கவனிப்பு
மதில் மேல்
ஐந்து காகங்கள் அமர்ந்திருக்கின்றன
ஆறாவதாய் ஒன்று வந்ததும்
ஐந்தில் ஒன்று பறந்துவிட்டது
மற்றொன்று வந்ததும்
இன்னொன்று பறந்து போகிறது
அரைமணி நேரமாய்க் கவனித்தும்
ஐந்து மட்டுமே இருக்கிறது
ஆறாவது காகம் அங்கு
அமரவேயில்லை
மாடியிலிருந்து இறங்கி வந்து
போனைப் பார்த்தால்
நண்பர் ஒருவர்
ஐந்து முறை அழைத்திருக்கிறார்
என்னவாயிருக்கும் என்ற
கலக்கம் ஒரு பக்கம்
காகம் ஒன்றின் குரல் போல
ஒலிக்கிறது அசரீரி
நல்லதே நடக்கும்
அல்லது
நடந்தது நல்லது.
வாழைப்பழமே போற்றி
தவமிருந்து பெற்ற பிள்ளைக்கு
நடராஜ நாமகரணத்தைச்
சூட்டி மகிழ்ந்தனர்
அவனாலோ
பதின் பருவம் நிறைவுறும் வரையிலுமே
‘ட’ எழுத்தை உச்சரிக்க முடியவில்லை
நா சுழல மறுப்பது ஏன்
ஏதேனும் சாமிக்குத்தமா என
கலங்கினர் பெற்றோர்
நதராஜன் என்றே கூறித் திரிந்தவனுக்கு
ஒரு நாள்
அதிசயமான ஒரு வாழைப்பழம் கிடைத்தது
அதை உரித்தபோது உடைந்த ‘ட’
உண்ட போது ‘த’ என்றானது
இப்போது
பெயரை உச்சரித்து உச்சரித்து
ஆஹா தேன் வாழை தேன் வாழை
என்று துள்ளும்போது
வாழைப்பழ திரைக்காட்சி
நினைவிற்கு வந்து
ஒரு விஷயத்தை அவனுக்கு உணர்த்தியது
வருவது வரட்டும் என
இரண்டில் ஒன்றை விழுங்கியவனின்
துணிவுதான்
மிகச்சிறந்த நகைச்சுவை.
அறியாதவை
சித்திரை
ஒளி
குற்றங்கள்
இந்தச்சொற்கள்
விடாது துரத்துகின்றன
சித்திரை
ஒளி
கொண்டாட்டம் என்று
உருக்கொண்டிருக்க வேண்டியவை
கோடை வெயிலின் ஒளிக்கீற்று
மணிக்கட்டை ஆழமாய்க் கீறியும்
துரத்தலும் ஓட்டமும்
நிற்காமல் தொடரும் சாலையில்
விபத்திற்குள்ளாகி நசுங்கிக் கிடக்கும்
ஆட்டோவின் தன்னம்பிக்கை வாசகம்
இந்த நொடிக்கு துளியும் உதவாதது
குற்றங்களும்
கொண்டாட்டமும்
எப்படி இடம் பெயர்ந்தது
என்பது
யாரும் அறியாதது.
பிரியாணி
பிரியாணி எனும் சொல்
ஒரு பிசாசைப்போல்
பிடித்துக்கொண்டிருந்த காலம்
எதைப் பேசினாலும்
பிரியாணி என்றே ஒலிப்பதாய் கூறினர்
தூக்கத்தில் முனகுவதும்
முணுமுணுத்து வணங்குவதும்
பிரியாணியையே
நிலைமை தற்போது
கட்டுக்குள் இருக்கிறது என நினைத்தால்
சிறிதும் பொருத்தமற்ற
ஒரு சூழலில்
என் இலையில் வந்து விழுகிறது பிசாசு
நீங்கள்தானே அழைத்தீர் என்கிறார் சர்வர்
சூழலைப் புறந்தள்ளி
வரவழைத்துக்கொண்ட மனோதிடத்துடன்
அதனுடன் மோதினேன்
ஹோட்டல் அதிபரும் இன்னும் சிலரும்
மகிழ்ந்து சிரித்தவண்ணம் இருக்கின்றனர்
அதனிடம்
தோற்றுக்கொண்டிருக்கும்
எனக்கோ
மிகுந்த துக்கமாயிருக்கிறது.