மரணத்தை அவ்வாறு செய்தனர்
ஒரு மரண வீட்டில்
ஒருவர் பத்தியை இறந்தவர் தலை மாட்டில் வைத்தார்
இன்னொருவர் சரிந்து விழுந்த மாலையைச் சரி செய்தார்
ஆளாளுக்கு ஒரு வேலையைச் செய்துகொண்டிருந்தவர்கள்
தங்களுடைய மரணத்தினை
கீழே விழுந்திடாதவாறு ஒரு கையால் கெட்டியாகப் பிடித்திருந்தார்கள்
ஏன் எப்பொழுதும் போல இருக்கலாம்
மிகவும் கஷ்டமாக இருந்தால் தன்னுடைய முகத்திலிருக்கும் அமைதியை
வாசித்துக்கொண்டிருங்களென இறந்தவர் வந்து எல்லாருக்கும்
அறிவுரையைப் பொழிந்தார்
எல்லாரும் கைகளை விலக்கி சாதாரணமாகி
இறந்தவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர்
அதில் குடிகொண்டிருந்த அமைதியை
ஆளாளுக்குத் தங்கள் முகத்தில் வைத்துச் சோதித்துப் பார்க்க
அது யாருக்குமே வரவில்லை
இறந்தவர் கால் பெருவிரல்கள் இரண்டும் ஒட்டியிருப்பது போல
தன்னுடைய கால் பெருவிரல்களைக் கூட்டத்தில் ஒருவர் ஒட்டி வைத்தார்
உடனே எல்லாரும் அவசர அவசரமாக
ராட்டினம் உயரச் செல்லுகையில் முகத்தைக் கைகளால் பொத்துவது போல
இரண்டு கைகளை வைத்து அவரவர் மரணத்தினைப் பொத்திக்கொண்டனர்.
ஆமென்
நன்றாக ஏந்தலாக இருப்பதால் வந்த சிக்கல்
கழுத்துக் குழிக்குள் அமுங்கியிருந்தால் இது நடந்திருக்காது
தனியாக வேறு துருத்திக்கொண்டு நிற்கிறது
அங்கு வேறெதுவும் வளர்ந்து தொந்தரவாகவும் இல்லை
நல்ல போதுமான இடம் வாய்த்துள்ளது
ஒரு சிறிய கவர்ச்சியும் லேசாக மிளிர்கின்றது
மெல்லிய வன்முறைக்குத் துணிகின்றவர்கள் அதனால்
கன்னத்தில் பளாரென ஒன்றை விடுகிறார்கள்
கன்னமே இதைக் கேட்டு வாங்கிக்கொண்டது
கன்னமே தான் இதற்கு முழுப்பொறுப்பு
கன்னத்தை யார் அப்படியிருக்கச் சொன்னது
யேசு அன்றைக்குக் கோடு போட்டார்
இன்றைக்கு வரை ரோடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள்
என்பதையெல்லாம் நாம் நம்ப வேண்டியதில்லை
நம்பினாலும் யேசுவிற்கென்ன
ஒரு மெல்லிய புன்னகையைத்தான் எல்லாருக்குமாக
பூக்கவிடப் போகிறார்.
மிரட்சி
மரம் எனக்கு லட்சம் வயதாக்கும் என்றது
அந்த மரத்தை விடப் பெரிய ஒரு மரத்தை அதனிடம் காட்டினேன்
என்னுடைய கூற்றை மமதையாகப் புரிந்துகொண்டாய்
எங்களுக்கு லட்சம் வயதாக்கும் என்று அதன் கருத்தை
அது திரும்பச் சொன்னது
இதிலும் மமதை ஒட்டிக் கொண்டுள்ளதே
ஒரு மலையைக் காட்டவா இல்லை உன்னுடைய கூற்றை
திரும்பப் பெறுகிறாயா
மமதை கூடாதே என்ற நல்ல எண்ணத்தில் அதனிடம் சொன்னேன்
இல்லை இல்லை மலையையே காட்டு யாரெனப் பார்த்துவிடுவோம்
என்று குரலை சற்று உயர்த்தியது
அதனுடைய வாழ்க்கையில் திடீரென வந்த மலையை அதனால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லை
இரண்டு மரங்களுக்கிடையே ஒரு மலை வந்து உயரமாக நின்றது
அந்த மலையைப் புரட்ட வேண்டுமென மரம் நினைத்துவிட்டது
அதனால் தேவையில்லாமல் மலையின் வாழ்க்கையில்
ஒரு மரம் குறுக்கே வந்து
தேவையில்லாமல் ஒரு மலை புரண்டது
ஆனால் உண்மையில் மலைகள் மரங்களெல்லாம்
எப்பொழுதும் சாதாரண ஒன்றாக நின்றுகொண்டிருக்கின்றன
அந்தச் சாதாரணவொன்றே திரும்பத் திரும்ப ஒன்று போல
அங்குத் திரும்பத் திரும்ப நடந்துகொண்டிருந்தது
பார்க்க மிரட்சியாக இருந்தது.