ஞா. தியாகராஜன் கவிதைகள்


பகிரு

பழைய நட்சத்திரத்தின் பல் விழுந்த திசையில்
நீ அமர்ந்திருக்கிறாய்
அங்கிருந்து உன் காதலிக்காக அழத் தொடங்கலாம்
ஆழத்தில் புதைந்துபோன ஒரு கப்பலில்
திரும்பி வந்து உன் தலைமுடியை ஒதுக்கி
உன்னை அவர்கள் முத்தமிடுவார்கள்
உன்னிலிருந்து விழுவதற்காக ஒரு பல் ஆடத் தொடங்கும்.

----

சொல்லின் கடைசி நிறுத்தமாக நீயிருக்கலாம்
நிறைவுறும்போது உன்னை விரும்புகிறார்கள்
புதிய தொடக்கத்தில் உன்னை வேண்டாமென நினைக்கிறார்கள்
ஒவ்வொரு கிளைகளுக்கும் பறந்துகொண்டிருக்கிறாய்
உன் அலகில் தொத்திக்கொண்டிருக்கும் இரைகள் மீது
உனக்கேன் உணவு மண்டலத்துக்கு ஒவ்வாத கரிசனம்.

----

இருநூறு பக்க நூல் ஒன்றை
தகுதியுடையதாக்கும்
சில வரிகளாய் உன் கவிதை எப்போதும் இருக்கப்போவதில்லை
நீயேன் போன அடுத்த பேருந்திலேயே
உன் காதலிகள் திரும்பிவிட போவதாக
அதே நிழற்குடையின் கீழ் நின்றுகொண்டிருக்கிறாய்.

-----

கடவுள் பில் தொகையை செலுத்திக்கொண்டிருக்கிறார்
மரணம் அங்கிருந்து கிளம்புகிறது.

----

யாரும் யாருக்கும் போதிக்கவேண்டாம்
யாரையும் எதற்குள்ளும் நுழைக்கவேண்டாம்
என்னையொரு எறும்பு பண்டமாக மாற்றுவதுபோல எதுவும் 
நடக்கவேண்டாம்
நான் ஒரு கொலையை நேரில் பார்க்கிறேன்
கொலையாளி எழுப்பிய ஒலிதான் விடாமல் துரத்துகிறது
கொல்லப்பட்டவன் பேசாமல் இருந்தான்
ஒரு மௌனமும் அலறலும் இடம் மாறியிருக்கிறது
நான் ஒரு மரணத்தைக்கூட தாங்கதெரியாத பூஞ்சை என்கிறார்கள்
எனக்கும் பேசாமல் இருக்கவேண்டுமெனத் தோன்றுகிறது.

----

உங்களைச் சுட நினைத்திருந்தால்
எப்போதோ ரிவால்வரை உயர்த்தியிருக்க முடியும்
இவ்வளவு நேரம் திரும்ப ஒருமுறை அனைத்தையும்
நினைவுகூரப் பார்த்தேன்
காலத்தின் அதீதத்தை அளவுக்கு மீறியே
சுமந்துவிட்டதாகப் படுகிறது
எனவே கைகளை மெல்லத் தூக்கி
உங்களை விசுவாசப்படுத்தினேன்.

----

உருட்டி வந்த தேங்காய் கடலுக்குள் விழுந்துவிட்டது
டம்ளரைக் கவிழ்த்தி கடல் முழுக்க அலசிப் பார்த்துவிட்டேன்
அம்மா திறந்து வைத்திருந்த சன்னல் வழியாய் வந்த அதே வெயில்
எங்கிருந்தோ வர அதை நோக்கி தவழ ஆரம்பித்தேன்
என் கடல்களை இப்படிதான் கடந்துகொண்டிருக்கிறேன்
கலர் தாள் சுற்றிய பரிசில் உங்களால் கடலைக் கொடுக்க முடியுமானால்
அதை ஒரு கோப்பையில் வைப்பதும் பெரிய விஷயமல்ல
அவ்வளவு உறுதியுடன் ஒரு பாலைவனத்தில்
என்னைக் கிடத்திக்கொண்டு பிடிவாதமாய் இருந்தாலும்
மறுபடியும் உருட்டுவதற்காகவே நடுமண்டையில் வந்து விழுகிறது
ஒருதேங்காய். 

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer