ஜானம்மா டீச்சரும்
ப்ரேம்குமாரி ஜுல்காவும்

அம்பை

பகிரு

மூளைக்கட்டிக்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மீண்டு வந்து வாழ்க்கை மீண்டும் அதன் தடத்துக்கு வந்த சில நாட்களில் ஒரு நாள்தான் அது நடந்தது.

இது தேவர படா
இது யாவ தேவரு?
இது ராம தேவரு.

எங்கிருந்து அந்தக் கன்னடச் சொற்கள் படபடவென்று சிறகசைத்து வரும் புறாக்கள்போல் எழும்பி வந்தன என்று சொல்ல முடியவில்லை. எங்கே அவை இத்தனை நாட்கள் புதைந்திருந்தன என்றும் தெரியவில்லை. நினைவு எங்கே எப்படித் தேங்குகிறது எப்போது வழிகிறது என்றெல்லாம் யோசித்துப் பார்த்தவளுமல்ல. அவள் சமைத்தபின் வீட்டிலுள்ளவர்கள் உண்டு வேலைக்கும் பள்ளிக்கும் விரையும் அன்றாடச் சக்கரத்தில் மனத்தில் இருந்ததெல்லாம் நியமத்தின் விதிகளும் அவற்றின் இறுக்கமும்தாம். வழக்கமாகப் பொங்கலுக்காகச் செய்யும் வீட்டை ஒழிக்கும் வேலைதான். அட்டத்தின் ஏதோ காகிதக்கட்டிலிருந்து விழுந்தது அட்டை பிய்ந்துபோன அந்தக் கன்னடப்பாடப் புத்தகம். கையில் எடுத்தாள். முதல் பாடம்தான் அந்தக் கேள்விகளுடன் தொடங்கும் பாடம். வேறு யுகத்தில் வேறு யாரோ உச்சரித்த சொற்கள்போல் தோன்றியது. சொற்களுடன் சினிமாவில் படத் தலைப்புகள் காட்டும்போது இசைக்கப்படும் பின்னணி இசை போல் பள்ளிக்கூடச் சிறுமிகள் பல சுருதிகளில் சுருதியுடன் ஒன்றியும் விலகியும் உரத்துப் பாடும் பாடல்களின் கலவையான ஒலியும் கர்ணநாதம்போல் செவியில் ஒலிக்க ஆரம்பித்தது. புறாச் சிறகொலியாய்ச் சொற்களும் கூட்டுப் பாடலும் காதைக் குடைந்தபடி இருந்தன. அன்றைய பொழுது காதில் நுழைந்த வண்டுடன்தான் போலும்.

மூளையின் ரத்தக்கட்டிக்குள் கிடந்து சிதறி வந்தவையா இவையெல்லாம்? அந்தச் சிதறல்கள் மேல் படர்ந்த குருதியாய் ஒட்டிக் கிடந்தது ஜானம்மா டீச்சரின் உருவம்.

சிதறல்: ஒன்று

தம்பியை இடுப்பில் இடுக்கிக்கொண்டு அம்மா இவள் கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள, ஒரு கையில் பெட்டியும் ஒரு கையில் சுருட்டிய பாயுமாய் இருந்த அப்பாவுடன் அவர்கள் பெங்களூர் ரயில் மேடையில் இறங்கியபோது அவளுக்கு எட்டு வயதுதான்.

அதற்கு முன்பு இருந்த ஊர் வெறும் வயலும் வெளியுமாய் மனத்தில் இருந்தது. பெங்களூர் பெரியப்பா சிவாஜி நகரில் வீடு பார்த்திருந்தார். அங்கேதான் அப்பாவும் கடை போட்டார். பிரம்புப் பொருட்கள் விற்கும் கடை. பிரம்பு முக்காலி, நாற்காலி, அலங்காரக் கூடை, அவரும் அம்மாவுமாக முடைவார்கள்.

வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் அதிகத் தூரமில்லை என்றார் பெரியப்பா. அவர் அல்ஸூரில் இருந்தார். பெங்களூரில் கல்லுக்குப் பஞ்சமில்லை. பெரிய பெரிய கல் தூண்களுடன் அரண்மனைபோல் வடிவமைக்கப்பட்ட இரண்டு பெரிய கட்டடங்களாகக் கட்டப்பட்ட அந்தப் பள்ளிக்கூடம் முழுவதும் கல்லால் கட்டப்பட்டது. கட்டடங்களுக்கு இடையே அரண்மனை நந்தவனம்போல் தோட்டமும் படிகளும். படி இறங்கியவுடன் பள்ளியின் ஒரு வாசலுக்கு இட்டுச்செல்லும் வீதியுடன் நடுவே கொடியேற்றும் வட்டமேடையுடன் விசாலமான இடம். அடுத்தக் கட்டடத்தின் பின்னே விளையாட்டு மைதானத்துடன் விரிந்துகொண்டே போன புல்வெளி. அந்தப் பள்ளியில்தான் அவளைப் போட்டார்கள்.

பள்ளியில் சேர அப்பாவின் கையைப் பிடித்தபடி நுழைந்தபோது எதிரே பார்த்தது முரட்டு நீல நிறக்கதர்ப்புடவையும் வட்டக் கண்ணாடியும் நெற்றியில் சிறுபொட்டும் விபூதியும் முடியப்பட்ட சிறிது நரைத்த முன் தலையுமாய் இருந்த ஒரு பெண்மணியைத்தான். அப்பா கைகூப்பி வணங்கினார். இவளையும் வணங்கச் சொன்னார்.

“பள்ளிக்கூடத்துல சேர்க்க வந்திருக்கீங்களா?”

“ஆமாம்மா. நல்ல பள்ளிக்கூடம்னு சொல்றாங்க.”

“ரொம்ப நல்ல பள்ளிக்கூடம்யா. நான் இங்கதான் டீச்சரா இருக்கேன் இருபது வருஷத்துக்கு மேலா. எந்தக் கிளாசுல சேர்க்கப்போறீங்க?”

“ஆறாவதும்மா. கொஞ்சம் பார்த்துக்கிடுங்க பிள்ளைய.”

“எல்லாப் பிள்ளையும் என்கிட்டதான் வந்தாகணும்; நான் பாட்டு டீச்சர்.”

சிரித்தார்.

“ஜானம்மா என் பேரு.”

அவரைத் தொட வேண்டும்போல் இருந்தது இவளுக்கு. கையை நீட்டி கறுப்பும் சிவப்பும் கலந்த ரப்பர் வளையல் போட்ட அவர் கையைத் தொடப்போனாள்.

“ஏய்…” என்று தடுத்தார் அப்பா.

“ஏன் தடுக்கறீங்க? தொட்டு தொட்டுப் பேசத்தான் பிள்ளைகளுக்குப் பிடிக்கும்” என்றபடி இவளை இழுத்து அணைத்துக்கொண்டார்.

ஜானம்மா டீச்சரின் முதல் அணைப்பு.

“அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்”னு அவரும் சொல்லியிருக்கார் அம்மா…”

“வள்ளலார் இறைவன் கிட்டச் சொன்னார். நாம நம்ம குழந்தைகள் கிட்டச் செய்து காட்டலாம்யா” என்றுவிட்டுச் சிரித்தார்.

பள்ளியில் நுழையும்போது ஜானம்மாவை எதிர்கொண்ட பல மாணவிகள் இருந்தனர் பள்ளியில். இரண்டாண்டுகளுக்குப் பின் தலையில் தலைப்பாகை கட்டிய தன் சீக்கிய அப்பாவுடன் வந்த ப்ரேம்குமாரி ஜுல்காவும் பள்ளியில் நுழைந்தபோது முதலில் பார்த்தது ஜானம்மாவைத்தான் என்று சொன்னாள் ஒருமுறை.

சிதறல்: இரண்டு

ஆறாவது வரை தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, உருது என்று தாய்மொழி மூலம் படித்துவிட்டு ஏழாவதிலிருந்துதான் ஆங்கில வழிப் படிப்பு அந்தப் பள்ளியில். அப்போதும் தாய்மொழி இரண்டாம் பாடமாகவும் கட்டாயப் பாடமாக ஹிந்தியுமுண்டு. ஒன்றாம் வகுப்பிலிருந்தே பாட்டுக் கிளாஸ் உண்டு. முதல் இரண்டு வகுப்புகளில் பையன்களும் படித்தார்கள். இன்னும் பள்ளி பழகாதபோது அழுகையும் சிணுங்கலும் மூத்திரம் போகும் அவசரமுமாய்த்தான் வகுப்பு நடக்கும் கட்டடங்களை விட்டுச் சற்றுத் தள்ளிக்கட்டப்பட்டிருந்த ஜானம்மாவின் இசை வகுப்புக்குக் குழந்தைகள் வரிசை போகும். ஒற்றை விரலை நீட்டியபடியும் விம்மியபடியும் இருக்கும் குழந்தைகளைத் தள்ளிக்கொண்டு வருவார் காமாட்சி ஆயாம்மா. ஜானம்மாவைப் பார்த்தவுடன் கேவல் ஆரம்பிக்கும். ஆயாவிடம் எல்லோரையும் முதலில் சிறுநீர் கழிக்கக்கூட்டிச் செல்லச் சொல்வார்.

“வெறும் வீம்பு டீச்சர். அங்க போனா வரலைன்னுட்டுச் சொல்லும்” என்பார் ஆயா.

களேபரம் எல்லாம் நின்று எல்லோரும் வணக்கம் சொல்லிவிட்டு உட்கார்ந்ததும் “யார் திட்டினது?” என்று கேட்பார். திட்டினவர் பட்டியல் வீட்டிலிருந்து நீளும். “இவன் இவள்” என்று விரல்கள் நீண்டு உள்நாட்டுப் போரும் இருக்கும்.

எல்லாம் முடிந்ததும் “பாடலாமா?” என்று கேட்பார். கோள்சொல்லி முடித்து அடைந்த இளைப்பாறலில் தலைகள் ஆடும்.

முதல் பாட்டு “காலை எழுந்ததும் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுவதும் விளையாட்டு என்று பழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா” என்று செல்லக் குரலில் தொடங்கி வைப்பார். அது சில மாதங்கள் வரை போகும். அதன்பிறகு “வினாயகா உனை வேண்டினோமே ஆவலாய் வினாயகா; ஏழையும் வணங்கும் தெய்வம் வினயமாய்ப் பணிவோமே”தான்.

மேல் வகுப்புகளுக்குப் போனதும் தியாகராஜர் கிருதிகளும் தேவர் நாமாக்களும் பாரதி பாடல்களும் இக்பாலின் “ஸாரே ஜஹான் ஸே அச்சா” பாடலும் வேதநாயகம் பிள்ளையின் “கருணாலய நிதியே” ஹிந்தோளப் பாடலும் பாட்டுப் புத்தகத்தில் சேர்ந்து கொண்டன. பாட்டுப் பரீட்சையில் வாங்கும் மதிப்பெண்கள் பெயருக்குத்தான். பாட்டுப் பரீட்சையில் தேறாவிட்டாலும் அடுத்த வகுப்புக்குப் போய்விடலாம். ஆனால் எல்லோரும் தேறவே முயற்சிப்பார்கள். காரணம் பாட முடியாத நபர்களே உலகத்தில் கிடையாது என்ற ஜானம்மா டீச்சரின் உறுதியான நம்பிக்கைதான்.

“மே நஹி கா ஸக்தி டீச்சர்” (என்னால் பாட முடியாது டீச்சர்) என்று முனகுவார்கள் முஸ்லிம் பெண்கள்.

“ஸாரே ஜஹான் ஸே அச்சா… பாடேன்” என்று யோசனை சொல்வார். சில பெண்கள் ஒப்புக்கொண்டு பாடுவார்கள். 1953, 1954, 1956, 1958, ஆண்டுகளில் வெளியான ‘அனார்கலி’, ‘ஜாக்ருதி’, ‘நாகின்’, ‘மதர் இந்தியா’, ‘பாகுன்’ போன்ற ஹிந்திப் படப் பாடல்கள் பெங்களூரில் மிகவும் பிரபலமாகி இருந்தன. ‘ஜாக்ருதி’ படத்தில் அபி பட்டாசார்யா இந்தியா முழுவதையும் சுற்றிக்காட்டியபடி பாடும் ‘ஆவோ பச்சோ தும்ஹே திகாயே’ (வாருங்கள் குழந்தைகளா, உங்களுக்குக் காட்டுகிறேன்) பாட்டைப் பலர் விரும்பிப்பாடுவார்கள். அது அணிவகுப்புக்கான நடையின் தாளத்தில் இருக்கும். ஜானம்மா பென்சிலால் மேஜையில் தாளம் போட்டு உற்சாகப்படுத்துவார்.

‘அனார்கலி’ படத்திலிருந்து அனார்கலியை செங்கல் கட்டி சமாதி வைக்கும்போது பாடும் ‘யே ஸிந்தகி உஸிகிஹை’ (இந்த வாழ்க்கை அவனுடையது) பாடலை உருகி உருகிப் பாடுவார்கள் சில பெண்கள். சிரித்துக்கொண்டே மெல்லப் பென்ஸிலால் மேஜையில் தட்டியபடி “சோகம் தாங்கலியே!” என்பார். ‘மதர் இந்தியா’ வின் “துனியா மே ஹம் ஆயே தோ ஜீனாஹி படேகா ஜீவன் அகர் ஸெஹர் தோ பீனா ஹி படேகா” (உலகத்தில் வந்துவிட்டால் வாழத்தான் வேண்டும்; வாழ்க்கை விஷம் என்றால் குடிக்கத்தான் வேண்டும்) என்று சில பெண்கள் பாடத்துவங்கும்போது “இத்தனை சோகம் ஆகாதும்மா இந்த வயசுல… வேற பாட்டுப் பாடு” என்பார். பாம்புப் பெண்ணின் படம் ‘நாகின்’. வைஜயந்திமாலா மனம் கரைந்து பாடும் “மேரே தில் யே புகாரே ஆஜா…” (என் உள்ளம் அழைக்கிறது வாயேன்) சில பெண்களின் விருப்பப்பாடலாக இருந்தது. “இன்னும் கொஞ்சம் நல்லாப் பாடினா வருவார்…” என்று தட்டிக்கொடுப்பார்.

ஸாக்கியா வீட்டில் உருது கவிதைகளை அனுபவிக்கும் சூழல் இருந்தது போலும். ஃபெயிஸ் அஹமத் ஃபெயிஸ் சிறையிலிருந்து 1954ல் எழுதிய ‘குலோன் மே ரங் பரே’ (மலர்களில் வண்ணங்கள் நிரம்பட்டும்) கவிதையைப் படித்தாள் ஒரு முறை. அதில் நாட்டுப்பிரிவினை பற்றிக் கூறும்போது

எனக்கு நடந்தவை எல்லாம் நடந்தாயிற்று
ஆனால் பிரிவினை நடந்த இரவு
நான் வடித்த கண்ணீர் உங்கள் வளமான
எதிர்காலத்துக்கான வாழ்த்தாகட்டும்”

என்ற வரிகளில் ஸாக்கியாவுக்குத் தொண்டையை அடைத்தது. ஜானம்மாவின் கண்களும் கலங்கின. பிறகு பொருளை விளக்கினார் மற்றவர்களுக்கு.

எல்லோரையும்விட அதிகமாகப் பிகு செய்துகொள்வது ப்யூலாதான். “பாட்டு வராது டீச்சர், தொண்டை சரியில்லை டீச்சர்…” என்று ஏகப்பட்ட சாக்கு சொல்வாள். “ஒரு வரி பாடும்மா…” என்று விடாமல் கேட்பார் ஜானம்மா டீச்சர். சரி என்று ஒரு முறை, “கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” பாடியவள் ‘மிஸ்ஸியம்மா’ படம் வந்தபின் “எனையாளும் மேரி மாதா, துணை நீயே மேரி மாதா என்றும் துணை நீயே மேரி மாதா” பாட்டை விடாப்படியாகப் பிடித்துக்கொண்டாள். பள்ளி ஆரம்பிக்கும் முன் பிரதான மண்டபத்தில் எல்லோரும் எல்லாப் பாடல்களையும் சேர்ந்து பாடுவதுபோல் வகுப்பில் அவளுடன் எல்லோரும் “எனையாளும் மேரி மாதா…” என்று பாட ஆரம்பித்தார்கள் சிலர் தங்களைச் சாவித்திரியாகவும் சிலர் பி. லீலாவாகவும் கற்பனை செய்துகொண்டு.

ப்ரேம்குமாரி ஜுல்கா பாடாமல் தப்பிக்கப் பார்ப்பாள். முதலில் மாட்டேன், பாடத் தெரியாது என்றெல்லாம் பிகு செய்துவிட்டு ஓவ்வோர் ஆண்டும் காதல் பாட்டுகள்தாம் பாடுவாள். ‘ஃபாகுன்’ படத்தில் மதுபாலா ஆடியபடி பாடும் ‘இக் பர்தேசி மேரா தில் லேகயா’ (ஒரு வேற்றூரான் என் உள்ளத்தைக்கொள்ளை கொண்டுவிட்டான்) பட்டிதொட்டி எல்லாம் பாடப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் அதை ஒரு பரீட்சையின் போது பாடினாள். பிறகு ‘இக் பர்தேசி’ பாட்டு வகுப்பிலும் வெளியிலும் அவள் பாட்டாகிவிட்டது.

ப்ரேம்குமாரி ஜானம்மா டீச்சரின் செல்லம் ஒருவகையில். ஒரு முறை ஜானம்மா டீச்சர் தன் அறையில் தனியாக இருந்தபோது “ஹரி ஸ்மரணே மாடோ நிரந்தர” என்ற தாசர் பதத்தை அனுபவித்துப் பாடிக் கொண்டிருந்திருக்கிறார். ஏதோ கேட்க வந்த ப்ரேம் குமாரி வெளியே நின்றபடி அதைக் கேட்டுவிட்டு முடிந்தவுடன் உள்ளே வந்து ஜானம்மா டீச்சரின் கால்களைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டு, “டீச்சர், இது என்ன பாட்டு? மனசை உருக்குதே?” என்று கேட்டிருக்கிறாள். அவள் தோளைத் தடவியபடி பாட்டின் பொருளைக் கூறினாராம் ஜானம்மா. அதன்பின் வகுப்பில் முடிவில் சிறிது நேரம் இருந்தால் “டீச்சர், ஹரி ஸ்மரணே…” என்று கெஞ்சுவாள். ஒவ்வொரு முறையும் அவள் கண்களில் நீர் நிறையும். ஜானம்மா டீச்சரிடம் நெருங்கிப் பழகி அவரை ஜின்னி என்று அழைப்பார்கள் என்று கண்டுபிடித்ததும் ப்ரேம் குமாரிதான். தூரத்தில் அவரைப் பார்த்து “ஜின்னி டீச்சர்” என்று உரக்க அழைத்துவிட்டு அவர்கள் எல்லோரும் ஓடுவது வழக்கம்.

கடைசியாக ப்ரேம்குமாரி ‘இக் பர்தேசி’ நமுட்டுச் சிரிப்புடன் பாடியது 1959ல்தான். உயர்நிலை கடைசி வகுப்பில் இருந்தபோது அவள் சில நாட்கள் வரவில்லை. ஒரு நாள் தலைமை ஆசிரியர் மூலமாக ஜானம்மா டீச்சருக்கு ப்ரேம்குமாரிக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவரைப் பார்க்க விரும்புவதாகவும் சேதி வந்தது. அன்று அப்பா வந்திருந்தார். அவளை அல்ஸூர் ஏரி அருகே இருந்த பெரியப்பா வீட்டுக்குக்கூட்டிச் செல்ல. ப்ரேம்குமாரி வீடு அல்ஸூரில் குருத்வாரா அருகேதான் இருந்தது. ஜானம்மா டீச்சர் அப்பாவையும் அவளையும் பள்ளியில் தற்செயலாகப் பார்த்து விவரத்தைக் கூறியதும் அப்பா ஜானம்மா டீச்சரை அவர்களுடன் வரும்படி கூறினார். பேருந்தில் போகலாம் என்று தீர்மானித்தபோது மாணவிகளைக் காலையும் மாலையும் பெங்களூரின் பல இடங்களிலிருந்து கூட்டிவந்து கொண்டுவிடும் பேருந்துகளில் அல்ஸூர் போகும் பேருந்தில் போகலாம் என்று ஜானம்மா டீச்சர் கூற அப்படியே சென்றார்கள். முகவரி டீச்சரிடம் இருந்து குருத்வாராவும் ஏரி அருகிலேயே இருந்ததால் வீட்டைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கவில்லை.

உள்ளே போனதும் ப்ரேம்குமாரியின் அண்ணன் போல் தெரிந்த ஒருவர் ஓடிவந்து ஜானம்மா டீச்சரையும் இவர்களையும் உள்ளே அழைத்துக்கொண்டுபோனார். ப்ரேம்குமாரி கிழிந்த நாராய்க் கிடந்தாள் கட்டிலில். அவளருகே அமர்ந்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார் அவள் அப்பா. ப்ரேம்குமாரியின் அண்ணா அதுஸ்ரீ குருக்ரந்த் ஸாஹிப்ஜியின் 555 பகுதியின் மரணத்தைப் பற்றிய சில சுலோகங்கள் என்று ஜானம்மா டீச்சருக்கு மென்குரலில் விளக்கினார். ஜானம்மா டீச்சர் வந்துவிட்டதை உணர்ந்தவள்போல் ப்ரேம்குமாரி கண்ணைத் திறந்தாள். டீச்சரின் புறம் கையை மெல்ல நீட்டினாள். ஜானம்மா டீச்சர் அவள் கையைப் பற்றிக் கொண்டார். மெலிந்த குரலில், “ஜின்னி டீச்சர், ஹரி ஸ்மரணே…” என்றாள்.

டீச்சரின் நெஞ்சு ஏறி இறங்கியது. அவளுக்காக மட்டும் பாடுவதைப்போல், பிரகலாதன், திரௌபதி, அஜாமிளன் கூப்பிட்டபோது வந்த ஹரியை எப்போதும் ஸ்மரணை செய், முக்தி கிடைக்க எடுக்கும் முடிவிது என்ற யமுனா கல்யாணி ராகத்தில் அமைந்த தாசர் பதத்தைப் பாடினாள். கண்கள் மலர ப்ரேம்குமாரி டீச்சரைப் பார்த்தாள்.

சிதறல்: மூன்று

அந்தச் சந்திப்புத் தற்செயலாகத்தான் அமைந்தது. உடன் வேலை செய்யும் தோழியுடன் வீட்டுக்குப்போனபோது முன்னறையில் இருந்த படங்கள் ஆச்சரியத்தை அளித்தன. இவள் பள்ளியின் பிரதான மண்டபத்தில் இருந்த புகைப்படங்கள். அவளைக்கேட்டபோது அவளுடைய மாமியாரின் பெற்றோர்கள் என்று கூறினாள். மாமியாரிடம் அறிமுகப்படுத்தினாள். தான் படித்த பள்ளி என்று கூறியதும், “அதை அப்பா ஏன் கட்டினாங்க தெரியுமா?” என்று கேட்டார். அவருடைய அப்பா பெண்கள் கல்வியில் மிகவும் ஆர்வமாக இருந்ததால் கட்டியது என்றதும் அது சரிதான் என்று ஒப்புக்கொண்டவர், “ஆனால் அதுக்கு ஒரு சம்பவம் நிமித்தமா அமைஞ்சுது” என்றார். 1930ல் அவரைப் பள்ளியில் போட்டார்கள். ஐரோப்பியப் பெண்களும் ஆங்கிலோ இந்தியப் பெண்களும் படித்த பள்ளியில் மற்ற பெண்களுமிருந்தார்கள். பூ, பொட்டுடன் இருந்த இவர் தோற்றத்தையும் ஆங்கில உச்சரிப்பையும் அடிக்கடி கேலி செய்தார்கள். ஒரு நாள் அழுதுகொண்டு வீட்டுக்கு வந்ததும் அம்மா அப்பாவிடம் சொன்னார். “உங்களிடம் இல்லாத வசதியா? நீங்களே ஒரு பள்ளிக்கூடம் கட்டக் கூடாதா என்ன?” அப்பா ஒப்புக்கொண்டார். நம் பண்பாட்டு மதிப்பீடுகளைச் சாதி மதப் பேதம் பார்க்காமல் கற்றுக் கொடுக்கும் பள்ளி ஒன்றை அமைக்கத் தீர்மானித்து அவரிடம் இருந்த பெரிய மனையில் இரண்டு பெண்களின் பெயரில் இரண்டு கட்டடங்களாகக் கட்டினார் 1931ம் ஆண்டுப் பள்ளிக்கூடம் நிறுவப்பட்டது. தோழியின் மாமியாரும் அவர் தங்கையும் அங்கேதான் படித்தார்கள்.

“முதல்ல வேலைக்கு எடுத்த டீச்சர் யார் தெரியுமா? ஜானம்மா டீச்சர்தான். பள்ளிக்கூடம் பற்றிக் கேள்விப்பட்டு அப்பாவோட நண்பர் ஒருத்தர் மூலமா வந்தாங்க. அவங்க வந்தது பேசினது எல்லாம் அப்படி மனசுல பதிஞ்சு இருக்கு. நான் அப்ப ரொம்பச் சின்னவ. ஆனா அப்பாவும் அம்மாவும் அடிக்கடி அவங்க வந்ததையும் பேசினதையும் சொன்னதாலயோ என்னவோ அப்படித் துல்லியமா நினவுல இருக்கு.”

“தனியாவா வந்தாங்க?”

“ஆமாம். இருபது வயசு இருக்கும் அப்ப அவங்களுக்கு. உங்களுக்குத் தெரியுமே. நீங்கதான் அவங்க ஸ்டூடண்ட் ஆச்சே? கதர்ப் புடவை. நெத்தில ரொம்பச் சின்னப் பொட்டு. விபூதி. பார்த்தவுடனேயே அப்பாவுக்குப் புரிஞ்சு போச்சு. சிஸ்டர் சுப்புலக்ஷ்மி ஹோம்ல இருந்துட்டு ட்ரிப்ளிகேன் கவர்மெண்ட் பள்ளிக்கூடத்துல படிச்சுட்டு பெறகு சாரதா வித்யாலயாவுல படிச்சிருந்தாங்க. பாட்டு அவங்க தானாவே வீட்டுல அவங்க அண்ணாகிட்ட கத்துக்கிட்டாங்க போல. அதுலதான் ஆர்வமா இருந்தாங்க.”

“அவங்க வீட்டுல அவங்களப் படிக்க விட்டாங்களா?”

“வயசுக்கு வந்த பெறகுதான் கல்யாணம் பண்ணியிருக்காங்க. அதுக்கு முன்னால ஊர்லய இருந்த ஒரு சின்னப் பள்ளிக்கூடத்துல படிச்சிருக்காங்க. புருஷன் வீட்டுக்குப் போகவே இல்ல. அவரு பாம்பு கடிச்சோ என்னவோ போயிட்டாரு. எல்லாம் அவங்க சொன்னதுதான். குடும்பமா அப்புறமா சென்னைக்கு வந்துட்டாங்களாம். பிராமணக் குடும்பங்கள்ல பண்ணற கோலமெல்லாம் அவருக்குப் பண்ணலை அதனால. அப்பா கேட்டாரு அவங்க கிட்ட. “சின்னப் பொண்ணா இருக்கீங்களே, மறுமணம் பண்ணலாமே?” அப்படீன்னு…”

“என்ன சொன்னாங்களாம்?”

“ஐயா, ரொம்ப அன்பா பேசறீங்க. விதவையான பொண்ணு ஆசைப்பட்டா கட்டாயம் மறுமணம் பண்ணத்தான் வேணும். ஆனால் அதுக்கு மேல தேவை கல்விதான் ஐயா. பிராமண விதவைக்குத் தேவை ஆண் சுகம்தான் ஆண் தர பாதுகாப்புதான்னு நினைக்கிறது கூடத் தப்பு இல்லையா? இந்தக் கதர்ப் புடவை எல்லாம் பார்த்துட்டு யாரோ என்னை வற்புறுத்தினதா
நினைக்காதீங்க. நான் காந்தியவாதி. சின்ன வயசுல இருந்து அவர்கிட்ட ரொம்ப அபிமானம் எனக்கு. அதனாலதான் கதர்ப் புடவை. எங்க வீட்டுல எல்லாருமே கதர்தான். சுதந்திரமா இருந்து பெண் குழந்தைகளுக்கு எனக்குத் தெரிஞ்சதை சொல்லிக்கொடுக்கணும். அதுல ரொம்ப ஆர்வமா இருக்கேன். எதிர்காலத்துல மனசுல ஆசை வந்தா பார்க்கலாம். அப்படின்னாங்களாம்.”

“அப்பா உடனே வேலை கொடுத்துட்டாரா?”

