“ஜில்காமேஷ் கிழக்கையும் மேற்கையும் தொன்மையினையும் நவீனத்தையும் கவிதையினையும் வரலாற்றையும் பிணைப்பது; இதன் எதிரொலிகளைப் பைபிளில் ஹோமரில் ஆயிரத்தோரு இரவுகளில் காணமுடியும். அதே வேளையில் ஒவ்வொரு பண்பாட்டுக்குள்ளும், மானுட இருதயத்திற்குள்ளும் உள்ள, ஆழமான மோதல்களைத் துலக்கிக் காட்டுகிறது.”
David Damrasch / The loss and Rediscovery of the epic of Gilgamesh.
தெய்வத்தைப் புறந்தள்ளிய அதிமானுட வீரனும், மரணத்தின் ரகசியத்தை அறிந்து, அதனை வெல்ல முயன்ற மனிதனுமான ஜில்காமேஷ், சுமேரிய நாகரிகத்தைச் சேர்ந்தவன். ஹோமரின் இதிகாச காலத்திற்கும் முற்பட்டவன். சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னன். வரலாற்றுப் பதிவுகளுடன், மொழி மரபில் செல்வாக்குப் பெற்றிருந்த ஜில் காமேஷ் இதிகாசம் களிமண் பவளப் பகுதிகளிலிருந்து மீட்டெடுக்கப்பட்டது 19ஆம் நூற்றாண்டில். ஜில் காமேஷ் வரலாறு போல ஜில்காமேஷ் இதிகாச மீட்பும் சாகசம் நிரம்பியதே என்பதை டேவிட் டேம்ரச் ஆவணப்படுத்தி இருக்கிறார். சிதறிக் கிடந்த 11 களிமண்பாளங்களின் பதிவுகளைத் தொகுத்து, இடைவெளிகளை யூகித்து நிரப்பி, ஓர் எடுத்துரைப்பு வடிவில் ஆவணப்படுத்திய பிரிட்டிஷ் அருங்காட்சியகப் பணியாளர்கள், தொல்லியலாளர்கள், வரலாற்றாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு அசாதாரணமானது.
ஒரு பெண் தெய்வத்துக்கும் ஒரு மானுடனுக்கும் மகனாகப் பிறந்த ஜில்காமேஷ், உருக் (ஈராக்கில் உள்ளது) எனும் நகர - அரசின் மன்னன். ஏழு ஞானியரைக் கொண்டு, உருக் நகரை நிர்மாணித்தவன். பாதுகாப்பிற்கு அரண்கள் எழுப்பியவன். மாபெரும் தீரன். ஆனால் மணப்பெண்ணாக இருப்பவளை முதலில் துய்க்கும் ஆசை மிக்கவன். இதனால் பெண்டிர் தெய்வத்திடம் முறையிட, இவனை அடக்க, எங்கிடு என்னும் வீரனை உருவாக்குகின்றனர்.
விலங்குகளுடன் விலங்காகப் புல்லை மேய்ந்து வரும் எங்கிடு, மனிதத்தன்மைப் பெற்றிட, ஸ்ம்ஹத் என்னும் கோயில்தாசி அனுப்பி வைக்கப்படுகிறாள் ஜில்காமேஷால். ஆறு பகல் ஏழு இரவுகளில் அவனுடன் அவள் உறவுகொண்டு, ஒரு மனிதனாக்குகிறாள். ஜில்காமேஸின் அநீதிக்காக அவனுடன் சண்டையிட வரும் எங்கிடு, சளையாமல் பொருதுகிறான். ஆனால் கடைசியில் வெற்றி தோல்வி இன்றி இருவரும் சமநிலையில் இருக்கின்றனர். பிற்பாடு இருவரும் நண்பர்களாகிவிடுகின்றனர்.
தன்னை வசீகரிக்கும் பெண் தெய்வத்தை ஜில் காமேஷ் நிராகரிக்கவே, அவனை விண்ணகக் காளையை அனுப்பி, கொல்ல வைக்குமாறு தன் தந்தையை வேண்டுகிறது அப்பெண் தெய்வம். ஜில் காமேஷும் எங்கிடுவும் அவ்விண்ணக எருதினை வீழ்த்திவிடுகின்றனர். இருவரில் ஒருவர் தண்டிக்கப் பட வேண்டும் என்று வருகையில், எங்கிடு பலியாகின்றான். தன் சிநேகிதனின் மரணத்தால் ஆறாத் துயரமுற்ற ஜில்காமேஷ், மரணத்தை வெல்லும் ரகசியத்தைத் தேடி நீண்டதூரம் பயணிக்கிறான். மாபெரும் ஊழிப் பெருவெள்ளத்தில் உயிர்த் தப்பி வாழும் தன் மூதாதை உட்னாபிஸ்டிமைச் சந்திக்கிறான்.
ஒருவாரம் தூங்காமல் விழித்திருக்க வேண்டும் எனச் சோதித்துப் பார்க்கும் அம்மூதாதையரிடம் தோற்றுப் போகிறான் ஜில்காமேஷ். தூக்கத்தை வெல்ல முடியாதவனால், மரணத்தை எப்படி வெல்லக் கூடும்? மரணத்தின் தவிர்க்க முடியாமை மற்றும் மண்ணின் கடமைகளை ஜில்காமேஷ் புரிந்து கொள்ளுமாறு செய்து, ஆறுதலுக்காக இளமையை நீட்டித்திருக்க வைக்கும் மூலிகையுடன் அனுப்பி வைக்கிறார் மூதாதை.
வழியில் அம்மூலிகையும் ஒரு நாகத்தால் பறிக்கப்பட்டுவிட, அப்படியே திரும்ப நேர்கிறது ஜில்காமேஷ். தன் சரித்திரத்தை கல்லில் வடிக்கச் செய்வதுடன், தன் கல்லறையினையும் திட்டமிட்டு நிர்மாணித்து விட்டான்.
5000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதும் முறை கண்டறியப்பட்டிருந்த சுமேரியாவில், அப்போது அங்குப் பேசப்பட்ட அக்கேடிய - சுமேரிய மொழிகளில் இந்த இதிகாசம் களிமண் பாளங்களில் பதியப்பெற்றது.
ஜில்காமேஷின் முந்தைய பெயர் வடிவம் பில் காமேஷ். உருக் நகரை 126 ஆண்டுகள் ஆட்சிபுரிந்ததாகக் கூறப்படுகிறது. ஜில்காமேஷும் அவனது மகன் உர்லுகலுகல் சேர்ந்து நின்லில் என்னும் பெண் தெய்வத்திற்கு ஆலயம் எழுப்பியதாகக் கல்வெட்டு உள்ளது. இந்த இதிகாசத்தை உருவாக்கியவர் பெயர் இல்லை. வாய்மொழி மரபின் தொடர்ச்சியாகப் பதிவு பெற்றிருக்க வேண்டும்.
காதல் - போர் தெய்வம் இனான்னாவின் சகோதரன் ஜில்காமேஷ். சுருள்முடி, தாடி-மீசை, ஒரு கையால் சிங்கக் குட்டியை இருக்கியிருத்தல், இன்னொரு கையில் அரிவாள் சகிதம் கம்பீரமாயிருக்கும் ஜில்காமேஷ் உருவம். இந்த இதிகாசம் Stupendous என்று வியக்கின்றார் கவிஞர் ரில்கே.
பாலைவனச் சோலைகளை முதலில் எழுப்பியதும், லெபனான் மலைகளில் முதலில் செடார் மரங்களைச் சாய்த்ததும் காட்டெருதுகளைக் கொல்லும் உத்திகளை முதலில் அறிந்திருந்ததும் கடலில் கலம் செலுத்துவதை அறிந்தவனும் ஜில்காமேஷ்தான்.
தெய்வத் தொடர்புகளுடன் ஜில்காமேஷ் இருந்த போதும், அவன் போற்றப்படுவது மானுட சாகசங்களுக்காவும், தீரத்திற்காகவும்தான். ஜில்காமேஷ் வாழ்க்கை தொன்மங்களுடன் சேர்ந்திருந்தபோதும், அவனது இதிகாசம் தொன்மமில்லை என்பார் ஆண்ட்ரூ ஜார்ஜ்.
இளமை - முதுமை, வெற்றி - வீழ்ச்சி, மனிதர் - தெய்வங்கள், வாழ்க்கை - மரணம் ஆகியவை குறித்து இந்த இதிகாசம் நிறையவே பரிசீலிக்கிறது. ஜில்காமேஷின் தீர்க்கமிகு நடவடிக்கைகளில் மட்டுமல்லாமல், அவன் மேற்கொள்ளும் தேடலில் எதிர்ப்படும் துயரம் - வேதனையிலும் இதிகாசம் வலிமை கொள்கிறது.
நீ தேடிடும் வாழ்வை கண்டறிய முடியாது :
தெய்வங்கள் மானுட சமூகத்தைப் படைத்தபோது மரணத்தை மானுடருக்கு விதித்தனர்; வாழ்வைத் தமக்கென்று வைத்துக் கொண்டனர்.
வில்லியம் கிரஹாம் சுமேர் தனது Folkways - Strange patterns of culture a hunter book, 1940 நூலில் ஜில்காமேஷின் தோற்றுவாய் மற்றும் பிற பண்பாடுகளில் இதன் மாறுபட்ட வடிவங்கள் இருப்பதை ஆராய்கின்றனர்.
“ஆதாம் - ஏவாள் கதையின் வேறுபட்ட வடிவமே இது. ஜில்காமேஷ் எல்லாப் பெண்களாலும் போற்றப்படுபவன். உருக் நகரின் மூத்தோர், அவனது தாயான பெண் தெய்வம் அரூரிடம் தன் மகனைக் கட்டுப்படுத்தி வைக்குமாறு வேண்டுகின்றனர். அவள் விலங்குத்தன்மை மிக்க எங்கிடுவை உருவாக்குகிறாள். ஒரு கோயில்தாசி அவளை ஈர்த்து மயக்கி விலங்குகளிடமிருந்து விலக்கிக் கொண்டு வருகிறார். பாலியல் அறிவு கிட்டியதும் பிரக்ஞை, புத்திசாலித்தனம், நாகரிகம் எழுகின்றன. மெக்ஸிகோ மக்களிடம் இத்தகைய தொன்மம் உண்டு...”
இதனைப் பத்திரிகையாளர் கீர்த்திக் சசிதரன் இப்படி அணுகுகிறார்:
“ஜில்காமேஷ் இதிகாசத்தில் பாலுறவு அனுபவம், காட்டுமிராண்டியிலிருந்து ஒருவரை உருமாற்றுகிறது எனில், யூத - கிறித்துவ உலகில் பாலியல் அறிவுதான், மனிதனை ஏடன் தோட்டத்திலிருந்து வெளியேற்றக் காரணமாகிறது. கண்டறிவதன் முக்கியத்துவத்தை ஜில்காமேஷ் அறியுமாறு செய்யும் அர்த்தத்தைத் தேடல், யூத மரபில் மீறலின் தவிர்க்க முடியாமையாக சுட்டிக் காட்டப்படுகிறது.”