மக்கள் கலை இலக்கிய விழா - 2020

நிகழ்வுப்பதிவு: ப்ரவீன் குமார்
நிழல்படங்கள்: தனபால்

பகிரு

இந்த வருட களரி - தொல்கலைகள் மேம்பாட்டு மையம் நடத்திய விருது விழா மற்றெந்த வருடங்களைக் காட்டிலும் சிறப்பாக அமைந்தது. சீரிய எழுத்துச்செயல்பாட்டுக்கான ராஜம்கிருஷ்ணன் நினைவு விருதை புதுப்புனல் சிறுபத்திரிக்கை ஆசிரியர் ரவிச்சந்திரனும், நவீன இலக்கியத்தில் சிறுகதைக்குப் பங்களிப்பு செய்தமைக்காக கு.அழகிரிசாமி நினைவு விருதை சு.வேணு கோபாலும், நுண்கலைகளுக்கான ஓவியர் கே.எம்.கோபால் விருதை ஓவியர் கிருஷ்ணமூர்த்திச் சார்பில் ஓவியர் ஜெயராமும் பெற்றுக்கொண்டார்கள். விழாவில் விருது வாங்கியவர்களில் மிக மூத்த கலைஞர் திரு.சாமிநாதன் அவர்களுக்கு எண்பது வயதிற்கு மேலிருக்கும். கொங்கு மண்டலத்தில் அறுபது வருடங்களுக்கு மேல் கூத்தாடியவர். ஜமாவில் இடை வேடதாரியாகத் துவங்கி, கூத்து வாத்தியாராகி, பிறகு அவரது ஜமாவிலிருந்த கலைஞர்கள் வளர்ந்து வந்து கூத்து வாத்தியார்களாகி, வேர் பிடித்து நிற்கிறார்கள். இப்படிக் கூத்துக்கலைக்குப் பெரிய பங்காற்றியவர். இரண்டு நபர்கள் அவர் தோள்பிடித்து அழைத்து மேடைக்கு வந்து, விருதை வாங்க வைத்து அழைத்துச் சென்றனர். விருது பெற்றோரில் மிகக் குறைந்த வயதுடைய கலைஞருக்கு வயது 12 - 13 இருக்கும். மிருதங்கக் கலைஞர் இளவரசன். விருதைப் பெற்றுக்கொண்டதும் மிருதங்கம் அவர் வாசித்துக் காட்டச் சொல்லப்பட்டார். அதுவரை மேடைக்கருகில் வாசித்துக் கொண்டிருந்த மூத்த கலைஞரின் வாசிப்பிற்கும் இவர் வாசித்ததற்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் சிறப்பாக இருந்தது. ஒரு சரத்துப் பூவைப் போல அவ்வளவு கோர்வையாக, நேர்த்தியாக. விருதுகள் அளிக்கப்பட்டபின் இறுதியாக, நெல்லடிக்கும் களத்தில் தான் நம் உணவு விளைகிறது. இதே நெல்லடிக்கும் களத்தில் தான் நம் கலையும், உணர்வும் விளைகிறது என்று பொருத்தமாகச் சொல்லி முடித்தார் அறிவிப்பாளர்.

--

அமரர் சடையன் வாத்தியார் நினைவு விருது சாமிநாதன் கூத்துக்கலைஞர்

நிகழ்வு நடந்து கொண்டிருக்கும்போது, மூத்த எழுத்தாளர்கள் பேசியவை, தொகுப்பாளர் விருதுகளை, படைப்பாளிகளை, நிகழ்த்துக் கலைஞர்கள் பற்றி அறிமுகம் செய்துகொண்டிருந்தவை, அனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாலும், மனதில் ஒரு பகுதி மிகக் கவனமாக மேடைக்கருகில் நிகழ்வு தொகுப்பிற்குப் பொருத்தமாகப் பின்னணி இசை வாசித்துக் கொண்டிருந்த கலைஞர்களையே கவனித்துக் கொண்டிருந்திருக்கிறது. முகவீணை, மத்தாளம், பெட்டி என்றழைக்கப்படுகிற ஆர்மோனியம் பிரதானமாக வாசிக்கப்பட்டன. விருதுபெற்ற நிகழ்த்துக் கலைஞர்கள் அவ்வப்போது கூத்தில் பாடப்படும் விருத்தங்கள், தருக்களைப் பாடும் படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். முகவீணை வாசிப்பவரின் கன்னப் புடைப்பு, மத்தாளக்காரர் தலையைச் சற்றே சுழித்து உதட்டு மட்டியை கடித்துக்கொண்டு அடித்தது, ஆர்மோனியம் வாசிப்பவர் இருவருக்கும் நடுவில் அமர்ந்தபடி அவர்களை ஒருங்கிணைப்பது போல வாசித்ததும் (இசையை எப்போதும் முதலில் துவங்குபவர் முகவீணைக் கலைஞரேயாயினும்) கவனித்துக்கொண்டேயிருந்தேன். அவர்கள் அந்தக் கணத்துக்குள் மூழ்கியவர்களாகவே இருந்தார்கள். விழாவிலிருந்து சுற்றத்திலிருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டு பிறர் வந்து பேசும் போதும் பதில் சொல்ல அவர்கள் வேறு ஒரு உலகிலிருந்து மீண்டு வந்து பதில் சொல்லிவிட்டு மீண்டு அவ்வுலகில் மூழ்கியது போலவே இருந்தது. அவர்களுக்குள்ளே கூட மிகக் குறைவாகவே பேசிக் கொண்டும், அவ்வப்போது சககலைஞர்கள் செய்யும் திடீர் மெருகூட்டல்களை, கண்களால் அங்கீகரித்துக் கொண்டனர். அவர்கள் வாசிப்பில் அவ்வப்போது வந்த தமிழ் சினிமாப்பாடல்கள் என்ன என்ன என்பதைத் தொகுத்துப் பார்த்தேன். அவற்றுள் மிகச்சிறப்பான சில: “உனக்காக எல்லாம் உனக்காக”, “நீரோடும் வைகையிலே”, பூஜைக்கு வந்த மலரே வா, “ஏறுமயிலேறி விளையாடும் முகம் ஒன்று”, “கட்டிக்கிட முன்ன நம்ம ஒத்திகைய பாக்கணும்டி” இவையெல்லாம் தொகுப்பாளர் விட்ட சின்னச் சின்ன இடைவெளிகளில் கிடைத்த சந்தர்பங்களிலெல்லாம் வாசிக்கப்பட்டவை பெரும்பாலும் நான்கைந்து வரிகள் தான் வாசிக்க அவகாசமிருந்தன.

--

எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன் நினைவு விருது புதுப்புனல் ஆசிரியர் ரவிச்சந்திரன்

நிகழ்வில் தனிப்பட்ட முறையில் எனக்குக் கிடைத்த நல்ல சந்தர்ப்பம் என்பது மரப்பாவைகள் செய்யும் கலைஞர், அந்தப் பிராந்தியத்திலேயே இருக்கக் கூடிய ஒரே ஒரு சிற்பியான திரு.மாணிக்கம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்ததுதான். எழுபது வயதைத் தாண்டியவர். அன்றைக்கு நிகழ்த்தவிருந்த ஆரவல்லி சண்டை மரப்பாவைக் கூத்திற்காக வைக்கப்பட்டிருந்த பாவைகளைப் பார்த்து அவை தெலுங்கு நாட்டின், அல்லது தெலுங்கு பேசக்கூடிய பணக்கார வீட்டு பெண்களின் சாயலில் இருக்கின்றன என்று எண்ணிக்கொண்டிருந்தேன். முகத்தில், நாசி நுனியில் உதட்டு மேட்டில் ஒரு சுடர் விடும் ஐஸ்வர்யம், கன்னக் கதுப்புகளில் இருந்த மகிழ்ச்சிக் களை, சிரிக்கும் கண்கள் இவற்றைக் கண்டு இப்படி நான் பாவித்திருந்தேன். இந்த அனுமானம் சரிதானா அல்லது என் மனப்பதிவுகளால் அப்படித் தோன்றுகிறதா என்பதை எப்படி உறுதிப்படுத்திக் கொள்வது என்றிருந்தேன்.

ஓவியர் கே.எம்.கோபால் நினைவு விருது ஓவியர் கிருஷ்ணமூர்த்தி சார்பாக ஓவியர் ஜெயராம்

ஏதோ என் நன்நிமித்தம். அந்தப் பொம்மைகளைச் செதுக்கிய சிற்பியையே சந்திக்க வாய்த்துவிட்டது. அவர் துறை பற்றிய எந்த அறிவும் இல்லாவிட்டாலும் அவரிடம் பேசுவது, அவரை அறிந்து கொள்ள முயல்வது எனக்கு முக்கியமாகப்பட்டது. மிகச் சொற்ப வார்த்தைகளில் பதில் சொல்லி வந்தார். ஆனால் விருப்பமில்லாமல் பேசியது போலவும் தெரியவில்லை. இறுதியில் அவர் என் வெகுளித்தனமான கேள்விகளால் ஆர்வமாகிப் பேசினார். தமிழகத்தின் நிகழ்த்து கலைகளின் காலகட்டங்களை ஒளியைக்கொண்டு தீப்பந்தம், பெட்ரோமாக்ஸ் லைட், பல்பு என்று வகுத்தோம் என்றால், இவர் பெட்ரோமாக்ஸ் காலகட்டத்தைச் சேர்ந்தவர். தீப்பந்தங்கள் கொண்டு நடத்தப்பட்ட கூத்துகளை இவர் சிறுவயதில் கண்டிருக்கிறார். இவர் ஓவியராக, கோவில்களுக்கு வண்ணம் அடிப்பவராக, மர, சிமிண்ட் சிலைகள் வடிப்பவராக, சாமி ஊர்வலங்களுக்குப் பயன்படும் சாமி வாகனங்கள் செய்து  தருபவராக, மரப்பாவை செய்பவராகக் கிட்டத்தட்ட பதிமூன்று கம்பனிகளில் வேலை பார்த்த அனுபவம் சிறுவயதில். மரப்பாவை கூத்துக்களில், வீதி நாடகங்களில் அந்தந்த காட்சிகளுக்கு ஏற்ற பின்னணி ஓவியங்களை வரைந்து காட்சிப்படுத்தும் போக்கு உருவாகும்போது அதற்கு முன்னோடியாக இருந்திருக்கிறார்.

கு.அழகிரிசாமி நினைவு இலக்கிய விருது  சு.வேணுகோபால்

பொதுவாக ஒரு நாடக கம்பனி என்பது, 75 விதமான மரப்பாவைகளைக் கொண்டிருக்கவேண்டும். ராஜா, மந்திரி, போன்ற பொதுவான கதாப்பாத்திரங்களுக்கு அவற்றின் உருவத்திற்கு ஏற்றபடி ஒரே பொம்மைகளையே மாற்றி மாற்றி உபயோகப்படுத்திக்கொள்வார்கள். ஆனால் அப்படி மாற்றத்தகாத இரண்டு பாவைகள் ராமனும் சீதையும். “ஏன் ஐயா அப்படி?” என்று கேட்டேன். பகவான் பொம்மைய வேற கூத்துக்கு ஆடும்போது கோமாளி கவுச்சியாப் பேசுவான், அவச்சொல் பேசுவாங்க அதுக்கெல்லாம் எடம் கொடுத்துடக் கூடாதுன்னு அந்த ரெண்டு பொம்மைகள மட்டும் எப்பவுமே தனியா எடுத்து வச்சிடனும்னு ஒரு வழக்கம்” என்றார். தொடர்ந்து இப்போதெல்லாம் அந்த வழக்கத்தை விடுத்து, மாற்றி உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள் என்றார். ராமனும் லட்சுமணனும் பரதச் சத்ருகனனும் சீதையும் என ஐவரும் தோன்றும் காட்சியில், பொம்மையாட்டிக் கொண்டிருப்பவர்கள் பாவைகளைக் காட்சி இறுதியில் ஒரே ஸ்திதியில் ஒரே நேரத்தில் கச்சிதமாக அமரச் செய்வார்கள். அந்தக் காட்சியே பார்க்க பரவசமாக இருக்கும். ஆனால் இன்று அப்படி நேர்த்தியாகப் பொம்மையசைக்கும் கலைஞர்கள் யாவரும் அமரர்களாகி மேலே போய்விட்டார்கள். இன்று அப்படிப்பட்ட திறமைக்காரர்கள் இல்லை என்று வருத்தப்பட்டார்.

--

மரபு வழிபட்ட கூத்து நிகழ்த்துவோர் அமரர் கீரை பாப்பம்பாடி குப்புசாமி வாத்தியார் நினைவு விருது பெறுபவர் அரியலூர் மணி

மரப்பாவைகள் செய்முறையை அவரிடம் கேட்டு குறித்து வைத்துக்கொண்டேன். அந்தச் சாக்கில் அவரோடு இன்னும் கொஞ்சம் பேசிக்கொண்டிருக்கலாமே என்று.அத்துறையில் எந்த தெளிவோ அனுபவமோ இல்லாவிட்டாலும் ஒரு கலைஞன் இயங்கும் விதத்தை, மனக்கிடக்கை அறிந்துகொள்வது அணுக்கமான அனுபவமாகிறது. இசை சினிமா ஓவியம் பற்றியெல்லாம் அஞ்சாறு தெரிந்து வைத்துக்கொண்டா பாவித்துக் கொண்டிருக்கிறோம்?. மரப்பாவைகள் எடை குறைந்த மரங்களான செந்தணுக்கு மரத்திலும், கல்யாண முருங்கைமரத்திலும் செய்யப்படுவன. இந்த முகங்கள் செய்யப்படுவதற்கு எந்தக் குறிப்பிட்ட இலக்கணமும் இல்லை. முகத்தோற்றத்திற்கான ஆதர்சமென்பது பிறவற்றிலிருந்து பெறாமல் சுயமாக மனக்கிடங்கிலிருந்து பெறப்படுபவையே. கதாப்பாத்திரத்தின் குணவார்ப்பிற்கேற்றபடி முகங்களை அமைப்பர். இப்படியவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது இடைமறித்து அதுவரை என்னையரித்துக் கொண்டிருந்த அந்தக் கேள்வியைக் கேட்டேவிட்டேன். தான் எந்த மனிதரையும் முன்மாதிரியாகக் கொண்டு இந்தப் பாவைகளைச் செய்யவில்லையென்றும், தெலுங்கு சாயல் வந்ததுக்கு எந்த ஞாயமும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். சரி எனக்கு அப்படித் தோன்றியிருக்கிறது போலும்.

--

அதிகாலை 5.30 மணிக்கு மயில் ராவணன் கூத்தில் இந்தக் காட்சி வந்தது. மயில் ராவணனின் கோட்டைக்குள் நுழைந்து இராம லட்சுமணரை மீட்க வந்துகொண்டிருக்கிறான் அனுமன். அவனைத் தடுத்து நிறுத்தும் அக்னி கோட்டை காவல்காரன் மச்ச கற்பகனை சந்திக்கிறான். அவன் அனுமனின் புத்திரன். கடல் கடந்து சென்றவொரு பயணத்தின்போது வழியில் அனுமனுக்கு வியர்க்கிறது வானிலிருந்து வியர்வையைக் கையால் வழித்துக் கடலில் வீசுகிறான். விழுந்த வியர்வைத் துளிகள் ஒரு மச்சத்தின் கர்ப்பத்துள் நுழைந்து மச்சக கற்பகனென்னும் மகவாகப் பிறக்கிறது. தாய் மீன் குழந்தைக்குத் தாத்தா வாயுவின் பெருமைகளை, தந்தையின் வீரதீர பிரதாபங்களை, வலிமையைச் சொல்லிச் சொல்லி வளர்க்கிறாள். மகன் தான் காணவே காணாத தந்தையின் வீரத்தைப் பற்றிய பெருமிதத்தோடு வளர்கிறான். எதிரில் நிற்கும் தந்தை அவனுக்கு வெறும் குரங்காகத் தெரிகிறான். இருவரும் உரையாடிக் கண்டுணர்ந்து கொள்கிறார்கள். தந்தையை வீழ்த்த துணிந்த நின்ற புத்ரன், உண்மையை உணர்ந்து தந்தையின் நெஞ்சைக் காட்டி குத்து வாங்கி விழத்துணிகிறான். அனுமன் அவனைத் தாண்டி ராம லட்சுமணரை மீட்டு விபிஷ்ணனிடம் சேர்ப்பிக்கிறான். கதை முடிந்தது.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer