பாடைகளை வீட்டிலிருந்து வெளியே எடுத்துச் செல்வதுதான் வழக்கம். ஆனால் பெற்றோரின் வீட்டில் வாழ்வதற்காக மீனா திரும்பி வந்தபோது, அக்கம்பக்கத்தாருக்கு ஒரு பாடை மீண்டும் வீட்டுக்குள் வருவது போலிருந்தது.
அரக்கு முத்திரையுடன் வந்த அரசாங்கத் தபால், மீனாவுக்குச் சோகமான மூடாக்கைக் கொண்டு வந்திருந்தது.
மீனாவின் மரணச் செய்தியை அந்தக் கடிதம் கொண்டு வரவில்லை என்பது உண்மைதான்; அவளுடைய ‘காதல்வீரன்’ எல்லையில் வீர மரணத்தைத் தழுவினான் என்றுதான் அது அறிவித்தது. சவத்தைப் போர்த்தும் மூடாக்கு போல் அந்தச் செய்தி மீனாவை மீளாத்துயரில் தள்ளி மூடியது.
பெண்கள் தம் உள்ளுணர்வால் அறியும் விஷயங்கள் பல உள்ளன. நம் நாட்டில் எந்தப் பகுதியில் என்றாலும் ஆண்மகன் ஒருமுறைதான் செத்துப் போவான்; ஆனால் அவனுடைய விதவை மனைவியோ, அவள் உயிர் பிழைத்திருக்கும்வரை பலதடவை செத்துப் போக வேண்டியிருக்கும் என்ற நிஜத்தை மீனா அறிந்திருந்தாள். எனவேதான், சுடுகாட்டுக்குப் போன பாடை திரும்பி வந்தது போலத் தாய் வீட்டுக்கு அவள் திரும்பி வந்தபோது, ஊமையாய் இருந்த வீட்டுச் சுவர்கள்கூட அவளுடைய அவலத்தைக் கண்டு ஈனமாக முனகின. அவளுடைய பெற்றோர்களோ, கடவுளே தமது நாக்கைத் துண்டித்துவிட்டது போலக் கருதி, வாயடைத்துச் சோகத்தில் ஆழ்ந்தனர்.
அது விஸ்தாரமான வீடு. சிறியவர்களானாலும், பெரியவர்களானாலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான அறையைத் தருமளவுக்குப் பெரியவீடு. மீனாவுக்கும் பிரத்யேகமான அறை இருந்தது. வீட்டுக்குள் நுழைந்தவள், கல்லூரிக்குப் போய்த் திரும்பிவருவது போன்ற சகஜத்துடன் நேரே அந்த அறைக்குள் போனாள்.
சாதாரணச் சந்தர்ப்பங்களில் திறந்து மூடப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த வீட்டின் கதவுகள் இப்போது சபிக்கப்பட்டது போலாகிவிட்டன. விசேஷமான தருணங்களில் மட்டும், அதாவது, திருமணம், குழந்தை பிறப்பு, மரணம், அல்லது, எவரேனும் குடும்பப் பந்தத்திலிருந்து பிய்த்துக்கொண்டு போகிற சமயங்களில் மட்டும் அந்தக் கதவுகள் திறந்தன.
குடும்ப உறுப்பினர்களின் பரிவாரம் வெளியேறுவதைப் பெற்றோர்கள் சில சமயங்களில் கண்கள் வற்றிப்போன நிலையிலும், சிலசமயங்களில், கண்ணீர் ததும்பவும் பார்த்திருந்தனர்.
இருபது வருடங்களுக்கு முன் மீனாவின் பெரிய அக்கா கல்யாணமாகித் தனது புகுந்த வீட்டுக்குப் புறப்பட்டுப் போனதும், அவளைப் பொறுத்த மட்டிலான நல்ல விஷயத்திற்காக அந்த வீட்டுக் கதவுகள் அடைபட்டன. இரண்டாண்டுகள் கழித்துப் பிள்ளைப்பேற்றுக்காக அவள் பிறந்தகம் வந்தபோது, புதிய உயிரின் மென்கரங்கள் அவளுக்காக அந்த வீட்டின் கதவுகளைத் திறந்துவிட்டன. ஆனால் அது நீடிக்க வில்லை.
பால்மணம் மாறாதப் பச்சிளங் குழந்தையை அதன் தலைவிதிப்படி நடக்கட்டும் என்று விட்டுவிட்டு, நாற்பது நாள்களிலேயே அவள் செத்துப் போனாள். மரணம் அவளுக்கு மீண்டும் அந்த வீட்டின் கதவை அடைத்து விட்டது. அவளுடைய புகுந்த வீட்டார் குழந்தையை வளர்த்தெடுக்க அழைத்துப் போனார்கள். என்றாலும், சரியாகப் பராமரிக்க முடியவில்லை என்று சொல்லித் திரும்பவும் இங்கேயே கொண்டு வந்து கொடுத்துவிட்டார்கள். சின்னஞ்சிறு கைகளின் மூலமாகக் காரியமாற்றிக்கொண்டிருந்த விதி மீண்டும் கதவுகளைத் திறந்துவிட்டது.
இதே மாதிரிதான், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன், பல்கலைக்கழகக் கல்வி பெறுவதற்காக மீனாவின் சகோதரன் வேறு நகரத்திற்குப் போனபோது அவனை வெளியே அனுப்பி, வீட்டின் கதவுகள் மூடிக் கொண்டன. ஐந்தாண்டுகள் கழித்து, விதி அவனுக்காகக் கதவுகளைத் திறந்துவிட்டது. பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்துகொண்ட வேற்றுச் சாதிப் பெண்ணுடன் திரும்பி வந்திருந்தான் அவன். அந்த அறையின் வாசலில் தொங்கிய பட்டுத் திரைச்சீலையைக் கடந்து, உள்ளே சமைத்த ஆடம்பரமான புலாவு மற்றும் இறைச்சியின் சுவையான மணம் வெளியே தவழ்ந்து வந்தது. ஒரு வருடம் கூடக் கழிந்திருக்காது, சந்தர்ப்பவசத்தால் நடந்த அந்தக் கல்யாணம் திடீரென்று விவாகரத்தில் முடிந்து, மீண்டும் அவர்களுக்குக் கதவு மூடிவிட்டது.
இப்போது மீனாவின் முறை. அவளுடைய திருமணத்திற்குப் பிறகு மூடிய கதவு, விதவையாகிவிட்ட அவளுடைய கரங்களாலேயே மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
மணப்பெண்ணாகப் பல்லக்கில் சென்ற மீனா, பாடையில் ஏற்றிய பிணம் போலத் திரும்பி வந்திருக்கிறாள். வயதான அவளுடைய பெற்றோருக்கு, நிர்க்கதியாக அந்தச் சோகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. எனினும், அந்தத் துயரக்காட்சியைக் காண்பதிலிருந்து மீனாவின் அப்பாவைக் காப்பாற்றும் விதமாக, அவருடைய கண்களில் பூவிழுந்து பார்வை பறிபோயிருந்தது.
சீக்கிரத்திலேயே, அரசாங்க முத்திரைகளுடன் இன்னொரு கடிதம் வந்தது. சென்ற முறை வந்தது போல் வாழ்வையே மூடி முடக்கிப் போட்ட செய்தி கிடையாது; மாறாக, சந்தோஷ அலைகளைக் கொண்டு வந்திருந்தது. மொட்டைமாடியில் தொட்டிகளில் வளர்த்த பூச்செடிகள் திடீரென்று பூத்துக் குலுங்கியது போல் அந்தக் கடிதத்தின் செய்தி இருந்தது. போரில் உயிர்நீத்த படைவீரர்களின் மனைவியருக்கு வீடு கட்டிக்கொள்ள இடம் வழங்க அல்லது, வாழ்வாதாரத்திற்காக ஏதாவது வேலைவாய்ப்புத் தர அரசாங்கம் விரும்பியது. சிறிதாக ஏதாவது உற்பத்திக் கூடங்களை நிறுவவும் அவர்கள் வங்கிக் கடன் பெறலாம்; அல்லது இராணுவம் நடத்தும் பள்ளிக் கூடத்தில் ஆசிரியையாக வேலை பெறலாம். எதற்கு விருப்பம் என்று மீனாவைக் கேட்டிருந்தனர்.
மீனாவைப் பொறுத்தமட்டில், அந்தக் கடிதம், பாடையின் மீது மலர்களைச் சொரிவதைப் போலிருந்தது. கையிலிருந்த கடிதத்தை அப்படியே கசக்கினாள். அவளுடைய உடலின் ஓர் அங்கம், அவளுக்குள்ளே எங்கோ ஓரிடத்தில் எப்பொழுதோ மரித்துவிட்டதால், மலர்களின் மணத்தால் அவளுக்கு எந்தப் பிரயோசனமும் கிடையாது. கட்டிலில் அப்படியே உயிரற்ற உடலாக விழுந்து கிடக்கத்தான் விரும்பினாள்.
செத்துப்போன அக்காவின் மகன் அவிநாஷ், வெளியூரில் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தவன், விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தான். பதினெட்டு வயதாகும் அவன் தாய்ப்பாசத்தை அறியாமலேயே வளர்ந்தவன். மீனாவை நோக்கி அவன் ஓடிவந்தபோது ஆண்டுக்கணக்கில் அடைபட்டிருந்த கண்ணீர் மடைதிறந்த வெள்ளமெனப் பீறிட்டுப் பெருகியது. அவனை அணைத்துக் கொண்டவள், கழுத்தை இறுக்கிக் கொண்டு கதறியழுதாள். குழந்தையாக இருந்தபோது அவனை மடியில் கிடத்திக் கொஞ்சியவள், அவன் வளர்ந்து ஆளானதையும் பார்த்திருந்திருக்கிறாள். இப்போது மீனாவை விடவும் உயரமாக வளர்ந்துவிட்டான்.
ஒவ்வொரு தடவையும் தன்னுடைய அம்மா சாப்பாட்டைத் தரும்போது, முகத்தைத் திருப்பிக் கொள்வதே மீனாவுக்கு வழக்கமாகிவிட்டிருந்தது. சாப்பிடப் பிடிப்பது இல்லை. பாதியில் கைகழுவி விடுவாள். இந்தத் தடவை அவிநாஷ் தட்டு நிறையச் சாப்பாட்டைக் கொண்டுவந்தான். “மீனு, எழுந்திரு, எழுந்து சாப்பிடு” என்றான். மீனாவுக்குத் திடீரென்று பசி கொழுந்துவிட்டு எரிவதுபோல் இருந்தது. மீனாவின் பசியைக் கிளறியது உணவின் வாசனை அல்ல; அவிநாஷின் உதடுகளிலிருந்து வந்த “மீனு” என்ற வார்த்தையின் மாயாஜாலம்தான் பசியைத் தூண்டியது.
மீனா என்றோ, மீனாஜி என்றோதான் எல்லாரும் அவளை அழைப்பார்கள். ஆனால் அவிநாஷ் அவளை மீனு என்று கூப்பிட்டதும், அவளுடைய ‘காதல் வீரனின்’ நினைவுகள் வந்து சூழ்ந்து கொண்டன.
சம்பிரதாயமான மரியாதை என்ற அளவுகோலில் மீனா என்று அழைப்பவர்களுக்கு அவள் இளையவளாக இருந்தாள். மீனாஜி என்று கூப்பிடுபவர்களைப் பார்க்கும்போது அவர்களைவிடப் பெரியவளாக உணர்ந்து கொண்டாள். ஆனால் அவளை விடப் பத்துவயது இளையவனான அவிநாஷ் மீனு என்றழைத்தபோது, தன்னை மீனு என்று அன்பொழுக அழைத்ததன் கணவனின், அந்தக் ‘காதல் வீரனின்’ தோழமையான பொறுப்பை ஏற்கும் சுமை அவிநாஷின் தோளில் இறங்கிவிட்டதாகத் தோன்றியது. கணவன் இறந்த போதே, ‘மீனு’வும் சேர்ந்தே செத்துப்போய் விட்டாள்.
அடுத்தமுறை அவிநாஷ் அவளை ‘மீனு’ என்று அழைத்தபோது திடுக்கிட்டு அலறியவள், தன் கையைக் கொண்டு அவன் உதடுகளை மூடினாள். அடுத்த கணம் வெடுக்கென்று அவன் உதடுகளிலிருந்து கையை விலக்கிக் கொண்டாள். உயிரின் கடைசி மூச்சுப் பிரிவதுபோல, மீண்டும் அந்த அழைப்பைக் கேட்க விரும்பினாள்.
அவிநாஷ் மௌனமாகிவிட்டாலும், வெற்றிடத்தில் ஒலிப்பதுபோல் அந்த அழைப்பு இருவருக்குமிடையே ஊசலாடிக் கொண்டிருந்தது.
உள்ளுணர்வுகளாலேயே பெண்கள் பல விஷயங்களின் உண்மைகளைப் புரிந்து கொண்டுவிடுவார்கள். மீனு என்ற அந்த வார்த்தைக்கு இனி தன் வாழ்க்கையோடு தொடர்பில்லை என்றும், கண்ணுக்குப் புலப்படும் எந்தவிதமான உருவத்தையும் அது ஏற்காது என்றும் அவளுக்கு உள்ளூரத் தெரிந்தே இருந்தது. எனினும், பிரக்ஞையற்றவளாகச் சற்றுத் தொலைவிலிருந்தபடியே அவிநாஷை அவ்வப்போது பார்த்துக் கொண்டாள்.
அவிநாஷ் அவளைச் சாப்பிடச் சொன்னபோது ஒப்புக்காகச் சாப்பிட்டாள். அவளுடைய மனநிலையை மாற்றுவதற்காகக் கேரம் விளையாட அழைத்தபோது அரைமனதோடு சேர்ந்து கொண்டாள். வெளியே காலாற நடக்கப் போனால், அவள் மட்டும் மரங்களின் நிழல்களில் ஒதுங்கி, அவளும் ஒரு நிழலுரு போல நடந்தாள்.
வெளிச்சம் அவளிடம் ஒருவிதமான மாயத்தைச் செய்ததென்றால், இருட்டு இன்னொரு வித மாயத்தைச் செய்தது. அந்த மாயங்கள் அவளைச் சூழ்ந்து மூடிக்கொண்டு விட்டன. அவளை விட ஒரு கைப்பிடியளவு உயரமாகிவிட்டிருந்த அவிநாஷ் இருளின் மாயத்தில் காதல் வீரனைப் போன்ற மாய உருவை வெளிப்படுத்தினான். அதே அவிநாஷ் வெளிச்சத்தில், ஒரு தாயைப்போல மீனா தன் முழங்காலில் கட்டிக்கொண்டு ஆடிய குழந்தையாகத் தெரிந்தான்.
ஓர் ஆண்மகன் இறந்துவிடும்போது, பெண்ணின் உடல் உயிரோடு இருந்தாலும், அவளுடைய கருப்பை உயிர்ப்போடு இருப்பதில்லை. அப்போதே அது செத்துவிடுகிறது. செத்துப்போன தனது கருப்பையின் முடை நாற்றம் மூக்குக்கு வருவது போல உணர்ந்தாள் மீனா.
அவளை ஓர் ஏக்கம் பற்றிக்கொண்டது. அவளுடைய ‘காதல்வீரனுக்கு’ தன் கருப்பையில் அடைக்கலம் கொடுத்திருந்தால், அவனுடைய எச்சம் உயிர்ப்போடு அவளோடு இருந்திருக்கும். விதிவசமான அந்தத் தருணத்தைத் தவறவிட்ட வருத்தம், வலி மிகுந்த ஓலமாய் அவள் உடலை அலைக்கழித்தது.
வெளிச்சமும் இருட்டும் ஒன்றாகக் கலந்துவிட்ட ஒரு நாளும் வந்தது. தனது அறையில் கட்டிலில் படுத்திருந்த மீனா, அவிநாஷின் முகத்தையே உற்றுப் பார்த்தாள்.
இரண்டு முகங்களைக் கொண்டவனாகத் தெரிந்தான் அவிநாஷ். ஒரு முகம் மீனாவின் கணவனுடையதைப் போல இருந்தது. கணவன் மூலம் அவளொரு குழந்தையைப் பெற்றிருந்தால், அந்தக் குழந்தை எப்படியிருக்குமோ அப்படித் தெரிந்தது இன்னொரு முகம். ஒரு முகம் இன்று உலகத்திலேயே இல்லை; இன்னொன்று பிறக்கவே இல்லை. ஆனாலும் இரண்டு விதமான முகங்களையும் பார்ப்பது அவளுக்கு விருப்பமானதாகவே இருந்தது. மிகவும் பரிச்சயமானவையாக அவை தெரிந்தன.
தான் பார்த்துக் கொண்டிருப்பது நிழலுருவான முகங்கள் அல்லவென்றும், நிஜமான முகம்தான் என்றும் திடீரென்று ஒரு கணத்தில் பிரக்ஞை உண்டாயிற்று. ஒன்று துடிப்பான இளைஞனான அவிநாஷின் முகம். இன்னொன்று, பதினெட்டு ஆண்டு களுக்கு முன்னர் தோளில் போட்டுத் தாலாட்டிய குழந்தை அவிநாஷின் முகம்.
அரைகுறையான பிரக்ஞையிலிருந்த அவளிடம், கண்முன்னே இருப்பவன் ஓர் ஆடவன் என்றும், தான் அந்த ஆடவனுக்காகவும் அவன் தன்னுள்ளே இருக்க வேண்டும் என்ற நிஜத்திற்காகக் கருப்பையைக் கொண்டிருக்கும் பெண்ணென்றும் எண்ணம் தோன்றிய ஒரு கணப்பொழுதும் வந்தது.
வெளிச்சமும் இருட்டும் ஒன்றாகிவிட, அவளுள்ளே முரண்பட்டுக் கிடந்த ஆசைகளின் வேதனைக்குத் திடீரென்று முடிவும் வந்தது. ஒரு பெண்ணின் கரங்கள் வேட்கையோடு ஆடவனின் தழுவலுக்காக நீண்டன. சதை, பரிச்சயமான சதையின் வாசனையை உணர்ந்தது.
ஒரு பெண்ணின் ஆடைகளும், ஓர் ஆடவனின் உடைகளும் கட்டிலிலிருந்து நடுங்கியபடியே சரிந்து, தலை குனிந்து உட்கார்ந்திருக்கும் ஒரு மனிதனைப் போலத் தரையில் குவிந்து கிடந்தன.
அது ஆன்மாக்களின் சங்கமம் அல்ல. அடைய முடியாத ஒன்றை அடையும் வேட்கையில் ஒரு பெண் தன் பெண்மையைத் தானே மிதித்துத் துவைத்துக் கொண்ட தருணம் அது; ஒரே தாவலில் தன்னை மீறிய பெரிய ஆளாகத் துடித்த ஓர் ஆடவன் கிளர்ந்தெழுந்த, விதி வசப்பட்ட கோரமான தருணம் அது.
விதியின் பிடியிலிருந்த அந்தக் கணம் கடந்து போனது. மீனா அவளுடைய மீனுவுடன் சேர்ந்து இன்னொரு முறை மரணித்தாள்.
இரவு முழுவதும் இரண்டு பெண்களும் தமது மரணத்திற்காகப் பரஸ்பரம் மற்றவரைக் குற்றம் சுமத்திக் கொண்டே ஒரே படுக்கையில் கிடந்தனர்.
காலையில் அறையிலிருந்து வெளியே வந்தவள் மூன்றாவது மனுஷி. அவள் கசங்கிக் கிடந்த அரசாங்கக் கடிதத்தை நீவிச் சரியாக்கி, தொலைதூர மலைப் பிரதேசத்தில் பள்ளி ஆசிரியையாகப் பணியேற்கச் சம்மதம் தெரிவித்து அதில் கையொப்பமிட்டாள்.
விதியின் விளையாட்டால் திறக்கப்பட்டிருந்த அந்த வீட்டின் ஓர் அறைக்கதவு, சில நாள் கழித்து விதிக்கப்பட்ட இன்னொரு சம்பவத்தினால் திரும்பவும் மூடிக்கொண்டது. மீனா போய்விட்டாள். இனி ஒருபோதும் திரும்பி வரமாட்டாள்.