“அப்பா விடலை. பெண் விடுதலை பாடின பாரதியோட செல்லம்மாவையே பாரதி எறந்ததும் தலையை மழிச்சுவிட்ட சமூகம்மா உங்களுது. தனியா இருந்தா உங்களுக்குப் பல தொல்லைகள் வரலாம். சாதியில எல்லாம் நம்பிக்கை இல்லையினா என் தம்பியே இருக்கான்” அப்படீன்னு கூடச் சொல்லியிருக்காரு அப்பா. அப்பாவுக்கு அவங்களை ரொம்பப்பிடிச்சுப் போச்சு.”

“யாருக்குத்தான் அவங்களைப் பிடிக்காது?”

“அப்ப அவங்க ஒரு விஷயம் சொன்னாங்க. அப்பா சொல்வாரு அடிக்கடி அது பத்தி. அவங்க சொன்னாங்களாம். ஒரு பொண்ணு நினைச்சா அவளை யாரும் எதுவும் பண்ண முடியாதுன்னு. அவங்க குடும்பத்துக்கு அப்படி இருந்த பெண்களைத் தெரியுமாம். பல வருஷம் முன்னால வேங்கமாம்பான்னுட்டு ஒருத்தர் இருந்தாராம். விதவை. கிருஷ்ண பக்தையாம். ஆன்மிகப் புஸ்தகம் பலது எழுதியிருக்காராம். அவர் தலைமுடியோட இருந்ததால அவங்க ஊர்ல இருந்தவங்க சங்கரமடத்துக்கு இவங்க மேல குத்தம் சாட்டி சங்கரபீடாதிபதி மூலமா கட்டளை அனுப்பினாங்களாம். அதற்கு வேங்கமாம்பா, “நான் ஸ்வாமிகள் கிட்டப் பேசணும். அவர் கிட்ட கேள்விகள் கேட்கணும். என் கேள்விக்கெல்லாம் அவர் பதில் சொல்லி அது நான் ஏத்துக்கறபடியா இருந்தால் அவர் ஆணைப்படி நடக்கறேன்” அப்படீன்னாங்களாம். ஸ்வாமிகள் தலைமுடியோட இருக்குற விதவைகளைப் பார்க்கமாட்டாரு இல்லையா? அதனால் ரெண்டு பேருக்கும் இடையில ஒரு திரை கட்டி அங்கேயிருந்து கேள்வி கேட்க ஏற்பாடு செய்தாங்களாம்.”

“கதை மாதிரி இருக்குது…”

“கேளுங்க. வேங்கமாம்பா ஸ்வாமிகள் கிட்ட கேட்டாராம். “மொட்டை ஆக வேண்டியது எது? மறுபடியும் வளராதது எது?” ஸ்வாமிகள் “தாயே, இதெல்லாம் உனக்கில்லை”ன்னுட்டுப் போயிட்டாராம். “இப்படியும் பெண்கள் இருந்தாங்க, ஐயா. இப்பவும் சிஸ்டர் இல்லையா? அவங்க ட்ரெய்னிங் குடுத்த நாங்க எல்லாம் இல்லையா? எல்லா விதவைகளுக்கும் ஒரே ஒரு ஆசைதான் இருக்கும்னு நினைக்காதீங்க. முதல்ல என் காலுல நான் நிக்கறேன். நான் பெரிய ஞானி எல்லாம் இல்லை. ஆசை வரலாம். வந்தா பார்க்கலாம். அப்ப மறுமணம் பத்திப் பேசலாம்” அப்படீன்னாங்களாம். இருவது வயசுப் பொண்ணு. அப்படி டாண் டாண்ணு தெளிவா பேசவே அப்பா அசந்து போயிட்டாராம்.”

அவரிடம் ப்ரேம்குமாரி பற்றிச் சொன்னவுடன் அவர் கண்களும் நிறைந்தன.

“பெங்களூர்லதான் இருக்காங்களாமா?”

“தெரியலை. அப்பா அம்மா இருந்தவரைக்கும் தொடர்புல இருந்தாங்க. எனக்கே இதோ 76 வயசாவுது. அவங்களுக்குத் தொண்ணூறு வயசுக்கு மேல இருக்குமில்ல? அவங்க அண்ணன் குடும்பத்தோட போயிட்டாங்களோ என்னவோ?”

சிதறல்: நான்கு

சில மாதங்களிலேயே அந்தச் சந்திப்பு நேர்ந்தது. மூளைக்கட்டி விவகாரம் எல்லாம் வரும்முன். பழக்கடையில் மல்லேஸ்வரம் மார்க்கெட்டில் பழுப்பும் பச்சையுமாய் கதர்ப் புடவையில் ஒரு மூதாட்டி பழம் வாங்கிக்கொண்டிருந்தார். வண்டியிலிருந்து பழக்கூடைகளைப் பார்த்தவாறு வாங்கலாமா என்று இவள் யோசித்தபடி இருந்தபோது அவர் திரும்பினார். தூக்கி வாரிப்போட்டது. ஜானம்மா டீச்சர்.

“ஜின்னி டீச்சர்…” என்று கத்தினாள்.

அவளைப் பார்த்துவிட்டு அருகில் வந்தார். முகத்தில் அழகாக முதுமை ஏறியிருந்தது. கொடிபோல் இருந்தார். எந்த நிமிடமும் முறிந்து விழுந்துவிடலாம் எனும் கொடிபோல்.

“யாரு?”

“நான் கோகிலா, டீச்சர். ஞாபகம் இருக்கா? எங்க அப்பாவும் நானும் நீங்களுமா ப்ரேம்குமாரி வீட்டுக்குப் போனமே? ரொம்ப வருஷம் ஆயிடுச்சு. மறந்திருக்கும்…”

“மறக்கல. நினைவிருக்கு. சௌக்கியமாம்மா? பக்கத்துலதான் வீடு. வாயேன்.”

காரில் ஏற்றிக்கொண்டாள். எட்டாவது பிரதானத்தெருவின் பின்னால் இருந்த தெருவில் மல்லேஸ்வரம் ரயிலடிக்கு அருகே அடக்கமான சிறு வீடு.

கதவைத் திறந்து உள்ளே போனதும், “டீ சாப்பிடலாமா?” என்றுவிட்டு உள்ளேபோய்த் தேநீர் தயாரித்துக் கொண்டு வந்தார். முக்காலியில் வைத்துவிட்டுச் சிரித்தார். அப்போதுதான் முக்காலியை மறுமுறைப் பார்த்தாள். அப்பா முடைந்தது. அவள் பள்ளியைவிட்டுப் போகும்போது எல்லா டீச்சர்களுக்கும் தந்தது. இன்னும் வைத்திருந்தார்.

திடீரென்று கேட்டார். “ப்ரேம்குமாரி வீட்டுக்குப்போனபோது அவங்கப்பா சொன்ன குரு க்ரந்த் ஸாஹிப்ஜி சுலோகம் பத்தி ஞாபகம் இருக்கா?” “ஏதோ மரணம் பத்தின்னு சொன்னதா மெல்லிசா நினைவு டீச்சர். ஏன் கேட்கறீங்க?”

“அப்புறமா அவ அப்பாக்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுண்டேன். எழுதி வெச்சிருக்கேன். நில்லு. கொண்டு வரேன்” என்று ஏதோ இரண்டு நாட்கள் முன்பு நடந்த ஒன்றைப் பற்றிப் பேசுவதைப்போல் பேசிவிட்டு உள்ளே போனார்.

ஒரு காகிதத்துடன் வந்தார். அதில் எழுதியிருந்தது:

கிஆ ஜாணா கிவ் மர்ஹகய் கைஸா மர்ணா ஹோஹய் (குரு க்ரந்த் ஸாஹிப்ஜி - 555-4)
எனக்கென்ன தெரியும்? எப்படி நான் இறப்பேன்? எப்படிப்பட்ட மரணமாக இருக்கும் அது?

ஜய் கர் ஸாஹிப் மன்ஹு ந வீஸ்ரய் தா ஸஹிலா மர்ணா ஹோஅய் (குரு க்ரந்த் ஸாஹிப்ஜி - 555-5)
என் மனத்தில் இறைவனை மறக்காதிருந்தால், என் மரணம் எளிதாகிவிடும்.

மௌனமாக அமர்ந்திருந்தனர்.

வெளியே கதவு தட்டும் சத்தம் கேட்டது.

டீச்சர் போய்க் கதவைத் திறந்ததும் ஒரு சீக்கியர் உள்ளே வந்து காலைத் தொட்டுக் கும்பிட்டார்.

“ப்ரேம் குமாரியின் அண்ணா” என்று அறிமுகப்படுத்தினார்.

கை குவித்தார்.

டீச்சர் அருகே வந்து கீழே அமர்ந்து, “ஜின்னி டீச்சர், “ஹரி ஸ்மரணே…” என்றார்.

“குரலே இல்லையே, ஜொகிந்தர். என்ன பாட?”

“இன்று அந்த நாள்” என்றார் குரலடைக்க ஹிந்தியில்.

கொஞ்சம் கரகரத்துத் தழுதழுத்துப் போன குரலில் டீச்சர் ரகசியம் சொல்வதுபோல் பாடினார்: “ஹரி ஸ்மரணே மாடோ நிரந்தர…”

டீச்சர் கையைத் தன் இரு கைகளால் இறுகப் பற்றிக்கொண்டார் ப்ரேம்குமாரியின் அண்ணா. குமுறினார்.

சிதறல் ஓய்ந்தது.

தலையில் குளிர்ச்சி அலை ஒன்று பரவியது. செவியில் திடீரென்று ஒசை நின்றது.

கையிலிருந்து புத்தகம் விழுந்தது. குனிந்து எடுத்து நிமிர்ந்தபோது நாள்காட்டி கண்ணில் பட்டது. இன்றும் அந்த நாள். ப்ரேம்குமாரி ஜுல்காவுக்காக ஜானம்மா டீச்சர் பாடிய நாள்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer