பிங்க் நிறக் குளியல்

யாழன் ஆதி

பகிரு

வழிந்தோடிக்கொண்டிருக்கிற தண்ணீரில் அவன் அழுதுக்கொண்டிருப்பது அவளுக்குத் தெரியாது. பலவித கலவையான மருந்துகளின் வாசனை அடிக்கிற அந்தக் குளியலறை அவனுக்குப் புதிது. எத்தனை காட்டருவிகளில் ஆறுகளில் நீர்நிலைகளில் அவன் குளித்திருப்பான். அவன் உடலிலிருந்து ஒழுகிய நிணநீரும் ரத்தமும் அங்கங்கே புண்களிலிருந்து பிய்ந்து ஒட்டிய மேல்தோலும் அவனை மிகுந்த அருவெறுப்புக்குள்ளானவாக  ஆக்கியிருந்தன.

இந்த மருத்துவமனை அவனுக்கு ஒன்றும் புதிதல்ல. ரத்தம் கொடுக்க எத்தனையோ முறை வந்திருக்கிறான். பிறரைச் சேர்க்க, நோயுற்றவர்களைப் பார்க்க அவன் வந்திருக்கிறான். அப்போதெல்லாம் அவன் நடையில் ஒரு மிடுக்கு வந்து கூடவே நடக்கும். நுழைவாயில் வந்து வலதுபக்கம் திரும்பி கொஞ்ச தூரம் நடந்தால் முதல் மாடியில் ஒரு புத்தகக் கடை இருக்கும். கிறிஸ்தவப் புத்தகங்கள் இருக்கும். வாழ்த்து அட்டைகள், அழகழகான குறிப்பேடுகள் எல்லாம் கிடைக்கும். எப்போது போனாலும் அங்கே சென்று வித்தியாசமாக இருக்கும் குறிப்பேடு ஒன்றினை வாங்கிக்கொள்வான். திரும்பிப் பேருந்தில் வீட்டிற்கு வரும்போதே அதில் ஐந்து கவிதை களாவது எழுதியிருப்பான்.

நேற்று அந்த மருத்துவமனைக்கு வரும்போதே ஓரடி தள்ளிதான் அவனின் அம்மாவே நின்றிருந் தார்கள். வெளியே சொல்ல முடியாத ஒருவகைத் துர்நாற்றம் அவனிடத்திலிருந்து வந்துகொண்டிருந்தது. அந்த இரவின் நடுப்பகுதியில் அங்கிருந்த மரங்களிலிருந்த பறவைகள் தரையில் எச்சங்களைப் போட்டுக்கொண்டிருந்தன. அந்தத் தரையெங்கும் அங்கங்கே எச்சங்கள். அவற்றைப் பார்த்தவனுக்கு அவன் உடல் நினைவில் வந்தது. தரைமுழுதும் இருக்கும் பறவையின் எச்சங்களைப் போல உடல் முழுக்கப் புண்கள். இந்த உடல் தரையா? எத்தனைப் பறவைகள் என்மீது எச்சம் தெளித்தன. பறவைகளின் எச்சங்களைத் துடைப்பதுபோல் இந்தப் புண்களைத் துடைக்க முடியாதா? நிற்க முடியவில்லை. அந்தத்தரையில் அப்படியே உட்கார்ந்துகொண்டான். படுத்துக்கொண்டால் நல்லாயிருக்கும் எனத் தோன்றியது. இப்போதே தரையோடு தன்னை ஒப்புக்கொடுத்ததாகவே உணர்ந்தான்.

வெளிநோயாளிப் பிரிவுக்கு அவள்தான் ஓடினாள்.

“அட்மிஷன் கெடைக்குமா, நான் ஆம்பூர் ஜிஎச்ல நர்ஸ்”

“என்ன ஆச்சி?  பேஷண்ட்  சாப்டாரா?”

“சிஸ்டர் அவர் வாய்வழியா சாப்டறார் இல்ல,ஒண்ணும் பயப்படாதீங்க, காலையில சார்ட் போட்டுட்டு வாங்க, இப்ப கௌம்புங்க”.

தவிப்பின் வார்த்தைகளை அவள் விரல்வழிகளில் வெளிப்படுத்தினாள். ‘எத்தனை பேஷண்ட பாத்திருக்கிறேன், எவ்வளவு ஊசிகளை இந்தக் கையாலபோட்டிருப்பேன்’. மனசுக்குள் ஓடியதுஅவளுக்கு. இன்னுமொரு முறை கேட்டுப் பார்க்கலாம் என்ற  தயக்கத்தோடு  நின்றிருக்கையில்,

“கீதா வா நாளக்கே வரலாம், நான் அட்ஜஸ் பண்ணிக்கிறேன், நீயே அந்த ஊசியப் போடு, அது நல்லாத்தான் கேக்குது”, என்று சொல்லி மீண்டும் அந்தப் பெரிய மருத்துவமனையின் கட்டிடங்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையே ஊர்ந்து ஆம்பூர் வந்து சேர்ந்தார்கள். இரவு ஒரு மணிக்குமேல் ஆகியிருந்தது.

“காலைல ஆறு மணிக்கே வந்துரு நசீர்”, என்று டிரைவரிடம் சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றார்கள். அவன் அப்படியே அவன் படுக்கையில் குப்புற படுத்துக்கொண்டான். படுத்துக்கொண்டான் என்றால் முழுஉடலும் படுக்கையில் ஆழ்ந்து இல்லை. கால் முட்டிகளும் முழங்கைகளும் படுக் கையில் ஊன்ற அப்படியே உடலைத் தூக்கிக்கொண்டு நெற்றியைத் தலையணையில் வைத்துக் கண்களை மூடிக்கொண்டான்.

கீதா புடவையை மாற்றிக்கொள்ளவில்லை. அப்படியே அவன் அருகில் கொஞ்ச நேரம் உட்கார்ந் தாள். அவள் மூச்சு வாங்கும் சப்தம் கேட்டது. ‘ஊதுலை’ என்று சங்க இலக்கியத்தில் படித்திருக் கிறான். அந்த மூச்சு அதை நினைவுப்படுத்துகிறது. தெருவில் கலாய் பூச வருபவர்கள் லாரி டியூபில் செய்த காற்று ஊதும் கருவியிலிருந்து வரும் காற்றின் சப்தம்போல அவள் மூச்சு வாங்கிக்கொண்டிருந்தாள்.

“கீதா போய்ப் படுத்துக்க” என்றதும் ‘ம்’ என்ற சப்தம் மூச்சுக்காற்றுடன் கலந்து மென்மையாக மாறிஇருந்தது. அதில் இழையோடிய துன்பத்தின் வரிகளையெல்லாம் இங்கே சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. ஆனால் அதை அவன் உட்கொண்டவ னாகவே இருந்தான்.

இரவின் துணிகள் மரங்களில் அசைந்து கொண்டிருந்தது. இரவு எல்லாவற்றையும் தாங்கக் கூடிய ஒரு வலிமையான பொருள். அதன் வேர்களில் உறுதியான பிடிப்புகள் இருக்கவேண்டும். இரவைப் போல ஆறுதலான எதுவுமே இல்லை. இரவு மிகவும் தூய்மையானது. அதன் ஆழத்தில் கிடக்கும் எத்தனையோ பாறைகள் வலிகளால் ஆனதாக இருக்கலாம். எல்லாருடைய வலியையும் துன்பத்தை யும் அமைதியாக வாங்கிக்கொள்ளும் ஒரு பெரும் பாத்திரமாகவே  இரவு  இருக்கிறது.

கீதா தலையைத் தொட்டுப்பார்த்தாள். மெல்ல வருடினாள். அதிலிருந்து கசிந்த ஈரம் அவன் மூளை யின் நியுரான்கள் வழியே பாய்ந்து உடலின் நரம்புகளில் ஊடுருவியது. அவள் கைகள்மீது தன் கைகளை வைத்துக்கொள்ள எத்தனித்தான். முடிய வில்லை. கருப்பான அவளின் கைகள் இருளைப் போலவே  ஆறுதலாக  இருந்தன  அவனுக்கு.

எத்தனை இரவுகளில் அவன் இந்த அறையில் தனித்து விழித்திருந்திருக்கிறான். எத்தனை கனவுகள். அந்த அறையின் நட்பு அவனுக்கு அலாதியானது. எல்லோரும் தூங்கிவிட்ட பின்வருவான். அவனுக் காகத் தன் கதவுகளைத் திறந்துவிட்டுக் காத்திருக்கும் அது. கீதா வந்தபின்பு எல்லாமே மாறிவிட்டது. அறையின் தோற்றம் அதன் பழமையான அழுக்கு எல்லாவற்றையும் மாற்றியிருந்தாள். வாழ்க்கை அப் படித்தானே இருக்கிறது. குறைந்த காலத்திலேயே அது எத்தனையோ மாற்றங்களை நிகழ்த்தி ஒரு விளையாட்டை விளையாடும் சின்னப்பிள்ளையைப் போல் தத்தி தத்தி வருகிறது.

