பெரிய தவளை
தூக்கமா இல்லை அசைவின்மையா தெரியவில்லை
தவளை பக்கம் நான் நெருங்க நெருங்க அது அசையாமல் நின்றது
அதன் அசைவின்மையை தொட்டுப் பார்க்க நினைத்தேன்
அசைவின்மையை கைகளில் தூக்கவேண்டும் போலிருந்தது
தொட்டுப் பார்த்தால் அதன் அசைவின்மை களைந்துவிடும்
அசைவின்மையை தொடவே முடியாதோ
தூங்கவில்லை கண்கள் திறந்திருந்தன
அதன் அசைவின்மை பலமாக இருந்தது
நெஞ்சைப் பிடித்து உலுக்கியது
ஒவ்வொரு அடிக்கும் எனது கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன
தவளை ஓடவேயில்லை
ஆச்சர்யமாக இருந்தது அதன் ஓடாத தன்மை
அந்த திடநிலை முன்னால் மண்டியிட்டேன்
அதைத் தொட்டுப் பார்க்கும் ஆசையெல்லாம் இப்பொழுதில்லை
அந்த முட்புதரிலிருந்து பின்னால் கூடி கவனமாக
காலை எடுத்து எடுத்து வெளியில் வந்தேன்
அதைவிட ஆச்சர்யம்
ஒரு பெரிய தவளை மாதிரி அப்பொழுதைய அந்த உலகம் இருந்தது.
கூ… …
கூ… வென்று கேட்ட ரயிலின் சத்தத்தை எடுத்து காது குடைந்தேன்
பெரிய சத்தம் அது
தலை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் நெளிந்தது
ரயிலில் விழுந்து இறந்த ஒருவர் திடீரென காதிலிருந்து வந்து விழுந்தார்
அவர் சொன்னார்
அந்தச் சத்தம் என்னைக் காப்பாற்றவே இல்லை
அதை ஏன் எடுத்தாய் கீழே போடு என்றார்
அவரே எழுந்து வந்து என் காதுகளிலிருந்து அந்தச் சத்தத்தை
உருவி எடுத்தார்
தண்டவாளத்தின் சொருகு கம்பியை எடுத்துக்கொண்டு
சில சிறுவர்கள் வெளியேறி ஓடினர்
கொய கொயவென பாம்புக் குஞ்சுகள் விழுந்தன
ஆயிருக்கும்போது எழுந்து நின்ற அநேகப் பேர்கள் வந்தனர்
பழுதாகி நின்ற ஒரு ரயிலே கையில் வந்தது
சிறு பிராயத்தில் ரயிலை ஒட்டிய வீட்டிலிருந்தோம்
அதனால் தான் இவ்வாறு ஆகிவிட்டது
மன்னித்துவிடுங்கள் என்றேன்
அவ்வளவு பெரிய சத்தம்
தன்னைக் காப்பாற்றவில்லையேயென்ற வருத்தத்தில்
இறந்து போனவர்
பழைய இடத்தில் பழைய மாதிரியே படுத்து இறந்தார்.