ஒரு நடிகை போல அந்த பளபளப்பு வெளியில்
அவள் பவனி வருகிறாள்
அவன் தத்ரூபமாகத் தன் போனில்
ஒரு ஷார்ட் வீடியோவை எடுக்க பணிக்கப்பட்டிருக்கிறான்
ஒரு சில ஒன்மோர்களுக்குப் பின் அவளுக்குத் தெரிந்தது
அவன் “ டேக் “ ஓகே செய்யமாட்டானென்று
அவனுக்குப் புரிந்தது
இது ஒரு பரவசத்தின் “Time Loob” என்று
கவனித்துக்கொண்டிருந்த நான்
வயிறு எரிய இதை டாலரேட் செய்வது எப்படி என
புகைத்துக்கொண்டிருந்தேன்
ஒரு மாயாவைச் சாயாவாகக் கருதும்
மார்க்கத்திற்கு அந்தர் பல்டியடிக்கலாமா என்றிருந்தேன்
அதற்குள் ஹெவியாகப் பசிக்க
பட்டினியின் போதெல்லாம்
தொந்தியைச் சற்று ஸ்லிம்மாக பாவித்துக்கொண்டு நடக்கும்
அந்த ராஜ single -ன் நடையை நினைவு கூர்ந்தேன்
நினைவு கூர்ந்தபடியே அங்கிருந்து
நடையைக் கட்டினேன்.
ட்ராபிக்
ஒரு கலவரமாகி வெடிக்க
கூட்டத்தில் என் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறிய இருவரில்
ஒரு வண்டியோட்டி அடிபட்ட எனக்குத் தண்ணீர் கொடுக்கிறான்
முதலுதவி செய்கிறான்
ரத்தம் வடியும் வண்டியோட்டியான எனை
தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு
எல்லா வண்டி கூரை மீதும்
தாவித் தாவித் தாவித் தாவி
ஆஸ்பத்திரிக்கு ஓடுகிறான் ஒரு பாதசாரி.
ஏதோ வீழ்த்தப்பட்டவன் போல
படுத்துக் கிடந்தேன்
சரியில்லாத மனது எதிலிருந்தோ
சற்று மீட்கச் சொல்கிறது
இரண்டு தலையணை வைத்துப் படுத்தேன்
அதுவும் போதாதென
கைகளையும் தலைக்கு வைத்துப்
படுத்தேன்
மீட்பில் பலனேதுமில்லை
பிறகொரு அமைதி
பெரிதாக நினைத்துக்கொள்ள ஒன்றுமில்லை என்றதும்
படுத்திருந்த வாக்கிலேயே
என் முன்
நானே
கால் மேல் கால்
போட்டேன்.