ஒரு மாலை நடையினிலே
ஒளித்துவைக்கப்பட்ட முகமூடி போல மர்மமான ஆகாசம்
நீல மருள் மாலையின் அலையும் சுழல்கள்
இருண்டு வருகின்றன சின்னச்சின்ன இடைவெளிகள்
சொல்கிறார்கள் எல்லாம் அவ்வளவுதான்
கேமராக்கள் வானாளவிய கட்டிடங்களின்
மலர்களாக அவிழ்வதைக் காண்கிறேன்
இவர் வாழ்வின் அ(ர்)ரத்தம் என்கிறார்
எந்நேரமும் ஆவியாகிவிடுவோம் என்பதைப்போல
வரும் போகும் உடல்கள்
ஒரு யானையின் வருகை
ஒட்டுமொத்தத்தையும் பிரமைபோல மாற்றுகிறதா
இந்த அஸ்தமனம் இறுதியாக என்ன சொல்ல வருகிறது
இதுவரை சிந்தப்பட்ட குருதியின் போதாமையையா
இந்த நியான் விளக்குகள்
இந்தக் கட்டிடங்கள்
இந்தக் கொதிக்கும் அவசரம்…
துவக்கம் முடிவினை கவ்விச் சுருண்டுகொள்ளும் ஒரு நிலை
தரித்திரம் தொற்றிய சத்தியம்
அழகு… அழகு…
என இறைஞ்சுகிறது
அதன் திருவோடு செல்கிறது ஆகாசத்தில் மறைந்து மறைந்து
இங்கே நானோ என்னை எனக்கே பிச்சையிட்டுக் கொள்கிறேன்
ஒரு அரைத்திருப்தி
எனக்கு அலைகள் வேண்டும்
வெண்மை வேண்டும்
கலங்கரை விளக்கத்தின் நிழலை கையில் குறுங்கத்தி போல ஏந்திய கடற்கரை வேண்டும்
காரமான அபாயங்கள் வேண்டும்
நீலம் எனும் பக்கம் புரட்டப்படுகிறது
எங்கும் எங்கும் எங்கும் எல்லையில்லா பேரிருள்…
வாழ்வே மகத்தான மணற்புயல் தான் என்கிறார் இன்னொருவர்
சாலையை லாவகமாகக் கடக்கிறது தவளை
சந்திக்குமிடங்கள் வெறிச்சோடிக் கிடக்க
ஊஞ்சலில் அமர்ந்து
கால்களை அசைத்துக் கொண்டிருக்கிறது நிலவொளி
நானோ நிலத்தின் மீது வைக்கப்பட்ட முற்றுப்புள்ளியெனவும்
பயணம் எனும் சொல்லினை மொய்க்கும் ஈயெனவும்…
காணாமல் போகமுடியாது என்று
துரதிர்ஷ்டவசமாக
தெரியவருகிறது உனக்கு
எத்தனை சோகம்… என்ன மௌனம்…
சந்தோஷம் வலது மனதுக்கான சங்கிலி
துயரம் இடது மனதின் நங்கூரம்
சப்வேயினுள் நடந்துகொண்டிருக்கிறேன்
பேருந்து நிலையக் கொட்டகையில்
மின்னும் நாற்காலி
இறக்கை விரித்துப் பறக்கிறது
விடுபட்டதுபோலவும் சிறைபட்டதுபோலவும்
அடைய முடியாதது ஒன்றுண்டு என்பது
நிஜந்தான் இல்லையா…
இல்லையா.