அல் ஸோலினஸ் கவிதைகள்

தமிழில் ஆர்.சிவகுமார்

பகிரு

ஜெய்ப்பூரில் பேருந்திலிருந்து பார்த்தது

‘ஆபரணங்களின் நகர’த்தைவிட்டு அகல இருந்த நேரம்
முன்காலைப் போக்குவரத்தில் நிறுத்தப்பட்டது பேருந்து
அசைந்து நகரும் அங்காடி வாழ்க்கைக்கு இடையே
சாலையோரத்துப் புழுதியில் மல்லாந்து படுத்திருக்கும்
ஒரு நிர்வாண மனிதனை நான் பார்க்கிறேன்
சாதுவா, பிச்சைக்காரனா, அல்லது இரண்டுமா
ஒரு முழங்கால் நிமிர்ந்து
ஒரு கை கால்களின்மேல் வீசப்பட்டு
மெதுவாக விழித்தெழுகிறான்
பொருள் வாங்க வருபவர்கள், வேலையாட்கள் என
தன்னைக் கடந்து செல்லும்
யார்மீதும் கவனம் கொள்ளாமல் படுத்திருக்கிறான்
ஆடை எதையும் அவன் அணிந்திருக்கவில்லை
அவனிடம் போர்வையுமில்லை, தலையணையுமில்லை
தெருவில் அவன் நிர்வாணமாக இருக்கிறான், தூங்கவும் செய்கிறான்
நகரும் பொருள்களின் உலகில் முற்றிலும் பாதுகாப்பற்று
ஒரு புதிய நாளை சுட்டிக்காட்டும்
தன் குறியின் பகுதியளவு விறைப்புடன்
பெருத்த விரைகள் அதை சரிஈடு செய்யப் படுத்திருக்கிறான்
இது பைத்தியக்காரத்தனமா, முழுநிறைவான நம்பிக்கையா
அங்கே இருக்கிறது அது, என்னுடைய மற்ற வாழ்க்கை
சட்டைப்பைகள் இல்லாத, சந்திப்புத் திட்டங்கள் இல்லாத
எப்படி இருக்கிறேனோ அதுதான் நான்
எப்படி இருக்கிறேனோ அதுதான் அதன் எல்லாமும்
என்று பகட்டில்லாமல் சொல்லும் அந்த வாழ்க்கை
இருந்தும்
என்னுடைய உடைகளுக்குள்ளும் பேருந்துக்குள்ளும்
உட்கார்ந்திருக்கும் நான்
என்னுடைய நம்பிக்கையை மீட்டுக்கொள்கிறேன்
இன்னும் கொஞ்ச நேரத்தில்
அவன் எழுந்து உணவைத் தேடத் தொடங்க வேண்டியிருக்கும்
அல்லது அவன் உண்ணாவிரதம் இருந்தால் மிகக் குறைந்த பட்சம்
அவன் தண்ணீரையாவது தேடத் தொடங்க வேண்டியிருக்கும்
ஆம், நிச்சயமாக அவன்
தண்ணீரையாவது தேடத் தொடங்க வேண்டியிருக்கும்.

வகுப்பறையில் நேசம் என்னுடைய மாணவர்களுக்கு

பிற்பகல். தோட்டத்துக்கு அப்பால், விடுதியின் கூடத்தில்
யாரோ அந்தப் பழைய பியானோவை வாசிக்கத் தொடங்குகிறார்கள்
தன்னெழுச்சியான ஒரு உருப்படி
எளிமையான, களிப்பூட்டும் பண் நிறைந்த உருப்படி
கற்றுக்குட்டித்தனமாகவும் உயிர்ப்புடனும் ஒலிக்கிறது
வகுப்பறையிலிருக்கும் எங்களுக்கிடையே அந்த இசை மிதக்கிறது
என்னுடைய மாணவர்களுக்கு முன்னால் நின்றபடி
வாக்கியத்தின் கூறுகள் பற்றி அவர்களுக்கு விளக்குகிறேன்
பக்கம் நாற்பத்தைந்தில் காணப்படும்
இருபத்தோரு வாக்கியங்கள் கொண்ட பத்தியில்
பத்துக் கூறுகளையும் கண்டுபிடிக்குமாறு அவர்களிடம் சொல்கிறேன்
ஈரான், மைக்ரோனேசியா, ஆஃப்ரிக்கா
ஜப்பான், சீனா என்று உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும்
லாஸ் ஏஞ்சால்ஸ்லிருந்தும்கூட அவர்கள் வந்திருக்கிறார்கள்
என்னை மகிழ்விக்க அவர்கள் இன்னும் ஆர்வமாக இருக்கிறார்கள்
வகுப்புத் தொடங்கி இன்னும் கால் மணி நேரம்கூட ஆகவில்லை
புத்தகங்கள்மீது குனிந்து அவர்கள் பயிற்சியைத் தொடங்குகிறார்கள்
ஆங்கில வாக்கிய அமைப்பின் சிக்கலான, குழப்பமூட்டும் பாதையைப்
பின்பற்றும் ஹமீதின் உதடுகள் அசைகின்றன
கால்மேல் கால்போட்டு யோஷி விறைப்பாக உட்கார்ந்திருக்கிறாள்
நிறைவான, அடக்கமான ஒப்பனையோடு
பதற்றம் அவளுடைய வலதுகாலை நுட்பமாக வெட்டியிழுக்கிறது
தெற்கு பசிஃபிக் தீவு ஒன்றிலிருந்து வந்துள்ள டோனி
தன்னுடைய இருக்கையில் கால்களைப் பரப்பி
சௌகரியமாக உட்கார்ந்திருக்கிறான்
அவ்வப்போது விட்டுவிட்டு, துண்டாகி, மீண்டும் தொடங்கி
எங்களைச் சுற்றியும், எங்களுக்கு ஊடாகவும் பண்ணிசை மிதக்கிறது
மத்தியக் கிழக்கு இசையாகத் தோன்றுகிறது அது
ஆனால், ஜாஸ் அல்லது ப்ளூஸ் ஆகவும் இருக்கலாம்
அது எந்தப் பகுதியைச் சேர்ந்த எந்தவகை இசையாகவும் இருக்கலாம்
காத்திருக்க என்னுடைய இருக்கையில் உட்கார்கிறேன்
எங்கிருந்தென்றில்லாமல் அது என்னைத் தாக்குகிறது
எதிர்பாராத, சுவையான, கிட்டத்தட்ட வேதனை தரும் நேசம் அது
என் மாணவர்கள்மீது எனக்கு உண்டாகும் நேசம்
அது கிடக்கட்டும், விடுங்கள், என்று கத்திச் சொல்ல விரும்புகிறேன்
கண்டுபிடிக்கிறீர்களோ இல்லையோ
வாக்கியத்தின் துண்டுகள் முக்கியமே இல்லை
ஒவ்வொன்றும் ஒரு துண்டுதான்
ஒவ்வொன்றும் ஒரு துண்டு இல்லையும்தான்
இசையைக் கேளுங்கள்
எப்படித் துண்டாக, எப்படி முழுமையாக
பசுந்தாவரங்கள்மீது பரவும் சூரிய ஒளியிலிருந்து பிரிக்க முடியாதபடி
இந்தக் கணத்திலிருந்து பிரிக்க முடியாதபடி
-நேற்றின் எல்லாத் துண்டுகளையும்
நாளையைப்பற்றி நமக்குத் தெரியப்போகும் எல்லாவற்றையும்
உள்ளடக்கிய இந்தக் கணம்
அது இருக்கிறது
அதற்கு மாறாக, ஒரு கோழையின் மௌனத்தைப் பேணுகிறேன்
இசை திடீரென்று நின்றுபோகிறது
அவர்கள் பயிற்சியை முடிக்கிறார்கள்
நாங்கள் சரியான விடைகளைத் துருவிப் பார்க்கிறோம்
அதாவது
முழுமையிலிருந்து துண்டுகளைப் பிரித்தெடுக்கிறோம்.

ஒரு மனிதனும் அவனுடைய வாழ்க்கையும்

இரவில் தூங்கிக்கொண்டிருக்கும் ஒருவன்
அவனுடைய வாழ்க்கையின் பக்கம் திரும்புகிறான்
அதை அணைத்துக்கொள்ள முயல்கிறான்
எப்போதும்போல அது அவனுடைய பிடியிலிருந்து நழுவி
அவனைப் பார்த்து சிரிக்கிறது
மூர்க்கத்துடன் அதைத் துரத்துகிறான்
வெடிக்காத குண்டுகளைப்போல அவனுடைய பாதங்கள்
கனத்திருக்கின்றன
அவனுக்கு முன்னால் அவனுடைய வாழ்க்கை
அநாயாசமாக நடனமாடுகிறது
அதைப் பற்றிக்கொள்ள விரும்புகிறான்
சிக்கலான சில காலடி வைப்புகள் மூலம்
ஒரு டாங்கோ, ஃபாக்ஸ் ட்ராட், அல்லது மஸூர்க்கா மூலம்
அதை அவன் துய்க்க விரும்புகிறான்
ஆனால், அது அப்படியான எதையும் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை
பாதுகாப்பான தூரத்தில் நின்றுகொண்டு இடுப்பை அசைத்து ஆட்டி
அவனைப் பார்த்து இளிக்க மட்டும் செய்கிறது அது.

அல் ஸோலினஸ்

லித்துவேனியப் பெற்றோருக்கு 1945-ல் ஆஸ்திரியாவில் பிறந்த அல் ஸோலினஸ் (Al Zolynas) சிட்னியிலும் சிக்காகோவிலும் வளர்ந்தவர். சமையலறை உதவியாளர், தொழிற்சாலைப் பணியாளர், டாக்ஸி ஓட்டுநர், சாலை பணியாளர் என்று பலவித வேலைகளையும் செய்துள்ளார். Fulbright கல்வி நிதி நல்கையில் இந்தியாவுக்கு வந்திருக்கிறார்.

கலிஃபோர்னியா மாநிலத்தின் சேன்டியாகோவில் உள்ள Alliant International பல்கலைக்கழகத்தில் இலக்கியம், இலக்கியம் படைத்தல் ஆகியவற்றை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக (1977-2010) போதித்தவர். ஜென் தத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். ஜென் பயிற்சியாளராகவும் இருக்கிறார். வாழ்க்கையின் புதிர்த்தன்மையைக் கவிதையில் பதிவுசெய்ய முயல்வதாகச் சொல்லும் இவருடைய படைப்புகள் பரவலாக ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. The New Physics, Under Ideal conditions, Near and Far போன்றவை இவருடைய கவிதைத் தொகுப்புகள்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2021 Designed By Digital Voicer