வான்மழை
ஆழ வேரூன்றிவிட்ட
மரங்களுக்குத்தான்
வான்மழை இருக்கிறது
தொட்டிச் செடிகளுக்கும்
தோட்டச் செடிகளுக்கும்
நாம்தான் நீரூற்றவேண்டும்
அனைத்தையும்விட முதன்மையானது
அதுவும் வான்மழையாக
இருக்கவேண்டும் என்பதே.
ஒளிர்கிறது முழு நிலா
ஒளிர்கிறது முழுநிலா
போகுமிடமென் றொன்றில்லாப்
பெருவெளியைக் கண்டடைந்துவிட்ட
பெருங்களிப்புடன்!
கூடிவிட்ட கார்மேகங்களின் கீழ்
கூடிவிட்ட கார்மேகங்களின் கீழ்
ஓர் மவுனம்
மனிதனைத் தவிர அனைத்துயிர்களும்
புரிந்துகொண்டமையும்
மிழற்றவொண்ணா
நெகிழ்ச்சியில் மூழ்கிவிட்டமையுமான
அமைதி
அங்கங்கே மொட மொடக்கும்
மேகத்தின் குரல்களோடு
வீசிவரும் குளிர்காற்றில்
சிலிர்க்கத் தொடங்கிய
மரங்களின் கொண்டாட்டம்
மழை, வெள்ளம், ஊற்று என்பதெல்லாம்
துளிகள் கூடிப் பிறந்தவையும்
பிறப்பவையும்தான் எனும்
இரகசியத்தை உரைப்பதுபோல்
ஊசி ஊசியாய் முத்து முத்தாய்ப்
பொழியத் தொடங்கிவிட்ட மழைத்துளிகள்
இப் பேருயிரோடு
வாழத் தகுதியான பிறவிகளில்
நாங்களும் ஒருவர் எனும்
உறவு நெருக்கம் பூண்டவர்களால்
குறுக்கே குறுக்கே கடந்து செல்லும்
பறவைகள்
மனிதர்களைத் தவிர
நேசமற்ற ஒன்றைக் கூடக் காணமுடியாப் பேரமைதி
பெருங்குறை.
ஒளிரும் பொருள்களெல்லாம்
ஒளிரும் பொருள்களெல்லாம்
தங்கள் அழகை உமிழ்கின்றன
பெருவெளியோ
ஒளிரும் முழு நிலவையே
உயர்த்திப் பிடிக்கிறது
முழுநிலவோ
ஒளிரும் பொருள்களிலேயே
உள்ளம் கரைகிறது.
வானத்தோடு நின்றுவிடவில்லை
வானத்தோடு நின்றுவிடவில்லை
முழுநிலா
வந்து வந்து எட்டிப் பார்க்கிறது அது
சாளரம் தோறும் தோறும்
சலிப்பில்லா நெஞ்சத்தோடு
இந்தக் காதலும் பார்வையும் சந்திப்பும்
எத்துணைக் காலங்களாய்
நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன
நிகழாதவை குறித்த கவலையேயின்றி
காதலின் இரகசியத்தை மட்டுமே காட்டியபடி
நிகழாதவைகள் குறித்த கவலைகள் வேதனைகள்
கண்ணீர் வடிக்கின்றன
கவலைகளற்ற காதல்
கண்ணீரை அறியும் காலத்தில்
கட்டுகிறது
அது தன் தேன்கூட்டை
வானத்து மாளிகையை
கார் மேகங்களை.
அங்கே இருப்பது
இந்த இன்மைக்கு அப்பால்
ஏதுமில்லை
இப்பால் இருப்பதுவே
இந்த உலகம்
எரியும் ஓர் பேரறிவுக் கனவே
இந்த இன்மை என
இந்த உலகும் இன்மையும்
ஒருவரை ஒருவர் தீண்டும் வேளை
ஒரே பெருங்களமாக
பேருயிராக
காதல் ஒன்றே அங்கே இருக்கிறது
காதல் ஒன்றே ஒரே தீர்வாக
காதலின்மையினை எரிப்பவனாக
ஆகக் கடினமானதாகிவிட்ட
மிக எளிமையான ஓர் கண்டடைதலாக
செயல்கள் பிறக்கும் புனிதக் களமாக
பெறு பேறாக
நம் தவறுகளுக்கெல்லாம் இடம் கொடுக்கும்
பெரும் சுதந்திரமாக
தயையாக
தன்னந் தனியாக
நாம் புரிந்தே ஆகவேண்டிய
புன்னகையாக
அது அங்கே இருக்கிறது.