வழக்கமான காகம் அன்றைக்கும் கத்தியது. யாரோ எழுதியது ‘அந்தக் காகம் கத்தும் போதெல்லாம் அவனுக்கு நினைவுக்கு வரும். நீங்கள் நேற்று பார்த்த காகத்தை இன்றும் பார்க்கலாகுமோ?’ வரிகள் சரியாக இல்லை ஆனால் இதுதான். இந்தக் காகம் வீட்டு மூலையில் இருக்கும் மாமரத்திலிருந்து கத்தும். அது கத்தினால் எழுந்துவிடுவான். ஐந்து மணி ஆகியிருந்தது. அவள் எழுந்து தலையைச் சரிசெய்துகொண்டிருந்தாள்.

நசீருக்கு போன் செய்தாள். “வறேன்கா” என்ற அவன் குரல் இவனுக்கும் கேட்டது. வீட்டின் பின் பக்கம் உள்ள கழிவறைக்குச் சென்றுவிட்டு மீண்டும் குளியலறைக்குச் சென்றான். பற்களைத் துலக்கி துப்பிவிட்டு வாயைக் கொப்பளித்தான். மேலே பறவைகள் பறக்க ஆரம்பித்தன. இரவு இப்போது சாம்பல் நிறத்தில் ஆகியிருந்தது. வயிற்றில் இருக் கும் புண்களைத் தொட்டுப்பார்த்தான். ஒவ்வொன் றும் ஓர் அங்குலம் விட்டம். இரத்தம் பூத்திருந் தன. கை வைத்தால் எரிந்தது. முகத்தைச் சோப்புப் போட்டுக் கழுவிக்கொண்டு கால்மேல் தண்ணீரை ஊற்றிக்கொண்டு வெளியே வந்தான். கார் தயாராக இருந்தது. பிரான்சிஸ் வர்றதா சொன்னான் வருவானா என்று மனதுக்குள் எண்ணியிருந்தான்.

அறையில் கீதா தயாராக இருந்தாள். “ஏங்க குளிச்சிட்டுப் போய்ட்டா நல்லாயிருக்கும்”

அவன் மறுத்தான். “குளிச்சா புண்ணு புதுசா ஆயிடுதுமா, என்னால தாங்க முடியல”. “இல்ல, ஸ்மல் வந்துடுச்சன்னா” என்று இழுத்தாள்.

“அதான் ஆஸ்பெட்டலுக்குத்தான் போறோமில்ல” என்று அவன் கத்த வீட்டை விட்டு வெளி யேறிக் கிளம்பினார்கள். அந்த மாவட்டத்திலே பெரிய மருத்துவமனை அது. எந்தப் பக்கம் போனால் எந்தப் பக்கம் வரும் என்பதெல்லாம் அங்கேயே குப்பைக் கொட்டினால்தான் தெரியும். யாராவது துணைக்கிருந்தால் தான்  அங்கே  வேலையாகும்.

“வழியிலே சாப்டுக்கலாம். பள்ளிகொண்டா டோல்கேட்டுக்குப் பக்கத்துல நிக்கச் சொல்லுங்க”.

அவன் காரில் உட்கார்ந்திருக்க நசீர் வாங்கி வந்தான். இட்டிலியை ஊட்டினாள் கீதா.

“டீ வேணும்”

“ம்”

“நீயும் சாப்பிடு”. அவன் சாப்பிட்டபிறகு அவள் பொங்கல் வாங்கிக்கொண்டாள். நசீர் உள்ளேயே உட்கார்ந்து சாப்பிட்டான்.

மருத்துவமனையில் ஓ.பி. சீட் போட்டார்கள். பத்து மணி இருக்கும். 17 ம் நெம்பர் டெர்மட்டாலஜி. ஒலி பெருக்கியில் இவன் பெயர் அழைத்தார்கள். அவனுக்கு ஒரே சிரிப்பு. மனதிற்குள் சிரித்துக் கொண்டான். எத்தனை ஒலிபெருக்கிகள் இவன் பெயரை எத்தனை ஹெர்ட்ஸ்களில் உச்சரித்திருக்கும். இங்கு ஈனஸ்ரத்தில் ஒரு பெண்குரலில் அப்பெயர் ஒலிக்கிறது.

“மேல இருக்கும் துணிய எடுங்க” மலையாள வாசம் அடிக்கும் தமிழ்.

“அச்சச்சோ, என்ன இவ்ளோ இருக்கு! இப்பத்தான் வர்றீங்க?”

“இல்ல நேத்தே வந்தோம்”

“நேத்தா? அது ரொம்பச் சீக்கிரமோ!”

“கீழ ஏதாவது இருக்கா”,

“இல்லங்க இடுப்புக்குக் கீழே புண் எதுவும் இல்ல”.

“இல்லல்ல  காட்டுங்க”.

இடுப்பில் கட்டியிருந்த பொடிவண்ண வேட்டியை அவிழ்த்துக் காட்டினான். எல்லா இடங்களிலும் தன் மருத்துவக் கண்களால் பார்த்தார் அந்தப் பெண் மருத்துவர்.

“அவுட் பேஷண்ட்களையெல்லாம், பிஜி ஸ்டுடண்ட்ஸ்தான் பாப்பாங்க” என்று மெதுவாகச் சொன்னாள் கீதா. மேலும் நான்கு மருத்துவ மாணவிகள் வந்துவிட்டனர். எச்.ஓ.டி.யும் வந்து சேர, அவன் தான்  அன்றைக்கு  அவர்களின்  ‘சப்ஜெக்ட்’.

ஆங்கிலத்தில் பேசிக்கொண்டார்கள். இவனுக்கும் விளங்கியது.

“உடனே அட்மிஷன் ஆகணும். ஒன்றரை லட்சம் ஆகும்” என்றார் ஒரு மருத்துவர்.

“சரி” என்றான்.

வார்டுக்கு அழைத்துச் சென்றார்கள்.

“இங்க பெட்டே இல்லை. அவர் வேற ரொம்பமோசமா இருக்காரு. ஏந்தான் இப்படிப் பண்றாங் களோ” என்று சலித்துக்கொண்டது ஒரு செவிலியின் குரல்.

“ஸ்பெசல் வார்டு குடுங்க” என்றாள் கீதா, ஒருமருத்துவ மாணவி, ‘ஜெனரல் வார்டுலதான் எக்ஸ் பீரியன்ஸுடு நர்சஸ் இருப்பாங்க போங்க’ என்று ஆலோசனையாகச் சொன்னார்.

இரண்டு படுக்கைகள் உள்ள அறை அது. இன்னொன்றில் நோயாளி யாரும் இல்லாதது நல்ல தாகவேப்பட்டது. ‘நாம் போற வரையிலே இங்க யாரும் வரக்கூடாது’ என்று மெல்ல சிரித்தாள் கீதா.

“அய்யே!”

நோயாளிகளுக்கான படுக்கையை இன்னும் போட வில்லை. புதிய தலையணை, விரிப்பு போர்வை இனிமேல்தான் கொண்டு வருவார்கள். சார்ட் ரெடியான பிறகுதான் எல்லாம் வரும்.

“மணி இப்பவே ரெண்டு ஆயிடுச்சி. இன்னும்யாரும் வர்றவே இல்லை. இதே எங்க ஆஸ்பிட் டலுன்னு வச்சிக்க அவனவன் கேள்வி மேல் கேள்வி கேப்பான், இங்க பாரு இவ்ளோ நேரமாகுது ஒருத்தரும் காணோம்”.

மருந்துகள் வந்தன. படுக்கை புதிதாக மாறியது.

“சிஸ்டர் நீங்க நர்ஸா? சொன்னாங்க. பாத்ரூம் அங்க இருக்கு. குளிக்க வச்சிடுங்க இந்த நோயுக்குக் கிளீனிங்தான் முக்கியம். அப்புறம் செப்டிக்காயிடுச்சினா  அவ்ளோதான்  ரொம்பச்  சீரியஸாயிடும்”.

“நான் பாத்துக்கிறேன்”.

குளுகோஸ் போடுவதற்கான ஸ்டாண்ட் எடுத்து வந்து ஒரு பெண் வைத்தார்.

அவரிடம் சாப்பாடெல்லாம் எப்படி எனக் கேட் டாள் கீதா.

“பேஷண்ட்டுக்கும் பேஷண்ட் அட்டெண்டருக்கும் இங்கேயே குடுப்பாங்க நீங்க ஆர்டர் பண்ணிருங்க அதுக்குத் தனியா பே பண்ணனும்” என்றார், சொல்லிவிட்டு அந்தப் பணியாளருக்கும் சொல்லி யிருப்பார்போல அவரும் வந்தார்.

“வெஜ்ஜா நான் வெஜ்ஜா”

“நான் வெஜ்”

“இன்னைக்கு நைட்டே வருமா”

“ஆமா”

அறை காலியானது. அவனும் கீதாவும் மட்டும் இருந்தார்கள்.

அறையின் அறிமுகம் அவனுக்கு இறுக்கமானதாகவே இருந்தது. ஒரு நோயாளியாக இதுநாள்வரை அவன் ஏற்காத ஒரு பாத்திரத்தை ஏற்பதாகக் கற்பனை செய்தான்.

அறைக்குப் பின்புறம் கொஞ்சம் வெராண்டா மாதிரி காலியிடம். பெரிய ஜன்னல்கள். திறந்திருந்தன. மரங்கள் அடர்ந்து இருந்தன. ஒவ்வொன்றும் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலானவையாக இருந்தன. விருட்சங்கள். ஒன்றிரண்டு மரங்களின் பெயர்கள் அவனுக்குத் தெரிந்திருந்தன. பறவைகளின் எச்சங்கள் கிளைகளிலும் மரங்களுக்கு அடியில் இருக்கும் தரையிலும் வெண்மையாய் இருந்தன.

“டேய்! பறவைகள் எல்லாம் யூரிகோடெலிக் தெரி யுமா? அவை நைட்ரஜனை யூரியாவா மாத்தி எச்சமிடும், அதனால்தான் பறவைகளின் எச்சத்தில் வரும் விதைகள் வீரியமா முளைக்கும்”. அவனுக்குள் கேட்டது அவன் குரல்தான்.

அங்கேயே நின்றுகொண்டு மரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். இரவு வேளை வரும் செவிலியர் தான் மருத்துவர்களின் பார்வையிடலுக்குப் பின் மருத்துவத்தைத் தொடங்குவார்கள் என்பதால் மெதுவாகக் குளிக்கலாம் என்று எண்ணியிருந்தான். பறவைகள் ஒவ்வொன்றாய் மரங்களுக்கு வந்து அண்டிக் கொண்டிருந்தன. அவற்றிற்குப் பழகிய கிளைகள் லாவகமாய் அசைந்து இசைந்தன.

இந்தப் பறவைகளுக்கும் மரங்களுக்குமான உறவுஎன்ன? ஒரு மனிதனுக்கும் அவன் வீட்டுக்கும் உள்ளஉறவா? வீடென்பது என்ன? வீடு என்றால் சொர்க்கம் என்கிறார்களே! ஒரு வேளை மீண்டும் நான் வீட்டிற்குப் போகவில்லை என்றால் எனக்கும் அவ்வீட்டுக்கும் என்ன இருக்கிறது? யாரோடும் யாரும் இல்லையோ. வேறு மரத்திற்கு இந்தப் பறவை மாறாதா? இருப்பதற்குத்தான் வருகிறோம் இல்லாமல் போகிறோம் என்ற நகுலன் நினைவுக்கு வந்தார்.

பொக்கை வாயோடும் மரநாற்காலியோடும் அந்தமனிதர் எப்படித்தான் வாழ்ந்திருப்பார்? வாழ்க்கை யை யார் நடத்திச் செல்கிறார்கள். நேற்று வந்த அம்மா இன்றைக்கு வரவில்லை. அட்மிஷன் போட்டா வர்றேன் என்றார்கள். இதுவரை ஒரு போன் செய்யவில்லை. யாரோடு இருக்கிறோம்.

மாலை நேர நொறுக்காகக் கொஞ்சம் சுண்டலும் பாலும் வந்திருக்கிறது. சாப்பிட்டுக் குளிக்கலாம் என்றாள்.

இளஞ்சூட்டிலிருந்த பாலை வாங்கிக் குடித்தான். தேநீர்தான் அவனுக்குப் பிடித்தது.

கொஞ்சமாக இருளத் தொடங்கியது. மீண்டும் சாம்பல் நிறத்திலிருந்து இரவு கருமைக்கு மாறிக் கொண்டிருந்தது.

“ஏங்க?”

இன்னும் தாமதித்தால் முகத்தால் சுடுவாள். உடைகளைக் கழற்றினான். முதுகில் இரண்டு புண்கள்ஒட்டிக்கொண்டு துணியோடு வந்ததில் வலி. கூடுதலாக ரத்தம் வேறு சொட்டியது. தொப்புளுக்கு மேலே ஒரு புண். இதுதான் கொடுமை. இரண்டு பனியன்களைப் போட்டுக்கொண்டு போவான் சட்டையில் ஒட்டாமல் இருக்க வேண்டும் என்பதற் காக. ஆனால் ஆங்காங்கே திட்டுதிட்டாய் ரத்தம்ஒட்டியிருக்கும். சட்டைகளைச் சிவப்பு சார்ந்தவண்ணங்களில்தான் இப்போது அவன் தேர்ந்தெடுப்பது.

ரத்தத் துளிகளைப் பார்த்ததுமே அவளுக்குக் கோபம் வந்துவிட்டது. அது பொய்க்கோபம். நோயாளியிடம் காட்டும் கண்டிப்பு அது. அதற்குப் பழகிப்போனது அவள் தொழில் தர்மம். ‘பாத்ரூம் போய்க் கழட்டுங்க, இங்கே திரும்ப எப்ப கிளீன் பண்ணுவாங்கன்னு தெரியாது’ என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்த துணியாலான கால் மிதியில் அந்தத் துளிகளைத் துடைத்தாள். தரை ரத்தத்தைப் பார்க்காத அப்பாவிப்போல முகத்தை வைத்துக் கொண்டது.

கதவைத் தள்ளிக்கொண்டு புடவையை ஏற்றி இடுப்பில் செருகிக்கொண்டாள். பின்னாலே அவனும்சென்றான். மஞ்சள் வண்ணத்தில் குளியலறையின் சுவர்கள் எனாமல் வர்ணப்பூச்சால் அடிக்கப் பட்டிருந்தன. எவ்வளவு வெளிச்சமான விளக்கைப் போட்டாலும் பளீரென்று இருப்பதற்கே வாய்ப் பில்லை. அறையின் இடதுபுறம் கதவுக்குப் பின்னால் மேற்கத்திய பாணி கழிப்பிடம் பக்கத்தில் குழாய். அதன் அருகில் பச்சை வண்ணத்தில் ஒரு குவளை. அதன் வலப்பக்கத்தில் வாஷ்பேசின் கண்ணாடியுடன். கண்ணாடியில் சோப்புக்கரைகளும் நீர்க்கரை களும் முகத்தைச் சரியாகப் பார்க்கவிடாமல் செய்தன. இரண்டு குழாய்கள். ஒன்றிலிருந்து சாதாரணத் தண்ணீரும் இன்னொன்றில் வெந்நீரும் வருகிறது.

‘எப்பிடி இருக்கு பாருங்க பாத்ரூம்’, என்றாள். அவன் எதுவும் பேசவில்லை. மேலே எதுவும் போட வில்லை. மெல்லிய காற்று வீசி அவன் உடலில் படும்போது வலி கூடிக்கொண்டிருக்கிறது. இனிமேல் ஊற்றப்போகும் நீர் வேறு கூடுதல் வலியைக் கொடுக்கும். கடந்த நான்கு மாதங்களாக இதுதானே அவன் வலி. என்னென்ன வைத்தியங்கள். அம்மை என்று சொல்லி இரண்டு வாரம் கடத்தினார்கள். எத்தனை ஆலோசனைகள் எத்தனை மருத்துவர்கள்! கடைசியாக வேறுவழியில்லாமல் இங்கு வந்து நிற்கிறான். பறவைகளின் கூச்சல் அதிகமாகிவிட்டது. நான் வந்துவிட்டேன் என்று ஒவ்வொன்றும் யாருக் கோ சொல்கிறது. சில சரிசரி என்று சொல்கிறது. சில இன்றைய பகல் பற்றிய பாடுகளைப் பேசுகிறது. அதிக சப்தம். ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறும் பறவைகளின் இறக்கை படபடக்கும் சப்தம் இவன்  இதயத்துடிப்போடு ஒத்துப்போகிறது.

வெந்நீரையும் தண்ணீரையும் ஒரு பதத்திற்குக் கொண்டு வந்து கால்  மேல்  ஊற்றினாள்.

“சூடு போதுமா”

“போதும்”

கைகளில் கொண்டுவந்த சின்னச் சதுர அட்டைப் பெட்டியைப் பிரித்தாள். அதற்குள் பிளாஸ்டிக் கவரில்இருந்த தூளை, தேயிலைத் தூளைப் போலக் கொட் டினாள். தண்ணீரில் அத்துகள்கள் உள்ளே நீந்திப்பாய்ந்தன. வானத்தில் விடப்படும் சூறைபானங் களைப் போல அவை தண்ணீரின் ஆழம் நோக்கிப் பாய்ந்தன.

தண்ணீரின் ஆழத்தில் அதன் வண்ணம் மெல்ல பிங்க் நிறமாக மாறிக்கொண்டிருந்தது. குவளையை எடுத்து தண்ணீரைக் கலக்கினாள். அது முழுமையாக இளஞ்சிவப்பு நிறத்தை அடைந்தது. இந்த நிறத்தை மாலை நேரத்தில் அவன் வானத்தில் பார்த்திருக்கிறான். அதுவும் பச்சகுப்பம் வளைவில் ரயில்நிலையத்திற்கு எதிரே வேலை முடிந்து வருகையில் மேற்கு வானில் அந்த நிறம்.

யாரோ கலக்குகிறார்கள். நாம் காணவேண்டிய நிறங்களை. அதைத் தீர்மானிக்கக் கூட இந்த வாழ்வில் நமக்கு வாய்ப்பில்லை. நிறங்களைப் பார்த்த பிறகே அதனோடு உடன்பாடு கொள்வதும் மறுப்பதும் என்றான வாழ்க்கை எனத் தன்னில் ஏதோ நினைத்துக்கொண்டிருக்க அவள் ஒரு குவளை நீரை எடுத்து அவன் தலையில் ஊற்றினாள். உலகத்தின் பாவமெல்லாம் ஏதோ இவன்மீதே இருப்பதாக நினைத்திருப்பாளா எனத் தெரியவில்லை. இது போய் விடவேண்டும் என நினைப்பாள்போல. அவ ளின் வேகம் அப்படி இருந்தது. நீர் சடசடத்து அவன் மேல் பாய்ந்தது. நிர்வாணமாய் இருக்கும் அவனின் உடலின்  சகல பாகங்களிலும் அந்நீர் பாய்கிறது.

பவளபவளமாக இருக்கும் புண்களில் பட்டுத் தெறிக்கிறது. தலை, முகம், கழுத்து, மார்பு, வயிறு, முதுகு என எல்லா இடங்களிலும் இருக்கும் புண்களின் மீதும் இரையை விழுங்க ஓடும் பாம்பைப் போல அவள் ஊற்றும் நீர்  ஓடிக்கொண்டிருக்கிறது.

“இதப் பாருங்க. புண்ணையெல்லாம் தேச்சி  எடுத்தாத்தான் நல்லாகுமுன்னு சொல்றாங்க இதையேதான் நானும் சொல்றேன் வலிய பொறுத்துங்கங்க”

கைகளால் எல்லா இடங்களிலும் தேய்க்கிறாள். வலி சுமக்கிறான். உடலில் அப்பழுக்கற்று இருந் தவன். இதுவரை ஆஸ்பத்திரிக்கே வந்ததில்லை என்று சொன்னவன். தன் வாசிப்பின் கர்வத்தால் தனக்கு எல்லாம் தெரியும் என நினைத்தவன், தன் உயர்ந்த குரலால் எத்தனையோ அதிகாரிகளின் கவனத்தைத் திருப்பியவன் மெல்ல அமைதியாக நிற்கிறான்.

உலகத்தின் அழுக்கெல்லாம் அவனிடமிருந்தே அந்தக் குளியலறையிலிருந்து வெளியேறுகிறது. தலை குனிந்திருக்கிறது. சின்ன ஓட்டையின் வழியே அந்தப் பிங்க் நிற நீர் மெதுவாகக் குழாயில் இறங்குவதைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கிறான். முது கில் இருக்கும் புண்களை அவள் தேய்த்துத் தண்ணீர்  ஊற்றிப்  பேசிக்கொண்டே  கழுவுகிறாள்.

“அவங்கெல்லாம் இப்படி ஊத்த மாட்டாங்க. நாம தான் கரெக்டா பாத்துக்கணும்” கீதாவின் அன்பு அவளின்  கைகளில்  இருக்கிறது.

குழாயில் பிங்க்நிற நீர் ஓடிக்கொண்டிருக்கிறது, அதில் அவன் கண்ணீரும் இருக்கிறது.

“அழாதப்பா”

இது ஓடி இந்த மருத்துவமனையில் தரையில் இருக்கும் சிறுகுழாயில் சேர்ந்து பின் பெரும்குழாய்க்கு மாறி இந்த நகரத்தின் பெரும் சாக்கடையில் சங்கமிக்கப் போகிறது. இவனில் தொடங்கிய அந்தப் பிங்க் நிறம் நகரத்தின் சாக்கடையில் சேர்கை யில் அப்பெருநகரமே பிங்க் நிறமாக மாறி விடுமோ என்று அஞ்சினான். ஒரு பிங்க் நிற நகரத்தின் வாழ்க்கை எப்படி இருக்கும். கவிதை ஒன்று உருண்டை வடிவத்தில் உள்ளுக்குள்  உருண்டுக்கொண்டிருந்தது.

பிங்க் நிற நீர் கொஞ்சம் அந்தப் பக்கெட்டில் இருந்தது. கால்களை இவனே கழுவிக்கொண்டான், காலிடுக்குகளில் கையை விட்டு நன்கு தேய்த்தான். உடலில் எல்லாப் புண்களும் வலித்தன. எல்லாப் பறவைகளும் இன்னும் கத்திக்கொண்டே இருந்தன.

மீண்டும் பழைய இடத்திற்கே வந்து துடைத்தான். ஒற்றி எடுத்தான். ஒவ்வொரு புண்ணும் ரத்தக் காசுகள் போலிருந்தன. இந்தப் பறவைகள் எல்லாம் ஒவ்வொரு புண்ணாகக் கொத்திச் சென்றால் என்ன? புண்களே பறவைகளாகிப் பறந்துவிட்டால்? உள்ளுக் குள் மீண்டும் சிரித்துக்கொண்டான்.

“சிஸ்டர்... குளிச்சிட்டாரா” என்று கூப்பிட்டுக் கொண்டு வந்த செவிலியின் தள்ளுவண்டியில் கட்டுத் துணிகள். “ஜிலோநெட் குடுங்க” என்று வாங்கி ஒவ்வொரு புண்ணிலும் ஒட்ட ஆரம்பித்தார். மருந்தின் ஈரம் தோய்ந்த அந்தத் துணி குளிர்ச்சியாக இருந்தது. உடல் முழுக்க ஒட்டப்பட்டது. பெரிய பேண்டேஜ் துணியை எடுத்து அவன் உடல் முழுக்கச் சுற்றினார்கள். பஞ்சுப்பொதியால் ஆனது. ராக்கெட்டில்பயணம் செய்யும் வீரனைப் போல் கீதாவும் அந்தச்செவிலியும் அவனை மாற்றிவிட்டார்கள். ராக்கெட் டில் பயணம் செய்யும் வீரர்களுக்குத் தோற்ற எடை குறையுமாம் அவனுக்கும் அப்படித்தான் வலி கொஞ்சம் குறைந்திருந்தது. கையில் மருந்துகளைச் செலுத்துவதற்கான கருவியைப் பொருத்தினார்கள். சார்ட்டைப் பார்த்து ஊசிகளைச் செலுத்தினார்கள். சாப்பிட்ட பிறகு கூப்பிடுங்கள் என்று செவிலியர் போக இரவு உணவை ஊட்டினாள். இருவரும் சாப்பிட்டார்கள்.

“மாத்திரை சாப்பிட்டு படுத்துக்கங்க”

மெல்ல படுக்கையில் அவனைக் கிடத்தினார்கள். கடந்த ஒருமாதமாக நாற்காலியிலும் மேசையிலும் இருந்த அவன் முதுகு இப்போதுதான் சரிந்து படுக்க லானது. புண்கள் படுக்கையில் படவில்லை. ஒட்டாது. வலிக்கவில்லை.

இமைகள் மெல்ல கதவைச் சாத்திக்கொள்ள, பறவைகளின் சப்தங்களும் ஓய்ந்திருந்தன. இரவு அமைதியின் ஓவியத்தைத் தன் கருநிறத்தில் வரைந்து கொண்டிருந்தது.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer