மொழியாக்கக் கவிதைகள்
கையினுள் ஒரு தீக்குச்சி, முதலில் வெண்மையாய்
தீச்சுடராய் வெடிக்குமுன்
அதன் நாக்குகள் எல்லாப் பக்கங்களிலும் பாய்கின்றன
எனவே வட்டத்தின் உள்பக்கம்
நெருக்கியடிக்கும் பார்வையாளர் கூட்டம்
சூடாக, பிரகாசமாய்
மேலும் அவளது ஆவலூட்டும்
வட்ட நடனம் சுடர்விட்டு வீசுகிறது
திடீரென எல்லாமும் தீச்சுடராகிறது
மேல் நோக்கி வீசிய ஒற்றைப் பார்வை வீச்சில்
அவள் தன் கூந்தலைப் பற்ற வைக்கிறாள்
மேலும் திடீரென்ற துணிகரத் துரித கதியில் சுழல்கிறாள்
தன் ஆடை முழுவதையும் தீயான குதூகலத்துடன் சுழற்றுகிறாள்
அதிலிருந்து திடுக்கிட்டுக் கிளம்பும் பாம்புகளென
அவளது நிர்வாணக் கைகள் நீள்கின்றன
உணர்ச்சி கிளர்ந்து சொடுக்குகின்றன
பிறகு தீ மிகவும் இறுக்கமாய்
அவளது உடலைச் சுற்றி வளர்வது போல உணர்ந்தவளாய்
அவற்றை ஒன்றாய்த் திரட்டி
வெளியே வீசியெறிகிறாள் ஏளனமாய்
ராஜரீக அங்க அசைவுடன் கீழ்நோக்குகிறாள்
அது தரை மேல் கிடக்கிறது சீறியபடி
மேலும் தீச்சுடர்கள் அணைய மறுக்கின்றன
ஆனால் அவள் முழுத் தன்னம்பிக்கையுடன்
இனிய, திளைப்புறும் புன்னகையில்
அவள் ஏறிட்டுப் பார்த்து இறுதியில்
சினமிகு தனது சிறிய கால்களால்
மிதித்தணைக்கிறாள்.