சின்னக் கவிதைகள்

கறுத்தடையான்

பகிரு

வாசியின் வாசம்

Karuthadaiyan1
சின்ன ஆசையுள்ளுக்குள் எண்ணமாய்ச் சிறுகணத்தில் துளிர் விட்டதும் 
வேகமான அவ்விழைவு விளைச்செயலிலும் மண்ணள்ளிப் போடுகிறது
சித்துகளில் சிறந்து விளங்கும் சித்தனொருவனின் மந்திரங்களிலொன்றை
கைப்பற்றும் எண்ணமும் அவ்வாறேயெனக்கு முளைவிட்டது
நயந்தும் பயந்தும் நஞ்சுணவிட்டும் எதுவும் பயனற்றுப்போயின
மோதிரமாய் மூன்று சுற்றுச் சுற்றியிருக்கும் பாம்புக்கேயித்தனை
பரிதவிப்புகளென்பதை பதறாமலுணர்ந்தானோ அச்சித்தன்
சிறு கயிறுமொரு நீறும் அணியாதவனின் அவ்வுயிர் மோதிரம்
எனக்குத் தனித்துறுத்தியதில் வியப்பேதுமில்லை
பெருமுயற்சிகளுக்குப் பின்னர் அரைமனதாயதை கைவிட்டேன்
கைவிட்ட பின்பாவது கிட்டுமென்ற நப்பாசையாய் உறுத்தியது
தொலி மினுக்கங்கொண்ட நாகமோதிரம் கனவுக்குள் நஞ்சைப் பாய்ச்சின
மோதிர விரலிலிருந்து பாம்பு டிஸ்கோ இரப்பர் பேண்டாய்  விரிந்தது 
வேளை பார்த்தெட்டி கட்டைவிரலைத் தவ்வி கடித்ததும்
அதனிரு கண்களிருந்தும் ஒருநிறயிரு கடுவன் பூனைகள் தவ்வின
கைக்குழந்தையுடன் வந்த பெண்ணின் சீலையையவை கவ்வின
ஒருகையால் குழந்தையையும் மறுகையால் சீலையையும் பாதுகாத்தாள்
ஓடியுதவி செய்யும் முன்னே அக்கனவு தெளிநீரை மறைக்கும் நுரையானது
மறுநாள் அச்சித்தன் வாய் திறவாமலே என்னிடமொரு வாக்கு கேட்டான்
கைப்பற்றும் தீயயெண்ணம் கைவிடுவதாய் ஒப்புக்குக் கையடித்துச் சொல்லவும்
சித்தன் உள்ளங்கைத் தீண்டலில் வௌமெடுத்த நாகம் விரலைத் தீண்டியது
நஞ்சு மணிக்கட்டைத் தாண்டு முன் இரு கடுவன் பூனைகளும் 
சதையைப் பிறாண்டிப் பிறாண்டி பதம் பார்க்கத் துவங்கின
மேனியெங்கும் பொங்கும் குருதியைத் துடைத்துக் கொண்டே
விரைவிலிக் கனவும் கலையுமென உறை குருதியாய் 
பன்னெடுங் காலமாகத் தளராது காத்தோ காத்திருக்கிறேன்.

குடும்ப அட்டையெண் AAY 001

Karuthadaiyan2
சின்னத் தொடையிடுக்கில் கை வைத்துறங்குமச் சிறுவன்
வளர்ந்ததும் பிறவிக்குணத்தை மட்டை வைத்துக் கட்டமுடியாமல்
தனக்கொரு பெண்ணைத் தேடிக்கொள்கிறான்
தலையணையைக் கட்டிப் பிடித்தபடியுறங்குமச் சிறுமியின்
வளையாத அப்பண்புக்காய் பெருந்தொகையீடாகத் தந்தொரு ஆணை 
பதிலீடாக விலைக்கு வாங்கித்தருகிறார் தந்தை 
தனித்திருக்கும் நாய் குரைக்குமோ கடிக்குமோவென
இரு நாய்களையும் இணைக்குமச் செயலால்
அவ்விரண்டையும் அதுகளுக்குள்ளே செய்கின்றன
விதிவிலக்கான விலகலில் பிறன்மனையும் நெடுநாட்கள்
நீடிக்காத காரணத்தால் தடுப்பூசியற்ற தயக்கங்களை
உடைக்குமக் கணத்தில் வெறிகளும் கடிகளும்
வினயமாக்கப்படுகின்றன விளையாட்டாய்
அடுக்குமருமை உடைக்கும் நாய்க்கு தெரியாததால்
அடைக்கண்ணவதியில் முடக்குமிருவரையும்
ஏழிழைப்போட்டு ஏங்கி வாங்கிய பேறுகாலத்திலவள் 
பெற்றயிருபால் குழந்தைகளும் வளர்பிராயக் கிளர் முறையில்
வழிவழியாய் பெற்றுவந்த பழக்கங்களைச் செய்கின்றனர்
மகளையும் மகனையும்  மருவி நோக்கும் பெற்றோரால்
பெறுமதிப்புக் கூடியும் உறுமதிப்புக் குறையாத சந்தைகள்.

கவிதையின் உடற்கூற்றியல்

Karuthadaiyan3
சின்னமேதுமற்று தோன்றிய கணமிருந்தே
இலங்குகின்ற கவிதையென்பது
உப்புத்தாளால் முகந்துடைப்பது
நகைத்தபடியே நரம்பையறுப்பது
கற்பனையுறுப்பில் களி கொள்வது
கூரூசியை கண்ணிலிறக்குவது
உறவுகள் முகஞ்சுழிப்பது
கொதியிரும்பாய் தனித்திருப்பது  

கவிதையென்பது                           
நறுக்கப்பட்ட விரல்கள்
குவிந்தெழும் வெடிப்புகைகள்
உடற்வேட்கையின் உயிர்த்துடிப்பு
இமைகளின் அதிவுயர் பயன்பாடு
வெக்கை தணிக்கும் காற்று
நெருப்பை வாங்கும் காரணி
பிய்ந்த உள்ளீட்டுச் சொற்கள்

மேலும் கவிதையென்பது
படர்தாமரையின் வடிவங்கள்
அரிக்கப்பட்ட கரைகள்
புண் பத்திய மேலுகள்
புலப்படாத் துரோகங்கள்
நிறை போதையின் வாநீர்
வறுகடலையின் மணம்
பிரண்டையுப்பின் துவர்ப்பு

அப்புறம் கவிதையென்பது
தெரிந்த பெண்ணின் புன்னகை
தீட்டி மறையும் சொற்சித்திரம்
கனவுகளின் கடுஞ் சஞ்சரிப்பு
தனிப்பட்ட முறையில் சீரழிவது
தன்னாலேயே நெறிபடுவது
பிறரறிவரென எவருமேயெண்ணுவது

மேலும் கவிதையென்பது
அளவு கடந்த மதிமயக்கங்கள்
அதனார்வலர்களை தூண்டும் கதிகள்
புரிபடா தன்மையில் புலன்கள் நெறிபடுவது
எக்காலத்திலும் குறுங்குழு மண்ணள்ளிப் போடுவது
தெளிவற்ற வழியிலே நிலைக்கச் செய்வது
வழியுற்றும் அதிலேயே திளைக்கச் செய்வது

மென்மேலும் கவிதையென்பது
சலிப்பு மேலிடுமிரவுகள்
குதிகாலின் உயர்வழுத்தம்
செறிவூட்டிய உயிரிருப்பு
நெஞ்சுக்குள் சுடும் பொங்கச்சோறு
வறுபடும் உளுந்தின் மணம்
வெட்டவெளி மின்னல்
வேவு பார்க்கும் சன்னல்

அய்யா கவிதையென்பது
வரவழைத்த வெஞ்சினம்
தெளிவற்றவுணர்வின் அலைவு
மறைந்திருக்கும் புதை மணல்
கொதிப்பேறும் சிறு மூளை
மரிப்பதற்கெனவே பிறக்குமுயிரி 
இடையிடையே வாழும் தன்மை
நாட்பட்டு படருமுள்ளாடைத் தடம்

மேலும் கவிதையென்பது
இனங்கெட்ட கழுதைக்கில்லா ஏனம்
குணங்கெட்ட மாட்டுக்கற்ற கூளம்
வெங்கம்பயலுக்கு வாய்த்த யோனி
உத்தம பரத்தையின் உற்சவம்
சொற்ப காலங்களின் அற்பம்
பட்டதனால் பதறும் மனம்
இட்டதனால் இடறுரும் கரம்

மென்மேலும் கவிதையென்பது
இன்னதுதானென்று உறுதியாக
ஒரு கூதியானுக்குங் தெரியாது.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer