வேறொன்றுமில்லை

கோவர்த்தனன் மணியன்

பகிரு

முதலில் அவர்தானா எனச் சந்தேகம். அவராக இருக்க வாய்ப்பில்லைதான். ஆனால் அந்த நடை, உயரம், எல்லாம் அவர்தான் என்கிறது. ஆனால் அது அவர்தானா என நான் சந்தேகிக்க இரண்டு காரணங்கள்; ஒன்று அவர் தோற்றத்தில் முன்பிருந்த உயரத்திற்கேற்ற மிடுக்கும், நிமிர்வும் இல்லை. இரண்டாவது அவர் வீடு அருகில் இருக்கும் இன்னொரு நகரத்தில் அல்லவா இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு அந்த நகரத்திலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகையில் எவ்வளவு முறை அவர் வீட்டிற்குச் சென்றிருப்பேன். மாதமொரு முறை ஏதாவது ஒரு புத்தகத்தைப் பற்றிய விமர்சனக்கூட்டமோ, விவாதமோ அங்கு நடக்கும். இருபது முப்பது பேர் கலந்துகொள்வோம் அவ்வளவு பேருக்கும் அன்று இரவு உணவும் கூட அவர் வீட்டில்தான் ஏற்பாடாகியிருக்கும். சில இரவுகள் அவர் வீட்டில் தங்கியதும் உண்டு. மோகன் என்னும் என் பெயர் கூட அவர் நினைவில் நன்றாக இருக்கும் என்றே நம்புகிறேன்.

அவர் இந்தச் சிறுநகரத்தில் அல்லது பெரிய கிராமத்தில் என்ன செய்கிறார் அதுவும் நடந்து எங்கே செல்கிறார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவரது நாவல் ‘சுழல்’ வெளியீட்டு விழாவில் பார்த்தது மீண்டும் இப்பொழுது தான் வாய்த்திருக்கிறது. இன்னும் அந்த சந்தேகம் போகவில்லை அவராக இருக்கவே விரும்புகிறேன். எனக்கும் அவருக்குமான இடைவெளி ஒரு இருபது அடி இருக்கும். நான் எனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த தேநீர்க் கடையில் தேநீர் குடித்துக்கொண்டிருந்தேன். கடைக்கு எதிர்ப்புறம் அதாவது சாலையின் மறுபுறம் அவர் நின்று கொண்டிருந்தார். முதலில் யார் எனத் தெரியவில்லை சிறிது நேரம் கடையையே கவனித்துக்கொண்டிருந்தவர் பிறகு கிளம்பி நடக்கத் துவங்கினார்.

அவர் நடக்கத் துவங்கிய பிறகுதான் எனக்குள் மேற்குறித்த எண்ணவோட்டம் எல்லாம் வந்தது. நான் தேநீருக்கான காசைக் கொடுத்துவிட்டு வந்து பார்ப்பதற்குள் வெகுதூரம் கடந்திருந்தார். அவர் வேகமாகவெல்லாம் நடக்கவில்லை ஆனால் அவரது உயரம் அவரை வெகுதூரம் அழைத்துச் சென்றிருந்தது. நான் எனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு பின்தொடர்ந்தேன். அதற்குள்ளாக அவர் அவருக்கு இடதுபுறமாகப் பிரிந்த மண் சாலையில் இறங்கி நடக்கத் துவங்கிவிட்டார். நான் சாலையைக் கடந்து மறுபுறம் சென்று சேரும் சொற்ப நேரத்தில் மீண்டும் வலப்புறமாக வளைந்து ஒரு வீட்டின் இரும்புக் கேட்டைத் தள்ளி கேட்டின் உள்ளே வலது புறமாக இருந்த இன்னொரு அறை மரக்கதவின் பூட்டைத் திறந்துகொண்டிருந்தார். இது யார் வீடு இதை ஏன் திறந்துகொண்டிருக்கிறார் என ஆச்சர்யமாகவும், குழப்பமாகவும் இருந்தது. கேட்டின் முன்பாக வண்டியை நிறுத்திய என்னை சுவாரஸ்யமின்றி ஒரு பார்வை பார்த்தார். அவரால் என்னை அடையாளம் காணமுடியவில்லை.

கேட்டைத் தள்ளி உள்ளே சென்று “சார் வணக்கம் நான் மோகன்” என்றேன்.

“நீங்க என் மாணவரா, வாசகரா?” என்றபடி கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார்.

அவர் அழைக்காமலே நானும் உள்ளே சென்றேன், “நான் வாசகர் தான் சார், முன்னாடி வீட்டு மாடில இலக்கியக் கூட்டம்லா நடத்துவீங்கல்ல சார் அதுக்கெல்லாம் வந்திருக்கேன் சார்”

“ஓ, அது ரொம்ப முன்னாலயல்ல “

“ம், இருக்கும் சார் பத்து வருசம் முன்னாடி நான் ஜி.கெ.ஜி. ஆர்ட்ஸ் காலேஜ்ல வேல பாத்தப்போ சார். அங்க ஒரு ரெண்டு வருசம் இருந்தன் சார் அப்போ நீங்க வீட்ல நடத்துன எல்லாக் கூட்டத்துக்கும் வந்திருக்கேன்”

“அங்க சாமியப்பா நகர் வீடு”

“ஆமா சார்”

அந்த அறையில் நாற்காலி என்று எதுவுமில்லை ஒரு கச்சைக் கட்டில் மட்டும் போடப்பட்டிருந்தது அந்தக் கட்டிலில் ஒரு பகுதியில் உட்கார்ந்தவர் இன்னொரு பகுதியைக் கைகாட்டினார். நானும் உட்கார்ந்துகொண்டேன்.

“சார் அக்கா, பையன் எல்லாம் எங்க சார்”

அவரது மனைவி, மகன் பற்றித்தான் கேட்டேன். அவர் மனைவியை அக்கா என அழைத்ததாக நினைவு.

“இருக்காங்க நல்லா இருக்காங்க அந்த வீட்ல இருக்காங்க”

வேறென்ன கேட்பது அவராகப் பேச்சைத் தொடரும் முன் நாமாக எதையாவது கிளறி சந்திப்பு அபத்தமாக மாற அனுமதித்து விடக்கூடாது என அமைதி காத்தேன். அப்படியே பார்வையைச் சுழலவிட்டேன். ஒரு டேபிள் பேன், உட்கார்ந்து எழுதும்படியான ஒரு மர எழுது மேஜை இன்னொரு புறத்தில் ஒரு ஐந்து ஐந்தரை அடி உயரத்தில் இரண்டு இரும்பு ரேக் அதன் செல்ப்கள் முழுக்க புத்தகங்கள். குறைந்தபட்சம் ஒரு ஐநூறாவது இருக்கும். அறையின் ஒரு பகுதி தடுக்கப்பட்டு சமையல் அறை போல காட்சியளித்தது. அது சமையல் அறை என்பதற்கு அந்த அறையில் இருந்த பாத்திரம் கழுவும் தொட்டி ஒன்று மட்டுமே சாட்சி மற்றபடி சமையலுக்கான எந்த உபகரணங்களும் இல்லை. எழுந்து ஒரு பிளாஸ்டிக் கேனிலிருந்து தண்ணீரை ஒரு குவளையில் சரித்து எனக்குக் கொடுத்தார்.

“இப்பொ என்ன செய்றீங்க”

“காலேஜ் ப்ரொபசர்தான் சார்”

“ அரசாங்க கல்லூரியா?”

“இல்ல சார் தனியார் தான்”

“ஒன்னும் தர மாட்டானே”

“போதும் சார் அப்படியே ஓடுது “

“சீக்கிரமா அரசாங்க கல்லூரிகள் பக்கம் போகப் பாருங்க”

“பாக்கனும் சார்” என்றேன்.

அவர் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியராகத்தான் இருந்தார். ஒருவேளை ரிட்டயர் ஆகியிருப்பாரோ? பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை ஒரு சந்தர்ப்பத்தில் அவருக்கு ஒரு ஆன்லைன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தரும்பொழுது நாற்பத்தி ஐந்து என அவரது வயதைக் குறித்ததாக நினைவு. அப்படியென்றால் இன்னும் ஓய்வு பெற மூன்று ஆண்டுகள் இருக்கிறது. ஒருவேளை விஆர்எஸ் எதுவும் வாங்கி எழுதுவதற்காகத் தொந்தரவில்லாமல் தனிமையில் இருப்பாரோ. ஆம் அப்படித்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வந்தேன்.

“உங்க பேர் என்ன சொன்னீங்க” என்றார்

“மோகன் சார்”

“மோகன் டீ சாப்பிடப் போலாமா”

“ போலாம் சார்” இருவரும் எழுந்து வெளியே வந்தோம். அப்போதுதான் கவனித்தேன் வெள்ளையில் நீலக்கோடுகள் போட்ட லுங்கி ஆழ்ந்த மர நிறத்தில் ஒரு முழுக்கைச் சட்டை. முன்பு அவர் மடிப்புக் கலையாத சட்டை பேண்டில்தான் இருப்பார். இப்பொழுது அந்த சட்டையில் மடிப்பு இருந்ததற்கான சுவடே இல்லை. வண்டியில் ஏற்றிக்கொண்டு முன்பு தேனீர் அருந்திய கடைக்கே சென்றேன்.

பாதி வழியில் கேட்டார், “நீங்க சாப்ட்டீங்களா”

“ இல்ல சார் “

“அப்போ டீ வேண்டாம், சாப்பாடே சாப்பிட்டுடலாமா?”

“ஸரீங் சார்” பக்கத்தில் ஒரு ஹோட்டலைப் பார்த்ததாக நினைவு அதை மனதில் வைத்துச் சிறிது தூரம் ஓட்டிச்சென்றேன். அங்கு வண்டியை நிறுத்தியவுடன்

“ஓ... இங்க வந்துட்டீங்களா?” என்றவர் “இன்னும் கொஞ்சம் தூரம் இதே ரோட்ல போனா ஒரு மில் வரும். அங்க ஒரு மெஸ் இருக்கும். அதுல சாப்பாடு நல்லாருக்கும்”

“செரீங்க சார் அங்கயே போலாம்” என வண்டியை ஸ்டார்ட் செய்து அவர் சொன்ன கடைக்கே வண்டியை விட்டேன்.

கடையில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. இரண்டு சாப்பாடு சொன்னோம். கேட்டு வாங்கி நன்றாகச் சாப்பிட்டார். நான் மெதுவாக அவர் சாப்பிட்டு முடிக்கும் வரை இலையை மூடி வைத்துவிட்டு உட்கார்ந்திருந்தால் நன்றாக இருக்காது என்பதால் கொஞ்சம் சாப்பாட்டை இலையில் வைத்து நிரண்டிக்கொண்டிருந்தேன். இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியில் வந்தோம். அவர் கை கழுவி முடிக்கும் முன்பாகவே நான் சாப்பாட்டிற்குப் பணம் கொடுத்துவிட்டேன். அவர் அதைப் பற்றிய எந்த அக்கறையும் இல்லாதவர் போலத் தள்ளிப்போய் பக்கத்திலே இருந்த பெட்டிக்கடை ஒன்றில் வெற்றிலைப் பாக்கு வாங்கிப் போட்டுக்கொண்டிருந்தார்.

அங்கு இருந்த மர பெஞ்ச் ஒன்றில் அமர்ந்தவர் என்னை “வாங்க உட்கார்ங்க” என்றார்.

நான் உட்கார்ந்தவுடன் “என்னைப் பார்த்ததிலே உங்களுக்கு ஒன்னும் சங்கடம் இல்லையே? ரொம்ப செலவு வெச்சிடலையே”

“சேச்சே அதெல்லாம் ஒன்னுமில்ல சார் என்றேன்”

“இப்ப என்ன சார் எழுதிக்கிட்டு இருக்கீங்க?”

“அஞ்சாறு வருசமாவே ஒன்னும் எழுதுறதில்ல மோகன்”

நான் அதிர்ச்சி அடைந்தேன். ஒரு காலத்தில் எவ்வளவு பெரிய எழுத்தாளர் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர். அவரைத் தெரியும் என்பதையும் நேரடிப்பழக்கம் உண்டு என்பதையும் எவ்வளவு பெருமையாக என் சக நண்பர்களிடத்திலும், கல்லூரியிலும் எனது தகுதிகளில் ஒன்றைப் போலச் சொல்லியிருப்பேன்.

“ஆனா கடந்த கொரானாவுக்குப் பிந்தைய புத்தகக் கண்காட்சிகள்ல கூட உங்க புத்தகங்கள் நிறைய இருந்துதே சார்.”

“முன்னாடி வந்ததுதான் அச்சடிச்சு வித்துக்கிட்டே இருக்காங்க அவங்க முடிவு தான… ம்”

“ விஆர்எஸ் வாங்கிட்டீங்களா சார்”

“இல்லையேப்பா”

“இப்போ எந்த ஸ்கூல்ல சார் இருக்கீங்க? “

"நீங்க என்னைப் பாத்து ஒரு எடத்துல இருந்து அழைச்சுட்டு வந்தீங்கல்ல அந்த ஸ்கூல்லதான்”

“ … அது வீடு சார்”

“ ஸ்கூல்லாம் போறதில்லைங்க”

“...ஸார்”

“ராமனூர் ஸ்கூல்ல இருந்தப்போ ஒரு ஹெட்மாஸ்டர் இருந்தான் அவன் பேரு கூட மறந்துபோச்சு, சல்லிப்பய, ரொம்ப பொறாமை புடிச்சவன். எந்நேரமும், நா எடுத்த தமிழ் பாடம் தான் பசங்க ஒழுங்கா படிக்கிறதில்ல, வாத்தியார் கதை எழுதுறது, புக்கு போடுறேன்னு சுத்திக்கிட்டு இருந்தா பையன் எப்படி படிப்பான்னு பேசிக்கிட்டே இருப்பான். நான் நடத்துற வகுப்பைக் கவனிச்சுக்கிட்டே இருப்பான். ஒரு தடவை சண்டையே வந்துருச்சு. பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வுல நான் வகுப்பெடுத்த பிரிவு மாணவர்களோட விடைத் தாள்களை இன்னொரு பிரிவுக்கு வகுப்பெடுத்த ஒரு பொம்பளை டீச்சர்கிட்ட கொடுத்து திருத்த சொல்லீட்டு அந்தம்மா வகுப்பு தாள்களை என்னைத் திருத்தச் சொன்னான், அந்தம்மா நெறையப் பேரை வேணும்னே பெயிலாக்கிட்டா. அது அவனுக்கு என்னை மட்டம் தட்ட வசதியாப் போச்சு. அடுத்து வந்த மாதிரிப் பொதுத்தேர்வுல தமிழ் பரிட்சைக்கு மொத நாள் கேள்வித்தாளை எடுத்து இந்தாங்கடா படிச்சுக்குங்கடான்னு குடுத்துட்டேன். பரிட்சைக்கு மொத நாள் கேள்வித்தாள் கிடைச்ச சந்தோசத்துல அவனுங்க ஊரெல்லாம் டமாரம் அடிச்சுட்டானுக. பக்கத்து ஊர்ப் பள்ளிக்கூட பசங்க எல்லாம் வந்து கேள்வித்தாளை ஜெராக்ஸ் எடுத்துட்டுப் போறானுக. பள்ளிக்கூடம்லா ஒரே பரபரப்பு பசங்கள புடுச்சு மெரட்டுனதுல நான் தான் குடுத்ததா சொல்லீட்டானுக. அத அவனுங்ககிட்ட எழுதி வாங்கிட்டான், அந்த ஆளு. அப்பவே டிஇஒ கிட்ட கம்ப்ளெய்ண்ட் செஞ்சு பரிட்சையை நிறுத்திட்டான். என்னைய விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி டிஇஒ கிட்ட இருந்து லெட்டர் ஸ்கூலுக்கு வந்துருச்சு. நான் அந்த மயிராண்டியைப் போய் பாக்கவே இல்ல விசாரணை முடிஞ்சு அவன் அனுமதி தர்ற வரைக்கும் எனக்கு விடுப்புன்னும் அதுவரைக்கும் சம்பளம் சலுகை எதுவும் இல்லைன்னு அவன் எழுதி வெச்சுட்டுப் போய்ட்டான். நானும் அதுல இருந்து பள்ளிக்கூடப் பக்கம் போறதில்லை. என்ன நல்ல கதை மாதிரி இருக்கா மோகன்” என்றார்.

அதிர்ச்சியிலிருந்து விடுபடவே இல்லை. ஆனாலும் அந்தக் கேள்வியை நான் கேட்டாக வேண்டும் அல்லவா. நீங்க ஏன் சார் விசாரணைக்குப் போகல? என்றேன் வேறென்ன மோகன் பைத்தியம்தான் என்றார். அதற்கு மேல் நான் கேட்கும் கேள்விகள் என் எல்லைக்கு அப்பாற்பட்டவை அமைதியாக போலாமா சார் என்றேன். எதும் அவசர வேலை இருக்கா மோகன் என்றார். நல்ல ஒரு உரையாடலுக்குத் தயாராய் இருப்பார்போல. ஒன்னும் அவசரமில்லைங்க சார் என்றேன். தலையை உயர்த்திப் பார்த்தார் பெட்டிக்கடைக் கிழவி முக்கால் தூக்கமும் கால் விழிப்புமாக எங்கள் இருப்பைப் பற்றிய எந்த அக்கறையுமில்லாமல் இருந்தாள். முக்கியமான இன்னொரு கேள்வியை நான் கேட்க வேண்டியிருந்தது. ஆனால் கேட்கலாமா? கேட்பது என்று ஆகிவிட்டது கேட்டுவிடுவோம்.

“வீடு, அக்கா, தம்பி எல்லாம் சார்?”

“ஒரு மூனு மாசம் அமைதியா இருந்தா, இப்படியே இருந்தா என்ன செய்யறது சாப்பாட்டுக்கு என்ன வழி என்ன வழின்னு கேட்டுக்கிட்டே இருந்தா. என்னோட புத்தகம் போடுற எல்லாப் பதிப்பகத்துக்காரங்கள்ட்டயும் பேசி முடிச்சி வெளியில கொடுத்திருந்து எல்லாமா ஒரு அஞ்சு லச்சத்த அவளுக்கு குடுத்துட்டு அடுத்த நாளே இங்க வந்துட்டேன். நண்பர் ஒருத்தரோட வீடுதான் இது. அதுல பாருங்க வர்ரதுக்கு மொத நாள் சோத்துக்கு வழிதானே வேணும் இரு பண்றேன் பாருன்னு ஒரு லச்ச ரூபாய்க்கு அரிசி மூட்டையாவே எடுத்துப் போட்டு வீட்ட நெரப்பி தின்றீனுட்டு வந்துட்டேன். பையன் அம்மா சொன்னா அப்படியே கேப்பான். இப்போ படிச்சு முடிச்சு வேலைக்கிப் போயிருப்பான்”

“அவங்களும் வந்து பாக்கலையா சார்?”

“வந்தா உத்தரத்துல தொங்கீருவன்னு சொல்லீட்டேன். என்னை நல்லாத் தெரிஞ்சவங்க எப்படி வருவாங்க”

“ஒரு டீ சாப்பிடலாமா மோகன்”

“சாப்பிடலாம் சார்”

இரண்டு மணி நேரத்திற்கு முன் நான் டீ குடித்த கடையின் பெயரைச் சொல்லி அங்கு போகலாம் என்றார். பெட்டிக்கடைப் பாட்டியை எழுப்பி பணம் கொடுத்துவிட்டு வண்டியில் திரும்புகையில் மெதுவாகக் கேட்டேன்

“செலவுக்கெல்லாம் எப்படி சார்” என்றேன்.

“ஜென்ம தினம் பஷீரோட கதை படிச்சிருக்கீங்களா?”

“படிச்சிருக்கேன் சார்”

“அதுமாதிரிதான் போகுது, பக்கத்துல சலூன் கடை வச்சிருக்குற பையன் தினம் பனிரெண்டு மணிக்கு அந்தப் பேக்கரிப் பக்கம் போனா டீ வாங்கிக்கொடுப்பான். நாலஞ்சு கொழந்தைங்களுக்கு டியூசன் எடுக்குறேன் எப்படியும் மாசத்துல பாதி நாள் சாப்பிட்ருவேன் “ என சொல்ல “சார்” என்றேன்.

“தனியா வந்து ஒரு வருசம் எழுதிக்கிட்டிருந்தேன் அப்புறமா விட்டுட்டேன்” அவர் யாரிடத்திலோ சொல்வதைப்போல சொல்லிக்கொண்டிருந்தார். மீண்டும் தேநீர்க் கடை டீ குடித்தோம்.

“ஒரு எக் பப்ஸ் சொல்லுங்க” என்றார் பப்ஸைக் கடித்துத் தின்ற படி டீ குடித்து முடித்தார்.

“சார் மறுபடியும் எழுதலாமல்ல சார்… சார்”

வேறெதையோ உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“மோகன், அது ரஸமலாய்தான முன்னாடி இதெல்லாம் எல்லாக் கடைலயும் கிடைக்காது இப்போ தினம் பாக்குறேன்” என்றார்.

பில்லைக் கொடுக்கும்போது இரண்டு ரஸமலாய்களைப் பார்சல் செய்து தரச்சொல்லி வாங்கிக் கொண்டேன். வீட்டில் இறக்கிவிட்ட பின் ரஸமலாய் பார்சலையும் ஐயாயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்தேன். ரஸமலாய் பார்சல்களை வாங்கிக்கொண்டவர், பணம் வேண்டாம் என மறுத்தார். வற்புறுத்தி சட்டைப்பையில் திணித்துவிட்டு வந்தேன். எனது செல்பேசி எண்ணை வாங்கிக்கொண்டார். ஒரு மாதம் கழித்து போன் செய்தார். அவரது நண்பரின் போனிலிருந்து பேசுவதாகச் சொன்னவர்

“வேறொன்னுமில்லை இந்த மாசம் ….ல் சிறுகதை ஒன்னு எழுதியிருக்கேன் படிச்சிட்டு சொல்லுங்க” என்றார்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer