அன்புடையீர் வணக்கம்.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகம் பலி கொண்ட உயிர்கள் இத்தோடு ஏழு என்கிறதொரு செய்தி.
பள்ளிக்கட்டணம் கட்டாத பிழைக்கு இரண்டாயிரத்து ஆறில் இதே பள்ளி பதினொரு வயதே நிரம்பிய மாணவனைக் கொன்ற வன்கொடுமைக்கு எதிராக இடதுசாரி தோழர்கள் போராடியதை தமிழகமே அறியும்.
நெறிகெட்ட நீசர்களிடம் நீதி எதிர்பார்த்து சட்டத்துறையும் நீதித்துறையும் பாய்கிற மாட்டின் முன்பு வேதம் படித்துக்கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் இந்த விஷயத்தில் ஆதாயந்தேடி அரசியல் பண்ணி விளையாடாமல் அதிகாரத்திலிருப்போரும், சாமானியர்களும், ஊடகங்களும் சமூக நீதி விழைவோர் யாவரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் துயர் துடைக்கும் அருவினை ஆற்றவேண்டும்.
ஊக்கமும் உயிர்ப்பும் அற்ற படைப்புகளை ஒரு பிராணாவஸ்தையோடு மணல்வீடு இதழிலோ மற்றும் பிற அதன் வெளியீடுகளிலோ இனி பிரசுரிப்பது இல்லையென்று முடிவெடுத்திருக்கிறோம்.
இலக்கியம் கருதுகிற பேர்களிங்கு எவருமிலர். சூழ இருக்கிற தட்டோட்டக்காரர்களோடு ஓடுவதாக இல்லை.
எதிர் வினையல்ல வினையே ஆற்றவொண்ணாத பேடுகள் நிறைந்த தளமாகிவிட்டது நமது இலக்கிய களம்.
இங்கு மலிந்திருப்பவர்கள் பெரு வயிறு கொண்டதை அறியாமல் சீமந்தம் வைப்பவர்களும் காற்படி அரிசி அன்னதானத்திற்கு விடிய விடிய கொட்டுமுழக்கு போடுபவர்களுந்தான்.
படைப்பை பொதுவில் வைக்கும் திராணி இல்லாத கோழைகள் இன்றைய பெருமை பீற்றல் கலயங்கள்.
கூடாரம் தாண்டி ஒரு படைப்பு, ஒரு பிரதி வெளியில் செல்வதில்லை அந்தரங்கத்தில் தங்கள் காதலிகளுக்கு அல்வா கொடுப்பதைப்போல இவர்கள் ஓனர்களுக்கு மாத்திரம்தான் கற்பு நெறி தவறாது முந்தி விரிக்கிறார்கள்.
என் படைப்பு எனது உரிமை என்றவர்கள் கொக்கரித்தாலும் வாசகன் முன் பல்லிளிக்கிறது அவர்களது பாரபட்சம் பாகுபாடு. கருதாத பேர்களிடம் இலக்கியாண்மை எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் நாயமல்ல.
மக்கள் நலம் பேணாது சொந்த ஆதாயங்களுக்காக வரம் கொடுத்தவன் தலையிலேயே கையை வைப்பது போல இன்னல் விளைவிப்பது அன்றி வேறு ஏதும் அவர்களுக்குச் செய்யாத, செய்யவே விழையாத கேடு கெட்ட அரசியல்வாதிகள், அவர்தம் சந்தர்ப்பவாத அரசியல் செயல் நடவடிக்கைகளுக்கு எதிராக அறிவு தளத்தில் இயங்குவோர் அணிதிரண்டுப் போராடுவது எவ்வளவு இன்றியமையாததோ அதே அளவு இன்றியமையாதது தங்கள் TRB மதிப்பீடுகளுக்காக மிகவும் மட்டரகமான, கீழ்மையான பணிகளை செய்யும் வணிக ஊடகங்கள் மற்றும் அவற்றில் அன்றாடம் குப்பைப் போடும் டம்மி பீஸ்களுக்கு பாடம் புகட்டுவது.
முகநூல் இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பயில்வான் ரங்கநாதன் என்பார் அவ்வப்போது காட்சிக் கொடுத்து ஏதாவது உளறிக் கொட்டி கிளறி மூடுவார்.
பாட்டாளிகளின் பாடு கஷ்டங்களையேதோ அவர் அங்கலாய்க்கிறார் என்று வாளாவிருந்தேன்.
அப்புறம் பார்த்தால் மனுஷன் அந்த நடிகை இந்த நடிகருக்கு இத்தனாவது பொண்டாட்டி, இந்த நடிகர் அந்த நடிகைக்கு இத்தனாவது புருஷன் என்று துல்லியமான கணக்கு வழக்குகளை அள்ளி விட்டுக்கொண்டிருக்கிறார்.
இந்தக் கண்றாவிகளை காணச் சகியாமல் நடிகர் பொன்வண்ணன் அவர்களிடம் என்ன தோழர் இப்படி மல்லாந்து படுத்து எச்சில் உமிழ்கிறாரே மனுஷனுக்கு கொஞ்சங்கூட ஈனப்பானம் இல்லையே என்று ஒரு பிராதாக சொன்னபோது இதையே தொழுவாடாக செய்து அவர் வயிறு வளர்க்கிறாரென்றும் இந்த மாதிரி கேவலமான விஷயங்களை வலையேற்ற யூ-ட்யூப்காரர்கள் வாரி கொடுக்கிறார்கள் என்றும் பதிலளித்தார்.
வருமானம் வருகிறதென்று ஒருவர் வகை தொகை இன்றி தனது சகபாடிகளின் அந்தரங்கங்களைச் சபையில் அரங்கேற்றுவது அதையொரு அறிவு விழிப்பில்லாத மந்தை விந்தையாக வேடிக்கைப் பார்ப்பது, அதில் ஒரு சமூக ஊடகம் அத்துமீறுகிறோம் என்ற பிரக்ஞை இல்லாமல் பணம் பண்ணுவது...
சதகோடி மக்கள் புழங்கும் ஒருவெளி தனக்கென்று ஒரு தணிக்கை முறைமையை செயல்படுத்தாமல் இருப்பது எத்துணை பொறுப்பற்றதனம்.
நல்லவேளை திருமதி ஸ்ரீலேகா அம்மையார் கடற்கரையில் வைத்து பயில்வான் ரங்கநாதன் அவர்களை செருப்பு பிஞ்சிடும் என்று கனிந்த தொனியில் எச்சரித்து என் மனப்புண்ணுக்கு மருந்திட்டார். இதுவேளை இது சமயம் அவர்தம் வீரம் போற்றுவோம்.
இங்கேயொரு கட்சி அநியாயத்துக்கு இட சண்டை, வாரிசுச் சண்டை, அதிகாரச் சண்டையிட்டு மண்டை உடைத்துக்கொண்டிருக்கிறது.
சற்றேனும் வெட்கமில்லாமல் அடிப்பட்டுத் துணி பொறுக்குகிறார்கள்.
காரியத்திற்கு காலைப் பிடிப்பதும் காரியம் மிஞ்சினால் கழுத்தைப் பிடிப்பதுமான இழிபிறப்புகளை காசை வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டு நம்மை ஆளச் சொல்லி அவசரம் அவசரமாக அரசுக்கட்டிலில் உக்கார வைத்தோம். (அறிந்தும் கெட்டோம், அறியாமலும் கெட்டோம், சொரிந்தும் புண் ஆச்சுது.)
அதன் பலா பலன்களை இப்போது சாவகாசமாக அனுபவித்து வருகிறோம்.
விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?
உரியவர்களை உரிய இடத்தில் அமர்த்தாததின் அவலம் அந்நிர்வாகத்தின் அடிமட்டம் வரை பாதகம் செய்யும்.
புதியதோர் உலகம் செய்வோம் நாவலில் நாவலாசிரியர் கோவிந்தன் அவர்கள் முன்னோடி ஈழ விடுதலை இயக்கமான பிளாட் அமைப்பின் நசிவுக்கு காரணமாக வைப்பது இதைத்தான்.
விடுதலைக்காக போராடவேண்டிய இயக்கம் ஒரு கட்டத்தில் வாய்க் கால் தகராறு, வரப்பு தகராறு, பங்காளிச்சண்டை இவற்றுக்கெல்லாம் பழி தீர்க்க பயன்படுத்தப்பட்டது.
ஆகையால் அது குறுகிய காலத்தில் பிளவுண்டு சிதறி அடையாளமில்லாமல் அழிந்து ஒழிந்தது.
லட்சிய வேட்கையுள்ள உணர்வாளர்களால் கட்டப்படாத இயக்கம், அமைப்பு, கட்சிகள் இப்படித்தான் உருப்படி இல்லாமல் போகும்.
அங்ஙனமே கம்பளியில் சோற்றைப்போட்டு விட்டு காலாகாலத்துக்கும் மசுரு மசுரு என்று நாம் அலறிப் புடைத்துக்கொண்டே இருக்கவேண்டும்.
இதழில் படைப்புவழி பங்களிப்பு செய்தமைக்கும், இதழ் வெளியீட்டு தாமதத்தை சமித்துக்கொண்டமைக்கும் அனைவற்ற பேர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
இவண்
மு. ஹரிகிருஷ்ணன்