வய்யாளி - கவிதைகள்

கறுத்தடையான்

பகிரு

வரைவின் மகளிர் கூற்று

எவன் வாசலும் நானறியேன்
என் வாயிலும் சாத்தியுமறியேன்
உன்னவளென்னை ஏசுகிறாள்
நானுனக்கு சந்தனம் பூசுகிறேன்
சேறென்றதை நீயுமுரைப்பாயோ.

***

பொருள் வேண்டியும் அருள் வேண்டியும்
இருள் தூண்டியும் இடரேயெனக்கு
எனக்குமாசையென் தளர் புதல்வனின் சாய்நடை காண
தனக்குப் போகவே தானமும் தர்மமும்
ஆதரவுக்கின்றி மருகுமெனக்கு
அளிக்கப்பட்டவை மிகவும் ஒழிக்கப்பட்டவை.

***

கெடுமதியூடே வாழ்வதிலும்
படுதுயரம் போற்றுவதன்றே
ஆற்றுவாரற்று பெருகுமிடர்
என்னாலா உன்னவளுக்கு
உன்னாலேசல் இருவருக்கும்
நின் பொருட்டு நாங்களிருவரும்
பகை கொள்கிறோம் நீ
நகை கொள்வாயென்றறிந்தும்.

***

துயர் படுவது தீதன்று
தேற்றத் துணையிருந்தால்
அவளுக்குமஞ்சி எனையும் கொஞ்சி
சகதியெருமையென அவதியுறுகிறாய்
மேற்புறம் வருந்தினாலும்
உள்ளூர நகைப்பேயெனக்கு
நிற்கத் தேரமற்ற நாயுன்னையெண்ணி.

***

திசைமுகங் காணாத் திருமுகம்
உழக்குக்கேது கிழக்கும் மேற்கும்
வக்கிருந்தால் வாயிலை
மாற்றிக் கொள்வோம்.

***

பொருட் பெண்டிரென புண்படுத்துமூர்
உலகென்பது உயர்ந்தோர் மட்டுமெனில்
அவரேயுரைக்கட்டும் இம்மண்ணில் எது சக்காத்தென
நின் பொருளை திருப்பியளிக்கிறேன்
என் நலனை எமக்களிப்பாயாக.

***

இரவல் நாழியில்
பரவும் பதக்குப் பதற்றம்
நவதானியங்களின்
விதையுறக்கம்
வெளிப்படுந் திறனில்
களிப்படும் முறம்.

***

சேற்றுப் புண்ணில் செழிக்குமிவள்
சேறுகளுக்கஞ்சுவதில்லை
மறை வெடிப்பில் குறைவற்று
ஆழ் பதியுங் கால்.

தோழி கூற்று

கொழுமுறைப்படி உடலிளைத்து
கூறற்று உழுமுழவனே
யார் சொல்வருனக்கு
அறிவிலே விளையுமா
எருவிலே விளையுமா. 

***

நல்லழுக்கில் சொல்லழுக்குஞ் சேராது
இல்லலசி எவள் பெறுவாள் திருநாள்
பொதிந்தயுடையுள்ளும் புகுமழுக்கு
விரித்த பாயே முடக்குமுறக்கம்.

***
 
கண்டு பூப்பூத்தாள்
காணாமற் காய் காய்த்தாள்
அறிந்தாயீ நீ
இன்னுமெதற்கு நான். 

***

கூறற்ற விரலாலே
கிழிபடும் பூவிதழ்
மலர்த் தன்மை மகரந்தம்
அலர்ப்பட்டே புலப்பட்டாள். 

***

நீரிலே தலைகீழாழ்த்தினாலும்
நீயேயவளுக்கு தக்க நற்காமன்
கூடவேயிருந்தாலும்
பாங்கி சொல்லவளுக்கு
வீங்கும் கல்.

***

சிறு கடிக்கும் பெருவீக்கம்
கடிதடச் சுண்ணாம்பு
காய்ந்து கணப்பறுத்தும்
நாட்பட்டும் வற்றா வீக்கம்
முகங்காண முற்றாவேக்கம்
நெல்லி தின்று நீர் குடிக்கிறாய் நீ
கள்ளியுண்டு நீர் வடிக்கிறாளவள்.

***

நாயுருவிச் சொற்களவள் மேலிலே தொக்கி நிற்கும்
தேன்சிட்டின் துடிப்பாயிருந்தவள் நகை நளினம்
கொக்கில் குஞ்சுமாய் வாகையில் பிஞ்சுமாய்
இப்போது காண்பாதற்கரியதாகி விட்டது
நீ கண்டு சொல் அதைக் கண்டேனென.

***

தனிப்பிரியத்திலும் கனிப்பிரியம்
நின் தடம் திரும்புவதும் விரும்புவதும்
யென் கையிலில்லை
அவளிடங் கூடுவதும் குறைவதும்
என் செய்கையிலில்லை
இன்ப துன்பமிருவருக்கின்றி
என்னால் அதுவிரண்டுமில்லை
நின்னருள் யென்னவளுக்கு
நிறைகுடச் சொற்களாய்
என் சொல் இருப்பதுவோ
நுன் தொண்டையில்.

பாங்கன் கூற்று

பசலையைக் கண்டதார்
அமிர்தத்தையுண்டதார்
என்றே முன்பிருந்தேன்
நின் துணையில் அமிர்தமும்
வன் பிரிவில் பசலையும்
பற்றியிழுக்க பதறுமவள்
கண்டே உருக்குலைந்தேன்
உன்னிடமென் சொல்ல?
ஆயிரந்தான் அழுதாலுமுழுதாலுங்
உடையவனுக்கே உவக்கும் நிலம்.

***

கொதியிரும்பும் குளிரும்
உறை பனியுமுருகும்
வெண்சுடர் வேகத்தில்
நாவவளுக்கு உள்ளிறங்கிற்று
தன்கை தூண்டி நின்கை வேண்டுமவள்
பசிய கண்களில் படரவில்லையுறக்கம்
வினை வேண்டி பிணை பிரிந்தவுன்னை
பனை நிழலே பக்கத் துணையாக்கும்
அருங்கலை யாரிடத்தும் முளைக்கும்
வெறுஞ் சொல்லும் வேதனையைக் குறைக்கும்.

***

வேண்டுவதொன்றேயுனை நான்
நிலந் தவறாது நீயிரு
பிரிவும் உளச்செறிவும் பிரித்தறிய மாட்டாத
குருதி வேகத்தில் குறைவற்றவுன்னிடம்
வார்க்க சொல்லும் தட்டுப்படவில்லை
அறிவதறி - அழிகொல்லையில்
குதிரையும் மேயும் கழுதையும் மேயும். 

***

ஒன்று கலப்பதில் உயர்வு தாழ்வில்லை
பெறுவதுமிழப்பதும் பேசக்கூடியதுமில்லை
போக வேண்டியும் பொய்யுரை தாண்டியும்
உணர்வாய் விரைவாய்
உலகுக்கொத்தது இருவருக்கும்
அதுவும்போக போற்றுதலென்பது
புணர்ந்தாரைப் பிரியாமையே. 

***

காய்ச்சலும் பாய்ச்சலுமே பயிருக்குகந்தது
அதிநீரால் வேரலழுகும்
குறைநீரால் நுனி கருகும்
உண்சோற்றுப் பலன் கண்ணிலா ஊணீலா
நில்லாவுலகின் செல்லுங் வழியில்
ஆட்படுமழல் எவருக்குமே
அவதியென்பது மிகுதியும் பகுதியே

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer