அநிலம்
(எழுதிக்கொண்டிருக்கும் புதினத்திலிருந்து)

பா வெங்கடேசன்

பகிரு

இடையும் இசையும் என்கிற பெயர் கொண்ட அந்த மனமகிழ் மன்றத்து இரவு நேர நடன விடுதியின் வாசலில் சில மாதங்களுக்குமுன், நகர மக்கள் அத்தனை பேருடைய நினைவுகளிலும் இன்னும் சில வருடங்களுக்காவது நீங்காமல் நிலைக்கப்போகும், தனித்துவமிக்கப் பேய்மழை பெய்துகொண்டிருந்த அந்த இரவில் எங்களுக்கு என்ன நடந்தது என்பதை இன்றும் எங்கள் ஐந்து பேராலுமே தெளிவாக மனக்கண்களில் திரும்பிப் பார்த்து விளங்கிக்கொள்ள முடியவில்லை. முதலில் அந்த நிகழ்வு நடன விடுதியின் வாசலில்தான் தொடங்கியதா அல்லது அதற்கு முன்பே, விடுதிக்குள்ளேயே, நிகழத் தொடங்கி விட்டிருந்ததா, அல்லது நடன நிகழ்வின்போது எங்களுக்கு நேர்ந்த வினோதமான அனுபவத்தை நாங்கள்தான் பேசிப் பெருக்கி அது எங்களை விடுதிக்கு வெளியிலும் தொடர்ந்து வந்ததாகக் கற்பனை செய்துகொண்டோமா என்பதேகூட எங்களுக்குத் தெளி வில்லாத இருண்மைப் பண்பு கொண்டதாகத்தான் இருக்கிறது. ஐவரில் ஒருவர் மட்டுமல்லாமல் ஐவருமே அந்த அனுபவத்தை அடைந்தோம் என்கிற ஒரேயொரு பலவீனமான மெய்ம்மையின் கொக்கியில்தான் நாங்கள் அந்த நிகழ்வினுடைய மாயத்தன்மையின் முழு எடையையும் தொங்க விட்டிருக்கிறோம்.

நாங்கள் அன்று முன்னாள் மாநிலங்களை இணைத்த நெடுஞ்சாலை மருங்குத் தொழிற்பேட்டைத் தொகுப்பில் பெண்களுக்கான அழகு சாதனப் பொருள்கள், உள்ளாடைகள், தூமைக் கழிப்புக் குட்டைகள், நெகிழி சிசினங்கள், பொம்மைகள், கைக்கருவிகள் முதலியன தயாரிக்கும் (நூறு விழுக்காடு பெண்களால் நடத்தப்படுகிறது என்ப தனாலேயே பிரபலமாகியிருக்கும்) யோநீ பெண் பொருள்கள் தயாரிப்புத் தொழிற்சாலையை நிறுவி நடத்திவரும் அதன் இரட்டை உரிமையாளர்களும், அந்த மாலை நிகழ்வில் பங்குகொண்ட எங்கள் ஐவரில் இருவரும், உடன்பிறந்த சகோதரிகளுமான எங்கள் தோழிகள் இருவரில் ஒருத்தியாகிய நீமாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக (கொண்டாட் டத்தை ஏற்பாடு செய்திருந்தவள் அவர்களில் மற்றொருத்தியான யோகா) அழைப்பின் பேரில்இடையும் இசையும் நடன விடுதியில் குழுமி இருந்தோம். அப்பொழுது மழைக்கான அடையாளம் எதுவும் வானில் இருக்கவில்லை. கூடவேதனிநாடு பிறந்தநாள் கொண்டாட்ட நாளாயும் அந்த நாள் இருந்ததால் சாலைகளிலும் விடுதிகளிலும் மன்றங்களிலும் கூட்டநெரிசலும் வாகன நெரிசலும் மிக அதிகமாக இருந்தது, அரசுப் பிரமுகர்களைத் தவிரப் பிறருக்குப் பொதுயிடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான அனுமதி தரப்பட வில்லை, மற்றவர்கள் தங்களுடையதை வெகுதொலைவில் நிறுத்திவிட்டோ அல்லது திருப்பி அனுப்பிவிட்டு வேலை முடிந்ததும் (வேலையென்ன வேலை, அன்று அரசு விடுமுறையாதலால் பொது இடங்களில் அத்தனை பேரும் செய்துகொண்டிருந்தது விருந்தாடல்களையும் நடனங்களையும் முத்த மிடல்களையும் தழுவல்களையும் தவிர வேறெதையுமில்லை) செய்தியனுப்பி வரவழைத்துக்கொள்ளும் ஏற்பாட்டைச் செய்துவிட்டோதான் கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டுமென்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்ததால் யோகாவும்நீமாவும் தங்களுடைய சொந்த வாகனத்தைக் கொண்டு வராமல் வாடகை வாகனத்திலேயே (மற்ற எங்கள் மூவரையும் அந்த வண்டியிலேயே எங்கள் இருப்பிடங்களிலிருந்து ஏற்றிக்கொண்டும்) நடன விருந்திற்கு வந்துவிட்டிருந்தார்கள். எங்களைத் தவிர அவர்களால் விருந்திற்கு அழைக்கப்பட்டிருந்த மற்ற நண்பர்களும் தவறாமல் விடுதிக்கு வந்துவிட்டிருக்கப் பிறந்தநாள் நிகழ்வு கோலாகலமாகத் துவங்கி நடந்து கொண்டிருந்தது. பரிசுகளும் முத்தங்களும் வாழ்த்துக் களும் சீண்டல்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டபின் இசை நடனம் துவங்கியது. மதுவகைகள் எச்சிலாய் வழிந்தோடிக்கொண்டிருந்தன. ஒவ்வொரு இசைக்கோப்பு முடியும்போதும் உற்சாகம் அதன் உச்சத்திற்குச் சென்று பீறிட்டு அடங்கி அடுத்த இசைக் கோப்பு அதன் பணியைச் செய்ய அந்த இடத்திற்கு மாறிக்கொண்டிருந்தது. முதலில் கிட்டத்தட்ட அங்கேவருகை தந்திருந்த அத்தனை பேரையும் ஆட வைத்துஆரவாரித்துக்கொண்டிருந்த சூழல். நேரம் செல்லச் செல்ல ஆடிச் சோர்ந்துபோனவர்கள் தங்கள் இருக்கைகளில் ஒதுங்கிக்கொள்ள விரல்விட்டு எண்ணக் கூடிய இளைஞர் பட்டாளத்துடன் தொடர்ந்து கொண்டிருந்தது.

நடன விருந்து என்பதே ஒரு கிளர்ச்சியூட்டும் அனுபவம்தான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை, நானோ அன்று தனிப்படக் கூடுதல்கிளர்ச்சியொன்றிலும் திளைத்துக்கொண்டிருந்தேன், என்னை விடாமல் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறா னென்று சொல்லப்பட்ட என்னுடைய கல்லூரியைச்சேர்ந்த (நான் அரசு வான்வெளி ஆராய்ச்சிக் கழகக் கல்லூரியில் வேற்றுக் கிரகவியல் துறையில் இளநிலை இரண்டாமாண்டு மாணவி. யோநீ பெண் பொருள்கள் தயாரிப்புத் தொழிற்சாலையில் பகுதிநேர மேலாளராகப் பணி செய்தபடி போதா பெண்கள் விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டிருக்கிறேன்) மாணவர்களில் ஒருவன் (ஒரு முறை தொழிற்சாலை யின் போட்டியாளர்களால் அதன் உரிமையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் அச்சுறுத்தல் நேரவிருப்பதாக ஒரு அநாமதேயத் தகவல் காற்றில் கசிந்தபோது நான் தங்கும் விடுதி வாசலிலேயே இரண்டு இரவுகளைக் கழித்தவன்) இன்று என்னைக் காட்டி என் மீதான தன்காதலையும் சொல்லிப் பகிர்ந்துகொள்ளத் தன் நண்பர் களுடன் அங்கே வரவிருப்பதாகச் சக மாணவிகள் மூலம் நான் கேள்விப்பட்டிருந்தேன். முதலில் அதை நான் நம்பவில்லையாயினும் அது அளித்த கிளர்ச்சி காரணமாக நம்ப விரும்பினேன். ஆனால் நான் கேள்விப்பட்டது உண்மைதான். அந்த மாணவன்மெய்யாகவே தன்னுடைய இரண்டு நண்பர்களுடன் அங்கே வந்துதானிருந்தான். பிறந்தநாள்கொண்டாட்டத்திற்கும் அவனுக்கும் தொடர்பில்லை யாதலால் தொலைவில், பொது வாடிக்கையாளர் களுக்குரிய பகுதியில், ஒரு மூலை மேசையில் என்னைப் பார்த்தபடியே தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தான். அவன் என்னைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறான் என்கிற ஊகமும் ஒருவேளை அவன் என்னை அணுகக்கூடும் என்கிறஎதிர்பார்ப்பும் தந்த போதையில் எனக்கு நடனத்தின் நடுவே அடிக்கடி காதுகள் சூடாகிச் சிவந்துகொண்டிருந்தன. தொடர்ந்து சுழன்றுகொண்டேஇருந்த மனிதவுடல்கள் கூடிப் பிரியும் இடைவெளியில் மயக்கமூட்டும் மங்கிய பன்னிற ஒளிவிளக்குகளின் அலைவில் உயர்ந்தும் தாழ்ந்தும் திரண்டும் திரிந்தும் தெரிந்தும் மறைந்தும் அவனுடைய இருப்பு என் பார்வைக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தது. அது என்னுடைய அசைவு களைப் பிரத்யேகமானதாக ஆக்கிக்கொண்டு இருப்பதாயும் எனக்குத் தோன்றியது. ஏதோ ஒரு கட்டத்தில் அவன் எழுந்து என்னை நோக்கி வருவானென்றும் தன்னுடன் நடனமாட என்னை அழைப்பானென்றும் நான் எதிர்பார்த்து அந்தத் தருணத்திற்காகக் காத்துக் கொண்டுமிருந்தேன். அப்போது அந்த அழையா விருந்தாளியை என் தோழிகள் திரும்பி வியப்புடன் பார்ப்பார்கள். அவன் என்னைக் காதலிப்பதாக அவர்களிடம்திக்கித்  திணறிச் சொல்லுவான். அவர்கள் என்னை அது உண்மையா என்று உசாவுவார்கள். நான் பெருமிதமும் அலட்சியமும் கலந்த குரலில் அவன் என் கல்லூரி மாணவன் என்பது உண்மைதானென்றாலும் அவன் என்னை விரும்புகிறான் என்பதுஎனக்கே இப்போதுதான் தெரியும் என்றும்அந்த வகையில் அவனுடன் நடனமாட எனக்குமறுப்பேதும் இருக்கப் போவதில்லையென்றாலும் அவனுடைய காதலைப் பொறுத்தவரையில் நான் இனிமேல்தான் யோசிக்க வேண்டும் என்றும் சமத்காரமாகப் பேசி என் தோழிகளே அவனைப்பற்றி என்னிடம் நான் விரும்பும் வகையில் பேச ஒரு வாய்ப்பை உருவாக்கிக்கொள்வேன் (ஏன்,இவனுக்கென்ன, ஆள்  பார்க்க வாட்ட சாட்டமாக, நாகரீகம் தெரிந்தவனாக, உன்னைப் புரிந்துகொள்ளவும் உனக்காகக் காத்திருக்கவும் முயற்சிக்கிறவனாகத்தானே தெரிகிறான் இத்யாதி). கற்பனைகளின் வேகத்திலும் நடனத்தின் வேகத்திலும் அகப்பட்டு உண்மையில் அப்போது நான் மூச்சுவிடத்திணறிக்கொண்டிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் விரைவிலேயே, அவன் நான்எதிர்பார்த்த எந்த அசைவையும் காட்டாமல் தொலைவிலேயே தன்னைத் தன் நண்பர்களுடன் இருத்திக்கொண்டிருந்த காரணத்தால், அந்த மயக்கம் மெதுமெதுவாக வடியத் தொடங்கி என்னுடைய தன்னுணர்வு திரளத் தொடங்கி அவனுடைய பார்வை அத்தனை இடையீடுகளை மீறியும் என் மார்புகளில் ஒருவிதமான பிடிவாதத்துடன் மோதியதாக நான் உணர்ந்தபோது வெட்கத்தாலோ இயல்புணர்ச்சியாலோ எனக்கு அது ரசிக்காமல் போய்விட்டது. நான் வேண்டு மென்றே அவன் பார்வைக்கு என் பின்புறத்தைக் காட்டியபடியும் அவனுடைய இருப்பைச் சட்டை செய்யாதவளைப்போல இசையிலும் நடனத்திலும் என் கவனத்தைத் திருப்பிக்கொள்ளவும் முயற்சித்தேன். முதலில் அதில் ஓரளவு அழுத்த தணிவையும் உணர்ந்தேன். ஆனால் சிறிதுநேரத்திற்குப் பிறகு மீண்டும் அவனுடைய பார்வை என் முதுகைத் துளைத்து மார்புகளைத் துழாவுவதான உணர்வு நீங்க வில்லையென்று தோன்றவே அவனை வெளிப் படையாகவே முறைத்துப் பார்த்து என் எரிச்சலைக் காட்டிவிடும் எண்ணத்துடன் அவன் இருந்த திசையை நோக்கித்  திரும்பினேன்.

அப்போதுதான் அது நிகழத் தொடங்கியிருக்க வேண்டும் (அல்லது ஏற்கனெவே நிகழ ஆரம்பித்து விட்டிருந்த அதை நான்தான் தாமதமாக உணர்ந்தேன் என்றும் சொல்லலாம்). அங்கே அந்த மாணவன் இல்லை. நான் அவனிடமிருந்து பார்வையைத்திருப்பியிருந்த சமயத்தில் ஏதோ ஒரு கணத்தில் அவன் கிளம்பிப் போய்விட்டிருக்கவேண்டும் (ஒருவேளை நான் முகத்தைத் திருப்பிக்கொண்டது தன்னை அவமானப்படுத்தியதாகவோ அவனை நான் விரும்பவில்லை என்பதாகவோ அவனை எண்ணச் செய்திருக்கக்கூடும். அல்லது அவனுக்குத் தன் நண்பர்களிடம் தான் காதலியாக வரித்திருக்கும் பெண்ணை வெறுமே காட்டிவிட்டுப் போகும் யோசனை மட்டுமே இருந்திருக்கக்கூடும். அல்லது இத்தனை கூட்டத்தில் தன்னுடைய காதலைச் சொல்வது, அது எனக்கு என் தோழிகள் முன்னிலையில் தடுமாற்றத்தை ஏற்படுத்திவிடக்கூடுமென்றால், அத்தனை அறிவுக்குகந்த செயலாக இருக்காது என்று தோன்றியிருக்கக் கூடும். அல்லது அப்படிஅவன் நண்பர்களால் அறிவுரை வழங்கப்பட்டிருக்கக் கூடும், அல்லது, அல்லது, அல்லது). என்னை அவனுடைய வெளியேற்றம் பெரிதாகப் பாதிக்கவில்லையென்றாலும் (எங்கே போய்விடப்போகிறான்) சிறிது ஏமாற்றத்தைத் தரத்தான் செய்தது(ஒருவிதத்தில் அந்த ஏமாற்றத்தில் ஏதோ ஒரு கிளர்ச்சியும் இருக்கத்தான் செய்தது). ஆனால் அதே கணத்தில் அந்தக் கிளர்ச்சியை நான் சிந்தித்துப் பரிச்சயப்படுத்திக்கொள்வதைத் தடை செய்யும் வண்ணம் என் மார்புகளைத் துளைக்கும் அந்தப் பார்வை மட்டும் இன்னும் என்மேல் தங்கியிருந்ததை என் இயல்புணர்ச்சி அறிந்துவிட்டது. நான் திடுக் கிட்டேன், என் இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்து விட்டது. அந்தத் துணிவற்ற மாணவனல்ல, மாறாக வேறு யாரோதான் என்னை அப்படிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்களென்பதை நான் தெரிந்துகொண்டுவிட்டேன். குழப்பத்துடனும் சிறிது அச்சத்துடனும் கண்களை அரங்கத்தைச் சுற்றிஓட்டினேன். ஆண்களின் பார்வை அவற்றின் இயல்புப் படி என்மேல் சில கணங்கள் மின்வெட்டி விலகிக் கொண்டிருந்தனவேயன்றி என் உறுப்புகளில் பிரத்யேகமாகத் தங்கியிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கழுத்தின் கீழ்புறம் மேற்சட்டையினடியில் யாரோ உதடுகளைக் குவித்துக் காற்றை ஊதும் குறுகுறுப்பை என்னால் வெறும் கற்பனை என்று எடுத்துக்கொள்ளவும் முடியவில்லை. பார்வையால் எத்தனை துழாவிப் பார்த்தும் ஆளையோ காரணத்தையோ கண்டுபிடிக்க முடியாமலும் தவிப்பை வெளிக்காட்டாமலும் தொடர்ந்து சிறிது நேரம் நடனமாடிக்கொண்டிருந்த நான் கடைசியில் அதன் அழுத்தத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் வேறு வழியின்றி அதை என் தோழிகளிடம் பகிர்ந்து கொண்டுவிட்டேன்.

கெடுவாய்ப்பாக அந்தப் பகிர்தல் தீர்வைக் கொண்டு வருவதற்குப் பதிலாக சூழலை இன்னும் அச்சம் நிறைந்ததாயும், என் தோழிகளையும் உள்ளிழுத்துக் கொள்ளும் சுழலாயும் உடனே மாற்றிவிட்டது. நான் சொன்னதைக் கேட்டதும் அவர்களுடைய முகங்கள் கேலியினாலோ கோபத்தினாலோ சிவப்பதற்குப் பதிலாக பீதியில் வெளிறிப்போய்விட்டன. அவர்கள் நான் என் மார்புகளை விடாமல் பற்றிக்கொண்டிருந்த பார்வையால் நிம்மதியிழப்பிற்கு உள்ளாகியிருந்த அத்தனைநேரமும் தாங்களுமே என்னைப் போலவே அதே விதமான உறுத்தலைத் தங்கள் முலைகளில் பரிச்சயப் பட்டுக்கொண்டிருந்ததாக என்னிடம் சொல்லித் தாங்களும் திகைத்து என்னையும் திகைக்க வைத்தார்கள். நான் அந்தப் பார்வைக்குரிய உடலைத்தேடிக் கண்களால் சலித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் அவர்களும் என்னைப் போலவே மற்றவர் களுக்குத் தெரிவிக்காமல் அதே செயலில்தான் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். ஒவ்வொருத்தியுமே அது தனக்கு மட்டுமே தோன்றும் காரணமற்ற உணர்வு என்றே எண்ணி அதைத் தானே கண்டுபிடித்துச் சரிசெய்துகொண்டுவிட முயற்சி செய்துகொண்டு இருக்கிறாள்கள். இப்போது நான் வெளிப்படையாக அதைத் தெரிவித்தவுடன் அது தனிப்பட்ட உணர்வல்ல என்பது அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. தெரிந்ததும் அந்தப் பார்வையின் பிடிவாதம் கூடிவிட்டதைப்போல எங்கள் எல்லாருக்குமே மூச்சுத் திணறவும் தொடங்கிவிட்டது.

ஒப்பீட்டளவில் இடையும் இசையும் நடன விடுதி அளவில் சிறியதுதான். ஒருவேளை அதன் தாங்கும் சக்திக்கு அதிகமாகக் கூட்டம் சேர்ந்து அதனால்அறை வெப்பம் அதிகமாகி அதோடு பலதரப்பட்ட மது வகைகளின் நெடி மற்றும் காதையும் மண்டையும் பிளக்கும் இசையோலம் எல்லாமாகச் சேர்ந்து அந்த மூச்சுத் திணறலை உண்டாக்குகிறதோ, அதுதான் மார்பகங்களைத் தாக்கி யாராலோ பார்க்கப்படும் உணர்வை ஏற்படுத்துகிறதோ என்று நாங்கள் ஒரு மேசைக்கு நகர்ந்துபோய் உட்கார்ந்து பதற்றத்துடன் எங்களுக்குள் பேசி விடை தேட முயற்சித்தோம். ஒன்றுக்கு மேற்பட்ட நபருக்கு அந்த உணர்வு உண்டாகியிருப்பதால் அதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது. ஆனால் எங்களைத் தவிர அப்போது அந்த விடுதியிலிருந்த வேறு யாரும் யாருடனும் அவ்விதமான உணர்வைப் பகிர்ந்துகொண்டதாக எங்களால் பார்க்க முடியவில்லை. தொடர்ந்து சிரிப்பும்களிப்பும் நடனமும் இசையுமாகவேதான் அரங்கம் நிறைந்திருந்தது. எங்கள் ஐவரையும் திகில் பிடித்துக் கொண்டுவிட்டது. எங்களை வலையில் வீழ்த்த யாரோ முயற்சி செய்கிறார்களென்றும் நாங்கள் அருந்திய மதுவிலோ நான் அருந்திய பானத்திலோ (நான் மது அருந்துவதில்லை) எதையோ தனிப்படக் கலந்து தந்திருக்கிறார்களென்றும் எங்களைக் கவனி யாதவர்கள்போல அமர்ந்திருப்பவர்களில் யாரோ ஒருவருக்கு அல்லது ஒரு குழுவிற்கு எங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் எண்ணம் இருக்கிறதென்றும் கற்பனை செய்துகொண்டதில் எங்களுடைய உடல்கள் நடுங்கத் தொடங்கிவிட்டன. வெறும்உணர்வு சார்ந்து விடுதி நிர்வாகத்திடம் முறை யிடுவது பலன் தராது என்றும் தோன்றவே வேறுவழியின்றி நாங்கள் உடனே விடுதியை விட்டுவெளியேறிவிட முடிவு செய்தோம். விருந்தினர்கள்விடைபெறுவதற்கு முன் விருந்தளிப்பவர் வெளியேறுவது நாகரிகமாகாது என்று யோகாவும் நீமாவும் தயங்கினாலும் எங்களுடைய வற்புறுத்தலின் பேரிலும் தங்களுடைய அச்சத்தினாலும் மேலும் எங்களில் ஒருத்திக்கு உடல்நிலை சரியில்லை என்றும் எனவே அவள் பொருட்டாகத் தாங்கள் விடைபெற்றுக் கொள்ளவேண்டியிருக்கிறது என்றும்வருகை தந்தவர்களிடமும் அவர்கள் வேண்டியஅளவு உண்டு குடித்து விருந்தாடிவிட்டுச் செல்லத் தங்கள் செலவில் அனுமதிக்கும்படி விடுதி மேலாளரிடமும் சொல்லிவிட்டு விடுதியைவிட்டு வெளியேறினோம். யோகாவும் நீமாவும் எங்களுடைய இருப்பிடத்திற்குத் திரும்ப அங்கிருந்தவர்கள் யாருடைய உதவியையேனும் உரிமையோடேயே கேட்டுப் பெற்றிருந்திருக்கலாமெனினும் அச்சத்தாலும் சந்தேகத்தாலும் அந்த வழியைத் தவிர்த்துவிட்டு வாடகை வண்டி பிடித்துக்கொள்ளும்எண்ணத்துடன் நடன அறையைவிட்டு வெளியேறி விடுதி வரவேற்பறையையும் கடந்து வாசலைநோக்கிப் போனோம்.

இசையும் இடையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டிருக்கும் கேளிக்கையுலகின் வகைமைகளையும் மாயாஜாலங்களையும் அவை தரும் பரவசங்களையும் சாலையிலிருந்து தன்னை வேடிக்கைப்பார்ப்பவர்களால் சற்றும் ஊகிக்கவியலாதபடி மறைத்து வைத்து வாடிக்கையாளர்களாகி உள்ளேநுழைந்த பின்பே வேறொரு உலகத்தின் அனுப வத்தை ஒரு பேரதிசயமாக அவர்கள்முன் விரித்துக் காட்டும் நோக்கத்துடன் தன் உள்ளரங்கங்களை ஒலித்தடுப்புச் சுவர்களின் வெகு ஆழத்திற்குள்புதைத்து வைத்திருக்கும் கட்டுமானத் தொழில் நுட்பத்தைத் தேர்ந்துகொண்டிருந்தது. அது ஒரு கனவுஉலகம். அங்கே அது உருவாக்கும் ஒளியையும் ஒலியையும் தாண்டி யதார்த்தவுலகின் ஒளியோஒலியோ உட்புகுவதற்கு எந்த வகையிலும் வாய்ப்பேஇல்லை. போலவே அதன் உள்ளிருந்து வெளியேறும்ஒருவர் வாசலைத் தொடும் கணம் வரையில் அதன்பிடியிலிருந்து தப்பி வெளியில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் தருணமும் சித்திப்ப தில்லை (இசையும் இடையும் விடுதியைப்போன்ற மிகச் சில விடுதிகள் தங்கள் அரங்கங்களுக்குள் அலைபேசி போன்ற வெளியுலகத் தொடர்புச் சாதனங்களைக் கொண்டு வருவதற்கு, அது எத்தனை முக்கியமான பிரமுகராக இருந்தாலும், விலக்குப் பெற்றிருப்பது அனைவரும் அறிந்த விஷயம்தானே). எனவே நாங்கள் வாசலைத் தொட்ட கணத்தில்தான் சற்றும் எதிர்பாராத அதிர்ச்சியுடன் வெளியேவான் பிளந்து கொட்டிக்கொண்டிருக்கும் மழையைஎதிர்கொண்டோம். அது பொதுவாக ஆகஸ்ட்பதினைந்தின் மழை என்பதை அதைச் சந்தித்த வுடனேயே எங்களுக்குள் சொல்லிக்கொண்டோம்.ஆனால் அதே மழை ஏதோவொரு கோபத்துடனும் பழிவாங்கும் மூர்க்கத்துடனும் நகரத்தின் மேல், மிக அச்சமூட்டும் விதத்தில் விழுந்துகொண்டிருப் பதாகத் தோன்றியது. வானம் மிகப் பழையதாக, வேறு ஏதோ ஒரு காலத்தினுடைய வானம்போலத் தெரிந்தது. நகரத்தின் மூன்றாவது பிரிவின் முக்கியச் சாலைகளில் ஒன்றான அந்தச் சாலை எண் 7 அதன் வானுயர்ந்த கட்டிடங்களிலும் எண்பதடி அகலச் சாலையிலும் ஆள் நடமாட்டமற்றுப்போயிருந்தது. தனிநாடு நாள் கொண்டாட்டங்கள் பாயக் காத்திருக்கும் மிருகத்தைப்போல வெளிப்படுவதற்கான தருணத்தை நோக்கி அவற்றின் உட்புறங்களிலும் மறைவுகளிலும் பதுங்கியிருப்பதை இந்நிலத்தோடு பழகியிருக்கும் யாராலும் உணர முடியும். அந்தக் கொண்டாட்டத்தின் வண்ணங்கள் வேறு. இசை வேறு. நடனங்கள் வேறு. அவற்றிலும் பார்வைகள் உண்டுதான். ஆனால் அவை அச்சம் விளைவிக்கும் ரகசியத்தையும் இருண்மையையும் கொண்டிருப்பதில்லை. அவைவெளிப்படையானவை, துணிச்சல் கொண்டவை. சாலையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்கெனவேதடையிருந்ததால் கனத்த மழைப் பொழிவிற்குஇடையிலும் சாலையின் நெடுந்தொலைவுவரை பார்வைத் தடையேதும் இருக்கவில்லை. எங்கள்ஐவருக்குள்ளுமே அதுவரையில் நிறைந்திருந்த, உடனடியாக இருப்பிடத்திற்குத் திரும்பும் தவிப்பையும் புதிர்மை கொண்ட அச்சவுணர்வையும் அந்த அகண்டபுறவெளி தணித்து ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்தது. என்றாலும் எங்கள் மார்புகளின் மேல் படிந்திருந்த அந்த உடலற்றப் பார்வை விலகிவிட்டதான உணர்வை நாங்கள் இன்னும் பெறவில்லை. வெளியே வந்ததும் யோகா தன்னுடைய ஓட்டுநருக்குத் தகவல் சொல்லி வண்டி வருவதை உறுதி செய்து கொண்டுவிட்டாளெனினும் காத்து இருக்கும் நேரத்தில் நாங்கள் குறைந்தபட்சம் விடுதி வாசலிலிருந்து அப்பால் நகர்ந்து செல்லவாவது ஒரு வாய்ப்பை எதிர்பார்த்துத் தவிப்புடன் மழைக்குள் பார்வையால் துழாவிக்கொண்டிருந்தோம் (விடுதி  யுமே ஏதோவொரு விளங்காத முணுமுணுப்பால் எங்களை வழியை அடைத்துக்கொண்டு நிற்காமல் அகன்று போகச் சொல்லி அரற்றிக்கொண்டேதான் இருந்தது). நெடுநேரம் இப்படியே கடந்துபோனது.

பிறகு மினுதான் (மினு ஒரு படிமி. நடிகையாக முயற்சித்துக்கொண்டிருக்கிறாள். அரசு விமரிசனச் சிந்தனைகளைக்கொண்ட பெண் என்றும் அவ்வித மான சிந்தனைகளை உள்ளடக்கிய சிறு திட்டப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பவளென்றும் சில தலைமறைவுக் குழுக்களுடன் ரகசியத் தொடர்பி லிருப்பவளென்றும் (தகுந்த ஆதாரங்களில்லாமல், அல்லது ஆதாரங்களெதையும் விட்டுவைக்காமல்) அறியப்பட்டிருக்கிறாள் சாலையின் எதிர்ப்புறம், விடுதி வாயிலிலிருந்து ஒரு இருநூறு மீட்டர் தொலைவில், நீர்த்திரையின்மேல் வரையப்பட்ட அபத்த ஓவியத்தைப்போலக் குத்துவாக்கில், ஏழெட்டு அடி உயரம் இருக்கலாமென்று கணிக்கத்தக்க கருப்பு உருப்படியொன்று உயர்ந்திருந்ததை எங்களுக்குச் சுட்டிக்காட்டினாள். ஏதோ ஒரு கட்டிடத்தின் திறந்துகிடக்கும் வாயிலைப்போலத்தான் முதலில் அது எங்களுக்குத் தோன்றியது. அதுதானா என்பதை அவதானித்துக் கொள்ளும் எத்தனிப்புடன் நாங்கள் அதை நீர்த்தாரையை ஊடுறுவி பார்த்துக்கொண்டிருந்த நிமிடங்கள் முழுவதிலும் (அப்போதைய மனநிலையில் அதைஉற்றுப் பார்க்கப் பார்க்க அந்தத் தோற்றத்தை ஒரு பெரும் மலையின் அடிவாரமாகவோ அல்லதுஒரு குகையின் முகப்பாகவோ தான் எங்கள் மனதில்உள்வாங்கிக்கொள்ள முடிந்தது) அதன் இருப்பிலோ அல்லது அதன் முன்புறத்திலோ எந்தச் சலனமும் ஏற்பட்டிருக்கவில்லை. மழைக்காக ஒதுங்கியிருக்கவேண்டியவர்கள் ஏற்கெனவே புகலிடங்களைக் கண்டுகொண்டிருந்து இருப்பார்களாதலால் அந்த வாயில் வெறிச்சோடிக் கிடப்பதாயும் எங்களுக்காகவே அது தன்னை விரியத் திறந்துவைத்துக் காத்துக்கொண் டிருப்பதாயும் நாங்கள் எங்களுக்குள் சொல்லிக் கொண் டோம். முதுகின் பின்னே விடுதியின் இருப்பும் முள்ளாக உறுத்திக்கொண்டே இருந்ததால் அவ்விடத்திற்குச் சென்று ஒதுங்கி அங்கே எங்கள் வண்டிக்காகக் காத்திருப்பது என்றும் முடிவு செய்தோம். ஒரு சில வினாடிகள் மழைக்குள் எங்களை மூழ்கடித்துக்கொள்வதற்கும் குழப்பமான அந்தக் கரிய பொருளை நெருங்குவதற்கும் எங்களை மனதளவில் ஆயத்தப்படுத்திக்கொண்ட பிறகு ஒருவர் பின் ஒருவராக விடுதிப் படிகளிலிருந்து நழுவி அதை நோக்கி ஓடத் தொடங்கினோம். ஓடும்போதே அப்படிஎங்களை மழைக்குள் விரட்டிவிட்ட மர்மப் பார்வையின் பிடியிலிருந்து தப்பிவிட்ட உணர்வை அடைவதன்மீதும் கவனங்குவிக்க முயன்றோம். ஆனால்எங்களுக்கு நிகழவேண்டியது நிற்காமல் நிகழ்ந்து கொண்டுதானிருந்தது. ஓடும் கதியிலேயே நாங்கள் எங்கள் உடலைப் பழையபடி சுமையற்றதாக உணர்வதற்குப் பதிலாகக் கூடுதல் சுமையில் திணறுவதாக உணர்ந்தோம். உண்மையில் அந்தப் பார்வையிலிருந்து அகல்வதற்குப் பதிலாக நேரே அந்தப்பார்வையை நோக்கியேதான் நாங்கள் விரைந்துகொண்டிருந்தோமென்பதை நாங்கள் தெரிந்துகொள்வதற்குள் விடுதி வாயிலுக்கும் அந்தக் கருப்புப் படிமத்திற்குமிடையிலிருந்த தொலைவை எங்கள் ஓட்டம் கரைத்துவிட்டிருந்தது. நாங்கள் அங்கே பார்த்ததை நாங்கள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. எங்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பார்வையை, அதற்குரிய உடலை, நேருக்கு நேராக, கண்ணோடு கண்ணாக நாங்கள் வலியப்போய்த் திடீரென்று எதிர்கொண்டிருந்தோம். ஒரு மனித உருவமாக இருக்கலாமென்கிற ஊகத்திற்குச் சிறிதளவு கூட இடம் தராத நிறத்துடனும் உயரத்துடனும் வடிவத்துடனும் அங்கே நின்றுகொண்டிருந்தது ஒரு ஆணுருவம். மேலும் அவன் (இந்த வார்த்தையை நான் மிகச் சிரமப்பட்டுத்தான் உச்சரிக்க வேண்டியிருக்கிறது, ஒரு பரிணாமப் பொருளில் அந்த உருவத்தை, தொடர்ந்து அதனுடன் நடத்திய சிறு உரையாடலோடும் பொருத்திப் பார்த்தால், அதை உயர்திணையில் அழைக்கவோகற்பனை செய்யவோ இன்றும் எங்களுக்குத் தயக்கமிருக்கிறது) எங்களை எதிர்பார்த்துக் கொண்டே யிருந்தவனைப் போலவும் அவனுடைய அழைப்பின் பேரில்தான் நாங்கள் அவனை அணுகினோம் என்பதைப் போலவும் எங்களைப் பார்த்துப் புன்னகையும் செய்தான். மின்னலடித்ததைப் போல மழைக்குள்ளிருந்து அந்தச் சிரிப்பு எங்கள்மேல் பாய்ந்தது. நெருங்கிநிற்பது ஒரு மனித உருவம், அதிலும் ஒரு ஆண், அதிலும் தன்னை மறைத்துக் கொள்ளாமல் உடனேதன்னை எங்களிடம் வெளிப்படுத்திக் கொண்டுவிட்ட அதே பார்வைக்கு உரியவன் என்கிற அதிர்ச்சி எங்களைத்தொடர்ந்து முடிவெதையும் எடுக்கவிடாமல் செயலிழக்கச் செய்த தென்றால், கூடுதலாக அவனுடைய அசாதாரணமான உயரமும், அசாதாரணமான நிறமும், அசாதாரணமான உடலமைப்பும் (அந்த மாதிரியில்இன்னொரு உருவத்தை இந்த நிலத்தில் உங்களால்கண்டுபிடித்துவிட முடியாது என்று இப்போதும்எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும்)தந்த வியப்பு அங்கிருந்து நகர்ந்து செல்வதற் குரிய விருப்பமென்று ஏதாவது இருந்தால் அதை யும் சுத்தமாக எங்களிடமிருந்து உறிஞ்சிவிட்டிருந்தது. சரியாகச் சொல்லவேண்டுமென்றால் அவனுடைய பார்வையின் அச்சுறுத்தலை (உண்மையிலேயே நாங்கள் அச்சமடைந்தோமா அல்லது அந்தப் பார்வையைத் தேடிக் கண்டடையும் தவிப்பை அச்சவுணர்வு என்று எண்ணிக்கொண்டு விட்டோமா) அவனுடைய பிரசன்னம் தணித்து விட்டிருந்தது. நாங்கள் அவனை நெருங்கிய வுடனேயே எங்களை அங்கே கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே அப்படிச் செய்ததைப்போல எங்கள்மார்புகளின் மீதிருந்த தன் பார்வையை விலக்கி அதை எங்கள் பார்வைகளுக்குள், அவற்றைவிலக்கிக்கொள்ள முடியாதபடி, சொருகி விட்டிருந் தான். மேலும் அவனை  நாங்கள் நன்றாகப் பார்ப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுப்பதைப்போலவும் (அவன் முகம் எங்களிடமிருந்து விலகிமிக உயரத்தில் மிதந்துகொண்டிருந்தது, அவனருகில் நாங்கள் எங்களை அவன் காலடியில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுமிகளாக உணர்ந்து கொண்டு இருந்தோம்), அவன் ஏதோ ஒரு குடையை எங்கள்தலைக்குமேல் உயர்த்திப் பிடித்திருப்பதைப் போலவும், அல்லது உயர்ந்து பரந்திருந்த அவனுடைய ஆகிருதியே ஒரு மழைத் தடுப்பாகஎங்களைத் தனக்குள் பொதிந்துகொண்டு இருந்ததைப் போலவும் நாங்கள் நின்றிருந்த இடத்தில் மழையற்றிருந்தது. எங்களுடைய உடைகள் நாங்கள்ஓடி வந்த ஒரு சில வினாடிகளில் பெரிதாக நனைந்து விடவில்லையாயினும் அவனருகில் நின்றிருப்பதில் நாங்கள் மனவலம்பலை உணர்ந்தோம். ஏதோ எங்களால் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அபூர்வப் பொருளைப்போல எங்களருகில் நின்றிருந் தான் அவன். இறுதியில் யோகாதான் துணிவை வரவழைத்துக்கொண்டு அவனை அண்ணாந்து பார்த்துயார் நீ என்று கேட்டாள். ஒரு தடவையல்ல, இரண்டு மூன்று தடவைகள் அவள் திரும்பத் திரும்ப அந்தக் கேள்வியைக் கேட்ட பிறகு கண்ணன் என்றான் அவன் குனிந்து எங்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer