அந்தி நேர உலா

கவிதை குறியீட்டு ரீதியிலான மொழியில் உறவையும் உணர்வுகளையும் பற்றிப் பேசுகிறது. அதனால்வாழ்க்கையில் நுட்பங்களாயுள்ள அம்சங்களைப் புரிந்துகொள்ளமுடிகிறது. அப்போது முடிவு இல்லாமல் அறிந்துகொண்டிருப்பதின் ஆனந்தம் கிடைக்கிறது. பிறகு அதுவே கால ஓட்டத்தில் தனிப்பட்ட அனுபவத்தின் பகுதியாக மாறியும் விடுகிறது. மாறாக அபியின் கவிதைகளில் எல்லாமும் அனுபவ வடிவங்களாகவே உருவாக்கித் தரப்படுகின்றன. அவை வாசகருக்கு தேடலை அளிக்கின்றன என்பதை விடவும் தாமே உள் முகத் தேடலை நிகழ்த்திக்கொள்கின்றன எனலாம். அத் தேடல் தனக்குத் தானே உண்மையாயிருப்பதால் ஆழ்ந்த கவித்துவத்தைப் பெறுகின்றன. அதைத் தவிரவும் வேறு நோக்கங்களில்லாதிருப்பதால் அவை பழக்கமான அன்றாடச் சொற்களில் சொல்லப் படுகின்றன. அதனால் தெளிவாயிருப்பதைப் போன்ற மேற்தோற்றத்தைக் கொண்டிருக்கின்றன. அதைக் கடந்தால் முற்றிலும் புதிய சொல் இணைவுகளால் அறிந்திராத தளத்துக்கு இட்டுச் செல்கின்றன.  

அபியின் ஆரம்பகாலக் கவிதைகளில் கூரிய படிமங்கள் தனித்து வெளியில் பிரித்தெடுக்கக் கூடியதாகப் புலப்படுகின்றன. பிறகு எழுதப்பட்டவற்றில் முழுக் கவிதையும் படிமமாக மாறியதாகத் தோன்றுகின்றன. அவை புறத்தில் அசாதாரண எளிமையுடன் காட்சி கொடுக்கும். உள்ளே செல்லுந்தோறும் திட்டவட்டமாக அறிந்துகொள்ள முடியாத தன்மையை உணர வைக்கும். இன்னும் அணுக்கமாக முயன்றால் புரிவதை போன்ற பாவனையைத் தரும். அதை முழுதாக விளக்கிட இயலாது. கடைசியாக அடையப்படுவது இருண்மையே. தெளிந்த மொழியில் பெரும் அர்த்தமின்மையே உருவாக்கப்படுகிறது. இக் கவிதைகளில் மெய்யாய் இருப்பது சூன்யம்தான். இவை அபி கவிதைகளின் தனித்தன்மை. ‘தெளிவு’ கவிதையில் ‘தெளிவு என்பது பொய்’ என்றிருப்பதை இங்கு நினைவுபடுத்திக்கொள்ளலாம். 

அபி கவிதைகள் முதலில், தவிர்க்க முடியாமல் வாழ வேண்டியிருக்கும் இருத்தலை அறிகின்றன. அதனால் தெரிய வருவது நிறைந்துள்ள தடைகளும் எல்லைகளும். அவற்றிலிருந்து தப்பித்துச் சென்று விட முயலுகின்றன. பிறகு வாழ்க்கையிலிருந்து விலகியிருப்பதால் கிடைக்கிற சூட்சம வடிவான நிம்மதியை அடைகின்றன. அதைச் சித்தரித்துக்காட்ட கவிதைகள் வழக்கமான பொருள் வயப்பட்ட உருவகங்களைக் கைவிடுகின்றன. கருத்துகளாய்இருக்கும் படிமங்களால் தனக்குள் பேசத் தொடங்கு கின்றன.  அவற்றை நாம் காது கொடுத்துக் கேட்கிறோம். அப்போது அர்த்தங்களை உருவாக்கிக் கொள்வதற்குப் பதிலாகக் குறியீடுகளாக்கிக்கொண்டு அப்படியே உணர முடிகிறது. அதனாலேயே தொடர்ந்த வாசிப்பில் அபி கவிதைகள், இது வரையிலும் இல்லாத அளவு எல்லையற்ற அனுபவங்களை வழங்குவையாய்  இருக்கின்றன.

‘புரண்டு படுக்க இடமின்றி  / ஒற்றையடிப் பாதை / சலிக்கிறது’ என்ற வரிகள் நமக்கு நீண்ட, தனித்த, குறுகிய பழக்கமான பாதையைக் காட்சியாக்குவதுடன், ஒற்றையடிப் பாதையாக மாறி நாமும் சென்றுகொண்டிருக்கும் மேலான அனுபவத்தை அளிக்கின்றன. ‘ஆடுகள் மலையிறங்கித் / தலைதாழ்த்தி வருகின்றன’ என்கையில் ‘தலை தாழ்த்தி’ என்ற ஒரு வார்த்தையே துல்லியமான முழு வடிவை வழங்கிவிடுகிறது. ‘வானம் சுற்றிலும் / வழிந்து இறங்குகிறது’ என்ற அடுத்த அழகான வரி, மறுபடியும் பிரம்மாண்ட பிரபஞ்சமெனும் கருத்துக்கு அழைத்துப் போகிறது. ‘காடு எரிந்த கரிக்குவியலில் / மேய்ந்து களைத்துத் / தணிந்தது வெயில் / என்னோடு சேர்ந்து.’ இதில் தன்னையும் இயற்கையின் அங்கமாக்கிக்கொண்டு பார்த்தல் வெளிப்படுகிறது. ‘மெலிதாக அசையும் வீடுகளும் / தடதடக்காது நகரும் தெருக்களும்’ என்று தன்னுடன் சேர்ந்து சடப் பொருட்களும் இயக்கம் பெறுவதாகக் காணுகிறது. ‘சாயல்... நீண்டுகொண்டிருந்த சாலையில் / நெடு நேரம் நின்றுகொண்டிருந்தது’ ‘யாருமில்லா இரவில் /  நீண்டு உயர்ந்த தேக்குகள் /  காட்டின் எல்லைக்குள் / நடமாடித் திரியும்’ போன்றவற்றிலெல்லாம் புறத்திலுள்ளவையும் கற்பனையால் உயிரடைந்து சலனமுறும் மாயம் நிகழ்ந்தேறுகிறது.

இதன் கவிதைகள் சொல்லப்படுவதில் ஒரு போதும் வெளிப்படுத்த முடியாத இசைமையையும் படிமங்களாக்குகின்றன. அது தூய அனுபவத்தைத் தர விரும்புகின்ற முயற்சி. அதை அரூபமாக மட்டும் உணர முடியும். ‘தந்தியைப் பிரிந்து / கூர்ந்து கூர்ந்து போய் / ஊசி முனைப் புள்ளியுள் இறங்கி / நீடிப்பில் நிலைத்தது / கமகம்’ என வார்த்தைகளால் இசை உணர்வு ஏறக்குறைய விவரிக்கப்பட்டுவிடுகிறது. ‘சுருதியின் / பரந்து விரிந்து விரவி... / இல்லாதிருக்கும் இருப்பு’ என்பது நம்மை நாம் மறந்து போய்விடும் நிலையைத் தருகிறது. இசையின் உருவற்ற தன்மை முடிவில் மௌனம் என உணர்த்த ‘நூறு வருஷ  நீளத்துக்கு / இதன் / ஸ்பரிச சுகத்தில் / அரூபமுற்ற / சுருதி’ ‘... படலமாக்கிப் படர்த்திற்று மௌனம்’ என்கிறது. ‘தாள லயம் மீண்டும் / நீருக்கடியில் /  கூழாங்கல் உருளும் ஓசையைப் / பெற்றுவிடும்’ ‘மாட்டு வண்டிகள் /  எழுப்பும் ஓசையிலிருந்து / தோன்றினான்’ என இயற்கையில் எழும் இசைகளும் படிமங்களாக உருவாகின்றன. இவற்றின் முன்பு நாம் விளங்கிக்கொள்ள முற்படாது வெறுமனே காண்போராக இருக்கலாம். அதனால் தாமாகக் கிடைப்பது நிறைய.

அபி கவிதைகள் சுய தேடலைக் கொண்டிருப்பதால், அவற்றை வாசிக்கையிலும் தனக்குத் தானே சொல்லிக்கொள்வதைப் போலிருக்கின்றன. அவைவினா விடைகளாக, குறிப்புகளாக, நனவோட்டங் களாக உள்ளன. நீ, நான், அவன், இவன் என்றுகுறிப்பிடப்படுவதெல்லாம் தன்னை நோக்கிபேசுவதாகவே அமைகின்றன. ‘அதிர்வு’ கவிதை,தனக்குள் மாற்றி மாற்றி உரையாடிக் கொள்வதா யிருக்கிறது. ‘போவதும் வருவதும் உணர்வது வாழ்க்கை’ என்பதற்கு ‘இருப்பதை உணர்வது இல்லாதிருப்பது’ என்று பதில் கூறப்படுகிறது. ‘இன்று’ கவிதையில் ‘இன்று / நீ வர வேண்டிய நாள் / எனினும் / வரமாட்டாய்’ என்று சொல்வது வெளிப்படையாகவே மற்றொருவரின் இன்மையைக் காட்டுவது. மேற்கொண்டு ‘என்ற ஒன்று’ கவிதை, நீ, நான் என்பதை அடையாளச் சிக்கலாகவும் எதிர்மறைகளின் இரைச்சலாகவும் பார்க்கிறது. அந்த முரண்படாத் தன்மையை, குழந்தைகள் பெற்றுள்ள சூன்யம் என்கிறது. அச்சூன்யம், தன்னை மறந்த மனம் கொள்ளும் தோற்றம். நான், நீ என்பது வெறும் பாவனையாயிருப்பதை ‘நமக்குள் ஒரு ஏற்பாடு’ என்று ‘ஏற்பாடு’ கவிதை தெளிவாக்குகிறது. ‘உள்பாடு’ கவிதை ‘புள்ளியைத் தொட்டுத் தடவி / அதன் மூடி திறந்து / உள் நுழைந்து / விடு’ என்பது தனக்குள் நம்பிக்கையுண்டாகச் சொல்லிக்கொள்வதுதான். ‘சுற்றி லும் பெருகி நுரைத்துத் ததும்பும் குரல்களில் - நான் நீக்களில்’ என்பதில் அந்த இருமையை இல்லாமலாக்கும் விருப்பம் மேலிடுகிறது. ‘என்னுள் / புதர் விலக்கித் துருவிக் / கண்டுபிடித்ததென்ன, உன் / சிதறல்களேயன்றி’ என்ற ‘அடையாளம்’ கவிதையின் வரிகளில் இரண்டையும் ஒன்றாகக் காணும் நிலையைத் தோற்றுவிக்கிறது. ‘உன்னைப் பிரித்து விலக்கிக்கொண்டே / உன்னைத் தேடி / உன் தவம் மட்டும் உடன் வரப் / போகிறாய்’ என்பது தன்னை நோக்கிய கூறலாயிருக்கிறது. ‘ஆடுவேன் ஆடினேன் கிலுகிலுப்பை ... சூழ்ந்து செறிந்திருக்கும் / தன் அணுக்களின் / முகச்சோர்வு சகியாது / அவன் வெளிவந்தான்’ என்ற கவிதை ‘இன்னும் ஒரு விளையாட்டைத் தேடி வியர்க்கிறேன்’ என்று முடிகிறது. இதில் தன்னிலிருந்து முளைத்தெழுந்த ஒருவனையே சுட்டுகிறது. இது ‘அவன்’ கவிதையில் ‘அவன்’ ஓசையிலிருந்தும், விநாடியிலிருந்தும் தோன்றியதாக அரூபமாக்கப்பட்டு ‘எனக்குக் கிடைத்த சொந்த உருவம் / அவனைப் பார்த்தபோது மங்கிப்போனதை’ காட்டுகிறது. வெளிப்படையாகவே தனக்குள் தான் சுருங்கி முணுமுணுத்துக்கொள்ளும் ‘மாலை வரிசை’ கவிதைகள் வாழ்வின் அந்திமத்தை தரிசிப்பது எனலாம். அவற்றில் நான், நீ பேதம் அறவே ஒடுங்கி இருக்கின்றன. இங்கு, நான், என் என்று, தான் மட்டும் இருக்கும் இருப்பாகிறது. ‘மாலை-பாழ்’ கவிதையில் பிறரின் இருப்பையும் துறந்து ‘இருத்தலின் நிமித்தம் / தெருவும் நானும் என / இருத்தலே’ என்று எண்ணிக்கொள்கிறது. மற்றொரு கவிதையில் ‘சாவு சொன்னதை / ஸ்வரப்படுத்திப் / படுக்கை வசமாக / விரிய விட்டிருக்கிறோம்’ என்று ‘மாலை-விரிவு’ கவிதை வாசிப்பவரின் பங்கேற்பையும் வெளிப் படுத்துவது. ‘மாலை - போய்வருகிறேன்’ கவிதையில் மாலைப் பொழுதையே ஒரு முன்னிலையாக்கி ‘ரத்தம் இருள்வது தெரிகிறது ... போய் வருகிறேன்’ என்பது வாழ்விலிருந்து விடைபெற்று மரணத்தை நோக்கிப் போதலாகப்படுகிறது.

அபி கவிதைகளில் ‘நான் இல்லாமல் என் வாழ்க்கை’ என்கிற கவிதை எல்லா கவிதைகளையும் பிரதிநிதித்துவப்படுத்திவிடுகிறது. அரூபமான படிமங்களுக்கும், அர்த்தம் காண முடியாத தன்மைக்கும், அனுபவமாக உணர்கிற மொழிக்கும் எடுத்துக்காட்டாகிறது. அக்கவிதையில் வாழ்க்கையை விட்டு வெளியேறிச் செல்லுதல் நிகழ்கிறது. விடுபட்ட வாழ்க்கை முடிவில்லாமல் பெருகுகிறது. அது மகிழ்வுடன் நடந்தும் பறந்தும் செல்கிறது. எந்தத் தடையுமில்லாத ‘சூன்யத்தை’ அனுபவிக்கிறது. அங்குவாழ்வும், சாவும் இருப்பதில்லை. அதேபோல் எந்தசிந்தையும் எழுவதுமில்லை. தன்னை யாருக்கும் உணர்த்த கூட வேண்டியதுமில்லை. அந்த வாழ்க்கைபரிபூரணச் சுதந்திரமானதாயிருக்கிறது. இதுவே பெரும்பாலான கவிதைகளில் வெவ்வேறு படிமங் களாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ‘வருவோம்போவோமாய்த் / தெருவை நிறைப்போம்’ என்றுவாழ்க்கையின் தொடரோட்டத்தையும் நெரிசலையும்நிலையாமையையும் கூட ஓர் இயல்பான அன்றாடவாழ்வின் புழக்கத்தில் கிடைக்கிற படிமத்தால் வெளிப்படுத்துகிறது. வாழ்ந்தாக வேண்டிய நிர்ப் பந்தத்தையும் காட்டுவது ‘விரயமின்றி வாழ்க்கையை/ நிலைகளில் நிரப்பலும் / ஒட்டாது திரட்டலும்/ தொழில்’ என்பது. ‘காலம்/ ஊசியிட்டுக் குத்திமல்லாத்திய / பூச்சிகளாய் / மனிதர்கள் - புகைப் படங்களில் / பேச முயன்று/ சிரித்துத் திகைத்து இப்படி.’ இது வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களின் நிலைக்கான சிறந்த படிமம்.

அந்த வாழ்வை மகிழ்ச்சிகரமாக மாற்ற வேண்டு மானால் அறிந்த பிறகு வெளியேறுதலை ‘இல்லா திருத்தலே / இருத்தல்’ என அரூபமான முறையில் வகுக்கிறது. அதை உணர்த்தும் இசைப் படிமம் ‘நாதம் / அலை பாய்வதெப்படி / இருப்பது அது / அலைவதன்று.’  ‘கொஞ்சம் கொஞ்சமாக / விலகி / விலகலில் நீடித்தாயெனில் / நீ வாழ்கிறாய்’ என்பது ‘அவர்’ சொன்னதாக உள்ள ஆப்த வாக்கியம். ‘உன்னைச் சுற்றி  / வட்டங்கள் உருவான பின் / விலகிக் கொள்கிறேன்.’ ‘புள்ளியைத் தொட்டுத்தடவி / அதன் மூடி திறந்து / உள் நுழைந்து / விடு.’ என்பதெல்லாமும் விட்டு விலகுதலின் முயற்சிகளாகத் தோன்றுகின்றன. பல்வேறு பசிகள் உண்டாவதும் அவற்றுக்கு எப்போதும் உணவிட்டுக்கொண்டிருப்பதும் வாழ்க்கை யாகும். இருப்பினும் அவை நிறைவுற்று அடங்குவ தில்லை. ‘சமையல்’ கவிதை தனக்குள் புகும் ‘அராஜகப் பசிகளை’ தவிர்க்க, தான் ‘பதுங்கிச் சுருண்டேன்’ என்றும், கடைசியில் ‘என்றுமே சமையல் இல்லை’ என்றும் அறிவிக்கிறது. அதனால் இனி வாழ்வில் பற்று ஏற்படப்போவதில்லை. ‘அவசரமில்லாத / சிறிய ஓடைகள் நடுவே / கூழாங்கற்களின் மீது / என் வாழ்வை / மெல்லத் தவழவிட்டேன்.’ இதுவே விலகலை நாடும் நிலை. அத்தேடலும் நம்மைப் பிணைத்துவிடும் தளையாகவும் மாறலாம் என்பது ‘குறிப்பிட்ட தேடல் / அலுப்பாகி / தேடலினின்றும் விடுதலை / என்பதில் / திகைத்துச் சுருளும் / அனுபவம்’ ‘வாழ்க்கையின் / பச்சை வாசனை /  தவறிப்போகலாம்’ போன்ற வரிகளாக வருகின்றன. அதை ‘வெளியேறத் துடிப்பேன்/ ஆனால் எப்படி’ என அரற்றவும் செய்கிறது.

இருத்தல் என்பதிலிருந்து விடுபட்டு அடையும் மௌனத்தைக் கவிதைகள் எட்ட முயலுகின்றன. அப்போது வார்த்தைகளின் போதாமையை உணர்ந்தபடியிருக்கின்றன. ‘என் சப்தக் கூறுகள் பிளந்து  /  மௌனம் / நீலம் காட்டியபோது / அபத்தமான சைகைகளுடன் / வெட்கமற்ற வெறுமையில் / புரண்டுகொண்டிருந்தன / வார்த்தைகள்’ என்பதில் அதைக் காணலாம். கூறியதிலும் ‘பாவம் வார்த்தைகள் / மலடு வழியும் முகத்தோடு / வெளியேறும்’ என்ற அதிருப்திதான் கிடைக்கிறது. ‘சொல்லாதிருந்ததற்கும் / சொன்னதற்கும் / இடைவெளியில் / புல் வளர்ந்து / பூமியை மூடும்’ என்பதும் எண்ணியதை சொல்ல இயலாத நிலைதான் எனத் தெரிகிறது. ஆனாலும் ‘நெடுங்கால நிசப்தம் / படீரென வெடித்துச் சிதறியது’ என  தானாகவும்  அது  வெளிப்பட்டும்  விடலாம்.

இயல்பும், நுட்பமுமான படிமங்களால் ‘மாலை’ வரிசை கவிதைகள், அபூர்வ அழகியல் தன்மைகளுடன் மிளிர்கின்றன. இந்தக் கவிதைகளில் மீண்டும் மீண்டும் மாலைப் பொழுதில் உலா போதல் எழுதப்படுகிறது. ‘என் மாலை சொல்கிறது / இது ஏதோ திசைதான் என்று / விலகலுக்கென்று உள்ள திசை’ என்பது வாழ்வு நாள் முடிந்து சூரியன் மறையும் பொழுதுதான். நடை செல்லுமிடம் சற்றுஎட்டவுள்ள மலையாக, காடாக இருக்கிறது. பெரும் பாலும் அங்கு நின்றுதான் கவிதைகள் தமக்குள் சொல்லிக்கொள்ளப்படுகின்றன. புறப்பட்டு வந்த ஊர் யாருடையதாகவோ சிறிதாகத் தோன்றுகிறது. ‘யாதும் ஊர் ஆகிறது’ இவ்வரிசைக் கவிதைகளின் அனுபவம் வாழ்க்கையிலிருந்து விடுபட்டுச் செல்வ தாயிருக்கிறது. மேலும் குறுக்கி, வாழ்க்கையின் அந்திமக் காலம் என்றும் சொல்லாம். ‘திரியில் சுடர் இறங்கிக்கொண்டிருக்கிறது / கதைகள் தீர்ந்து போயிருந்தன’ ‘வெறுமைப் பாங்கான  / எனது வெளியில் / ஒளியும் இருளும் முரண்படாத / என் அந்தியின் த்வனி’ என்பவை அது பற்றிய கவிதை வரிகள். நடைப் பயிற்சியின் முடிவில் அடையப்படுகிற இடம் ‘எப்போதும் காலியாயிருக்கும் இடம்’ என அடையாளம் காட்டப்படுகிறது. ‘சுழல்வதும் சுற்றுவதுமான / இயக்கங்கள் / நினைவிழந்து கொண்டிருக்கின்றன. ‘அடிவான் விளிம்பில் / பறவை கூச்சல் மொய்த்துப் / பிணம் போல் / என் மாலை’ எனவும் கவிதை தன்னை உணர்ந்தபடியிருக்கிறது. ‘மாறிமாறி வருதல் ஒழிந்து / முற்றிலும் நாம் இழந்துகொள்ளும் வரை / இப்படியே நடக்கட்டும் / போய்வருகிறேன்’ என்று வெளிப்படையாக விடைபெறலை அறிவிக்கிறது.

‘கனலும் எனது /  அனைத்துத் தரைகளையும் /  பனிப்புகை செலுத்திக் / குளிர்விக்கிறது’ எனத் தெரிவிக்கும் போதே,  ‘பாறைகளை  / ஊதி உருட்டித்தள்ளும் / என் மலைகளின் மீது / என் கனல் சுற்றிவந்தது’ என்று இளமையைத் திரும்பியும் பார்க்கிறது. ‘மாலையோடு பேசித் தளிர்க்கும் /  கதை /  என் வடிவில் இருந்த கதை’ என்றும் ‘அருமையாய்க் கழிந்தது / சருகுகளடிப் பொழுது’ என்றும் அதை எண்ணி மகிழ்கிறது. வாழ்விலிருந்தும் காலத்திலிருந்தும் சேர்ந்து விலகுவதால் மீண்டும் குழந்தைப் பிராயம் கிட்டிவிடுகிறது. ‘காலம்’ வரிசைக் கவிதை ஒன்றிலும் இது ‘யார் சொன்னது / அந்த நாட்கள் போயினவென்று... இந்த ஒற்றையடிப் பாதையில் / புதிதாய் வரும்’ என்றும் ‘காடு முழுவதும் சுற்றினேன் / பழைய சுள்ளிகள் கிடைத்தன’ என்றும் கடந்த கால மீட்பு அடையப்படுகின்றன. ‘என்னைச் சுற்றி நிரம்பும் / காட்டுக் களிப்பு.’ ‘இங்கே என்னருகே  / எனது மாலை / பிரபஞ்ச சோகம் திளைத்து.’ இந்தக் களிப்பும் சோகமும் உச்சத்தில் ஒன்றுதான் என்று படுகிறது.இறுதியில் அடையப் பெறுவது எல்லையில்லா ஆனந்தம். ‘இனி / இருக்கிறேன் என்பதில்லாத இருப்பு / இல்லை என்று / இருக்கும்’ இருக்கையில் இல்லாதிருப்பதாகக் கருதிக்கொள்வது பூரண மகிழ்ச்சி தான். ‘என்ற ஒன்று’ கவிதை ‘சூன்யம் இருந் தவரை / எல்லாம் சரியாயிருந்தது’ என்று ஏதும்அற்றிருந்த நிலையைக் காட்டுகிறது. அது திறந்த மனமுள்ள குழந்தைத் தன்மை. அங்கு மற்றது என்றபேதங்களில்லை. அறிவின் எல்லைகளும் இருப்ப தில்லை. எதையும் முடிவற்று காணும் வாய்ப்புகளையும் கொண்டது. அப்படி உணர்வதுதான் ஆனந்த மயமான இருப்பு போலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *