மொழியாக்கக் கவிதைகள்
இலைகள் வீழ்கின்றன
மேலே வெகு தொலைவிலிருந்து வீழ்வது போல்
ஏதோ உயர்வானில் தொலைதூரத் தோட்டங்கள்
உதிர்ந்தழிவது போல்
‘இல்லை’ என மறுக்கும் இயக்கத்துடன்
ஒவ்வோர் இலையும் வீழ்கிறது
இன்றிரவு கனத்த இந்தப் பூமியும் பிற நட்சத்திரங்களிடமிருந்து
அப்பால் விலகி வீழ்கிறது தனிமையில்
நாம் அனைவரும் வீழ்கிறோம் இங்கே இந்தக் கையும் வீழ்கிறது
மற்றதைக் கவனி... அவை எல்லாவற்றிலும் அது உள்ளது
இருப்பினும் யாரோ ஒருவர் இருக்கிறார்
அவர் கைகள் எல்லையற்ற அமைதியுடன்
இந்த அனைத்து வீழ்ச்சிகளையும் தாங்கி நிற்கின்றன.