கவலையும் பதற்றமும் இல்லா நாட்களும்
நுண்மையான மணிநேரங்களும் எந்தத் தேசத்தில் உண்டோ
அங்கே நான் வளர்ந்திருப்பேனேயானால் உமக்கென்று
ஒரு குறையில்லா விருந்தினைத் திட்டமிட்டிருப்பேன்
ஒருவேளை இப்போது போல்
நான் என் பயம் மிகுந்த கைகளால்
உம்மை இறுகப் பிடித்துக்கொண்டிருந்திருக்கமாட்டேன்
அங்கே உம்மைத் தைர்யமாய் வீணிற் செலவு செய்யவிட்டிருப்பேன்
என் அறுதியற்று இருப்பேன்
துள்ளலான எல்லாச் சந்தோஷங்களுக்கிடையேயும்
ஒருவர் உம்மைப் பிடித்துக்கொள்ளும்படி வீசியடித்திருப்பேன்
வீழ்வது போல நீர் தோன்றினால்
இரு கைகளும் சடக்கென உம்மை நோக்கி உயரும்
வஸ்துக்களின் வஸ்துக்களே
மின்னும் வாளென உம்மை வெளிக்காட்டியிருப்பேன்
மிகவும் பொன்னிறமான எல்லா மோதிரங்களிலிருந்தும்
நான் உமது ஒளியை எடுத்து ஒரு தாங்குபொறியில் வைத்து
அதை மிகவும் வெண்மையான கையொன்றினால்
பிடித்திருக்கும்படி செய்திருப்பேன்
நான் உம்மை ஒரு ஓவியமாய்த் தீட்டியிருப்பேன்: சுவரின் மீதல்ல
சுவர்க்கத்தின் ஒரு விளிம்பிலிருந்து மற்றொரு விளிம்பு வரை
ஒரு அரக்கன் உம்மை வனைந்தது போல்
நானும் வனைந்திருப்பேன் ஒரு மலையாக
ஜூவாலை விட்டெரியும் தீயாக
அல்லது அரேபியப் பாலைவனத்தில்
மேலெழும்பி வளரும் வெப்பமும் தூசியும் நிறைந்த
ஒரு சைமூம் சூறைக்காற்றாக
ஒருவேளை
நிஜத்தில் இருக்கலாம்
உம்மை நான் கண்டேன்...
என் நண்பர்கள் தூரத்தில் உள்ளனர்
அவர்களது சிரிப்பொலிகளை
நான் எப்போதவாதுதான் கேட்கிறேன்
மேலும் நீர்
உமது கூட்டிலிருந்து கீழே விழுந்துவிட்டீர்
நீர் மஞ்சள்நிற கால்நகங்களும்
பெரிய கண்களும் கொண்ட ஒரு குஞ்சுப் பறவை
நான் உமக்காகத் துக்கப்படுகிறேன்
(என் பரந்த கையில் உமது சின்னஞ்சிறு உருவம் மறைந்துபோகிறது)
கிணற்றிலிருந்து ஒரு துளி நீரை
என் விரலால் எடுக்கிறேன்
உமது தாகத் தொண்டையைத் திறந்து காட்டுவீர் என்ற நோக்கத்தில்
அதன் பின் உமது இதயத்துடிப்பைக் கேட்கிறேன்
என் இதயமும் படபடக்கிறது
இரண்டுமே பயத்தினால்.