பல தலைமுறைகளைச் சேர்ந்த ஸ்பானியக் கவிஞர்களின் ஆசானாகக் கருதப்படும் வான் ரமோன் ஹிமினெஸ் பூரணத்துவத்தை நோக்கி இயங்கிய கவிஞர். தலைமுறை 27’ என்றழைக்கப்பட்ட கலை இயக்கத்தைச் சார்ந்த கவிஞர்களில் முக்கியமானவர். 1956ஆம் ஆண்டு அவரது லிரிக்கல் தன்மைமிக்கக் கவிதைகளுக்காக நோபல் விருதுபெற்றவர். அவர் பின்பற்றிய மாடனிஸ்மோ (Modernismo) என்பது ஸ்பானிய வகைப்பட்டதான நவீனத்துவம். இதையேதான் பிறகு ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ் அர்ஹெந்தீனியாவில் அறிமுகம் செய்தார். ஹிமினெஸைப் பொருத்தவரை மாடனிஸ்மோ என்பது விடுதலைக்கான இயக்கம். ஸ்பானிய மொழி பேசிய அமெரிக்காக்களின் இருபது நாடுகளுக்குத் தேவையான பாதிப்பை ஹிமினெஸ் ஒருவரால் செலுத்த முடிந்தது. (வாஸ்தவமாக அவரது குரு என்று கருதப்பட்ட ரூபன் டேரியாவின் உதவியுடன். )
ஏனென்றால் மாடனிஸ்மோவின் தந்தை எனக் கருதப்படுபவர் ரூபன் டேரியோ(1867-1916). மத்திய அமெரிக்கக் குடியரசான நிக்கரகுவாவில் பிறந்த ரூபன் டேரியோ ஸ்பானிய மொழியில் எழுதிய கவிஞர்களிலேயே மிகவும் காஸ்மோபொலிட்டன் தன்மை வாய்ந்தவராக இருந்தார். மேலும் ரூபன் டேரியோ இந்த நவீனத்துவத்தை முழுக்க முழுக்கக் கவிதைக்கானது என்று குறிப்பிட்டு கவிதைக்கு ஒரு தனித்துவத்தை அளித்தார். டேரியோவின் மாடனிசமோ அவரது தொகுதியான ‘அஸூல்’ என்ற கவிதைத் தொகுதியிலிருந்து ஆரம்பித்ததாக இலக்கிய வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். ஆனால் முதல் உலகப் போருக்குப் பிறகு டேரியோவின் நவீனத்துவத்திற்கு (Modernismo) வேண்டிய எதிர்ப்பு கிளம்பிற்று. பிறகு மறுதலிக்கப்பட்டது.
வாழ்க்கை முழுமைக்கும் ஹிமினெஸ் கவிதையைத் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்தார். தவிர அவர் ஒரு சில உரைநடைப் படைப்புகளையும் எழுதி சாதித்து உள்ளார். புதிய கவிதைகள் உருவாக்கம் இல்லாத போது ஏற்கனவே எழுதப்பட்டவற்றைப் பளபளப்பாக்கினார். எழுத ஆரம்பித்த காலத்தில் பெரும்பான்மையான பா அமைப்புகளை வைத்தே எழுதினார். குறிப்பாக ஸ்பானிய 14 வரிக்கவிதையின் ஆசான்களில் மிக இன்றியமையாதவராகக் கருதப்படுகிறார். ஆரம்பக்கட்டக் கவிதைகளில் நெருக்கியடித்த கவித்துவ உணர்ச்சிகளில் ‘சுருங்கச் சொல்லல்’ இல்லாமல் இருந்தது என்பதை நாம் தொடக்கக் கால ஐரிஷ்கவிஞர் யேட்ஸின் கவிதைகளில் காணப்படுவதைப் போன்றது என்று சொல்ல முடியும். ஆரம்பகாலப் பிரக்ஞாபூர்வமான கவித்துவம் என்பதில் அலங்காரங்களும் ஆடம்பரங்களும் இருக்கத்தான் செய்தன.
அவர் கண்டு அனுபவம் கொண்டு கவிதையில் பதிவு செய்தது என்பதில் பதிவேட்டைக் கையாள்பவர்களைப் போலன்றி ஒரு ஓவியனின் வழியைக் கடைபிடித்தார். இறுதி வெளிச்சம் என்ற கவிதை இதற்கொரு எடுத்துக்காட்டு. 1914 - 15 ஆண்டுகள் வாக்கில் அவர் ஸ்பிரிச்சுவல் சானெட்ஸ் (Spiritual Sonnets) என்ற தொகுதிக் கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தார். இக்கவிதைகளில் ஹிமினெஸ் நேரடியாக அவரது 16ஆம் நூற்றாண்டு ஸ்பானிய முன்னோர்களின் ‘சானெட்’ எழுதும் முறையைப் பின்பற்றினார். யேட்ஸ் மற்றும் வில்லியம் பிளேக் போன்றோரின் கவிதைகளை வாசித்ததால் ஹிமினெஸுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஆரம்பக்கட்டக் கவிதைகளில் பார்க்கலாம். வால்ட் விட்மேன் மீது அலாதியான மதிப்பு வைத்திருந்தார்.
அவரது கவிதைகள் ஆங்கில ரொமாண்ட்டிக் ஓவியர் டர்னர் (J. M. W. Turner) என்பவரின் ஓவியங்களுடனும் சீன ஓவியங்களுடனும் ஒப்புமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்குக் காரணம் அவரது வர்ணப் பயன்பாடுகள் மட்டுமன்றி சில சமயம் அவரது கவிதைகளில் மனிதர்களற்ற நிலப்பரப்புகளைப் பார்க்க அவர் வாய்ப்பளிப்பதும்தான்.
அவரது முதிர்ச்சிக் கட்டங்களில் பா அமைப்புகளையும் எதுகை மோனை மற்றும் ஓசை அமைகளையும் விட்டுவிடத் தொடங்கினார். இறுதியில் ‘நிர்வாணக் கவிதை’ என்ற ஒன்றை முன்மொழிந்தார். அவர் குறிப்பிட்ட நிர்வாணக் கவிதைக்கும் ‘தூய கவிதை’க்கும் அதிகமான வேறுபாடுகள் இல்லை. இதில் அவர் குறுகத் தரித்தலையும் சேர்த்துக் கொண்டதால் விவரணைகளை வெகுவாக ஒதுக்கினார். ஆனால் கலை கலைக்காகவே என்ற கருதுகோளை முன்வைத்த ‘தூய கவிதை’க்கும் ஹிமினெஸ் முன்வைத்த நிர்வாணக்கவிதைக்கும் சிறிது வேறுபாடு காணப்படுகிறது-கோட்பாட்டளவில் என்ற போதிலும் கூட.
அவர் உடனிடருந்தும், வாசித்தும் எழுதிக்கொண்டு இருந்த பல இளம் கவிஞர்கள் அவரது வழி காட்டுதலால் முதிர்ச்சியடைந்தனர்: அதில் குறிப்பிடத் தகுந்தவர்கள் - ஹோர்ஹே குய்யன் (Jorge Guillen), பெட்ரோ சாலினாஸ் (Pedro Salinas), லூயி செர்னுடா (Luis Cernuda), பெடரிக்கோ கார்சியா லோர்க்கா (Fedricao Garcia Loca), பைசந்த் அலெக்ஸாந்ரே (Vincente Alexandre), மற்றும் ரஃபேல் ஆல்பர்ட்டி (Rafael Alberti) போன்றோர். லோர்க்கா நேரடியாக ஹிமினெஸைத் தனது ஆசான் என்று பொதுவெளியில் ஒப்புதல் செய்திருக்கிறார். 1935ஆம் ஆண்டு ஸ்பானிய உள்நாட்டுப் போர் காரணமாக இந்தக் குழு சிதைந்து போகும் முன்னர் ஐரோப்பாவில் அப்பொழுது எழுதப்பட்ட மிகச்சிறந்த கவிதைகள் ஸ்பானியக் கவிஞர்களால் எழுதப்பட்டன என்று அறிவித்தார் ஹிமினெஸ். இளம் கவிஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்த ஹிமினெஸ் எப்போதும் அவசரப்பட்டு ஒரு படைப்பை எழுதவோ வெளியிடவோ செய்யக் கூடாது என்று அறிவுறுத்தினார். வெகுஜன வாசகர்களுக்காக எழுத வேண்டாம் என்றார். கவிதைக்காகவே இளம் கவிஞர்கள் தம் வாழ்க்கைகளை வாழ வேண்டுமென வற்புறுத்தினார்.
அவரது படைப்புகள் வெகுஜனப் பத்திரிகைகளில் இருமல் மருந்து விளம்பரங்களுக்கிடையில் வெளியிடப்படுவதை அவரால் என்றுமே ஜீரணிக்க முடிய வில்லை. உடைந்த அச்செழுத்துக்கள் அவரை இன்னும் கோபமூட்டின. எனவே அவருக்கென்றே ஒரு அச்சகத்தை ஏற்படுத்திக் கொண்டார். மேலும் அவரது கவிதைகளை அடிக்கடி திருத்தம் செய்து கொண்டே இருக்கும் பிடிவாதமான பழக்கம் கொண்டிருந்தார்.
படைப்பு ரீதியாக அவர் மொத்தம் மூன்று சுயங்கள் இருப்பதாக நம்பினார். ஒருவிதத்தில் பார்ப்போமானால் எல்லாக் கவிஞர்களுமே தங்களின் சுயங்களின் மீது காதல் கொண்ட நார்சிசியஸ் போலத்தான் செயல்படுகின்றனர் என்றவர் மேலும் குறிப்பிட்டார்:
“ In me, there are at least three I’s,” he once wrote. “ I was always enough with two of them. But I want to be my third, the demanding one, el exigente.””
பொதுநபர் சுயம் எங்கே முடிகிறதென்றும் தனிநபர் சுயம் எங்கே ஆரம்பிக்கிறதென்றும் நிச்சயமாக ஒரு கவிஞனால் அறுதியிட்டுக் கூற முடியாது. ஒருவரது சுயஅடையாளத்தில் மிக மர்மமானதும் ஆழமானதுமாக இருப்பது அதன் பிரித்தறிய முடியாத்தன்மையும் அதன் மர்மமும் ஆகும். இந்தச் சுயம் உடைபட்ட நிலை பிற்காலத்தில் பாப்லோ நெரூதாவால் முன் எடுத்துச் செல்லப்பட்டது. (குறிப்பாக எக்ஸ்ட்ரா வெகாரியோ என்ற தொகுதிக் கவிதைகளில் )
I am not I I am this one Walking beside me whom I do not see Whom at times I manage to visit And at other times I forget The one who remains silent when I talk The one who forgives, sweet, when I hate The one who takes a walk when I am indoors The one who will remain standing when I die.
(Translated by Robert Bly)
காலம் மற்றும் லயம் குறித்த பிரக்ஞை ஹிமினெஸ்ஸிடம் அதீதமாய்க் காணப்பட்ட ஒன்று. உழைக்கும் வர்க்கத்தினருடன் தன்னை அடையாளம் கண்ட பிரெஞ்சுத் தத்துவவாதியான சைமன் வெய்ல் காலத்திற்கும் லயத்திற்கும் இடையிலான சில உறவுகளைக் கண்டறிந்தார். சைமன் வெய்ல் ஆசிரியராக இருந்த நிறுவனத்திலிருந்து ஒரு வருட விடுமுறை பெற்றுக் கொண்டு தொழிற்சாலையில் ஷிப்ட்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணி செய்யும் முறைமைகளை ஆராய்ந்து சில முடிவுகளுக்கு வந்தார். ஒரு பணியின் முக்கியமான பிரச்சினையே காலமும் அதுசார்ந்த லயமும் என்றார் வெய்ல். முடிவற்றுத் திரும்பத் திரும்ப ஒரே வேலையைச் செய்பவர்களுக்குச் சில எளிய இயக்கங்கள் இருக்கின்றன என்றும் இது முடிவற்றுத் திரும்பத் திரும்ப நிகழ்கின்றது என்றும் பிறகு கூறினார். சைமன் வெய்ல் உடல் உழைப்புக்கெனக் கண்டறிந்தவை மூளை உழைப்புக்குமே பொருந்தி வரக்கூடியவை. அதாவது சிந்தனையானது மின்னல் தெறிப்புகளென உருவெடுக்கிறது. காலப் பிரக்ஞை ஹிமினெஸைத் தீவிரமாகப் பாதித்த ஒன்று என்பதை நாம் அறிவது அவசியம்.
அவர் தனது உள்மன லயம் காலக் கடிகாரத்துடன் ஒத்துப்போவதில்லை என வருந்தினார். அவரது ஒரு நாள் என்பது சில சமயம் அரைமணி நேரமாகவும், மற்றவை மூன்று மணிநேரங்களாகவும் சில நாட்கள் ஆயிரக்கணக்காக மணிநேரங்களைக் கொண்டிருப்பதாகவும் உணர்ந்தார். அவர் அவரது கவிதையில் மூழ்கி இருக்கும்போது காலம் கவனிக்கப்படாமல் அவரைக் கடந்து செல்கிறது. அல்லது அவரது சிந்தனையினுள் தேவையற்ற இரைச்சல் அல்லது அழையா விருந்தாளியாக உடைத்துச் சென்று நுழைகிறது. உள்வயமான சலனமறுத்த நிலையின் உச்சத்தை அவர் அடைய விரும்பினார். எனவே இதில் “முடிக்க வேண்டும்” என்ற அவசரப்படுத்தலோ அல்லது நேற்றைய தோல்விகளைப் பற்றிய பின்வருத்தங்களோ, இழந்து போன சந்தோஷமான மணிநேரங்களைப் பற்றிய ஏக்கமோ தொந்தரவு செய்யக்கூடாது என்று எண்ணினார். ஒவ்வொரு நாளும் அவர் “ஒரு சமயத்தில் ஒரு நாள் (மட்டும்)” என்ற அளவில் தொடங்குகிறார். ஒரு நாள் என்பது அவரைப் பொருத்தவரை ஒரு தீவைப் போல் இருக்க வேண்டும் என நினைத்தார்: “காலம் என்கிற சமுத்திரத்தில் அதனுடைய காலை மற்றும் மாலையுடன்.” ஒவ்வொரு மணி நேரமும் அதனளவில் உருண்டையாகச் சொரசொரப்பின்றி அருகில் உள்ள மற்ற மணி நேரத்தை உரசாமல் இருக்க வேண்டும் என்பது அவர் எதிர்பார்ப்பாக இருந்தது.
மேலும் நிசப்தம் அவரது படைப்பு நேரத்திற்கு அத்தியாவசியமாய்த் தேவைப்பட்ட ஒன்று. உட்பக்கம் கார்க் உறையிடப்பட்ட மார்செல் ப்ரூஸ் (Marcel Proust)-இன் அறையில் இருந்தது போன்ற நிசப்தத்தைப் பிரான்ஸ் அனுமதிக்கவில்லையா என்று கேட்டார். சப்தங்களைத் தவிர்ப்பதற்கு வேண்டி அவர் அடிக்கடி இருப்பிடத்தை மாற்றவும் செய்தார்.
கவிதை மற்றும் தினசரிப் பணிகளின் ஆழ்ந்த ரகசியங்கள் என்று அவர் சொன்னது மீண்டும் மீண்டும் இயல்பான லயத்தைத்தான். லயத்தைப் பின்பற்றாத செயற்கையான தூண்டல்களை ஹிமினெஸ் அறவே வெறுத்தார். இதனால் செயற்கை லயத்தைப் பின் பற்றும் அமெரிக்கர்கள் பற்றி ஒரு முறை இவ்வாறு கூறினார்:
“What do I care about three annual crops of California apples, which taste like wood, when I have another Spanish apple, which takes a year to develop its juices?”
அமெரிக்கர்களின் இயற்கை குறித்த அணுகுமுறையைப் பிடிக்காத ரில்கேவின் குரலைப் போல ஹிமினெஸின் மேற்கோள் ஒலிக்கிறது.
“வேர்களும் சிறகுகளும்: சிறகுகள் வேர்களாகட்டும், வேர்கள் சிறகுகளாகட்டும்” என்று கூறினார் அவர்.
சில மனோவியல் அறிஞர்கள் நம்புவது போல் கனவின் மொழியை யதார்த்த நிலைக்கு மொழி பெயர்த்துவிட முடியும் என்ற நம்பிக்கை இல்லாதவராக இருந்தவர் ஹிமினெஸ் - அவரது சில கவிதைகள் கனவுகளின் நேரடியான மொழிமாற்றம் செய்யப்பட்டவை என்பது நிஜமாக இருந்தபோதிலும்கூட. கனவின் பகுதியும் மெய்மையின் பகுதியும் படைப்பு வாழ்வின் இரு பக்கங்களாகக் கருதப்படுமானால் இந்த இரண்டில் எது நிஜம் என்பதைத் தீர்மானிப்பது அவ்வளவு எளிதில்லை என்று நினைத்தார் ஹிமினெஸ். அவரது கவிதைகளில் சிலவற்றில் நாம் தலைகீழாக இரவில் பறப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. ஆனால் அவரது கனவுகளின் இரவுகளிலிருந்து வரும் ஒளிவீச்சு நகரங்களிலிருந்து வெளியிடப்படுகின்றனவா அல்லது விண்மீன்களிலிருந்து கசிகின்றனவா என்பது தெளிவில்லாதிருக்கிறது. ஆனால் கனவின் விளிம்பிலிருந்துதான் அவரது கவிதைகள் அழைப்பதாகக் கூறுகிறார்:
“கவிதை என்னை அழைக்கிறது, காதலைப் போல, அதனிடத்திலிருந்து. நான் புதிய நாளின் ஒழுங்கில் அதனிடம் சென்றேன், புதிய நேற்றின் வேறுபட்ட தொடர்ச்சியிடம். எழுதப்பட்ட பக்கத்திடம் செல்ல, அது பிரதிபலிப்பைப் பிடித்திருக்கிறது - ஒரு வெண்ணிற நதியின் கடினமான மேற்புறமென, கடினமான கண்ணாடியின் திண்மையின் ஊடாய் சாம்பல் நிறம் ஏற்கனவே வானத்தின் நீலத்திடமும் மற்றும் ஏற்கனவே பச்சை நிறத்தில் உள்ள மரத்திடமும் இருக்க.”
விடியலின் ‘பொய்யான தங்கத்திடமிருந்து’ அவர் ஒரு கற்பனையான பீச்சின் வழியாக நடக்கிறார், கனவின் அலைகளில் என்ன விடுபட்டிருக்கிறது என்பதைக் காண்பதற்கு. கடல் அலைகளில் அலையும் மரத்துணுக்குகளைச் சேகரிக்கும் ஸர்ரியலிஸ்ட்டுகளைப்போல அல்ல. ஹிமினெஸ் “ஆட்டோமேட்டிக்” எழுதுதலில் நம்பிக்கை கொள்ளாதவர். பகல் கனவுகளின் தொடர்ச்சி அவரை ஆட்டி வைக்கிறது என்பதைக் கீழ்வருமாறு குறிப்பிட்டார்:
“Sometimes my daydreams follow one another so quickly and abundantly that I think I am bleeding to death”.
மேன்மையான யதார்த்தத்தின் சூழ்நிலைமைதான் கனவு என்பதை ஒப்புக் கொள்ளவும் செய்கிறார். ஆனால் இது அவரது கனவுகள் பற்றிக் கருத்தோட்டங்களுடன் முரண்படுவதில்லை. நாம் கனவுகளிலிருந்து வரும் சொற்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி கைப்பற்றிவிட்டோமானால் அவைதான் மிக மெய்மை மிக்கவையும் மிகச்சிறந்தவையும் ஆகும் என்றும் கருதினார்.
ஸ்பெயின் தேசத்தின் அந்தலூசியா பகுதியில் மோகர் என்ற நகரத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு வங்கி இயக்குநராக இருந்தார். தொடக்கத்திலிருந்தே ஹிமினெஸின் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருந்ததென்று சொல்ல முடியாதிருந்தது. 1896ஆம் ஆண்டு அந்த லூசியாவின் தலைநகரான செவைல் என்ற இடத்தில் பட்டப்படிப்பு பெற்றார். அதே சமயத்தில் அவர் ஓவியமும் கற்றார். ஹிமினெஸின் முதல் கவிதை அவரது 17வது வயதில் வெளிவந்தது.
அப்போது அந்தலூசியாவில் வசித்த ரூபன் டேரியோவின் கவனத்தைக் கவர்ந்தது. ரூபன் டேரியோவைச் சந்தித்த ஹிமினெஸை டேரியோ தனது மாணவராக ஏற்றுக்கொண்டார். ஹிமினெஸ் 1900ஆம் ஆண்டு வெளியிட்ட இரண்டு கவிதைப் புத்தகங்களும் சென்ட்டிமென்ட்டலானவை என்பதை யாரும் மறுக்கவில்லை:
1901ஆம் ஆண்டு நிகழ்ந்த அவரது தந்தையின் இறப்பு அவரை மோகருக்குத் திரும்பவிடச் செய்தது. நொய்மையான ஆரோக்கியம் கொண்டவரும், மனோ வியாகூலம் மிக்கவருமான, ஹிமினெஸை அவரது தந்தையின் இறப்பு வெகுவாகப் பாதித்ததால் பலவித மனநோய்க் குறிகள் அவரிடம் தெரிய ஆரம்பித்தன.
மன ஆரோக்கியத்தின் பொருட்டு ஃபிரான்சுக்கு மருத்துவ ஆலோசனைக்காகச் சென்றவர் அங்கேயே சில காலம் தங்க வேண்டி வந்தது. போர்டோ (பிரான்ஸ்) என்ற நகரில் இருந்த மனநோய்க் காப்பகத்தில் சிகிச்சை பெற்றார். பிறகு மேட்ரிட் நகரில் சிறிது காலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
1902ஆம் ஆண்டு ஓரளவு உடல்நலம் தேறியவர் பிளான்கா ஹெர்நாந்தஸ் ஃபின்ச் என்ற பெண்ணுடன் காதல் கொண்டார். 1911-12 ஆம் ஆண்டுகளில் 104 காதல் கவிதைகளை எழுதினார். அதில் சில பாலுணர்வுத் தூண்டல் மிக்கவையாக இருந்தன.
1916ஆம் ஆண்டு ஹிமினெஸின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஆண்டாக அமைந்தது. அவரது அடுத்தக் காதலியான ஸெனோபியா காம்ப்ரூபி என்ற பெண்ணை மணக்க அமெரிக்காச் சென்றார். காம்ப் ரூபி அமெரிக்காவில் ஆங்கிலக் கல்வி கற்றவர். ஸெனோபியா காம்ப்ரூபி ஒரு சிறந்த மொழி பெயர்ப்பாளர். ஹமினெஸூக்குத் தாகூரின் கவிதை மொழிபெயர்ப்பாளர் என்ற அறிமுகத்துடன்தான் ஸெனேபியாவின் சந்திப்புத் தொடங்கிற்று. அமெரிக்காவுக்குச் சென்ற பயணமும் திருமணம் முடிந்து ஸ்பெயின் திரும்பி வந்த அனுபவமும் புத்தகமாக உருவெடுத்து 1917இல் The Diary of a Newly Married என்ற தலைப்பில் வெளிவந்தது.
ஹிமினெஸின் கவிதைகள் ஆரம்பத்தில் இருந்ததை விட அவரது வளர்ச்சிக்கேற்ப சுருக்கத்தை நோக்கிச் சென்றன. மேலும் வர்ணங்களின் பயன்பாட்டை அவரது கவிதைகளில் கூடுதலாகப் பார்க்க முடிந்தது. கவிதை பற்றி அவரது கோட்பாடு (அ) கருத்து முக்கியமாக விவாதத்திற்குட்பட்டது. முழுமையான கவிதை ‘நிர்வாணமானது’ என்றார் ஹிமினெஸ். எல்லாப் பூரணமான படைப்புகளிலும் வடிவம் என்பது இருக்கிறது என்றும் ஆனால் அது ஒரு நதியின் சுழலைப்போலக் கண்ணுக்குப் புலனாவதில்லை என்றும் கருத்துரைத்தார்.
முதலில் வருவது வார்த்தை: ஒரு தீவு. அடுத்தது காதலில் போல வார்த்தைகளின் சந்தோஷமான இணைவு பின்னர் வருவது ஒரே சமயத்தில் திறந்தும் மூடியும் இருக்கும் ஓர் உலகம் அதனுள் (அதனுள் மட்டுமே) அது முடிவிலியைக் கொண்டுள்ளது. அவரது வார்த்தை பற்றிய தியானத்திற்கு இன்னொரு எடுத்துக்காட்டு: எனது ஆன்மாவினால் படைக்கப்பட்ட எனது சொல்லே வஸ்துவாக ஆகட்டுமாக அதை அறியாத அனைவரும் என் ஊடாகச் செல்லட்டும் அந்த வஸ்துக்களுக்கு மறக்கும் அனைவரும் என் ஊடாகச் செல்வார்களாக அவற்றிடனிடத்திற்கு அந்த வஸ்துக்களை நேசிப்பவர் அனைவரும் என் ஊடாகச் செல்வார்களாக நுண்ணறிவே எனக்குத் தா அந்த மிகச்சரியான பெயரை உனது பெயரை வஸ்துக்களினுடையதையும் என்னுடையதையும் அவர்களுடையதையும் உனது பெயரையும்.
அவரது இரவு கனவுகளைச் சொற்களில் பிடிப்பது பற்றிய தியானம் பற்றிச் சொல்லும்போது உள்வயத் தனிமொழி (‘interior monologue’) என்ற இலக்கிய உத்தி பெயரிடப்படுவதற்கு முன்பிலிருந்தே அவருக்கு அதில் நம்பிக்கை இருந்ததாகத் தெரிவிக்கிறார்.
ஆனால் முழுமுற்றாக உள்வயத் தனிமொழியின் பயன்பாட்டாளர்களுடன் ஒத்துப் போகவில்லை என்று தெரிகிறது:
From a very early age I subscribed to what was later called the “interior monologue ... My main disagreement with the “interior monologuists,” their outstanding representatives being Dujar-din, James Joyce, Perse, Eliot, Pound, et al. is that while I believe that the interior monologue must flow, it must also be lucid and coherent.
- Time and Space: A Poetic Autobiography
எஸ்ரா பவுண்டையும் எலியட்டையும் சரியான முறையில் உள்வாங்கிக் கொண்ட ஸ்பானியக் கவிஞர் ஹிமினெஸ்.
ஹிமினெஸ் பிரதானமாய் ஒரு கவிஞர் என்ற போதிலும் குறிப்பிடத்தக்க உரைநடைப் படைப்புகளை எழுதி சாதனை புரிந்திருக்கிறார். ‘பிளேட்டரோவும் நானும்’ (Platero and I) என்ற உரைநடைப் படைப்பு (இது உரைநடைக் கவிதை என்றும் குறிப்பிடப்படுகிறது) அவரிடம் இருந்த வெள்ளிநிறக் கழுதையைப் பற்றிய கதையாக அமைகிறது. பெரியவர்களுக்காக எழுதப்பட்டதென்றாலும் சிறுவர் இலக்கியத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாக இன்றும் இருக்கிறது. மேலும் அதிகமான பிரதிகள் விற்பனையில் இன்னும் முதல் இடத்தைப் பிடிக்கிறது. ஆனால் இந்த நூல் பிளேட்டரோ என்ற கழுதையைப் பற்றியதாக மட்டுமல்லாது அவர் பிள்ளைப் பிராயத்தில் வளர்ந்த அந்தலூசியப் பிரதேச கிராமப்புற வாழ்க்கையைச் சிறப்பாகப் பதிவு செய்வதாக இருக்கிறது. அமெரிக்கர்கள் ஹிமினெஸை இந்த நூல் வழியாகத்தான் தெரிந்து கொண்டதுபோல் தோன்றுவது தவிர்க்க இயலாதது.
ஸ்பானிய உள்நாட்டுப்போரின்போது அவர் ரிபப்லிக்கன் படைகளுடன் இணைந்து செயல்பட்டார். போரின் உக்கிரம் தாக்குப்பிடிக்க இயலாதபோது புவெர்த்தா ரீக்கோவுக்குத் தானே புலம் பெயர்ந்து பெரும்பான்மையான காலத்தை அங்கேயே கழித்தார்.
அமெரிக்காச் சென்று சிறிது காலம் ஹிமினெஸ் தங்கி இருந்த போதிலும் அது சிறு மாற்றங்களைக் கூட அவரது ஆளுமையில் ஏற்படுத்தவில்லை. இதற்கு மாறாகப் பெடரிக்கோ கார்சியா லோர்க்கா மீது அமெரிக்க வாழ்க்கைத் தீவிரமாகப் பாதிப்பு செலுத்தியதால் ஒரு தனிக் கவிதை நூலே (Poet in New York (1940)) அவர் எழுதவேண்டி வந்தது. தவிரவும் அமெரிக்கர்கள் ஹிமினெஸின் படைப்புக்களைப் பொருட்படுத்தினார்களா என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டி இருக்கிறது. ஹிமினெஸ் நோபல் பரிசு பெற்ற சமயம் (1956) வரை அவரது கவிதை மொழிபெயர்ப்புகளை எந்த அமெரிக்க வெளியீட்டாளரும் வெளியிடவில்லை என்பது உண்மை. நியூயார்க் துறைமுகம் பற்றியும் வாஷிங்டன் சதுக்கம் பற்றியும் எழுதிய இரண்டு கவிதைகள்தான் ஹமினெஸின் அமெரிக்க அனுபவம் என்று நாம் கொள்ள வேண்டும்.
எழுத்தாளர்கள் அனைவரும் பூரணத்துவத்தை அடைவதற்கு எழுதுவதில்லை. படைப்பை ரீ - டச் செய்வதிலும் பளபளப்பாக்குவதிலும் ஒருவிதமான ஒருவித பாலுணர்வுத் தன்மையான உந்தம் இருப்பதை மனோவியல் அறிஞர் கேஸ்ட்டன் பேச்லார்ட் (Gaston Bachelord) என்ற பிரெஞ்சு தத்துவவாதி எடுத்துச் சொல்லி இருக்கிறார். மற்றவர்கள் திருத்தி அமைத்தலை தாய்மயமான அன்பைச் சார்ந்ததெனக் கூறி இருக்கிறார்கள். ஏற்கனவே வெளியிடப்பட்ட பல கவிதைகளை ஹிமினெஸ் திருத்தி மாற்றி அமைத்துக் கொண்டே இருந்தது அவரது விமர்சகர்களை எரிச்சல் ஊட்டியது. முதிர்ச்சியற்ற முறையில் வெளியிடப்பட்டவை அல்லது முழுமையற்ற முறையில் உருக் கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டதைச் சீர் செய்யும் நோக்கத்தில் ஹிமினெஸ் செயல்படவில்லை.
ஹிமினெஸின் கீழ்க்கண்ட நூல்கள் முக்கியத்துவம் பெறுபவை:
1. Poetry in Prose and Verse. (1932)
2. Voices of my Song (1945)
3. Animal at Bottom (1947)