தலைவர்

யூஜின் அயோனெஸ்கோ
தமிழில் : யுகேந்தர்

பகிரு

பாத்திரங்கள்:

1. அறிவிப்பாளர் 

2. இளம் காதலன் 

3. இளம் காதலி 

4. ஆண் அபிமானி 

5. பெண் அபிமானி 

6. தலைவர்

மக்களுக்குப் புறம்காட்டியபடி, மேடைக்கு மத்தியில் நின்றுகொண்டு, விழியை அகற்றாமல் பின்-மேடை வாயிலைப் பார்த்தவாறு தலைவரின் வருகைக்காக அறிவிப்பாளர் காத்திருக்கிறார். அவரது இரு புறமும் சுவரை ஒட்டிக்கொண்டது போல் தலைவரின் இரு அபிமானிகளும் (ஒரு ஆண் & பெண்) அவரது வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.

அறிவிப்பாளர்: (அதே நிலையில் இருந்தபடியான சில இறுக்கமான தருணங்களுக்குப் பிறகு) அதோ அவர்! அதோ அவர்! தெருக்கோடியில்! (தலைவர் வாழ்க போன்ற கோஷங்கள் கேட்கிறது.) அதோ தலைவர்! அவர் வருகிறார், அருகில் வருகிறார்! (மேடையின் இருபக்கத்திலிருந்தும் துதிக் கூச்சல்களும் கைத்தட்டலின் சத்தமும் கேட்கிறது.) அவர் நம்மைப் பாராதிருந்தால் நல்லது... (இரு அபிமானிகளும் சுவரை இன்னும் இறுக்கமாக ஒட்டிக்கொள்கிறார்கள்.) கவனம், கவனம்! (அறிவிப்பாளர் தனது உற்சாகத்தை வெளிப்படுத்துகிறார்.) வாழ்க! வாழ்க! தலைவர்! தலைவர்! தலைவர் நீடூழி வாழ்க! (தலைவரைத் தரிசிப்பதற்காக, இரு அபிமானிகளும், தங்களது உடல்களை விறைப்பாகவும் சுவரில் சாய்ந்தவாறும் வைத்துக்கொண்டு, கழுத்தையும் தலையையும் எவ்வளவு தூரம் நீட்ட முடியுமோ அவ்வளவு தூரம் முன்னோக்கி நீட்டுகிறார்கள்.) தலைவர்! தலைவர்! (இரு அபிமானிகளும் ஒரேநேரத்தில் கோஷமிட்டனர்.) வாழ்க! வாழ்க! (மற்ற ‘வாழ்க’களும், ஆஹா! ஓஹோ!’களும் மேடையின் இருபக்கத்திலிருந்தும் வந்தன. சிறிது நேரத்தில் அவை நின்றுவிட்டது.) வாழ்க! வாழ்க! அறிவிப்பாளர் பின்-மேடையை நோக்கி அடியெடுத்து வைத்து பிறகு நிதானித்து உள்ளே நுழைகிறார். அவரை இரு அபிமானிகளும் பின்தொடர்கின்றனர். அவர் செல்கையில், ‘அய்யோ! அவர் இங்கிருந்து செல்கிறார்! இங்கிருந்து செல்கிறார்! என்னை விரைவாகப் பின்தொடருங்கள்! அவரை நோக்கிச் செல்லலாம்!’ என்கிறார். அறிவிப்பாளரும் இரு அபிமானிகளும் மேடையிலிருந்து அழுதபடியே செல்கின்றனர்: ‘தலைவர்! தலைவ்வ்வர்! தலைவ்வ்வ்வ்வ்வர்!’ (இந்தக் கடைசி ‘தலைவ்வ்வ்வ்வ்வர்!’ கதறி அழும் குரலாக மேடையின் இரு பக்கத்திலிருந்து எதிரொலிக்கிறது.

அமைதி. சிறிது நேரத்திற்கு மேடையில் யாரும் இல்லை. இளம் காதலன் வலதுபுறமாகவும் காதலி இடதுபுறமாகவும் உள்ளே நுழைகிறார்கள்; பிறகு மேடையின் மையப்பகுதியில் சந்திக்கிறார்கள்.

இளம் காதலன்: என்னை மன்னியுங்கள் மேடம். இல்லை உங்களைச் செல்வி என்று அழைக்கவேண்டுமா?

இளம் காதலி: மன்னியுங்கள். உங்களை யார் என்றே எனக்குத் தெரியாது.

இளம் காதலன்: எனக்கும் உங்களை யார் என்றே தெரியாது.

இளம் காதலி: அப்படியென்றால், இருவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாது.

இளம் காதலன்: சரியாகச் சொன்னீர்கள். நம் இருவருக்கும் பொதுவான விஷயமொன்று இருக்கிறது. நம் எதிர்காலத்தை உருவாக்கக்கூடிய புரிதலின் அடிப்படை நமக்குள் உள்ளது என்பதே இதன் பொருள்.

இளம் காதலி: மன்னியுங்கள். எனக்கு இதிலெல்லாம் ஆர்வம் இல்லை. (அங்கிருந்து கிளம்புவது போல் நடக்க எத்தனிக்கிறாள்.)

இளம் காதலன்: ஓ, என் அன்பிற்குரியவளே, நான் உன்னை நேசிக்கிறேன்.

இளம் காதலி: அன்பே, நானும்!

(அவர்கள் கட்டித்தழுவுகிறார்கள்.)

இளம் காதலன்: அன்பே, உன்னை என்னுடன் அழைத்துச் செல்கிறேன். உடனடியாக நாம் திருமணம் செய்து கொள்வோம். அவர்கள் இடதுபுறமாக வெளியே செல்கிறார்கள். சிறிது நேரத்திற்கு மேடையில் யாரும் இல்லை.

(இரு அபிமானிகளும் பின்தொடர பின்-மேடையில் தோன்றுகிறார்;)

அறிவிப்பாளர்: ஆனால் இந்த வழியேதான் செல்வேன் என்று தலைவர் உறுதியாகக் கூறினாரே.

ஆண் அபிமானி: அது உங்களுக்கு உறுதியாகத் தெரியுமா?

அறிவிப்பாளர்: ஆம், நிச்சயமாக.

பெண் அபிமானி: உண்மையில் இவ்வழியாகச் செல்வதாக இருந்ததா?

அறிவிப்பாளர்: ஆமாம். ஆமாம். அவர் இந்த வழியாகக் கடந்து சென்றிருக்க வேண்டும். விழா நிகழ்ச்சி பட்டியில் அது குறிக்கப்பட்டிருந்தது.

ஆண் அபிமானி: நீங்களே அதைப் பார்த்தீர்களா, உங்கள் கண்களாலும் காதுகளாலும் கேட்டீர்களா?

அறிவிப்பாளர்: யாரிடமோ சொன்னார். வேறு யாரிடமோ!

ஆண் அபிமானி: ஆனால் யார்? இந்த வேறு யாரோ என்பது யார்?

பெண் அபிமானி: நம்பகமான நபர்தானா? உங்களது நண்பரா?

அறிவிப்பாளர்: என் நண்பர்தான். எனக்கு நன்றாகத் தெரிந்தவர். (பின்னணியில் திடீரென்று மீண்டும் ‘வாழ்க!’ மற்றும் ‘தலைவர் நீடூழி வாழ்க!’ என்ற கூப்பாடுகள் ஒலிக்கின்றன). அவர் தான்! அதோ அங்கே! வாழ்க, வாழ்க, வாழ்கவே! அதோ அவர்! மறைந்து கொள்ளுங்கள்! மறைந்து கொள்ளுங்கள்!

இரு அபிமானிகளும், முன்பு இருந்தது போலச் சுவரை ஒட்டி சாய்ந்துகொண்டு, முழக்கங்கள் வரும் திசையை நோக்கி தங்களது கழுத்தை நீட்டிப் பார்க்கிறார்கள். மக்களுக்குப் புறம்காட்டியபடி பின்-மேடையில் அறிவிப்பாளர் நிற்கிறார்.

அறிவிப்பாளர்: தலைவர் வருகிறார். இதோ நெருங்கிவிட்டார். அவர் கீழே குனிகிறார். நிமிர்கிறார்.

அறிவிப்பாளரின் ஒவ்வொரு சொல்லுக்கும், அபிமானிகள் திடுக்கிட்டு தங்களது கழுத்தை இன்னும் அதிகமாக நீட்டிப்பார்கிறார்கள்; நடுங்குகிறார்கள். அவர் குதிக்கிறார். அவர் ஆற்றைக் கடக்கிறார். அவர்கள் அவருடன் கை குலுக்குகிறார்கள். அவர் கட்டைவிரலை நீட்டினார். உங்களுக்குக் கேட்கிறதா? அவர்கள் சிரிக்கிறார்கள். (அறிவிப்பாளரும் இரு அபிமானிகளும் சிரிக்கிறார்கள்.) ஆ...! அவர்கள் அவருக்குக் கருவிகளின் பெட்டியைக் கொடுக்கிறார்கள். அவற்றை வைத்து அவர் என்ன செய்யப் போகிறார்? ஆ...! அவர் கையெழுத்திடுகிறார். தலைவர் ஒரு முள்ளெலியை வருடுகிறார். பேரழகுள்ள முள்ளெலி. கூட்டம் கைதட்டுகிறது. கையில் முள்ளெலியுடன் நடனமாடுகிறார். அவர் நடனக் கலைஞரை அணைத்துக்கொள்கிறார். வாழ்க! வாழ்க! (கூப்பாடுகள் மேடையின் இருபக்கத்திலிருந்தும் கேட்கின்றன. ஒருபுறம் நடனக் கலைஞரும் மறுபுறம் முள்ளெலியுமாக அவரைப் புகைப்படம் எடுக்கிறார்கள்; கூட்டத்தை நோக்கி கை அசைக்கிறார். பிறகு அவர் வெகுதூரத்தைப் பார்த்து காறி உமிழ்கிறார்.

பெண் அபிமானி: இங்கே வருகிறாரா? நம் திசையில் அவர் வருகிறாரா?

ஆண் அபிமானி: உண்மையில் அவர் செல்லும் வழியில்தான் நாம் இருக்கிறோமா?

(இரு அபிமானிகளை நோக்கி தலையைத் திருப்புகிறார்)

அறிவிப்பாளர்: அமைதி. நகராதீர்கள், நீங்கள் எல்லாவற்றையும் கெடுக்கிறீர்கள்...

பெண் அபிமானி: ஆனால்...

அறிவிப்பாளர்: அமைதியாக இரு, சொல்வதைக் கேள்! நான் உனக்குச் சொல்லவில்லையா அவர் வாக்குறுதியளித்திருக்கிறார் என்றும் தனது பயணத்திட்டத்தை அவரே தயார் செய்தார் என்றும்... (மேடையில் திரும்பிநின்றவாறு அவர் அழுகிறார்.) வாழ்க! வாழ்க! தலைவர் நீடூழி வாழ்க! (அமைதி) நீடூழி வாழ்க, தலைவர் நீடூழி வாழ்க! (அமைதி) நீடூழி வாழ்க, நீடூழி வாழ்க, தலைவர் நீடூழி வாழ்க! (தங்களை அடக்கிக் கொள்ள இயலாமல் இரு அபிமானிகளும் திடீர் என அழுகிறார்கள்.) வாழ்க! நீடூழி வாழ்க தலைவர்!

அறிவிப்பாளர்: (அபிமானிகளுக்கு) அமைதி, நீங்கள் இருவரும்! அமைதியாக இருங்கள்! நீங்கள் அனைத்தையும் கெடுக்கிறீர்கள்! (பின்னர், மீண்டும் ஒருமுறை மேடையை நோக்கினார்; அபிமானிகள் அமைதியாகிவிட்டனர்.) தலைவர் நீடூழி வாழ்க! (வெறித்தனமான உற்சாகம்.) வாழ்க! வாழ்க! அவர் சட்டையை மாற்றிக்கொண்டிருக்கிறார். அவர் சிவப்பு திரைக்குப் பின்னால் மறைகிறார். அவர் மீண்டும் தோன்றுகிறார்! (கைதட்டல் வலுக்கிறது.) சபாஷ்! சபாஷ்! (அபிமானிகளும் ’சபாஷ்’ என்று ஆர்ப்பரித்துக் கைதட்ட ஏங்குகிறார்கள்; தங்கள் கரங்களை வாயில் வைத்துத் தங்களைத் கட்டுப்படுத்திக்கொண்டனர்.) அவர் தனது கழுத்துப்பட்டையை அணிகிறார்! அவர் செய்தித்தாளைப் படித்துவிட்டு காலை காபியை அருந்திக்கொண்டிருக்கிறார்! இன்னமும் முள்ளெலி அவரிடம் இருக்கிறது. படிக்கட்டின் கைப்பிடிச்சுவர் விளிம்பில் சாய்ந்திருக்கிறார். கைப்பிடிச்சுவர் உடைகிறது. அவர் எழுகிறார்... யார் உதவியுமின்றி அவரே எழுகிறார்! (கைத்தட்டல், ’வாழ்க’ கோஷங்கள்) சபாஷ்! சிறப்பு! அழுக்கடைந்த ஆடைகளைச் சுத்தம் செய்கிறார்.

இரு அபிமானிகள்: (கால்களைத் தரையில் உதைத்து) ஓ! ஆ! ஓ! ஓ! ஆ! ஆ!

அறிவிப்பாளர்: அவர் முக்காலியில் ஏறுகிறார்! அவர் இன்னொருவரின் தோள்ப்பட்டைகளின் மீது ஏறுகிறார். அவர்கள் அவருக்கு ஒரு மெல்லிய முனைகளுடைய ஆப்பு ஒன்றைக் கொடுக்கிறார்கள், இது தமாசுக்கு என்று அவருக்குத் தெரியும், அவர் அதைப் பொருட்படுத்தவில்லை, அவர் சிரிக்கிறார். (கைதட்டலும் ஆரவார பேரொலியும்.)

ஆண் அபிமானி: (பெண் அபிமானியிடம்) உனக்குக் கேட்கிறதா? கேட்கிறதா? ஆ! ஒருவேளை நான் அரசனாக இருந்தால்...

பெண் அபிமானி: ஆ...! தலைவர்! (இது ஓர் உயர்ந்த தொனியில் கூறப்படுகிறது.)

அறிவிப்பாளர்: (இன்னமும் மக்களுக்குப் புறம் காட்டியபடி நிற்கிறார்.) அவர் முக்காலி மீது ஏறுகிறார்! இல்லை இல்லை. அவர் இறங்குகிறார். ஒரு சிறுமி அவருக்குப் பூங்கொத்து அளிக்கிறாள்... என்ன செய்யப்போகிறார்? அவர் பூக்களை வாங்குகிறார்... அவர் சிறுமியை கட்டியணைத்து... ‘என் கண்ணே’ என்று அழைக்கிறார்...

ஆண் அபிமானி: அவர் சிறுமியை கட்டியணைத்து... ‘என் கண்ணே’ என்று விளிக்கிறார்...

பெண் அபிமானி: அவர் சிறுமியை கட்டியணைத்து... ‘என் கண்ணே’ என்று அழைக்கிறார்...

அறிவிப்பாளர்: அவர் அவளுக்கு முள்ளெலியைக் கொடுக்கிறார். சிறுமி அழுகிறாள்... தலைவர் நீடூழி வாழ்க! தலைவ்வ்வர் நீடூழி வாழ்க!

ஆண் அபிமானி: அவர் இங்கே வருகிறாரா?

பெண் அபிமானி: அவர் இங்கே வருகிறாரா?

அறிவிப்பாளர்: (திடீர் ஓட்டத்துடன், வேகமாக பின்-மேடைக்குள் நுழைகிறார்) அவர் போகிறார்! விரைவாக! வாருங்கள்!

அவர் மறைகிறார், இரு அபிமானிகளும் அவரைப் பின்தொடர்கின்றனர். அனைவரும் ‘வாழ்க! வாழ்க!’ என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.

சிறிது நேரத்திற்கு மேடையில் யாரும் இல்லை. காதலர்கள் இருவரும் உள்நுழைகிறார்கள், மார்போடு அணைத்துப் பின்னிக்கொண்டவர்களென. மேடையின் நடுவில் நின்று பிறகு விலகுகின்றனர்; அவள் தனது கையில் கூடையொன்றை வைத்திருக்கிறாள்.

இளம் காதலி: வாயேன், சந்தைக்குச் சென்று முட்டைகள் வாங்கி வருவோம்!

இளம் காதலன்: அடேடே! நீ நேசிப்பது போலவே நானும் அவற்றை விரும்புகிறேன்.

அவள் அவன் கையைப் பிடித்துக்கொண்டாள். வலதுபுறத்திலிருந்து அறிவிப்பாளர் ஓடி வந்து, விரைவாகத் தனது இடத்தை அடைந்து, மக்களுக்குப் புறம்காட்டியபடி நிற்கிறார்; இரு அபிமானிகளும் அவருக்குப் பிறகு ஒருவர் இடதுபுறத்திலிருந்தும், இன்னொருவர் வலதுபுறத்திலிருந்தும் வருகின்றனர். அபிமானிகள் வலதுபுறத்தினூடே வெளியே செல்லவிருந்த காதலர்களை இடித்துவிட்டனர்.

ஆண் அபிமானி: மன்னிக்கவும்!

இளம் காதலி: அடடா! மன்னிக்கவும்!

பெண் அபிமானி: மன்னிக்கவும்! அடடா! மன்னிக்கவும்!

இளம் காதலி: அடடா! மன்னிக்கவும், மன்னிக்கவும், தயவுசெய்து மன்னித்துவிடுங்கள்!

ஆண் அபிமானி: மன்னிக்கவும், மன்னிக்கவும், மன்னிக்கவும், அடடா! தயவுசெய்து மன்னித்துவிடுங்கள்!

இளம் காதலன்: அடடா! மன்னிக்கவும், அனைவரும் மன்னிக்கவும்!

இளம் காதலி: (இளம் காதலனிடம்:) வாருங்கள், பிரபுவே! (இரு அபிமானிகளிடம்:) எந்தத் தீங்கும் நடக்கவில்லை! (தன் காதலனின் கைப்பிடித்து அவனை வெளியே இட்டுச் செல்கிறாள்.)

அறிவிப்பாளர்: (பின்-மேடையைப் பார்த்தவாறு) தலைவரை முன்னோக்கி தள்ளுகிறார்கள், பின்னோக்கி தள்ளுகிறார்கள், இப்போது அவரது கால்சட்டைக்கு இஸ்திரி இடுகிறார்கள்! (இரு அபிமானிகளும் தங்கள் பழைய இடத்திற்கே வந்துவிட்டனர்.) தலைவர் புன்னகைக்கிறார். அவர்கள் அவருடைய கால்சட்டையை இஸ்திரி இடுகையில் அவர் நடக்க ஆரம்பிக்கிறார். மலர்களையும் ஓடையில் விளையும் கனிகளையும் சுவைக்கிறார். அவர் மரங்களின் வேர்களையும் சுவைக்கிறார். சிறு குழந்தைகளைத் தன்னிடம் வரும்படி அவர் வற்புறுத்துகிறார். ஏனென்றால் எல்லோரிலும் அவருக்கு நம்பிக்கை உண்டு. காவல்துறைப் படையைத் துவக்கி வைக்கிறார். அவர் நீதியரசருக்கு மரியாதை செலுத்துகிறார். வெற்றி வீரர்களுக்கும், தோற்கடிக்கப்பட்டவர்களுக்கும் வணக்கம் செலுத்துகிறார். இறுதியாக அவர் கவிதையொன்றை வாசிக்கிறார். மக்கள் மிகவும் நெகிழ்ச்சியடைந்தனர்.

இரு அபிமானிகள்: ஆஹா! ஆஹா! (பின்னர், அழுதபடியே:) அய்யோ! அய்யோ!

அறிவிப்பாளர்: எல்லா மக்களும் அழுகிறார்கள். (மேடையின் இருபக்கத்திலிருந்தும் உரத்த அழுகைகள் கேட்கின்றன; அறிவிப்பாளரும் அபிமானிகளும் கதற ஆரம்பிக்கின்றனர்.) அமைதி! (இரு அபிமானிகளும் அமைதியானார்கள்; மேடையின் இருபக்கங்களிலும் அமைதி நிலவியது.) கால்சட்டையை அவர்கள் தலைவரிடம் திரும்பக்கொடுத்தனர். தலைவர் அதை உடுத்திக் கொள்கிறார். அவர் மகிழ்ச்சியாகத் தெரிகிறார்! வாழ்க! (மேடையின் இருபக்கங்களிலிருந்தும் ஆரவாரங்கள் கேட்கின்றன. இரு அபிமானிகளும் ஆர்ப்பரித்து ஒலி எழுப்புகிறார்கள்; அங்கு என்ன நடக்கிறது என்று சரியாகத் தெரியாததால், எகிறிக் குதித்துப் பார்க்க முயற்சி செய்கின்றனர்.) தலைவர் கட்டை விரலைச் சூப்புகிறார்!

(இரு அபிமானிகளிடம்:) உங்கள் பழைய இடத்துக்கு வாருங்கள், ஏய், உங்கள் இருவரையும்தான் சொல்கிறேன், அசையாதீர்கள், ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள், கூவுங்கள். தலைவர் நீடூழி வாழ்க! என்று.

இரு அபிமானிகள்: (சுவரில் ஒட்டிக்கொண்டபடி. மேலும் கூவுகிறார்கள்) நீடூழி வாழ்க, தலைவர் நீடூழி வாழ்க!

அறிவிப்பாளர்: அமைதியாக இருங்கள். நீங்கள் அனைத்தையும் கெடுத்துவிடுவீர்கள், அதோ அங்கேப் பாருங்கள், தலைவர் வருகிறார்!

ஆண் அபிமானி: (அதே நிலையிலிருந்தவாறு) தலைவர் வருகிறார்!

பெண் அபிமானி: தலைவர் வருகிறார்!

அறிவிப்பாளர்: கவனமாக இருங்கள்! அமைதியாகவும்! அடடா! தலைவர் திரும்பிப்போகிறார்! அவரைப் பின்தொடருங்கள்! என்னைப் பின்தொடருங்கள் அறிவிப்பாளர் பின்-மேடையின் வாயிலுக்குச் செல்கிறார் பிறகு ஓடுகிறார்; இரு அபிமானிகளும் ஆளுக்கொரு திசையாக வலது இடது என வெளியேறுகின்றனர். இரு பக்கங்களிலும் ஆராவாரம் கேட்டுக்கொண்டே இருக்கிறது பிறகு சிறிது நேரத்தில் குறைகிறது. சிறிது நேரத்திற்கு மேடையில் யாரும் இல்லை. இளம் காதலனும் அவனைத் தொடர்ந்து இளம்காதலியும், மேடையின் இடதுபுறத்திலிருந்து வந்து வலதுபுறத்தினூடே வெளியே செல்கின்றனர்.

இளம் காதலன்: (ஓடிக்கொண்டே) உன்னால் என்னைப் பிடிக்க முடியாதே! உன்னால் என்னைப் பிடிக்க முடியாதே!

வெளியே செல்கிறான்

இளம் காதலி: (ஓடிக்கொண்டே) கொஞ்சம் நில்! கொஞ்சம் நில்!

அவள் வெளியே செல்கிறாள். சிறிது நேரத்திற்கு மேடையில் யாரும் இல்லை. பிறகு இரு காதலர்களும் ஓடியவாறு மேடையைக் கடந்து வெளியே செல்கின்றனர்.

இளம் காதலன்: உன்னால் என்னைப் பிடிக்க முடியாதே!

இளம் காதலி: கொஞ்சம் நில்!

அவர்கள் வலதுபுறத்தினூடே வெளியே செல்கின்றனர். மேடையில் ஒருவரும் இல்லை. அறிவிப்பாளர் மீண்டும் பின்-மேடையில் தோன்றுகிறார். ஆண் அபிமானி வலதுபுறத்திலிருந்தும், பெண் அபிமானி இடதுபுறத்திலிருந்தும் மேடைக்கு வருகின்றனர். அவர்கள் மேடையின் மையத்தில் சந்திக்கிறார்கள்.

ஆண் அபிமானி: அவரைக் காணும் வாய்ப்பைத் தவறவிட்டோமே!

பெண் அபிமானி: நம் துரதிர்ஷ்டம்!

அறிவிப்பாளர்: அது உங்கள் தவறு!

ஆண் அபிமானி: நீங்கள் சொல்வது உண்மை இல்லை!

பெண் அபிமானி: ஆம். நீங்கள் சொல்வது உண்மை இல்லை!

அறிவிப்பாளர்: இது என்னுடைய தவறு என்று சொல்கிறீர்களா?

ஆண் அபிமானி: இல்லை, அப்படிச் சொல்லவில்லை!

ஆண் அபிமானி: இல்லை, நாங்கள் அப்படிச் சொல்லவில்லை!

(மேடையின் இருபக்கங்களிலிருந்தும் ‘வாழ்க’ போன்ற ஆரவாரங்களின் கூச்சல் வருகின்றன)

அறிவிப்பாளர்: வாழ்க!

பெண் அபிமானி: அந்த ஓசை அதோ அங்கிருந்து வருகிறது! (அவள் வலதுபுறத்தைச் சுட்டிக்காட்டுகிறாள்.)

ஆண் அபிமானி: ஆம், அந்த ஓசை அதோ அங்கிருந்து வருகிறது! (அவன் இடதுபுறத்தைச் சுட்டிக்காட்டுகிறான்.)

அறிவிப்பாளர்: நல்லது. என்னைப் பின்தொடருங்கள்! தலைவர் நீடூழி வாழ்க!

(அவர் வலதுபுறமாக வெளியேறுகிறார்; இரு அபிமானிகளும் கத்திக்கொண்டே அவருடன் வெளியேறுகின்றனர்.)

இரு அபிமானிகள்: தலைவர் நீடூழி வாழ்க!

(அவர்கள் வெளியேறிச் செல்கின்றனர். சிறிது நேரம் மேடையில் ஒருவரும் இல்லை. இளம் காதலனும் அவனது காதலியும் இடதுபுறத்திலிருந்து வருகின்றனர். இளம் காதலன் பின்-மேடையினூடாக வெளியே செல்கிறான்; ‘உன்னைப்பிடித்துவிடுவேனே!’ என்று சொல்லியபடியே வலதுபுறத்தினூடாக காதலி வெளியேறுகிறாள். அறிவிப்பாளரும் அபிமானிகளும் பின்-மேடையிலிருந்து தோன்றுகிறார்கள். அறிவிப்பாளர் அபிமானிகளிடம் சொல்லுகிறார்:) தலைவர் நீடூழி வாழ்க! (இந்த வாசகத்தை அபிமானிகள் திரும்பச் சொல்கின்றனர். பிறகு, அபிமானிகளிடம் அவர் சொல்லுகிறார்:) என்னைப் பின்தொடருங்கள்! தலைவரைப் பின்தொடருங்கள்! (பின்-மேடையினூடே வெளியே செல்கிறார், இன்னமும் ஓட்டமும் கூச்சலும் தொடர்கிறது:) அவரைப் பின்தொடருங்கள்! (ஆண் அபிமானி வலதுபுறமாகவும் பெண் அபிமானி இடப்புறமாகவும் வெளியேறுகிறார்கள். இந்த முழுநேரத்திலும், மேடையில் நிகழ்பவற்றின் தாளத்திற்கு ஏற்ப ஆரவார பேரொலி சத்தமாகவோ மங்கலாகவோ கேட்கிறது; சிறிது நேரத்திற்கு மேடையில யாரும் இல்லை. பிறகு காதலர்கள் இருபுறத்திலிருந்தும் அழுதபடியே வருகிறார்கள். )

இளம் காதலன்: உன்னைப் பிடித்துவிடுவேனே!

இளம் காதலி: உன்னால் என்னைப் பிடிக்க முடியாதே!

(அவர்கள் ஓடிக்கொண்டே கோஷமிடுகின்றனர்) தலைவர் நீடூழி வாழ்க அறிவிப்பாளரும் இரு அபிமானிகளும் பின்-மேடையிலிருந்து தோன்றி, ‘தலைவர் நீடூழி வாழ்க!’ என்று கோஷமிடுகின்றனர்; இவர்களைத் தொடர்ந்து இரு காதலர்களும் கோஷமிடுகின்றனர். அவர்கள் எல்லாரும் வரிசையாக அழுதபடியே வலதுபுறமாக வெளியேறுகின்றனர். ’தலைவர்! நீடூழி வாழ்க, தலைவர்! அவரைப் பார்த்துவிடுவோம் இங்கிருந்து தெரியும்! உன்னால் என்னைப் பிடிக்க முடியாதே!’ எல்லா வாசல்களினூடேயும் அவர்கள் வருவதும் போவதுமாக இருக்கின்றனர். இறுதியாக, வலதுபுறத்திலிருந்தும், இடப்புறத்திலிருந்தும், பின்-மேடையிலிருந்தும் வந்த அவர்கள் அனைவரும் மேடையின் மையத்தில் சந்திக்கின்றனர். அப்போது இருபக்கத்திலிருந்தும் வரும் ஆரவார பேரொலிகளும் கைத்தட்டல்களும் பயமுறுத்தும் ஒலியாக மாறுகிறது. அவர்கள் ஒருவரை ஒருவர் ஏக்கத்துடன் ஆரத்தழுவுகின்றனர். உச்ச ஸ்தாயில் அழுது கொண்டு , தலைவர் நீடூழி வாழ்க! தலைவர் நீடூழி வாழ்க! தலைவர் நீடூழி வாழ்க!பின்னர், திடீரென்று, அமைதி.

அறிவிப்பாளர்: தலைவர் வருகிறார். இதோ தலைவர். உங்களிடம் வருகிறார்! தயாராக இருங்கள்!

ஆண் அபிமானியும் இளம் காதலியும் வலதுபுறச் சுவரில் ஒட்டிக் கொண்டவாறு நிற்கின்றனர்; பெண் அபிமானியும் இளம் காதலனும் இடதுபுறச் சுவரில் ஒட்டியபடி நிற்கின்றனர். இரண்டு ஜோடிகளும் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆண் அபிமானியும் இளம் காதலியும்: என் அன்பே, என் செல்லமே!

பெண் அபிமானியும் இளம் காதலனும்: என் அன்பே, என் செல்லமே!

இதற்கிடையில், அறிவிப்பாளர் அவரது இடத்துக்கு மீண்டும் வந்தார், மக்களுக்குப் புறம்காட்டியபடி, விழியை அகற்றாமல் மேடையினின்று வெளியேறும் வழியைப் பார்த்தவாறு நிற்கிறார்; கைதட்டல்கள் மந்தமடைகின்றன.

அறிவிப்பாளர்: அமைதி. தலைவர் தனது சூப்பை சாப்பிட்டுவிட்டார். அவர் வருகிறார். அவர் பக்கத்தில் வந்துவிட்டார்.

ஆரவார பேரொலி பல மடங்கு அதிகரிக்கிறது; அபிமானிகளும் காதலர்களும் கோஷமிடுகின்றனர்.

அனைவரும்: வாழ்க! வாழ்க! தலைவர் நீடூழி வாழ்க!

அவர் வருவதற்கு முன் வண்ணத்தாள் துண்டுகள் தூவப்படுகிறது. தலைவர் கடந்து செல்வதற்கு ஏதுவாக, அறிவிப்பாளர் ஒரு பக்கமாகத் திடீரென ஒதுங்கி நிற்கிறார். வண்ணத்தாள் துண்டுகளைக் கையில் ஏந்தியபடி மற்ற நான்கு பாத்திரங்களும் உறைந்து போய் நிற்கின்றனர். ஆனாலும் இவற்றைச் சொல்லியபடி:) வாழ்க! (தலைவர் பின்- மேடையிலிருந்து முன்-மேடைக்கு நடந்து அங்கிருந்து மையப்பகுதிக்குச் செல்கிறார்; பிறகு, அடி விளக்கு பகுதிக்குச் செல்கிறார். தயங்கி நிற்கிறார். இடதுபுறம் நோக்கி அடியெடுத்து வைக்கிறார். பின்னர் ஏதோவொரு முடிவெடுத்தவராக உற்சாகத்துடன் வலதுபுறம் நகர்கிறார். அங்கு அறிவிப்பாளரின் ஆவல் கொண்ட ‘வாழ்க!’ கேட்கிறது. திகைப்பிலுள்ள மற்ற நால்வரின் பலவீனமான ‘வாழ்க’வும் கேட்கிறது. அவர்கள் திகைத்து நிற்கக் காரணம் உண்டு, ஏனெனில் தலைவர் வட்டத் தொப்பியொன்றை அணிந்திருந்தாலும் தலையில்லாமல் இருக்கிறார். இதைச் செய்துமுடிப்பதுகூடச் சுலபமானது: மேலங்கி அணிந்திருந்து அதன் கழுத்துப்பட்டைகள் தூக்கிவிடப்பட்டு, தலையில் வட்டத் தொப்பி வைத்திருப்பதே தலைவராக நடிக்கும் நடிகருக்குப் போதுமானது. மேலங்கி உடுத்தியிருக்கும் தலையில்லாத வட்டத்தொப்பி மனிதன் - இது அநேகமாக மாயத்தோற்றம் போன்றவொன்றையும் சந்தேகத்திற்கிடமின்றி ஒருவிதமான பரபரப்பையும் உருவாக்கியிருக்கும். தலைவர் அங்கிருந்து மறைந்த பிறகு, பெண் அபிமானி இவ்வாறு சொன்னார்,

பெண் அபிமானி: ஆனால்... ஆனால்... தலைவருக்குத் தலை இல்லையே!

அறிவிப்பாளர்: அவர் மேதையாக இருக்கும்போது அவருக்குத் தலையின் தேவை என்ன!

இளம் காதலன்: அதென்னவோ உண்மைதான்! (இளம் காதலியிடம்) உங்கள் பெயர் என்ன?

இளம் காதலன் பெண் அபிமானியிடமும்,

பெண் அபிமானி அறிவிப்பாளரிடமும்,

அறிவிப்பாளர் இளம் காதலியிடமும்,

இளம் காதலி காதலனிடமும்

உங்கள் பெயர் ? உங்கள் பெயர்? உங்கள் பெயர்?

பிறகு, எல்லோரும் ஒன்றாக, ஒருவர் மற்றவரிடம் உங்கள் பெயர் என்ன ?

(திரைச்சீலை விழுகிறது.)

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer