மொழியாக்கக் கவிதைகள்
இறைவா, வேளை வந்துவிட்டது
மாபெரும் கோடை கடந்து போய்விட்டது
இப்போது உன் நிழலை சூர்யக்கடிகைகளின் மேல் விழச் செய்
புல்படுக்கை மேல் காற்றுச் சுதந்திரமாய்ச் சுழலட்டும்
மரங்களின் மீது கனிகளைப் பெருகக் கட்டளையிடு
அவற்றுக்குத் தந்தளி
இன்னும் சில வெதுவெதுப்பான ஒளி ஊடுருவும் தினங்களை
முற்றிக் கனிய அவற்றைத் தூண்டு
இறுதி இனிமையைக் கனத்த மதுவாகும்படி சாறாக்கு
இப்போது வீடற்றவர் எவரோ அவர் என்றும் கட்டமாட்டார் ஒன்றை
எவர் ஒருவர் தனியாய் இருக்கிறாரோ அவர் தனியாகவே இருப்பார்
காத்திருந்து, வாசித்து, மாலையின் ஊடாய் நீண்ட கடிதங்கள் எழுதுவார்
சாலை நடைபாதைகளில் பெரும் விருட்சங்களினடியில்
இலைகள் வீழ்ந்து காற்றடித்துச் செல்லும் சமயம்
ஓய்வின்றி மேலும் கீழுமாய்த் திரிந்தலைவார்.