விளாம்பழங்களும் பன்னீர்ப்பழங்களும் இராசேந்திரசோழன் கதைகள்

வே.மு.பொதியவெற்பன்

பகிரு

மயிலத்தின் மடியிலிருந்துதான் தொடங்கிற்று நடுநாட்டுப் பயிர்ச்செலவின் முன்னத்தி ஏர். அப்பொன்னேருழவன் இராசேந்திரசோழன் உழுப்படைச்சாலில் முகிழ்த்தது மகத்தான பாய்ச்சல்...

“கெடுவாய்ப்பான சூழல் நான் தொடர்ந்து இலக்கிய உலகில் இயங்க இயலாமல் போன நிலை. அந்த ஏக்கத்தை மேலும் கூட்டியது தற்போது விருத்தாசலம் மணக்கொல்லையைச் சார்ந்த எழுத்தாளர் கண்மணி குணசேகரன் மண்ணின் மணத்தோடும் வட்டார வழக்கோடும் உருவாக்கியிருக்கும் உன்னதப் படைப்புகள் ‘அஞ்சலை’, ‘நெடுஞ்சாலை’, ‘வந்தாரங்குடி’ முதலியவை.”இத்தகைய ஆதங்கத்தையும் ஏக்கத்தையும் மனம் நெகிழ்ந்த பாராட்டையும் எழுதிச் செல்கின்றது ‘இராசேந்திரசோழன் கதைகள்’ எனும் வரின் நூலிலான அவர் பின்னுரை. இவ்விரு நடுநாட்டுப் பயிர்ச்செலவின் படைப்பாளிகளையும் இனங்கண்டு வெளியிட்ட வகையில் ‘தமிழினி’ வசந்தகுமாரும் பதிப்பாளனுக்குள் உயிர்த்திருக்கும் தேர்ந்த வாசகன் போற்றுதலுக்குரியவனே. ‘கட் அவுட்’ எல்லாம் நிறுத்திப் படைப்பாளிகளைக் கொண்டாடிய வித்தியாசமான பதிப்பாளரவரே அன்றோ. இதே மூச்சில் அவரது வாசகத்தேர்வில் (கொங்குதேர் வாழ்க்கை) ஊடாடும் கநாசுத்தனமான ரசனையதிகாரம் விமர்சிக்கப்பட வேண்டியதே என்பதையும் சுட்டியாக வேண்டியுள்ளது. வேறுவார்த்தைகளில் கூறுவதானால் கநாசுவைப் போலவே அவரது தெரிவுகள் பெரும்பாலும் ஏற்கத்தக்கனவே. மாறாக விடுபடல்கள் ரசனையதிகார இருட்டடிப்பின் பாற்பட்டன எனலாம்.

இராசேந்திரசோழன் விருப்பம் சார்ந்து பதிவாகியிருக்கும் ஓர் இலக்கியத் தடத்தின் முன்னத்தி ஏராக அவரிருந்தார் எனும் அடையாளத்தைப் பதிவுசெய்யுமுகமாகவே இச்சுட்டிக்காட்டுதல். எனினும் இது மட்டுமே அவருடைய அடையாளம் இல்லை.

புனைகதையாளர் (சிறுகதைகள், குறுநாவல்கள்); நாடகாசிரியர், நெறியாளும் நிகழ்த்துக்கலைஞர், கட்டுரையாளர் (மெய்யியல், அரசியல், அறிவியல்), இதழாசிரியர் (‘பிரச்சினை’, ‘உதயம்’, ’மண்மொழி’), மார்க்சிய இயக்கக் களப்பணியாளர், மார்க்சிய இயக்க அமைப்பாளர் எனவாங்குப் பன்முகப் பரிமாணமானவை அவருடைய பங்களிப்புகள். இத்தகு புரிதல்களோடு அவருடைய இதர பரிமாணங்கள் அவருடைய சிறுகதைகளுக்கூடாக எவ்வாறு ஊடாடிக் கிடக்கின்றன எனவாங்கு அவருடைய சிறுகதைகள் மீதான என் வாசிப்பின் பிரதியாக இதனை முன்வைக்கின்றேன்.

அவருக்கென்றே வாய்த்த பிரத்தியேகமான நல்வாய்ப்புகள் இன்னதெனக் காணப்புகுமுன் இலக்கியவுலகில் அவரால் இயங்க இயலாமல் போன கெடுவாய்ப்பான சூழல் என்கின்றாரே. அதுகுறித்து அவருடைய சொந்த ஒப்புதல் வாக்குமூலத்தைக் காண்போம்.

“கட்சிப் பிரவேசத்திற்குப்பின் எழுத்து என்பது குறைந்து அருகிப்பின் படைப்பிலக்கியம் என்பதே முற்றாக இல்லாமல் களப்பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தும் நிலைமைக்கு ஆளாகியது”

“மரம், செடி, கொடிகள், புல்பூண்டுகள், முட்புதர்கள் எனக் காடாய் மண்டிப் பலதரப்பட்ட ஜீவராசிகளும் வாழும் சரணாலயமாய்க் கிடந்த மூளை சுத்தமாய் வறண்டு மொசைக் தரைபோல் ஆக்கப்பட்டுவிட்டது. வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் அசைவையும் இலக்கியமாகப் பார்க்கிற உணர்வே இற்றுப்போய் இலக்கியமாய் யோசிக்கிற மனநிலையே இல்லாத வறண்ட பாலைநிலம்போல் ஆகிவிட்டது.”

அவருடைய முதல் மூன்று கதைகள் முறையே மனக்கணக்கு’, ‘பலவீனம்’, ‘எங்கள் தெருவில் ஒரு கதாபாத்திரம். இவற்றில் பலவீனம்இத்தொகுப்பில் இடம்பெறவில்லை. (பெயர் மாற்றப்பட்டு இடம் பெற்றும் இருக்கலாம்). இக்குறிப்பைக் காணுமுன்பே மனக்கணக்கை  வாசித்தபோதும் எங்கள் தெருவில் ஒரு கதாபாத்திரத்தை வாசித்தபோதும் அவை தொடக்கநிலை எழுத்தாகப்படவில்லை.

புதுமைப்பித்தனின் அவதாரம் கதையில் பிறந்த உடனே தொப்புள் கொடியைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு நடை தொடங்கிய பாத்திரத்தைப் போன்றதே புதுமைப்பித்தனின் இலக்கியப்பிரவேசம், இராசேந்திரசோழனின் இலக்கியப்பிரவேசமும் இத்தகையதே. மூன்றாவது கதையான எங்கள் தெருவில்... கதை அவருடைய சிறந்த கதைகளுள் ஒன்றாகும். அதுவே விகடன் தென்னாற்காடு மாவட்ட மலருக்காக நடத்திய வட்டார வழக்குக் கதைகளில் முதற்பரிசு வென்றதன் மூலம் அவருக்கு நாடறிந்த அறிமுகம் தந்ததாகும்.

செம்மலர்’, ‘கசடதபற’, ‘பிரச்சினை என மூவகை இதழ்கள் வாயிலாக வெளியான சிறுகதைகளை முன் வைத்து இம்மூன்றும் இதழ்கள் என்பதினும் அவரின் சிறுகதைச் செல்நெறிகளுக்கான முக்குறியீடுகள் என்பாரவர். இதனை இன்னும் விளக்கமாகக் காண்போம்.

1.’செம்மலர்’, ‘யுகவிழிப்பு’, ‘தமிழர் கண்ணோட்டம்’ மூன்றும் அரசியல் இயக்கச் சார்பான இதழ்கள்

2.‘கசடதபற’, ‘அஃக்’, ‘கணையாழி’, ‘கவிதாசரண்’ நான்கும் கலை இலக்கியச் சிற்றிதழ்கள்

3.‘பிரச்சினை’, ‘உதயம்’, ‘மண்மொழி’ மூன்றும் அவருடைய ஆசிரியத்துவ இதழ்கள்.

இவை தவிர ‘ஆனந்தவிகடன்’, சனரஞ்சக இதழ் ‘தீராநதி’ இடைநிலை இதழ் (இவ்வாறே ‘க்ரியா’, ‘தமிழினி’, ‘மங்கைப் பதிப்பகம்’ என வெவ்வேறு பதிப்பகங்கள் அவர் நூல்களை வெளியிட்டுள்ளன.) இலக்கியத்தரம் பேணா நிலைப்பாடுகளுடன் வெளியிட்ட இயக்கச் சார்பிதழின் அவருடைய கதைகள் விளாம்பழங்கள் போல்வன. கருத்தியல் இலக்கியக் கோட்பாடுகளுடன் முரண்பட்ட நிலையில் சிற்றிதழ்களில் வெளியான அவருடைய கதைகள் பன்னீர்ப்பழங்கள் போல்வன. இருவகைக் கனிகளிலுமே மேற்கூடும் உள்ளீடும் ஒட்டாமலே ஊடாடிக்கிடக்கக் கூடியனவாம். ஓட்டை உடைத்து விட்டெறிந்து உள்ளீட்டு விளாங்கனியை உண்போம். பன்னீர்ப் பழத்தைப் பிட்டு உட்கிடையான பெரியகொட்டையை (எலுமிச்சைஅளவே உள்ள கனி. பெங்களூருவில் மட்டுமே கிடைத்தது. பன்னீர் மணமும் அலாதியான தனிச்சுவையும் உடையது.) அவருடைய ஆசிரியத்துவ இதழ்களில் மட்டுமே அவரால் பூரண சுதந்திரத்துடன் எழுத முடிந்தது. அவற்றில் வெளியானவை சொந்த வீட்டுத் தோட்ட விளைச்சல்.

உண்மையை எழுதவேண்டும். உண்மையாய் எழுதவேண்டும் என்பதே கனவாகவோ இலட்சியமாகவோ தம்மை இடையறாது ஊடறுத்துக் கொண்டிருந்த உறுத்தலென்பாரவர். அதனையே இத்தகைய நல்வாய்ப்புகளும் கெடு வாய்ப்புகளும் அவருக்கு வாய்த்த மாதிரி மற்றவர்களுக்கும் நேர்ந்திராதென்றே எனக்குப் படுகின்றது. அவருடைய புனைவுக் கோட்பாட்டிற்கும் அல்புனைவு நிலைப்பாட்டிற்குமான அல்லாட்டங்கள் ஒரு கலைப்பயணிக்கும் களச்செயல்பாட்டாளனுக்கும் இடையிலான முரண்பாடுகளாய் அவரை முற்சுட்டியவாறு தேக்கமுறச் செய்துவிட்டன என்பேன்.

எழுதுகிற எழுத்தெல்லாம் எல்லா வாசகனுக்கும் புரியவேண்டும் என்ற கட்டாயமில்லை - இதுதான் அவருடைய புனைவுசார் கோட்பாடு. மறுபக்கம் அறிவைச் சனநாயகப்படுத்துவதொன்றே அதிகாரத்தை முறியடிக்கும் என்பதே அவருடைய புனைவுசாரா எழுத்திற்கான கோட்பாடென அவர் வாழ்க்கைக் குறிப்பில் காணக்கிடக்கின்றது.

“கட்டுரைகள் எழுதி எழுதி எதைச் சொன்னாலும் எல்லோருக்கும் நன்றாகப் புரியவேண்டும் என்ற உணர்வு உள்ளுக்குள் ஊறி அதுவே கெட்டித்தட்டிப்போன மனநிலை” என்றவர் எழுதிச் செல்கின்றார். 

இதுதான் அவருக்குள் இருக்கும் கலைஞனை அவருக்குள் இருக்கும் களப்பணியாளன் காயடித்து விடுகின்ற அவலம். தோப்புகளில் தனிமரமாய் என்பதே அவர் பின்னுரைத் தலைப்பு. இதன் வாயிலாக அவர் அரசியல் இயக்கப் படைப்பாளிகள் ஊடேயும் கலை இலக்கியச் சிற்றேட்டாளர் மத்தியிலும் இருமருங்குத் தோப்புகளிலும் தனிமரமாகவே இருந்ததைச் சுட்டுகின்றார்.

“70களில் எந்த நிலையில் இருந்தேனோ அதே நிலையிலேயே தற்போதும் இருக்கிறேன். அப்போது எப்படிச் சுற்றி நிலவும் இலக்கியப்போக்குகளில் தனியனாய் உணர்ந்தேனோ அப்படியே இப்போதும் உணர்கிறேன். இந்த 30 ஆண்டுகளில் இலக்கியம் பற்றிய கருத்தாக்கம் பெருமளவு மாறி வந்துள்ளது. ‘எழுத்தாளர்’, ‘பிரதி’, ‘வாசிப்பு’ என்பது பற்றிய புதிய சிந்தனைகள் முகிழ்த்துள்ளன எனில் பெரும்பாலானவற்றுடன் நான் முரண்பட்டே நிற்கின்றேன்.” - இதுதான் 17.12.2014 இலும் அவருடைய நிலைப்பாடாகும்.

இதில் தமக்கேதும் மனக்கலக்கமோ சஞ்சலமோ இல்லையென்னுமவர் இலக்கியம் பற்றிய தம் வருத்தம் மட்டுமே தமக்குண்டென்கிறார். பெருமளவில் மாறி வந்துள்ள கருத்தாக்கங்களை உள்வாங்கிக்கொள்ள முயலாமலேயே அவற்றுடன் முரண்பட்டு நிற்கிறேன் என்பது காத்திரமான அணுகுமுறையா? அறிதோறும் அறியாமை கண்டாலன்றோ அதனின்றும் விடுபட்டு, புதிய திறப்புகளைக் கண்டடைய முடியும். வேர் தேக்கத்திற்கான தொடக்கப்புள்ளி இக்கோளாறே என்பேன்.

வறட்டு ஆச்சாரவாதிகளுக்கும், சொந்த அனுபவமற்று ஒரு மோஸ்தராக மேலைநாடுகளைக் காப்பியடிக்கும் இலக்கியம் படைக்க முயலும் நவீனத்துவ, பின்நவீனத்துவவாதிகளுக்கும் இடைப்பட்ட ஒரு நிலையே இன்றைய இலக்கியத்திற்குத் தேவைப்படுவதாக அவருக்குத் தோன்றுகிறது. இங்கவர் காணத்தவறிய பக்கங்களைக் காண்போம்.

சோதனை முயற்சியில் ஒரு படைப்பாளி தோல்வியும் அடையலாம். போலியான இலக்கியங்கள் எம்முகாமிலும் காணக்கிடைப்பனவே. சோதனை என ஜோடனையால் மட்டுமே ஒரு படைப்பைத் தூக்கி நிறுத்திவிட இயலாது. உண்மையான படைப்பு அதற்குரிய இடத்தை அடைந்தே தீரும். அது உடனேயும் நிகழலாம். காலத்தினாலும் கண்டடையப்படலாம். அதற்கென வாசகர்களை அது கண்டடைந்தே தீரும்.

சமாந்தர இலக்கியப் போக்குகளை உள்ளவாறு இனம் காண எத்தனிக்காமலேயே தமக்கு எட்டாக்கனிகளைப் புறக்கணித்துத் தம்மைத்தாமே அவர் ஏமாற்றிக்கொண்ட கோளாறும் இப்புள்ளியில்தான். பெரும்பாலானவற்றுடன் எவ்வாறவர் முரண்படுகிறார் எனவும் முன்வைக்கவில்லை. குறிப்பிட்டுச் சொல்லத்தக்க சில படைப்புகளைத் தவிர என விதந்தோதுவனவற்றுடன் அவர் எவ்வாறு உடன்பட்டார் எனவும் எடுத்துரைக்கவில்லை. பின் நவீனத்துவம் பற்றிய பிழைத்துணர்ந்த திரியான வெளிப்பாடாகக் காணக்கிடக்கும் அவருடைய நூலே (பின்நவீனத்துவம் பித்தும் தெளிவும்). இத்தொடர்பிலான அவர் தெளிவின்மைக்கும் மயக்கங்களுக்கும் போதுமான சான்றாதாரமாகும். இது பற்றி விரிவாக எடுத்துரைக்க இங்கே இடமில்லை. 70 - களின் நிலைப்பாடுகளிலேயே 2014இலும் இன்றளவுங்கூட அவர் நீடித்திருப்பதே அவரது தேக்கத்திற்கான முகாமையான காரணி என்பதை வலியுறுத்து முகமாகவே இதனைச் சுட்டிக்காட்ட நேர்ந்தது.

--

தம் கதைகளுக்குத் தாமே ஒரு விமர்சகராய் நின்று தன் மதிப்பீடும் செய்துகொள்கின்றார். சொல்லப்பட்ட செய்தியளவிலும் செய்நேர்த்தியிலும் தட்டித்தட்டிப் பொறுக்கிப் பார்த்துக் கனகச்சிதமாய்ச் செதுக்கி உருவாக்கப்பட்ட விதைப்பயிர்களெனவும் விதைக்காகாது எனினும் தின்பதற்கு மிகவும் ருசியான நன்னிப்பயிறுகளெனவும் ஒரு பட்டியலும் இட்டுள்ளார். ஓரிரு கதைகளின் வேக்காடு போதுமானதாக இல்லை எனவும் சுயவிமர்சனம் செய்துகொள்கின்றார். அவரவர் வாசிப்பிற்கேற்ப இத்தகு நெத்துப்பயிறுகளையும் நன்னிப்பயிறுகளையும் வெவ்வேறானவையாக நாம் இனங்காண இயலும்.

என் வாசிப்பின் வசதி கருதி நானும் சில வகைப்பாடுகளை விதந்தோதி இனங்காண முற்படுகிறேன். இவ்வகைமைப்பாட்டுக்கூடே ஒரு கதையே வெவ்வேறு வகைமையிலும் பட்டடங்கக்கூடும்.

  1. அரசியல் இயக்கப் பகடி அங்கதக் கதைகள்
  2. காமத்திளைப்புப் பாலியல் கதைகள்
  3. நவீன - பின்நவீன யதார்த்தக்கூறுகள்

அரசியல் இயக்கப் பகடி அங்கதக்கதைகள்

இத்தகைய கதைகளே இத்தொகுப்பில் கணிசமானவையாகும். இவையாவும் 1985 - 2011 காலப்பகுதிக்கு உட்பட்டவை. அவரது தேக்கத்திற்கு அப்பாற்பட்ட மீள்வரவானவை. முற்குறிப்பிட்ட மூன்றாவது செல்நெறியின் பாற்பட்டன. இவை பெரும்பாலும் கட்சிகட்டும் குதர்க்கம் / கட்டவிழ்க்கும் தர்க்கம் எனும் இருமை எதிர்வின் வெளிப்பாடுகள். இந்த வகையிலான இப்படைப்புகள் தனித்துவம் ஆனவையே.

  • பக்திமார்க்கம்
  • பிரார்த்தனைகளும் பிரசாதங்களும்
  • வினை
  • மையம்
  • சவாரி
  • கரசேவை
  • முளைப்பு
  • நாவன்மை
  • விருந்து
  • கிட்டுதல்
  • தக்கார் தகவிலார்
  • சென்னையில் பார்க்க வேண்டிய இடங்கள்

1970 முதல் 1985 வரை ‘சி.பி.எம்.’மிலும் 1985 முதல் 2005 வரை ‘தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சியிலும் (இப்போது பொதுவுடைமையைக் கைநெகிழ்த்த ‘தமிழ்த்தேசியப்பேரியக்கம்’) களப்பணியில் ஊன்றி இயங்கினார். பின்னர் அதனின்றும் விலகி ‘தமிழ்த்தேச மார்க்சியக் கட்சி’யைத் தொடங்கி அதனுடன் ’மண்மொழி’ இதழையும் நடத்தினார். ஆகச் சற்றொப்ப நாற்பதாண்டுக் காலப் பொதுவுடைமை இயக்க வாழ்க்கையில் அவருக்கு அனுபவபூர்வமான புரிதல்கள் கட்சி அலுவலகம், கமிட்டிக் கூட்டங்கள் மாநாடுகள், மாதர்சங்கம், கட்சி இதழ் எல்லாவகையிலுமாக இத்தகு கதைகளுக்கான கச்சாப் பொருள்களாகியுள்ளன. ‘பக்தி மார்க்கம்’, ‘பிரார்த்தனைகளும் பிரசாதங்களும்’- பெயரீடுகளே அருமையான எள்ளல்கள். ‘தக்கார் தகவிலர்’ கதையில் ‘புரட்சித்தணல்’ மாத இதழில் ஆசிரியர் கூட்டத்தைச் சித்திரிப்பது. ஆசிரியர் குழு ‘தக்கார் தகவிலர்’ எனத் தெரிவுசெய்யும் இலட்சணத்தை வாசிக்கையில் பின்னுரை வரிகள் நம் மனத்தில் பளிச்சிடுகின்றன.

“செம்மலரில் நான்கைந்து கதைகள் வெளிவந்ததற்குள்ளாகவே செம்மலருக்கும் எனக்குமான சில கருத்துவேறுபாடுகள் தெரிந்தன. இலக்கியம் பற்றிய என்னுடைய புரிதல்களும் அவர்களுடைய புரிதல்களும் வெவ்வேறு விதமாய் இருந்தன.”

“நினைத்ததை இதில் எழுத முடியவில்லை. சுதந்திரமாய்ச் செயல்பட முடியவில்லை என்கிற ஆதங்கம் மட்டுமே இருந்தது”

‘பக்தி மார்க்கம்’, ‘மையம்’, ‘சவாரி’ மூன்று கதைகளுமே கட்சி நிலைப்பாடுகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் நிர்வாகப் பொறுப்பினர் நியாயமாகக் கேட்கப்படும் வினாக்களுக்கும் உரிய முறையில் எதிர்கொள்ளாமல் மேலிருந்து திணிக்கப்படும் முடிவுகளுக்குச் சப்பைக் கட்டுக்கட்டி நியாயப்படுத்துவது, வாதகதிகளைத் திசைத் திருப்பிக் குதர்க்கமாகக் குற்றஞ்சுமத்த முனைவது, கட்சி அலுவலகம் கட்சி நிர்வாகம் எல்லாமே வலதுசாரிக் கட்சி நடைமுறைகள் போலச் சீரழிந்துபோன அவலத்தைச் சித்திரிப்பனவே. உதாரணத்திற்குப் ‘பக்திமார்க்கம்’ கூட்டணி அரசியலைத் தக்கவைத்துக் கொள்ளுமுகமாக 5+5 என்றொரு தேர்தலின் போதும், 5+5 என்று மறுதேர்தலின் போதும் நியாயப்படுத்த முனையும் சீரழிவின் சித்திரம். இவ்வகையில் ‘சவாரி’யில் வெளிப்படும் பகடி அங்கதங்கள் உச்சபட்சமானவை. அது தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சியிலிருந்து வெளியேற நேர்ந்தபின் 2006 பிப்ரவரியில் ‘தீராநதி’ இதழில் வெளியானது. பரமார்த்தகுரு சீடர் கதையின் அதிநவீன வடிவமானது எனலாம்.

‘பிரார்த்தனைகளும் பிரசாதங்களும்’ மாநாட்டில் பங்கேற்க இயலாமல் போன ஏக்கத்துடன் போய்த் திரும்பி வந்த தோழருடன் மாநாட்டு அனுபவங்களைக் கேட்டறிகின்றபோது எதிர்கொள்ளநேரும் பெரிய ஏமாற்றங்களைச் சித்திரிப்பது என்றால் ‘வினை’ மாதர் சங்க மாநாட்டிற்கு மனைவியை அனுப்பிவைக்கும் தோழர் மனைவி மீண்டதும் எதிர்கொள்ள நேரும் சிக்கலைச் சித்திரிப்பது.

“தனியாய்த் தட்டித் தட்டித் தேற்றி உருவாக்கிய உணர்வுகள் சிந்தனைகளை ஆகர்ஷித்து வளர்த்தெடுக்கும் மையமாக மாநாடு அமையும் என்று பார்த்தால் அதோடுமட்டும் அமையாமல், இன்னொருபக்கம் அது ஏற்கெனவே வளர்த்தெடுத்து உருவாக்கி வைத்திருந்த எல்லாவற்றையும் போட்டு உடைத்து அல்லவா அமைந்துவிட்டது. இதெல்லாம் என்ன போக்கோ கண்றாவி”

‘பிரார்த்தனைகளும்...’ கதையிலும் இவ்வாறே மனம் கைக்க வைத்தது மாநாட்டு அனுபவம். ‘வினை’ கதையில் வினை என்பது அவன் சொந்தக்காசில் தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொள்வது. மாதர்சங்க மாநாட்டிற்கு மட்டுமில்லை. இனி மனைவியை வெளியே அனுப்பாமல் வீட்டுக்குள்ளேயே வைத்திருப்பதா என மாறும் அத்தோழரை அல்லாட வைத்துவிடுகிறது. அதைக்கூடக் கொள்கை தொடர்பான பிரச்சினையாய் இருப்பதனால் அடுத்த முறை மேல்கமிட்டிக்குப் போகையில் மாவட்டச்செயலாளரைக் கேட்டு முடிவெடுக்கலாம் என நினைத்துக்கொண்டதாக நக்கல் முத்தாய்ப்புடன் முடிவடைகிறது ‘வினை’.

இக்கதைகள் பொதுவுடைமை இயக்கப்போக்குகளின் மீதான அரசியல்பகடி அங்கதக்கதைகள் என்றால் ‘கிட்டுதலும்’, ‘முனைப்பும்’ தனித்தமிழ் மீதானதாகவும் ‘நா’வன்மை நீர்த்துப்போன பட்டிமன்றம் வடிவம் மீதானதாகவும், அமைந்தியலும் பகடியாட்டக் கதைகளே. ‘வைபவம்’ திராவிட இயக்கக் கொள்கைக்கும் நடைமுறைக்குமிடையேயான முரண்பாடுகளை நாள்தோறும் பார்த்து எல்லாச் சடங்குகளுடனும் அய்யரை வைத்து நடத்தாமல் தலைவரை வைத்து நடத்தும் சுயமரியாதைத் திருமணத்தை நக்கலடிப்பது.

முகூர்த்தநேரம் முடியறதுக்குள்ள தாலிகட்டி முடிந்தபின் வாழ்த்துக்கள் மீண்டும் தொடர்ந்தன.

பின்வரிசையில் சிவப்புச்சொக்காய் போட்ட ஒரு இளைஞன்,

‘இப்பெல்லாம் இவரு ஒரு கல்யாணத்துக்கு எவ்ளோ வாங்குறாரு?’ என்றான்.

‘இருநூத்தி அம்பது ரூபா’

‘அய்யரு வந்தா எவ்வளவு குடுப்போம்’ என்றான்.

‘என்ன ஒரு அஞ்சு ரூபா, அரிசி, பருப்பு’

‘பரவால்ல... இவரு கல்யாணத்துக்கு அய்ம்பது பார்ப்பானையாவது ஒழிச்சி சமுதாயத்த சீர்த்திருத்துறாரு’ என்றான்.”

- இது 73இல் செம்மலரில் வெளியான கதை

- இது முதலாம் செல்நெறிக்கதை.

அய்யரை மட்டும் வைக்காமல் அய்தீகங்களைக் கறாராகக் கடைப்பிடிக்கும் வகையில் அது திராவிடக்கட்சியின் சீரழிவைச் சித்திரிப்பது வரை சரிதான். ஆனால் வெறும் தலைவர்க்கான தொகை அய்யர் தட்சணை ஒப்பீடாகச் சீர்த்திருத்தமுறையை நக்கலடிப்பது அக்காலக்கட்ட பொதுவுடைமைக்கட்சியரின் திராவிட இயக்க ஒவ்வாமையையும் அம்பலப்படுத்தக்கூடியதே!. இயக்க இதழ்சார் கதைகள் விளாம்பழங்கள் எனக் கண்டோம். அவற்றில் இவ்வாறான ‘வேழமுண்ட விளாங்கனி’களும் கிடக்கத்தான் செய்கின்றன.

திருமணமான பத்தாண்டுகளில் தன் குடும்பத்துடன் தனியே சுற்றுலா என்றெல்லாம் அவன் கூட்டிப்போனதே இல்லை. புரட்சி வந்து பொதுவுடைமைச் சமுதாயமும் மலர்ந்து தொழிலாளி வர்க்கமெல்லாம் ஜாலியாக இருந்தால் அப்போதுதான் அப்படிச் சுற்றுலா போகலாம் என்பதே அவன் நினைப்பு.

மனைவியின் நச்சரிப்புத் தாளாமல் வேலையற்ற சனி ஞாயிறு ஒன்றில் சென்னையிலேயே இரண்டு நாளும் தங்கி இடங்களையும் சுற்றிப்பார்த்து நண்பர்களையும் சந்தித்து வரலாமெனப் பயணப்பட்டார்கள்.

சென்னை வந்து மாநகரப் பேருந்தில் பயணித்தவாறே சட்டக்கல்லூரி, லைட் ஹவுஸ், குறளகம், சென்டரல் ஸ்டேசன், மாநகராட்சி அலுவலகம், இலங்கை வங்கி எல்லாவற்றையும் சுட்டிக்காட்டியதோடு அந்தந்தப் பகுதிகளில் நடந்தேறிய போராட்ட வரலாறுகளையும் எடுத்துரைக்கிறான். எங்கோ பார்த்தபடி அது அதற்கும் தலையாட்டி வருகிறாள் மனைவி.

இதான் பெண்கள் கிறித்துவக்கல்லூரி... அதான் டிபிஐ மாநிலக்கல்வி இயக்ககம், சாஸ்திரிபவன், மற்ற மற்ற அலுவலகங்கள், வள்ளுவர் கோட்டம், முற்போக்கு இதழ்களைப் போடும் ‘அலைகள்’ வெளியீட்டகம், ‘விஜயாவாகினி’ ஸ்டுடியோ என அவற்றின் மகாத்மியங்கள் ஆயிரக்கணக்கான போராட்ட வரலாறுகள் என எடுத்துரைப்புகள் தொடரலாயின. நண்பர் வீட்டிற்குப் போய்த் திரும்பினர். பீச்சிற்குப் போகலாம் எனும் மனைவியை அதெல்லாம் லக்கேஜ் இல்லாம கைய வீசிக்கினு எப்பனா வர்றப்பா பாத்துக்கலாம்னு மடக்கிவிட்டு நம்ம ஆள் ‘ஹிக்கின் பாதம்ஸ்க்குக்’ கூட்டிப்போயாயிற்று. அங்குள்ள குளிர்சாதன வசதி பீச்சில் கிடைக்காதாம். வெப்பக்காத்தா வீசுமாம். அடுத்தடுத்து நண்பர் வீடுகள் விருந்தென ஓடிப்போயின நாட்கள். ஊர்த்திரும்புகிறார்கள். வண்டி, வண்டலூரைத் தாண்டுகையில் ‘தோ தெரியுது பார், இதுதான் ஜூ... மிருகக் காட்சிசாலை உள்ள மிருகங்கலெல்லாம் இருக்கும்’ என்றானவன். ‘மிருகக்காட்சிசாலைன்னா மிருகங்கள் இல்லாம மனுஷங்களா இருப்பாங்க. வீணா வயிற்றெரிச்சலக் கௌப்பாம வாய மூடிக்கினு பேசாம வாங்க கம்முனு’ - அவளிடம் வாங்கிக் கட்டிக்கொண்டான். இக்கதையை வாசிக்கையில் கந்தர்வனுக்கு வண்ணதாசன் எழுதிய கடித வரிகள் மின்வெட்டலாயின:

“உங்களுடைய துணைவியாருக்கும் சற்று நெருக்கமான நேரம் ஒதுக்குங்கள்; ஸ்தாபனமோ, இலக்கியமோ அந்தப் பெண்களை அவர்களுடைய இடத்திலேயே விட்டு விட்டு நீ மட்டும் எங்களுக்குக் காரியம் பார் என்று சொல்லவில்லை.

நமக்கு வாய்த்திருப்பதெல்லாம் அருமையான மனுஷிகள் பூமி உருண்டையைப் புரட்டி விடுகிற நெம்புகோல்களுக்கு அடியில் அவர்கள்தான் செங்காமட்டை மாதிரி நசுங்கிக்கொண்டு கிடக்கிறார்கள். என்னையும் உங்களையும் அனுசரணையாயும் பத்திரமாயும் வைத்திருக்கிற பெண்களுக்கு நாம் அப்படியொன்றும் செய்துவிடவில்லை” (எல்லோருக்கும் அன்புடன், ப.95)

இயக்கம்சார் அனுபவங்களுடனே இவ்வாறெல்லாம் மனம் கைத்துத்தான் வெளியேற நேர்கின்றது. சுட்டெரிக்கும் உண்மைகள் இப்படியெல்லாந்தாம் நீறுபூத்த நெருப்பாக இராசேந்திர சோழன் கதைகளினூடே காணக்கிடக்கின்றது.

“சில காலம் கட்சியில் இருந்த தோழன். விரிந்த படைப்பாளி. யாரோ ஓர் அறிஞன் சொன்னதாக அடிக்கடி சொல்வான்: ‘எந்த இடத்தில் நீ கற்றுக்கொள்ள ஒன்றுமில்லையோ அந்த இடத்தைவிட்டு உடனடியாக வெளியேறி விடு’ என்று. ‘இப்ப கட்சியில நாம்பக் கத்துக்குறதுக்கு ஒண்ணுமில்லப்பா. கத்துக்குடுக்குறதுக்கும் ஒண்ணும் இல்ல. எதுக்குத் தெண்டத்துக்கு அதுல நாளத்தள்ளிக்கினு. பேசாம வெளியே வந்து உருப்படியா வேறவேல எதுனா இருந்தா பார்க்கலாம்’ என்பான்”.

‘அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்’, ‘வான் சுதை வண்ணங்கொளல்’ என்னும் குறட்பாக்களும்; மூளைச் சோம்பேறிகளோடும் நிரம்பிய கோப்பைகளோடும் மல்லுக்கட்டி என்ன பயன்? எனும் திருமந்திரமும் மின்வெட்டாகின்றன.

“அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும்
அறிவிக்க வேண்டாம் அறிவில் செறிவார்க்கும்
அறிவுற்று அறியாமை எய்திநிற் போர்க்கே
அறிவிக்கத் தம்மறி வார்அறி வோரே”

- திருமூலர்

--

காமத்திளைப்புப் பாலியல் கதைகள்

“எழுபதுகளில் இப்படிப்பட்ட கதைகளைப் படித்த இலக்கிய விமர்சகர் ஒருவர் ‘தேவடியாள்’ பற்றிப் பாம்ப்லட் போடுகிற எழுத்தாளர் என்று என்னைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். சரி அவர்தான் அப்படி என்றால் நம்முடைய முற்போக்குகள் என்று சொல்லப்பட்டவர்கள் முகாமிலிருந்து வந்த விமர்சனம் அதைவிடச் சிறப்பு... ‘கோணல் வடிவங்கள்’ பற்றியும் ‘வானம் வெளிவாங்கி’ பற்றியும் அவர்கள் செய்திருந்த விமர்சனத்திற்கு, 15, ஜூன் ‘உதயம்’ இதழில் ‘சிகப்புக் காவிகள்’ என்கிற தலைப்பில் நான் பதில் எழுதியிருக்கிறேன்.”

“புரட்சிக்காரனுக்கு முக்கியமான ‘அயிட்டங்கள்’ எதுவும் இருக்கக்கூடாது அவன் ‘புரட்சி’ மட்டுமே பண்ணிக் கொண்டிருக்கவேண்டும். வேறு எதுவும் ‘பண்ணக்’கூடாது என்பது போன்ற மூடநம்பிக்கை”

இவ்வாறெல்லாம் எழுத்தாளர்களுக்கு இப்படி ‘தேவடியாள் பாம்ப்லெட்’ என முத்திரை குத்தப்படும் செக்ஸ் எழுத்தாளர் லேபிள் ஒட்டப்படுவதெல்லாம் ஒன்றும் புதிதில்லை. புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், தி.ஜானகிராமன், தஞ்சைப்பிரகாஷ் என வாழையடி வாழையாக வாய்க்கின்ற வழமையானதே.

இராசேந்திரசோழனின் காமத்திளைப்புப் பாலியல் கதைகளைப்

பாலியல் தொழிலாளி கதைகள்

  • பாசிகள்
  • சில சந்தர்ப்பங்கள்
  • வானம் வெளிவாங்கி

இருபால் அத்துமீறல் கதைகள்

  • சிதைவுகள்
  • எதிர்பார்ப்புகள்
  • ஊனம்
  • நாய்வேஷம்
  • அவரோட யோகம்
  • நாட்டம்
  • சூழல்
  • கோணல் வடிவங்கள்

             - என வகைப்படுத்தலாம்.

சிதைவுகள்’ கதை ‘விழிப்பு’ இதழிலும் ‘சில சந்தர்ப்பங்கள்’ செம்மலரிலும் வெளியாகின. சிதைவுகள் கதையால் ‘இமேஷ்’ பாழாகிவிடுமென்ற தோழர்கள் குறுக்கீட்டால் ஒரு பாரா சப்பைக்கட்டு போட்டு இதழில் வெளியிட்டதை இத்தொகுப்பில் நீக்கிவிட்டதாகப் பதிவு செய்துள்ளார். சிதைவுகளும் எதிர்பார்ப்புகளும் மணமான பெண்ணின் மீதான இளைஞனின் எதிர்பார்ப்புகள் வெவ்வேறு விதங்களில் சிதைவதைச் சித்திரிக்கப்பட்டனவே. சிதைவுகள் அவன் மனத்திலிருந்த அவளைப்பற்றி இமேஷ் அவளுடைய அவலங்களால் சிதைகிறது.‘எதிர்பார்ப்புகள்’ அவளை அடையும் நோக்கில் அவள் அவனைப் பொருட்படுத்தாமல் குழந்தையைப் புறக்கணிப்பதில் முடிகின்றது.

‘பாசிகள்’ குடும்பத்திற்குத் தெரியாமல் பாலியல் தொழில் புரியும் கதை அது அவருடைய ஆசிரியத்துவத்திலான ‘பிரச்சினை’ இதழிலேயே வெளி வந்தது.‘வானம் வெளிவாங்கி’ ‘அஃக்’ இதழில் வந்தபோதே வாசித்துள்ளேன். என் பார்வையில் அவருடைய சிறந்த சிறுகதைகளில் அதுவும் ஒன்றே. ஒரு இதுவுக்கு இவ்வளவு. ஒருமணிக்கு இவ்வளவு. ஒரு நைட்டுக்கு இவ்வளவு எனப் பேரங்கள்; தொழில்போட்டி எனத் தொடரும் அக்கதை, மறுபடி ‘போட’ முடியாதபடிக்குச் சோர்ந்தோய்ந்த அவன் நிலையின் குறியீடே ‘வானம் வெளிவாங்கி’ எனும் அருமையான தலைப்பு.

“ஏதோ நீயும் தப்பு பண்ணிட்ட. நானும் தப்புப் பண்ணிட்டேன். போவட்டம். இதுவரிக்கும் நம்ம பழக்கமானதுலருந்து ஒம்புருஷன் வர்தப்பத்தி எப்பனா ஏதுனா நான் வாயத் தெறந்து கேட்டுருப்பனா. ஏதோ கட்னவனாச்சே; அது கூடம் அவனும் கண்டும் காணாத மாதிரி பெரும்போக்காப் போயிக்கினுகிறானேன்னு நானும் ஒண்ணும் கேட்டுக்கிறதில்ல இல்லியா”

இப்படியே ஒரு கதாபாத்திரம் தன் தொடுப்பிடம் அவளது கட்டுனவனுக்கும் இல்லாத ‘பொசசிவ்னஸ்’ உடன் உரிமை கொண்டாடித் தொடர்கின்றது; இத்தகைய கதைமுடிச்சையே வாய்ப்புணர்ச்சி மூலம் சோதிப்பாக ஜி.முருகன் ‘புது எழுத்தில்’ ஒரு கதையை எழுதியுள்ளார்.

“இத்தினி நாளு மாதிரி இப்படியே போய்க்னு இருந்துட்டா ஒண்ணும் வரப் போறதில்லை; ஒம் புருஷனைத் தாண்டி இன்னொரத்தங்கிட்டயும் போறன்னா, எனக்கு எப்படி இருக்குது தெரியுமா?”

- இதுதான் ‘கோணல் வடிவங்கள்’. இது ‘கசடதபற’வில் வெளியான கதை. ஆம். அந்த வடிவங்கள் அப்படிக் கோணல்மானலான வடிவங்களே. அது அதுக்கும் அது அதற்கான நியாயங்களும் உண்டுதானே?

இப்படிக் கண்டுங்காணாமாதிரி பெரும்போக்காக ஊடாடிக்கிடக்கும் வெவ்வேறு கதாபாத்திரங்களை இனிக் காண்போம்.

“புருஷன் பெரும்போக்கு, ரெண்டுங்கெட்டான். எதையும் வித்தியாசமாக எடுத்துக்கொள்வது கிடையாது என்பதெல்லாம் உண்மையிலேயே வாஸ்தவம்தான்” - இது ‘நாட்டம்’ கதாபாத்திரச் சித்திரிப்பு.

இவ்வாறே ‘ஊனம்’, ‘நாய் வேஷம்’ கதைகளிலும் வெவ்வேறான கதையாடலூடே ஊடாடும் கதாபாத்திரங்களும் “அவரு இதெல்லாம் ஒண்ணும் கண்டுக்கமாட்டாரு. ரெண்டுங்கெட்டான். எதுவும் தெரியாது... உங்களாட்டம் ஆம்பிளயா நான் எங்கியும் பாக்கல. இப்ப எதுக்கு இப்படி மூஞ்சத் தூக்கிவச்சிக்கினு இருக்குறீங்க” என்று கேட்டபடியே புள்ளாண்டனை உக்கிரத்தோடு நெருங்குகின்றாள் ‘நாட்டம்’ நாயகி.

இவ்வாறே ‘ஊனம்’ நாயகி சாந்தாவும் “நீங்க எப்பயாவது என்ன கெனவுல கண்டுருக்கீங்களா? எனக் கேட்பவளிடம், இது என்ன கேள்வி என ஒன்னைக் கேட்கிறான் அவன்.”

“இல்ல நேத்து ராத்திரி நான் ஒங்களப்பத்தி ஒரு கனவு கண்டேன்” என்பவளிடம் “என்னான்னு” கேட்கிறான் அவன்.

“ஒங்கள நான் வச்சிக்கினு இருக்குற மாதிரி” என்கிறாளவள்.

இவ்விரு கதைகளிலுமே நாயகியரின் இத்தகைய அத்துமீறல் அழைப்புகள் பொருட்படுத்தப்படவில்லை. சாந்தாவிடம் அவள் ‘இவரும் போக்கான’ கணவன் அவ காலத்தொட்டுக் கும்பிடறதா நெனைச்சுக்கச் சொல்லி நாளையிலர்ந்து யார்கிட்டயும் பேச்சு வச்சிக்கிறதில்லைனு மனசுல முடிவுபண்ணிக்க மன்றாடியும் அவளுக்கு அது ஒரு பொருட்டாகவே படவில்லை. இறுதியில் அவன் தூக்கில் தொங்கி விடுகின்றான். (‘பேச்சு வச்சுக்கிறது’ என்பது தொடுப்பு வச்சுக்கிறதயக் குறிக்கும் தென் ஆர்க்காடு பேச்சுவழக்கில்)

‘நாய்வேஷம்’ கதையிலோ இருசப்பன் மனைவிக்கும் ஏகாம்பரத்திற்குமான தொடர்பு இருப்பது அவன் காதுபடவே ஏளனம் செய்யப்படலாகின்றது. ஏளனம் புரிவோரிடம் அப்படியெல்லாம் ஏதுமில்லையென்றே அசமடக்குவான் இருசப்பன், விடாக்கண்டனாக மணி அவனை இழுத்துக் கொணர்ந்து கையும் களவுமாய்ப் பிடிபட வைத்துவிடுகிறான்.

“நம்பப் பொண்டாட்டி அப்டியாக்கொந்தவ இல்லன்னு இத்தினி நாளா எதியும் கண்டுக்காம இருந்திட்டண்டி. அடி நாதாரி சிறுக்கி. இப்படியா பண்ணுவ நீ”

இப்படி வூடு கட்டுகிறான் இருசப்பன். அந்த அலம்பல் சற்றே ஓய்ந்து முடிந்ததும் அவள் அவன் தோளைத்தடவி,

“என்னாத வந்துடுத்து உனக்கு இன்னைக்கி. இத்தினி நாளா என்னைக்குமில்லாம” என்றதும் அவன் ஏதும் பேசாமல் அவளைக் கட்டிப்பிடித்து மடியில் முகம் புதைத்து அழுதான்.

‘சூழலி’லும் ‘அவரோட லோகத்’திலும் இல்லற உறவைக் கணவன் அறியாமல் மனைவி மீறுகிறாள்.

“இங்க நீயும் இல்ல. ஆத்துல நானும் இல்லியா. இந்த வேலைக்காரிக்குக் குளுர் உட்டுடுத்து. ஆரோ அவ அத்த மவனாம் சூளமேட்ல அவனைக் கூட்டு வச்சிக் கொஞ்சிக்கினு இருக்கிறா கூடத்திலே... இது என்னவீடா பார்க்கா. மொதல்ல பக்கட் ஜலத்த கொண்டாந்து அந்தக் கூடத்தக் கழுவி விடச்சொல்லு”

இதுதான் ஆத்துக்காரியின் கதை அறியமாட்டாத ‘அவரோட லோகம்’.

‘சூழலி’ல் ஹிண்டு பேப்பர் பார்க்க வரும் எதிர் வீட்டுப்பையனை அவள் சகோதரனாகப் பாவித்தே ‘வா, போ’ என ஒருமையில் அழைக்கிறாள். அவன்மீது மோதிக் கொள்ள நேர்ந்ததைக் கூட கணவனிடம் பகிர்ந்துகொள்கிறாள். அவரும் விகற்பமாகக் கருதவில்லை. பேப்பரில் ஏதோ காட்டுவதை எதேச்சையாகப்படுவது போல் அவன் முழங்கையைத் தொடுகிறாள். பின் அவள் குளித்து முடித்து வந்தபின் திடீரென அவள் மீது பாய்ந்தவன் முத்தமிடத் தொடங்கிவிடுகிறான். மறுப்பேதும் சொல்லாமல் இணங்கிவிடுகிறாள். இது தொடர்கின்றது. பணியிட மாறுதலாய் வேறு ஊர்க்குக் குடிபெயர்கின்றாள். இன்னொருவரை மனைவியுடன் தொடர்புபடுத்திக் கணவன் அய்யுறுகின்றான். தப்புச் செய்தபோதெல்லாம் நம்பிய கணவன் செய்யாத தப்புக்கு அய்யுறுவதை அவளால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இந்தச்சூழலில் எதிர்வீட்டுப் பையனும் பணிமாறுதலாகி அங்கேயே வருகிறான். அவனை இயல்பாக மகிழ்ந்து வரவேற்கும் கணவன் வீட்டில் சாப்பிடச் சொல்லிவிட்டு வெளியே போகிறார். இந்த நம்பிக்கையைக் குலைத்து மீண்டும் பாவப்பட்டவளாகத்தான் தயாராகவில்லையென உறுதி பூணுகிறாள் அவள்.

“ஒரு கோணத்தில் யோசிக்கக் கதைச்சம்பவங்களின் நிகழ்களம் அதாவது அதன் புறப்பரப்பு மிகக் குறுகியவரம்புக்கு உட்பட்டதாகவே தெரிகிறது... இப்படி இவை சுருங்கி இருந்தாலும் கதைகள் தொடும் அகப்பரப்பின் எல்லை விரிவானது. இதுக்கு முன் பலரால் தொடப்படாதது. இலக்கியச்சாரம் அகப்பரப்பே என்பதால், முன்னதன் குறையை இது நிவர்த்திச் செய்து விடும் என்று தோன்றுகிறது.”

இது அவருடைய சிறுகதைகள் பற்றிய அவரின் தன்மதிப்பீடு. அவர் சொல்லுமாப்போலே ‘கதை ஒன்று; சொல்லல் பல’ என வாங்கு ஒரு கதை முடிச்சையே வைத்து அவரால் வெவ்வேறு கதைகளை விதவிதமாகப் பின்னிக்காட்டிட முடிகின்றது என்பதற்கும் அவற்றிற்கூடாக அடிமனச்சலனங்களின் தருணங்களைக் கதையாக்குவதில் வல்லமை என்னும் பதிப்புக்குறிப்பிற்குமான நிரூபணங்களே அவருடைய காமத்திளைப்புப் பாலியல்கதைகள் எனலாம். முழுக்க முழுக்க நல்லனவாகவோ அல்லனவாகவோ வெறும் தட்டையான பாத்திரங்களாக இல்லாமல் அங்கவற்றின் குறைகளோடும் நிறைகளோடும் கலந்து கட்டியவாறே அவருடைய கதாபாத்திரங்கள் காணக்கிடக்கின்றன. உதாரணத்திற்கு ‘சூழலின்’ கதைசொல்லியான கதாபாத்திரம் எத்தகைய சூழலில் தவறிழைக்க நேர்கின்றது. எத்தகைய சூழலில் அதனின்றும் மீள நேர்கின்றது எனச் சித்திரித்துள்ள பாங்கில் சூழலும் அவருடைய சிறந்த கதைகளில் ஒன்றாக எனக்குப் படுகின்றது.

--

ஒரு பக்கம் யதார்த்தவாதமே காலியாகிவிட்டது என்னும் மரண அறிவிப்புச் சொல்லாடலும், மறுபக்கம் அதற்கென்றுமே சாவில்லை ‘பொருட்கு அழிவில்லை. நிலைமாற்றமே உண்டு’ என்னுமாப்போலே யதார்த்தவாதமே பன்முகமானதாக மாறி மாறி வடிவெடுத்து உயர்ந்திருக்கும் எனும் எதிரீடும் முன் வைக்கப் படலாகின்றன.

யதார்த்தவாத மரண அறிவிப்புச் சொல்லாடலைக் கேள்விக்கு உள்ளாக்குமுகமாக அது வெவ்வேறு வகையான லேபிள்களுடன் பிரமாண்டமான இலக்கியத்துவ ஜோடனைகள் செய்யப்பட்டு வெளியே வந்து நின்று சீனத்து யாளி மாதிரி நெளிந்து கொண்டிருக்கின்றது எனத் தொடர்வார் பிரமிள்:

“யதார்த்தவியலைப் பச்சைவெட்டான நிஜம் என்று கண்ட கணிப்பு காலாவதியாகிவிட்டது என்பதே சரியானபார்வை. வாழ்வின் நிஜத்தன்மையைச் சாதிக்கும் யதார்த்தவியல் மறையவில்லை, மறையாது, மறையவும் கூடாது” - ‘வெயிலும் நிழலும்’ (ப.520)

இதனை வேறுவிதமாக எடுத்துரைப்பார் எம்.ஜி. சுரேஷ்:

“யதார்த்தம் காலாவதியாகிவிடாமல் இருக்கும் பொருட்டுத் தன்னைப் புதுப்பித்தும் கொள்ளும்போது, அது பின்நவீன யதார்த்தமாக மாற்றங் கொள்கிறது.”

“நவீன யதார்த்தத்துக்கும் பின்நவீன யதார்த்தத்துக்கும் இடையே நிலவும் வித்தியாசம் இதுதான். நவீன யதார்த்தப் பிரதிகள் ஒற்றை அர்த்தம் (Univalent) கொண்டவை. பின்நவீன யதார்த்தப் பிரதிகள் பன்முக அர்த்தம் (Multivalent) கொண்டவை.”

- பின்நவீனத்துவம் (பக்.19 - 15)

யதார்த்தம் குறித்த இராசேந்திரசோழனின் புரிதல்கள் எவ்வாறு காணக்கிடக்கின்றன எனக் காண்போம்.

“எழுதும் எழுத்தெல்லாம், யதார்த்தமாகத்தான் இருக்கவேண்டும் என்றோ, யதார்த்தத்தைக் கடக்கவே கூடாது என்றோ கட்டுப்பெட்டித்தனமெல்லாம் கலைப்படைப்பில் எதுவும் கிடையாது. எழுத்தில் உண்மை இருக்க வேண்டும். அது எந்த வடிவு கொண்டால் என்ன என்பதே சரியான புரிதலாக இருக்கமுடியும்.”

“உண்மை என்பது யதார்த்த நிகழ்வுகளில்தான் இருக்கவேண்டும் என்பதல்ல. யதார்த்தம் கடந்த நிகழ்வுகளிலும் அது இருக்கலாம், இருக்கிறது. காரணம் நிஜவாழ்வின் யதார்த்தம் வேறு; கலைப்படைப்பின் இலக்கியப்படைப்பின் யதார்த்தம் வேறு”

இராசேந்திரசோழனுக்குள் இருக்கும் களப்பணியாளனான தோழனுக்கு வாய்த்திருக்கும் பின்நவீனத்துவம் குறித்த புரிதல் பிழைத்துணர்ந்த திரிபானவையே என்ற போதிலும், இராசேந்திரசோழனுக்குள் இருக்கும் படைப்புக் கலைஞனின் யதார்த்தவாதம் குறித்த புரிதல்கள் நவீனத்துவ, பின்நவீனத்துவச் சொல்லாடல்களைப் பாவிக்காமலே அத்தகு புரிதல்களுக்கு அண்மித்துவருகின்றன.

நவீனத்துவ, பின் நவீனத்துவ உத்திகளைச் சரிவர உள்வாங்கிக் கொள்ளாமலே அவை குறித்த ஓர்மையற்றே கூட ஒருவருடைய படைப்பிலவை ஊடாடியும் கிடக்கக்கூடும். அது நேரடித் தர்க்கமாக அல்லாமல் அதன்தாக்கம் வாய்க்கப்பெற்ற மற்றொரு எழுத்தாளரின் தர்க்கத்தால் பெற்ற ஆக்கமாகக் கூட அமையலாம்.

இலக்கியம் கண்டதற்குத்தானே இலக்கணம் எல்லாம்.இத்தகைய கூறுகளை எல்லாம் இனங்கண்டு எடுத்துரைத்தாக வேண்டியதே விமர்சனங்களின் கடமை என்கிற உள்ளார்ந்த புரிதலுடன் அதனையே இங்கும் நான் ஈடேற்றத் தலைப்படுகிறேன்.

“படைப்பு என்பதே ஒரு இசைக்கோவை போல எனக்கு நிகழ்கிறது. அக்கோவையில் தொடக்கம், முடிவு, ஏற்ற இறக்கங்கள் எல்லாம் ஒரே சீராக இறுதியாக்கப்பட்ட உருவ அமைதியில் இருக்க வேண்டும் என மனது விரும்புகிறது. இதனாலேயே ஒவ்வொரு படைப்பும் அதன் போக்கில் தன்னளவில் ஒரு வரைபடத்தை ஒழுங்குபடுத்தி நிறைவு செய்கிற வரைக்கும், குறிப்பிட்ட இடங்களில் கதையை மாற்றி மாற்றி அடித்துத் திருத்தி எழுதிக் கொண்டிருக்கவேண்டியது எனக்குத் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது”

- இது அவர்தம் படைப்புருவாக்க நெறிமுறை குறித்தான வாக்குமூலமாகும்.

இங்கு நவீன சிறுகதைக்கும் பின்நவீன சிறுகதைக்கும் இடையே அமைந்தியலும் வேறுபாட்டம்சங்களை விதந்தோதி இனங்காணலாம்.

“நவீன சிறுகதைக்கு ஆரம்பம். நடு, முடிவு ஆகிய அம்சங்கள் உண்டு. பின்நவீன சிறுகதைக்கு இது கிடையாது. நவீன சிறுகதைக்கு மையம் உண்டு. அதாவது கதைக்கரு என்று ஒன்று உண்டு. பின்நவீனச் சிறுகதைக்கு மையம் என்று எதுவும் கிடையாது”

- எம்.ஜி.சுரேஷ் (பறை-2015, ப.118)

இத்தகைய புரிதல்களுடன் இராசேந்திரசோழன் கதைகளில் காணக்கிடக்கும் நவீன யதார்த்தம், பின்நவீனத்துவ யதார்த்தக்கூறுகளை இனம் காணப்புகலாம்.

நவீன - பின் நவீன யதார்த்தக்கூறுகள்

“ஒரு கதாபாத்திரத்தின் பலங்களோடு பலவீனங்களையும் சேர்க்கிறபோதே அது யதார்த்த கதா பாத்திரமாக உண்மைக்கு நெருங்கிவர முடிகிறது.”

“ரியலிசத்தின் பன்முகங்களாக இருக்கிற நியோ ரியலிசம், சர்ரியலிசம், ரொமான்டிஸம், மாடர்னிசம், போஸ்ட்மாடர்னிசம் என்கிற பன்முகங்களின் கலவையாக அல்லது கலவைகளுக்கிடையே அணுக்களின் நிற்காத பாதையற்ற பாதையின் ப்ரவ்னியன் நகர்வாய், இயக்கமாய் ரியலிசம் தன்னை நதியின் ஒருதுளியின் பயணிப்பாய் புதிது புதிதாய் தனதான இருத்தலை நகர்த்திக் கொண்டே இருக்கிறது”

- தி.குலசேகர் (படச்சுருள் - செப்.18)

திரைப்படங்களை முன்னிறுத்தித் தி.குலசேகர் எழுதிச் செல்வது இங்கு நோக்கத்தக்கது. இராசேந்திரசோழன் கதாபாத்திரங்களின் பாத்திர வார்ப்பைப் பேசுமுகமாக இதனை இங்கே எடுத்தாள நேர்ந்தது. அவருடைய கதாபாத்திரங்களை ஏலவே நாம் இனம் கண்டவாறு அவையாவும் அவ்வவ்வற்றிற்கே உரிய குறை நிறைகளோடு ஊடாடிக் கிடப்பன. பிம்பங்களைச் சிதிலமாக்குவன.புனிதங்களைக் கேள்விக்குள்ளாக்குவன. அரசியற் போலிகளை அம்பலப்படுத்துவன. இத்தகு பிம்ப உடைப்பும் கட்டவிழ்ப்பும் பின்னை நவீனத்துவக் கூறுகளேயாம்.

இத்தகைய புரிதல்களின் வெளிச்சத்தில் இங்கே விமர்சன யதார்த்தவாதக் கதைகள் என

  • நீதி
  • சடங்கு
  • இடைவெளி
  • ஊற்றுக்கண்
  • பக்கவாத்தியம்
  • விவஸ்தை
  • இழை
  • தனபாக்கியத்தோட ரவை நேரம்
  • மதராசும் மன்னார்சாமியும்
  • எங்கள் தெருவில் ஒரு கதாபாத்திரம்
  • பயன்கள்

இவற்றை வகைப்படுத்தலாம். அவருடைய பெரும்பாலான கதைகள் விமர்சன யதார்த்தவாதக் கதைகளே வகைமாதிரிக்குச் சிலவற்றையே எடுத்துக் காட்டியுள்ளேன்.

ஊற்றுக்கண்களும்’, ‘இடைவெளி’யும் வேலையின்மை, மன உளைச்சல்களின் வெவ்வேறு வித வெளிப்பாடுகள்.

மதராசும் மன்னார்சாமியும்’ போலீஸ் பொய்க்கேஸ் போட ஆள் பிடிக்கிற கதை என்றால் ‘பக்கவாத்தியமோ’ போலீஸ்க்கு ஒத்தூதுகிறக் கதை.

வீடிழந்தவர்களுக்கான உதவித்தொகை வழங்குவதில் அதிற்பாதியை மாரியம்மன் கோவில் கட்டுவதாகப் பறிக்கும் இடைத்தரகருக்கு எதிராக நீதிக்குரல் எழுப்பும் நாராயணனுக்கு நேரும் கதியை எடுத்துரைப்பதே ‘நீதி’.

“அந்த ஊரிலே போலீஸ் இருந்தது. ஆனால் அது யாருக்காகவோ. அதைவிட அதிசயம் நாராயணனை ஒற்றைப் புளியமரத்து முனீஸ்வரன் அறைந்துவிட்டதென்றோ; கோயிலுக்குக் காவு தரமாட்டேன் என்றதால் பாவம் அவனை மாரியாத்தாள் பழித்தீர்த்து விட்ட மண் என்றோ ஊர் மக்கள் பேசிக் கொண்டிருந்ததுதான்.”

நாராயணன் தீர்த்துக்கட்டப்பட்டதோ யாருக்காகவோ போலீஸ் இருக்கிறதல்லவா அந்த மகானுபவர்களால்தான். பழி புளியமரத்து முனி தலையிலும் மாரியாத்தா தலையிலும். ஆற்றங்கரையில் பிள்ளைகளால் சீண்டப்படும் பைத்தியக்காரப் பாட்டி ஆற்றில் விழுந்த ஒரு பிள்ளையைக் கரையேற்றி முதலுதவிகளும் செய்கிறார். அப்பாட்டியிடமிருந்து தன் மகனைப் பறிக்கும் அம்மா அவனிடம், ‘ஆரூடீ கண்ணு  ஒன்ன கொளத்தில் பிடிச்சித் தள்ளினது’ எனக் கேட்க அது கிழவி பக்கம் கையைக் காட்டுகிறது. இதுதான் ஒரு மனவெளி மனுஷியின் கதையான ‘சடங்கு’.

‘பயன்கள்’ கிணற்றில் கண்டெடுக்கப்பட்டு எழுந்தருளிய இகமு. (இக்கட்டைக் களையும் முக்கூட்டு) விநாயகரால் அவரவர்கட்கும் நேர்ந்த பயன்களால் ராசியில்லாத அவருக்கு நேர்ந்த கதியைச் சித்திரிப்பது. ‘அண்ணா டீ ஸ்டால்’ அப்பாசாமி, பத்மநாபன் டீக் கடை, பெருமாள் பண்டிதர் ‘கிராப் ஷேவிங் பார்பர் ஷாப்’, ‘ஏக் மாரா, தோ துக்கடா’ சுபான்சாயுபு பெட்டிக்கடை, ஊருக்கப்பால் சாலையோரப் புளிய மரத்தடி என அவர்க்கு நேர்ந்த பாவபலன்களுக்கு எல்லாம்  பிள்ளையார் ராசி இலட்சணத்திலென இகமு விநாயகர் அங்கங்கும் பந்தாடப்படுகின்றார் பரிதாபமாய்.

“இப்போது அது இவர்களையெல்லாம் விட்டுப்பிரிந்து வெகுதூரத்தில் தனியாகவும் நிராதரவாகவும் கிடந்தது. வழிப்போக்கன் எவனாவது அதன்மேல் சிறிதுநேரம் சும்மாவோ ‘தம்’ அடித்தோ குந்தி இளைப்பாறுகிறான். அல்லது மூட்டையை இறக்கி வச்சு ஆசுவாசப்படுத்திக் கொள்கிறான். சமயத்தில் எப்போதாவது சாலையிலே ஓடும் நாய் அதைப்பார்த்து நின்று சுற்றி வந்து காலைத் தூக்கி அதற்கு அபிஷேகம் செய்து விட்டுப்போகிறது”

இக்கதை எழுதப்பட்டது எழுபதுகளில். அந்த ராசியில்லாத பிள்ளையார் இப்போது வேறெங்கோ கோலாகலமாக எழுந்தருளிக் கொண்டாடப்பட்டிருப்பார். இகமு விநாயரைக் காக்க இன்றைக்கு இமமு இமக எனலாம் இருக்கவே இருக்கின்றனவே.

எல்லாரையும் எடுத்தெறிந்து கடாசும் கதாபாத்திரமான பவுனம்மா, கிழிசல் பாவாடையைத் தச்சுத் தரவும் பேன் பார்த்துவிடவும் ரவைக்குச் சினிமாவுக்குப் போகவும் கேட்கிற மகள்களின் இறைஞ்சுதல்கள்; ரவையூண்டு ரசம் வச்சுத்தரக் கேட்கும் கிழவி. கைமாத்துக்கு வந்து நிற்கும் தேவானை என அனைவரின் கோரிக்கைகளுமே பவுனம்மாள் வந்த வேகத்திலேயே மறுதலிக்கப்பட்டுக் கடாசி எறியப்படுகின்றன. அப்புறம் அவையாவுமே பவுனம்மாவாலேயே ஒவ்வொன்றாய் ஈடேற்றவும் படலாகின்றன. வேலைச்சுமையின் நெருக்கடியில் அவற்றை நிராகரித்தாலும் அப்புறம் ஈடேற்றும் தாய்மைப் பரிவின் அடையாளமே ‘எங்கள் தெருவில் ஒரு கதாபாத்திரமான’ பவுனம்மா.

பாத்திரப் பேச்சு வாயிலாகப் படைப்புருவாக்கம் எனும் உத்தி என்னவோ நம் பழந்தமிழ்மரபு தொட்டே பயின்று வரக்கூடியதே. உரையாடல்களாலேயே கதைப்பின்னல் நிகழ்த்துதல் குணச்சித்திர வாய்ப்பைப் புலப்படுத்தல் எனும் புதினப்படுத்தல் உத்தி தி.ஜானகிராமன், ஜி.நாகராஜன், இமையம் கதைகளுக்கூடே வெவ்வேறு வகையில் அமைந்தியலக்கூடியது. அவ்வாறான கதைகளே ‘இழை’யும் ‘தனபாக்கியத்தோட ரவை நேரமும்’ அடிதடி அளவிற்கு வாக்குவாதம் முற்றினாலும் இயல்பாகவே சுமுகமான மாமூல் நிலைக்குத் திரும்பிவிடும் தம்பதியர் கதையே ‘தனபாக்கியத்தோட ரவ நேரம்’ (ரவ என்றால் கொஞ்சம் என்று பொருள். ‘இரவு’ என்றும் பொருள்)  ‘இழையும்’ இவ்வாறே வாக்குவாத உரையாடலாகித் தொடர்ந்தவாறே ஊடியவாறே கூடலுமாகும் அருமையான இழை நெசவே.

‘சொல்லாதே காட்டு’ என்னும் நாடகீயச் சூட்சுமத்தை நாடகக் கலைஞனாகிய அஸ்வகோஷ் சிறுகதைகளுக்கும் மடைமாற்றி விடும்பாங்கு விமர்சன யதார்த்தவாதக் கதைகளினூடே விசையூன்றி வெளிப்படலாகின்றது. இவற்றிற்கு அப்பாலாக இராசேந்திரசோழன் வார்த்தைகளிலேயே பின்நவீனச் சொல்லாடல்களைப் பாவிக்காமலே கூறுவதானால் நிஜவாழ்வின் யதார்த்தங்கடந்த இலக்கிய யதார்த்த கதைகளாக

  • சவாரி
  • புரட்சிப் பயணம்
  • குருவிவர்க்கம்
  • நாவன்மை
  • கரசேவை
  • நாய்வேஷம்
  • இச்சை
  • நிலச்சரிவு
  • பரிணாமச் சுவடுகள்

இவற்றை இனங்காணலாம்.

புரட்சிப்பயணமும்’, ‘சவாரியும்’ கட்சி நிர்வாகம், இயக்கப்போக்குகள் குறித்த அரசியற்பகடி அங்கத உருவகக் கதைகள். ‘குருவிவர்க்கத்திலும்’, ‘நாய்வேஷத்திலும்’ நினைவுகளினூடே குறியீடுகள் காணக்கிடப்பனவாம்.

நாய் வேஷம்’ ஏலவே பாலியல் கதைகள் பகுதியில் பார்த்த கதையே. பெரும்போக்கானவனாக மனைவியின் அத்துமீறலைக் கண்டுங்காணாமல் இருக்கும் இருசப்பன் கதையில் அவன் நினைவுகூர்வதாக வரும் பகுதியில் காணக்கிடக்கிறது குறியீடு. இருசப்பனின் பள்ளிப் பருவகாலம் அவனுக்குச் சரியான படிப்பு, எழுத்துவாசனை கிடையாது. எழுத்தெல்லாமே கோணல்மாணலாகத்தான். அவங்க வகுப்பு மானிட்டர் சக்தி அழகா முத்து முத்தா எழுதக்கூடியவன். இந்தா எனக்குத்தான் சரியாவே எழுத வரமாட்டுதே நீயே வச்சிக்க. யாருகிட்டயும் சொல்லாத என்று ரகசியமாக தன் நீட்டு மாவு பல்பத்தை யாருமறியாமல் சக்திக்கே கொடுத்துவிடுகிறான் இருசப்பன் - இதுதான் நாய்வேஷத்தில் காணக்கிடக்கும் குறியீடு.

‘குருவிவர்க்கம்’ கதையில் நண்பர்கள் வற்புறுத்தலினால் பந்தியில் அமர்ந்து பிசைந்த சோற்றை வாயில் வைக்கப்போகையில் திட்டி எழுப்பப்படுகிறான் ஒருசேரிப்பையன். மயிரைப் பிடித்துத் தூக்கிச் செருப்பாலடிக்கப் பட்டும் குண்டுக்கட்டாய் தூக்கிக் கடாசப்பட்டுக் காலால் எட்டி உதைக்கவும்படுகிறான். நினைவு மீட்டலில் மொட்டை மாடியில் காயப்போட்ட நெற்பரப்பில் சிட்டுக்குருவிகள் கொறித்துக் கொண்டிருக்கையில் கழுத்தில் கருப்பு வட்டமிட்ட ஒரு குருவியும் கொறிக்கின்றது. சிட்டுக்குருவிகள் அதன்மீது பாய்ந்து சின்னாபின்னப்படுத்துகின்றன அதனை. கதைசொல்லி வீடு திரும்பியதும் மொட்டைமாடிக் காட்சி மாறுகின்றது. காயப்போட்ட நெற்பரப்பில் இப்போது கருவட்டக் கழுத்துக் குருவிகள் நெற்கொறிக்கையில் தனியொரு சிட்டுக்குருவியும் வந்து கொத்தி அவற்றிடையே அகப்பட்டுத் தவிக்கிறது. ஆக இப்படியாக மாறி நடந்தேறுங்கதையே குருவி வர்க்கக் குறியீடு.

கரசேவை கதையிலோ அவருடைய கையே ஒரு தோழரிடம் உரையாடுவதான இயற்கை வரம்பிகந்த ஜாலயதார்த்தக் கூறு காணக்கிடைக்கின்றது. கையை அல்லக்கைகளின் குறியீடாகவும் வாசிக்கலாம்தான். கரசேவையினும் ‘நா’வன்மையில் ‘சர்ரியல்’ சித்திரம் கைகூடி வருவதாக அமைந்தியல்கின்றது. இது நீர்த்துப் போன பட்டிமன்ற வடிவத்தைப் பகடி பண்ணக்கூடிய அங்கத யதார்த்தக் கதை.

“நடுவர் பேசப் பேச அவரின் நாக்கு மக்களின் மேனி எங்கும் படர்ந்து அவர்களது ஒவ்வொரு உறுப்பையும் இதமாகத் தடவிக் கொடுத்தது. கன்னத்தில் நெற்றியில் முத்தியது. அவர்களின் இடுப்பை வயிற்றை வருடியது. அக்குளில் கழுத்துப்பகுதிகளில் கிச்சுக்கிச்சு மூட்டிக் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்தது”

“தன்மேல் வந்து படிந்துள்ள நாக்கு பற்றியோ அதன் செயற்பாடு பற்றியோ எந்தப் புரிதலும் அற்று இம்மாதிரி நிகழ்ச்சிகளில் இப்படி ஆகிப்போவது எல்லார்க்கும் இயல்பு என்பது போல் நண்பன் சுயபிரக்ஞை இழந்தவனைத் தன்னை மறந்து நின்று ரசித்துக் கொண்டிருந்தான்.”

இச்சை’, ‘நிலச்சரிவு’, ‘பரிணாமச்சுவடுகள்’ இம்மூன்றையும் வாசிக்கையில் இம்மூன்றுமே ஒட்டு மொத்தக்கதைகளில் இருந்தும் வேறுபட்டனவாய் எனக்குட்பட்டன. அதற்கு அப்புறம் பின்னுரையை வாசிக்கும் போதுதான் உண்மை பிடிபடலாயிற்று.

“சிதிலடைந்த உருவத்தோடு அல்ல. முழுமையான உருவ அமைதியோடு பூரணத்துவம் உள்ள சில கதைகளே எனக்குக் கனவாய் வந்திருக்கிறது. தொகுப்பில் உள்ள பரிணாமச் சுவடுகள், இச்சை, நிலச்சரிவு ஆகிய மூன்றுமே எனக்கு முழுக்கனவுகள். அவற்றை அப்படியே எழுத்து வடிவில் பதிவு செய்ததே என் பணி. இவை மட்டும் கனவாக வந்திராவிட்டால் இதுபோன்ற கதைகளை என்னால் இப்படி எல்லாம் கற்பனை செய்திருக்க முடியாது என்று தோன்றுகிறது”

ஆக இம்மூன்று கதைகளுமே அவருடைய கனவுகளை அவர் மொழிபெயர்த்த கதைகள் என்றாகின்றன.

நிலச்சரிவு’ கதையில் நிறைய விசித்திரக்காட்சிகள் காணக்கிடக்கின்றன. கன்னம் வைக்கும் கட்சிக்காரக்காரர்கள், ஜேப்படி செய்யும் போலீஸ்காரர்கள், மார்புக்கு மேல் துணியைக் கட்டிக் கொண்டு மஞ்சக்குளிக்கும் ஆண்கள், மார்புகளை மறைக்காமல் தார்ப்பாய்ச்சிக் கட்டியவாறு மற்போர்ப் பயிற்சி புரியும் பெண்கள்.

கனவின்மொழியான அதர்க்கம், நனவோடை (Stream of Conciousness)  தொடர்பறு எழுத்து (Non-Linear writings)  எனவாங்கு இவை அமைந்தியல்கின்றன.

“இடப்பெயர்ச்சி (Displacement) என்பது குறித்தல் ஒரு படிமத்திலிருந்து அதற்கு நெருங்கிய இன்னொன்றிற்கு இடம்பெயர்வதைக் குறிக்கின்றது” - க. பூரண சந்திரன் (அமைப்பு மையவாதமும் பின்னமைப்பு வாதமும், ப.74)

பிராய்டின் கனவுப்படிமச் செயல்முறைகளுக்குள் ஒன்றே இடப்பெயர்ச்சி என்னும் இக்கருத்தாக்கமாகும். பொய்த்த, ஈடேறா அழுத்தப்பட்ட மனப்பீடிப்பு கனாசஞ்சார இடப்பெயர்ச்சிகளுக்கூடாக மடைமாற்றிக் கொள்ளப்படுவதே இதன் உட்கிடையாகும்.

ஆகாயத்தில் பறப்பதான படிமம். அதன்பின் வெடித்துச் சரிந்த நிலப்பரப்பு மண்ணாய்ப் பொங்கி கடலலைபோலப் பின்தொடர்ந்து துரத்துதல் என ஒரு படிமத்திலிருந்து அய்ம்பூதத் தொடர்பான இன்னொரு படிமத்திற்கு இடம்பெயர்கின்றது. இத்தகு கனவிற்கு ஊடாகவும் பொய்த்த இயக்கவாழ்க்கைப் பீடிப்பு மீண்டும் மீண்டும் இடம்பெயர்வாகின்றது.

“இவனையே பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இவனைத் தோழர் என்று அழைத்தார்கள். இவன் திகைத்துநோக்க, எதைப்பத்தியாவது பேசுங்களேன் தோழர். நேரத்த பயனுள்ளவகையில் கழிப்போம். சும்மா இருக்கிறதுக்கு ஒரு இலக்கிய வகுப்பு எடுங்களேன் என்றார்கள். இவன் இலேசாய்ச் சிரித்து எதுவும் வேண்டாம். பயணத்தைப் பயணத்தோட கழிப்போம் என்று அவர்களுக்குச் சொல்லி சன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தான்.”

இதை வாசிக்கையில் சுற்றுலாவை உலா மகிழ்வாக அனுபவிக்கவிடாமல் இழுத்தடித்து மனைவிக்கு ஊடே வகுப்பெடுத்த ‘சென்னையில் பார்க்கவேண்டிய இடங்கள்’ கதைத் தோழர்தான் நினைவிற்கு வருவது தவிர்க்க முடியாதல்லவா?

“எப்படியாவது ஓடி உயிர் பிழைத்தால் போதும் என்கிற வேகத்தில் இவனோடு வந்த தோழர் இவனிடமிருந்து கையை உதறி, இவன் தோளைப் பிடித்து அழுத்திப் பின்னுக்குத் தள்ளிவிட்டு எங்கோ மிகவேகமாக ஓடத்தொடங்கினார். ஒருவனும் இவன் ஓடித் தப்பிக்கவேண்டும் என்கிற உயிராசையையும் மறந்து அப்படியே அசைவற்று நின்று, ஓடும் தோழரையே பார்த்துக் கொண்டிருந்தான். மனம் அதிர ‘தோழமை உணர்வு’ பற்றிப் புத்தகங்களில் படித்திருந்ததை ஞாபகம் செய்துகொண்டான். அந்தச் சூழலிலும் இவனால் சிரிக்க முடிந்தது ஆச்சரியம்தான். குதிகால் புட்டத்தில் இடிக்க ஓடும் தோழரையே அசைவற்றுப் பார்த்து இவன் மௌனமாய்ச் சிரித்தபடியே நின்றான்.”

இங்கே முரண்தொனியாக ‘தோழமை என்றவர் சொல்லிய சொல் ஒரு சொல்லன்றோ’ எனும் கம்பநாடனின் வரிகள் எனக்குள் மின்வெட்டி தொலைக்கின்றன. நட்டாற்றில் கைவிட்ட தோழர்களின் ‘தோழமை உணர்வு’களும்தாம்.

இவ்வாறு ‘நிலச்சரிவை’ வாசிக்கையில் நமக்கும்தான் நம் கால்களுக்குக் கீழே பூமி நழுவிடலாகின்றது. அவனால் ஆகாயத்தில் பறக்கமுடியுமென்ற போதிலும் நிலத்தோடு தொடர்புடைய உயரங்களை மட்டுமே நேசிக்கும் அவன் மீதான நேசம் நம்முள்ளும் கசிவதாகின்றது.

பொய்த்த இயக்க வாழ்க்கையின் ஈக அழுத்தப்பட்ட மனபீடிப்புக் கனாசஞ்சார இடப்பெயர்ச்சிகளுமே மடைமாற்றமாகும் பாங்கு இராசேந்திர சோழனுக்கு இக்கதையில் அருமையாக வாய்த்துள்ளது.

இத்தகு முழுக் கனவுகளாகவே காணவல்ல, அருமை அவருக்கு வாய்த்த கொடுப்பினை என்றால், இவற்றை உள்வாங்கிக் கதைகளாய் உருச்சமைப்பது மிகமிக அசாத்தியமானதே.

இராசேந்திரசோழனுக்கு இத்தகு கனாக்கள் இனியும் மேன்மேலும் வாய்ப்பதாகுக. அதனால் அருங்கொடையான கதைகளும் நமக்கு வாய்ப்பதாகுக. இத்தகு கனாசஞ்சார மடைமாற்ற இடப்பெயர்ச்சிகளால் தேக்கமெல்லாம் தகர்த்தெறிந்து அவருக்குள் இருக்கும் மகத்தான கலைஞன் உயிர்த்தெழுந்து மேலும் சாதனைகள் சாதிப்பானாகுக.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer