நீண்ட உறவுக்குப் பின்
நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது
சென்றுவிடும் ஒரு காதலன் எனக்கிருந்தான்
அதில் பிரச்சினையில்லை ஆனால்
ஒவ்வொரு முறையும்
அவன் சென்றபின்
அவன் விட்டுச் சென்ற condom
என் பாதத்தில் இடறும்
தூக்கம் கலைந்துவிடும்
தூக்கத்தின் முன்பான அமிழ்தம்
கசந்து போய்விடும்
ஒருமுறை அவனிடம்
தயங்கியபடி சொன்னேன்
“அதை மறக்காமல் எடுத்துப்போட்டுவிடு”
“எதை?”
அவனுக்கு உண்மையில் புரியவில்லை
கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டு
பதில் சொன்னேன்
என் கூச்சத்தை மறைத்துக்கொள்ள
அது ஒரு வழி அதன்பின்
அந்த அறைக்குள்
எந்த அறைக்குள்ளும்
நாங்கள் பார்த்துக்கொள்ளவில்லை
ஒரு நினைவூட்டலில்
வற்றிவிட்ட காதல் நீரூற்றுக்காக
பல இரவுகள் பல பகல்கள்
மோட்டுவளையைப் பார்த்தேன்
அவன் நல்ல காதலன்
மற்றபடி என்னைத் தன் கையில் வைத்துத்
தாங்கிக்கொண்டிருந்தான்
அதன்பின் நான் காதலித்தவர்களுக்கு
நினைவூட்டத் தேவை இருந்ததில்லை
ஆனால் அவர்கள் கைகளில்
பெண்கள் கூட்டங்கள்
நெருக்கியடித்து நின்றுகொண்டிருந்ததால்
நான் இறங்கிவிட நேர்ந்தது.
உறவுக் கலை
கவனமாக
இப்பக்கமும் அப்பக்கமும் பார்த்து
எட்டுத் திசைகளிலும்
உறவுகளைப் பராமரிப்பது
ஒரு அன்றாடக் கலை
ஒரு வாழ்க்கை முறை
அதைச் செய்பவர்கள் மேல்
எனக்குப் புகாரில்லை
அவர்களை எட்டுத் திசைகளிலிருந்தும்
கைகள் பதறித் தாங்குகின்றன
நான் நன்கறிந்த கைகளும்
அவற்றில் உண்டு
ஒரு தண்ணீர் டம்ளரை நான் இடறியதற்கு
என்னை அறைந்த கைகள் அவை
எனக்குத் தெரியும்
இப்போது அமிலம் தெறித்தாலும்
அவை பின்னிழுத்துக் கொள்ளாது
இதற்கெல்லாம் ஒரு தர்க்கம் இருக்கவேண்டும்
என்னால் அந்தத் தர்க்கத்தைக்
கற்பனை செய்ய முடியவில்லை
கொஞ்சம் வருந்தி
கொஞ்சம் மறந்து
எதுவும் எழுதப்படாத
வெற்றுச் சிலேட்டை
என் இதயம் என
எடுத்து மாட்டிக்கொள்கிறேன்.
மற்றதெல்லாம் விஷயமேயில்லை
கவிதை எழுத எனக்கு
நாள் நட்சத்திரம் வேண்டாம்
நேரம் காலம் வேண்டாம்
எனக்கே எனக்கான அறை
மேலதிக வசதிதான்
ஏன், பத்திரிகை வேண்டாம்
பேஸ்புக் போதும்
பூசலார் நாயனார் மனதுக்குள்ளேயே
கட்டிக் காட்டியிருக்கிறார்
விமானத்தையும் சிகரத்தையும்
மதிலையும் திருக்குளத்தையும்
கவிதையின் கோயில்
அவ்வாறே அமைகிறது
ஒரு கவிஞருக்கு வேண்டியதெல்லாம்
உள்ளே
அப்பாலான
கோபுரத்திலிருந்து
அழைக்கப்படும்போது
எங்கே பறந்துகொண்டிருந்தாலும்
திரும்பத் தயாராக இருப்பது மாத்திரமே
ஆனால் அதற்கு நீ
முதலில் ஒரு புறாவாக இருக்கவேண்டும்.