வால்

தர்மு பிரசாத்

பகிரு

1

‘டொப்’ என்ற சத்தம் கேட்டுக் கண் விழித்தபோது எங்கிருக்கிறேன் எனத் தெரியாத நல்ல உறக்கத்திலிருந்தேன். விழித்ததும் கூதல் காற்றே முகத்தில் அறைந்தது. கூடவே பிணம் எரியும் கருகல் வாசனையும் நாசியில் கரித்தது. மூளை மடிப்புகள் விரிய உடல் அதிர்ந்து குளிர்ந்தது. காலை வெய்யிலில் கண்கள் கூசிச் சுருங்கின. எழுந்து அமர விருப்பமில்லாமல் இரு கைகளையும் கோர்த்துக் கால்களினுள் செருகி தோளைக் குறுக்கி சூட்டைத் தேக்கி உடலைக் கதகதப்பாக்கிப் படுத்திருந்தேன். குடலை அறுக்கும் வல்லூறுகளின் அடித் தொண்டை அலறல் மிகத் தொலைவில் கேட்டது. நிலத்திலிருந்து ஆவி மணம் எழுந்து வந்தது.

என் எதிரில் பூத்திருந்த சாம்பல் மேடு மழையில் நனைந்திருந்தது. சாம்பலின் நடுவேயிருந்த யாக்கோபுவின் உடல் இன்னும் புகைந்தபடி இருந்தது. புகை மெல்லிய கோடாக மேல் எழுந்து சுருள்வளையமாகிக் காற்றில் கரைந்துகொண்டிருந்தது. மழைச் சாரல் நெருப்பை அணைத்திருக்கவேண்டும் யாக்கோபுவின் உடல் கொஞ்சமே எரிந்திருந்தது. பாதி எரிந்த உதடுகள் பிளந்து முன் பல் தெரியநிலை குத்திய கண்களால் நிமிர்ந்து பார்த்தபடி அவர் கிடந்தார். அவருடைய ஆழ்ந்த கூர்மையான கண்கள் நிலை குத்தி நின்றிருந்தன. கண்களுள்ளும் மழை இருட்டுப் படிந்து இருண்டு இருந்தது. மார்பு தெரியும்படி திறந்திருந்த மேற்சட்டைக்கு உள்ளாகச் சுருளான கரிய மயிர்க்கற்றைகள் நெருப்பில் பொசுங்கி இருந்தன.

மயிருள் புதைந்திருந்த வெள்ளிச்சிலுவையிலும் கரிப்பிடித்திருந்தது. அழுக்கோ எனத் தோன்றுவதுபோலச் சட்டையில் பழுப்பு சிவப்பில் குருதிக்கறை படிந்திருந்தது. சரியாக அவருடைய இதயத்தின் மேலாகப் பொட்டாகக் குருதி உறைந்து காய்ந்திருந்தது. அந்த மிருதுவான இதயத்தைத்துளைத்து அவருயிரை எடுத்துச் சென்ற குண்டு, அந்த உயிரை ஒரு பாலை மரத்தினுள் ஆழமாகப் புதைத்து வைத்திருக்கவேண்டும். நேற்று மதியம் அந்த மதிப்பற்ற உயிர் பிரிந்ததும் பருத்த அவருடைய உடல் சரிந்து நிலத்தில் வீழ்ந்தது. உயிரற்று வீழ்ந்த யாக்கோபுவின் உடல் அவர்கள் நால்வரையும் பதற்றமடையச் செய்யக் கூடுமென எதிர்பார்த்தேன். மாறாகத் தம்பியும் யோகனும் ஈர மண்ணில் வெகு நிதானமாகச் சிறிய பள்ளம் தோண்டினார்கள். அந்தப் பள்ளத்தினுள் சுள்ளி விறகுகளை மரப் படுக்கைபோல சீராக அடுக்கினார்கள்.

படுக்கையின் மேல் யாக்கோபுவின் உடலைக் காண்டீபனும் செல்வமுமாக இழுத்து வளர்த்தினார்கள். கரிய மழை மேகங்கள் திரள்வதும் கலைவதுமாகப் போக்குக் காட்டிக்கொண்டிருந்தன. அடை மழைக்கான முன்னிருள் தடித்த போர்வையாகிக் காட்டைச் சூழ்ந்திருந்தது. ஈர விறகுகளில் செல்வம் நெருப்பைப் பற்ற வைத்தபோது அவை எரிய மறுத்தன. புகைந்து சுள்ளிகளில் நெருப்புப் பற்றியதும் தம்பி கொஞ்சம் இலாம்பு எண்ணெயை நெருப்பின் மீது ஊற்றினான்.

நெருப்பு நீலமாக முளாசி எரிந்தது. அவனது உதட்டின் மேல் ஒட்டியிருந்த மெல்லிய மீசையில் வியர்வை முத்துகள் அரும்பியிருந்தன. உடல் எரிந்து கசிந்த அந்த வெப்பம் மழைக்குளிருக்கு இதமாக இருந்திருக்கவேண்டும். நால்வரும் நெருப்பைச் சுற்றி அமர்ந்து, கைகளை உரசித் தங்களின் குளிர் உடலில் சூட்டைத் தேக்கிக் கொண்டார்கள். நெருப்பு விறகுகளிலிருந்து மெல்ல ஊர்ந்து யாக்கோபுவின் உடலில் தொற்றி ஏறுவதா வேண்டாமா எனத் தயங்கி நின்றது. காண்டீபன் அடிமரத்துடன் வாகுவாக சாய்ந்து அமர்ந்து தணலைக் கிளறி நெருப்பு நின்று எரியத் தோதாகச் சுள்ளி விறகுகளைச் செருகினார். அவருடைய சட்டை மழையில் நனைந்து உடலோடு ஒட்டியிருந்தது. கண்கள் உட்குழிந்து சுருங்கி உணர்வுகளே இல்லாமல் வறண்டு இருந்தது. நால்வரும் நெருப்பையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிவந்த தீயின் நாக்குகள் இருளை மூர்க்கமாகப் பற்றிப் பிடித்து வெடித்து எரிந்தது.

‘இனி நாம் கொட்டிலினுள் நிம்மதியாக உறங்க முடியும் இல்லையா?’ என்றார் காண்டீபன்.

‘இரவு சாப்பிட ஏதும் கிடைக்குமா’ என்றார் யோகன்.

தம்பியும், செல்வமும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மழைக் குளிருக்குப் போதுமான சூட்டைத் தங்கள் உடலில் தேக்கிக்கொண்டவர்கள்போல இருவரும் அங்கிருந்து புறப்பட்டார்கள்.

போகும்போது தம்பி நெருப்பைப் பார்த்து ‘நேரமாகிவிட்டது அய்யா நாங்கள் வருகிறோம், நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் மனம் உரமேறினால்தான் நம்பிக்கையுடன் நாம் போராட முடியும்’ என்றான்.

அவனுடைய கண்களைக் கூர்ந்து நோக்கினேன். இன்னதென்று பிரித்தறிய முடியாத உணர்வுகளின் கலவையாக இருந்தது ஒரு கண். மறுகண்ணினுள் தீயின் செஞ்சுடர் ஒன்று அமைதியாகத் துடித்தபடி இருந்தது. இருவரும் செல்லும் திசையை காண்டீபன் நோக்கினார். அவர்கள் பண்ணையைக் கடந்து காட்டின் ஒற்றையடிப் பாதையின் சரிவில் இறங்குவது நிழலாகத் தெரிந்தது. அவரது முகத்தின் இறுக்கம் தளர கால்களை நீட்டி அமர்ந்தார். பின் எரியும் உடலையே பார்த்துக்கொண்டிருந்தார். அது எந்தச் சுவாரசியமும் இல்லாமல் எரிந்தபடி இருந்தது. யோகன் எழுந்து காவல் கொட்டில் நோக்கிச் சென்றார். காண்டீபன் அவரைக் கவனியாதவராக நெருப்பையே சுவாரசியமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அவரது கன்னத்தாடைகள் புடைத்துச் சிறு மேடாக இறுகியிருந்தன. உதடுகள் மந்திரங்கள் போல எதையோ மெதுவாக முணுமுணுத்துக்கொண்டிருந்தன. எனக்கு எரியும் உடலைப் பார்த்துக் கொண்டிருப்பதில் எந்தச் சுவாரசியமும் இருக்கவில்லை. யாக்கோபு தன் உடல் முழுவதையும் நெருப்பிடம் ஒப்புக் கொடுத்து அற்பமாக எரிந்துகொண்டிருந்தார். அப்படி அற்பமாக எரிந்து மண்ணோடு புதைந்து போகவேண்டிய உடல் அல்ல அவருடையது. அவர் என் பொருட்டு விழுந்த முதல் உடல். அவருடைய உடலைப் பற்றத் துடிக்கும் சோம்பலான தீயின் நாக்குகளை அசுவாரசியமாகப் பார்த்துக்கொண்டிருக்க அலுப்பாக இருந்தாலும் எரியும் உடலிலிருந்து கசிந்த வெப்பம் மழைக் குளிருக்கு இதமாக இருந்தது. அப்படியே நெருப்பின் அருகில் அமர்ந்திருந்தேன்.

சடலமும், விறகுகளும் நன்றாக நனைத்திருந்ததால் அவற்றில் நெருப்புப் பற்றச் சிரமமாகி அடிக்கடி அணைந்தது. நெருப்பு அணையும் போதெல்லாம் சளைக்காமல் தீயை ஊதி ஊதிப் பெருப்பித்து பற்ற வைத்தபடியிருந்தார் காண்டீபன். பின்னிரவு தாண்டி யதும் எழுந்து, ஈரச் சாரத்தை உதறி உடுத்தபடி காவல் கொட்டிலை நோக்கி நடந்தார். நானும் எரியும் யாக்கோபுவும் தனித்திருந்தோம். தூக்கம் கண் மடல்கள் வரை வந்து என்னை விழுங்கக் காத்திருந்தது. கதகதப்பான தணல் வெப்பத்தின் அருகிலேயே அப்படியே உறங்கலாம் போலிருந்தது.

நினைவு தப்பி, தூக்கம் முழுமையாகத் தழுவும் கடைசி நொடியில் அந்த ஒலியைக்கேட்டேன். மழைமண்ணில் அறையும் ஒலிபோலவே இருந்தது. பின் மண்வெட்டியால் மண்ணில் கொத்தும் ஒலி என்று புரிந்தது. சுவாரசியமற்ற இரவில் அந்த ஒலி சுவாரசியம் கொடுக்க, கொஞ்சம் பதட்டமும் கிளர்ச்சியுமாக ஒலியை நோக்கி பண்ணையின் கிழக்குப் பக்கமாக நடந்தேன். அங்கே இருளில் தொடைவரை மடித்துக் கட்டிய சாரத்துடன் மண்ணை மூர்க்கமாகத் தோண்டிக்கொண்டிருந்தார் யோகன். தோண்டிய மண்ணை கடகத்தில் அள்ளி மருத மரத்தடியில் குவித்தார். அவரது கண்கள் சிவந்து இருந்தன. நினைவுகளிலிருந்து தப்பிக்கொள்ள அவர் மண்ணை தோண்டுவதுபோல் இருந்தது. அவரது உடலில் அசாதாரண வேகமும், முனைப்பும் இருந்தது. சட்டென்றுதான் அந்த இடத்தின் அடையாளம் எனக்குப் பிடிபட்டது.

அவர் மண்தோண்டும் இடத்தில்தான் யாக்கோபு சில நாட்களின் முன்னர் ஒரு அடையாளம் இட்டிருந்தார். பண்ணைக்குப் புதிய கிணறு தோண்ட வேண்டி யாக்கோபு நிலத்தடி நீர்மட்டமும் நீர் ஊற்றும் பார்த்துக் குறித்துக் கொடுத்த இடம் அது. சுவாரசியம் வற்றியது. அலுப்பும் கொட்டாவியும் மேலிட யாக்கோபுவின் சடலம் அருகே திரும்பவும் வந்து அமர்ந்தேன். பின் அடிவேரில் தலையை வைத்து அப்படியே உறங்கி விட்டிருக்கவேண்டும். காட்டு மரங்களின் இலைகளின் மேல் மழை மூர்க்கமாக அறையும் ஒலியும், மண்ணைக் கொத்தும் மண்வெட்டியின் ஒலியும் உறக்கத்தின் ஆழத்தில் கேட்டுக்கொண்டு இருந்தன

2

அரச படைக்கு எதிரான ஒரு தாக்குதலை வெற்றிகரமாக முடித்த பின்னரே இவர்கள் நால்வரும் இந்தப் பண்ணைக்குத் தப்பி வந்தார்கள். இங்கு இவர்கள் வந்தபோது அடி திரண்ட காட்டுக் கொடிகளும், நெருஞ்சி முட்களும், மஞ்சள் நுணா மரங்களுமே பண்ணை முழுவதும் மண்டி இருந்தன. பற்றைக் காடு என்றே சொல்ல முடியும் நிலையிலிருந்தது பண்ணை. காடுவெட்டி விவசாயம் செய்த பகுதிகளில் குருத்துப் பச்சை நிறத்தில் குட்டையான முள் பற்றைகளும் காட்டுக் கொடிகளும் மண்டியிருந்தன. சூழப் பெரும் பாலை மரக் காடு விரிந்திருந்தது.

வடக்கு மூலையில் இடுப்பு உயரமான கற்சுவர் ஒன்று மட்டும் பாதி இடிந்து இருந்தது. கிணறு தூர்ந்து பயன்படுத்த முடியாத அளவிலிருந்தது, அதன் அடியிலே மண் கலங்கலாக கைப்பிடியளவு நீரே இருந்தது. பண்ணை கைவிடப்பட்டுக் குறைந்தது இரண்டு வருடங்களாவது இருக்கும். பழைய வரம்பு விளிம்புகளில் பொத்தி தள்ளிய கூரான இளம் சோளக்கதிர்கள் நின்றிருந்தன. பொத்திகளுள் ஒன்றை ஒடித்து அதன் முத்துகளை உதிர்த்து எல்லோருக்கும் கொடுத்தார் செல்வம்.

‘சோள முத்துகள் பசும் பாலின் உரிசையில் இருக்கின்றன’ என்றார் காண்டீபன். பசும்பாலின் சுவை அவர்களுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும். அவர்களைப் பீடித்திருந்த களைப்பு நீங்கி உற்சாகமானார்கள். காண்டீபனுக்கும், தம்பிக்கும் பண்ணையின் அமைவிடம் பிடித்திருந்தது. தம்பி ‘காட்டினுள் கைவிடப்பட்டுத் தனித்து இருப்பது மிகவும் பாதுகாப்பானது’ என்றான். ‘நல்ல பசைமண் வெள்ளம் நின்றுதான் காயும்’ என்றார் யோகன். செல்வம் ஒன்றுமே சொல்லாமல் கண்களைச் சுருக்கிப்பண்ணையை நோட்டமிட்டார். அப்போது அவர்களுடன் யாக்கோபு வந்திருக்கவில்லை.

காட்டின் உள்ளாக ஒற்றையடிப் பாதைகளை நூல்பிடித்து, முள் பற்றைகளை விலக்கி பண்ணைக்கு வந்து சேரும் வழி குழப்பமாகவே இருக்கும். அந்தக் குழப்பத்தை அவர்கள் மிகவும் விரும்பினார்கள். பாதுகாப்பிற்கான குழப்பம் என்றார்கள். குறைந்தது நான்கு முறையாவது வழி தவறியே பண்ணைக்கு வந்து சேரமுடியும். யாக்கோபு வைத்ததை எடுக்க வருபவர் போல நேராகவே பண்ணைக்கு வந்து சேர்ந்தார். கிடைத்த குறிப்புகளைக் கொண்டு துல்லியமாக வந்து சேர்ந்ததே எல்லோருக்கும் அவர் மீது முதல் ஆச்சரியமாக இருந்தது.

அவர் வந்த போது பண்ணை செயல்படாமல் முடங்கி இருந்தது. அவர்களைத் தீவிரமாகத் துரத்திக்கொண்டிருந்த அரச படைகளிடமிருந்து தப்பி, ஒளிந்திருக்க பண்ணை நல்ல மறைவான இடம் தான். இங்கு வந்த பின்னரே கொஞ்சமேனும் அவர்களால் ஆசுவாசமாக இருக்கவும் முடிந்தது. முதலில் பண்ணையில் ஒரு காவல் பரணும், இடுப்பளவு சுவரை ஒட்டி மண்குடிசையும் சரிக்கட்டினார்கள். சாக்குகளைப் போர்வைகளாகப் போர்த்தி கால்களை நீட்டிக் காவல் பரணினுள் நன்றாக உறங்கினார்கள்.

கைவிடப்பட்டுத் தனித்திருந்த அந்தப் பண்ணை ஒரு வகையில் அவர்களையே நினைவூட்டியது. கைவிடப்பட்டுத் தூர்ந்து, கரையான் புற்றுக்களும், திரண்ட காட்டுக் கொடிகளும் படந்திருப்பது அவர்கள் மீதே எனத் தோன்றியது.

அவர்கள் அந்தத்திரண்ட காட்டுக் கொடிகளை வெட்டி எறிந்து, மண்ணைக் கொத்திச் சீர் செய்து கமமும் செய்ய வேண்டியிருந்தது. பண்ணையில் கமம் ஒரு போர்வைதான். அதன் பின்னால் பாதுகாப்பாக இருந்தபடி அவர்கள் தாக்குதல்களைத் திட்டமிட்டார்கள். முதலில் காட்டையும் பண்ணையையும் பிரித்து இடையில் பள்ளம் தோண்டித் தீ வைத்தார்கள். எரிந்த மரங்களை வெட்டி, அடிவேர் பிடுங்கி, மண்ணைக் கொத்தி கமம் செய்ய ஆட்கள் போதவில்லை. செல்வமும் தம்பியும் அடிக்கடி பண்ணையிலிருந்து காணாமல் ஆனார்கள். யோகனும் காண்டீபனும் பண்ணையிலே பழி எனக் கிடந்தார்கள்.

அமைப்பிற்குப் புதிதாக ஆட்களைச் சேர்த்து பண்ணைக்கு அனுப்ப முயன்றபோது பலர் பண்ணைக்கு வரவே தயங்கினார்கள். புதியவர்களைக்காடு பயமுறுத்தி இருக்கும். நகரத்திலிருந்து வருபவர்களுக்குக் காடு முற்றிலும் வேறொன்றாகவே இருக்கும். அச்சமூட்டும் இருளும், பாதைகள் அற்ற தனிமையும் அச்சுறுத்தக் கூடியது. அவர்கள் அமைப்போடு இரகசியமாகச் சேர்ந்து இயங்குபவர்கள் கூட பண்ணையில் வந்து தங்கி வேலை செய்யத் தயாராக இருக்கவில்லை.

நம்பிக்கையான ஆட்களைத் திரட்டி பண்ணைக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் வவுனியாப் புகையிரத நிலையம் வந்து அவர்களை அழைத்துச் செல்லவும் எனத் தம்பி ஒரு நாள் செய்தி அனுப்பி இருந்தான். மிகுந்த உற்சாகமாக காண்டீபன் வவுனியாப் புகையிரத நிலையம் சென்றார். அவருடன் செல்ல எனக்கும் ஆவலாதியாக இருந்தது. குறைந்தது பத்துப்பேராவது வருவார்கள் என எதிர்பார்த்திருந்தேன். நாட்டுக்கான இலட்சியம் புயல் காற்று சுழன்று எல்லாரையும் அள்ளிச் செல்வது போல அள்ளிச்சென்ற காலம். விரியும் கனவுகளைக் கண்களில் தேக்கி வந்திறங்கும் தோழர்களின் பிரகாசமான முகம் காணும் மிதப்பில் காண்டீபனை எதிர்பார்த்துத் தவிப்புடன் காத்திருந்தேன். அவமானமும் துயரமுமாக காண்டீபன் திரும்பி வந்தர்.

அவருடன் ஒரே ஒருவர் மட்டும் புதிதாக வந்திருந்தார். புதியவர் முகத்திலும் விரியும் கனவுகளுக்குப் பதில் அச்சமும், உறக்கமுமே அப்பி இருந்தன. அவரும் பின் அங்கிருந்து காணாமல் ஆனார். பண்ணையில் எப்போதும் யோகனும், காண்டீபனுமே தங்கியிருந்தனர். இருவருடைய முகத்திலும் அவநம்பிக்கையும், கைவிடப்பட்டிருக்கும் தனிமையுமே அதிகமும் தெரிந்தது. அந்தச் சோர்வையும், தனிமையையும் கலைப்பதான தோரணையில் யாக்கோபு வந்தார். அவருக்குச் சில போராட்டங்களில் முன் அனுபவங்கள் இருந்தன. அதைவிடக் காடு குறித்தும், கமம் குறித்தும் தெரிந்திருந்தது. காவல் பரணில் சாக்கை போர்வையாகப் போர்த்தபடி தூங்கினாலும் கள்ளமாக இரத்தம் உறிஞ்ச வரும் குண்டு நுளம்பு பெரும் தொல்லையாக இருந்தது.

சிறு அலைபோல சில சமயம் படை படையாக வந்து உடலில் துளையிட்டு இரத்தம் உறிஞ்சின. ‘இலாம்பு எண்ணெய்யை உடல் முழுவதும் பூசிக் கொண்டுபடுக்கலாம், நுளம்புகளால் உடல் சூட்டையோ, வாசனையையோ மோப்பம் பிடிக்க முடியாது’ என்றார். என்ன இலாம்பு எண்ணை எரிவும், குமட்டலுமாக இருந்தாலும் எண்ணெய் வாசம் நுளம்பை அண்ட விடவில்லை.

‘பண்ணையை முழுவதுமாக அடி வேர் சீர் செய்து ஆட்கள் போதாது ஆகவே நாம் சிறு துண்டு நிலத்தில் மட்டும் முதலில் விதைப்போம் அங்கிருந்து பண்ணையை முழுவதும் விரித்து எடுப்போம்’ என்றார் யாக்கோபு. விரிந்த பெரிய பண்ணைக்கனவைச் சுருக்கி சிறு துண்டு நிலத்தை மட்டும் சீர் செய்தார்கள். எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

விரிந்த கனவைக் விட்டு ஓரமாகக் கொத்திக்கொண்டிருக்கிறார்களே என்று தோன்றியது. ஆனால் அவர்கள் துண்டு நிலத்தைச் சீர் செய்த வேகம் நம்பிக்கை தருவதாக இருந்தது. ‘நிலக்கடலை விதைக்கலாம் அது இலகுவானது’ என்றார் யோகன். அதற்குப் பண்ணையின் தூர்ந்த பழைய கிணற்றின் கைப்பிடியளவு நீர் போதாது என்றளவில் அவருக்கு கமமும் தெரிந்திருந்தது. வேண்டுமானால் கிணற்றைத் தூர்வாரிப் பார்க்கலாம் நீர் ஊறக் கூடும் என்றார். அவருக்குத் தூர்வாரவும் தெரிந்திருந்தது.

‘நிலக்கடலைக்கு நிறைய நீர் வேண்டும் அதைவிடப் பயறு விதைக்கலாம்’ என்றார் யாக்கோபு. ஆனால் பழைய கிணற்றைத் தூர்வாரிப்பார்க்கலாம் என்பதில் தனக்கும் உடன்பாடே என்றார். அவரிடம் எல்லாவற்றிற்கும் அபிப்பிராயங்கள் இருந்தன. அவை சரியாக இருந்ததால் அல்ல எதிர் அபிப்பிராயங்கள் பெரிதாக இல்லாததால் அவை மறுப்பின்றி ஏற்கப்பட்டன.

பழைய கிணற்றைத் தூர்வாரத் திரண்ட கொடிகளை முறுக்கிப் பிடித்துத் தொற்றி கிணற்றில் இறங்கினார் யோகன். கொடிகளை வெட்டிச் சுத்தம்செய்து, அடி நிலத்தை மண்வெட்டியினால் கொத்தினார்.

மூன்றாவது கொத்து கொத்தியபோது மண்வெட்டி நுனி பென்சில் சீவல் போலச் சுருண்டு விட்டிருந்தது. ‘எல்லாப் பக்கமும் கடினமான பாறைதான் இருக்கிறது, அதனைப் பிளக்க வெடி வைத்தால்தான் முடியும்’ என்றார் யோகன். ‘சொற்ப வெடியாவது இருந்தால் அதைக் கொழும்பிற்கு எடுத்துச் சென்று அங்கு வெடிக்க வைத்திருக்க மாட்டோமா?’ என்றார் காண்டீபன்.

‘அய்யா உங்களிடம் மந்திரம் கிந்திரம் ஒன்றும் இல்லையா’ என்றார் யாக்கோபு காண்டீபனைப் பார்த்து. ‘அண்டமே பிளக்கும் மந்திரமே உண்டு சொல்லட்டுமா?’ என்றார் காண்டீபன்.

உடல் முழுவதும் ஒட்டிய மண்ணும் வியர்வையுமாக கிணற்றுள்ளிருந்து வேர்களில் தொற்றி மேல் ஏறி வந்த யோகன் பழைய கிணற்றின் அருகில் இன்னொரு புதுக்கிணறு வெட்டலாம் என்றார். ‘அருகிலும் அது பாறையில் முட்டிக் கொண்டிருக்கவே சாத்தியம்’ என்றார் யாக்கோபு. ‘புதுக் கிணறு என்றால் நிலத்தடி நீர்மட்டம் பார்க்க வேண்டுமே’ என்றார் யோகன்.

‘ஊத்துக் கண்டுபிடிக்கிறது பிசாத்து வேலை’ என்றார் யாக்கோபு. அவர் அப்படிச் சொன்னதில், அந்தச் சொற்களில் யாருக்கும் நம்பிக்கை வந்ததாகத் தெரியவில்லை. காண்டீபனின் அவநம்பிக்கையான முகத்தைக் கவனித்திருக்க வேண்டும். ‘மந்திரம் சொல்லிப் பாவம் சுமக்கிற வேலையில்லை, இது என் மூதப்பா அருமைப்போடியாரின் பட்டறிவு’ என்றார் யாக்கோபு. நம்பிக்கையோ இல்லாமல் அவர்கள் யாக்கோபு வினைத் துருவி ஆராயும் பார்வையை அவர் உணர்ந்திருக்கவேண்டும். தன்னுடைய பெரிய மீசையை நீவித் தொடையில் தட்டினார். நல்ல கருப்பு மீசை. ‘ஊரில் போறாவத்தைப் பாதிரியார் நீர் ஊத்து கண்டுபிடிப்பதில் வித்தர். இருபக்கமும் கூராகச் சீவிய மான் கொம்பைச் சுட்டு விரலில் பிடித்தபடி கிணறு தோண்ட வேண்டிய நிலத்தின் மீது மெது நடை நடப்பார். அவரது உதடுகள் யோசுவின் நாமத்தை முணுமுணுக்கும். சுட்டு விரலில் இருக்கும் மான் கொம்பு கடிகார முள் மாதிரித் துடித்தபடி இருக்கும்.

அது நிலை குத்தி நிற்குமிடத்தில் தோண்டினால் வற்றாத நீரோட்டம் நிச்சயம் உண்டு. என்ன ஒரு சிக்கல் பாதிரியாரின் மான் கொம்பு வித்தை விசுவாசிகளின் நிலத்தில் மட்டுமே நிலை குத்தி நிற்கும், அவவிசுவாசிகளுக்கு மலையாள மாந்திரியைத்தான் அழைத்து வர வேண்டும். மாந்திரி தன்னைப் படை நாயர் வமிசம் என்பார். பத்துத் தலைமுறையாக வாலாயம் பார்த்து வளர்ந்த நல்ல திரேகக் கட்டு. வெற்றிலைச் சிவப்பு உதடுகள். சிவப்புக் கண்கள் இந்தா உருண்டு விழுகிறேன் பார் என வெளியே பிதுங்கி நிற்கும். கையில் அலவாங்கு ஒன்று வைத்திருப்பார்.

‘பறையடி பகவதியே! பச்சை வெள்ளம் எவ்வடம் பறிஞ்சுண்டு’ என்றபடி கையிலிருக்கும் அலவாங்கை ஓங்கி நிலத்தில் குத்துவார். குற்றிய இடத்தில் குறைந்தது ஒரு சிறங்கை நீராவது கிடைக்கும். மேலதிகமாகக் கிடைத்தால் நிச்சயமாக பகவதி அருளே’ என்றார்.

‘இங்கினை அலவாங்கு ஒண்டு இல்லையே’ என்றார் யோகன். மிதப்புப் பல் தெரியப் பெரிதாகச் சிரித்தார் யாக்கோபு. ‘அவர்களின் சூட்சுமங்களை விட என்னுடைய பெத்தப்பாவிடம் பட்டறிவு இருந்தது, அது பிசகியதில்லை. எனக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்’ என்றார்.

பண்ணையை நிதானமாகச் சுற்றிச் சுற்றி வந்து ஆராய்ந்தார். யோகனும் அவர் பின்னாலேயே சுற்றினார். கிழக்கு மூலையில் நின்றிருந்த மருத மரத்தின் கீழ் மண்வெட்டியால் கொத்திப் பார்த்தார். சாரை சாரையான கரையான் புற்றுகள் இருந்தன. மரத்திலிருந்து கால்களால் அளந்து சரியாகப் பத்தடியில் புள்ளடியிட்டார். புள்ளடியைச் சுற்றிச் சதுரமாகக் கொத்தினார்.

‘இவடத்தில் வற்றாத நீரோட்டம் உண்டு, பத்தடி தோண்டுங்கள் போதும்’ என்றார். யோகனுக்கும் அப்போதும் நம்பிக்கை இல்லை என்பது போல முகத்தை வைத்திருந்தார். புள்ளடியிட்ட இடம் பழைய கிணற்றிலிருந்து தூரமாக இருந்தது. யோகனின் கண்களைக் கூர்ந்து பார்த்தவர் ‘மழை உப்பா பெய்கிறது என்டா நக்கித்தானே பார்க்கவேண்டும் இல்லையா அய்யா’ என்றார். காண்டீபன் திடுக்கிட்டு முகம் பிரகாசிக்கச் சிரித்தபடி ‘ஓம் ஓம் நக்கிப்பார்த்திடலாம்’ என்றார்.

கிணறு வெட்டுவதற்கான சில முன் ஏற்பாடுகளைச் செய்தனர். ஆனால் வெட்டி முடிக்கவில்லை. அதற்குள் இன்னொரு தாக்குதல் திட்டத்துடன் தம்பி வந்தான். கிணறு வெட்டுவதைவிட தாக்குதல் திட்டம் அவர்களுக்கு அவசியமாக இருந்திருக்க வேண்டும். இது அவர்களுடைய மூன்றாவது தாக்குதல் திட்டம் என்பதை அவர்களது பேச்சிலிருந்து ஊகிக்க முடிந்தது. மிகச் சமீபத்தில் கூட ஒரு தாக்குதல் மிகுந்த வெற்றி கொடுத்திருப்பதாகச் சொல்லிக்கொண்டார்கள். அந்த வெற்றியின் நம்பிக்கையுடனே தம்பி புதிய திட்டத்தை விவரித்தான். அவன் விவரித்து முடிந்ததும், ‘அவர் தமிழர் அல்லவா’ என்றார் யோகன் சந்தேகமான பார்வையுடன்.

‘இல்லை... இல்லை அவர் துரோகி’ என்றார் செல்வம்.

‘அப்ப அழிக்கப்பட வேண்டியவரே’ என்றார் காண்டீபன். யாக்கோபுவும் அதற்கு ஆமோதித்துத் தலையாட்டினார். சிக்கல் இல்லாமல் தாக்குதலைச் செய்யத் துல்லியமாக உளவு அறிந்து வருவதற்கு யாக்கோபுவையே அனுப்பி வைத்தார்கள். கைச்செலவுக்குக் காசும் கேட்டு வாங்கிக்கொண்டு போனவர் போனதுதான் பண்ணைப் பக்கமே வராமல் அப்படியே மாயமாக மறைந்துவிட்டிருந்தார். உளவு அறிவதில் அவர் தீவிரமாக இருக்கிறாரோ என நினைத்திருந்தேன்.

ஆனால் பண்ணையில் அவர் பெயர் அடிக்கடி அடிபடத் தொடங்கியது. முதலில் தாழ்ந்த குரலிலும், பின்னர் ஆத்திரமாகவும், பின்னர் ஆவேசமாகவும் அவரைக் குறித்துக் கூடிக் கூடிப் பேசினார்கள். எனக்கு ஏதோ விபரீதம் நிகழ்ந்துவிட்டது என்பது உறைத்தது. யாக்கோபு பண்ணைக்குத் திரும்ப வரமறுக்கிறார் என்பது புரியவில்லை. ஆனால் அவரைப் பண்ணைக்கு அழைத்துவரத் தொடர்ந்தும் நால்வரும் மாறி மாறி முயன்றுகொண்டிருந்தார்கள்.

நேற்றுச் செல்வம் அவரையும் கையோடு அழைத்து வந்திருந்தார். யாக்கோபு விரும்பி வந்தாரா, வற்புறுத்தி அழைத்து வந்தாரோ தெரியவில்லை. அவர் வற்புறுத்தலுக்கு மசிபவராகவும் தெரியவில்லை தெரியவில்லை. ஆனால் முகத்தில் பழைய உற்சாகமோ, முனைப்போ இருக்கவில்லை. கண்களைச் சுற்றிக் கரு வளையம் தெரியுமளவில் மெலிந்து இருந்தார். கண்கள் பழைய பிரகாசத்திலிருந்தன. ஆனால் அவை ஏதும் நாடகம் போடுகிறாரோ எனச் சந்தேகிக்கும்படி அலைபாய்ந்தபடி இருந்தன.

இயல்பாகவே அவருடன் உரையாடலைத் தொடங்கினார்கள். ஆனால் அது விசாரணை போல அமைந்திருந்தது தற்செயலா, திட்டமிடலா தெரியவில்லை. ஆனால் அது விசாரணையாக இருந்தது என்பதும் மட்டும் திண்ணம். அவர்கள் தன்னை விசாரிக்கிறார்கள் என்பதை உணர்ந்ததும் யாக்கோபுவின் முகம் இருண்டு விட்டது. ‘தம்பியவை என்னை விசாரிக்கிறீர்களா’ என்றார்.

அதற்கு யாரும் பதில் செல்லவில்லை. உண்மையில் அவர்களுக்கே அது குழப்பமாக இருந்திருக்கவேண்டும். உரையாடல் போலவும், விசாரணை போலவும் இருந்தது. ஒரு கட்டத்தில் ‘நினைத்ததும் அப்படிப் போய்விட முடியுமா? போலிஸ் என்னையும் தேடுகிறது பிடிபட்டால் எல்லாருக்குமே ஆபத்து’ என்றார். தம்பியும் செல்வமும் அமைதியாகவே இருந்தார்கள். ஆபத்து என்ற சொல்லை அவர்கள் அழுத்தமாகக் கிரகித்துக் கொண்டார்கள்.

‘கொடுத்த காசுக்குச் செலவுக் கணக்காவது உண்டா’ என்றார் காண்டீபன்.

‘ஒவ்வொரு செலவையும் குறித்து வைத்திருக்கிறேன் இதுதான் மிச்சம்’ என்றபடி ஒரு பத்து ரூபா தாளைத் தூக்கி ஆட்டிக் காட்டினார். அவர்களுடைய அந்த விசாரணை முடிவிற்கு வந்தது போலவும் இருந்தது தொடர்வது போலவும் இருந்தது. செல்வம் தகரப் பேணியில் தேநீரும், பாணும் கொண்டு வந்து கொடுத்தார். யாக்கோபு பாண் கருகலைப் பிய்த்து, தேநீரில் நனைத்துச் சாப்பிட்டார். பின் ‘அவரும் தமிழர் அல்லவா’ என்றார் நால்வரையும் பார்த்து. தமிழர் அல்லவா என்பது இறைஞ்சுவது போலவும் இருந்தது. ‘இல்லை... இல்லை அவர் துரோகி அல்லவா’ என்றார் யோகன்.

தேநீர் அருந்தி முடித்தது செல்வமும், தம்பியும் யாக்கோபுவை நாசூக்காகத் தனியே அழைத்துக்கொண்டு காட்டுப் பக்கமாகச் சென்றார்கள். காண்டீபனும், யோகனும் கொட்டிலினுள் இருந்தார்கள். எனக்கு அந்த விசாரணை அசுவாரசியமாக இருந்ததால், இது இப்படியே தொடரும் யாக்கோபு எதையும் ஒத்துக் கொள்ளப்போவதும் இல்லை என்பதையும் உணர்ந்தேனோ என்னவோ நானும் அவர்களுடனே கொட்டிலினுள் இருந்தேன். ஆனால் மூவரையும் கவனித்துக்கொண்டே இருந்தேன். யாக்கோபு தன் கைகளை ஆட்டிப் பெரிதாகக் கதைப்பதும், செல்வம் உரத்துப் பதில் சொல்வதும் தூரமாகிக் கொண்டே போனது.

சிறிது தூரம் சென்ற பின்னரே யாக்கோபுவிற்குப் பொறி தட்டியிருக்கவேண்டும். திடுக்கிட்டு உடல் அதிரும்படி திரும்பினார். அவரது கால்கள் தளும்பின. தம்பி பாதி வழியிலேயே நின்றுவிட்டிருந்தான். யாக்கோபு பண்ணை முடிந்து காடு தொடங்கும் விளிம்பில் நின்றிருந்தார். அவருக்கும் தம்பிக்கும் பத்தடி இடைவெளி இருந்தது. அவருடைய உதடுகள் ‘பிதாவே’ என முணுமுணுப்பது தெரிந்தது. கைகளையும் குவித்து தம்பியை நோக்கிக் கும்பிட்டார். அவரின் உடல் குலுங்கியது.

தன் இடுப்பில் செருகி வைத்திருந்த துவக்கை எடுத்து யாக்கோபுவை நோக்கி நீட்டினான் தம்பி. தம்பியின் கண்களைப் பார்க்கவேண்டுமென மனம் உந்தியது. மின்னல் வெட்டியதுபோலத் துடித்தபடியே யாக்கோபு உடல் மடிந்து நிலத்தில் விழுந்தார்.

தான் காலருகில் கவிழ்ந்திருந்த உடலைப் புரட்டிப்பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கினார் செல்வம். தம்பியும் செல்வமும் நிதானமாகவே கொட்டிலுக்கு வந்தார்கள். தம்பி காண்டீபனிடம் ‘வேறு வழியில்லை எவ்வளவு சொன்னாலும் அவர் கேட்கிறார் இல்லை’ என்றான். பெரு மழைக்கான இருளைக்கிழித்த மின்னலும், முழக்கமுமாகக் கிழக்கு வானம் அதிர்ந்தது. பின் அவர்கள் யாக்கோபுவின் உடலை எரிக்கச் சிறு பள்ளம் தோண்டத் தொடங்கினார்கள்.

3

காண்டீபனும், யோகனும் இன்னும் உறங்கிக்கொண்டிருக்கவேண்டும். மழை நனைந்த யாக்கோபுயின் உடல், பாதி எரிந்து வெளித்தெரிந்த வெள்ளெலும்புகள் திடீரெனக் கோரமாக இருப்பது போலிருந்தது. எழுந்து காவல் பரணிலும், கொட்டிலிலுனுள்ளும் பார்த்தேன். யாருமே இல்லை. அவர்களது தோற்பைகளும், உடுப்புகளுமே அங்கே இருந்தன.

நீர்ப் பானை வெறுமையாக இருந்தது. உடல் வியர்த்தது, நெஞ்சுக்குள் பாரமாக எதுவோ அழுத்தியது. மூச்சு அடைத்தது. நாசி விரிய மீன் குஞ்சுபோல சுவாசித்தபடி மருத மரத்தடியை நோக்கி ஓடினேன். யோகன் வெட்டிய குழி, நிலத்தின் சிவந்த வாய்போலப் பிளந்து பத்தடி ஆழத்திலிருந்தது. குழியின் மண் மருத மரத்தை ஒட்டிக்குவிக்கப்பட்டிருந்தது.

அந்தக் குழியின் உள்ளே எட்டிப் பார்த்தேன். ஈரமண்ணில் கால் சறுக்கியது. குழியின் அடியில் ஈரமண் சொதசொதப்பாக குழைந்திருந்தது. நிமிரும் போதே அடியில் எதுவோ புரண்டு அசைவது போல இருந்தது. கூர்ந்து கவனித்தேன். குழியின் அடியில் நீர் ஊறி இருந்தது. அதனுள்ளே இரு உடல்கள் மிதந்து கொண்டிருந்தன.

மழை வெள்ளம்தான் தேங்கி இருக்கிறதோ என ஒரு கணம் தோன்றியது, இல்லை நீர் மிக மெதுவாக மேல் ஏறி வந்தபடியிருந்தது. அதன் நிறம் பழுப்பாக மண் கலங்கல் போலத் தடிப்பாக… இல்லை… இல்லை கடும் சிவப்பு இரத்தக் குழம்பாகச் செந்நிறமாக இருந்தது. அது குழியிலிருந்து பொங்கிப் பெருகி என்னை அப்படியே விழுங்க வருவதுபோல இருந்தது.

ஒரு நொடி அந்த நெருப்புக் குழம்பினுள் அப்படியே விழுந்து மூழ்கிட மனம் உன்னியது. மறு நொடி என் முகத்தையே அந்தக் குழியுள் பார்த்தேன். கோரமாக, பன்றியின் கடவாய் பற்களுடன். கால்கள் பின்னத் தடுமாற்றத்துடன் அந்தக் குழியை நீங்கிக்காட்டை நோக்கி விரைந்து ஓடினேன். முட்கள் கால் தசைகளை, தொடையைக் கிழித்தன.

முகத்தில் அறைந்த தாழ்வான மரக்கொப்புகளை விலக்கியபடியே பாய்ந்து ஓடிக்கொண்டே இருந்தேன். தூறலாகத் தொடங்கிய மழையும் வலுத்தபடி என்னுடன் பின்னால் ஓடிவந்தது. கனமான மழைத்துளிகள் முதுகில் அறைந்து வீழ்ந்தன. சேறும் சகதியுமாக, கிழிந்து தொங்கும் ஆடையுமாக காட்டை ஊடறுத்துச் சென்ற பெரிய வீதிக்கு வந்தேன். கைகாட்டி மறித்த இரண்டு லொறிகள் என் மீது சேற்றை அள்ளி இறைத்துச் சென்றன, மூன்றாவது லொறி நின்று என்னை ஏற்றிக்கொண்டது.

வவுனியாப் புகையிரத நிலையத்தின் அருகிலேயே இறங்கிக்கொண்டேன். அப்போதும் மழை இன்னும் இரைச்சலாகப் பெய்தபடியே இருந்தது. துளிகள் மூர்க்கமாகவும் கனமாகவும் நிலத்தில் மோதிச் சிதறிக்கொண்டிருந்தன. பாதையை மேவி வெள்ளம் சுழித்து ஓடிக்கொண்டிருந்தது. புகையிரத மேடையில் யாருமே இல்லை. தடித்த கண்ணாடி அணிந்திருந்த பெண் சிட்டை கொடுத்தார்.

சேலைக்கு மேலே குளிருக்குத் தடித்த கம்பளிச்சட்டை அணிந்திருந்தார். பதற்றமும் நடுக்கமுமாக நனைந்து கசங்கியிருந்த பத்து ரூபாவை அவரிடம் நீட்டினேன். என் உதடுகள் குளிரில் அடித்துக்கொண்டிருந்தன, கைகள் குறண்டியிருந்தன. அவர் என்னைக் கவனித்ததாகத் தெரியவில்லை. பெரிய ஏட்டை பிரித்துப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார். பின் ஒரு புகையிரத மேடையை பென்சிலால் சுட்டிக்காட்டினார்.

அங்கே ஒரு புகையிரதம் கரியாகப் புகை கக்கியபடி நின்றிருந்தது. ‘அதோ அங்கே பாருங்கள், அதுதான் கடைசி வண்டி மிகுதி எல்லா வண்டிகளும் மழையினால் ரத்தாகிவிட்டன’ என்றார். நான் பாய்ந்து அந்தக் கடைசி வண்டியை நோக்கியே ஓடினேன். அங்கிருந்து எங்காவது தூரமாகப் போய்விடவேண்டும்போல இருந்தது. வண்டி புறப்பட்டு மெதுவாக வேகமெடுக்க முன்னரே ஒரு பெட்டியில் தொற்றி ஏறிக்கொண்டேன்.

வண்டி வேகமெடுக்க ஆசுவாசமும், புத்துணர்வுமாக உணர்ந்தேன்.

கட்டிடங்கள், மின் கம்பங்கள், பசுமையான நெல்வயல்கள் என்னிலிருந்து பின் நகர்ந்துகொண்டிருந்தன. வண்டியின் வேகம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. கண்ணாடியில் பச்சை வயல்களின் காட்சிகள் கரைந்து அழிந்து புகையிரதப்பெட்டி இருண்டது. அப்படியே உடல் தளர்ந்து மர இருக்கையில் வீழ்ந்தேன். எவ்வளவு நேரமாகப் புகைவண்டி ஓடிக்கொண்டிருந்தது எனத் தெரியவில்லை. யுகம்யுகமாய் தடதடத்து ஓடிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது.

பசியும் தாகமும் போன இடம் தெரியவில்லை. வண்டியின் வேகம் மெதுவாகக் குறைய ரயில் பெட்டி குலுங்கி அதிர்ந்தது. வெளியே பிரமாண்டமாக எழுந்து நின்ற கற்கோட்டை தெரிந்தது. அடியில் மெல்லிய பாசி படர்ந்த கருங்கல் மதில்களின்மேல் கூரான காவற்கோபுரங்கள் தெரிந்தன. கோபுர உச்சிகளில் வீணைக் கொடி பறந்து கொண்டிருந்தது.

கொடி முகில்களுள் மறைந்தும், அமிழ்ந்தும் தெரிந்தது. தூரமாக அலையில் மிதக்கும் மரக்கலங்களின் கொடிகள் நிரை நிரைகளாகத் தெரிந்தன. நிலவின் ஒளியில் அவை நீலமாக ஒளிர்ந்துகொண்டிருந்தன. காவல் மாடங்களினுள் பெரிய முரசுகள் இருந்தன. காவற் கோபுத்தின் கூர்விளிம்புகளில் சில நிழல் அசைவுகள் தெரிந்தன. திடீரென இடிமுழக்கம் போல முரசுகள் அபாயமாக அதிர்ந்தன. கூடவே ஓலம், அலறலும் எழுந்தது. கோபுர உச்சிகளில், காவல் மாடங்களில், வீணைக்கொடிகளில் எல்லாம் தீயின் நாக்குகள் தெரிந்தன.

நீரில் எண்ணெய் பரவுவதுபோல தீ ஊர்ந்து அவற்றின் மேல் பரவியேறியபடி இருந்தது. மத்தகம் பிளந்த யானையின் பிளிறல் போன்ற ஓலங்களால் தீ அதிர்ந்தது. தீயில் கருகும் உடல் வாசனை நாசியில் கரித்தது. வானுயர்ந்த கோட்டை மதில்களில், மிதக்கும் மேகங்களிலும் கரிய உருவங்கள் பந்துகள் போலச் சுழன்று தாவி ஓடி ஏறிக்கொண்டு இருந்தன. கோபுரங்களின் உச்சியை ஒரு கையால் பற்றிப்பிடித்து மறுகையால் தொற்றி அவற்றின் மேல் ஏறின.

தீயின் வெளிச்சத்தில் அவற்றின் மயிரடர்ந்த உடல் பளிச்சிட்டுத் தெரிந்தது. செந்நிறமான உடல் பருத்து, தொப்பை சரிந்த தாட்டான் குரங்குக் கூட்டங்கள். அவற்றின் வால்களில் செந்நிறக் குஞ்சம் போல தீ எரிந்து கொண்டிருந்தது. நானும் அந்தக் குரங்குகளை நோக்கி விரைந்து ஓடிக்கொண்டிருப்பது நினைவில் வந்த போதுதான் சந்தேகத்துடன் திரும்பி என் புட்டத்தை நோக்கினேன். புட்டத்தின் மேலே ஒரு வால் தொங்கியது. அதன் நுணியில் குஞ்சம் போல தீ எரிந்துகொண்டிருந்தது. நான் ஓடி வந்த நிலம் முழுவதும் திட்டு திட்டாகத் தீ பரவியிருந்தது.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2021 Designed By Digital Voicer