நிழலின் தனிமை தேவிபாரதி வெளியீடு : காலச்சுவடு, 669 , கே. பி. சாலை, நாகர் கோவில். பக்கங்கள் : 174. விலை : ரூ. 125
தேவிபாரதி படைப்பாக்கத்தில் உருவாக்கியிருக்கும் ‘நிழலின் தனிமை’ நாவலை வாசித்து முடிக்கையில், எழுத்தாளரின் மனத்தடத்தில் தன்னையும் ஒருவர் சுயவிசாரணைக்கு உட்படுத்தி, வெளியேறவியலும்.
தன் சிறுபிராயத்தில் தன்னுடைய குடும்பப்பெண்ணைச் சீரழித்த வில்லனை, நாயகன் வளர்ந்து பெரியவனானதும் வில்லனின் மகளைக் காதலித்துக் கர்ப்பமுறச்செய்து, சபதம் நிறைவேற்றிக்கொள்ளும் விதமான, நாம் கண்டிருக்கும் திரைப்படக் கதைகள் போலவொரு பழிவாங்கும் கதையாகத் தொடங்கினாலும், கதையின் உள்ளடுக்குகளில் நிகழ்ந்தபடியிருக்கும் சம்பவங்கள் சில பக்கங்கள் கடந்ததும், புதுமையான கதைப்போக்காக மாறியபடியிருக்கும் அதிசயம் நிகழ்கிறது.
கதைசொல்லியாகிய நாயகன், வில்லனின் மனத்தடத்தில் பயணித்து, அவனும் வில்லனின் மன அமைப்பை பெற்றுவிடும் விபரீதம் ஒரு பேரதிர்ச்சியாக நிறைவெய்தும் இக்கதையின் முதன்மை பாத்திரங்கள் மற்றும் உபபாத்திரங்களின் மன இயல்புகள் தொடர்ந்து மாறியபடி இருக்கின்றன.
பறந்து வரும் பந்தை, சட்டென நீளும் ஒரு கரம் தட்டி மோத, அப்பந்து தனது பயணிக்கும் திசைமாற்றிக் கொள்வது போல் எதிர்பாராமல் நிகழ்ந்தேறும் சம்பவங்கள் அவர்களது மனஓட்டத்தை மற்றும் வாழ்க்கைப் போக்கை திசை திருப்பி விடுகின்றன. சற்றும் மிகையில்லை, இக்கதையைத் தேவி பாரதி நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதியிருந்தால் சிக்மண்ட் பிராய்டு தனது உளவியல் சார்ந்த ஆய்வுகளுக்கு இந்த நாவலின் தனித்தன்மை மிக்கப் பல்வகை மன வியல்புகளை எடுத்துக்கொண்டிருப்பார்.
ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் எழுத்தராகப் பொறுப்பேற்கும் அவன், அடுத்த இரண்டு தினங்களில் கருணாகரனைச் சந்திக்க நேர்கிறது. தனது சிறுபிராயத்தில், தன் சகோதரியை சீர்குலைத்த அவனை முப்பது வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் அக்கணத்தில் தொடங்கும் கதை, வைக்கோல் மலையில் விழுந்த தீப்பொறி பரவி படர்வது போல, விறுவிறுக்கும் விவரிப்புகளில் கதைசொல்லியின் பதட்டத்தைப் பழியின் அணையாத நெருப்பின் தகிப்பை, மனதின் சிறு நுண்ணுணர்வையும் தவற விடாதபடி வேகம் கொள்கிறது.
கருணாகரன் குறித்த விரிவான விவரிப்புகளின் ஊடாக, பழியின் கங்குடன் கனன்றுகொண்டிருக்கும் சாரதாவின் தற்போது நிலை மற்றும் நேர்மையின் காரிருளில் விழுந்து கிடக்கும் அவரது தாயின் வீட்டுச்சூழல் இடையீடாக இருண்மையின் கவித்துவத்துடன் சொல்லப்படுகிறது.
கருணாகரனைப் பழிதீர்க்க குறிக்கப்படும் கெடுநாள் பற்றிய மொட்டைக் கடிதத்தைத் தயாரிக்கும் அந்த அலுவலக இரவு நேரம், மொட்டைக் கடிதத்துடன் மாவட்ட தலைநகரம் செல்லுதல், விடியலில் தேனீர் கடையில் பதட்டத்துடன் அமர்ந்து தேனீர் குடித்தல், பாழடைந்த கட்டடத்தில் இயங்கும் தபால் அலுவலகத்தில் மொட்டைக்கடிதத்தைச் சேர்த்தல் என அடுத்தடுத்து தொடரும் காட்சிகளில், கதை சொல்லியின் பதட்டம், நடுக்கம், சந்தேகம், பயம் ஆகிய கலவையான உணர்வுகளைத் தான் அமர்ந்து பயணிக்கும் எம்-80 வாகனத்தின் இயக்கம் மற்றும் இரைச்சல் வழியாக வெளிப்படுத்துவதோடு, அந்த அஞ்சல் நிலையமும் ஒரு கதாபாத்திரமாக மாறிவிடுகிறது.
கதைசொல்லியின் பழிவாங்கும் சபதம் மற்றும் சகோதரி சாரதாவின் சாபமும் அவர்களுக்குள் பெருகி வளர்ந்தபடியிருக்க, கருணாகரன் தன் பழைய குண இயல்புகளிலிருந்து பின்னகர்ந்து சீர்மையான மனப்பாங்கை நோக்கி நகர்வது இந்த நாவலின் மிக முக்கியமான அம்சம். கதையின் எந்த ஒரு கதாபாத்திரமும் சாதாரணமாக விடப்படுவதில்லை. அவரவர்களின் தோற்ற அமைப்பு, பேசும் வழக்கமுறை, நடந்துகொள்ளும் பாங்கு இவை துல்லியமான சித்திரங்களாக அசைகின்றன.
கருணாகரனின் மகள் சுலோ மற்றும் மகன் கௌதமன் இவர்களுக்கும் கதைசொல்லிக்கும் ஏற்படும் உறவு தொடர்பான விவரிப்புகளில் அவர்கள் குறித்த இயல்புகள் மிகையற்ற காட்சிகளாக நகர்வதோடு, சுலோ கதை சொல்லி மீது ஈர்ப்படைவதும், கௌதமன் சீர்கெட்ட வாழ்க்கை நோக்கி நகர்வதும் மிகவும் இயல்பான நுட்பங்களுடன் சொல்லப்படுவது அழகு.
குன்னடையா கோயில் திருவிழா இரவு உடுக்கைச்சத்தம், பாட்டுக்காரர்கள், மிட்டாய் கடை, சேவல், ஆட்டுக்கிடாய்கள், சீட்டாட்டம், சாராயபீப்பாய்கள், முயல்வேட்டை, தங்கும் கூடாரங்கள், சம்போகம் எனக் கொண்டாட்டங்களின் அமர்க்களங்கள் சிகரத்தையடைந்து, சட்டென மயான பேரமைதி கொள்ளும் அவ்விடத்தில் கதைசொல்லி எதிர்பார்த்துக் காத்திருந்த நிகழ்வும், அவனே சற்றும் எதிர்பாராத சம்பவமும் நடந்து கதையின் போக்குத் திசை மாற்றமடைகிறது.
சுலோவின் கணவனான டிராக்டர் ஓட்டி மற்றும் அவளது மாமியார் இவர்களும் தனித்தன்மை கொண்ட உளவியல் இயல்பு உடையவர்களாகக் காட்டப்படுகிறார்கள். கதைசொல்லிக்கும் கருணாகரனின் குடும்பத்தினருக்கும் கிடையே நிலவும் உறவு குறித்த சந்தேகம் அருவருப்பாகச் சுலோவின் மாமியாருக்குள் மெல்ல வளர்வதையும், மருத்துமனை காட்சியில், அவளுக்குள் பெருவடிவம் கொண்டிருந்த அது சாதிய வசைச்சொற்களாகி, கதைசொல்லி மீது கொட்டப்பட்டு இழிவுபடுத்தப்படுவதுமான சித்தரிப்புகள் கதையில் விரிவடைந்து செல்லும் பாங்கில், இரண்டு தரப்பிலும் நிலைமாற்றமடைந்து கொண்டுபோகும் நுண்ணிய மனஇயல்புகள் உரையாடல்கள் வழியே காட்சிகளாகின்றன.
கதைசொல்லிக்கும் சுலோவிற்குமான உறவு நேர்ப்போக்கில் அல்லாது பல்வகைப் படிநிலைகளைக் கடந்து செல்கிறது. காதல் ஈர்ப்பில் குழைந்து பேசுதல், விரகத் தவிப்பில் தன்னை இழத்தல், நேர்ந்த பிழை உணர்ந்து குழந்தைபோல அழுதல், நிச்சயதார்த்தம் நிகழ்ந்ததும் அவனை அலட்சியமாகப் பாவித்தல், முன்னால் காதலனிடம் கட்டளையிட்டு வேலை ஏவுதல், பிரசவம் நெருங்குகையில் அவனை மீட்பனாகப் பார்த்தல், மருத்துவமனை சச்சரவில் வந்து விழும் வசை வார்த்தை கேட்டு, பெருங்குரலெடுத்து அழுதல், சாதி மற்றும் செல்வப் பெருமை காமம் பழைய பலி இவற்றைக் கடந்த பக்குவம் அடைந்தவளாக அவனோடு இயல்பாகப் பழகுதல் எனச் சுலோவின் மனம் நிறத்திரிபு அடைந்தபடியிருக்கிறது.
பழி உணர்வின் எத்தகைய பெருநெருப்பும் காலத்தின் சாம்பல் படிந்து கரைந்துபோகும் என்பதாகச் சாரதாவுக்குள்ளும் மாற்றம் நிகழ்கிறது. தன்னை உருக்குலைத்த கருணாகரனின் மீதான வெறுப்பின் வெக்கை, அவனது குடும்பத்தில் தொடர்ந்து நேர்ந்து கொண்டிருக்கும் துயரங்களைக் கேட்டறிவதால், தணிந்துகொண்டே போகிறது. தன்னை வன்புணர்ந்தவனை, முப்பது வருடங்கள் கடந்திருந்த போதிலும், நேருக்கு நேர் சந்தித்துவிடவேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் உருவாகி வருவதன் ரசவாதம், அவளுடைய சகோதரனாகிய கதைசொல்லியுடனான சந்திப்புகளின் உரையாடல்கள் வழியே நிகழ்ந்தபடி இருக்கிறது.
சுகந்தி, அவள் கணவனான பழந்துணி வியாபாரி, கதைசொல்லி மூவருக்குமான தொடர்பாடல்கள் மற்றும் உறவுகள் சார்ந்த விவரிப்புகளில், நாவலின் முற்பகுதிகளில் கையாளப்பட்ட கவித்துவம் போலல்லாமல் வெளிப்படையான பாலியல் விவரணைகள் மற்றும் உரையாடல்களால் கதையை நகர்த்திச் செல்வது, அத்தகைய உறவுகளின் அருவருப்பை ஒழிவு மறைவற்றதாக்கி, அதன் கொச்சைகளின் வினையூக்கத்தில், அவன் கருணாகரனாக உருமாற்றம் அடைவதைக் காட்டவே அத்தகு உத்தி உபயோகப்படுத்தப்பட்டிருப்பதை நாவலின் இறுதிப் பகுதியை அடைகையில் வாசகன் அறியவியலும்.
முப்பது வருடங்களுக்கு முன்பாகத் தன் குடும்பம் வாழ்ந்திருந்த ஊரின் அதே தெருவுக்குள் நடந்து போகிறான் கதைசொல்லி. முற்றிலும் வடிவ மாறுதல் பெற்றிருக்கிறது அத்தெருவும் ஊரும். அவனுக்குப் பழக்கமான நூலகத்தைத் தேடி, அக்குறிப்பிட்ட தெருவில் தேடியலைகிறான். அங்கிருந்த கட்டடங்கள் மாறியிருப்பதோடு புதிய வகைத் தாவரங்கள் தோன்றியிருக்கின்றன. நூலகத்தைத் தேடித் தேடி கடைசியில் அவன் வந்து நிற்கும் இடம் முற்றுபெற்று, குறுக்கே ஒரு பெருஞ்சுவர் நின்றிருக்கிறது.
அவ்விடத்திலிருந்து, பதட்டத்துடன் தப்பிச் செல்ல, ஒரு சிறு கதவு அல்லது ஒரு துளை தென்படாதா என ஆவல் மேவிட எண்ணுகிறான். அவ்விடத்திலேயே அவன் கருணாகரனாக உருமாற்றம் அடைந்திருப்பதை உணர்த்தப்படுகிறான். தன் சகோதரி உருக்குலைக்கப்பட்டது தொடர்பான அவனுக்குள் கனன்றுகொண்டிருந்த பழி தீர்க்கும் சூளுரை மெல்லக் கரைந்தது, அவனுக்கு வாய்த்த பல்வகை வாழ்க்கை நிகழ்வுகளின் புதிய அனுபவங்கள் அவனில் வளர்சிதை மாற்றத்தை நிகழ்த்தி அவனை ‘இன்னொருவ’னாக உருமாற்றம் செய்துவிட்டிருப்பதையும் அவன் அந்த ‘இன்னொருவ’னிலிருந்து தப்பிச் செல்ல இயலாதபடி கடந்த காலத்தின் அவமான இறுக்கம் திடப் பெருஞ்சுவராக அவன் பிரக்ஞையின் முன்பாக அரூபத் தடையாக எழுந்து நின்றிருப்பதையும் அழகான காட்சி படிமம் வழியாக உணர்த்தப்படுகிறது. கதையின் போக்கில், இதுபோலப் பல அழகியல் கூறுகள் சிதறவிடப்பட்டுள்ளன.
பாழடைந்த கட்டடத்தில் இயங்கும் தபால் அலுவலகத்தில் அஞ்சல் வில்லைகள் வாங்கும் காட்சி திரும்பத் திரும்ப வந்துபோவதும், கதையில் விளக்கப்படாத சில காட்சிகளை மறைமுகமாகச் சுட்டும் படிமம் ஆகும். நாசுவன் குருவிகளின் குஞ்சுகள் சிதறடிக்கப்படுவது, கதைசொல்லியின் குடும்பத்துக்கு நேரவிருக்கும் துயரையும் அவர்களது புலம் பெயர்வு வாழ்க்கையின் அவலத்தையும் குறித்து நிமித்திகம் போலாகிறது.
இந்தக் கதை சொல்லலுக்கு முக்கியத்துவம் அற்றவர்கள் போலத் தெரியும் கதைசொல்லியின் இன்னொரு தங்கை, கதை சொல்லியின் சிறுவயது தோழனாகிய, குருவிகள் மற்றும் மீன்களின் கண்ணில் குறிபார்த்து உண்டிவில் ரவையால் தாக்கி குருதி வழிய விழச் செய்யும் தங்கவேல் மற்றும் சுய மைதுனத் தோழன் வின்சென்ட் ஆகியோரும் நிறைந்து (Obsession) விடுகிறார்கள்.
இப்பிரதியை, கதைசொல்லி - கருணாகரன் என்ற ரீதியில் வாசித்தால், சில பக்கங்களிலேயே, இருவருக்கும் இடையேயான முரண் கரைந்து, இருவரும் வேறல்லர் என்பதாக, ஒருவருக்குள் ஒருவர் இயைந்துவிடுகின்றனர். என்ற போதிலும், கருணாகரனுக்குள் இன்னொரு வகையான உருமாற்றம் நிகழ்ந்தபடியிருக்கிறது. சாமந்திப்பூ - பிங்க் நிற முல்லை என்ற அடிப்படையில் வாசிப்பு நேர்ந்தால் சாரதாவும் சுலோவும் தனித்தனி நபர்களல்ல. இருவரும் ஒரே உடல் என்பதாக வாசிப்பை நிறைவு செய்துகொள்ளலாம்.
இரு தனி மனிதர்களுக்கு இடையேயான சச்சரவிலோ, இரு இனக்குழுக்களுக்கு இடையேயான மோதலிலோ, இருநாடுகளுக்கு இடையேயான போரிலோ எதிராளியின் ஆணவத்தைத் தகர்ப்பதற்கான முதல் இலக்கு, அவர்களது பெண்களின் உடல்தூய்மையைச் சிதைப்பதாகும். இது வசைமொழிகளாலோ வன்செயல்களாலோ இதன் வழி முறைகள் மாறுபடலாம்.
பலி, வன்மம், காமம், தயக்கம், ஆவேசம், அவமானம், குற்றவுணர்வு ஆகிய எந்த உணர்வையும் இயல்பாக வந்து விழும் கவித்துவம் அவ்வுணர்வின் முழுப் பரிமாணத்தையும் வரிகளுக்குள் நிறைத்துவிடுகிறது. கருணாகரனால் உருக்குலைக்கப்பட்டுக் கிடக்கும் சாரதா குறித்த நினைவோட்டங்களில்:
“தலைகீழாகக் கவிழ்த்து வைக்கப்பட்ட இரண்டு சாமந்தி பூக்கள்...”
கருணாகரனின் மகள் சுலோ தொடர்பான எண்ணங்கள் மேலிடுகையில்,
“பிங்க் நிற விளிம்புகள் கொண்ட சாதி முல்லைச்சரம்...”
வன்புணர்வு, மென்காதல் ஆகிய இரண்டு முரண்களையும் இணைக்கும் கவித்துவத்தின் ஆதாரப்புள்ளியின் அச்சில் கதைசொல்லல் இயக்கம் கொள்கிறது. பிங்க் நிற பூச்சிகள், பிங்க் நிறப் பறவை குஞ்சுகள், பிங்க் நிற எருக்கம்பூக்கள், பிங்க் நிற பஸ் டிக்கட்... எனச் சுலோ கதை சொல்லியின் நனவிலி மனதில் நிறமாக நாசுவன் குருவிக்கூட்டத்தை அதன் குஞ்சுகளோடு சிதறடிப்பதில் பங்காற்றும் கதைசொல்லியின் குடும்பமும் துயருதலின் சிதறலில் புலம்பெயர்கிறது. வன்புணர்வு, கந்துவட்டி எனக் குற்றமிழைக்கும் கருணாகரன் நோய்மையின் சிதைவில் சரிகிறான்.
எய்யப்பட்ட கணையாக, சாபம், அதன் இலக்கை தாக்கிச் சிதைக்கிறது என்னும் இந்த அறம்சார்ந்த விழுமியங்கள் மீதான நம்பிக்கையே இறை நம்பிக்கையாளர்களும் இறை மறுப்பாளர்களும் தம்படைப்புகளில் சந்தித்துக் கொள்ளும் பொதுப்புள்ளியாகிறது.
இதுவரை சொல்லப்பட்ட எல்லாக் கதைகளும் இத்தகைய அறத்தையே வலியுறுத்துகின்றன. கதைகள் சொல்லப்படுவதே இந்த நிலைத்த அறத்தைத்
திரும்பத் திரும்பச் சொல்லத்தானோ!