நானும்தான் நன்றாக விளையாடுகிறேன்
நானும்தான் அழகாக வெளிப்படுகிறேன்
நானும்தான் அறிவுஜீவியாக வேடமிடுகிறேன்
ஆனால் அரங்கம் மொத்தமும் அவனுக்குத்தான் கைதட்டுகிறது
வேறுவழியின்றி நானும் தட்டுகிறேன்
அரங்கம் காலியானபின்பும்
யாருமின்றித் தனியானபின்பும்
அங்கே கை தட்ட தட்ட
அவ்வொலியில் உண்டானது
யாரையும் துன்புறுத்தாதவொரு தோட்டாவின் சப்தம்
அதை உண்மையென்று நம்பி அச்சமயம்
தலைக்குமேல் அமர்ந்திருந்தவொரு காகத்தின் - தேகம் துளைபட
எதிர்பாராதவிதமாய் அதன் கருப்புநிறம் மொத்தமும் கீழே விழுந்தது
அப்புறம்
அது அங்கேயே கிடந்தது.
கடமைக்குச் செய்யும் பாவங்கள்
வேண்டியபடி பலித்த பல காரியங்களுக்குத் தெரியாது
தாம் வெறும் இரண்டு நிமிட பிரார்த்தனைகளுக்கா பிறந்தோம் என
எதிர்பாராமல் கிடைக்கப்பெற்ற பொருட்களும் அறியாது
தான் யாருக்குச் சென்றுசேரவேண்டியவை என
எந்த வேண்டுதலின்போது யாரின் வாய் குளறியதோ
அவன் பிறந்ததேதி துவங்கியது
உண்மையில் தான் யாராகப் பிறக்கவேண்டியவன் என
தன் அலைபேசியில் தேடாத நாளில்லை
என்ன செய்ய
பறக்கத்தெரிந்திருந்தும்கூடத் தரையில்தான் தவழ்கிறது
பறவையின் நிழல்
இதுதான் தருணமென விவரம் அறிந்ததும்
வேக வேகமாய்ச் சுவரில் ஊர்ந்தபடி அவனைநோக்கிப்
பழிவாங்கப்போகும் பல்லியே
சற்றுப்பொறு
அவன் பூச்சியாக ஜனனமெடுக்க இன்னும் காலம் இருக்கிறது.
நித்யத்துவம் - 7 கி.மீ
ஒவ்வொருமுறையும் மைல்- பலகையை மாற்றிவைக்கையில்
வரைபடங்களின் நரம்புமண்டலம் மாற்றிப் பின்னப்படுகிறது
பூர்வீகத்திற்கு நாங்களே மறந்துபோன குறுக்குப்பாதைகளை
இது இன்னும் மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறது
ஆனால் எந்தபக்கம் திரும்பினாலும்
செல்லவிருக்கும் ஊர் இதுதான் என
கி.மீ முதற்கொண்டு தெரிந்துவைத்திருக்கிறதே எப்படி...
தூரத்திலிருந்து வரிசையாக ஓடிவரும் பலகைகளில்
ஒன்றுமட்டும் நெருங்கிவந்து
“இப்படியேபோனால் தப்பித்துவிடலாமென” எனக் காண்பித்துவிட்டு
மேலும் இத்தகவலைக்கூறிய விசயத்தை வேறு யாரேனும்
பார்த்துவிடுவதற்குள் பின்னோக்கித் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறது
தற்சமயம் வேறுவழியும் இல்லை
அதுதான் இந்திய வரலாற்றின் நெடுஞ்ஞ்ஞ்சாலை
சரியாக அங்கிருந்து ஒருவன்
இடதுபுறம் திரும்பினால் >>>>>> காயமேற்படலாம்
வலதுபுறம் திரும்பினால் <<<<<<< காயமேற்படுத்தலாம்.
விரல்கள் நடந்துசெல்லும் சமதள-படிகள்
நாடோடிகளின் புரவிகளென ஒரு மின்பொறியாளனின் விரல்கள்
தட்டச்சுப்பலகையில் குதித்தோடுகின்றன
முதலில் எண்களின் மீது, பிறகு எழுத்துக்களின் மீது
இப்போது எண்ணங்களின் மீது...
நகங்களில் லாடம் கட்டப்பட்ட நிறங்களுக்கேற்ப
தொடுதிரையில் வாசகங்கள் மூச்சுவிடுகின்றன
முடிக்கவேண்டிய பணியை மும்முரமாய் எழுதிக்கொண்டிருந்தான்
இன்னும் கச்சிதமாய் ஒரு வார்த்தை போதும்
எல்லாவற்றிலிருந்தும் ஆசுவாசமாகி
வீட்டிற்குக் கிளம்பிவிடலாம்
அச்சமயம்தான் பெருத்த சத்தத்துடன் மாடிப்படியிலிருந்து
இறங்கிவந்த குளிர் அவன் விரல்களில் ஏறியமர்ந்து
வயிற்றிலொரு உதைவிட்டபடி “ம்ம்ம்ம்” போகலாம் என்றதும்
நடுக்கத்தில் விரல்களின் குளம்படியோசை அதிகமானது
தினந்தோறும் தன் பாதங்களால் இவ்வாறு அழுத்தி அழுத்தி
எவ்வளவுதான் மறதியை ஆழமாக்க முயன்றாலும்
உருவாகும் பள்ளங்கள் மறைந்து அடுத்தவிநாடியே
தன்னைத்தானே சமன்செய்துகொண்டபடி மேலெழும்புகிறது
விசைப்பலகையின் சமவெளி.