து கவனித்ததும் தான் வீட்டிற்கு வந்திருக்கிறது ஆபரணம் என்று தெரிகிறது. ஆபரணம்தான் அன்றைக்கு சிவாஜி இறந்த நேரத்தில் ஊருக்குள் தன்மீது அவச்சொல்லை உருவாக்கியவள் என்கிற நினைப்பு இன்னும் லதாவை விட்டுப் போய்விடவில்லை. ஆனாலும் ஆபரணத்தின் கோலம் அவள்மேல் பரிதாபத்தை ஏற்படுத்திற்று. “என்ன செய்றது ஆபரணம்.. எல்லாம் விதி” என்று தேற்றினாள். அந்த வார்த்தையக் கேட்டதுமே உடம்பை உலுக்குவது மாதிரி ஆபரணம் துடித்துவிடுகிறாள். லதா என்னிடம் சொன்னபோது லதாவும் விசும்பிவிட்டாள். “விதி விதி விதி” என்று சத்தமே இல்லாமல் ஆபரணம் உச்சரிப்பதை லதாவும் செய்து காட்டுகிறாள். பிரக்ஞை மெல்ல நழுவுகிறது. நான் ஆபரணத்தைப் பற்றிக் கேட்டு அதனைத் திசை மீளச் செய்கிறேன். அன்று ஆபரணம் வேண்டுதலைக் கேட்டதிலிருந்து பொட்டு தூக்கம் இல்லாமல் அலைந்திருக்கிறாள். பாவத்திற்கு என்ன பரிகாரம் என்று தெரியவில்லை. விசாரிப்பதற்கும் பயம். விசயம் தெரிந்தால் ஊருக்குள் விடமாட்டார்கள். காதில் விழுந்த வேண்டுதல் மனதிலிருந்து இறங்கவே இல்லை. பரணத்துக்குப் புத்தி தெளியவே நான்கு வாரம் ஆகிற்று. சாணம் பிடிக்கப் போகிற இடங்களில் விசாரிக்கிறாள்.

ஒரு வழியாக பொற்பனைக் கோவிலில் இதற்குப் பரிகாரத்தை வயதான ஒருத்தர் கூறினார். அது, விதியாண்டவர் கோவிலில் செல்லையனைத் தவிர வேறு யார், அதைக் காதில் வாங்குகிறாரோ அவரிடமே செல்லையன் வேண்டுதலை விட்டுவிடுவான். ஒருத்தரின் விதிக்குள் குறுக்கிடும் இன்னொருவர் அந்த விதியால் அவரது விதியை மாற்றிக்கொள்கிறார். ஆபரணத்துக்குத் தலைச்சுற்றிவிட்டது. திருக்கட்டளையிலேயே தங்கிவிட்டாள். அடுத்தநாள் மறுபடியும் அதே ஆளிடம் திரும்பவும் கேட்கிறாள். அவர் அதையே மீண்டும் சொல்கிறார். எத்தனைமுறை கேட்டாலும் அதே பதில்தான். ஆபரணத்துக்கு எப்படி தன்னால் அந்த வேண்டுதலை நிறைவேற்ற முடியும் என்று புரியவில்லை. முதலில் அநுபந்தமே அவளுக்கு யாரென்று தெரியாது. அந்தப் பெயரை அவள் கேள்விபட்டதே இல்லை. இன்னொரு பக்கம், இதுநாள்வரை தான் சாணம் பிடித்துக் கொடுத்தப் பதம், அப்படி எந்த உயிரையாவது சாய்த்திருக்குமோ என்கிற குழப்பம். பூசாரியிடம் யார் வேண்டுதலுக்கு வந்தது? என்று கேட்டுவிட முடியாது. ஆபரணத்திடம் இருந்ததெல்லாம் அநு பந்தம் என்கிற பெயர் மட்டும்தான். அவளுக்கும் அந்தப் பெயர் பரிச்சயம் இல்லை.

உள்ளூரில் இவள் யாரிடமாவது கேட்டாள் நிச்சயம் அவர்கள் சந்தேகப்படுவார்கள். ஏற்கெனவே ஆபரணத்தின்மீது நல்ல அபிப்ராயம் இல்லை. எனவே அநுபந்தம் என்கிற பெயரை வாய்திறந்து சொல்லாமல் விசாரிக்கும் விதிவசத்திற்குள் சிக்கிக்கொண்டு ஊர் ஊராக தேடி அலைகிறாள். எங்காவது ஊர்க்காரர்கள் அமர்ந்து பேசிக்கொள்ளும்போது அந்தப் பெயர் எதுவும் காதில் விழுகிறதா என்று காதைத் தீட்டி வைத்து அமர்ந்திருப்பாள். டீக்கடை, பஸ் ஸ்டாண்ட், பள்ளிக்கூடம் என ஒரு இடம் விடவில்லை. இதற்கிடையில்தான் அரிமளத்தில் சிவாஜி இறந்த செய்தி வந்தது. சிவாஜியை சிறுவயதிலிருந்து ஆபரணம் பார்த்து ரசித்திருக்கிறாள். கடைசியாக அவர் முகத்தைப் பார்க்கவேண்டும்.

அதோடு ஊர்க்காரர்கள் கூடுகிற துக்க வீட்டில்தான் தேடும் அநுபந்தம் கிடைக்கலாம். சிவாஜியின் பிணத்திற்கருகே யாரோ அநுபந்தம் என்று சொல்லப் போக அதுவரை அழுது கொண்டிருந்தவளுக்கு தூக்கிவாரிப் போட்டது. துக்கத்தோடு அதிர்ச்சியும் குழப்பமுமாக அத்தனையும் ஒன்று சேர்ந்து, யார் பெயரை இவ்வளவு நாள் தேடிக்கொண்டிருக்குகிறேனோ அவர் இறந்துவிட்டாரே என்று வேண்டுதலை நிறைவேற்ற முடியாத விரக்தியில் விசயத்தை உளறிவிட்டாள். “நான் வேணும்னு செய்யல” என்று மறுபடியும் மறுபடியும் தலையில் அடித்துக்கொள்ளும்போது லதா அவளைப் பிடித்து அப்படியே அணைத்துக்கொள்கிறாள். உடல் சுருட்டி வைத்த சிறுதாம்பு போல இருக்கிறது. இரண்டுபேரும் ஒருத்தரையொருத்தர் தேற்றிக்கொள்கிறார்கள்.

ஆபரணம்தான் அன்றைக்கு சிவாஜியின் உடலை முச்சொந்தி வைத்து குதிரைப்பாடைக்கு மாற்றி நெல் வைத்துக் கட்டியவள். ஊரில் யாருமே செய்ய துணியாத அப்புதிய சடங்கை ஆபரணத்தை வைத்துக் கோவில் சாமிகள் நிறைவேற்றின. ஒருவகையில் அதுகூட விதியின் காரியமாக இருக்கலாம் என்று அவளும் அன்று ஒப்புக் கொண்டதுதான் காரணம்.

அதோடு அன்றைக்கு அடக்கச் சடங்கில் லதா பிரக்ஞையின்றி இருந்ததால் நடந்தது எதுவும் தெரியாது. ஆபரணம் அத்தனையும் சமீபத்தில் நடந்தது மாதிரி விளக்கினாள். எதற்காக விதியாண்டவர் கோவிலில் என்ன காரணத்திற்காக லதா போனாள் என்று ஆபரணம் கேட்காமலேயே அந்த உரையாடல் அதை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது. “ஏன் அநுபந்தம் அநுபந்தம் அநுபந்தம்னு சொன்ன?” என்று கேட்டாள். அந்த கேள்வி காதில் விழுந்ததும் லதாவுக்கு உடல் பதறியெழுந்தது. இத்தனை வருடங்களாக அந்தச் சொல் தன்னை எந்த உருவத்தில் வந்து கேட்கும் என்று பயந்துபோயிருந்தாள். தலையை முழங்கால்களுக்குள் வைத்துக்கொண்டு ‘ஆமாம்’ என்று தலையசைத்தபடி அழுகிறாள்.

சிவாஜியின் அடக்கம் முடிந்து நாற்பத்தியொன்றாம் நாள் இரவு, லதாவின் கனவில் ஒரு முகம் தெரிந்துள்ளது. அந்த உருவத்தை அவள் அதுவரை எங்கும் பார்த்ததில்லை. அது யாரென்றும் தெரியாது. மூன்று முறை கனவில் அந்த ஆள் வருகிறார். எதற்கு என்று தெரியாமல் லதா பேயைக் கண்டதுமாதிரி திடுக்கிட்டு விழித்து அழுகிறாள். ஆபரணத்திடம் சொல்லும்போதே லதா விசும்புகிறாள். முந்தியால் வாய் பொத்திக்கொள்கிறாள். ஆபரணம் அவளைச் சமாதானப்படுத்தி “எனக்கும் அப்படி யாரென்றே தெரியாத முகம் ஒரே ஒருதடவை கனவில் வந்திருக்கு” என்றதும் லதா திடுக்கிட்டு “எப்போ?” என்றாள். ஆபரணத்திற்குச் சரியாக நினைவில் இல்லை.

சற்று யோசித்தவள் “சிவாஜியை அடக்கம் பண்ணினதுக்கு பிறகுதான்”. என்றாள். “அவரை குதிரைப் பாடைக்கு மாற்றியபோது என் கத்தியின் பதம் பட்டு அவரது பொய் சிகை அவிழ்ந்து நான் பதறிப்போய் தடுமாறினேன். அன்னைக்கு நல்ல மழை வேற. தண்ணீபொத்து பொத்துனு பிணத்தில் விழுந்து முகமே அலங்கோலமாகிடுச்சு” லதா, “அந்த முகம் எப்படி இருந்தது?” என்றாள்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer