ஞா. தியாகராஜன் கவிதைகள்


பகிரு

I

இருள் கவியாத சிரிப்பைப் பார்க்கும்போது
மருதாணி அப்பிய கைகள் ஒரு விளக்கை ஏந்தி வருவது போலத் தெரிகிறது
எனக்கு அப்படியில்லை
நானே தான் என் புன்னகையைத்
தனியாக வடம்பிடித்து இழுத்து வரவேண்டும்
முன்னேயும் பின்னேயும் நூறு ஓநாய்களின் இரைச்சலுக்கு நடுவே
ஒரு பலியாடு நடந்து வருவது போல இருக்கும்
அந்தக் காட்சி
எப்போது வேண்டுமானாலும் ஒரு புளித்துப்போன கரைசலாக
அது திரிந்துவிடக் கூடும்
ஒரு இருள் கவியாத சிரிப்பு
இவ்வளவு நாள் பூசிமெழுகிய அனைத்தும்
மட்டமான பூச்சுகளெனக் காட்டிக் கொடுத்துவிடுகிறது
எத்தனை பேரின் ஒத்துழைப்பால் நடக்கிறது
பற்களிடையே கிளம்பும் ஒரு பிரகாசம்
அது வான்நோக்கி எழும்பும்போது
நானதன் கூரிய அலகுகளையும்
கண்களையும் மட்டுமே
நேருக்கு நேராகப் பார்ப்பேன்.

II

யாரையாவது தேர்ந்தெடுக்க விரும்பினால்
என்னை விட்டுவிடுங்கள்
யாரையாவது மன்னிக்க விரும்பினால்
அதிலும் என்னைத் தவிர்த்து விடுங்கள்
தேர்ந்தெடுக்கும்போது
உண்மையை மறைக்க வேண்டியதாகிறது
மன்னிக்கும்போது
உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டியதாகிறது
கண்ணாடிச் சட்டங்களுக்குள் திகைக்கும் எறும்பு போல
இரண்டுமே அதன் தூரங்களால் குழப்பப்படுகிறது
நான் யாரையாவது தேர்ந்தெடுத்தால்
எதுவும் பேசாமல் அவர்களுடன் பலிபீடத்தை நோக்கி நடப்பேன்
யாரையாவது மன்னிக்க விரும்பினால்
எவ்வளவு மயக்கத்திலிருந்தாலும் அவர்களின் பெயரை
ஒருமுறை சரியாகக் கேட்டு உறுதிபடுத்திக்கொள்வேன்
மற்றபடி யாரைப் பற்றி யாரிடமும்
தனியாகக் குறைசொல்ல மாட்டேன்.

III

சந்தேகங்களுக்கும் யூகங்களுக்கும் வழிகொடுக்காமல்
 ஒரு உறவைத் தெளிவான காரணங்களுடன் முடித்து வைக்கும்போது
 அவரவரின் பாதையில் குழப்பமில்லாமல் பயணிக்க
 பெரிய உதவியாக இருக்கிறது
 அப்படிப் பிரிந்தவர்களில் எனக்குப் பழக்கமான பெண் ஒருத்தி
 நகைக்கடை முதலாளியின் மருமகளாகிக் கரு தரித்திருக்கிறாள்
 சம்பந்தப்பட்ட பையன் போக்குவரத்து சிக்னலில்
 உரிமம் புதுப்பிக்கப்படாத தனது வாகனத்திற்கு
 ஃபைன் கட்டிக்கொண்டிருக்கிறான்
 சில நொடிகளில் இந்தச் சிவப்பு விளக்கு மாறிவிடும்
 அருகிலிருப்பவர் பின்னால் நிற்பவர்
 வியர்வை பெருக ஒருவரையொருவர் நெருக்கிக்கொண்டிருக்கும் பயணிகள்
 எல்லோருமேதான் காத்திருக்கிறோம் அதற்காக.

IV

வெளியே மேகங்கள் திரண்டு இருட்டி நிற்கிறது ஆகாயம்
நிரந்தரமாக ஆழத்தில் புதைக்க நினைத்த ஒரு கதவு
தானே திறந்து மீண்டும் அழைக்கிறது
இந்த மாலையின் நிறம் இனி ஒரேயொரு சூரியனால்
பூமியை வெளிச்சப்படுத்த முடியாதென்பது போலக் கிளம்பி வருகிறது
நீண்ட நாள் லட்சியம் பூண்டிருந்த வேடனின் அம்பு
என் சிறகுகளைத் துளைத்திருக்கிறது
இந்த முறையும் வானத்தை நகங்களுக்கு மிக அருகே இருந்து
வேறொருவரிடம் தவற விடுகிறேன்
அதற்கான இடைவெளியில் வாஸ்தவமாக மீண்டும்
ஒரு அங்குலத்தைக் குறைத்திருக்கிறேன்
அவ்வளவுதான்.

V

யாரை என் மீட்பராகக் கருதுகிறேனோ
அவர்கள் என்னை எப்போதும்
வேட்டையாடுவதற்குச் சிரமமில்லாத ஒரு இரையாகப் பார்க்கிறார்கள்
யாரை அன்புக்குரியவர்களாக மதிக்கிறேனோ
அவர்கள் இன்னும் குணமாகாத
என் காயங்களின் மறைவிடத்தை
வித்தியாசமின்றி எல்லோருக்கும் காட்டிக் கொடுக்கிறார்கள்
யாராலும் என்னைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாதென
மந்தகாசத்துடன் புன்னகைப்பவர்கள்
திடீரென நீண்ட காலத்திற்கு எந்தத் தகவலுமில்லாமல் அமைதியாகி விடுகிறார்கள்
ஒரு கட்டத்திற்கு மேல் எல்லாப் புன்னகையும் பழகிவிடுகிறது
குறிப்பிட்ட எல்லைக்கு மேல் எல்லா நிழலும் பெரிய கருஞ்சுவராக எழும்பி நிற்கிறது
ஆகாயத்தை நிமிர்ந்து பார்க்கும் போது
ஒரு துளி விழுகிறது
இவ்வளவுக்குப் பிறகும் எதற்காக...
இத்தனைக்கு நடுவிலும் எதற்காக...

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer