ராஜன் ஆத்தியப்பன் கவிதைகள்


பகிரு

ராணி லக்கி பிரைஸ்

ராணிக்கு ரோகிணி நட்சத்திரம்!
ஓலைக் கூரையின் ஓட்டையிடுக்கில்
நிலா பார்த்தவர்கள்
ராணியின் ஜெனன ஜாதகத்தால்
மொட்டை மாடியில் நிலாச்சோறு
உண்ணத் தொடங்கினர்
ராணியின் அப்பா தடுக்கி விழுந்தாலும் பிடி மண்ணோடு எழுவது
தற்செயலானது
ராணி வீட்டில்
நாலணா நாணயங்களால் வடிவு பொலிந்த வேங்கடநாதன்
கண்ணாடிச் செவ்வகத்தில்
ஒளிர்ந்து கொண்டிருந்தார்
செவ்வாய், வெள்ளி நாட்களில்
இறைச்சி, மீன் சேர்ப்பதில்லை
மாதாந்தங்களிலெல்லாம் குடும்பமே
கோயிலிலிருக்கும்
முன்புற மதில்மேல்
இரும்புச் சட்டியில் வைத்திருந்த
சோற்றுக் கற்றாழை
நீரின்றிச் செழித்தது
வீட்டில் வளர்க்கும்
வாழைமரங்கள்
வடக்கு நோக்கியே குலை தள்ளியது.
இப்படியான நன்னிமித்தங்களில்தான்
அவர்கள்
‘ராணி லக்கி பிரைஸ்’ அட்டைகளின்
உற்பத்தியாளர்களாயினர்.

தன்மை

சிவப்பில் மடித்த சிறுசதுரக்
காகிதப் பொதியைப் பிரிக்கப் பிரிக்க
ஜோக்கர்களின் உடலில்
வெறுங்கை விரிக்கும் ராணி
வயது வேறுபாடின்றி
எல்லாக் காதலையும் ஏற்கிறாள்
அவளது பத்துப் பைசா புன்னகைக்காக
பலநூறு இழந்தவர்கள்
பத்து பைசா கிடைத்ததும்
பித்தேறித் திரிவது
குபேர சாபம் என்போருமுண்டு
ராணிக்குச் சிலநேரம் பைத்தியம் பிடிக்கும்
பின் வாசலில் கோலமிடுவாள்
முற்றத்தில் எச்சில் உமிழ்வாள்
அவளை
சிறு குழந்தைபோல்
எப்போதும் சுமக்கவேண்டும்
இறக்கிவிட்டால் குடுகுடுவென ஓடி
எங்கேனும் விழுந்து அடிபடுவாள்
பொழுதெலாம்
புனர் ஜென்மத்தில் பிறக்கிறார்கள்
ராணியின் பெற்றோர்
அவளோ
அனைத்து பருவ காலங்களிலும்
காந்தர்வ மணம் செய்தபடியிருக்கிறாள்
பாருங்கள்!
தங்க நாணயங்களில் ஒளிரும்
அவள் புன்னகையின் சீதளம்
கூரைகளின் அந்தரத்தில் உறைந்திருப்பது எவ்வளவு அழகு!.

ராணியின் ஒப்பனை அறை

ஒழுங்கு குலைந்து சிதறிக் கிடக்கும்
புனிதப்பொருட்களால் நிறைந்திருக்கிறது ராணியின் ஒப்பனை அறை
ஒவ்வொரு முறைப் பார்க்கும் போதும்
தோல் சுருக்கம் நீக்கும்
அவளது நிலைக்கண்ணாடி
பாற்கடல் கடையும்போது
புறப்பட்டதாய் இருக்கலாம்
வியர்வை துடைப்பதற்கென
அலமாரி நிறையப் பொன்மொழிகள்
துர்கந்தம் பரப்பும் நீர்மத்தைக்
குருதியில் குழைக்கிறாள்
வாசனைத் திரவியமாகிவிடுகிறது
ராணியின் கணவர்கள்
அவள் நிலைக்கண்ணாடியிலிருந்து
நொடிக்கொருவராய் வெளியேறிச்
செல்கின்றனர்
தளமற்ற அவ்வறையின் கூரையோ
காணுந் தொலைவிலில்லை.

பரம பதம்

   
ராணி லக்கி பிரைஸின் முதுகில்
பரமபதக் கட்டங்களிருக்கின்றன
குட்டி ஏணிகள்
பெரிய ஏணிகள்
சிறு மற்றும் பெரும் பாம்புகள்
சாமிகள்
சாத்தான்கள்
பூச்சிகள்
விலங்குகள்
பறவைகள்
சோழியும் தாயக்கட்டையும் தேவையில்லை
கண்கள் மூடி எண்களை நீங்களே
தியானித்தறிந்து காய் நகர்த்தலாம்
மிதமின்றி நீங்கள் மதுவருந்தியிருந்தால்
விளையாட்டு
காண்பவர்களை மகிழ்விக்கும்
ஏணியில் ஏறவும் முடியாது
பாம்பின் தலையோ பள்ளத்தில் விழுங்கும்
காலி அட்டைகளை எரித்துப்
புகைப் பிடிப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா
புது வருட நாட்காட்டியை
எரிப்பது போலொரு
தற்கொலையின் ருசி மிகுந்தது
அதுவென்கிறார்கள்.

திணையிலி

யாமத்தில் நானெழுதும் பாடல்
மலர்களில் வெளுத்திருக்க
காலையில் கறுக்கும் அதன்
தொடர் வினோதம்
வளர்ந்து பரந்திருந்த இருளுடலைப் பரிகசிக்கிறது.
‘அறத்தில் கோர்த்த வார்த்தைகளால்
அலங்கரித்த உடலுக்கு அற்பமனம்’
என்றொரு வாக்கியமெழுதிக் கடலிலிட்டேன்
அலைக்கழித்து அலைக்கழித்தென்னையது
மணிமேகலையின் வீட்டு வாயிலில் தள்ளிவிட்டது    
வேப்பம் பூவுக்கொரு வெண்பா பாட வருமாறு
காளமேகத்தை அழைக்கும் எனது பால்யம்
பொருட்பாலில் தயிர் கடையும் மத்தாகிப்போனதை கூகையொன்று
நள்ளிரவுக்குச் சொல்கிறது
நெடுநேரம் கூர்ந்தால்
கண்நோவு வருமெனச் சொல்லியும்
கள்ளிப்பூவைப் பார்த்திருக்கிறது
புத்தகத்திலிருந்து நழுவிய அந்த
மயிலிறகின் ஒற்றை விழி
பூமிக்கு பூமி என்ற சொல்லே
புளித்த உவமையாயிருக்கும் அவலத்தை
ஒரு கலயம் கள்ளிடம் கேட்டுவரச்சென்ற
பறவைக்காலி எறும்புகள் இன்னும் திரும்பவில்லை
செம்பருத்திப்பூ வண்ணத்தில்
இசையைப் புனைந்து முற்றத்திற்குக் கொண்டுவரும் கொத்தன் நான்
பழங்கோயில் தூணில்
நடன நிலையில் உறைந்திருந்த
பெண்ணொருத்தியை இழுத்துக்கொண்டு ஊரைவிட்டு   ஓடிவிட்டேன்
கால்கழுவப் பாயும் வெள்ளத்தில்
குவார்ட்டரைக் கலந்து அடித்து
நகரப் பேருந்து நிலையத்தின்
கழிவறை விட்டு அகாலத்தில் வெளியேறும்
என் கலங்கிய முகத்தின் முன்பு கொடுநதியாய் குழைந்தபடி
இரும்புக் குழம்பும் சிமென்ட் குழம்பும்
திசை திசை ஓடியகல்கிறது
ஐந்தரையடி உயரத்திலிருக்கும்
எனது வீட்டின் கூரையை உரசியபடி
தாழ்ந்து வருகின்றன மின்கம்பிகள்
வீட்டை இன்னுங் கொஞ்சம்
மண்ணுக்குள் இறக்கவேண்டும்.

வைகறையும் காலையும்

‘காற்றில் வண்ணங்கள் சிதறும் பறவைகள்’ என்றெழுதியவன் சற்றே நிதானித்து
‘காற்றினூடே செவிகளில் வண்ணங்கள் நிகழ்த்தும் பறவைகள்’என விரித்தான்
‘வைகறை இளங்காற்றின் மென்குளிரை மலர்களில் வரையும் பறவைகள் இன்குரல்’
என மாற்றியபோது சிறு நிறைவுற்றான்
‘பட்சிகள் குரலில் கண்ணாடிப் பார்க்கிறது காற்று
வகிடெடுத்துக் கொள்கிறது வைகறை’
இது இன்னும் நன்றாகவும் கிளுகிளுப்பாகவும் இருக்கிறது
‘வாகன ஒலிகள் எந்திர கூடங்களின் ஒலிகளுக்கு எதிர்திசையில் நிகழும்
குருவிகள் குரல் தொல்லுலகின் தொடக்க வானத்தில்
ஆதிமுதல் அதிகாலையை நெஞ்சிழுத்து நெய்கிறது’
குற்றமில்லை என்றாலும் இது போதவில்லை
எழுதியதின்மேல் தாறுமாறாகப் பேனாவால் கிறுக்கிவிட்டு
அறையிலிருந்து வெறுமையாய் வெளியேறினான்
மூடிய காகிதத்தில்
மூண்டிருக்கும் கோடுகளில்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer