தமிழில் எண்பதுகளில் அறிமுகமான அமைப்பு இயல், பின்னமைப்பியல் கோட்பாட்டுப் பின்புலத்தில் தொன்னூறுகளின் உலகமயமாதலுடன் அறிமுகமான ஒரு கோட்பாடே பின்நவீனத்துவம் மற்றும் பின்காலனியம்.
இவ்விரண்டு சொற்களும் தமிழில் புதுக் கலைச்சொற்களாகப் பயிலப்படுவதற்கு முன்பாக ஒருவித ‘பேன்ஸி’ சொற்களாக மாறி, இன்று தேய் வழக்கான ஒருவகைக் குறிச்சொற்களாக (Buzz word) ஆளப்படுகின்றன.
அதிலும் குறிப்பாக இரண்டும் எந்தப் பறவைகள் வேண்டுமானாலும் எச்சமிட்டுச் செல்லும் தலைவர்கள் சிலைபோல ஆகி விட்டது. ஓர் இலக்கியவாதியின் அனைத்துக் குறைபாடுகளும் பின்நவீனம் என்று ஒதுக்கி ஓரங்கட்டும் நிலையே உள்ளது.
இயலாமையை, இயலமுடியாததை எல்லாம்பின்நவீனம், பின்காலனியத்தில் ஏற்றி, கடந்து சென்று தவிர்ப்பதான சூழல் உள்ளது. கவிதை புரியவில்லையா?
பின்நவீனத்துவம், பின்காலனியம்தான் காரணமென்று இவ்விரண்டு வார்த்தைகளை மட்டுமே அறிந்தவர்களின் கூற்று உலா வருகிறது. இதன் உச்சம் என்னவென்றால், புரியாமல் எழுதுவது அனைத்தும் பின்நவீனம் என்று கூறும் அளவிற்கு இது ஒரு சர்வரோக நிவாரணியாக மாறியுள்ளது.
இத்தனைக்கும் பின்நவீனம், பின்காலனியம் குறித்து நிறைய நூல்களும், கட்டுரைகளும் வந்து, உரையாடல்களும் நடந்துள்ளன. ஆனாலும், தமிழின் பழகிய மனம் ஆழமாக எதையும் உள்வாங்காமல், பனிச்சறுக்கில் விளையாடும் பிள்ளைகளைப்போல, மேலாகச் சறுக்கிச் செல்வதே சுகம் என்ற மனநிலைக்கு ஆழ்ந்துவிட்டது.
ஒருவகையில் அறிவு ஆழப்படாமல், மேற்பரப்பில் மிதக்கும் ஒன்றாக மாறிவிட்டது என்று அறிவித்த பின்நவீன நிலை தமிழ்ச் சூழலில் நிலவுகிறதோ? அதற்கிணங்க, தமிழ் அறிவுப் பரப்பு மேற்பரப்பில் மிதக்கும் ஒன்றாக மாறிவிட்டது என்பதே யதார்த்தம்.
அலைகுடிகள், நிலைகுடிகளாகி இன்று வலைகுடிகளாக மாறிவிட்டனர். எதையும் ஆழமாகவும், ஆழ்ந்தும் புரிந்துகொள்ளும் மனநிலை முற்றிலுமாக, தன்-மையவாத, தன்-முனைப்புவாத மனநிலையாக, நுகர்வை அடிப்படையாகக் கொண்டதாக மாறியுள்ளது.
அதன் விளைவு தமிழ் இலக்கியம் நுகர்விற்கானதாக மாறியுள்ளது. மந்தைகளின் மேய்ச்சல் நிலங்களாக உள்ளதே தவிரப் புதியன விளைவதற்கான விளைச்சல் நிலங்களாக இல்லை.
நுகர்வே அனுபவமாக, உயர் ரசனையாகக் கட்டப்பட்டுள்ளது. இலக்கியப் படைப்பு, பண்டங்களைப்போல நுகரப்படுகிறது. அந்நுகர்ச்சிக்கான ரசனைகளை உருவாக்குவதாகத் திறனாய்வு, விமர்சன, மதிப்புரை இத்யாதிகள் உருவாக்கப்படுகின்றன.
காத்திரமான இலக்கியங்களை உருவாக்கிய தமிழ் சூழலில், நீர்த்த, நுகர்வு சார்ந்த, ரசனைவாத தின்னிப்பண்டார இலக்கியங்கள் பெருகிவிட்டன. வெறும் விதந்தோதல், படைப்பாளிகள் ஒருவர் முதுகை ஒருவர் சொறிந்து சுகம் காணுதல் என்பதாக மாறிவிட்டது. மெய்யிலக்கியம் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி நலம் விசாரிக்கும் ‘மொய்யிலக்கியமாக’ மாறிவிட்டது.
இதில் சாதி சார்ந்த, மதம் சார்ந்த, எழுத்தாளன் நட்புச் சார்ந்த குழுக்களாக, கூட்டங்களாக வாசகத்திரள் உருவாக்கம் நிகழ்ந்துள்ளது. விரல்நுனி ‘விக்கி’ விபரங்களே எழுத்தாளன், வாசகனின் அறிவுப்பரப்பாக, ஆச்சர்யம் தரும் படைப்புத் திறனாக மாறியுள்ளது.
இல்லாவிட்டால் பாலியல் சீண்டல்கள், மிகைப்பாலியல் ஃபேண்டஸிகள், குடும்பச் செண்டிமெண்ட், வரலாற்றுப் புனைகதைகள், மிகைஉணர்ச்சி காதல் நாடகங்கள் ஆகியவை இலக்கியங்களாக உள்ளன. தமிழில் இலக்கியப் பீடாதிபதிகளும், மடாதிபதிகளும் அவர்களது பல்லக்குத் தூக்கிகளும் நிறைவதற்கு இதுவே காரணம்.
தமிழ் இலக்கியச் சூழலின் இந்த நீர்த்த நிலை பல ரசனைவாத இலக்கியப் பீடங்களையும், மடங் களையும் உருவாக்கும் அரசியல் களமாக மாறிவிட்டது.
இலக்கியப் பீடங்கள் என்பவை ஒவ்வொரு காலத்தின் ஆதிக்கம் வகிக்கும் சொல்லாடல் புலத்தால் கட்டப்படுவதே. சான்றாக, தமிழ் இலக்கிய வரலாற்றை உற்று நோக்கினால் இந்தப் பீடங்களுக்கும், ஆதிக்கம் வகிக்கும் சொல்லாடல் புலத்திற்கும் உள்ள உறவு, மையமாகி சொல்லாடலாக மாறுவதையும் அறியலாம்.
சங்ககாலம் எனப்படும் பாட்டும் தொகையும் எழுதப்பட்ட காலத்தில் இயற்கையும், திணைகுடி வாழ்வும் ஆதிக்கம் வகிக்கும் மைய சொல்லாடல் புலமாக அமைந்தது. அதன்பின் வந்த கீழ்கணக்குக் காலங்களில் அறநெறி மைய இலக்கியச் சொல்லாடலாக மாறியது.
நாடுகளாக மாறிய நிலைகுடி வாழ்விற்கு அரசுருவாக்கத்திற்கான அறநெறிகள் தோன்றி அறிவுறுத்துவதாகவும், பௌத்த சமணச் சமய அறநெறி ஆதிக்கம் வகிக்கும் சொல்லாடல் புலமாகவும் அமைந்தன.
அடுத்துவந்த வேந்தர்கள் காலங்களில் குடிமக்கள் உருவாக்கத்திற்கான சமய வாழ்வியல் சார்ந்த காப்பியங்கள் இலக்கிய மையச் சொல்லாடல் புலமாக அமைந்தது. அதற்குப்பின் வந்த பேரரசு உருவாக்கத்திற்குத்தக இறை சார்ந்த பக்திநெறி இலக்கிய மையச்சொல்லாடல் புலமாக அமைந்தது.
பேரரசுகள் சிதைந்த பின்பு வந்த அந்நியர்களின் ஆதிக்கத்திற்கு ஏற்ப இலக்கிய மையச் சொல்லாடல் சிதைவுற்ற நிலையில் பல்வேறு இலக்கிய வகைமைகள் தோன்றின. சித்தர்களின் தனித்துவமான ஆதிக்க எதிர்ப்பு, நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் போன்றன மைய இலக்கியச் சொல்லாடலாக மாறியது.
18-19 ஆம் நூற்றாண்டில் உருவான காலனியத்திற்கு எதிரான தேசிய எழுச்சிக் காலத்தில் தேசியம் என்ற கருத்தியலே இலக்கியப்பீடத்தை தீர்மானிப்பதாக மாறியது. அதன்பின் வந்த திராவிட இயக்க எழுச்சியின்போது, எதிர்முரணாக, திராவிட எதிர்ப்பு இலக்கியம் என்பதே பீடமாக மாறியது.
அதாவது தேசிய எழுச்சி என்ற கருத்தியல் உயர்சாதி மற்றும் பார்ப்பனிய ஆதிக்க கருத்தியலாக இருந்ததால் அன்றைய இலக்கியப்பீடத்தைத் தீர்மானிப்பதாக மாறியது. ஆனால், திராவிட இலக்கியம் என்பது பார்ப்பனிய எதிர்ப்பில் உருவானது என்பதால், தேசிய எழுச்சி இலக்கியம் சுத்த இலக்கியம், கலைமுதல்வாதம் என்கிற கலை அடிப்படைவாத ஆதிக்கமாக மாறியது.
திராவிட இலக்கியம் அதிகாரத்துடன் உறவுகொண்டிருந்ததால், ஆதிக்கம் வகித்த பார்ப்பனியச் சொல்லாடல் புலம் சிறுபத்திரிக்கை, மற்றும் சுத்த இலக்கியம் என்று அரசு அதிகார எதிர்ப்பு (இலக்கியத்துவத்தைத் தீர்மானிக்கும்) இலக்கியமாக இருந்தது.
தமிழில் காலனிய ஆங்கிலக் கல்வி அறிமுகப்படுத்திய முதலாளிய ‘நவீனத்துவம்’ திராவிட அரசியலாகவும், இலக்கியத்தில் திராவிட எதிர்ப்பு பார்ப்பனியக் கலைமுதல்வாதமாகவும் வெளிப்பட்டது.
அதிகாரம் அரசுடன் உறவு கொண்டது என்றால், ஆதிக்கம் சமூகக் கருத்தியலுடன் உறவு கொண்டது. இலக்கியம் எப்பொழுதும் ஆதிக்கச் சொல்லாடலுடன் உறவு கொண்டு பீடமாக மாறுகிறது. அதனால்தான் ஆதிக்க இலக்கியப்பீடம் அதிகாரத்தைவிட ஆபத்துஆனதாக மாறுகிறது.
அது மக்களை இணக்கத் தன்னிலைகளாக அதாவது அரசதிகாரத்தை ஏற்கும் தன்னிலைகளாக மாற்றுகிறது. இலக்கியத்தின் இந்த முக்கியப்பணியைச் சமூகத் தொடர்ச்சியை மறுப்பதே ரசனைவாத இலக்கியக் கோட்பாடு.
எண்பதுகள் வரை தமிழ் இலக்கியத்தில் கலை முதல்வாதமே இலக்கியப்பீடமாக ஆதிக்கம் செய்துவந்தது. அது ஒருவகை மேட்டிமைவாத இலக்கிய மாகவும், இலக்கியத்தன்மை என்பது மேட்டிமை ரசனை சார்ந்ததாகவும் அமைந்தது.
இந்த மேட்டிமை வாதத்திற்கு எதிராக மக்கள் இலக்கியம் என்ற பரந்துபட்ட மக்கள் ரசனை என்பதாக மக்கள் இலக்கியம் என்ற ஓர் எதிர்ப்பிலக்கியம் உருவானது. இதனை பார்ப்பனிய மேட்டிமைவாதம், திராவிட வெகுசனவாதம் மற்றும் மாரக்சிய, இடதுசாரி சமூகவாதம் என்ற மூன்று போக்குகளாக வகைப்படுத்தலாம்.
எண்பதுகளில் இடதுசாரி சிந்தனையும், அமைப் பியலும், தமிழீழ எழுச்சியும் இணைந்து பார்ப்பனியக் கலை கலைக்காகவே, இடதுசாரி, திராவிடக்கலை மக்களுக்காகவே என்ற பிரிவினையைத் தகர்த்து, கலையின் சமூக விளைவை முதன்மைப்படுத்தியது.
இச்சூழலில், அமைப்பியலும், பின்னமைப்பியலும் தமிழ் இலக்கியப்பீட அரசியலை மேட்டிமையிலிருந்து விடுவித்து ஒருவகையில் ஜனநாயகப்படுத்தியது எனலாம். நாட்டார் மரபுகள் துவங்கி விளிம்பில் இருந்த பலவும் மையச் சொல்லாடலுக்கு வந்தன.
இச்சூழல் இலக்கியப்பீட அரசியல் என்ற மையத்தைத் தகர்த்தது. அதாவது இலக்கியத்தை உணர்வுப் புலத்திலிருந்து அறிவுப்புலத்திற்கு நகர்த்தியது. இதன் பொருள் இக்கோட்பாடுகள் உணர்வை மறுப்பதல்ல. அதனை அறிவுத்தளத்திலான உடலியக்கமாக மாற்றுபவை.
மீண்டும் இந்த மையம் வலதுசாரிகள் எழுச்சியுடன் 2000- த்திற்குப் பிறகு வலுவாகக் கட்டமைக்கப்படுகிறது. இச்சூழலில்தான் பின்நவீன மற்றும் பின் காலனியக் கோட்பாடுகள் இலக்கியப் பீடத்தகர்ப்பு என்ற அரசியலை மையம் X விளிம்பு என்ற முரணில், விளிம்பை முன்னெடுத்தது.
அதனால், இலக்கியப் பீடங்கள் இக்கோட்பாடுகளை நீர்த்துப் போகச் செய்யும் வண்ணம் அதனை ஒரு பேஃஷனபுல் குறிச்சொல்லாக fashionable buzzword பயன்படுத்தி, அதனை ஒரு தேய்வழக்காக மாற்றிவிட்டனர். இது ஒருவகையில் பண்பாட்டுத் தளத்திலான குறியியல் சார்ந்த வர்க்கப் போராட்டமே.
இதன்விளைவு பின்நவீனம், பின்காலனியம் ஆகியவை குறித்த சரியான புரிதலற்ற ஒரு நிலையே பரவலானது. அதனைக் குறித்து வந்த நூல்கள் எழுத்துகள் பல்கலைக் கழகங்களில் பயன்பட்ட அளவிற்குக் கலை அடிப்படைவாத சிற்றிதழ்சார் தமிழ் இலக்கிய உலகில் பயன்படுத்தப்படவில்லை.
காரணம், கலை முதன்மைவாதம் என்றபெயரில் இங்கு அறிவார்ந்த கலைசார்ந்த பார்வையைவிட, ரசனை சார்ந்த உணர்வு சார்ந்த பார்வையே முதன்மையானதாக உள்ளது.
கலையின் முக்கியத்துவத்தை வெறும் அழகியல் சார்ந்ததாக முன்வைத்த இப்பார்வை, மதங்களைப்போலக் கலை அடிப்படைவாதமாகமாறி, அறிவு சார்ந்ததான கோட்பாட்டுப் பார்வைகளை விலக்கியது.
அதன் விளைவே அமைப்பியல் துவங்கி பின்காலனியம் வரை விலக்கப்பட்ட பார்வை உருவாகியது. கோட்பாடுகளைவிடப் படைப்பிலக்கியங்கள் அதிகம் வாசிப்பாளரிடம் உணர்வாக்கத்தை உருவாக்கி, கருத்தியலைச் சமூக வயப்படுத்திப் பண்பாட்டைக் கட்டமைப்பதாக உள்ளது என்பதால்தான், படைப்பாளிகளின் சமூகப் பொறுப்பும், கோட்பாடு சார்ந்த அறிவும் அவசியம் என்பதை வலியுறுத்த வேண்டியள்ளது.
தொழில் வளர்ச்சியடைந்த நவீனத்துவத் திட்டம் (modernist project) முழுமையடைந்த மேற்குலகில் பின்நவீனத்துவம் (post modernism), பின்நவீனம் (post modernity), பின்நவீனநிலை (post modern) என்பது சாத்தியம்.
வளர்ச்சியடையாத, காலனியத்தால் வீக்கம் அடைந்த, காலனிய எஜமானர்களால் திணிக்கப்பட்ட நவீனத்தை மேற்பரப்பில் ஏற்று மனதளவில் நிலவுடமை சார்ந்த பழைய மதிப்பீடுகளில் உள்ள இந்திய ஒன்றிய, குறிப்பாகத் தமிழகத்தில் பின் காலனிய சிந்தனையே பின்நவீனத்தின் குரலாக இடப்படுத்தக் கூடியது.
காரணம், கோட்பாட்டுச் சட்டகங் களில் பின்நவீனம், பின்காலனியம் இரண்டுமே பின்அமைப்பியல் சிந்தனைகள் உருவாக்கிய அடிப் படைகளோடு, திறனாய்வுச் சிந்தனையில், கருத்தாக்கங்களின் மூலம் உருவானவையே.
இதன் பொருள் இரண்டும் ஒன்றல்ல, ஆனாலும், இரண்டும் இரண்டு சமூகப்பின்னணிகள் குறித்த திறனாய்வுச் சிந்தனையை அளிப்பதே. நவீனம் முற்றுப்பெறாத, சுயவளர்ச்சியற்ற காலனிய சமூகங்களில் பின்நவீனத்துவம் பின்காலனியமாகவே தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. (இது எனது தனிப்பட்ட கருத்து என்பதால், இது விரிவாக விவரிக்கப்பட வேண்டும். ஆனால், அது மற்றொரு கட்டுரைக்கான திட்டம் என்பதால், இங்கு விவரிக்கவில்லை.)
அவ்வகையில் நம் சமூகத்திற்கு அதிகப் பொருத்தப்பாடு கொண்டது பின்காலனியமே என்பதால், அதன் அடிப்படையான காலனிய தன்னிலை உருவாக்கம் குறித்தும், அதில்இருந்து விடுபடுவது குறித்தும் சிந்திக்க முனைகிறது இக்கட்டுரை.
அது எப்படிக் கட்டுரை சிந்திக்கும், கட்டுரை எழுதுபவர்தானே சிந்திப்பார் என்ற கேள்வி பின் நவீன, பின்காலனிய சிந்தனையில் பொருளற்ற ஒன்று. ஏனென்றால், அகம் X புறம், உள் X வெளி, உள்ளடக்கம் X உருவம் போன்ற இருமைப் பிளவுகளை இக்கோட்பாடுகள் ஏற்பதில்லை.
மைய மற்ற ஒன்றிற்கு இத்தகைய இருமைப்பிளவுகள் சாத்தியமில்லை. மையங்களே இவற்றைத் தீர்மானிக் கின்றன. எழுத்தும், இலக்கியமும் ஆசிரியன், பிரதி, வாசகன் என்கிற ஓர் அமைப்பில் திரளும் (Assemblage) ஒன்று என்பதால், கட்டுரை தன்போக்கில் மொழியாக ஒழுங்கமைகிறது. எழுதுபவரின் உள்நோக்கம், மொழியின் சாத்தியப்பாட்டில், எழுத்தாக வெளிப் படுகிறது என்பதைக் கூறித் தொடரலாம்.
‘இந்தியப்பொதுபுத்தி’ எனும்பின் காலனிய தன்னிலை.
நமது பொதுபுத்தியில் படிந்துள்ள சில கேள்விகளுடன் இதனைத் துவங்கலாம்....
இத்தகைய பொதுபுத்தியில் பதிந்த நமது மன சாட்சியை விசாரணை செய்யும் ஒரு கோட்பாட்டுச் சட்டகமே பின்காலனியம். மேற்கண்ட கேள்விகளில் பொதிந்துள்ள எண்ணங்கள் உருவாகக் காரணமாக அமைந்த காலனியத்தன்னிலையைக் கேள்வி கேட்கும் ஒரு சிந்திக்கும் முறையே பின்காலனியம்.
அல்லது ‘பின்காலனியநோக்குதல்’ (postcolonial gaze) உருவாக்கும் தன்னிலை மீதான திறனாய்வாக (விமர்சனமாக) வெளிப்படுவதே இக்கேள்விகள். காலனியத்திலிருந்து விடுதலையடைந்த இந்தியாபோன்ற ஒன்றியநாடுகளில் உள்ள நமது தன்னிலை உருவாக்கத்தை, நமது சிந்தனையில் அமிழ்ந்துள்ள காலனிய அழுகலை, அதன் விளைவால் உருவான நமது அடிமை மனநிலையை, அடிமையாக இருப்பதில் காணும் சுகத்தைக் கட்டுடைத்து நம்மை, நமக்கு உணர்த்த முனையும் ஒரு கோட்பாடே பின்காலனியம். காட்டுமிராண்டித்தனமான, அநாகரீகமான, போரும், வன்முறையும், மூடநம்பிக்கையும் கொண்டதாக காலனிய எஜமானர்களால், காலனிய அறிவுஜீவிகளால் வரலாறாக நமக்கு சொல்லப்பட்டதைப் புறந்தள்ளி அதன் உள்ளே மறைக்கப் பட்ட நமக்கான வரலாற்றை எழுதுவதற்கான ஒரு கருவியே புதுகாலனியம்.
அல்ஜீரிய விடுதலைப் போராளியும் புரட்சிகர அரசியல் கோட்பாட்டுச் செயல்பாட்டாளருமான பிரான்ஸ்ஃபனான், பின்காலனியச் சிந்தனைக்கான கோட்பாட்டு அடிப்படைகளைத் தந்தவர்.
பிரான்ஸின் காலனியாக இருந்த அல்ஜீரியாவின் விடுதலைக்காகப் போராடிய உளவியல் மருத்துவரான அவர், காலனியத்தின் மிகப்பெரும் சிக்கலான காலனிய உளவியலை ஆய்வு செய்து, காலனியத் தன்னிலை எப்படிக் காலனிய நாடுகளின் மனிதர்களைத் தங்களது காலனிய தன்னிலைக்கு ஏற்பக் கட்டமைத்துள்ளது என்பதை வெளிப்படுத்தினார்.
மேற்கண்ட அனைத்துக்கேள்விகளும் காலனிய நாடுகளின் ஆழ்மனதில் காலனியத்தை ஏற்கும் தன்னிலையாக, தன்னை அடிமையாக உணராத, எஜமான விசுவாசத் தன்னிலைகளாக இருப்பதை அம்பலப்படுத்தினார். அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தன்னிலைகளாகக் காலனியத் தன்னிலைகள் அமைவுற்றிருப்பதை வெளிப்படுத்தினார்.
அவரைத் தொடர்ந்து “கீழ்த்திசைவியம்” (ஓரியண்டலிஸம்) மூலம் பின்காலனியச் சிந்தனை முறையைக் கோட்பாட்டாக்கம் செய்த எட்வர்ட்சைத், விளிம்புநிலை சிந்தனையை உருவாக்கிய ஆய்வாளர்களில் ஒருவரான காய்த்ரி சக்ரவர்த்தி ஸ்பிவக், பின்காலனியம் உருவாக்கிய கலப்பினம் பற்றிய கோட்பாட்டை முன்மொழிந்த ஹோமிபாபா எனப் பலஆய்வாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கோட்பாடே பின்காலனியம்.
காலனியம் எழுதிச் சென்ற,விட்டுச்சென்ற தன்னிலையிலிருந்து தன்னைத் துண்டித்துக்கொண்டு காலனிய எதிர்ப்பு மற்றும் உலகில் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட விளிம்புநிலைத் தன்னிலையாக ஒருங்கிணையும் ஒருபுரட்சிகரசுயதன்னிலை பற்றியக் கோட்பாடே பின்காலனியக்கோட்பாடு.
17-ஆம்நூற்றாண்டு முதலாளிய புரட்சிகளுக்கும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் பிறகு உருவானதே காலனியம். அதற்கு முந்தைய சமூகங்கள் மதம் சார்ந்தும், நிலவுடமை உற்பத்தி முறையிலும் அமைந்த ஓர் உலகப்பார்வையைக் கொண்டிருந்தது.
புதிய ‘பகுத்தறிவு’ என்கிற அறிதல்முறை கட்டமைக்கப் பட்டு மொத்த உலகமும் அதன் அடிப்படையில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. அதுவரையிலான உயிர்கள், இயற்கை, அனைத்தும் முதலாளியக் கருத்தியலில், பகுத்தறிவுத் தர்க்கத்தில் மாற்றி அமைக்கப்பட்டன.
பல்வேறு குழுவாக, நிறமாக,இனமாக, மதமாக, மொழியாக அறியப்பட்டஉயிர்கள் உலகளாவிய ‘மனிதர்’ என்ற கருத்தாக்கத்தின் வழியாகப் பொதுமைப்படுத்தப்பட்டன. ஒரு வகையில் கடவுள் இறப்பும், கடவுளின் இடத்தை மனிதனும் மாற்றீடு செய்ததும் நடந்தன.
உலகம் என்ற ஒரு புவிப்பரப்பும், அதன் வரைபடங்களும், அதற்கான அறிவும் கண்டுபிடிக்கப்பட்டு கதைக்கப்பட்டது.
அதுவரையிலான பல இனங்களாக, குலங்களாக, குடிகளாக, நாடுகளாக இருந்த மக்கள் தேசங்களாக மாற்றப்பட்டனர். காலனியம் ஓர் உலகளாவிய வரலாற்றைக் கட்டமைத்தது. அனைத்துக் குடிகளின் வரலாறும், தேசங்களின் வரலாறாக மாற்றப்பட்டது.
இன்றைய உலகாக நாம் அறிவது 17ஆம் நூற்றாண்டு முதலாளியம் கட்டமைத்த உலகமே. அதுவரையில் மதங்களின் அதிகாரத்திலும், கடவுளின் ஆதிக்கத்திலும், நாட்டுப்புற நம்பிக்கைகளிலும் செயல்பட்ட மனித அறிவானது தேசியம், மனிதன், பகுத்தறிவு ஆகியவற்றால் மாற்றீடு செய்யப்பட்டது.
அதுவரையிலான இயற்கை சார்ந்த மனித உடல்கள், முதலாளிய உற்பத்திமுறைக்கான செயற்கை உடல்களாக மாற்றமடைந்தன. மனிதனின் ஆன்மீகம் என்று மதங்களின் கதையாடல்கள் முழுக்க, உற்பத்தி, உழைப்பு என்று மாறியது.
மனிதனின் ஆக்கபூர்வ உயிர்ப்பு என்பது, அந்நியமாக்கப்பட்ட உழைப்பாகமாறியது. மனித சக்தி உழைப்பு சக்தியாக மாறியது.
உழைப்பு சக்தி சந்தைகளால், முதலாளிய உற்பத்தி முறைகளால், அதன் உபரியால் தீர்மானிக்கப்பட்டது. இப்படியாக, இவ்வுலகம் உருவானதன் பின்னணியில் காலனியத்தின் அறிவுருவாக்கம் உள்ளது.
காலனியம் என்பது எஜமானர்கள் X அடிமைகள் என்ற இருமைப்பிளவில் கட்டமைக்கப்பட்ட ஓர் உலகப்பார்வை. காலனியத்தின் உச்சமாக உருவான வெவ்வேறு எஜமானர்களின் சந்தைப் போட்டிக்காக நடத்தப்பட்ட முதல், இரண்டாம் உலக யுத்தங்கள் காலனியத்தை முடிவிற்கு கொண்டுவந்தன. சுதந்திர தேசங்கள் என்ற பெயரில் உலகச் சந்தையானது மறுசீரமைப்புச் செய்யப்பட்டு உருவானதே புதுக் காலனியம்.
புதுகாலனியம் என்பது ஒரு நாடு அரசியலில் விடுதலை பெற்றாலும், தொடர்ந்து பொருளியல், சிந்தனை, கருத்தியலில் எஜமான தேசங்களால் ஆதிக்கம் செய்யப்படுவதே.
இப்புதுக்காலனியம் சர்வதேசம் என்கிற அமைப் பிற்குள் கொண்டுவரப்பட்டு, பல சர்வதேச அமைப்புகளால் (U.N.. World Bank. IMF. NATTO etc...) ஆளப் படுவதாக மாறியது. இப்புதுக்காலனியச் சமூகங்களின் எஜமானர்களுக்கு எதிரான மற்றும், காலனியத்தால் உருவாக்கப்பட்ட கலப்பினமான மனிதர்களின் தன்னிலையாக்கம் குறித்த ஒரு புதிய அறிவுருவாக்கக் கோட்பாடே பின்காலனியம்.
காலனியத்திலிருந்து விடுதலை அடைந்தாலும், காலனியத்தின் எச்சத்தை அகற்றி, காலனிய நீக்கத்துடன் எதிர்ப்புணர்வுடன் தனது சுதேசிய அடை யாளத்தையும், சர்வதேசிய அடையாளத்தையும் கலந்த ஒரு நாடாக இருக்கும் சமூகங்களின் தன்னுணர்வு சார்ந்த ஒரு கோட்பாட்டுத் திறனாய்வு சிந்தனையாக உருவானதே பின் காலனியம்.
‘பின்’ என்பது ‘ POST ’ என்ற ஆங்கிலச்சொல்லைத் தமிழில் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல். இது
1. காலரீதியாக காலனியத்திற்கு பிந்திய என்ற பொருளிலும்,
2. கருத்தியல் ரீதியாக காலனியத்தை அகற்றிவிட்டு ஒரு புதிய தன்னடையாளத்தைப் பதிலீடு மற்றும் பதிவேற்றம் (post) செய்தல் என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது.
இதன்பொருள், காலனியத்தினை மறுப்பதும், காலனியத்தால் உருவான காலனிய தன்னிலைகளைக் கலைப்பதும், தகர்ப்பமைப்புச் செய்வதும் என்பதே. ஆக, காலனியம் என்பது, மேற்கத்தியம் தன்னை எஜமானனாக உருவாக்க, ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் - அமெரிக்க நாடுகளை அடிமைகளாகக் கட்டமைக்க, அதன் மூலவளங்களைச் சுரண்டிக் கொழிக்க உருவான ஒரு அதிகார அமைப்பு.
இந்த அதிகார அமைப்பின் ஒரு ஆதிக்க வடிவமாக உள்ள காலனியத் தன்னிலையைத் தகர்ப்பமைப்புச் செய்து புதிய தன்னிலைகளைக் கட்டமைப்பதற்கான முயற்சியே பின்காலனியக் கோட்பாடு.
பின்காலனியக் கோட்பாடு காலனியம் உரு வாக்கிய முரணான நாம் X பிறர் (Self X Other) என்ற அடிப்படைக் கட்டமைப்பைத் தகர்க்கிறது. இதன் அடிப்படையில் மேற்கு X கிழக்கு, நாகரீகம் X காட்டுமிராண்டி உள்ளிட்ட முரண்கள் கட்டமைக்கப் படுவதை வெளிப்படுத்திக் காட்டுகிறது.
இதன் வழியாகவே காலனியத் ‘தானுமை’ அல்லது சுயம் என்பது கட்டமைக்கப்படுகிறது. அதன் ஆதிக்கம் காலனியத் தன்னிலையாகக் காலனிய நாட்டு மக்களிடம் கட்டப்பட்டு அவர்கள் ‘பிறன்மை’யாக ஆக்கப்படுகிறார்கள் என்கிறது.
இம்மனநிலைதான் மேலே கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்குமான உளவியல் சார்ந்த பதிலாக அமைகிறது. இதன் வழியாக ‘வெள்ளைப் புராணம்’ (white mythology) உருவாக்கப்படுகிறது.
அப்புராணங்களில் பெருங்கதையாடல்களாக தேசியம், சர்வதேசியம் என்கிற கருத்தாக்கங்கள் அதற்கான கற்பிதப் புவியியல்கள் உருவாக்கப் படுகின்றன. இவ்வுலகம் ஒரு சர்வதேசிய அமைப்பாக கருதப்படுவதுடன், அதன் அடிப்படையில் உலகளாவிய கட்டப் பஞ்சாயத்து அமைப்புகளும் உருவாக்கப்படுகின்றன.
இதன் தத்துவ விளைவாக அகிலத்துவவாதம் (Universalism) என்பது உருவாகிறது. அகிலத்துவ வாதத்தில் மேலாண்மையான ஒரு மாதிரியாக இருப்பது ஐரோப்பிய, அமெரிக்க வெள்ளையினம். உலகையே வெள்ளையின மாதிரியில் உருவாக்க முனைவதே இதன் அடிப்படை.
இதன் பின்னிருந்து இயக்குவது ஐரோப்பிய மையவாதம் (Euro-Centrism) என்பதை அம்பலப்படுத்துகிறது பின்காலனியம். அடிப்படையில் ஐரோப்பிய மையவாதத்தைத் தகர்ப்பதே பின்காலனியக் கோட்பாடு.
இது ஐரோப்பா உருவாக்கிய தான், பிறர் என்கிற தன்னிலைக்கட்டமைவைத் தகர்த்து, புதியதொரு விடுதலையான, சுதந்திரமான, அடிமைத்தனமற்ற தன்னிலையை உருவாக்க முனைகிறது.
இப்பொழுது இக்கட்டுரை ஒரு எச்சரிக்கையுடன் முடிகிறது. அதாவது, தமிழ் இலக்கியச் சூழலில் பின்நவீனத்துவம், பின்காலனியம் ஆகியவை இரண்டு தகவமைப்புகளைப் பெற்றுள்ளது. (‘தகவமைப்பு’ என்ற சொல். இவை சூழலுக்குத் தகத் தன்னை அமைத்துக்கொண்டன என்ற பொருளில்தான்.)
ஒன்று முன்நவீன மற்றும் முன் காலனிய சிந்தனைகள், பண்பாடுகள் என்கிற பழமைவாதத்தைச் சுய தேசிய அடையாளமாக முன்வைக்கும் ‘தேசபக்தி’ என்கிற பெருங்கதையாடல் போக்கு அதனை வலதுசாரி பின்நவீன, பின்காலனியப் போக்கு எனக் குறிக்கலாம்.
பிம்ப உடைப்பு, பழமை எதிர்ப்பு, புனிதக் கவிழ்ப்பு என்ற பெயரில் அனைத்தையும் அடித்து நொறுக்கி கட்டுடைப்போம் என்ற பெயரில் அறமற்றதாக வெளிப்படும் ‘கட்டற்ற சுதந்திரம்’ என்கிற பெருங்கதையாடல் போக்கு, அதனை இடதுசாரி பின்நவீன, பின்காலனியப் போக்கு எனக் குறிக்கலாம்.
பின்நவீன, பின்காலனியக் கோட்பாட்டில் பழமை, புதுமை என்ற எதிர்மைகள் கிடையாது. அவற்றை அதிகாரமும், ஆதிக்கமுமே தீர்மானிக்கிறது.
எனவே மேற்கண்ட இரண்டு போக்குகளும் எச்சரிக்கையுடன் நிராகரிக்கப்பட வேண்டியவை. இவை அதிகார அரசியலுடன், சமூக ஆதிக்கத்துடன் உறவு கொண்டவை.
இவ்விரண்டு போக்குகளுமே பின்நவீன மற்றும் பின்காலனியக் கோட்பாட்டின் அறம்சார் விடுதலைக்கு எதிரானது.
கலை இலக்கியம் என்பதை பின்நவீனம் மற்றும் பின்காலனியம் ஒரு சமூகச் செயல்பாடாக, உயிர்கள், இயற்கை, சமூகம் என்கிற மூன்று புலங்களின் அறம் சார்ந்த, அறிவுச் செயல்பாடாக முன்வைக்கிறது.
அச்செயல்பாடே அழகியலாக இலக்கியத் தன்மை கொண்டதாக இருக்கும் என்பதே நமக்கான பின்நவீனம் மற்றும் பின்காலனியம்.