பறக்கப் போவது யாருடைய கொடி
நாளை வெளிவரப்போகும் காட்சியில்
நேற்று நீ என்னவாக இருந்தாய்
இது யாரை நோக்கி வைக்கப்பட்ட குறி
வேடிக்கைப் பார்த்தவனா
கதாநாயகன்
மையத்தில் இருந்தவன் சுடப்பட்டுக் கிடக்கிறான்
ஒரு மின்னல் கீற்று பதிவு செய்தது
இருளின் இருண்ட ஒளி
மிச்சம் அனைத்தும் அதற்கான
புனையப்பட்ட தெளிவுரையும் பொழிப்பும்
பத்திரப்படுத்து
உறுதி செய்யப்படாதது எதுவும்
வீசியெறியப்பட வேண்டியதில்லை
இருட்டறையின் காட்சிகளை இதுவரை
யாரும் படம் பிடித்ததில்லை
உருவாகிக்கொண்டிருக்கிறது
ஒவ்வொருவருக்கான வரலாறும் நிலப்பரப்பும்.
என் பெயர் ஆதாம்
தனித்திருப்பவனின் பொழுது நீளமானது
அது திசைகளை அளவிட்டுத் திரும்பக் கூடியது
சூரியனின் பகலும்
அம்புலியின் இரவும்
நாசித்துவாரத்தின் வழியே
சென்று திரும்புகையில்
பிரபஞ்சத்தை ஒரு முறை
அசைத்துப் பார்க்கிறது
ஒரு சிறு பறவையின் வினவலில்
தன்னை பூமிக்குக் கொண்டு வரும் அவன்
காலங்களைக் கண் அசைப்பில்
கணக்கிடுகிறான்
பருவங்கள் அவன் பெயர் சொல்லிப் பூப்படைகின்றன
அவன் பெயர் பொறித்த
வசந்த காலத்தின் நறுமணத்தில்
தன்னை மறந்து திளைத்துக் கிடக்கின்றன ஜீவராசிகள்
மொழி தோற்ற விகாசம்
மௌனம் பூத்துக் கிடக்கும் அவன் வெளி
தேடிக்கொண்டே இருங்கள்
உங்களை மீண்டும்
நீங்களே கண்டடைவீர்கள்.