லவ்யூடி

வா.மு.கோமு

பகிரு

சிறுகதை

சின்னப்பொன்னானுக்கு வயது எழுபதைத் தொட்டு இருக்கலாம் அல்லது தாண்டியுங்கூட இருக்கலாம். பரம்பரைச்சொட்டை நெற்றியிலிருந்து மேலேறி இருக்க காதுகளின் பக்கங்களில் பஞ்சுப்பொதிபோல முடிக்கற்றை அப்பியிருந்தது.

உள்ளூர் நாவிதன் ஊரின் தென்கடைசிக்கு மாதத்தில் இருமுறை மட்டுமே அடப்பப்பையுடன் வந்து போவதால் சின்னப் பொன்னான் தாவாங்கட்டையில் நீள நீளமான வெள்ளை முட்கள் குட்டானாய் முளைத்து நின்றிருந்தன.

சின்னப்பொன்னான் கண்களில் வெள்ளைப்புரை விழுவதாகவும், புகைபோன்று சிலரின் முக அடையாளம் தூரத்தே வருகையில் தெரிவதாகவும், சீக்கிரமாகக் கண்களை ஆப்ரேசன் செய்துகொள்ளணும் என்றும் பேச்சுக் கொடுப்பவர்களிடம் எல்லாம் சிலநாட்களாகச் சொல்லிக்கொண்டே இருந்தார்.

தூரத்திலிருந்து தன்னை நோக்கி வருபவர் ஆணா பெண்ணா என்ற சந்தேகமும், ஒருவேளை அது பேயாகவும்கூட இருக்கலாமெனவும் நினைப்பதாகவும் சொன்னவர் அப்படிச் சொல்லி முடித்ததும் சிரித்துக்கொள்வார்.

கிட்டே வந்துகொண்டிருக்கும் பேயை அவர், ‘யாரப்பா அது? வர்றது?’ என்று கேட்டு காதைத் தீட்டிக்கொண்டு எதிராளியின் பேச்சுக்குரலை வைத்து, “அட நீயாப்பா! தே... இன்னிக்கி பொழப்புக்கு எங்கீம் போவுலியா?

யாரப்பா உன்னி யாட்டம் இப்ப பொட்டிய முதுவுல கட்டீட்டு ஏணியைத் தூக்கீட்டு திரியறாங்க?

மரம் ஏறுன ஆக்கள் பூராவும் குழிக்குப் போயி படுத்துட்டாங்க! அங்கங்கெ ஊட்டுக்கு ரெண்டு தென்னைமரம் வச்சவவனுங்கெல்லாம் உன்னைக் கூப்பிட்டு ஏறச் சொல்லி தேங்காய் போட சொல்றாங்க!

காசுபணம் குடுப்பானுங்களா இல்லநாலு தேங்காயை எடுத்துட்டு போன்னு சொல்லீருவானுங்களா? நீயே கடையில புட்டுமா தின்னுட்டு திரியறே...

தேங்காயை வச்சி என்ன பண்டுவே?”

நான் சின்னவனா இருந்தப்ப ஊரைச்சுத்தியும் பனைமரம் காடுகாடா அத்தனை நின்னுட்டு இருந்துச்சுக! சில்லாங்காட்டுல நாப்பது மரத்துல தெளுவு எறக்கீட்டு இருந்துச்சு எங்கய்யன்.

அவுருக்குப்பொறவு நான் கலியாணம் கட்டுற வரைக்கிம் ஏறீட்டு இருந்தேன். மரம் ஏறுற மனுசனுக்குப் பொண்ணு குடுக்க மாட்டீனுல்லொ சொல்லீட்டானுங்க நசியனூர்ல!

அவிங்கூர்ல அவிங்க பங்காளிங்க நாலு பேரு பனையுச்சியில இருந்து பொத்து பொத்துனு உழுந்துஇடுப்பு போயி கெடக்கானுக...

அதே மாதிரி ஆயிப் போயிட்டா எம்புள்ளயில்ல இசி வழிக்கோணும்னு எம்பட மாமியாகாரி புள்ளையத் தரமாண்டீன்னு அவிங்கூட்டு வாசல்ல நின்னு குதிச்சா!

அவுனுக கள்ளை மூக்கு முட்ட ஏத்தீட்டு பனையேறி உழுந்தா அது அவுனுங்க கெரவம்! எல்லாருக்குமா அப்பிடி நடக்கும்?

அப்புறமென்ன... மயிலாவை நானு எப்பிடிக் கட்டுனேன்னு கேளு நீயி! எம்பட மாமியாகாரி கிட்ட பனையேறமாட்டேன்னு சத்தியம் பண்ணிக்குடுத்துல்லொ கட்டீட்டு வந்தேன்.”

இவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே சண்முகம்சென்றிருப்பான். இருந்தாலும் சின்னப்பொன்னான்சொல்ல வந்த விசயத்தை வேறு யாரேனும் இவரின் முதுகுக்குப் பின்னால் நின்று கேட்டுக்கொண்டிருக்கலாமென முழுதாகவும் சொல்லி முடிப்பார்.

நிசமாலுமே இவருக்குக் கண்ணு கெட்டுப் போச்சா என ஊருக்குள் யாருக்கும் உறுதியாய் தெரியவில்லை.

ஊரின் தெற்கே கருப்பராயன் கோவில் அருகேதான் இவர் வீடு. கோவிலுக்கு அருகாமையில் அஞ்சுதலை நாகம் ஒன்று அப்பப்போ குறுக்கையும் மறுக்கையும் திரிவதாய் ஆடு மேய்ப்பவர்கள் சொல்வது இவர் காதிலும் விழும்தான். ஆட்டுக்குட்டி காணாமல் போனால் அந்த நாகம் தான் தூக்கிப்போய்ச்சாப்பிட்டுவிட்டதாய் சொல்லிக்கொள்வார்கள்.

இவரே தான் தனியாக இந்தப் பத்துப்பனிரெண்டு வருடங்களாகச் சமைத்து உண்டு வருகிறார். அரசாங்கம் கட்டிக் கொடுத்த பொட்டிவீடுதான். முன்பாகச் சாலை வீட்டினுள்தான் குடித்தனம் நடத்தினார்.

வீட்டினுள்ளே ரெண்டு தண்ணீர் குடமும் விறகடுப்பும் சமைத்துண்ண நான்கு போசியும் படுத்துறங்க ஒரு கயிற்றுக்கட்டிலும்தான் இருந்தன. இலவசமாய் வீட்டினுள் வந்து சேர்ந்திருந்த டிவி பொட்டியை பையன் முருகன் தூக்கிப்போய்விட்டான்.

சின்னப்பொன்னான் மயிலாவைக் கட்டிக்கொண்டு ஊருக்குள் வருகையில் அவளுக்கு வயது இருபது. பார்க்க முப்பது வயதுக்காரியாய் அப்போதே தெரிவாள். இவருக்கு இருந்தால் இருபத்தியெட்டு இல்லீன்னா முப்பது இருந்திருக்கலாம்.

மயிலா வந்தபிறகு மரம் ஏறிய ஏணியையும் பொட்டியையும் சாலையில் ஒசக்கே தூக்கிக் கட்டினார். எல்லோருமாய் யோசித்து முடிவெடுத்தப் பின் விசயமங்கலத்தில் தவுடு புண்ணாக்குக் கடை வைத்து முதலாளியாய் அமர்ந்தார் சின்னப்பொன்னான்.

பாவு காச்சிக்கொண்டிருந்த ட்ரம் சிலகாலம் சும்மாவே வீட்டின் பொறவுக்குக் கிடந்து துருப்பிடித்து அழிந்துவிட்டது. கருப்பட்டி அச்சுப் பலகையைக் கரையான் அரித்துத் தின்றுவிட்டது.

காடுகளில்உயரமாய் நின்றிருந்த பனைகள் காணாமல் போயிருந் தன. வெய்யில் காலங்களில் சிறார்களுக்கு வரும் வேர்க்குருவுக்குப் பெருவிரலால் நோண்டித்தின்றது போக மீதமான நொங்கை உடலெங்கும் பூசி வேர்க் குருவைப் போக்கடித்த காலம் மலையேறிப்போய் இப்போதைய குழந்தைகளுக்குக் குட்டிக்குரா பவுடர் பூசுகிறார்கள்.

பனங்கிழங்கை அறியாத சிறார்கள், அப்படின்னா என்ன அப்பாரு? அது மரத்துலயா காய்க்கும்? என்கிறார்கள்.

மயிலா ஒரு பெண்ணையும் மகனையும் அவருக் காக ஈன்றெடுத்தாள். பெண்ணை நசியனூருக்கே சொந்தத்தில் கட்டிக் கொடுத்திருந்தாள். மகன் உள்ளூரிலேயே காதல் வயப்பட்டு ஒருத்தியைக் கட்டிக்கொண்டான்.

அவன் திருமண விசயமே ஊரார்யாருக்கும் தெரியாமல் சிலகாலம் இருந்தது. திருமணம் செய்து கொண்ட விசயத்தை அந்தக் காதலர்கள் ஏன் ஊராருக்கு மறைத்தார்கள்? என்று, ஒருநாள் பெண் வீட்டார் தான் மகளின் அலைபேசியில் மாலையும் கழுத்துமாக மகளும் மருமகனும் நின்றிருந்த போட்டோ பார்த்து தெரிந்து ‘குய்யோ முய்யோ’வெனக் கதறினார்கள்.

எந்த நேரமும் நெஞ்சிலேயே வைத்திருந்த அலை பேசியை எப்போது ஏமாந்து டேபிளில் வைத்தோமென அந்தப்பெண் குழம்பியிருக்கையில் முதல் அடியை அம்மாவிடமிருந்து முதுகில் குப்பென வாங்கினாள்.

அழுகாச்சி எதுவும் அவள் வாயில்இருந்து வரவில்லை. உள்ளூர் சொந்தத்தில் சின்னப் பொன்னான் பையன் முருகன் இவளுக்கு அண்ணன் முறை வருகிறதாம். மற்றபடி காதலுக்கு ஊருக்குள் எந்த எதிர்ப்பையும் சனமே காட்டிக்கொண்டதில்லை இதுகாலம் வரை.

வீடு வீடுக்கு குட்டிக்குட்டியாய் சில பஞ்சாயத்துகள் நடந்து முடிந்து ஊரின் மேற்கே கடைசி வீட்டுக்குத் தனிக்குடித்தனம் செய்துகொள்ளக் காதலர்கள் பணிக்கப்பட்டார்கள். இப்போது அவர்களின் பையன்கூட உள்ளூர்பள்ளியில் ஆறாவது படிக்கப் போய்க் கொண்டிருந்தான் சைக்கிளில்! காதல் கண்மணியாய் இருந்த முருகனின் மனைவி சீதாலட்சுமி உடல்பெருத்து நூறுநாள் வேலைக்கு மம்பட்டி சட்டியோடு உள்ளூர் பெண்களோடு கதையடித்துக்கொண்டு செல்கிறாள்.

‘யக்கோவ்! எம்பட ஊட்டு முன்னால தக்கோளிச் செடி இருந்ததல்லக்கா, அதுல தெனமும் நாலு பழம் பொறிச்சுப் போடறனக்கா!

இப்பப்பாரு ஊருக்குள்ள ஆட்டோல கொண்டாந்து விக்கறவன் மூனுகிலோ நாப்பது ரூவாக்குக் குடுக்குறான்!

அட வெலெ எச்சா இருந்தப்ப நாலு நாலு பழம் தெனமும் பொறிக்கறாப்டி வந்து தொலைச்சிருக்கலாமுல்லோ! தேக்கா!

எல்லா நமக்குன்னு அப்பிடித்தான் நடக்கும் பாத்துக்குவே!’ முருகன் மாருதி வேன் ஒன்றைச் சொந்தமாய் வைத்து வாடகைக்குப் போய் வந்து கொண்டிருந்தான்.

சின்னப்பொன்னான் தன் மருமகளிடம் இது நாள் வரை ஒரு வார்த்தை பேசியதில்லை. முருகன் காதல் திருமணம் செய்துகொண்டது அவருக்குப் பிடிக்கவில்லை இன்றுவரை. அப்படியே காதலித்திருந் தாலும் அவரிடம் முன்பாகவே சொல்லியிருந்திருக்க லாம். அவர் ஒன்றும் மறுக்கப்போவதில்லை.

ஆனால் தங்கை முறையாகும் பெண்ணை எப்படி இவன் காதலிக்கலாம்? அந்தப் பெண்தான் கட்டாயப்படுத்திக் கழுத்தில் தாலி வாங்கிக்கொண்டிருந்திருக்கவேண்டும் என நினைத்தார். அந்தப் பெண்ணின் குடும்பத்தாரோடு உறவை முறித்துக்கொண்டார்.

இவர் இப்படிச் செய்கிறாரே என்று வேதனைப்பட்ட மயிலா, ‘என்ன இருந்தாலும் நம்ம பையன் முருகன்! இப்பிடி ஊருக்கு மேற்கேயெல்லாம் கொண்டி தனியா இருன்னு சொல்றது நல்லா யில்லங்கொ!

நம்மூடு கிடக்க நம்ம பையன் போயி வாடகையூட்டுல இருக்கோணுமா? நாலுசனம் காதுல கேட்டா என்ன சொல்லும்?’ என்றெல் லாம் பேசத் துவங்க மயிலாவின் இடுப்பில் ஒரு மிதி வைத்தார் சின்னப்பொன்னான்.

மயிலா கீழே விழுந்து அதிர்ச்சியில் பேபேபே... என உளறத் துவங்கினாள். அப்போது எழுந்து பையனிடம் போனவள்தான் மயிலா. இன்றுவரை பையனோடே இருக்கிறாள். எதிர்முட்டு எந்தச் சந்தி லாவது இருவரும் சந்தித்தாலும், ஒரு காறித்துப்பலோ அல்லது ‘க்கும்’ என்ற முனகலோ கூட இல்லாமல் ஒதுங்கிப் போகிறார்கள் இருவருமே.

ஆடுகள் பத்து உருப்படியை வைத்து மேய்த்துக் கொண்டு இருக்கும் மயிலா கூனு விழுந்த முதுகை வைத்துத் தடியூன்றித்தான் நடக்கிறாள். மயிலா இப்போது மயிலாக்கிழவி. கண்ணு பொரை விழுந்த தாகக் கோவை அரவிந்த் ஆஸ்பத்திரி போய் ஒரு கண்ணை ஆப்ரேசன் செய்து வந்திருந்தாள்.

இந்தவிசயத்தைக் காதில் கேட்டு அறிந்துகொண்டதில் இருந்துதான் சின்னப்பொன்னானும் பார்ப்போரிட மெல்லாம், கண்ணு பொட்டக்கண்ணு ஆயிட்டுவருது, எனச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

இவரே ரேசன் அரிசியில் கூட்டாஞ்சோறும் கஞ்சியும் வைத்துக் குடித்துக்கொண்டிருந்ததால் உடல் வற்றி காற்றடித்தால் பறந்துவிடும் நிலையில் இருந்தார்.

சின்னப்பொன்னானும் ஊன்றிக்கொள்ளக் கைத்தடி போட்டு மூன்று வருடங்களாகிவிட்டது. ஊராருக்கு இப்போது சின்னபொன்னப்பாரு ஆகிவிட்டிருந்தார்.

சின்னப்பொன்னப்பாரு பக்கத்து வீட்டில் மருதாயிக் கிழவி இருந்தாள். அவள் பையன் கோவையில் இஞ்ஜினியரிங் வொர்க்ஸ் வைத்திருந்தான். அங்கேயே நாயக்கமார் பெண்ணைக் காதலித்துக் கட்டிக்கொண்டு வாழ்கிறான்.

ஊருக்குள் மாரியம்மன் கோவில் சாட்டு நடந்ததென்றால் வருடம் தவறாமல் அம்மனுக்குக் கிடாவெட்டு நிகழ்த்த வந்து சேர்ந்துவிடுவான். அவன்தான் அம்மாவுக்குச் சின்னப்பொன்னான் வீட்டருகே மெத்தை வீடு கட்டிக் கொடுத்திருந்தான்.

மொசைக்கல்லில் நடந்தறியாத மருதாயிக்கிழவி அவ்வப்போது வீட்டினுள்ளேயே பொத்து பொத்தெனவிழுந்து விழுந்து எழுந்து மகனை கண்டபடி திட்டிக் கொண்டேயிருக்கும்.

தன்னை இருபது வருடங்கள் முன்பாக விட்டுச்சென்ற புருசனையும் கண்டபடி திட்டத் துவங்கும். மருதாயிக்கிழவியும் ஆடுகள் இருபது உருப்படியை மேய்த்துக்கொண்டிருந்தவள் தான்.

சீக்கு வந்து பத்து ஆடுகள் தினமும் ஒன்றாக இறந்துவிடவே, மீதமிருந்தனவற்றை உள்ளூர் வண்ணானை அழைத்து, ‘சந்தைக்குப் பிடித்துப்போய்விற்றுத் தொலையடா... பிள்ளைங்களாட்டம் வளர்த்துனேன்... ஒவ்வொன்னாச் சாவுதுக!

பாக்க பாக்க அழுவாச்சியா வருது எனக்கு!’ என்று தள்ளிவிட்டு விட்டது ஐந்து வருடம் முன்பாகவே. இப்போது கேபிள் கனெக்சன் போட்டு எல்ஈடி டிவியில் நாடகம் பார்த்துக்கொண்டிருக்கிறது.

எந்தநேரமும் சட்டியில் வரட்டீயை வைத்திருந்து அவ்வப்போது சூடுபண்ணி சூடுபண்ணி அதில் எலுமிச்சை சாறை பிழிந்துவிட்டுக் குடிக்கப்பழகியிருந்த மருதாயிக்கிழவி, குளிக்கப் பாத்ரூமிற்குள் சென்றாள் என்றாள் குறைந்தது ஒன்னரைமணி நேரம் நிதானமாய்க் குளித்து முடித்து வெளிவரும் பழக்கம் வைத்திருந்தாள்.

வீட்டு முன்னால் இருக்கும் பைப்பில் தான் காலை நேரத்தில் தண்ணீர் நிற்கும்வரை குடம் குடமாய்ப் பிடித்துக்கொண்டு போய்ப் பாத்ரூம் தொட்டியை  நிரப்புவாள்.

வீட்டின் முன் இருக்கும் காலியிடத்தில் கத்தரிச் செடியும் வெண்டைக்காய் செடியும் வளர்த்துகிறாள். அவைகளுக்கும் காலையில் குடம் குடமாய்க் கொண்டு போய் ஊற்றுவாள்.

சின்னப்பொன்னானப் பாரு வீட்டினுள் நுழைந்து அவரது இரு குடங்களைத் தூக்கி வந்து தண்ணீர் பிடித்துக்கொண்டுபோய் வைப்பதும் மருதாயிக்கிழவிதான். தண்ணீர் வரும் காலை நேரத்தில் அப்பாரு வாயைக் குவித்துப் புஸ்ஸ் புஸ்ஸ்செனக் காற்றை ஊதிக்கொண்டே கட்டில் குழியில் தூங்கிக்கொண்டிருப்பார்.

தூங்கும் சமயத்தில் நாய் நுழைந்து சோத்துச்சட்டியை கவிழ்த்தி சாப்பிட்டுவிட்டு சென்றால் கூட அவருக்கு எதுவும் தெரியாது.

மாரியம்மன் கோவில் கல்லுக்கட்டில் அமர்ந் திருந்தவர் சண்முகன் சென்ற பிறகும் தன் கதையை யாரேனும் கேட்பர் என நினைத்து சொல்லிமுடித்து அமைதியானார். அரசமரத்து நிழல் சொகுசாய் இருந்தாலும் காற்றுதான் இல்லை. கிழக்கே குடோனில் தறி ஓடிக்கொண்டிருக்கும் சப்தம் மட்டுமே இவர் காதுக்குக் கேட்டது.

சுளுக்கைகள் தன்னைச் சுற்றிலும் வந்துவிட்டன வோவென அப்போதைக்கப்போது தோளில் கிடந்ததுண்டால் திண்ணையில் இருபக்கமும் அடித்து அகற்றிக்கொண்டிருந்தார்.

சுளுக்கை கடி வாங்கிவிட்டால் கடிபட்ட இடம் இட்லி மாதிரி உப்பிக் கொள்கிறது! மாசத்தில் எப்படியும் ரெண்டுதடவையாச்சிம் அவைகள் இவரைக் கடித்து வைத்துவிட்டு மிக விரைவாய்ச்  சென்றுவிடுகின்றன.

“இங்கெங்கடா சுளுக்கை கடி வாங்கீட்டு தன்னப் போலப் பேசீட்டு குக்கீட்டு இருக்கே?” ஆரப்ப அப்பாரு புறங்கை கட்டிக்கொண்டே இவர் அருகில் வந்து நின்றது. விரலிடுக்கில் பத்தாம்நெம்பரு பீடி புகைந்துகொண்டிருந்தது. ஆரப்ப அப்பாரு மருதாயிக்கிழவியின் அடுத்த வீடு. அவரும் இவரைப் போலவே தனி ஆள்தான்.

அவருக்கும் வீட்டினுள் சட்டி சாமான்கள் எல்லாம் குறைவுதான். ஆனால் இள வட்டங்கள் சிலர் ஆரப்ப அப்பாருவின் வீட்டுக்குத்தான் சீட்டாடவும் கேரம்போர்டு ஆடவும் சிலர் குடிக்கவும் வந்து போவார்கள்.

விடுமுறை நாட்களில் கறிவறுவல் செய்து காரஞ்சாரமாய்த் தின்பார்கள். அப்பாருக்கு அரைக் கட்டிங் கிடைக்கும். மிளகாய், தக்கோளி, பூண்டு, சீரகமென வாங்கவேண்டிய எந்தச்செலவும் ஆரப்ப அப்பாருக்கு இல்லை.

எல்லாம் அவர்களே வாங்கிவந்து வீட்டினுள் போட்டுவிடுவார்கள். அப்பாரு மகிழ்வான மனிதர். எந்த நேரமும் தலையில் உருமாலைக் கட்டு இருக்கும்.

ஒரே பெண்பிள்ளை கிணற்றில் தவறி விழுந்து இறந்து நாற்பது வருடங்கள் ஆகியிருக்கலாம். ஆரப்பஅப்பாருவின் வீட்டினுள் எந்த நேரமும் டிவி சப்தம் பெரிதாக இருக்கும். வீட்டின் சாவி கூட வெளித்திண்ணையில் தேங்காய்த் தொட்டியினடியில் தான் இருக்கும். யார் சென்றாலும் திறந்து கட்டிலில் படுத்து உறங்கலாம். சாப்பாடு செய்யலாம். சாப்பாடு சட்டியில் இருந்தால் போட்டும் சாப்பிடலாம்.

“தாரு ஆரப்பனா? ஊட்டுலதான் என்னேரம் கிடக்குறதுன்னு அப்பிடியே சித்தெ வெளிய வந்துட்டுப் போறதுதாண்டா! பீடி வாங்க வந்தியா கடைக்கி?”

“பீடிக்கி யாரு இங்க வந்தா? நம்ம பழனான் ஒருவாரமா வயித்துப்போக்குனு கெடையில கெடக் கான்னு பசங்க சொன்னானுங்க! அதான் ஒரு எட்டு போயி பார்த்துட்டு வந்தேன்! பத்தாம் நெம்பரு பீடியாட்டமே கட்டல்ல கெடக்காண்டா! இன்னும் ரெண்டு நாள்ல கிழக்கெ சுடுகாட்டுல போயி படுத்துக்குவான்னு நினைக்கிறேன்!”

“பையன் பாத்துக்குவான்ல ஆஸ்பத்திரி கூட்டிட்டுப் போயாச்சிம்! வேனு வேற வச்சிருந்தானே!”

“ஆஸ்பத்திரியெல்லாம் ரெண்டாம் நாளே கூட் டீட்டு போயிட்டு வந்துட்டாங்க!”

“பழனான் தண்ணி போடறவனாச்சே!”

“ஆமா! அப்படின்னு தான் நானு அவம் புள்ளை கிட்ட பையனுக்கு ஒரு போனை போடச் சொல்லி பேசினேன். அவன் என்னடான்னா முந்தா நேத்துஒரு கோட்டரு அப்படித்தான் வாங்கிக் குடுத்தனப் பாரு...

எச்சா வவுத்துல புடுங்க ஆரம்பிச்சிடுச்சு அப்படின்னான். அடக்கருமம் புடுச்சவனே நீயி ரம்மு வாங்கிக் குடுத்தியா?ன்னேன்! அப்படின்னா என்னுங்கப்பாரு?ங்கான். வயித்துல போறவனுக்குப் பிராந்தி குடுத்தா எச்சாத்தான போவும்!

மளார்னு ரம்முன்னு சொல்லி வெசீமங்கல கடையில வாங்கீட்டு வந்து உங்கொப்பனுக்குக் குடுடான்னு சொல்லி போனை வச்சேன். பழனான் கட்டல்ல அவட்டை போயிக் கெடந்தவன் மளார்னு எந்திரிச்சி உக்கோந்துட்டாண்டா! ‘இப்ப வந்துருமா சரக்கு?’ அப்பிடிங்கறான்.

தம்முக்கட்டி எந்திரிச்சி ஜன்னல் மேல பீடிக்கட்டை எடுத்து அதுல ஒன்னை உருவி பத்தவச்சி ஊதுறான்! உனக்கு வேணுமா ஒன்னு? அப்படின்னு எனக்குப் பீடிகட்டை நீட்டுறான்னா பாத்துக்க! ‘இப்ப பையன் வாங்கீட்டு வந்துருவானா? வந்துருவானா?’ன்னு சல்லை பண்ணினான். வாங்கீட்டு வந்துருவாண்டா சித்த கம்முனு கட்டல்ல கெட!” அப்படின்னுபோட்டு வந்தேன்.

“போயிருவானா? பொழைப்பானா?”

“தெரீல சந்தேகமாத்தான் இருக்குது! ரம்மு ஒரு வேள ஆளைக் காப்பாத்தினாலும் காப்பாத்திரும். அப்புறம் பாரு ஆடுகளை ஓட்டீட்டு மேய்க்கறதுக்குக் கிளம்பீருவான்”

“இன்னிக்கி பசகெல்லாம் வேலைக்கி போயிட்டானுங்களா?”

“போயிருப்பானுங்க! நேத்து எனக்கு அரை பாட்டிலு ராத்திரி குடுத்தானுங்க! நானு அதை இனி இன்னாரத்துக்கும் மேல ஏன் குடிக்காட்டின்னு ஊட்டுக்கு பொறவுக்கால ஊசிப்புல்லு மொளச்சிக் கெடந்ததுக்குள்ளார சாமத்துல வீசிட்டேன்.

ஊட்டுக் குள்ள வச்சிருந்தாத்தான் எவன் வந்தாலும் அன்னாந்து மடக்கு மடக்குனு குடிச்சுட்டுப் போயர்றானுங்களே! காத்தால ஞாவகம் வந்து புல்லுக்குள்ள தேடுறேன் சிக்குவனாங்குது! கெழபக்கத்துல இருந்து குக்கீட்டே புல்லு புடுங்கீட்டு தேடீட்டே வர்றேன் அரைமணி நேரம்.

கடைசியா பார்த்தா எங்க நின்னு வீசினனோ அவத்திக்கே காலுக்குள்ள கிடந்திருக்குது! ஊட்டுக்கு பொறவுக்கு நீயி இப்பப் போயிப்பாரு... பளிச்சுனு ஒரு புல்லு பூண்டு இருக்காது! அமட்டையும் புடுங்கித் தள்ளீட்டேன்!”

“அப்புறம் குடிச்சியா இல்லியா?”

“குடிக்கத்தானே அந்தப்பாடு பட்டு புல்லு புடுங்கி னேன்! அப்பவே மெட்டைக் கழட்டி அன்னாந்து ஊத்தீட்டேன்! அது கெடக்குது... ஆமா என்ன சொல்றா மருதாயி?”

“அவுளுக்கென்ன?”

“என்னடா இப்பிடிக் கேக்குறே? ஊட்டுக்காரனுக்குச் செய்யுறாப்டி உம்பட ஊட்டுக்குள்ளவந்து கொடம் தூக்கி தண்ணி புடிச்சு வெக்கிறா... நீயும் திடீருன்னு அவ ஊட்டுக்குள்ளார போயி டிவிபாத்துட்டு நெதானமா வர்றே... லவ் யூ சொல்லிட்டியா?”

“என்னத்தடா கேக்குறே? லவ் யூங்கறே... அப் பிடின்னா என்ன?”

“காதல்றா! உன்மேல அவளுக்கு நோட்டமிருக் குதுடா! நானா இருந்தன்னா எம்பட ஊட்டுல அடுப்பே பத்தவைக்க மாட்டேன்! அவளையே ஆக்கிப் போடச்சொல்லி அட்டனங்கால் போட்டுட்டு கட்டல்ல  படுத்துக்குவேன்  தெரிஞ்சிக்க!”

“டேய் ஏண்டா உனக்குப் புத்தி இப்பிடி கூறு கெட்டுப்போச்சு? கெழவிகிட்ட போயி லவ்யூ சொல்லச் சொல்றே? தண்ணி போட்டுப்போட்டு மண்டையில உனக்கு மசாலா இல்லாம போயிடுச்சுடா ஆரப்பா!”

“பின்ன எதுக்குடா உனக்கு அவ தண்ணி புடிச்சுக் கொண்டாந்து வெக்கிறா?”

“கெழவன் கொடம் தூக்க முடியாம அவட்டை போயி கிடக்கானேன்னு செய்வாடா!”

“நீ பெரிய சொத்துக்காரன் பாரு, உனக்குக் கடைசி காலத்துல செஞ்சு பத்தரத்துல கைநாட்டு வாங்கிப் பொழைச்சுக்க  ஐடியா  பண்டியிருக்கா!”

“நானே வெறுங்குண்டி அம்மணம்னு கிடக்கேன்! பொண்டாட்டியும் வெறச்சுட்டு போயி பத்து வருசமாச்சு!”

“தெரியுதில்ல! கோவிச்சுட்டு போன பொண்டாட்டி இனி உம்பட ஊடு தேடி வரவா போறா? கெடையில நாலு நாளு கெடந்துபாரு... அன்னிக்கித் தெரியும் உனக்கு! உன்னோட மருமக வந்து உனக்குச் சேவகம் பண்ணுறாளா இல்ல மயிலா வந்து சேவகம் பண்ணுறாளான்னு! ஒரு சனம் உம்பட ஊட்டுப்பக்கம்எட்டிப் பாக்காது.

சின்னப்பொன்னான் சீக்கிரம் போனான்னா தூக்கிக்கொண்டு பொதைச்சுட்டுசோலிகளைப் பார்ப்பம்னு இருப்பாங்க! இங்க மட்ட மத்தியானத்துல வந்து கல்லுக்கட்டுல உக்கோந்து சுளுக்கை கடி வாங்கீட்டு இருக்குற நேரம் மருதாயி ஊட்டுல உக்கோந்து அவகூடச் சாடை பேசீட்டு டிவில பொம்மை பார்த்துட்டு லவ்யூ சொல்றதை உட்டுட்டு திருவாத்தானாட்ட இருக்கான்!”

“டே, நீ என்னை இக்கட்டுல கொண்டி மாட்டி வச்சுட்டு வேடிக்கை பார்க்க பாக்கேடா ஆரப்பா!”

“நல்லபுத்தி சொன்னா இக்கட்டுங்காம்பாரு எருமை மேய்க்கி! கோயமுத்தூருல உக்கோந்துட்டு அவ பையன் சம்பாதிச்சி பணம் கொண்டாந்து அம்மாக்கு குடுத்துட்டு போயிட்டு இருக்கான்! ஒருத்தி அத்தாப்பெரிய ஊட்டுல உக்கோந்துட்டுச் செலவுபண்டத் தெரியாம வரக்காபி குடிச்சுட்டு உக்கோந் துட்டு இருக்கறா!

ஏண்டா அவ கறி எடுத்து திங்கறதை ஒரு விசுக்கா வாச்சிம் பார்த்திருக்கியாடா? போயி கிட்ட உக்கோந்து நல்லாப் பழகுடா சின்னப் பொன்னா... அப்பத்தான் வாயிக்கி ருசியா நாலு தீம்பண்டம் செஞ்சு அவுளும் திம்பா உனக்கும் குடுப்பாடா!”

“எறந்து திங்கச் சொல்றே என்னை?”

“இனி எனக்கு மசக்கோவம் வந்துரும். பாத்துக்கொ! எதோ நேக்கா பேசிப் பழகி நல்லசோறு தின்னு ஒடம்பை கவனிடா! இன்னும் பத்துவருஷம் சேர்த்தி ஊருக்குள்ள நல்லசேதி கெட்டசேதியெல்லாம் கேட்டுட்டு உசுரோட இருப்பே! போயி டிவி முன்னாடி உக்கோந்துட்டு மருதாயியோட பேச்சுக்குடு!

அவ குடுக்குற வரக்காபியே போதும்னு வாங்கி உருப்பு உருப்புன்னு குடிச்சுட்டு எந்திரிச்சிறாதே. மழை வர்றாப்டி மானம் இருக்குது... வெங்காயப் போண்டா தின்னா நல்லா இருக்கும்னு சொல்லு! அவளுக்கும் நாக்குல எச்சி ஒழுகும்ல! டிவில எத்தனை விளம்பரம் வருது திங்கறாப்ல!

இனி நீ போறப்ப எனத்தைக் கொண்டுட்டு போறே? வகுறு ரொம்ப ஒனத்தியா தின்னு! உனக்கெல்லாம் செஞ்சு தரமாட்டன்னு மருதாயி சொல்லவே மாண்டா! உம்மேல ஒரு கண்ணுடா அவுளுக்கு!

நீ அனுசரிச்சுப் போனீன்னா தங்கத் தாம்பாளத்தட்டுல உக்காத்தி நீவி நீவி உன்னைக் கவனிச்சுக்குவா! நான் சொல்றது நடக் கும்டா சின்னப்பொன்னா! மாரியம்மன் பாரு வடக்கு முகனா உக்கோந்துட்டு காது குடுத்து கேட்டுட்டுஇருக்குது இந்த ஆரப்பன் நல்லதுதான் சொல்றான்னு!”

“சேரி நீ சொல்றாப்டித்தான் கொஞ்சம் நாளு இருக்கப் பாக்குறனே! காசா பணமா! மொதலு எனத்த இதுல போடப்போறோம் நாம! சேரி நானு பொங்கும் பொங்குனு தெக்கெ நடையக் கட்டுறேண்டாஆரப்பா! நீ வரலியா?”

“எனக்கு மேக்கெ சோலி ஒன்னு இருக்குது! பார்த்துட்டு பொறவுக்கு வர்றேன்! போபோ! எல்லாம் ஆத்தா பாத்துக்குவா!” சொல்லிவிட்டு ஆரப்ப அப்பாரு நேராய் மயிலா வீட்டுக்குத்தான் கிளம்பினார். இன்னமும் கொஞ்சம் போதை அவருக்கு மீதமிருந்தது!

*****

மூன்றாம் நாள் காலையில் ஊருக்குள் தெற்குக் கடைசி வீட்டின் முன்பாகப் பெரும் சண்டை துவங்கியிருந்தது. ஊருக்குள் வாசல்படியில் கிடந்த நாய்கள் எல்லாமும் கூட என்னவோ ஆகிவிட்டதெனக் குலைத்துக்கொண்டே தெற்கே ஓடின.

கட்டிலில் பச்சை மிளகாயோடு சேர்த்தி நெய்க்கருவாடு தின்னும் கனவில் இருந்த சின்னப் பொன்னானப்பாரு வீட்டின் முன் கூச்சலாக இருந்த தால் ‘அக்ஸ்! அக்ஸ்!’ என இரண்டு பெரும் தும்மல்களைப் போட்டுவிட்டு கட்டிலின் அடியில் கிடந்தகைத்தடியை எடுத்துக்கொண்டு எழுந்தார். அவருக்கு மயிலா அடித்தொண்டையிலிருந்து பெருங்குரல் எடுத்து சத்தமிடுவது கேட்டது.

இவ எங்க இங்க வந்து தொண்டையத் தொறந்துட்டு இருக்கா காலங் காத்தால! என்ன கேடு இவளுக்கு வந்துச்சு? நெகா எதுவும் சிக்காமல் வாசலுக்கு வந்தார். இவரது பச்சை வர்ண ப்ளாஸ்டிக் தண்ணீர்க் குடம் வாசலில் தண்ணீரோடு உருண்டு கிடந்தது.

“என்ன மயிருக்குளே எம்படக் கெழவனுக்கு நீயிதண்ணி சொமக்குறே? அவனெ ஏண்டி உம்பட ஊட்டுக்குள்ள வச்சு சோறு ஊட்டி உடறே? உனக்கெல்லாம் இந்த வயசிலயும் நெனப்பு மயிரப்பாரு! வகுந்து போடுவண்டி முண்டெ!

ஊட்டுக்காரன் செத்து இத்தினி வருஷங்கழிச்சி உனக்குத் தண்ணி ஊறுதா? மருகாதியா ஊட்டக் காலி பண்ணீட்டு உம்படப் பையங்கிட்ட ஓடீரு! மயிலான்னா ஆருன்னு நெனச்சே?”

மயிலா கூனிக்கொண்டே தடியூன்றியபடி வந்து மருதாயிக்கிழவியை ஒரு சாத்து சாத்தவே திரிந்தது. மருதாயிக்கிழவியும் ஒன்றும் சலைக்கவில்லை!

“ஆமாளே தொண்டுக்கெழவி! அப்பிடித்தான்லே ஊட்டி உடுவேன்! நீ கிழிக்கிறது கிழி போ! காத்தால ஏறீட்டு வந்துட்டா சண்டைக்கி. புருசனை உட்டுப் போட்டு ஊருக்கும் மேக்கெ ஓடிப்போனவதானடி நீயி! ஏண்டி நீ பேசுறியே இத்தனை பேச்சு, அதுல ஒரு நாயம்னு எதாச்சிம் இருக்குதா?

இன்னிக்கி எங்கிருந்துடி உனக்குப் புருசன் நெனப்பு தட்டிக்கிச்சு? முடியப் புடிச்சன்னா ஆட்டி யுட்டுறுவேன் பாத்துக்க! ஆருகிட்ட உன் பூலவாக்கைகாட்ட வந்துட்டே? உம்பட ஊட்டுக்காரன் வேணும்னா மடியில கட்டீட்டு போ!

ஆரு வேண்டாங்கறாங்க இங்க? ஆனா என்ன ஒரு ஏத்தமிருந்தா ஊட்டை காலி பண்ணீட்டு போவச் சொல்லுவேடி தொண்டுக்கெழவி!

நீ போடி ஊரை உட்டு! நடக்க மாட்டாதவன் சித்தப்பனூட்டுல பொண்ணு கட்டுன கதை எனக்குத் தெரியாதா?

எப்பிடியடி கெழவி உசிரை வச்சிட்டு இன்னும் சோறு திங்கறே? நானா இருந்திருந்தா அன்னிக்கே அரளி வெதை அரைச்சுக்  குடிச்சுட்டு போயிருப்பேன்!”

நேரம் ஆக ஆகச் சனக்கூட்டம்தான் பெருகினதே யொழிய இரு கிழவிகளையும் கட்டுப்படுத்தி ஒதுக்கயாருக்கும் நினைப்பில்லை. ஆரப்ப அப்பாரு பீடிப் பொகை ஊதியபடியே நிம்மதியாய் கூட்டத்தின் முன்னால் நின்று ரசித்தார். நாய்ச்சண்டை ஒரு பக்கம்குட்டானாய் நிகழ்ந்து முடிந்திருந்தது.

அப்போதுமருதாயிக்கிழவி பொறுத்துப் பார்த்து சின்னப் பொன்னாக் கிழவன் அருகில் போய் அவரது கன்னத் தில் ஒரு உம்மா கொடுத்தாள்!

“போயிச்சாவுளே ஒய்யா! இத்தினி ஆனதுக்கப்புறம் உம்பிருசன் இனி எனக்குத்தான்!” என்று நடு வாசலில் நின்று கொக்கறித்தாள்.

மயிலாக்கிழவி தடியை ஒரு சொழட்டு சொழட்டி வீசியெறிந்துவிட்டு,

“ஐயோ! எம்பட ராசாவெ படங்காட்டி படங்காட்டி அமுத்திக்கிட்டாளே! கேக்க நாதியில்லியா! மாரியாத்தா கண்ணு பூத்துப்போச்சா உனக்கு?”

என்று  ஒப்பாரி  வைத்தபடி  வாசலில்  அமர்ந்தாள்.

சின்னப்பொன்னானப்பாரு அவளை நோக்கி தடி யூன்றிக்கொண்டே சென்று அவள் முதுகில் லொட்டுலொட்டென  லேசாய் தட்டினார்.

மயிலாக் கிழவி ‘என்ன?’ என்பது மாதிரி தலையுயர்த்தி அவர் முகம் பார்த்தாள்.

“மயிலா! லேய்! லவ்யூடி!” என்றார்.

“என்னெ?” என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு மயிலாக்கிழவி வாசலில் சாய்ந்தாள்.

உள்ளூர் வண்ணான் கூட்டத்தை ஒதுக்கிவிட்டு வந்து கிழவியின் அருகில் அமர்ந்து நாடி பிடித்துப் பார்த்தான்.

பின்பாகக் கூட்டத்தாரைப் பார்த்து உதடு பிதுக்கி மண்டையை இருபுறமும் ஒரு ஆட்டு ஆட்டிக் காட்டிவிட்டு எழுந்தான்.

“கெழவி போயிச் சேர்ந்துடுச்சுங்கொ!” என்றான்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer