வெட்டவெளியைப் பார்த்துக்கொண்டே
ஒவ்வொரு
வெற்றிலையாக நீவிச்
சுண்ணாம்பு தடவுகிறாள்
இலையின் நரம்புகள் எழுந்து
திரை நெய்ய
அந்தத் திரையில்
எழுந்து
விழுந்து
நின்று
பெருவனப்புடன் ஆடுகிறது
அவளது
காலநாகம்.
II
ஒரு பேருந்துள் இருக்கிறேன்
அடையாளம் தெரியாத புன்னகைகள்
எனக்கொரு முகமிருப்பதை
அறிவிக்கின்றன
இறங்க வேண்டிய இடம்
எதுவெனக் கேட்கிறார் பக்கத்திலிருப்பவர்
இறங்குமிடங்கள்
கடந்து போய்க்கொண்டிருக்கின்றன
ஜன்னல் வழி கடக்கும் மரங்கள்
பேருந்துகளை எண்ணும்
பிள்ளைகளாகின்றன
அடுத்த நிறுத்தத்தில்
பழகிய வாசனை பேருந்தை நிறைக்கிறது
நான்
இறங்குவதற்குத் தயாராகிறேன்.
III
இந்த முத்தத்தைப்
பகடையாய் வீசித்தான்
ஏணியின் மேலேறினாய்
நானும்
அதே முத்தத்தைக் கொண்டுதான்
உன் கால் நரம்பை வெட்டினேன்
நம் சிறகுகளின் கனத்தை
உதற இயலாது போனதும்
அதன்
இரத்தப் பிசுபிசுப்பால்தான்
காம்பின் ஈரப்பசையில்
தொங்கிக் கொண்டிருக்கும்
அந்த நாள்
அவ்வளவாக நினைவில் இல்லை
அந்த ஒற்றை இலைக்காகத்தான்
அவ்வளவு ஆழம் போயின
நம் வேர்கள்
இரு கழுத்திலும் பூட்டப்பட்ட
ஒற்றை நிமிடத்தைச் சுமந்துகொண்டு
எண்களைச் சுற்றிக் கொண்டிருக்கிறது
அந்த முத்தத்தின் கூர்வாள்
வெட்டுப்பட்டு விழுந்துகொண்டிருக்கின்றன
எச்சில் தழும்புகள்.
IV
பாவமன்னிப்பு நாற்காலியின்
அருகே
முழந்தாளிட்டிருக்கிறேன்
கண்ணீர் பெருகி உருக
ஒப்பித்துக் கொண்டிருக்கிறேன்
நாற்காலியின் மௌனத்தின் மீது
என்னைப் பதித்தபடி நடக்கிறேன்
சிலுவையைத் துடைத்துக்கொண்டிருப்பவன்
ஆணி அறையப்பட்ட இடத்தில்
துடைத்துவிட்டுத்
துணியை எடுத்துப் பார்த்துக் கொள்கிறான்
அருமையான ஓவியம் என்கிறான்
ஒவ்வொன்றாக
உதிர்த்து
உதிர்த்து
எடை குறைந்து கொண்டே வருகையில்
யாருமற்ற நாற்காலியில்
மேக்தலீனின் கைத்துணி வந்து விழுகிறது
மடிநிறையக் கற்களை அள்ளிக்கொண்டு
இட்டு நிரப்பத் தோதான
சாக்குப் பையாக
ஒரு வாசம் தேடி வெளியேறுகிறேன்
இப்போதைக்கு
கண்ணீரின் சுவடின்றி
என் முகம்
பளபளவென்றிருக்கிறது.