பெர்டோல்ட் ப்ரக்ட் - தேர்ந்தெடுத்த கவிதைகள்
கவிதைக்கு மோசமான காலம்

தமிழில்: பிரம்மராஜன்

பகிரு

ஆம், நான் அறிவேன்:
சந்தோஷமான மனிதனே
விரும்பப்படுகிறான்.
அவன் குரல் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது.
அவன் முகம் வசீகரமாயிருக்கிறது.

முற்றத்தில் உள்ள குன்றிய மரம்
மண் ஊட்டமில்லாதது என்பதைக் காட்டுகிறது
இருப்பினும்
அதைக் கடந்து செல்பவர்கள்
அது குன்றிப்போனதற்காய் நிந்திக்கின்றனர்
மேலும் அது தகுதியானதுதான்.

சவுண்ட் கடல் பகுதியில்
பச்சைநிறப் படகுகளும்
நடனமிடும் பாய்மரங்களும்
பார்க்கப்படாமல் போகின்றன
அவை எல்லாவற்றிலும்
நான் மீனவர்களின் கிழிந்த வலைகளையே பார்க்கிறேன்.
நாற்பது வயதான ஒரு கிராமத்துப் பெண் கூனி நடப்பதை மட்டுமே
நான் ஏன் பதிவு செய்கிறேன்.
இளம்பெண்களின் மார்பகங்கள்
எப்பொழுதும் போல் கதகதப்பாய் இருக்கின்றன.

என் கவிதையில் எதுகை மோனை
ஏறத்தாழ துடுக்குத்தனமாய்த் தோன்றும்.

எனக்குள்ளாய் போட்டியிடுகின்றன
பூக்கள் மலரும் ஆப்பிள் மரத்தைப் பார்ப்பதில் உள்ள சந்தோஷம்.
வீட்டுக்கு வர்ணமடிப்பவனின் உரைகளால் உண்டான பயங்கரம்.
ஆனால் இரண்டாவதுதான்
என்னை என் மேஜைக்குத் துரத்துகிறது.

From Poems written between 1938 and 1941

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer