ஒரு வாளி சாம்பார்

குமாரசெல்வா

பகிரு

வழக்கமான தமிழ் சினிமாவில் காணும் லாக்கப் காட்சி போல அது இல்லை. சாந்தி தவழும் அம்பேத்கர் அல்லது காந்தி படத்தின் பின்னணியில் கைகளைக் கம்பியில் பிடித்துக்கொண்டோ, வியர்வை ததும்பும் முகத்தில் மிகுஉணர்ச்சியுடன் கூண்டில் அடைபட்ட மிருகமாகக் கர்ஜித்தவாறோ, கதை வசனம் பேசிக்கொண்டோ அவன் நிற்கவில்லை.கால்களை நீட்டி தரையில் அமர்ந்து சுவரில் சாய்ந்துஉறங்கினான். அதனை உறக்கம் என்று சொல்லமுடியாது. உறங்குவது போலும் என்று சொல்லலாம். மனித ரத்தத்தில் அளவுக்கு மீறிக் கலந்த நஞ்சாமிர்தம் திரை அரங்குகளில் மூட்டைப்பூச்சிகளை நிர்மூலமாக்கியபோது லாக்கப்களில் மட்டும் சாகாவரம் பெற்றவைகளாக ஜீவித்தன. ஆழ்துயிலில் முங்கும்போது அவனை  அவைகள்  குத்தி எழுப்பின.

கொஞ்சகாலம் போனால் பூமியில் கொசுக்களும் அழிந்துவிடும். நஞ்சு ஏற ஏற உடல் தனக்குத்தானே தற்காப்பை ஏற்படுத்திக்கொள்ளும் என்று சொல்லலாமா? நஞ்சை விஷமாக மட்டும் கருதக்கூடாது. அதில் தேவாமிர்தமும் இருக்கிறது. ஆளைக் கொல் லும் என்ற ஒரு விஷயம்தானே படபடப்பை உருவாக்குகிறது. நஞ்சென்று நினைப்புதானே பாம்புக்கும், தேளுக்கும் அஞ்ச வைக்கிறது. அது நமக்குள் ளிருந்தால்? நஞ்சுள்ள மனிதன் எதற்கும் அஞ்ச மாட்டான். அவனுக்கு ஆயுளும் அதிகம். அங்கம் முழுவதும் விடமேயாம் என்னும் துஷ்டனை வைத்துப் பிறந்ததுதானே தூர விலகிப்போகும் தத்துவம்.

லாக்கப்பில் இருப்பவன் மூட்டைப் பூச்சி போலவே இருப்பான். கழுத்தில்லாத, தலைக்கும் உடலுக்கும் வேறுபாடு தெரியாத அளவுக்கு வட்டத்துளி போல ஊர்ந்து செல்வான். கண்ணுக்குத் தெரியாத சிறிய கால்களையும், கைகளையும் கொண்டவன் எவ்வளவு பெரிய உறிஞ்சுக் குழலை உடம் பில் ஒளித்து வைத்திருக்கிறான். கொஞ்சம் இடம் கிடைத்தால் ரத்தம் உறிஞ்ச யார்தான் விரும்ப மாட்டார்கள்? நார்க்கட்டிலோ, மரநாற்காலியின் இடுக்கிலோ பதுங்கி இருந்து கொண்டு ரத்தம் உறிஞ்ச கிடைத்த வாய்ப்பு மரண அவஸ்தை நிறைந்தது. படுத்துக்கிடக்கும் தடியன் கொஞ்சம் புரள நேர்ந்தால் நசுங்கிச் சாக நேரிடும். ஆனால் சாவதற்கிடை யிலான கணத்தையும் உறிஞ்சுவதற்குக் கிடைத்த தருணமாகக் நினைத்துத்தானே வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.

மூட்டைப்பூச்சியின் அடுத்தப் பரிணாம வளர்ச்சிதான் கொசுவாக இருக்கவேண்டும். இதற்கான ஆதாரத்தை ஆர்ஜின் ஆப் த ஸ்பீசிஸ்சில் தேட வேண்டிய அவசியம் இல்லை. கடவுளுக்கு டார்வின் வைத்த ஆப்பு அது. அதை உருவி செதுக்கி வேறொரு ரூபத்தில் வைத்த ஆப்புதான் மார்க்சியம். இதில் ஒருவன் கடவுளை நம்பினான், இன்னொருவன் மறுத்தான். கடவுள் அதைவிடப் பெரிய ஆப்பைத் தனதுகையில் வைத்திருந்தார். அதுதான் மொழி. பாபேலில் சிதைத்த கடவுள் வேறு சில இடங்களில் மொழியைக் கையிலெடுத்து விளையாடுகிறான் போல. இல்லையென்றால், கோயில்களில் கூட இல்லாத ‘கடவுள்’ என்ற சொல் அப்படி ஒருவன் இல்லை என்று சொன்னவன் கல்லறையிலும், நினைவுத் தூண்களிலும், சிலைகளிலும் தான் இடம் பெற்றிருக்குமா?

குறட்டை விட்டுத் தூங்கும் மனிதமூஞ்சியில்ரத்தம் உறிஞ்சிக்கொண்டு நகர்ந்து வந்த மூட்டைப் பூச்சி அவன் நாடியிலிருந்து நெஞ்சுக்கு நேராய் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் குதித்துக் குதித்து உடலில் மாற்றம் அடைந்து சிறகுகள் முளைத்து, அப்படி ஒருநாள் குதிக்கும்போது கொசுவாக மாறிப் பறந்துபோனது. சிறகு கிடைத்தபிறகு பறந்து சென்று ரத்தம் உறிஞ்சுவது எவ்வளவு வசதியாக இருக்கிறது. கண்டம் விட்டுக் கண்டம் தாண்டி அயல்நாட்டு ரத்தம் கூடச் சுவைக்க முடிகிறது. எந்த மனிதனின் ரத்தமும் அதற்குப் போதை நிறைந்த பானமாகத்தானே இருக்கிறது. எய்ட்ஸ் மனிதனின் ரத்தம்  கொசுக்களை  என்னதான்  செய்யும்?

கொசுவாகவும், மூட்டைப்பூச்சியாகவும் இருந்த காலத்தில்தான் லாக்கப்பில் இருப்பவன் கொடி கட்டிப் பறந்தான். அவன் வழியில் குறுக்கிட யாரும் பயந்தார்கள். அவன் உருவத்தைக் கண்டு அவ்வாறு குறுக்கிட்ட பலரும் ஏதோ ஒருவகையில் அவனிடம் தோற்றுப்போனார்கள். அப்படி மண் கவ்வியவர்களில் ஒருவன்தான் லாக்கப்புக்கு வெளியே நாற்காலியில் சீருடையில் அமர்ந்து யோசித்துக்கொண் டிருப்பவன். அவனை அவ்வாறு யோசிக்க வைத் தவனே லாக்கப்பில் இருப்பவன் தான்.

அவன் கொசுவென்றால் இவன் தவளை. சீருடை யில் தொப்பியை மாட்டிக்கொண்டு நாற்காலியில் அமர்ந்தான் என்றால் சாட்சாத் தவளைதான். எதிரில் நிற்பவனை முறைத்துப் பார்க்கும் கண்களில் கூடத் தவளையின் ஒற்றுமை தூக்கலாகத் தெரியும். கொர் கொர் பேச்சிலும், துள்ளல் நடையிலும் கூட அதனைக் காண முடியும். துள்ளுவதில் மிஸ்டர் தவளையார் ரொம்பக் கெட்டிக்காரர். காலம் பூராவும் துள்ளியும் சப்இன்ஸ்பெக்டர் உயரத்தையே அவரால் எட்ட முடிந்தது. என்றாலும் அத்துடன் அடங்கும் எண்ணம் இல்லாததால் இப்போதும் துள்ளிக்கொண்டு தான் இருக்கிறார். என்றாவது ஒருநாள் கொசுக்கடிகளற்ற குளிரூட்டப்பட்ட அறையில் மிஸ்டர் தவளை ஐ.பி.எஸ். பெயர்ப்பலகைக்குப் பின்னால் இந்தத் தேகத்தைக் கொண்டு சாத்தவேண்டும் என்ற லட்சியக் கனவு நிறைவேறும் வரை அந்தத் துள்ளல் அடங்காது போலத்தான் தோன்றுகிறது. ஆனால் அடுத்த ஜென்மம் அல்லவா குறுக்கீடு செய்யும்.

போலீஸ் தேர்வுக்கான போட்டியில் கொசுவும் தவளையும் ஒன்றாகத்தான் கலந்துகொண்டார்கள் என்றால் நீங்கள் நம்புவீர்களா? அந்தத் தேர்வில் இருவருமே தோற்றுப்போனார்கள் என்பதும்  உண்மை தான். இன்னும் சொல்லப்போனால் தவளைதான் முதலில் தோற்றது. பிறகெப்படி போலீஸ் மூத்து ஏட்டாகி, ஏட்டு மூத்து சப்இன்ஸ்பெக்டர் ஆகத் தவளையால் முடிந்தது என்று கேட்க நினைக்கிறீர்கள் அல்லவா?

அதை நீங்கள் தயவு செய்து என்னிடம் கேட்காதீர்கள். சார்லஸ் டார்வினிடம்தான் கேட்கவேண்டும். எனக்குக் கதை மட்டும்தான் சொல்லத் தெரியும் என்பதால் சொல்கிறேன்.

பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் காலை ஆறுமணிக்கு ஆஜராகவேண்டும் என்ற கடிதம்வந்ததும் முந்தினநாள் சாயங்காலமே தொடுவெட்டி யிலிருந்து பதினொன்றாம் நம்பர் நாகர்கோயில்பேருந்தில் தவளை ஏறியது. இரவு ஒன்பது மணிக்கு போலப் பாளையங்கோட்டை அடைந்ததும் பிளாட்பாரத்துக்கருகில் புனித கங்கை பாயும் நதி தீரத்தில் கொசு கட்டை நீட்டி இருப்பது கண்டும், காணாதது போல நகர்ந்து சென்றது. காரணம், பால்யத்தில் ஏற் பட்ட காலத்திற்கும் மறக்க முடியாத ஒரு பிணக்கு.

பிற்காலத்தில் எத்தனையோ தடவை ரெய்டு என்ற பெயரில் தான் ஏறி இறங்கிய அந்த லாட்ஜின் 108-ம் நம்பர் அறையில் சட்டையைக் கழற்றி நாற்காலியில் போடும்போது ரூம்பாய் தோன்றி வேறு எதாவது வேண்டுமா? என்று கேட்டான்.

என்னது?

புடவை.

புடவையா?

நல்ல காஸ்ட்லியான பார்த்தாஸ் புடவை, போர்த்திக்கலாம்.

பெட்ஷீட் இருக்கே.

பெட்ஷீட்தான் தினந்தோறும் போர்த்துகிறீர்களே, ஒரு சேஞ்சுக்கு இண்ணு ஒருநாள் மட்டும் புடவை போர்த்திக்கலாமே?

புரியல.

நளினமான பாவனையில் பையன் நெளிந்து ஒரு நடைநடந்து காட்டிவிட்டு கேட்டான்,

புரிஞ்சுதா?

ஐயோ, எனக்கு  இந்த லாட்ஜ்  வேண்டாமே.

பேருந்தில் ஏறி திருநெல்வேலி ஜங்சன் அடைந்து ஆட்களிடம் விசாரித்துச் சினிமா தியேட்டரைக் கண்டுபிடித்துச் சற்றேனும் கண்ணயரலாம் என்று பார்த்தால் ஒரே டிஷ்யூம்...டிஷ்யூம்... சத்தம். இதுதாண்டா போலீஸ் படம். இரவு தூங்காத களைப்பில் அதிகாலை மைதானம் வந்தடைந்த போது எல்லோருக்கும் முன்னால் கொசு வரிசையில் நிற்பதைக் கண்டான். அவனும் இவனைக் கண்டதாகக்  காட்டிக்கொள்ளவில்லை.

எல்லோரும் எட்டாங்கிளாஸ் பாசான சர்டிபிக் கேட்டை  கையிலெடுத்து  வச்சிடுங்க.

வரிசை  நகர்ந்து  உள்ளே  சென்றது.

பெயர் கூப்பிடும்போது மட்டும் அந்த நபர் வந்து உடனடியாக வரிசையில் நிற்கவும்.

ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைந்துபோக எச்சரிக் கும் ஒலிப்பெருக்கிக் குழாயில் போலீஸ்காரன் ஒருவன் பேசினான்.

செல்லத்துரை! செல்லத்துரை யாரு?

நான்தான்.

தவளைக் கூறியது.

ஏன் இப்படி வேட்டியில் நிக்கிறே, போட்டிக்குத் தயாராகாம?

எல்லோரும் நிக்கர் கொண்டு வந்திருப்பதை அப்போதுதான் தவளை கவனித்தது. தன்னிடம் நிக்கர் இல்லை என்பதை எப்படிச் சொல்வது?

வேட்டிய உரிஞ்சுத் தள்ளு, இல்லாட்டா வெளிய விரட்டுவாங்க.

யாரோ பின்னாலிருந்து சொல்லிக் கொடுக்க அப்படியே செய்தான். வெறும் ஜட்டியுடன் நிற்பதைக் கண்டு எழுதிக்கொண்டிருந்த போலீஸ்காரன் தலைநிமிர்ந்து பார்த்தான். ஜட்டியின் இடது பக்கத்தில் எலி கறம்பினது போல ஒரு சின்ன ஓட்டை.

இதென்ன, ஏர்கண்டிஷனா செய்திருக்கு?

போலீஸ்காரனுக்கும் நகைச்சுவை உணர்வு உண்டென்பதைத் தன்னை முன்னிறுத்தியா நிரூபிக்க வேண்டும் என்று தவளை வருத்தப்பட, மைதானத்திலிருந்த அனைத்து  வாய்களும்  பல்லைக்  காட்டின.

கேசவன்! கேசவன்.

இதோ இருக்கிறேன்.

கொசு கையை உயர்த்திக் காட்டியது. அது தன்னைப் போல அல்லாமல் நிக்கர் அணிந்துகொண்டு தயாராக வந்திருக்கிறது.

முதலில் உயரம் அளந்தார்கள். மரத்தில் அடிக் கணக்கு, மீட்டர் சகிதம் வரைந்து வைத்திருக்கும் அதன் உச்சியில் தகரம் ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. போலீஸ்காரன் அதை உயர்த்திப் பிடித்துக் கொண்டு ஆளை நிறுத்திவிட்டுத் தகரத்தைக் கீழே விடுவான். அது வந்து தலையைத் தாக்கியதும் உயரம் பார்க்க நிற்பவன் அதிர்ச்சியில் குன்னுவான். அதுதான் உயரம். அதற்கு மேல் ஒருவனை நிமிர விடமாட்டார்கள்.

தவளைக்கு முன்னால் உயரம் பார்க்க நின்றிருந் தவன் ஒரு பாடிபில்டர். கடந்த மூன்று ஆண்டுகளாக மிஸ்டர் கிறிஸ்டியன் காலேஜ் பட்டத்தைத்தக்க வைத்துக்கொண்ட ஆணழகன். அவன் மார்பு உருண்டு திரண்டு காணப்படும். போலீஸ்காரனுக்கு அவன் மூச்சைப்பிடித்து உயரத்தைக் கூட்டிக்காண்பிப் பதாக ஒரு சந்தேகம்.

மூச்ச விடுடா!

நான் மூச்சே பிடிக்கல்ல.

வாய மூடு!

படார்! படார்! எனச் செவுட்டில் ரெண்டு மூன்று பட்டாசுகள் வெடித்தன.

மூச்ச விடுடா!

மார்பில் முஷ்டியால் குத்திப் பார்த்தான். பிறகு தான் அது நிஜமான தசையென்பது தெரிய வந்தது. மயிரிழையில் உயர அளவில் அவன் தப்பிப் பிழைத் தான். அடுத்து நின்ற தவளையின் கால்கள் இரண்டும் வெடவெடத்தன.

தவளையின் நடுக்கம் கண்டோ, பாடி பில்டர் விஷயத்தில் தான் செய்த பிழை உணர்ந்தோ போலீஸ் காரன் இவனது தலையை நூல் பிடித்து அளக்காத குத்துமதிப்பில் விட்டுவிட்டான்.

ஒழுங்கா வந்து நின்னா எதுக்கு நான் கோபப்படப் போறேன்?

வார்த்தையாலும்    சொன்னான்.

உயரம் குறைந்தவர்கள், மூச்சுபிடித்து நெஞ்சைவிரிப்பதில் தேர்ச்சிபெறாதவர்கள் எல்லாம் அந்தப்பகுதியில் இருந்த நுழைவு வழியாக வெளியேற்றப் பட்டனர். வாசலில் நின்ற போலீஸ்காரன் அப்படி வெளியேறுபவர்களின் பின்புறத்தில் காலுமடக்கி தலா  ஒரு  சவுட்டு வழங்கி  கவுரவித்து  அனுப்பினான்.

அடுத்தது நீளந்தாண்டுதல். தவளை ஒரே குதியலில் தாண்டிவிட்டது. கொசு மூன்றாவது வாய்ப்பில் எப்படியோ தப்பிப் பிழைத்தது. உயரந்தாண்டுதலிலும் அப்படியே.

அதற்குள் மைதானத்தில் சுள்ளென்று வெயிலடிக்க, அடுத்தப் போட்டிக்காக வேறொரு இடத்தில் கொண்டுவந்து நிறுத்தினார்கள். அது சாலையின் ஓரம் என்பதால் வருவோர் போவோர் வேடிக்கைப் பார்த்தனர். வெவரங்கெட்ட கண்டக்டர் ஒரு வன் லேடீஸ் பஸ்சை வேலியோரத்தில் கொண்டு நிறுத்தி டிக்கெட் போட்டான். கல்லூரி மாணவிகள் உள்ளே இருந்துகொண்டு மைதானத்தைப் பார்த்து சிரித்தார்கள். தன்னையே எல்லோரும் உற்றுப் பார்ப்பதாக நினைத்த தவளையார், கையதுகொண்டு மெய்யது பொத்தியவாறு  கூனிக்குறுகி  நின்றான்.

இன்னதென்று விளங்காத ஒரு மரத்தின் உச்சியில் வடம் கட்டப்பட்டிருந்தது. அதன் முக்கால் பாகத்தில் சிவப்பு நூலால் எல்லை வகுத்திருந்தார்கள். கைகளின் உதவியால் ஏறி நாடியை சிவப்புப்பகுதியில்  தொட்டுவிட்டு இறங்கவேண்டும்.

தவளை கயிறைப் பற்றிப் பிடித்ததும் ஜட்டியிலிருந்து வெளியே சாடியதுபோல இடுப்புக்குக் கீழே ஒரு உணர்ச்சி பிறந்தது. ரூம்பாயின் காஸ்ட்லி யான பார்த்தாஸ் புடவை நினைவில் ஏறியமர்ந்து விளையாடியது. தொடைகளை இறுக்கி தற்காலிக மகுடி கொண்டு ஆடுபாம்பை பத்தி சுருக்க வைக்கும் முயற்சியில் மேலே ஏறுவது தடைபட்டது.வேலையா? மானமா? என்று உடலாடிய வழக் காடுமன்றத்தில் மானமே வெற்றிப் பெற்றதாகத் தீர்ப்பு வந்தது. பிறகென்ன, தோல்விக்கு ஆறுதல்பரிசாகத் தந்த உதையை வாங்கிவிட்டு மைதானத் துக்கு  வெளியே  தவளை  வந்து  நின்றது.

தேர்வு ஒழுங்காக நடக்கிறதா என்பதைக் கூடார பந்தலில் இருந்து பைனாக்குலர் வழியாகப் பார்வை யிடும் கண்காணிப்பாளருக்குப் பின்னால் பதுங்கி நின்ற தவளையை வெற்றிப்பெருமிதம் கொண்ட பார்வையால் கடந்து சென்றது கொசு. தவளையால் பொறுக்க முடியவில்லை. கொசுவுக்கு ஒரு காலம் வந்தால் தவளைக்கும் ஒரு காலம் வரும் என்று நினைத்துக்கொண்டது.

முள்கம்பி வேலிக்கு வெளியே ஐஸ்வண்டியில் கிடுக்கிக்கொண்டிருந்தவனை யாரும் தடுக்கவில்லை. இடையிடையே போலீஸ்காரர்கள் அவனிடமிருந்து ஓசியில் ஐஸ்வாங்கிக் குடித்தவண்ணம் இருந்தனர். கொசுவுக்கும் ஆசை வரவே நிக்கரில் கை விட்டு காசெடுத்து கம்பி வேலிக்கிடையில் கைநீட்டிப் பெற்றுக் கடைசி வரிசையில் போய் உட்கார்ந்து உறியத் தொடங்கியது.

போலீஸ்காரன் ஒருவன் வந்து கொசுவை எழும்பச் சொன்னான். கையிலிருந்த ஐஸை நிக்கர் பையில் மறைத்துவிட்டுக் கொசு எழும்பியது. தனக்குப் பின் னால் வரச்சொல்லி கூடாரம் ஒன்றிற்குக் கொண்டு சென்று பாக்கெட்டிலிருந்த இருபது ரூபாய் நோட்டையும் ஐஸ் வாங்கியதில் மீதி எட்டணாவையும் கையிலெடுத்தான். உள்ளாடையில் மறைத்துவைத்திருக்கும் காசை நினைத்து நிக்கரை கீழே உரிந்தவன், கர்மம்! கர்மம்! என்று தலையில் அடித்துக்கொண்டான். கொசுவுக்குச் செகண்ட் பேப்பர் கிடையாது. செலக்ஷனுக்கு வந்த இடத்தில் இப்படியெல்லாம் தவறாக நடந்துகொள்ளக்கூடாது என்றுஇருபது ருபாய் ஐம்பது காசு அளவிற்கு டியூஷன் சொல்லிக் கொடுத்துவிட்டு அனுப்பினான் போலீஸ் காரன்.

அடுத்து ஆயிரத்து ஐந்நூறு மீட்டர் ஓட்டத்தில்கொசு தோல்வியைத் தழுவியது. எடுத்த எடுப்பிலேயே வேகமாகப் பறந்ததால் இரண்டாவது சுற்றிலேயே தளர்ந்து போனது. மீதியுள்ள ஐந்தரைகிரவுண்டையும் மூச்சிரைத்தவாறு ஓடி இலக்கை அடைவதற்குள் மணியடித்து நிறுத்திவிட்டர்கள். இறுதிப்போட்டி என்பதால் உதைபெற முடிய வில்லை.

மைதானத்திலிருந்த பொருட்களைத் தேர்வுபெற்ற நபர்களை வைத்து போலீசார் மாற்றிப்பறக்கிக்கொண்டிருந்தார்கள். கண்காணிப்பாளருக்கு அருகில்  நின்ற  உதவியாளர்  அவர்களை அணுகினார்.

இங்க தென்னமரம் ஏறத் தெரிஞ்சவங்க யாராவது உண்டா?

.............

யாரும்  இல்லையா?

எனக்குத் தெரியும் சார்!

கயிறு இழுத்துக் கட்டப்பட்ட பகுதிக்கு வெளியே நின்ற தவளை சத்தம் போட்டது.

துப்பாக்கியில் சொருகும் கத்திபோல எதையோ அவன் கையில் தந்த உதவியாளன். மைதானத்தில் நின்ற தெங்கைக் காட்டி இரண்டு மூன்று குலைகளை அறுத்துத் தள்ளும்படி ஆணையிட்டான். தவளை அதற்கு முன்பே குத்துதார் பாய்ச்சிக்கொண்டு கோதாவில்  இறங்கிவிட்டது.

ஐந்து குலைகளில் மூன்றை காரில் ஏற்றினார்கள். ஒன்றை கூடாரத்திற்குப் பின்புறமாக ஒளித்துப் போட சொன்னான் உதவியாளன். மீதியைச் சீவச்சொல்லி அதிகாரிகள் கரங்களுக்கு உறிஞ்சுகுழல் போட்டுத் தரப்பட்டன. எல்லாவற்றையும் ஆவலாகத் தவளை தான் செய்து கொடுத்தது.

கண்காணிப்பாளர் அவனை அழைத்தார். வெள்ளை நிற பேண்டில் அதே நிறத்தில் டீசர்ட் இன் பண்ணி வெள்ளைநிற கேன்வாசில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு ஆறடி உயரத்தில் அசால்டாக இருந்தவரை நெருக்கத்தில் அப்போதுதான் சரியாகக் கவனித்தான். பார்க்கப் பயமாக இருந்தது.

என்னா மேன் மரம் ஏறுகே, ரோப்கிளைம்பிங் இல்லே?

தமிழ்  உச்சரிப்பில்  வட இந்திய வாடை வீசியது.

உதவியாளர் கையில் கொடுத்த தாளில் டிக் செய்து விட்டு அவனைப் போகும்படி சைகை செய்தார். தவளை  ஆவேசத்தில்  சல்யூட்  வைத்தது.

அணைக்கட்டுப் பகுதியிலிருந்த காவலர் பயிற்சி மையத்தில் கமாண்டென்டாக அவர் இருந்தார். பெயர் முகர்ஜி. பயிற்சிக்காலத்திலேயே அந்த அருகாமையைப் பயன்படுத்தித் தனது காரியங்களை எல்லாம் கச்சிதமாக முடித்துக்கொண்டது தவளை. சென்டர் மாற்றிப் பத்தாங்கிளாஸ் பாசாகியது அதி லொன்று. முகர்ஜியின் அந்தரங்கங்களை உள்வாங் கிய தவளை அவற்றை உடனுக்குடன் நிறைவேற்றி சபாஷ் பெற்றது. அதுவரையிலும் அவருடன் நெருக்க மாக இருந்த பலரை ஒவ்வொன்றாகக் கழற்றி எடுத் தது. இரவு ஆபீசர்ஸ் மெஸ்ஸில் அவன் மட்டுமேகூடத் தனித்திருக்கும் நிலை நாள்போக்கில் உரு வானது.

சாயங்காலமே ஒரு கிரீன் லேபல் புல் எடுத்து வைப்பான். எரிவாயுவில் கம்பியில் சுழன்று சுட்டு எடுத்த இரண்டு முழுக்கோழி வேண்டும் அவருக்கு. துளிநீர் கூட விடாமல் அப்படியே முழுபாட்டிலையும் காலிசெய்து விட்டு சிறு சலனம் இல்லாமல்ஜீப் ஓட்டிச் செல்லும் அந்த அழகு இருக்கிறதே, காணக் கண்கோடி வேண்டும்.

சிலநேரம் நண்பர்களோ உறவினர்களோ உடன் வருவார்கள். தனது இரண்டு விரல்களை எம்.ஜி.ஆர். ஸ்டைலில் உயர்த்திப் பிடித்துக்கொண்டு தனது சாப்பாட்டுப் பெருமை குறித்து அவர்களிடம் இவ் வாறு உரைப்பார். ஐ டேக் ஒன்லி தோ சப்பாத்தி.

குனிந்த தலை நிமிராமல் கூட இருப்பவர்கள் தங்கள் மனசுக்குள் சிரித்துக்கொண்டே, இரண்டுமுழுக்கோழிகள் எங்கே போனதென்று யோசிக்கா மலா  இருப்பார்கள்?

பவுர்ணமி நாட்களின் இரவில் இருவருமாக ஜீப்பில் மலை உச்சிக்குச் செல்வார்கள். நள்ளிரவு தாண்டி அருவிக்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அப்போதெல்லாம் தனது தாய்மொழியில் பாட்டாக எதையோ முகர்ஜி மெல்லிய குரலில் பாடுவார். பலநாட்களாக இது நடந்துகொண்டிருக்க, ஒருநாள் அவர் பாடுவதன் பொருளைத் தமிழில் சொல்ல முடியுமா என்று கேட்டது தவளை. துண்டு துண்டாக அவர் சொன்னவற்றைப் பொருத்தி எடுத்து வரிசைப் படுத்தி எழுதியபோதுதான் அதற்குள் உயிர் இருந்து துடிப்பதை  இருவரும்  உணர்ந்துகொண்டனர்.

நீருக்குள் ஆகாயம்

கிணற்றுக்குள் வெண்ணிலவு

ஏரியில் விண்மீன்கள்

நான் நதியில் கால் வைத்தால்

வானம் நீ ஏன் கலங்குகிறாய்?

நீரை இறைத்த போதும்

ஏன் வெளியே வர மறுக்கிறாய்

வண்ண நிலவே?

ஓடத்தில் வந்து வலை வீசிய பிறகும்

ஓடிவிட்டனவே விண்மீன்கள்

என்செய்வேன் மனசே!

எல்லாம் நிஜம் என்றாலும்

எனக்கு மட்டும் நீங்களெல்லாம்

நிழலாக இருப்பது ஏன்?

இக்கவிதை தனக்குப் பிரியமான பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் மீது, தான் கருதியது என்றும், அவள் நினைவு மனதில் தோன்றும்போதெல்லாம் பாடுவதாகவும் சொன்னார். இவ்வாறு அவர் பாடியவற்றை மொத்தமாகச் சேகரித்தபோது ஒரு தொகுப்புக்கான அளவு கவிதைகள் சேர்ந்தன. அதற்கு நீருக்குள் ஆகாயம் என்ற தலைப்பைச் சுட்டியது தவளை. பல்கலைக்கழக இலக்கியத்துறைத் தலைவரிடம் சென்று அணிந்துரை கேட்டபோது படித்துவிட்டுப் பிடித்திருந்தால் எழுதுகிறேன் என்றார். தொலைபேசி வாயிலாகப் பலமுறை தொடர்புகொண்ட பிறகும் திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. ஒரு விடுமுறை நாளில் ஜீப் நிறைய போலீஸ்காரர்களைப் பேராசிரியரின் வீட்டில் கொண்டு இறக்கிய தவளை,துப்பாக்கி ஏந்திய நிலையில் வாசலில் இருவரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றது. அவர்எழுதி முடிக்கும்வரை வலதுபுறம், இடதுபுறம்,முதுகுக்குப் பின், முன் என நான்கு போலீசார் பாதுகாப்புக்கு நிற்க, அரைமணி நேரத்தில் ஆறுபக்க  அணிந்துரை  தயாராகிவிட்டது.

அந்த வருடம் பட்டமளிப்பு விழாவுக்கு மாநில முதல்வர் வந்தார். தங்கியிருந்த விருந்தினர் மாளிகையில் போய்ச் சந்தித்த முகர்ஜி கவிதை நூலை அவர் கையில் தந்து ஆசி பெற்றார். அடுத்தநாள் நடந்த பட்டமளிப்பு விழாவில், வங்கத்துச் சிங்கம், தாகூர் மண்ணிலிருந்து கிடைத்த தங்கம், தமிழுக்கு இப் போது அங்கம், காவல்துறைக்கு மட்டுமல்ல, காதல் துறைக்கும் இந்தச் சிறப்புத் தங்கும். எனப் புகழ்ந்து அதிலுள்ள கவிதைகளை மேற்கோள் காட்டி பேசினார் முதல்வர்.

கிறுகிறுத்துப் போன முகர்ஜியைப் பட்டிமன்றப்புலவர்கள் தங்கள் தோளில் சுமந்து தமிழகமெங்கும் கொண்டு திரிந்தனர். கல்லூரி ஆண்டுவிழா மேடைகளில் நன்னெறி புகலும் பெட்டகமானார். தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் மனிதஉரிமைப் போராளியாக வும் வெகுண்டார். எந்த மேடையானாலும் தான் அகில இந்திய அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில் வென்ற தகவலை சொல்லாமல் விடமாட்டார். நீங்களும் அதுபோல் சுடவேண்டும் என்பதை மட்டும் சொல்லாமல் விடுவார். விரைவில் வேலையை விட்டு விலகி தேர்தலில் நின்று மத்தியமந்திரி ஆகப் போகிறார் என்று பத்திரிகைகள் எழுதின.

தன்னைத் தமிழ்நாடறிய பிரபலமாக்கிய தவளையை அவர் கடைசிவரை மறக்கவில்லை. தவளை சொன்னதன் பேரில் பத்தாண்டுகளுக்கு மேலாகத் தன்னை நிழல் போல் தொடர்ந்த உதவியாளரை முகிலன் குடியிருப்புக்கு மாற்றி உத்தரவைக் கையில் கொடுத்தார். நாகர்கோயில் பசங்க உதவி செஞ்சவன் நெஞ்சிலதான் முதல்ல மிதிப்பான்ணு தெரிஞ்சும் தப்புச் செய்திட்டேன் ஐயா என்று தொழுதபோது, போமேன் ஒப்பாரி வெக்காம என்று விரட்டி அடித் தார்.

சுதந்திர தினவிழா நிகழ்ச்சிக்கு புதுடில்லி வந்த முகர்ஜி குடியரசுத்தலைவருடன் இரவு விருந்தில் கலந்துகொண்டார். குடியரசுத்தலைவரே நேரில் வந்து, தமிழே வருக! என வரவேற்று அழைத்துச் சென்றார். இருவரும் ரோஜாவனத்தில் அமர்ந்து தாகூரையும், பாரதியாரையும் பாடினார்கள். அடுத்த சில நாட்களில் குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு அதிகாரியாக முகர்ஜி டெல்லிக்கு மாற்றலாகிச் சென்றார். எழுத்து எழுதியவனை எழுதும் என்று எவனோ எழுதினான். தவளை எழுதப்போனஎழுத்து அவனை வீழ்த்தியது. முகர்ஜி போன பிறகுவாழ்க்கையின் பெரும்பகுதியும் அடியோலப்பாடு களாகத்தான் கழிந்தன. கடைசிக்காலத்தில் சென்னை வந்து ஒதுங்கியபோது முகிலன் குடியிருப்புக்குத் தன்னால் மாறிச்செல்ல காரணமான முகர்ஜியின் உதவியாளன். தனது தலைக்குமேல் இன்ஸ்பெக்டராக வீற்றிருந்தான்.

---

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஜெனரல் கம்பார்ட்மென்ட் கோச் அன்று வழக்கத்துக்கும் அதிகமாக விழிபிதுங்கிக் கொண்டிருந்தது. இருப்பதே மக்காணி குட்டி போட்டது போல ரெண்டு பெட்டி.அதில் கேரளமும் தமிழ்நாடும் போட்டி போட்டுக் கொண்டு ஏறினால் எப்படித் தாங்கும்? அதன் கடைசிப் பெட்டி நாலில் ஒரு பகுதியாகச் சுருங்கி வீட்டின் சிறிய அறையை ஞாபகப்படுத்தும் வகையில் ஊனமுற்றோருக்கான பெட்டிக்கு அடுத்திருந் தது. அது நாகர்கோயில் வரை தான் லேடீஸ் கம் பார்ட்மென்ட். அதற்குப்பிறகு பொதுவில் மாறும். இந்த ரகசியம் புரியாத பலர் தொடர்ந்து லேடீஸ் கம்பார்ட்மென்ட் எனக்கருதி ஒதுங்குவதால் சாவகாச மாகக் கிடைத்த இடவசதியை அனுபவித்தவாறு அந்தப் பெரியவர் அமர்ந்திருந்தார்.

பார்ப்பதற்குத் தவில் வித்வானோ எனக்கருதும் வகையில் இரண்டு கைகளிலும் வாரிக்கோரி ஏழு பெரிய மோதிரங்கள் அணிந்திருந்தார். இரண்டு பெருவிரல்களைத் தவிர்த்து எட்டு வரவேண்டும், நியூமராலஜி ஒன்றைக் குறைத்திருக்கலாம். ஆனால்தவிலுக்கும் அவருக்கும் காததூரம் என்பது மட்டுமல்ல யாருக்கும் தாளம் போடாதவர் என்று முகத்தில் தெரிந்தது. அவர் பெயரும் தாமரைக்கனி அல்ல, அர்னால்ட்.

அதுவரை கடைசியாக இருந்த பெட்டி, என்ஜின் திசைமாறி வந்து இணைந்ததும் முதல் கம்பார்ட் மென்டாக மாறி சென்னை நோக்கிய பயணத்திற்குத் தயாரானது. கீழே நின்ற வாலிபன், இருபத்தைந்து வயதிருக்கும் அவனுக்கு, பெரியவரின் விரல்களையே பார்த்துக்கொண்டிருந்தான். கக்கூசுக்குப் போனா மனுஷன் கஷ்டப்பட்டுப் போவாரே என்று யாரோ ஒருவர், கூட இன்னொருவரிடம் பேசியவாறு கடந்து சென்றனர்.

இதில் நம்ம ஏறலாமா?

யாரும் ஏறலாம்.

லேடீஸ் படம் போட்டிருக்கே?

அது நாகர்கோயில் வரைதான்.

உள்ளே எட்டிப் பார்த்த பிறகுதான் ஆண்களும் பெண்களுமாக மேலும் சிலர் இருப்பது தெரிந்தது. முகத்தைப் பார்த்தால் திருநெல்வேலிக்காரர்களாகத் தெரிந்தார்கள். அலுவலக வேலைக்காக அன்றாடம் வந்து செல்கிறவர்கள் போல.

வண்டி புறப்படப்  போகுது,  உள்ள வா!

பெரியவர் அவனை அழைத்தார். உள்ளே வந்தவன் அவருக்கெதிரில் இருந்த தனி இருக்கையில் போய் அமர்ந்தான். விசில் பறந்ததும் ரெயில் பிளிறி யது.

பக்கதாளங்கள் சடசடக்கச் செவுடு பிடித்துப் பாடிச்சென்ற வண்டி கபடி ஆடத்தொடங்கியதும் அந்த வாலிபன் முகத்தில் மரண அவஸ்தை படர்ந் தது. அவன் நிலைகுலைந்து போயிருந்தான். பெரி யவர் பையிலிருந்து சோற்றுப்பொதியை எடுத்துப்பிரித்தார். தீயில் வாட்டிய வாழை இலை வாசனை யோடு சேர்ந்து அரக்கு அரிச்சோறும், மரக்கறிகூட்டும், வற்றல் மிளகைச் சுட்டு அரைத்த தேங்காய்த் துவையலும், அவித்த தாறாமுட்டையும் கலந்த மணம் அந்தப் பெட்டியிலிருந்தவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

நீ சாப்பிடல்லியா தம்பி?

வேண்டாம்.

கொண்டு வந்திருக்கியா?

இல்ல.

அப்ப வாங்கித்தான் சாப்பிடணும். வள்ளியூர்வரட்டும். வாங்கிக்கலாம்.

அவர் சாப்பிட்டதைவிட அதிகமாக வலதுகையில் கிடந்த மூன்று மோதிரங்களும் சாப்பிட்டிருக்க வேண்டும். கை கழுவுவதற்கு அவர் தலை மறைந்ததும் பெண்கள் பிப்பிப்பீ... டும்!டும்! வைத்துக் கும்மாளம் போட்டனர். அவைகளில் ஒன்றும் அந்தஇளைஞனிடம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை.

வள்ளியூர் வந்ததை அவனுக்கு நினைவூட்டிய பெரியவர் பார்சல் வாங்கச் சொன்னார். அவன் திரும்பவும் வேண்டாம் என்றான். அப்போதுதான் அவனது முகத்தை அவர் சரியாகப் பார்த்தார். அழுது தீர்ந்த லட்சணம் அதில் தெரிந்தது.

உடம்புக்கு சுகமில்லையா?

ஒண்ணுமில்ல.

வயசு பையன் இப்பிடி சாப்பிடாம இருக்கப்பிடாது தம்பி. வேளாவேளைக்கு சரியா சாப்பிடனும். இல்லாட்டா இப்பத் தெரியாது, அம்பது வயசுக்குப்  பெறவு  ஒடம்பில காட்டும்.

அவர் அனுபவத்தில் தோய்ந்து பேசினார்.

தம்பி எக்மோரா?

தாம்பரம், வேலைப் பார்க்கிறேன்.

பிளாட்பாரத்தில் நழுவிச்சென்ற டீக்காரனைக் கைதட்டி அழைத்தார், மோதிரங்கள் ஒன்றோடொன்று  உரசிக்கொள்ளாத  லாவகத்துடன்.

ரெண்டு குடு!

இந்தாப்பா குடி

நான் டீ குடிக்கிறது இல்ல.

அப்ப காப்பிச் சொல்லட்டுமா?

வேண்டாம்.

இதென்ன பிள்ளையா இருக்கிற? ஒரு வழிக்கும் ஒதுங்காதவனா இல்ல பழகுறே. ஏன்தான் இந்தத் தலைமுறை  இப்பிடிப் போவுதோ?

திருநெல்வேலியில் கூட்டம் பேரலை அடித்த போதும் தனியாக வந்த சில பெண்களைத் தவிர யாரும் அந்தப் பெட்டியில் ஏறவில்லை. பெண்கள் மொத்தமாக ஒருபுறம் ஒதுங்க, மறுபுறம் எட்டுபேர் அமரும் இரண்டு சீட்டையும் தனித்தனியாக இருவரும் பகிர்ந்தனர். முழுசாக நீண்டு நிமிர்ந்து கிடக்கக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட இளை ஞன் தோளில் தொங்கிய பையைத் தலைக்கு வைத்து அப்படியே சுருண்டான்.

பெரியவரின் கண்கள் அவன் படுத்துக்கிடப்பதைக் கூர்ந்து கவனித்தன. கால்களில் அணிந்த ஷூவைக் கூடக் கழற்றாமல் இன் பண்ணின அதே நிலையில் எதையோ பறிகொடுத்தவனைப் போலத் துயின்றான். காலில் கிடக்கும் ஷூவின் விலை எட்டாயிரம் தாண்டும். வான்ஹூசைன் பிரான்ட் சட்டை. பெல்ற்றும் அதுபோல். சற்று வசதியான குடும்பம் என்று கணித்தார்.

அவன் கைகள் நடுங்குவதைக் கண்டு ஜன்னல் கண்ணாடியைக் கீழே இறக்கினார். மின்விசிறியை நிறுத்தலாமா என்று யோசித்துவிட்டு ஏனோ அதைக் கைவிட்டார். தனது உடம்பைத் தழுவிக்கிடந்த சால் வையை எடுத்து அவன்மேல் போர்த்தியது தான் தாமதம், தேகம் குலுங்கப் பேரதிர்வுடன் கேவிக்கேவி அழுதான். இதுவரை முழித்துதான் கிடந்திருக்கிறான் என்பதை அப்போதுதான் அவர் அறிந்தார்.

என்னப்பா, என்ன?

தான் தவறாக நடந்துகொள்ளவில்லையே என்றுஅங்கலாய்த்த பெரியவர் அவனை எழுப்பி இருத் தினார்.

எதுக்கு அழறே? சொல்லு.

ஒண்ணும் இல்ல.

அவன் ஒவ்வொரு எழுத்தாக உச்சரிப்பது போல அழுகையினூடே பேசினான்.

பெண்கள் ஒதுங்கியிருந்த பகுதியிலிருந்து இருவர் எட்டிப் பார்ப்பதைக் கவனித்தவர் அவன் கையைப் பிடித்து இழுத்து தான் அமர்ந்திருந்த இடத்தின் வலது பக்கமாகக் கொண்டு வந்து இருத்தினார். அவன் அழுகை ஓய்ந்து துளியெடுத்ததும் திரும்பப் பேசினார்.

என்ன பிரச்சினை?

.............

வீட்டில எதுவும் சண்டையா?

இல்ல.

பிறகு?

அப்... அப்...பா  திட்டினாரு...

அவன் திரும்பவும் அழுவதைப் பார்த்துச் சத்தம் போட்டுச் சிரித்தார் பெரியவர். இசையோடு கலந்த கவிதைபோல அது இருந்தது.

அட கிறுக்குப்பய மவனே! கொப்பன் திட்டாம வேற  யாருடா  ஒன்னத்  திட்டுவா?

அவன் தோளில் உரிமையோடு தனது இரண்டு கைகளையும் போட்டு ஊஞ்சலாட்டம் காட்டியவாறு பேசினார்.

நான் உன்ன திட்ட முடியுமா? சொல்லு. அப்பிடி திட்டினேண்ணு வச்சிக்க, நீ என்ன சும்மா விட்டாலும் ஒங்கொப்பன் விடுவானா? எவம்பில எனக்க மோனுட்ட தகராறு செஞ்சதுண்ணு கேட்டு உதைக்க மாட்டான்?

இதுக்கு முன்னே ஒருநாளு கூட என்ன அவரு திட்டீற்று இல்ல.

அதுதான் வருத்தமா?

ம்...

பெரியவர் எழும்பி நின்று தனது வேட்டியை மடித்துக் கட்டினார். தொடையைச் சரித்து நீளவாக்கில்  இருந்த  தழும்பை  அவனிடம் காட்டினார்.

இது என்ன தெரியுமா? சின்ன வயசில எனக்க அப்பா இழுத்த சூடு. எதுக்குத் தெரியுமா? சொல்றேன்.

வேட்டியை அவிழ்த்துவிட்டு வந்த பழையபடி உட் கார்ந்தார்.

எனக்க அப்பா அப்ப வெற்றிலைக் கொடி வச்சிருந்தாரு. காலத்த நாலுமணிக்கு நான் எழும்பி கொடிக்கு வெள்ளங்கோர போணும். ஒருநாளு மழைக்கொதுவில கெடந்து ஒறங்கீற்றேண்ணு வச்ச சூடாக்கும்  இது, பாத்தியா?

அவர் கடகடவென்று சிரித்தார்.

அதுக்குப் பெறவு இந்த அர்னால்ட் ஒலகத்திலஎந்த இடத்தில் இருந்தாலும், என்ன சோக்கேடு வந்தாலும் தனக்க வாழ்நாளில ஒருநாளு கூடக் காலைல நாலுமணிக்கு எழும்பாம இருந்தது இல்ல. இதுபோல எனக்க ஒடம்பு பூரா அப்பன் தந்த விழுப்புண்கள்  மயம்மா  உண்டு.

அவன் அதிசயமாகப் பார்த்தான்.

இண்ணத்த பிள்ளெயளுக்கு அப்பன் தேச்சியத்தில ரெண்டு வார்த்தைகள் பேசிப்போட்டா ஒடன்தானே கரைச்சலும், சங்கடமும் வந்திருது. ஆமா, பெற்றோ ருக்கு  நீ  ஒருத்தன்  மட்டும்தானா?

ஒரு தம்பியும் உண்டு.

என்ன படிச்சிருக்கே?

பி.இ. மெக்கானிக்கல்.

நல்ல பாடமாச்சே.

என்ன சம்பளம் கிட்டுது?

பிடித்தம்  போகக் கையில ஒரு எட்டாயிரம் வரும்.

வாடகைக்கே  பத்தாதே.

ஒரு வீட்டுக்கத் தட்டுல கொட்டகை போட்டு நாலு பேராத் தங்கி சமைத்துச் சாப்பிடுகிறோம். ரெண் டாயிரம்  ரூவாதான்  வாடகை.

மிடுக்கன்! நம்ம வீட்டில வாழ்ந்த நிலைமைய போற இடத்தில சிந்திக்காதவன் தான் எப்பவும் முன்னேறுவான். நீ நல்லா வருவேடா.

பெரியவர் அவனை ஆசீர்வதித்தார்.

இண்ணு ஒங்களுக்கெல்லாம் நல்ல வாய்ப்பு வசதிகள் இருக்கு. இதில நூறில ஒண்ணு இல்லாத்த காலத்தில, எனக்க பதிநாலாவது வயசில மொதல் மொதலா நான் மெட்ராசுக்கு வந்தேன். செரியா அம்பத்துரெண்டு வருஷம் ஆகுது. அன்னைக்குள்ள மெட்ராஸ் எப்படி இருந்திருக்கும்னு இன்னைக்கு ஒன்னால யோசிக்க முடியுதா?

இல்ல, நீங்க என்ன வேலை பாத்திய?

வேலையா? நான் பாக்காத தொழிலே கிடை யாது தம்பி. சின்னமலை தாமஸ் கோயில் திருவிழா சமயம் ரோட்டோரத்தில் மிட்டாய்க்கடை போட்டு விற்றேன். அதுதான் நான் செய்த முதல் தொழில். பிறகு தள்ளு வண்டியில மணி அடிச்சிற்று தெருத் தெருவா வியாபாரம். இண்ணு சிற்றிக்குள்ள பதினெட்டுக் கடை எனக்கிருக்கு. கிறிஸ்து பேக்கரி கேள்விப்பட்டிருக்கியா?

டி.வி. விளம்பரத்தில பாத்திருக்கேன். கிறிஸ்மஸ் கேக்குக்கு ரொம்பவும் பேமஸ் ஆச்சே, அதுக்க ஓனரா நீங்க?

அவரைப்  பார்க்க  அவனுக்கு  வியப்பாக இருந் தது.

பிளைட்ல போக வேண்டியவன் ஜெனரல் கம் பார்ட்மென்ட்ல யாத்திரை செய்கிறானேண்ணுயோசிக்கிறியா? மனசுக்கு திருப்தியா எப்பவாவதுஒரு தடவை ஊருக்கு வரும்போது இந்த மாதிரி யாத்திரை செய்வது எனக்க வழக்கம். பழைய வாழ்க்கை மறந்து போகப்பிடாது இல்லையா?

பேசியபடியே தனது பையைத் திறந்து சின்னடப்பி ஒன்றைக் கையில் எடுத்தார். அதன்மேல் பாதாம் ஹல்வா என ஆங்கிலத்தில் எழுதப்பட் டிருந்தது. கீழே டெலிசியஸ் ட்ரீட். ரிச் இன் பாதம் என விளக்கவுரை இருந்தது.

சாப்பிட்டுப் பாரு, நல்லா இருக்கும்.

பையன் வாங்கிச் சாப்பிட்டு விட்டு நன்றாக இருப் பதாக முகத்தில் வெளிப்படுத்தினான்.

காலி டப்பாவத் தூக்கித் தூரப் போடாத. சென்னை யில நிறைய வயசாளிக இதத்தான் வெற்றிலப் பெட்டியா  உபயோகிக்காங்க.

விளம்பரமா? என்று கேட்கத் தோன்றியது பையனுக்கு.  ஆனால்  எதுவும்  பேசவில்லை.

அதன்பிறகு அவர் படுக்கச் சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் பெருங்குறட்டைப் பிரகடனத்துடன் தூங்கிப்போனார். பையன் மின்விசிறியைப் பார்த்த படி படுத்திருந்தானே தவிர அவனுக்குத் தூக்கம் வரவில்லை.  முன்பைவிட  மனபாரம் அதிகரித்தது.

நேற்று அப்பா ஒரு பிசிறு பேசி ஓய்ந்தபிறகு அடுத்த கட்டமாக அடிக்கக் கையை ஓங்கினார். அப்படி என்னதான் நான் அவரிடம் சொல்லிப் போட்டேன்? தான் விரும்பும் பெண்ணைத் திரு மணம் செய்வது குறித்து மகன் அப்பாவிடம் பேசாமல் வேறு யாரிடம் பேச முடியும்?

ஜெபராஜ்! நீ சின்னவயசில இருந்தே சண்டே ஸ்கூல் பெய் பைபிள் படிச்சி, கிறிஸ்தவப் பக்தி முறையில வளர்ந்தவனாக்கும். நீ பைபிளுக்கு விரோதமா ஒருக்காலும் நடக்கப்பிடாது.

விரும்பினவள திருமணம் செய்யப்பிடாதுண்ணு பைபிள்ல எங்க இருக்கு?

என்னையே எதுத்துக் கேள்வி கேக்கும் அளவுக்கு வந்திட்டியா? நான் யாரு தெரியுமாடா ஒனக்கு? சர்ச்சில் டீக்கனாரு. எக்சிக்குட்டிக்கு நிக்கப்போறேன்.

நான் நிக்கண்டாம்ணு சொல்லல்லியே?

அன்னிய ஸ்திரிய நீ விவாகம் செய்தா யாருடா எனக்கு ஓட்டுத் தருவான்? தலைநிமிர்ந்து என்னால வெளிய இறங்கி மானமா ஒண்ணு நடக்க முடியுமாடா?

அப்பாவின் உலகம் இந்த அளவு சுருங்கிப் போன தற்குக் காரணம் திருச்சபை அரசியல் என்று அப்போது தெரிந்தது. அது திரட்டி வைத்திருக்கும் மனிதகூட்டம் அல்பத்தனத்தின் வளர்ச்சி என்பதைப் புரிந்தான்.

கடைசியா சொல்லியேன், கோடி மறியக்கூடிய அளவுக்கு ஒனக்குச் சம்மந்தங்கள் வருது. கேட்டுநடந்தா நல்லா இருப்பே. அவளத்தான் கெட்டு வேன்ணு நிண்ணா, சொத்தில பொடி வகைத் தர மாட்டேன். எளைய பையனுக்குத்தான் எல்லாம் அளந்திருக்கு போலத் தெரியுது.

மேல்மருவத்தூரில் படையெடுத்து வந்த கூட்டம்அவனை எழுப்பி இருத்தியது. பெரியவர் ஜன்ன லோரம் அமர்ந்து சூரிய ஒளியில் குளித்தவாறு அன்றைய செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருந்தார். அவரது முகம் அவனுக்குத் தெரியாதவாறு பயணிகள் குறுக்கும் நெடுக்குமாக நின்று கொண் டிருந்தார்கள்.

தாம்பரம் வந்ததும் கவனமாக அவனைஅழைத்துத் தனது விசிட்டிங் கார்டைக் கையில் கொடுத்தார்.

தம்பி, இதில எனக்க போன் நம்பர் இருக்கு. எதுவானாலும் கூச்சப்படாம கால் பண்ணு. எனக்கு நிறையக் கம்பெனிகளுக்க டீலர்ஸைச் தெரியும். வேலைகூடக் கேட்டுப்பார்க்கலாம். இறங்கினதும் அப்பாவுக்கு மறக்காம  போன்  பண்ணு.

அப்பா என்றதும் அவனுக்குப் பயத்துடன் கூடிய உணர்வு நெஞ்சில் படர்ந்தது. இரவு முழுவதும் தூங்காத களைப்பும், கவலையும் ஒருசேர, தள்ளாடிய படி அவன் நடந்து செல்வதை ரெயிலில் அமர்ந்தவாறு  பெரியவர்  பார்த்துக்கொண்டிருந்தார்.

அடுத்த இருபது நிமிடத்தில் எக்மோர் எட்டியது. முதல் பிளாட்பாம் என்பதால் வசதியாகிப் போனது. வெளியே இறங்கி நடந்த பெரியவர் தனது கார் நிற்கும் இடத்தை அடைந்தார். அங்கு ஏழெட்டு போலீசார்  அவருக்காகக்  காத்து நின்றனர்.

ஜீப்ல ஏறு சார்!

பாதி மரியாதையும், பாதி மரியாதைக் குறை வையும் குழைத்த மொழியில் சப் இன்ஸ்பெக்டர் பேசினான்.

ஏய்... நீ எட்டணா செல்லத்துரை தானே? நான் எதுக்குடா  ஜீப்புல  ஏறணும்?

என்றோ ஒருநாள் தள்ளுவண்டியில் மிட்டாய் வியாபாரம் செய்தவரைத் தடுத்து நிறுத்தி வாங்கிய எட்டணா நாமம் வாழ்நாள் முழுக்கத் தன்னைவிட்டு நீங்காத வடுவானதை நினைத்து வருத்தப்பட்ட தவளை மறுகணம் மிடுக்கை வரவழைத்துக் கொண்டு பேசியது.

எதுவானாலும் ஸ்டேஷன்ல வந்து பேசு.

நான் காரில வாறேன்.

பெரியவர் சற்று அவகாசம் எடுத்து தனது வழக் கறிஞருடன் காவல்நிலையம் சென்றபோது மதியத் தை எட்டி இருந்தது. அவரிடம் கண்ணாடி கவரில்சீல் செய்து வைத்திருந்த வியர்வை காயாத துண்டுத் தாளை  நீட்டிப்  பேசியது  தவளை.

இது உங்க விசிட்டிங்கார்டு தானே?

ஆமா.

தாம்பரம் மார்க்கெட் பகுதியில் இறந்து கிடந்த பையனுக்கச் சட்டைப்பையில் நாங்க கண்டெடுத்தது. இது  எப்படி  அவன்  பாக்கெட்டுக்குள்ளால  போச்சி?

அது வந்து...

சொல்லுங்க அர்னால்ட்! பையனுக்கும் உங்க ளுக்கும் என்ன முன்விரோதம்?

அப்படியெல்லாம் இல்ல. வந்து... நான் சொல் றேன்.

இது கொலைன்னு போலீஸ் டிப்பார்ட்மென்ட் சந்தேகிக்குது.

அதெல்லாம் இல்ல.

அவர் உடல் வியர்வையில் குளித்தது. தடுமாறியபடி பேசினார்.

பிறகு எப்படிச் சார் ஒங்க விசிட்டிங் கார்டு பைய னுக்கச் சட்டைப்பையில் இருந்தது.?

நான் வழக்கறிஞரோடு கொஞ்சம் தனியா பேசணும்.

நோ!  அதுக்கெல்லாம்  சான்சே இல்ல.

வழக்கறிஞர் எழும்பி வெளியே சென்றார்.சிறிது நேரத்திற்குள் ஸ்டேஷனுக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. தவளை ஏழெட்டுமுறை எஸ் சார்! எனத் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தது.

அன்று தனது வழக்கறிஞருடன் அவர் அங்கிருந்து மீண்டார்.

அதன் பிறகு ஒரு திருமண வீட்டில் எதேச்சையாகக் காண்பதுபோல முன்கூட்டிய தீர்மானத்துடன் பெரியவரைச்  சந்தித்துப்  பேசியது  தவளை.

ஒங்க கேசில பையனுக்க அப்பா தந்த கம்ப் ளெய்ன்ட் அப்படியே இருக்கு. இன்னமும் எப்ஐஆர் போடல்ல.

ஏன் போடல்ல?

இது என்ன கேள்வி சார், ஆயிரந்தான் இருந்தாலும் நம்ம ஒரே ஜனங்க இல்லியா? தொடு வெட்டிக் கும்,  ஞாறாம்விளைக்கும் பெருத்து தூரமா உண்டு?

நீ என்ன சொல்லவாறே செல்லத்துரை?

பெரியவரின் இரண்டு கைகளையும் பற்றிப்பிடித்த தவளை பாசத்தோடு விரல்களை வீணையின் நரம்புகளைப் போலப் பாவித்துக் கீதம் வாசித்தது.

நியாயமா ஒங்க பத்து விரல்லெயும் பத்துமோதிரம் போடணும். அவ்வளவு ஐஸ்வரியமானவள்ளல் கை. ஆனா ஏழுதான் போட்டிருக்கிய. மூணுகுறைஞ்சதினால என்ன கெட்டுப்போச்சி? செரி, ஒண்ணு கூடப் போட்டாதான் என்ன செய்யும்? எல்லாம் நல்லபடியா முடியும், முடியணும். நான் சொல்வது சரிதானே?

கையை வெடுக்கென உதறிய பெரியவர் தவளை யை ஒருமாதிரிப் பாலீத்தார். தாயளி! யாவாரியான எனக்கிட்டெயே யாவாரம் நடத்துதியா? என்று கேட்பது போல இருந்தது.

காலையில் அவர் நடைபயிற்சி செல்லும் பாதை யில் ஒருநாள் ஜீப்பை நிறுத்தியவாறு நின்று உரையாடினான்.

நீலாங்கரை பக்கம் நாலுகிரவுண்ட் நெலம் உங் களுக்குள்ளது சும்மாதான் கெடக்குதா?

சும்மாண்ணா?

படப்பு  பிடிச்சு  பராமரிப்பற்று  கெடக்குதுபோல.

அதுக்கிப்ப என்ன?

பிளாட்டு போடுகதா இருந்தா நல்ல விலைக்குவிற்றுத் தரலாம். எனக்கும் ஒரு பிளாட் அவசியப் படுது.

விக்கியதுக்கும், வாங்கியதுக்கும் அதுக்க ஒடமஸ்தன் உயிரோடதான் இருக்கியான். நீ ஒனக்க வேலை மயிரப் பாத்துட்டுப் போ!

முகத்தில் அடித்தாற்போலப் பேசிவிட்டு நகர்ந்தார்.

அவரிடம் எதையுமே பெறமுடியாது என்றறிந்த தவளை, ஒன்ன நான் பாத்துக்கிடலாம். என்று மனசுக்குள்ளாகக் கறுவியது. ரெயில் டிக்கெட்முதல் ஒவ்வொரு ஆதாரங்களாக உருவாக்கி வைத்து விட்டுப் புதியகதை எழுத ஆயத்தமானபோதுதான் அதற்கு வலு சேர்க்கும் வகையில் கொசு வந்து தவளையின்  வாயில்  வசமாகச்  சிக்கியது.

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு லிப்டில் அடிக்கடி அடையாளந்தெரியாத ஒருவன் வந்தமர்ந்துமது அருந்துவதாகவும், சிலசமயம் படுத்துறங்குவ தாகவும் ஸ்டேஷனுக்குத் தொலைபேசி வந்துகொண்டிருந்தது. நேரில் ஒருநாள் சென்றபோது கொசு முழுப் போதையில் சுருண்டு கிடப்பதைக் கண்டது தவளை.

லாக்கப்பில் மறுநாள் பதினொரு மணிக்கு போலக் கண்விழித்தவன், எதிரே சீருடையில் இருப் பவனைப் பார்த்தான். சந்தேகம் ததும்பத் திரும்பவும் பார்த்தான். அவனே தான்.

செல்லத்தொர, என்ன தெரியுதா?

“...............”

நான் கேசவன். எல்.எம்.எஸ். பள்ளியில சேந்து படிச்சமே, ஞாபகமிருக்கா?

மார்த்தாண்டத்திலா?

ஆமாலே, என்ன ஒருநாளு நீ அடிச்சேண்ணுபள்ளி முடிவில டவ்வர் ஓட்டல்ல கூட்டிற்றுப்போய்த் தோசை வேண்டித் தந்து சதிச்சது ஓறும வருதா?

இல்லியே...

சொல்லிக்கொண்டே பல்லைக் கடித்தது தவளை. அதை நினைக்கும் போதெல்லாம் காக்காய் வலிப்பு வந்ததுபோல உடம்பு முழுவதும் மின்சாரம் பாயும். ஜென்மம் மாறினாலும் மறந்து போகக்கூடியநிகழ்வா அது?

லே ஒருவாளி சாம்பார்! எல்லாத்தையும் மறந் திட்டியா?

ஓடிப்போய் நாலு சாத்து சாத்தலாமா என வந்தது தவளைக்கு. உலகமே மறந்துபோயிருந்த தனது பழைய வட்டப்பெயரை உயிர்ப்பித்தால் யாருக்குத் தான் கோபம் வராது? ஆனாலும் முகத்தில் நட்பின் பாவனையை மட்டுமே காட்டியது.

கொஞ்சம் போல ஞாபகம் வருது.

அது கொள்ளாம். எங்க என்ன மறந்து பெய்ற்றி யோண்ணு பயந்தேன்.

மறக்கவே மாட்டேன்.

----

இரவு நேரம் தவளை வெளியே இரைதேடப் போனதும் நாற்காலியில் வந்து அமர்ந்தார் இன்ஸ் பெக்டர். முகிலன் குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்திற்கு மாற்றலானதிலிருந்து எழும்பி, டிராபிக் கில் சிலகாலம் நின்று, லோக்கல் ஸ்டேஷனுக்கு மாறி எனப் பல்வேறு வளர்சிதை மாற்றங்கள் அடைந்து இறுதியாக வந்து உட்கார்ந்த நாற்காலியை அமரும் முன்பு ஒருமுறை அசைத்துப் பார்த்தவாறு  உட்காருவது அவர் வழக்கம்.

அன்றும் அவ்வாறு வந்தமர்ந்தார். அவர் முன்னால் நீளமான ஒரு கனத்த டாப்பைக் கொண்டு வந்துபார்வேட் கையெழுத்துக்காக வைத்தான் ஏட்டு. அதில்  கண்களை  ஓடவிட்டார் இன்ஸ்பெக்டர்.

தாம்பரம் வடக்குக் காவல்நிலையம். குற்றஎண்:36: 2003. சட்டப்பிரிவு: 302 இ.பி.கோ. சம்பவம் நடந்த இடம் காவல்நிலையத்திலிருந்து தெற்கே 1.05 கி.மீ. தொலைவிலுள்ள சந்தைவெளி. சம்பவம்நடந்த நாள் 8-4-2003 இரவு 23.00 மணி. தகவல் கிடைத்த நாள் 9-4-2003 காலை 6.00மணி. வாதி: கே.பாலையன், வயது 52, த:பெ ந. கொச்சப்பி, மான் நின்றவிளை, விரிகோடு, மார்த்தாண்டம்-629165, கன்னியாகுமரி மாவட்டம். எதிரி : த. அர்னால்ட், வயது 66, த:பெ தங்கசாமி, மலையரந்தோட்டம், பேரை, ஞாறாம்விளை வழி, மார்த்தாண்டம்-629165, கன்னியாகுமரி மாவட்டம். இரா.கேசவன், வயது50, த:பெ. இராமசாமி, கசவன்விளை, மார்த்தாண் டம்-629165, கன்னியாகுமரி மாவட்டம். இறந்தவர்: பா.ஜெபராஜ்,வயது 25, த.பெ: கே. பாலையன், மான் நின்றவிளை, விரிகோடு, மார்த்தாண்டம் - 629165,கன்னியாகுமரி மாவட்டம். காரணம்: முன் விரோதம்.

இது அந்த அர்னால்ட் கேசா??

ஆமா அய்யா

அக்யூஸ்ட  ஏன்  இன்னமும்  கைது  செய்யல்ல?

தெரியாது.

இது யாரு கேசவன்?

லாக்கப்ல உண்டு

மேசையிலிருந்த கண்ணாடியைத் திரும்பவும் தனது  மூக்கில்  வைத்துக்கொண்டு  படித்தார்.

சம்பவத்தன்று இரவு அர்னால்ட் தனது கிறிஸ்துபேக்கரி தயாரிப்பான பாதாம் ஹல்வாவில் கொடிய விஷம் கலந்து கொடுத்து ஜெபராஜை முன்விரோதம் காரணமாகக் கொன்றிருக்கிறார். கேசவன்என்ற 50 வயதுடைய, குற்றங்களில் ஈடுபட்டுப் பலமுறை சிறைத் தண்டனை அனுபவித்த சமூக விரோதியின் துணையோடு இதனைச் செய்திருக்கிறார். சான்றாக அர்னால்டின் விசிட்டிங் கார்டும், ஜெபராஜ் பையில் கண்டறியப்பட்ட  தின்றது  போக  மீதியிருந்த பாதாம் ஹல்வாவும்...

டப்பென அடைத்து வைத்துவிட்டு கண்ணாடியைக் கழற்றி மேசைமேல் வைத்தார் இன்ஸ்பெக்டர்.

பாரா, இங்க வா!

சல்யூட்டுடன் நின்றான்.

ஆக்ஸிஸ் பிரியாணி கடையில் இருந்து ஒரு பார்சல் மட்டன் பிரியாணி, சைடு டிஷ்க்கு சில்லி சிக்கன், ஆம்ப்ளேட் எல்லாம் ஒரு முன்னூறு ரூபாய்க்குபோல  ஒடனே  வாங்கீட்டு  வா!

ரைட்டர் ஏதோ சொல்ல அருகில் வந்தார்.

இது நீ எழுதினதா?

இல்ல.

அதானே பார்த்தேன்.

என்ன பிரச்சினை?

ஒண்ணுமில்ல, சோழியான் குடுமி சும்மா ஆடுமா? எல்லாம் நெக்ஸ்ட் பிரமோஷன்தான். அதையும் பாத்துக்கிடுவோமே... அந்தக் கொசுவ வெளியக் கொண்டு வா!

கொசு வந்து குனிந்து நின்றது. கால்முட்டால் பின்புறம்  ஏட்டு கொடுத்த ஊணலில் முதுகு நிமிர்ந்தது.

ஒம்  பேரென்ன?

கேசவன்.

தொழில்?

எலக்ட்ரீசியன்.

லிப்டிலெயும் எலெக்ட்ரிக்கல் வேலை செய்துதான் உள்ள வந்தியோ?

இல்ல சாமி, அங்கெ வேற ஒரு விஷயத்துக்குப் போனேன்.

தாலி அறுக்கவா?

அதெல்லாம் விட்டு ஒருவாடு வரியமாச்சி போற்றியே!

ஒமக்கு ஒரு கடையில நிண்ணு வேல பாத்தா தெனம்  அம்பது  ரூவா  சம்பளம் கிடைக்காதா  ஓய்?

இன்ஸ்பெக்டரின் குரலில் தென்பட்ட லேசான ஈரம் கொசுவுக்குப் பெரிய தெம்பைக் கொடுத்தது. தானாகவே நிமிர்ந்து நின்றான்.

எக்க பொன்னு நாயனே, வேல செஞ்சி தின்னிய காலமெல்லாம் கழிஞ்சி போச்சி. உண்மையா வேலை செஞ்சு தேகத்தில கொள்ளாத அடியும், இடியும் பட்டுச் சயரோகம் கிட்டியதுதான் பாக்கி. இவன் உதவ மாட்டான்ணு பெண்டாட்டியும், பிள்ளைகளும் தள்ளீற்றுப் போன பெறவு அப்பிடியும், இப்பிடியும் கொஞ்சம் திருட்டில இறங்கினது வாஸ்தவம்தான். ஆனா நீங்க சொல்லியது போல எல்லாம் பெரூசா ஒண்ணும் நான் செஞ்சிட்டு இல்ல.

லிப்டில என்ன வேல ஓய் ஒமக்கு, அங்க எதுக்குப் போனீரு?

அப்பிடிக் கேக்கணும் யாமானே. இத்திரி போல வெள்ளம் அடிச்சாட்டு எனக்கு ஒறங்கப் பற்றாது. ஒரு கோட்டர மடியில கெட்டீற்று நாலு நாளா அலையுதேன், இந்தப் பாழாப்போன சிற்றியில ராவுக்கும், பகலுக்கும் வித்தியாசமோ, ஒளிவு மறைவோ இல்லாம எங்கெயும் ஆளனக்கமும், ஆரவாரமுமா இருக்குது. கக்கூசில ஏறி அடிக்கிலாம்ணு பாத்தா அதுக்கும் அஞ்சிரூவா கேக்குதான். ஊரில வல்லதும் விளைகளும், வயக்காடுமா இருக்குமா, தொந்தரவு இல்ல. இஞ்ச அதுக்குப் பற்றுமா? அப்பதான் அந்த அன்ன ஊஞ்சல் கண்ணுல பட்டுது.

அன்ன ஊஞ்சலா?

வோ. ஏறியதும், எறங்கியதாட்டும் இருக்குமே, அதியான்.

காவல்நிலையம் என்பதையும் மறந்து எல்லோரும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.

அப்புறம்?

குகைக்க மின்ன நின்னு அலிபாபா போலமந்திரம் எதுவும் சொல்லாமலே கதவு தானா தெறந்துதா, நான் உள்ள போனேன். அப்ப யாருமே கிடையாது. தெய்வம் எனக்குத் தந்த சொர்க்கமா நெனச்சி கோட்டர எடுத்து காலி செஞ்சிட்டே இருந்தேன். ஜில்லுண்ணு அதுக்கக் கூடக் குளிரும் சொகம்மா இருந்துது.

டக்குண்ணு பானை பிஞ்சது போலக் கதவுரெண்டாப் பிளந்தது. ஈச்சிப் பற்றம் போல எங்கிருந் தெல்லாமோ ஜனங்க புகுந்து எனக்கு இடைஞ்சல்செஞ்சினும். அதில நடந்த கை தள்ளல்ல எனக்கு ஒண்ணிரண்டு அடியும் கெடச்சுது.

அடிச்சாங்களா?

பின்ன இல்லாம? அதிலெயும் வாயில செவப்பு மசி தேச்ச பொம்பள ஒருத்தி மாப்பிள்ளைட்ட சண்டை போட்டுட்டு வந்த வெப்றாளத்திலெயோ என்னவோ, செருப்பு கழற்றி அடிச்சா பாருங்க அடி, பொம்பளையள ரேப் செய்வியா? செய்வியா?ண்ணு கேட்டுக்கேட்டு அடிச்சா.

நான் சுருண்டு விழுந்து செத்ததுபோல ஆன பெறவு மறுநாளு லாக்கப்புல வச்சிதான் எனக்க ரெண்டு கண்ணும் தெறந்துது.

இன்னைக்கு ஒம்மள நல்லா குளிப்பாட்டப் போறோம். கான்ஸ்டபிள், இவரக் கூட்டீற்று போ உள்ள.

பூட்டப்படடிருந்த அறையைத் திறந்து விளக்கைப் போட்டு ஒரு மூலையில் கொண்டு போய் இருத்துவது வரைக்கும் என்ன நடக்கப்போகிறதோ என்ற அவஸ்தையில் கொசு தவித்தது. கேனில் இருந்த கள்ளச்சாராயத்தைச் சரித்துப் பிளாஸ்டிக் மக்கில் பிடித்துத் தனக்கு முன்னால் கான்ஸ்டபிள் கொண்டு வைத்த  பிறகும் அவனால் நம்பமுடியவில்லை.

எனக்கா?

வேற யாருக்கு? சீக்கிரம் காலி பண்ணு.

ஒருவித தயக்கத்தோடும், பதட்டத்தோடும் கண் களை மேலாகப் பராக்குப் பார்க்க விட்டுவிட்டு அவன் குடித்துக்கொண்டிருந்தான். வெளியே பார்சல் வாங்கப்போன பாரா பிரியாணி பொட்டலத்துடன் இன்ஸ்பெக்டரிடம் வந்து நின்றான்.

இங்க வச்சி சாப்பிடுகிறீங்களா, அல்லது வீட்டுக்குக்கொண்டு  போறீங்களா?

எனக்கில்ல, உள்ள ஒருத்தன் இருக்கான். அவ னுக்குக் கொண்டு போய்க் கொடு.

தனக்கு முன்னால் வைக்கப்பட்ட உணவு வகை களைக் கண்டதும் கொசுவுக்கு உடல் முழுவதும் நடுங்கியது. வாய் கசந்துபோய்க் குமட்டிக்கொண்டு வந்தது.

எடுத்து சாப்பிடு.

வேண்டாம் சாரே...

ஒனக்கிட்ட கொஞ்சீட்டு இருக்க எங்களுக்கு நேரம் இல்ல. இன்ஸ்பெக்டர் வாறதுக்கு முன்னால ஒரு பொடி மிச்சம் வைக்காம தின்னு தீர்க்கணும். இல்லேண்ணா, நடக்கிறது வேற.

மரத்தூளை சவைத்தது போல உணர்வில்லாமல் கொசு தின்று முடித்தது.

எல்லோரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு இன்ஸ்பெக்டர் மட்டும் அறைக்குள் நுழைந்தார். காக்கிச்சட்டையைக் கழற்றி நாற்காலி மேல் படர்த் தினார். வாசலுக்கு நேராய் நடந்து வந்து கதவைப் பூட்டி உட்புறமாகத் தாழிட்டார். நடுங்கியவாறு நின்ற கொசுவின் கால்கள் மடங்கின. அப்படியே முகங்குப்புற விழுந்து அலறினான்.

என்னப் போட்டுத் தள்ளத்தானே போறிய? எக்க பொன்னு சாரே, நான் பாவப்பட்டவனாக்கும்.

டேய் எழுப்பு, யாரு அப்படிச் சொன்னது?

எனக்குத் தெரியும். ஒருத்தனுக்கு நல்ல ஆகாரம் போலீஸ் குடுக்குதுண்ணா அவனக் கொல்லப் போறாங்கண்ணு அர்த்தம். நான் இப்ப தின்னது கொலத் தீற்றியாக்கும் சாரே,  கொலத் தீற்றி...

அவன் மண்டையில் அடித்து ஒப்பாரி வைத்தான்.

நான் ஒன்ன காப்பாற்ற வந்தவன். ஏண்ணா அதில எனக்கொரு லாபம் இருக்கு. தனக்க நன்மைக்காக ஒருத்தனை ரெட்சிக்க நினைப்பவன் ஒருக்காலும் அவனக் கைவிடமாட்டான். என்ன நீ முழுமையா நம்பலாம்.

அவன் இருந்த பக்கம் ஒரு சிகரெட்டைத் தூக்கி எறிந்த இன்ஸ்பெக்டர், தான் ஒன்றைப் பற்ற வைத்து இழுத்துவிட்டுத் தீயை  அவனுக்குப்  பரிமாறினார்.

ஒன்ன அரெஸ்ட் பண்ணினாரே சப்இன்ஸ்பெக்டர், அவர  முன்னமே  ஒனக்குத் தெரியுமா?

யாரு செல்லத்தொரையா? நானும், அவனும் மார்த் தாண்டம் எல்.எம்.எஸ் பள்ளீல எட்டாங்கிளாஸ் வரைக்கும் ஒண்ணா படிச்சோம்.

கண்ணீரைத் துடைத்துவிட்டு கொசு ஆர்வமாக உட்கார்ந்து பேசியது.

டேய் நீ திருட்டுப்பய. கண்டு ஒண்ணு, காணாம ஒண்ணு செய்பவனாக்கும். இப்ப செல்லத்தொரை, நேற்று என்னமோ சொன்னியே, சாம்பாருண்ணா?

ஒருவாளி சாம்பார்! அதுவொரு பெரிய கதை, யாமானே

சொல்லு, அதுக்குத்தான் ஒனக்கு ஹெவியா சாப்பாடெல்லாம் வாங்கித் தந்திருக்கேன். பிறகென்ன கொள்ளை?

சாரே அண்ணு மார்த்தாண்டம் எல்லாம் இல்ல, தொடுவெட்டியாக்கும் பேரு. ஏழே ஏழு பஸ்கள் தான் ஓடிச்சி. மிச்சம் எல்லாம் குதிர வண்டியும், காள வண்டிகளுமாக்கும். ஏழு பஸ்களையும் ராத்திரிஆனா வெட்டுமணியில கொண்டு பெய் நிறுத்து வினும்.

நான் பஸ் கணக்கெயா  ஒனக்கிட்ட  கேட்டேன்?

நீங்க கேக்காட்டாலும் நான் சொல்லணும் இல்லி யா தொரையே! அண்ணைக்குத் தொடுவெட்டியில பெரிய ஓட்டல் அம்பிகா விலாசம். அது பொளிஞ்ச பெறவு பேரெடுத்து நிண்ணது டவ்வர் ஓட்டலாக்கும்.

இதெல்லாம் எதுக்குச் சொல்றே?

இங்கதான் கதை இருக்கு நாயனே. டவ்வர் ஓட் டல்  தீப்பிடிச்ச   கதை   தெரியுமா ஒங்களுக்கு?

ச்சோ...ரம்பம்  தீட்டுகானே.

அப்ப ஓடிப்பெய் அணச்ச கூட்டத்தில நானும், செல்லத்தொரையும் உண்டு. நாங்க அப்ப பொடிப் பயலுவளாக்கும் சாரே.

செல்லத்தொரை என்றதும் கூர்மையான இன்ஸ்பெக்டர் நிமிர்ந்து உட்கார்ந்தார். அவர் உள்ளக்கிடக்கை தவளையை மையமிட்டுக்கொண்டிருந்தது என்பதைப்  பறைசாற்றியது.

அம்பிகா விலாசம் மொதலாளி புளியமுத்து காரிலெயாக்கும் வந்து இறங்குவார். ஆளு தெண்டனாக் கும்.

புளியமுத்து காரா?

வோ. நீளமும், வீதியும் கூடின அந்தக் காரைத் தெரியாதா யாமானே? இன்னியே... பட்டணத்தில் பூதம் படத்தில் வரும் இல்லியா?

ஓ... பிளைன்  மவுத் காரா?

இன்ஸ்பெக்டருக்கு சிரித்து இருமல் வந்து விட்டது.

செல்லத்தொரைக்கத் தலையக் கண்டாலே போரும், அம்பிகா விலாசம் மொதலாளிக்கு கொலவெறி வரும். கடைக்குள்ள ஏத்த மாட்டாரு. ஓடுபிலே!ண்ணு வெரட்டித் தள்ளுவாரு.

ஏன்?

அவன் சேலு அப்பிடி. பெய் இருந்துட்டு ஒரு தோச கேப்பான். மொதல்ல சட்டினி விடச் சொல்லுவான். எண்ணெ காம்பிப் போச்சுண்ணு அதையும் ஒதுக்கு வான். அடுத்து சால்னா விடச் சொல்லுவான். போஞ்சிப் போச்சுண்ணு அதையும் ஒதுக்குவான். அடுத்து இடிசம்மந்தி கேப்பான். இவன இடிச்சி நொறுக்கணும்ணுள்ள தேச்சியத்தில அதையும் கொண்டு வைப்பினும். பூப்பு பிடிச்ச தேங்காயா அரைச்சியண்ணு கேட்டுட்டு அதையும் ஒதுக்குவான். கடைசியில சாம்பார் விடச் சொல்லுவான் பாருங்க, வாரிக் குடிச்சிக்கிட்டே இருப்பான். யாருக்குப் பொறுக்கும்? அது கொண்டு அந்த மொதலாளி வச்ச வட்டப் பெயராக்கும். ஒரு வாளி சாம்பார்ண்ணு உள்ளது.

சுவாரசியமா இருக்கே.

டவ்வர் ஓட்டல் கதை கேட்டா இன்னும் தமாசா இருக்கும் நாயனே. தேங்காப்பட்டணம் சாயுப்புமாரு வந்து இந்த ஓட்டலத் தொறந்ததும் மக்களுட்ட பெரிய வரவேற்பு. பஸ்கள முன்னாலக் கொண்டு நிறுத்தீட்டு டிரைவரும், கண்டக்டரும் உள்ள சாப்பிடப் போவினும். நானும், செல்லத்தொரையும் கையில ஒரு பிளேடு கொண்டு போய்ச் சீட்டைக்கிழிச்சி உள்ள இருக்கிய ஸ்பாஞ்சை அறுத்தெடுப் போம். பள்ளீல வாத்தியாம்மாருக்குப் போர்டு அழிக்க வசதியா இருக்கும். மத்தியான நேரங்களில இது நடக்கும்.

செல்லத்துரை  எதுக்கு  இதைச்  செய்யணும்?

அவன்தான் கிளாஸ் மானிட்டர். ஒரு எழவும் படிச்சாத்த பயல எதுக்கு ஆக்கிச்சினும்ணா, அவன்தான் வகுப்பில ஒயரங்கொறஞ்சாலும் தடியனாட்டு இருப்பான். எங்கள அடிக்கியதுக்கு வீட்டில இருந்துபுளியங்கம்புகளக் கொண்டுவந்து கொடுப்பான். இதத்தட்டிக் கேட்ட என்ன செவுட்டில அடிச்சிப் போட்டான். அவனுட்ட கை குடுத்து மீள முடியாதுண்ணு கருதி மிண்டாத இருந்தேன். ஆனா  சும்மா  இருக்கேல.

ஆங்...

பள்ளில பெரிய பரிச்ச முடிய கடேசி நாள். அதுக்குப் பெறவு லீவு காலம். நாளக்கி நாம ரெண்டு பேரும் டவ்வர் ஓட்டல்ல தோச தின்னப் போவுலாம்ணு பதுக்க முந்தின நாளே அவனுட்டெ சட்டங்கெட்டி வச்சேன். பயலுக்குச் சந்தோளம்ணா வலிய சந்தோளம்.

ஒன்ன அடிச்சவனையா?

கேளுங்க நாயனே, தோசையில பத்துப் பன்னி ரெண்டு அவனுக்கு வைக்கச் சொன்னேன். சாம்பார் வாளியத் தூக்கி தோசைக்க மின்ன அப்பிடியே எடுத்து வச்சேன். அஞ்செண்ணம் தின்ன பெறவு தலை நிமிர்ந்து, நீ தின்னல்லியா டேய்ண்ணு ஒரு வாக்கு மட்டும் கேட்டான். எனக்கு ஒரே வயிற்றௌச்சல் அண்ணா ஒரு கிளாஸ் தேயில மட்டும் குடிச்சியேன்ணு சொன்னேன். திரும்பவும் அவனுக்கு அஞ்சிதோச வைக்கச் சொல்லி இறைச்சிக்கறிக்கும் ஆர்டர்செஞ்சேன். ஆளு தலை நிமிராம வெட்டி விழுங் கினான்.

பிறகு?

அண்ணே நீ மெள்ள தின்னுட்டு வா. நான் காசு குடுக்கிய இடத்திலெ நிக்கியேன்ணு சொல்லீட்டு முன்னால வந்தேன். மேசையில இருந்தவனுட்டெ நான் குடிச்ச ஒரு தேயிலைக்குள்ள பைசா மட்டும் குடுத்துட்டு வெளிய இறங்கி ஒரு ஓட்டம் பிடிச்சேன் பாருங்க, எனக்க வீட்டிலெ வந்துதான் நிண்ணேன்.

ஓ... அப்புறம் என்னாச்சி?

அதுக்குப் பெறவா? செல்லத்தொரைக்கச் சட்டை யைக் கழற்றி ரெண்டு கைகளையும் சேத்து பின்னால கட்டி டவ்வர் ஓட்டலுக்க முன்ன ரோட்டிலெ வெயில்ல நிறுத்தினானுவளாம். இப்ப அந்தக் கேசவன் எனக்க கையில கெடச்சான்ணா கடிச்சி குதறிப்போடுவேன்ணு சத்தம் போட்டதா கூடப் படிச்சிய  பயக்க  வந்து  சொல்லிச்சினும்.

அப்புறம் அவன்  உன்னக்  காணல்லியா?

ரொம்ப காலம் ஒளிச்சி திரிஞ்சேன். கையில கிட்டினா கொன்னு போடுவான்னு தெரியும். அவன்வலிய ஆனையா இருக்கலாம். ஆனையும் கட்டெ றும்புக்கு அடிபணிஞ்சி தானே ஆவணும் நாயனே.

சரி,  இப்ப  உனக்க  சாம்பார் எப்படி?

இப்பவா? ஆளு நல்ல திருத்தமாக்கும், கேட் டியளா! நான் வாழ்க்கையில் தொலஞ்சி ஒண்ணும் இல்லாமப் போனவன். ஆனா, எனக்க கூடப்படிச்ச செல்லத்தொரை இண்ணு வலிய ஏமானாக்கும். பழசையெல்லாம் என்னைக்கோ அவன் மறந்திருப் பான். அதையெல்லாம் வகை வைக்க இன்னைக்கும்  நாங்க  சின்னப்பிள்ளளைகளா என்ன?

அப்படி நீ நினைக்கிறே, ஆனா அவன் மனசில வேறயாக்கும் எண்ணம்.

செல்லத்தொரைக்க மனசா?

ஆமா, நாளை கோர்ட்டுக்குப் போனபிறகு தான் உனக்கு அது தெரியும். நீ காலம் முழுக்கச் சிறையில இருக்கிறதுக்கான எல்லா ஏற்பாடுகளையும் அவன் செய்து முடிச்சாச்சி.

அப்பிடி அவனுக்கு நான் என்ன பாவம் செஞ்சேன் தொரையே?

ஒரு வாளி சாம்பாரை நினைவுபடுத்தினாயே, போதாதா?

அது சும்மா  தமாசுக்கு  நான் சொன்னதாக்கும்.

விளையாட்டுதான் வினையா மாறும்ணு தெரி யாதா? நான் ஒண்ணு சொல்லித்தருவேன், நாளை கோர்ட்டில அதை நீ சொல்லுவியா? சொன்னா அவன் மாட்டுவான்.

சொல்லுலாம் தொரையே.

அவனிடம் மெதுவாக எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்துவிட்டு சட்டையை மாட்டியவாறு வெளியே  இறங்கி நடந்தார்  இன்ஸ்பெக்டர்.

மறுநாள் கொசுவை ஜீப்பில் ஏற்றும் நேரம்.  தனக்கருகில் நெருக்கமாக நின்ற தவளையிடம் கேட்டது,

கோர்ட்டில  என்ன  விட்டிருவினுமா?

செக்சன் செவன்டி பைவ்தான். ஒரு சின்ன அபராதம்.

இண்ணு நீ டவ்வர் ஓட்டலைவிட அதிகமா சாம்பார்  குடிச்சப்  போறவிலே!

கொசுவின் மைன்ட் வாய்ஸைக் கேட்டுச் சிரித்தார்  சார்லஸ் டார்வின்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer