ஆங்காரி
ஏழாந் நாள் ஊர்வலத்தில்
வெள்ளிக்காப்பும் காலுக்கு
மெட்டியும் போட்டு
பூவள்ளித் தூவி
புதுப் புடவைத் தந்து
பிசு பிசுப்போடிய மயிர்
தரையில் படாது
செவ்வண்ண துண்டு விரித்து
ஆராரோ...
எந்தாயி ஆரிரரோ...
எங்கம்மாளுக்கு...
எங்களாச்சிக்குவென...
தாலாட்டு பாடி
உறங்க வைத்து
பின்
வேஷங் கலைத்த காளி
இலுப்பைத் தோப்பு
பட்டைச் சாராயத்துக்கும்
சதாசிவங்கடை மட்டை ஊறுகாயிக்கும்தான்
நித்திரையடையும்.
பதர்
கூழைக் கும்பிடிட்டு
குறுணி நெல்லுக்கு
பண்ணையிலிருந்தார்
தகப்பன்
பாண்டு பத்திரமெழுதி
கைநாட்டு வைத்து
வருசக்கூலிக்கு மகன்
தாலியத்தாப் புள்ளயாயிருக்கா
இவனும் ஒண்டிக் கட்ட
ரெண்டு தாரத்திலும்
எது சேர்த்தி
தாரங் குறையில்லை
குடும்பம் செழிக்கும்
சோராத ஒழைப்புக்காரன்
வாழ்முனிக் கோயிலில்
வாக்கு கேட்டு
கட்டிய தாலி
அண்டையெடுப்பது
தண்ணிப் பாய்ச்சுவது
ராத்திரிக்கும் உறக்கமற்று
கருப்பங் கொல்லைக் காவல்
வாழ்விக்க வந்த மகள்
பொங்கிய சோற்றை
ஒண்டியாய்த் தின்று
தனித் தூக்கம்
எத்தினி நாளக்கி
ஏக்கத்திலிருப்பாள்
கொற வயிசுக்காரி
என்ன செய்வா
மூவேளையும் - இவள்
பேர் சொல்லிச் சிரிக்கும்
முந்திரிக் காடுகள்
குலங் காக்கும்
வீரன் தயவில்
பிள்ளைப் பேறு
ஊர்ப் பொதுவுக்குப் பேச்சு வந்தாயிற்று
என்றபின்
ஆரால என்ன கண்டபலம்
சோத்துக்குக் கொறச்சலில்ல
சொகத்துக்குச் செவத்தயா தேய்ப்பேன்
புள்ளக்கிச் சேருவதை
பங்காத் தந்திடுங்க
பொழைக்கிற வழியைப் பாக்கிறேன்
காட்டில் புரண்டு வீட்டில் பெத்தவளுக்கு
யார் பங்கையெடுத்து
யாருக்குத் தருவதென
கோவங் காட்டினான்
சாமிகளே சவையோரே
தலைச்சம் பிள்ளையைப் போட்டுத்
தாண்டுகிறேன் - நான்
தர்ம பத்தினி.
கீறல்
சினை மாடெனத் தெரிந்தும்
பண்ணைக்கு வரவில்லை
ராசமாணிக்கமென
பெரிய வீட்டுக்காரம்மா
ஓட்டி வந்திருந்தார்
மேற்கே பறையன்குளம் பக்கம்
மேய்ச்சலிலிருந்தன
ஆடு மாடுகள்
வேலிக்கொடிகளை
அலக்காலிழுத்து
கொராக்குட்டிகளுக்குப் போட்டார்
கோணையன்
புளியம்
ஒதியங்களில்
கிளைகளே மிஞ்சியிருந்தன
தும்பையும் கஞ்சாங்கோரையும்
மண்டிய கரம்பது
ஒரே மாட்டுக்கவுலா அடிக்குதென
பின்னொட்டிய மண் தட்டி
எழுந்து நடந்தாள்
சிவந்த கெண்டைக்காலில்
செந்நாயுருவியின் தடங்கள்.